என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தனியார் ஹஜ் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டிருப்பது குறித்த செய்தி மிகுந்த வருத்தத்தை உண்டாக்கி உள்ளது.
- இந்தியாவிலிருந்து பயணிகள் வழக்கமாக 2025 மே மாதத்தில் சவுதி அரேபியாவுக்கு தங்கள் பயணத்தைத் தொடங்குவார்கள்.
2025-ம் ஆண்டு ஹஜ் புனிதப் பயணத்திற்கான பயணிகளை பாதிக்கும் வகையில் தனியார் ஹஜ் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டிருப்பது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
வரவிருக்கும் 2025 ஹஜ் புனிதப் பயணத்திற்கு ஆவலுடன் தயாராகி வரும் தமிழகம் உட்பட ஆயிரக்கணக்கான இந்திய முஸ்லிம்கள் மத்தியில் தனியார் ஹஜ் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டிருப்பது குறித்த செய்தி மிகுந்த வருத்தத்தை உண்டாக்கி உள்ளது.
இந்த அவசர மற்றும் கவலையளிக்கும் விஷயத்தை பிரதமர் கவனத்திற்கு கொண்டு வருவதற்காக இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
ஹஜ் என்பது இஸ்லாத்தின் ஐந்து கடமைகளாகக் கருதப்படும் தூண்களில் ஒன்றாகும். முதலமைச்சர், இது முஸ்லிம்களுக்கு மிகவும் புனிதமான மற்றும் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே மேற்கொள்ளும் மதக் கடமையாகும்.
ஆன்மீக முக்கியத்துவத்தைக் கொண்டுள்ள இந்தப் புனிதப் பயணத்தை மேற்கொள்வதற்காக முஸ்லிம்கள் தங்கள் வாழ்நாள் சேமிப்பினை செலவு செய்கிறார்கள்.
இந்த ஆண்டு, ஹஜ் பயணம் 4.6.2025 முதல் 9.6.2025 வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்தியாவிலிருந்து பயணிகள் வழக்கமாக 2025 மே மாதத்தில் சவுதி அரேபியாவுக்கு தங்கள் பயணத்தைத் தொடங்குவார்கள்.
கடந்த 2024 ஆம் ஆண்டில், சுமார் 1,75,000 இந்திய ஹஜ் பயணிகள் புனிதப் பயணத்தில் பங்கேற்றதாகவும், இதற்காக ஜனவரி 2025-இல், இந்தியா சவுதி அரேபியாவுடன் இருதரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, 1,75,025 ஹஜ் பயணிகளுக்கான ஒதுக்கீட்டை இறுதி செய்தது.
இந்த ஒதுக்கீடு 70:30 என்ற விகிதத்தில் மாநில ஹஜ் கமிட்டிகள் மற்றும் தனியார் ஹஜ் சுற்றுலா ஏற்பாட்டாளர்களிடையே பிரிக்கப்பட்டது.
2025ம் ஆண்டுக்கான மாநில ஹஜ் குழுக்களுக்கு 1,22,517 இடங்களும், தனியார் ஹஜ் சுற்றுலா ஏற்பாட்டாளர்களுக்கு 52,507 இடங்களும் ஒதுக்கப்பட்ட நிலையில் சவுதி அரேபியா திடீரென இந்தியாவுக்கான ஹஜ் ஒதுக்கீட்டை குறைத்துள்ளதாகத் தாம் அறிய வந்துள்ளேன்.
அதன் காரணமாக தனியார் ஹஜ் சுற்றுலா ஏற்பாட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த சுமார் 52,000 ஹஜ் இடங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த திடீர் முடிவு ஏற்கனவே பணம் செலுத்தியுள்ள பல ஹஜ் பயணிகளை ஆழ்ந்த கவலையிலும் நிச்சயமற்ற நிலையிலும் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிலைமையின் தன்மையைக் கருத்தில் கொண்டு, இப்பிரச்சனையை அவசரமாக சவூதி அரேபிய அரசிடம் எடுத்துச்சென்று விரைவான தீர்வினைப் பெறவேண்டும்.
