என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • ரூ.471 கோடி மதிப்பீட்டில் இந்த நீர்த்தேக்கம் உருவாகவுள்ளது.
    • 4,375 ஏக்கர் பரப்பளவு மற்றும் 1.6 டி.எம்.சி. கொள்ளளவு உடன் இந்த நீர்த்தேக்கம் அமைய உள்ளது

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரை கொண்டு சென்னையில் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இந்த 5 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11.757 டி.எம்.சி. ஆகும்.

    கோடைக்காலத்தில் இந்த குடிநீர் ஏரிகள் வறண்டு விடுவதால் சென்னையில் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் கோவளம் அருகே சென்னையின் 6-வது நீர்த்தேக்கம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    பட்ஜெட் அறிவிப்பின்படி கோவளம் அருகே சென்னையின் 6-வது நீர்த்தேக்கம் அமைப்பதற்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ள சுற்றுச்சூழல் அனுமதி கோரி நீர்வளத்துறை விண்ணப்பம் அளித்துள்ளது.

    பழைய மாமல்லபுரம் சாலை மற்றும் கிழக்கு கடற்கரைச் சாலைகளுக்கு இடையே ரூ.471 கோடி மதிப்பீட்டில் 4,375 ஏக்கர் பரப்பளவு மற்றும் 1.6 டி.எம்.சி. கொள்ளளவு உடன் இந்த நீர்த்தேக்கம் அமைய உள்ளது. 

    • செங்கோதை, பூங்கோதைத் தாயார்களுடன் பெருமாளுக்கு திருக்கல்யாணம் உற்சவம் நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேர் வடம் பிடித்தனர்.

    கவுண்டம்பாளையம்:

    கோவை பெரியநாயக்கன் பாளையத்தை அடுத்துள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான பாலமலை ஸ்ரீ அரங்கநாதர் கோவில் சித்திரைத் தேர்த்திருவிழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதில் பெருமாள் 7-ந் தேதி அன்ன வாகனத்திலும், 8-ந் தேதி அனுமந்த வாகனத்திலும், 9-ந் தேதி கருட வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்புரிந்தார். 10-ந் தேதி செங்கோதையம்மன் அழைப்பு விழாவும், 11-ந் தேதி செங்கோதை, பூங்கோதைத் தாயார்களுடன் பெருமாளுக்கு திருக்கல்யாணம் உற்சவம் நடைபெற்றது.

    முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் வைபவம் நேற்று மாலை 3 மணிக்கு தொடங்கியது. இதில் முதலில் யானை வாகன உற்சவம், சின்னத்தேர் உற்சவம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மாலை 6 மணி அளவில் பெருமாள் தேரில் எழுந்தருளி கோவிலின் மாட வீதிகளில் வலம் வந்தார். நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேர் வடம் பிடித்தனர். அப்போது பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என விண்ணை பிளக்கும் அளவிற்கு கோஷங்களை எழுப்பினர். அதன் பிறகு அரங்கநாதர் சிறப்பு அலங்காலத்தில் அருள் புரிந்தார். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    இன்று பரிவேட்டை, குதிரை வாகன உற்சவமும், 14-ந் தேதி சேஷவாகன உற்சவம், 15-ந் தேதி சந்தன சேவை சாற்றுமுறை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ப.ஜெகதீசன் செய்திருந்தார்.

    • அந்த குற்றவாளிக் கூடாரத்தை கைது செய்தது எனது அரசு என இபிஎஸ் கூறினார்.
    • நடுநிலையோடு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டேன் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.

    பொள்ளாச்சியில் நடந்த கூட்டு பாலியல் வழக்கு தமிழகத்தில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்குகளில் ஒன்று. ஒரு கல்லூரி மாணவி மற்றும் பெண்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச வீடியோ எடுத்து துன்புறுத்தப்பட்டனர். இந்த சம்பவம் கடந்த 2019-ம் ஆண்டு நடந்தது.

    தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என்று நீதிபதி நந்தினி தேவி இன்று தீர்ப்பு வழங்கினார். மேலும் குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

    இந்த தீர்ப்பை முதலமைச்சர் முக ஸ்டாலின் வரவேற்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். அதில் "பொல்லாத அ.தி.மு.க. நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது. அ.தி.மு.க. குற்றவாளி அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சித்த 'சார்'கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்" என பதிவிட்டார்.

    இந்த பதிவுக்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்தார். அதில், அந்த குற்றவாளிக் கூடாரத்தை கைது செய்தது எனது அரசு. உங்களைப் போல் திமுக அனுதாபி என்பதால் காப்பாற்றத் துடிக்கவில்லை. நடுநிலையோடு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டேன். அதற்கான நீதியே இன்று கிடைத்துள்ளது என கூறினார்.

