என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பாரதிதாசன் எழுத்துகளை மேற்கோள்காட்டி பேசாத தலைவர்களே இல்லை.
- அனைத்து மாவட்டங்களிலும் கவியரங்கங்கள், கருத்தரங்குகள் நடைபெறும்.
சென்னை:
சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதன் விவரம் வருமாறு:-
தமிழ் மொழிக்கு பாவேந்தர். திராவிட இயக்கத்தின் புரட்சிக் கவிஞர். தமிழினத்தின் மறு மலர்ச்சிக் கவிஞர் பாரதிதாசனைப் போற்றும் வகையிலான அறிவிப்பு ஒன்றை தங்களுடைய அனுமதியோடு இம்மாமன்றத்தில் அறிவிப்பதில் தமிழ்நாடு முதலமைச்சர் என்கிற வகையில் மிகுந்த பெருமை அடைகிறேன். மகிழ்ச்சியடைகிறேன்.
தமிழை வளர்த்தல் ஒன்று. சாதியை ஒழித்தல் மற்றொன்று என்று கொள்கைப் பாதை வகுத்துத் தந்தவர் புரட்சிக் கவிஞர். மொழி உணர்ச்சி, மொழி மானம், மொழி குறித்த பெருமிதம் ஆகியவற்றின் மொத்த வடிவம்தான் புரட்சிக் கவிஞர்.
1929-ம் ஆண்டே பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின் எழுச்சிக்கு அடித்தளம் அமைத்தவை பாவேந்தரின் பாடல்கள் தான். அத்தகைய பாவேந்தரை தமிழ்நாட்டின் வால்ட் விட்மன் என்று புகழ்ந்து பேசினார் பேரறிஞர் அண்ணா.
முத்தமிழறிஞர் கலைஞர் எங்கே, எப்பொழுது பேசினாலும் அதிலே புரட்சிக் கவிஞரின் பொன்வரிகள் ஒலித்துக் கொண்டேயிருக்கும். 1990-ம் ஆண்டு பாவேந்தரின் படைப்புக்களை கலைஞர் நாட்டுடைமையாக்கினார். இன விடுதலை, மொழி விடுதலை, சமூக விடுதலை, பெண் விடுதலை, பழமை வாதம் ஒழிப்பு என்று பாவேந்தர் தன் எழுத்துகளை திராவிட இனத்திற்கு கொள்கைப் பட்டயமாக உருவாக்கித் தந்தவராவார்.
இன்றும் தனது எழுத்து வரிகளால் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரது வரிகளை மேற்கோள் காட்டிப் பேசாத பேச்சாளர்களே இல்லை. அவரது வரிகளை எடுத்தாளாத எழுத்தாளர்களே இல்லை. அவரால் உணர்ச்சி பெறாத தமிழர்களே இல்லை என்று சொல்லத்தக்க வகையில் தமிழர் தம் உணர்விலும், குருதியிலும் கலந்தவர் புரட்சிக் கவிஞர். அவரை எந்நாளும் தமிழினம் வணங்கிப் போற்றும்.
பாவேந்தரின் கவிதைகளில் இனிய இசை நயம் உண்டு. அவை உணர்த்தும் கருத்துகளில் உணர்ச்சிப் புயல்வீசும். எளிமையான சொற்களின் மூலமாக வலிமையான கருத்துக்களைச் சொன்னார். எளிய சொற்கள் அவருடைய கவிதையில் அமையும்போது நிகரற்ற வேகம் கொண்டு நிற்கும் ஆற்றல் மிகுந்த கூரிய கருவிகளாகிவிடும். எனவேதான், அவரது கருத்துக்கள் கவிதைகளாக மட்டுமல்லாமல், கருத்துக் கருவிகளாக இன்றும் இருக்கின்றன. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தனது வாழ்நாளில் பல இளையவர்களை கவிஞர்களாகக் கண்டறிந்து ஊக்கப்படுத்தி தமிழுக்கு அறிமுகம் செய்து வைத்தார். நூற்றுக்கும் மேற்பட்ட அக்கவிஞர்களை பாரதிதாசன் பரம்பரை என்று அழைத்து மகிழ்கின்றோம்.