பிரதமரின் தலையீடு, ஹஜ் ஒதுக்கீட்டில் முந்தைய அளவினை மீண்டும் கொண்டுவந்து, ஹஜ் பயணிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் ஹஜ் பயணத்தை மேற்கொள்வதற்கான உறுதியை அளிக்கும் என்று தாம் உறுதியாக நம்புகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- சென்னையில் நடந்த இப்தார் விருந்தை விஜய் கொச்சைப்படுத்தி பாவம் செய்துவிட்டதாக குற்றச்சாட்டு.
- விஜயை தங்கள் மத நிகழ்ச்சிகளுக்கு அழைக்க வேண்டாம். விஜய் முஸ்லிம் விரோதி.
த.வெ.க. தலைவர் விஜயிடம் இருந்து தமிழ்நாடு இஸ்லாமியர்கள் தள்ளியிருக்க வேண்டும் என அகில இந்திய முஸ்லீம் ஜமாத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அகில இந்திய முஸ்லீம் ஜமாத் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், குடிகாரர்கள், சூதாட்டக்காரர்களை இஃப்தார் விருந்துக்கு அழைத்து வந்ததாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மீது ஜமாத் தலைவர் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையில் நடந்த இப்தார் விருந்தை விஜய் கொச்சைப்படுத்தி பாவம் செய்துவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்,
தமிழ்நாட்டில் உள்ள இஸ்லாமியர்கள் விஜய்யிடமிருந்து விலகி இருக்க வேண்டும்.
விஜயை தங்கள் மத நிகழ்ச்சிகளுக்கு அழைக்க வேண்டாம். விஜய் முஸ்லிம் விரோதி. அவரது பின்னணி, கடந்த கால நடவடிக்கைகள் இஸ்லாமியத்திற்கு எதிரானவை.
இஸ்லாம் மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிராக விஜயின் செயல்பாடுகள் இருப்பதாக அகில இந்திய முஸ்லீம் ஜமாத் சகாபுதீன் ராஜ்வி குற்றம்சாட்டியுள்ளார்.
- ஆட்சியில் பங்கு என்பது குறித்து எங்களுடைய உள்துறை அமைச்சரும், எடப்பாடி பழனிசாமியும் அப்போது பேசி முடிவு எடுத்துக் கொள்வார்கள்.
- ஆட்சியில் பங்கு கேட்பது குறித்து நான் கருத்து கூற இயலாது.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று மாலை பாஜக தலைமையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பாஜக உண்மையான சமுதாய நீதி கட்சி. இங்கு ஒரு கிளைக்கழக செயலாளரும் மாநில தலைவராக முடியும். ஒரு மாநில தலைவரும் தேசிய செயலாளராக முடியும். தற்போதைய ஜனாதிபதி திரவுபதி முர்மு, சாதாரண பெண்மணியாக இருந்து ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இது குடும்ப கட்சி கிடையாது. அண்ணாலை பாஜக கட்சியை வளர்த்தார். இன்று என்னை தலைவர் சேரில் அமர வைத்துள்ளார். எனக்கு கொடுக்கப்பட்டது 3 வருசம். அதன்பின் இன்னொருவர் இந்த இடத்திற்கு வரலாம். உண்மையிலேயே இதுதான் சமுதாய நீதி கட்சி.
தமிழ்நாட்டில் அப்படியல்ல. திமுகவில் குடும்ப ஆட்சிதான் நடக்கிறது. கலைஞர், ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், அதற்குப்பிறகு இன்னொருவர் வர இருக்கிறார். திமுக மூத்த தலைவர்கள் ஸ்டாலின் பேரனுக்கு தலைவணங்க இருக்கிறார்கள்.