    இந்நிலையில் பொள்ளாச்சி வழக்கை சிபிஐ விசாரணைக்கு எடப்பாடி பழனிசாமி மாற்றியது திமுக உள்ளிட்ட பல தரப்பில் இருந்து வந்த அழுத்தங்களால் தான் என திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    தனது ஆட்சியில் நடந்த குற்றத்தை தன்னுடைய நிர்வாகமே விசாரிக்கக் கூடாது என்ற எண்ணத்தில் எல்லாம், எடப்பாடி பழனிசாமி பொள்ளாச்சி வழக்கை சிபிஐக்கு மாற்றவில்லை.

    இவ்விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்யவில்லை, விசாரணை இல்லை, குற்றவாளிகள் ஆட்சியாளர்களால் காப்பாற்றப்படுகின்றனர் என்பதால் எதிர்க்கட்சியான திமுக உள்ளிட்ட பல தரப்பிலும் இருந்து வந்த அழுத்தம், போராட்டங்களால், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றும் நிலைக்கு எடப்பாடி பழனிசாமி தள்ளப்பட்டார் என கனிமொழி கூறினார்.

    • நிலப்பிரச்சினை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
    • ஆரணி தாலுகா போலீசில் தனித்தனியாக புகார் அளிக்கப்பட்டது.

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த அறியா பாடி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 36). அதே பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன் (64) இருவரும் உறவினர்கள்.

    இவர்களுக்கு ஏற்கனவே நிலப்பிரச்சினை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மணிகண்டன் வீட்டின் அருகே வழி ஒன்று உள்ளது.

    அந்த வழியினை முள்வேலி போட்டு அடைத்தார். இதனால் அந்த வழியாக செல்பவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருவதாக தெரிகிறது. இதனால் விஸ்வநாதன் உள்பட சிலர் மணிகண்டனிடன் சென்று தகராறில் ஈடுபட்டனர். இருதரப்பு மோதலாக மாறியது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

    இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசில் தனித்தனியாக புகார் அளிக்கப்பட்டது. போலீசார் இருதரப்பையும் சேர்ந்த 19 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இதே விவசாயி ரகுபதியின் 17 ஆடுகள் மர்ம விலங்குகளால் கடித்து உயிரிழப்பு ஏற்பட்டது.
    • வனத்துரையிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை என அப்பகுதி மக்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த பாவக்கல் அருகே உள்ள நல்லவன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரகுபதி. விவசாயி. இவர் சொந்தமாக ஆடுகள் வளர்த்து வந்தார். சம்பவத்தன்று ஆடுகளை மேய்த்துவிட்டு இரவு கொட்டகையில் அடைத்து விட்டு ரகுபதி வீட்டிற்கு சென்றார். அப்போது மர்ம விலங்குகள் கடித்து 5 ஆடுகள் உயிர் இழந்தது. இரண்டு மாதங்களுக்கு முன் இதே கொட்டையில் 17 ஆடுகள் மர்ம விலங்குகள் கடித்து பலியானது குறிப்பிட்டதக்கது.

    வனப்பகுதியையொட்டி உள்ள கிராம பகுதிகளில் இரவில் மர்ம விலங்குகள் கால்நடைகளை கடித்து கொன்று குவிப்பது வாடிக்கையாக உள்ளது.

    இதே பகுதியில் உள்ள மணிவண்ணன், பழனி, கோபால், சென்னப்பன், சகுந்தலா, சென்னகிருஷ்ணன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் கால்நடைகள் மர்ம விலங்குகள் கடித்து இறந்துள்ளது. இதை வனத்துரையிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை என அப்பகுதி மக்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.

    உடனடியாக இது குறித்து மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்தி பாதிக்கப்பட்ட ஏழை விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இதே விவசாயி ரகுபதியின் 17 ஆடுகள் மர்ம விலங்குகளால் கடித்து உயிர் இழப்பு ஏற்பட்டது.

    அப்போதே வனத்துறையினர் நடவடிக்கை எடுத்திருந்தால் 10-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் கால்நடைகள் மற்றும் 40 க்கும் மேற்பட்ட ஆடுகள் பலி ஏற்பட்டு இருக்காது.