இத்தகைய பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்கள், தமிழை உயர்த்திய உயரம் அதிகம். இத்தனை சிறப்பிற்குரிய தமிழ்த்தாயின் தவப்புதல்வர்களில் ஒருவரான பாவேந்தரின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் ஏப்ரல் 29 முதல் மே 5 வரை ஒரு வார காலத்திற்கு தமிழ் வார விழா கொண்டாடப்படும் என்பதை இந்தப் பேரவையில் அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த ஒரு வார காலத்தில் தமிழ்நாடு முழுவதும் தமிழ்மொழியையும், பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பங்களிப்பைக் கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடை பெறும்.
1. கவியரங்கங்கள் மற்றும் இலக்கிய கருத்தரங்குகள்
"எல்லார்க்கும் எல்லாம் என்று இருப்பதான இடம் நோக்கி நடக்கின்றது இந்த வையம்" என்ற பாவேந்தரின் கவிதை வரிகளை மையப்படுத்தி அனைத்து மாவட்டங்க ளிலும் கவியரங்கங்கள் மற்றும் கருத்தரங்கங்கள் நடைபெறும். சிறந்த தமிழறிஞர்கள் மற்றும் இளங்கவிஞர்கள் இதில் பங்கேற்பார்கள்.
2. பாரதிதாசன் இளம் படைப்பாளர் விருது:
தமிழ் மொழியில் சிறந்து விளங்கும் இளம்எழுத்தாளர், கவிஞர் ஒருவருக்கு பாரதிதாசன் இளம் படைப்பாளர் என்ற விருது வழங்கப்படும்.
3. தமிழ் இலக்கியம் போற்றுவோம்:
புகழ் பெற்ற தமிழிலக்கிய படைப்பாளிகளின் படைப்புகளை அடிப்படையாகக் கொண்டு ஆய்வரங்கங்கள் நடத்தப்படும்.
4. பள்ளிகளில் தமிழ் நிகழ்ச்சிகள்:
மாணவர்களிடையே தமிழ்மொழியின் பெருமையை எடுத்துரைக்க பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.
5. தமிழ் இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள்:
தமிழ் இசை, நடனம், மற்றும் மரபுக்கலைகளை மையப்படுத்திய கலை நிகழ்ச்சிகள் மாநிலம் முழுவதும் நடைபெறும். இது போன்ற தமிழ் நிகழ்ச்சிகள் மூலமாக பாவேந்தர் பிறந்தநாள் தமிழ் மணக்கும் வாரமாகக் கொண்டாடப்படும்.
தமிழ் வார விழா நமது மொழியின் பெருமையை உலகிற்கு எடுத்துரைப்பதற்கு ஒரு நல்வாய்ப்பாகும். பாவேந்தரின் கவிதைகளை நாளும் படிப்போம். நானிலம் முழுவதும் அவரின் சிந்தனைகளைப் பரப்புவோம். தமிழ்மொழியை அடுத்த தலைமுறைகளுக்கும் எடுத்துச் செல்வோம்.
"வீழ்ச்சியுறு தமிழகத்தில் எழுச்சி வேண்டும்" என்றார் பாவேந்தர். அத்தகைய எழுச்சியை இந்த விழாக்கள் மூலம் உருவாக்க வேண்டும்.
"கடல் போலச் செந்தமிழைப் பரப்ப வேண்டும்" என்றார் பாவேந்தர். செந்தமிழைப் பரப்ப இந்த விழாக்கள் பயன்படும்.
"வையம் ஆண்ட வண்டமிழ் மரபே உன் கையிருப்பைக் காட்ட எழுந்திரு" என்றார் பாவேந்தர். தமிழர் தம் அறிவுச் செல்வத்தைக் காட்ட இந்த விழாக்கள் பயன்படும்.
"தமிழை இகழ்ந்தவனை என் தாய் தடுத்தாலும் விடேன்" என்றார் பாவேந்தர். அந்தத் தமிழ் உணர்ச்சியை மங்காமல், குன்றாமல் இந்த அரசு காத்திடும்.