ஆட்சியில் பங்கு என்பது குறித்து எங்களுடைய உள்துறை அமைச்சரும், எடப்பாடி பழனிசாமியும் அப்போது பேசி முடிவு எடுத்துக் கொள்வார்கள். கூட்டணி குறித்து அகில இந்திய தலைமை பேசியது. இதனால் கூட்டணி ஆட்சி குறித்து அவர்கள் முடிவு எடுப்பார்கள்.
பாஜக ஆட்சியில் பங்கு கேட்பது குறித்து நான் கருத்து கூற இயலாது. மக்களுக்கு எதிரான இந்த ஆட்சி வேண்டாம் என்ற தீர்மானத்தில் அதிமுக உடன் பாஜக கூட்டணி என்ற முடிவை மேலிடம் எடுத்துள்ளது.
இவ்வாறு நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
புயலாக இருப்பீர்களா? தென்றலாக இருப்பீர்களா? என்ற கேள்விக்கு அண்ணாமலை புயலாக இருப்பார். நான் தென்றலாக இருப்பேன் என பதில் அளித்தார்.
- உலகளாவிய வளர்ச்சிக்கு ஏற்ப தமிழ்நாட்டு மாணவர்களை தயார் படுத்துவது தான் நமது நோக்கம்.
- அறிவியல், தொழில்நுட்பத்தில் ஏற்படும் வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் வகையில் பல்கலைக்கழகங்கள் செயல்பட வேண்டும்.
சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பல்கலைக்கழக துணை வேந்தர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு சமூகநீதியை அடிப்படையாக கொண்ட மாநிலம். திராவிட மாடல் ஆட்சியில் கல்விக்கு தான் முக்கியத்துவம் வழங்கப்படும்.
இந்தியாவில் கல்வி வளர்ச்சியில் தமிழ்நாடு ஒளி விளக்காக உயர்ந்து நிற்கிறது.
உலகளாவிய வளர்ச்சிக்கு ஏற்ப தமிழ்நாட்டு மாணவர்களை தயார் படுத்துவது தான் நமது நோக்கம்.
அறிவியல், தொழில்நுட்பத்தில் ஏற்படும் வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் வகையில் பல்கலைக்கழகங்கள் செயல்பட வேண்டும்.
தரமான கல்வியால் நாம் நாட்டை வழி நடத்தி வருகிறோம். தேசிய கல்விக் கொள்கையால் 2030-க்குள் அடையலாம் என்ற கல்வி வளர்ச்சியை நாம் இப்போதே அடைந்து விட்டோம்.
உயர்கல்வி தர வரிசையில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. திராவிட மாடல் அரசின் நடவடிக்கையால் அரசு பள்ளி மாணவர்கள் உயர்கல்வியில் சேர்வது 30 சதவீதம் அதிகரித்துள்ளது.
நாம் உருவாக்க உள்ள மாற்றங்களின் பலன்கள் நமது மாணவர்களுக்கு கிடைக்க வேண்டும்.
நாட்டின் சிறந்த கல்வி ஆலோசகர்களுடன் அடுத்தக்கட்ட ஆலோசனை கூட்டங்களை நடத்த உள்ளோம்.
தொழில்துறையினருடன் இணைந்து நாம் புதிய பாடத்திட்டத்தை உருவாக்க வேண்டும். AI மற்றும் கிரீன் எனர்ஜி போன்றவை தான் பொருளாதார மாற்றங்களை மேற்கொள்கிறது.
நமது பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல் முறைகளை மாற்றி அமைக்க வேண்டும்.
நான் முதல்வன் திட்டம் 27 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் வாழ்க்கையை மாற்றியுள்ளது. மருத்துவ சுற்றுலாவுக்கு புகழ்பெற்ற மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- நீலகிரி மாவட்டத்தில் பெட் பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்களை நுழைவதை தடுக்க நடவடிக்கை.
- தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்யவும் உத்தரவு.
நீலகிரி மாவட்டத்தில் பெட் பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்களை நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்பட்டது.
ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் 28 வகையான பிளாஸ்டிக் பொருட்களக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்யவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், குடிநீர் பாட்டில், பைகள் அடங்கிய பொருட்கள் அடங்கிய சுற்றுலா பைகளை வாடகைக்கு விடும் திட்டத்தை அமல்படுத்தலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
- உணவு பாதுகாப்பு துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
- இந்த வழக்கில் சதீஷ்குமார் பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தர்பூசணி குறித்து மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திய உணவு பாதுகாப்பு துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணையின்போது, தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் தர்பூசணி பழங்களில் ந்த ரசாயனமும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
மேலும், தர்பூசணி குறித்து மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திய உணவு பாதுகாப்பு துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சதீஷ்குமார் பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- மாற்றுத்திறனாளிகளுக்கு கவுன்சிலர் பதவி வழங்கும் சட்டமுன்வடிவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.
- 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளின் குரல்கள் உள்ளாட்சி மன்றங்களில் இனி ஒலிக்கும்.
தமிழக சட்டசபையில் இன்று உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு கவுன்சிலர் பதவி வழங்கும் சட்டமுன்வடிவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.
இதுதொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
வாழ்வில் ஓர் பொன்னாள், இந்நாள்!
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் கிராம ஊராட்சிகளிலும் மாற்றுத்திறனாளிகள் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்யும் உன்னதச் சட்டத்தை இன்று சட்டமன்றத்தில் முன்மொழிந்தேன்!
12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளின் குரல்கள் உள்ளாட்சி மன்றங்களில் இனி ஒலிக்கும்! இதுதான் திராவிட மாடல்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மாநிலங்களின் உரிமையைக் காப்பதிலும், மாநில சுயாட்சியை வலியுறுத்துவதிலும் ஒட்டுமொத்த இந்தியாவிலும் சாம்பியனாகத் திகழ்கிறார்.
- அவரைக் கொண்டாட வேண்டியது என் கடமை. நம் கடமை.
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு முதல்வர், என் அன்பிற்கினிய நண்பர் மு.க. ஸ்டாலினையும், தமிழ்நாடு துணை முதல்வர், பாசத்துக்குரிய தம்பி உதயநிதி ஸ்டாலினையும் தலைமைச் செயலகத்தில் இன்று நேரில் சந்தித்தேன்.
உச்சநீதி மன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி, ஆளுநருக்குத் தன்னிச்சையாகச் செயல்படும் அதிகாரம் கிடையாது எனும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினைப் பெற்றமைக்காக எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தேன்.
மாநிலங்களின் உரிமையைக் காப்பதிலும், மாநில சுயாட்சியை வலியுறுத்துவதிலும், ஜனநாயகத்துக்கு வலிமை சேர்ப்பதிலும் ஒட்டுமொத்த இந்தியாவிலும் சாம்பியனாகத் திகழ்கிறார் மு.க. ஸ்டாலின்.
அவரைக் கொண்டாட வேண்டியது என் கடமை. நம் கடமை.
இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
- சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள கே.என். ரவிச்சந்திரன் வீட்டில் 3 நாட்களாக நடந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றது.
- வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட சில முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் எடுத்து சென்றதாக கூறப்பட்டது.
தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் மகனும் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி எம்.பி.யுமான அருண் நேரு மற்றும் அமைச்சரின் சகோதரர் ரவிச்சந்திரனுக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள கே.என். ரவிச்சந்திரன் வீட்டில் 3 நாட்களாக நடந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றது.
அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட சில முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் எடுத்து சென்றதாக கூறப்பட்டது.
சோதனைகள் முடிவடைந்த நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் அலுவலகத்திற்கு அழைத்து அவரிடம் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ரனவிச்சந்திரன் விசாரணைக்கு ஆஜரானார்.