    மேலும் கால்நடைக்கு ஏற்பட்ட இழப்பு குழந்தைகளுக்கு ஏற்பட்டு விடுமோ என அச்சத்தில் கிராம மக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

    • கந்தம்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • பழைய சூரமங்கலம், சோழம்பள்ளம், அரியாகவுண்டம்பட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மேற்கு கோட்டத்திறகுட்பட்ட கந்தம்பட்டி துணை மின் நிலையத்தில் போடிநாயக்கன்பட்டி மின்பாதையில் நாளை (14-ந் தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை ரெயில் நகர், பெரியார் நகர், ஜங்சன், ஆண்டிப்பட்டி, கபிலர் தெரு, பழைய சூரமங்கலம், சோழம்பள்ளம், அரியாகவுண்டம்பட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    இதேபோல் மல்லமூப்பம்பட்டி மின்பாதையில் நாளை மறுநாள் (15-ந் தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை சுந்தர் நகர், மல்லமூப்பம்பட்டி, காந்தி நகர், சித்தனூர், கக்கன் காலனி, உடையார் தோட்டம், அரியாகவுண்டம்பட்டி, எம்.ஜி.ஆர். நகர், காமநாய்க்கன்பட்டி, ராமகவுண்டனூர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் ராஜவேலு தெரிவித்தார்.

    • பொதுத்தேர்வு முடிவுகளில், வெற்றி பெற்றுள்ள மாணவ-மாணவியர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
    • தேசத்தின் வருங்கால வளர்ச்சியில் உங்களது முழு பங்களிப்பை கொடுக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.

    மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில், வெற்றி பெற்றுள்ள மாணவ-மாணவியர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அடுத்த கட்டமாக உங்கள் வாழ்வில் முன்னேற உயர் கல்வியை மிக நேர்த்தியாக தேர்வு செய்து அதிலும் வெற்றி வாகை சூடி, தேசத்தின் வருங்கால வளர்ச்சியில் உங்களது முழு பங்களிப்பை கொடுக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • குற்றவாளிகள் நீதியின் பிடியில் இருந்து என்றும் தப்பிக்க முடியாது என்பதை ஆணித்தரமாக உணர்த்தும் விதமாக இத்தீர்ப்பு அமைந்துள்ளது.
    • பாதிக்கப்படும் பெண்கள் அச்சமின்றி புகாரளிக்க தைரியமூட்டும் முன்னுதாரண தீர்ப்பு இது.

    சென்னை:

    பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    பல பெண்களின் வாழ்வை சீரழித்து, தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய 9 பேரும் குற்றவாளிகள் என்று உறுதி செய்து, அவர்கள் அனைவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது மிகவும் வரவேற்பிற்குரியது.

    பெண்கள் பாதுகாப்பை உருக்குலைக்கும் குற்றவாளிகள் நீதியின் பிடியில் இருந்து என்றும் தப்பிக்க முடியாது என்பதை ஆணித்தரமாக உணர்த்தும் விதமாக இத்தீர்ப்பு அமைந்துள்ளது. பாதிக்கப்படும் பெண்கள் அச்சமின்றி புகாரளிக்க தைரியமூட்டும் முன்னுதாரண தீர்ப்பு இது.

    தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களும், போக்சோ வழக்குகளும் தற்போது தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில், குற்றமிழைக்க முற்படும் கயவர்களுக்கு ஓர் எச்சரிக்கை மணியாக இத்தீர்ப்பு இருக்கும் என நம்புகிறேன்.

    நீதியை நிலைநாட்ட போராடிய அனைவருக்கும், வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கிய மாண்புமிகு நீதிமன்றத்திற்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    • மலர் போன்று இருந்த பெண்கள்.. கசக்கி வீசப்பட்ட பொள்ளாச்சி வழக்கில் இன்று தீர்ப்பு வந்திருக்கிறது.
    • பெண்களைத் தவறாக தீண்ட நினைக்கும் கைகள் தீய்ந்து போகட்டும்.

    பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    மலர் போன்று இருந்த பெண்கள்.. கசக்கி வீசப்பட்ட பொள்ளாச்சி வழக்கில் இன்று தீர்ப்பு வந்திருக்கிறது... குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது இந்த வழக்கின் தீர்ப்பு வருங்காலத்தில் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் நடக்கக்கூடாது என்பதற்கு அடித்தளமாக அமையட்டும்... தவறான கண்ணோட்டத்தோடு பார்க்கப்படும் கண்கள் பொசுக்கப்படட்டும் பெண்களைத் தவறாக தீண்ட நினைக்கும் கைகள் தீய்ந்து போகட்டும்... பெண்களைத் தவறாக பார்க்கும் எண்ணம் சிதைந்து போகட்டும்.. இந்த தீர்ப்பு பெண்களுக்கு எதிரான கொடுமைகளை தீர்த்து வைக்கட்டும்...

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • இதுபோன்ற பாலியல் கூட்டு வன்புணர்வு என்பது இனி தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவில் எங்கும் நடந்தேறக்கூடாது.
    • பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பை மனப்பூர்வமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது.

