என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தி.மு.க.வை வீழ்த்தவே கூட்டணி: திருப்பூரில் அ.தி.மு.க. - பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டாக பேட்டி
    X

    தி.மு.க.வை வீழ்த்தவே கூட்டணி: திருப்பூரில் அ.தி.மு.க. - பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டாக பேட்டி

    • அனைத்து தொண்டர்களின் ஒரே நோக்கம் தி.மு.க.வை தோற்கடிக்க வேண்டும் என்பது தான்.
    • உண்மையான செய்திகளை முழுமையாக கொண்டு சென்றால் பிரச்சனை இல்லை.

    திருப்பூர்:

    அ.தி.மு.க., பா.ஜ.க., கூட்டணி தொடர்பாக திருப்பூரில் 2 கட்சி நிர்வாகிகள் பேசிய பேச்சுகள் சற்று சலசலப்பை ஏற்படுத்தியது.

    இந்தநிலையில் திருப்பூரில் இன்று அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவை இணை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான குணசேகரன், பா.ஜ.க. திருப்பூர் மாவட்ட தலைவர் சீனிவாசன் ஆகியோர் ஒன்றாக இணைந்து நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது சீனிவாசன் கூறுகையில்,

    முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் பேசிய வீடியோ முழுமையாக வெளியிடப்படவில்லை என்பதால் தான் தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி பிடிக்காதவர்களால் திட்டமிட்டு வீடியோ பரப்பப்பட்டுள்ளது. அனைத்து தொண்டர்களின் ஒரே நோக்கம் தி.மு.க.வை தோற்கடிக்க வேண்டும் என்பது தான்.

    இரண்டும் சேர்ந்தால் தி.மு.க., காணாமல் போய்விடும் என்பதால் தான் திட்டமிட்டு பரப்பப்பட்டுள்ளது. இஸ்லாமியர்கள் பயப்பட வேண்டாம் என்று தான் குணசேகரன் தெரிவித்துள்ளார். ஆவாஸ் யோஜனா திட்டத்தில் ஏராளமான பயன்களை பெற்றவர்கள் இஸ்லாமியர்கள். பொய்யான வாக்குறுதிகளை வழங்குபவர்கள் நாங்கள் அல்ல.

    இந்த முறை எங்கள் கூட்டணிக்கு அதிகபட்ச இஸ்லாமியர்கள் வாக்கு கிடைக்கும். திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் கார்த்தி சாதாரண தொண்டரின் உணர்வு போல தான் பேசியுள்ளார். அவர் மீது எந்தவிதமான நடவடிக்கையும் இருக்காது. அவர் அ.தி.மு.க., குறித்து எதுவும் பேசவில்லை என்றார்.

    அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் பேசுகையில்,

    சமூகவலைதளங்கள் அதிக வளர்ச்சி பெற்றுள்ளது. உண்மையான செய்திகளை முழுமையாக கொண்டு சென்றால் பிரச்சனை இல்லை. அதனை வெட்டி ஒட்டி போடும் போது தான் சிக்கல் எழுகிறது. அ.தி.மு.க., பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்ற கருத்தை தான் நான் ஏற்பேன். கட்சி ஒற்றுமையாக உள்ள இடத்தில் தான் நான் இருப்பேன். எல்லோரையும் தாய் போல் காப்பாற்றியவர் எடப்பாடி பழனிசாமி.

    இஸ்லாமியர்களுக்கு எதிரான திட்டங்களை கொண்டு வந்தது தி.மு.க., பின்னர் பழியை தூக்கி மற்றவர்கள் மேல் போட்டு விடுகின்றனர். எதிரியை வீழ்த்த அமைக்கப்பட்டதே தேர்தல் கூட்டணி. தேசியத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றும் கட்சியை வீழ்த்தவே இந்த கூட்டணி. அடிச்சு ஆடுவோம். இந்த கூட்டணி தமிழகத்தில் 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். இஸ்லாமியர்கள், இந்துக்கள், கிறிஸ்துவர்களுக்கான கூட்டணி இது தான்.தி.மு.க., கூட்டணி குடும்பத்திற்கான கூட்டணி. அ.தி.மு.க.-பா.ஜ.க., கூட்டணி ஆட்சியின் போது தான் தமிழகத்திற்கு 11 மருத்துவ கல்லூரிகள் உள்பட பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது என்றார்.

    Next Story
    ×