இதில், கே.என்.ரவிச்சந்திரனிடம் அமலாக்கத்துறையினர் சுமார் ஒரு மணி நேர விசாரணை மேற்கொண்டனர். விசாரணை முடிந்த நிலையில் கே.என்.ரவிச்சந்திரன் மீண்டும் புற்பட்டார்.
- சீமான் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனுதாரருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியு்ள்ளது.
- வீடியோ ஆதாரங்களை பார்த்துவிட்டு உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவிப்பு.
நீதித்துறையை அவமிதிக்கும் வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு மீதான விசாரணை இன்று வந்தது. அப்போது நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
வழக்கு விசாரணையின்போது, சீமான் பேச்சுகளுக்கு எதிராக வழக்கு தொடர்வதாக இருந்தால் இதுவரை 100 வழக்குகளாவது தாக்கல் செய்திருக்க வேண்டும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த 20 ஆண்டுகளாக சீமான் பேச்சை கேட்கவில்லையா ? இப்போதுதான் முதன்முறையாக கேட்கிறீர்களா ? என்று சீமான் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனுதாரருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
நீதித்துறையை அவமதிக்கும் வகையில் பேசிய வழக்கில் வீடியோ ஆதாரங்களை பார்த்துவிட்டு உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
- 2001 ஆம் ஆண்டிலிருந்து 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை 15 சதவீதம் அளவில் வாடகையை உயர்த்த வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
- கோவில் நிலத்திற்கு வாடகை செலுத்துவோரின் கோரிக்கையை தற்போதைய தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கோவிலுக்குச் சொந்தமான மனைகள் மற்றும் கட்டிடங்களில் குடியிருந்து வருபவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட வாடகை விகிதம் அதிகமாக உள்ளது என்பதை கருத்தில் கொண்டு குடியிருப்பவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிர்ணயம் செய்யப்படும் நியாய வாடகை உயர்வான 33.3 சதவீதத்தினை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை 15 சதவீதமாக குறைத்து நிர்ணயிக்கலாம் என்றும், இந்த வாடகை விகிதத்தை 2001-ம் ஆண்டு நில மதிப்பு நிலவரத்தின் அடிப்படையில் கணக்கிட்டு, 2001 ஆம் ஆண்டிலிருந்து 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை 15 சதவீதம் அளவில் வாடகையை உயர்த்த வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
ஆனால் இது வாடகை செலுத்துவோருக்கு மிகவும் பொருளாதார சிரமத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் 2007 மற்றும் 2010 ல் தமிழகத்தில் ஆட்சி செய்த அரசு அறிவித்த அரசாணைகள் படி, கோவில் நிலம் சம்பந்தமாக அறிவுறுத்திய வாடகையை தற்போது அமல்படுத்த வேண்டும் என்ற கோவில் நிலத்திற்கு வாடகை செலுத்துவோரின் கோரிக்கையை தற்போதைய தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.
மேலும் தமிழக அரசு சென்னை மவுண்ட் ரோடு பச்சை அம்மன் கோவில் நிலத்தில் 40 ஆண்டுகளாக குடியிருக்கும் 300 குடும்பத்தினரின் பெயரில் இருந்த மின் இணைப்பை முன் அறிவிப்பின்றி கோவில் பெயருக்கு மாற்றியதை ரத்து செய்து குடியிருப்போரின் பெயரிலேயே மின் இணைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவுத்திட்டத்தில் மாற்றம் செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
- விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும்போது காலை உணவுத்திட்டத்தில் பொங்கல் வழங்கப்படும் என்று பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவுத்திட்டத்தில் மாற்றம் செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத்திட்டத்தில் அரிசி உப்புமாவுக்கு பதிலாக பொங்கல், சாம்பார் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும்போது காலை உணவுத்திட்டத்தில் பொங்கல் வழங்கப்படும் என்று பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழக பள்ளிகளில் சத்துணவு குழந்தைகளுக்கான உணவூட்டு மானியத்தொகையை ரூ.61.61 கோடியாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.