பாவேந்தரை கொண்டாடும் விழாவில் அனைவரும் திரளாகப் பங்கேற்று, தமிழின் புகழை உயர்த்துவோம்! உயர்த்துவோம்! என்று கூறி தமிழ் வாழ்க! தமிழினம் ஓங்குக! என்று முழங்கி அமர்கிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
- குரூப் டி பணியாளர்களில் பெரும்பான்மையினர் குத்தகை முறையில் தான் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
- நிரந்தர பணியிடங்களை ஒப்பந்த பணியிடங்களாக மாற்றுவது போன்ற செயல்களில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இனி அலுவலக உதவியாளர் உள்ளிட்ட அனைத்து குரூப் டி பணியாளர்களையும் நிரந்தரமாக நியமிக்கக்கூடாது என்றும், ஒப்பந்தம் அல்லது அவுட்சோர்சிங் எனப்படும் குத்தகை முறையில் தான் நியமிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் தற்காலிக நியமனங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில், நிரந்தரப் பணியிடங்களையும் ஒப்பந்தப் பணியிடங்களாக தமிழக அரசு மாற்றி வருவது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்கள், அரசு கல்லூரிகள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் குரூப் டி பணியாளர்களில் பெரும்பான்மையினர் குத்தகை முறையில் தான் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு மிகக் குறைந்த ஊதியமே வழங்கப்படுவதால் மிகப்பெரிய அளவில் மனிதவளச் சுரண்டல்கள் நடைபெறுகின்றன; இன்னொருபுறம் குத்தகை முறையில் பணியாளர்கள் நியமிக்கப்படுவதால் அவர்கள் இழைக்கும் தவறுகளுக்கு அவர்களை பொறுப்பேற்கச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அரசு அலுவலகங்களில் பராமரிப்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இவை இரண்டுமே தவிர்க்கப்பட வேண்டியவை ஆகும்.
உயர்கல்வி நிறுவனங்களிலும், சில பொதுத்துறை நிறுவனங்களிலும் மட்டும் நடைமுறையில் உள்ள குத்தகை முறை நியமனங்களை அனைத்துத் துறைகளுக்கும் நீட்டிக்கவும் தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டால் தமிழ்நாட்டில் ஒன்றரை லட்சம் பணியிடங்கள் ரத்து செய்யப்படும் நிலை உருவாகும். இது திமுக அளித்த வாக்குறுதிகளுக்கு எதிரானது ஆகும்.
திமுக ஆட்சிக்கு வந்தால் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணி செய்த தற்காலிக பணியாளர்கள் அனைவரும் பணி நிலைப்பு செய்யப்படுவார்கள்; மூன்றரை லட்சம் அரசு வேலைகள் வழங்கப்படும்; இரண்டு லட்சம் புதிய பணியிடங்கள் ஏற்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதது மட்டுமின்றி அதற்கு முற்றிலும் மாறாக, இருக்கும் பணியிடங்களை ஒழிப்பது, நிரந்தர பணியிடங்களை ஒப்பந்த பணியிடங்களாக மாற்றுவது போன்ற செயல்களில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, இத்தகைய நியமனங்களில் இட ஒதுக்கீட்டு முறை கடைபிடிக்கப்படுவதில்லை என்பதால் இது சமூகநீதிக்கும் எதிரானது ஆகும்.
எனவே, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் குரூப் டி பணியிடங்களை ஒழித்து விட்டு, குத்தகை நியமனங்களுக்கு அனுமதி அளித்து உயர்கல்வித்துறை மூலம் கடந்த 3-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டுள்ள 66-ஆம் எண் கொண்ட அரசாணையை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். அனைத்துத் துறைகளிலும் குரூப் டி பணியிடங்கள் நிரந்தர அடிப்படையிலேயே நியமிக்கப்படும் என்றும் அரசு அறிவிக்க வேண்டும்.
- பண்ணாரி சோதனை சாவடி அருகே சத்தியமங்கலம்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையை சுமார் 6-க்கும் மேற்பட்ட யானைக் கூட்டங்கள் கடந்து சென்றன.
- தற்போது உணவு, தண்ணீருக்காக யானை கூட்டங்கள் அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையில் உலா வருகிறது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. குறிப்பாக ஆசனூர், தாளவாடி , பர்கூர் வனச்சரக்கத்தில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.
தற்போது வனப்பகுதியில் வெயில் தாக்கம் காரணமாக யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி உணவு, தண்ணீரை தேடி சத்தியமங்கலம் -மைசூரு தேசிய நெடுஞ்சாலையோரம் வந்து வாகனங்களை வழிமறிப்பதும், கிராமத்துக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்துவதும் தொடர்கதையாகி வருகிறது.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி அம்மன் கோவில் அருகே வனத்துறை சார்பில் சோதனை சாவடி உள்ளது. இங்கு 24 மணி நேரமும் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மாலை பண்ணாரி சோதனை சாவடி அருகே சத்தியமங்கலம்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையை சுமார் 6-க்கும் மேற்பட்ட யானைக் கூட்டங்கள் கடந்து சென்றன. திடீரென யானைக் கூட்டங்கள் சாலையைக் கடந்ததால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து சற்று தொலைவில் தங்களது வாகனங்களை நிறுத்தினர். சிறிது நேரம் அந்த யானை கூட்டங்கள் அந்தப் பகுதியில் சுற்றி வந்தன. பின்னர் மீண்டும் அடர்ந்த வனப்பகுதிக்குள் யானை கூட்டங்கள் சென்றன. இதன் பிறகே வாகன ஓட்டிகள் அங்கிருந்து கிளம்பி சென்றனர்.
தற்போது வனப்பகுதியில் வெயில் தாக்கம் காரணமாக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு யானை கூட்டங்கள் இடம்பெயர்ந்து வருகிறது. அதன்படி கர்நாடகா மாநிலத்திலிருந்து இருந்து தமிழக எல்லைப் பகுதியான காரப்பள்ளம், தாளவாடி, ஆசனூர் பகுதிகளில் யானைகள் தஞ்சம் அடைந்து வருகின்றன.
தற்போது உணவு, தண்ணீருக்காக யானை கூட்டங்கள் அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையில் உலா வருகிறது. எனவே வாகன ஓட்டிகள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் எக்காரணக் கொண்டும் வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்தக்கூடாது என்றனர்.
- எடப்பாடி பழனிசாமியுடனான சந்திப்புக்கு பின் அ.தி.மு.க. மூத்த தலைவர்களை நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசியுள்ளார்.
- முக்கிய பிரச்சனைகளை ஒன்று சேர்ந்து எழுப்புவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை:
தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உடன் பா.ஜ.க. மாநில தலைவரும் எம்.எல்.ஏ.வுமான நயினார் நாகேந்திரன் சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளார். இவர்களது சந்திப்பானது எதிர்க்கட்சி தலைவர் அறையில் சுமார் 15 நிமிடங்களுக்கு மேல் நீடித்ததாக கூறப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமியுடனான சந்திப்புக்கு பின் அ.தி.மு.க. மூத்த தலைவர்களான எஸ்.பி.வேலுமணி, தளவாய் சுந்தரம், கடம்பூர் ராஜூ ஆகியோரை சந்தித்து நயினார் நாகேந்திரன் பேசியுள்ளார்.
முக்கிய பிரச்சனைகளை ஒன்று சேர்ந்து எழுப்புவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி உறுதியான பின்பு எடப்பாடி பழனிசாமி- நயினார் நாகேந்திரன் முதன்முறையாக சந்தித்து பேசியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- சென்னையில் வெயில் கொளுத்தி வரும் வேலையில் ஏ.சி. மின்சார ரெயிலுக்கு பயணிகள் மிகுந்த வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
- புறநகர் ஏ.சி. ரெயிலுக்கான கட்டணம் அதிகம் என்று பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை ஏ.சி. வசதியுள்ள மின்சார ரெயில் சேவை கடந்த 19-ந்தேதி தொடங்கியது.
சென்னையில் வெயில் கொளுத்தி வரும் வேலையில் ஏ.சி. மின்சார ரெயிலுக்கு பயணிகள் மிகுந்த வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
வழக்கமான மின்சார ரெயில் கட்டணத்தை விட ஏ.சி. மின்சார ரெயிலில் கட்டணம் பல மடங்கு அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது குறைந்தபட்ச கட்டணம் ரூ.35-ம், அதிகபட்ச கட்டணம் ரூ.105 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ரெயில் பயணிகள் உடனான கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் புறநகர் ஏ.சி. ரெயிலுக்கான கட்டணம் அதிகம் என்று பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதற்கு பதில் அளித்த தெற்கு ரெயில்வே நிர்வாகம், சென்னை புறநகர் ஏ.சி. ரெயிலுக்கான கட்டணம் குறைய வாய்ப்பு இல்லை என்று உறுதியாக தெரிவித்துள்ளது. கட்டண நிர்ணயம் என்பது தெற்கு ரெயில்வே முடிவு செய்ய முடியாது எனவும் விளக்கம் அளித்துள்ளது.
மேலும், புறநகர் ஏ.சி. ரெயில் இயக்கப்பட வேண்டிய நேரம் குறித்து பயணிகள் வாட்ஸ் அப் மூலம் கருத்து தெரிவிக்கலாம். பயணிகள் தங்கள் கருத்துகளை 63747 13251 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் அனுப்பவும் அறிவுறுத்தி உள்ளது.
பீக் அவர்ஸ் நேரங்களில் கூடுதல் ரெயில்களை இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
- சவுக்கு சங்கர் வீட்டில் அத்துமீறி நடந்து கொண்ட சம்பவம் கண்டிக்கத்தக்கது.
- எடப்பாடி பழனிசாமியின் முடிவால் அ.தி.மு.க. சிதைந்து கொண்டு இருக்கிறது.
பழனி:
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி வருகை தந்தார். அங்கு சாமி தரிசனம் செய்த பின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-
நாட்டில் ஒற்றுமைதான் மிகவும் முக்கியம். பிரிவினைவாதம் அல்ல. இந்திய எல்லைக்குள் வாழ்பவர்கள் அனைவரும் இந்தியர் என மகாத்மா காந்தி கூறினார். அவர்களை மத ரீதியாக பிரிக்க மாட்டேன் என்றும் தெரிவித்தார்.
இந்தியா வலிமை மிக்க நாடாக இருப்பதற்கு காரணம் வேற்றுமையில் ஒற்றுமை மட்டும்தான். ஆனால் இன்று துணை ஜனாதிபதியோ உச்சநீதிமன்ற நீதிபதியை அச்சுறுத்தும் வகையில் பேசி வருகிறார்.
ஜனநாயகத்தில் குடியரசு தலைவர் உள்பட யாரை வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம். கவர்னருக்கு எதிரான வழக்கை கொண்டு சென்று இந்தியாவுக்கான தீர்ப்பை முதல்-அமைச்சர் ஸ்டாலின் பெற்றுத் தந்துள்ளார்.
தமிழகத்தின் பல்கலைக்கழக வேந்தராகவும் உள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதை சட்டத்தின் வாயிலாக பெற்றுள்ளார்.
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி என்பது எழுச்சி இல்லாத கூட்டணியாக உள்ளது. ஒரு கூட்டணி அமைந்தால் அது 2 தரப்பைச் சேர்ந்த தொண்டர்களுக்கும் உற்சாகத்தை ஏற்படுத்த வேண்டும்.
ஆனால் எடப்பாடி பழனிசாமியின் முடிவால் அ.தி.மு.க. சிதைந்து கொண்டு இருக்கிறது. அந்த கட்சி தொண்டர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் தி.மு.க. கூட்டணியில் அது போன்ற பிரச்சினை இல்லை.
வருகிற தேர்தலிலும் தி.மு.க. கூட்டணியே மகத்தான வெற்றி பெறும். 2026 சட்டமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு கூடுதல் இடங்கள் கேட்போம்.
அமைச்சர் பொன்முடி பேசியது தவறானது. அதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டித்துள்ளார். கட்சி பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. ஒரு தவறுக்கு ஒரு தண்டனைதான். பெரியார் பேசியதை விடவா பொன்முடி பேசி விட்டார். இதை எதிர்கட்சிகள் அரசியலாக்கி வருகின்றனர்.
சவுக்கு சங்கர் வீட்டில் அத்துமீறி நடந்து கொண்ட சம்பவம் கண்டிக்கத்தக்கது. ஆனால் அதற்கும் காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகைக்கும் எந்த தொடர்பும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- திருச்சாந்துருண்டை பிரசாதத்தை உட்கொண்டால் 4,448 வியாதிகள் குணமாகும்.
- வேண்டுதல்கள் நிறைவேற வீட்டில் மஞ்சள் தடவிய குச்சியை வைத்து பூஜிப்பர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயிலில் பிரசித்தி பெற்ற தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலில் நவகிரகங்களில் முதன்மையான செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன், செல்வமுத்துக்குமார சுவாமி, தன்வந்திரி சித்தர் ஆகிய சுவாமிகள் தனி சன்னிதியில் அருள்பாலித்து வருகின்றனர்.
இங்குள்ள சித்தாமிர்த தீர்த்தத்தில் நீராடி கோவிலில் வழங்கப்படும் 'திருச்சாந்துருண்டை' எனும் பிரசாதத்தை உட்கொண்டால் 4,448 வியாதிகள் குணமாகும் என்பது ஐதீகம்.
மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் நகரத்தார் மக்களின் குலதெய்வ வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
அதாவது, பண்டைய காலத்தில் பூம்புகார் பகுதியில் இருந்து பல்வேறு பகுதிகளில் குடியேறிய நகரத்தார் மக்கள் பல தலைமுறைகளாக ஆண்டுதோறும் சித்திரை மாதம் 2-வது செவ்வாய்க்கிழமை பாத யாத்திரையாக கோவிலுக்கு வந்து தங்கள் குலதெய்வமான தையல் நாயகியை வழிபடுவது வழக்கம்.
இதற்காக அவர்கள் சித்திரை மாத முதல் செவ்வாய்க்கிழமை தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற வீட்டில் மஞ்சள் தடவிய குச்சியை வைத்து பூஜிப்பர். பின்னர், பாதயாத்திரை தொடங்கும் மக்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியதற்கு காணிக்கையாக அந்த குச்சியை கோவிலின் கொடிமரம் முன்பு செலுத்துகின்றனர்.
பின்னர், அம்பாள் மற்றும் சுவாமியை தரிசனம் செய்து விட்டு தங்களது புதிய வேண்டுதலுக்காக கொடிமரத்தில் இருந்து மாற்று குச்சியை எடுத்து செல்வது வழக்கம்.
அதன்படி, இன்று சித்திரை மாத 2-வது செவ்வாய்க் கிழமையை யொட்டி காரைக்குடி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், பரமக்குடி, திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான நகரத்தார் மக்கள் கோவிலில் குவிந்தனர். பின்னர், அவர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி விட்டு குலதெய்வ வழிபாடு மேற்கொண்டனர்.
இந்நிகழ்வை யொட்டி பாதுகாப்பு பணிக்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் மேற்பார்வையில், துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை, இன்ஸ்பெக்டர்கள் புயல் பாலசந்திரன், செல்வி, ராஜா, விசித்திரா மேரி உள்பட 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பக்தர்கள் வசதிக்காக பேரூராட்சி நிர்வாகம் சார்பில் 4 வீதிகளிலும் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்டவைகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் சிரமமின்றி கோவிலுக்கு வருவதற்காக சீர்காழி, மயிலாடுதுறை, சிதம்பரம், திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வைத்தீஸ்வரன் கோவிலில் குவிந்ததால் அப்பகுதியே விழாக்கோலம் பூண்டது.
- புற்றுநோய் மருத்துவமனையில் டாக்டர் சாந்தாவின் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
- நினைவு அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
பிரபல புற்றுநோய் நிபுணரும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் முன்னாள் தலைவருமான டாக்டர் சாந்தாவின் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை அடையாறு பகுதியில் உள்ள புற்றுநோய் மருத்துவமனையில் டாக்டர் சாந்தாவின் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதைத்தொடர்ந்து அவரது நினைவு அருங்காட்சியகத்தையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.
- ஒகேனக்கல்லுக்கு நேற்று நீர்வரத்து 4 ஆயிரம் கன அடியாக வந்தது.
- காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்துள்ளது.
ஒகேனக்கல்:
கர்நாடகா-தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, கேரட்டி, நாட்றாம் பாளையம், ராசிமணல் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
இதனால் ஒகேனக்கல்லுக்கு நேற்று நீர்வரத்து 4 ஆயிரம் கன அடியாக வந்தது. இந்த நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்துள்ளது. இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் குறைந்து வந்தது.
மெயின் அருவி, சினி பால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.
பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.
இந்த நீர்வரத்தை காவிரி நுழைவிடமான தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து கண்காணித்து வருகின்றனர்.
- போப் பிரான்சிஸ் மறைவை ஒட்டி இன்றும், நாளையும் துக்கம் அனுசரிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
- சட்டசபையில் அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
சென்னை:
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் சுவாசக் கோளாறு காரணமாக நேற்று காலமானார். போப்பின் உடல் ரெடெம்ப்போரிஸ் தேவாலயத்தில் வைக்கப்பட உள்ளது. அவரது மறைவுக்கு உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
போப் பிரான்சிஸ் மறைவை ஒட்டி, 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதைப்போல் போப் பிரான்சிஸ் மறைவை ஒட்டி இன்றும், நாளையும் துக்கம் அனுசரிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மேலும், போப் பிரான்சிஸின் இறுதிச்சடங்கு நடைபெறும் நாளன்றும் துக்கம் அனுசரிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், மறைந்த போப் பிரான்சிஸுக்கு தமிழக சட்டசபையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. முற்போக்கு கொள்கையோடு பெரும்மாற்றங்களை முன்னெடுத்த ஆளுமை போப் பிரான்சிஸ் என தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சட்டசபையில் அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
- வெள்ளி விலையில் மாற்றமில்லை.
- பார் வெள்ளி 1 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
தங்கம் விலை கடந்த 9-ந் தேதியில் இருந்து 'கிடுகிடு'வென உயர்ந்து வந்து, கடந்த 12-ந்தேதி ஒரு சவரன் ரூ.70 ஆயிரத்து 160-க்கு விற்பனை ஆனது. இது அப்போது இதுவரை இல்லாத உச்சமாக பார்க்கப்பட்டது.
அதனை தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்த வண்ணம் காணப்படுகிறது. தினந்தோறும் விலை உயர்ந்து இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சத்தில் தங்கம் விலை உயர்ந்து வருகிறது.
இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. தங்கம் கிராமுக்கு 275 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,290-க்கும் சவரனுக்கு 2,200 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,320-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 111 ரூபாய்க்கும் பார் வெள்ளி 1 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
21-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,120
20-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,560
19-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,560
18-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,560
17-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,360
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
21-04-2025- ஒரு கிராம் ரூ.111
20-04-2025- ஒரு கிராம் ரூ.110
19-04-2025- ஒரு கிராம் ரூ.110
18-04-2025- ஒரு கிராம் ரூ.110
17-04-2025- ஒரு கிராம் ரூ.110
- இந்த விமான நிலையம் அமைந்தால் பெங்களூரு மற்றும் ஓசூர் ஆகிய 2 நகரங்களுக்கு வர்த்தக ரீதியாக பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது.
- ஓசூர் கிழக்கில் ஒன்று, தெற்கில் ஒன்று என இரு இடங்கள் தேர்வு செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகரமானது தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகிறது. சர்வதேச நிறுவனங்கள் பலவும் கால்தடம் பதித்து வருகின்றன. இதற்கேற்ப ஓசூரின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
குறிப்பாக ஓசூரில் பிரம்மாண்ட தொழில் நகரை கட்டமைக்க டாடா குழுமம் முன்வந்துள்ளது. மேலும் 2,000 ஏக்கர் பரப்பளவில் ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இந்த விமான நிலையம் அமைந்தால் பெங்களூரு மற்றும் ஓசூர் ஆகிய 2 நகரங்களுக்கு வர்த்தக ரீதியாக பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து விமான நிலையத்திற்கு இரண்டு இடங்களை தேர்வு செய்து தரும்படி டிட்கோ கேட்டுக்கொண்டது. அதன் அடிப்படையில், ஆய்வுகள் நடத்தப்பட்ட நிலையில் ஓசூர் கிழக்கில் ஒன்று, தெற்கில் ஒன்று என இரு இடங்களை தேர்வு செய்து டிட்கோவிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த இரு இடங்களில் ஏதேனும் ஒன்றில் விமான நிலையம் அமைக்க சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் தமிழக அரசு அனுமதி கேட்டு இருந்தது.
இந்த நிலையில், ஓசூரில் புதிய விமான நிலையம் அமைப்பது தொடர்பான இறுதி சாத்தியக்கூறு ஆய்வறிக்கையை தமிழக அரசிடம், விமான போக்குவரத்து ஆணையம் தாக்கல் செய்துள்ளது. அதில் அரசு தேர்வு செய்த 2 இடங்களில் விமான நிலையம் அமைப்பதில் எந்த சிக்கலும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.