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியதாவது:

    * பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பு கொடுங்காயத்திற்கு இடப்பட்ட மாமருந்தாக இருக்கிறது.

    * இதுபோன்ற பாலியல் கூட்டு வன்புணர்வு என்பது இனி தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவில் எங்கும் நடந்தேறக்கூடாது என்கிற ஒரு அச்சுறுத்தலை தரக்கூடிய தீர்ப்பாக இது அமைந்து இருக்கிறது.

    * இதனை மனப்பூர்வமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பெண்கள் தங்களுக்கு நடக்கும் கொடுமைகளை சகித்து கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
    • இன்று பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நியாயம் பெற்றுத் தரப்பட்டுள்ளது.

    தி.மு.க. எம்.பி. கனிமொழி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

    * பொள்ளாச்சி வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்த தீர்ப்பை வரவேற்கிறேன்.

    * தங்களுக்கு நடக்கும் அநீதிகளை வெளியில் கூறினால் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை அளிக்கும் தீர்ப்பு.

    * பெண்கள் தங்களுக்கு நடக்கும் கொடுமைகளை சகித்து கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

    * முதல்வர் ஆட்சிப் பொறுப்பேற்கும் முன்னரே பெண்களுக்கு நியாயம் பெற்றுத்தருவோம் என கூறி இருந்தார்.

    * இன்று பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நியாயம் பெற்றுத் தரப்பட்டுள்ளது.

    * குற்றவாளிகள் மேல்முறையீடு செய்தாலும் அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்ய அரசு போராடும்.

    இவ்வாறு அவர் கூறப்பட்டுள்ளது.

    • கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருப்பது வரவேற்கத்தக்கது.
    • உங்களை போன்று எந்த SIR-ஐ காப்பாற்ற முயற்சிக்கவும் இல்லை!

    அ.தி.மு.க. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என அறிவித்து, கடும் தண்டனைகளை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருப்பது வரவேற்கத்தக்கது.

    புரட்சித்தமிழர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அஇஅதிமுக அரசு, இந்த வழக்கை முறையாகக் கையாண்டு, நடுநிலை தவறாமல் விசாரிக்கப்பட CBI விசாரணைக்கு உத்தரவிட்டதன் விளைவாக உரிய நீதி இன்று கிடைக்கப்பெற்றுள்ளது.

    திமுக-வைப் போல் அரசியலுக்காக அவதூறுகளை அள்ளித் தெளிக்கும் அற்ப புத்தி எங்களுக்கு இல்லை. எங்களுக்கு மடியில் கணமில்லை; வழியில் பயமில்லை என்பதால் இந்த வழக்கை CBI-க்கு மாற்றினோம்.

    * பொள்ளாச்சி வழக்கில் சுயவிவரங்கள் வெளியானதாக சொன்ன திமுக, 6 ஆண்டுகளுக்கு பிறகு, அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில், பாதிக்கப்பட்ட மாணவியின் சுய விவரங்களை வெளியிட்டது யார் என்று சொல்லுமா? இது பாதிக்கப்பட்ட மாணவியை மிரட்டும் செயல் இல்லையா? அண்ணா பல்கலை. வழக்கில் யாரைக் காப்பாற்ற FIR Leak செய்தது ஸ்டாலின் மாடல் திமுக அரசு?

    * FIR அடிப்படையில் #யார்_அந்த_SIR? என்ற நியாயத்தின் கேள்வியைக் கேட்டோம். அந்த கேள்விக்கான விடையைக் கண்டறிய, நீதி கிடைக்க CBI விசாரணை கோரினோம். ஆனால், அதனை முழு மூச்சாக இந்த ஸ்டாலின் மாடல் திமுக அரசு எதிர்த்ததே, ஏன்? யாரைக் காப்பாற்ற துடிக்கிறது திமுக?

    * கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் வழக்கில் CBI விசாரணைக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்றது ஸ்டாலின் மாடல் திமுக அரசு தானே? ஏன் சென்றது?

    * நீதி கிடைப்பதில் என்ன பயம் இவர்களுக்கு?

    தெளிவாக சொல்கிறோம்- எங்கள் ஆட்சியில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு, எங்களால் அமைக்கப்பட்ட CBI விசாரணையில் குற்றவாளிகள் உறுதி செய்யப்பட்டு , இன்று கடுமையான தண்டனைகளை அவர்கள் பெற்றிட காரணமாக அமைந்தது அதிமுக அரசு

    "ஞானசேகரன் திமுக கொத்தடிமை அல்ல- அனுதாபி மட்டுமே" என்று மு.க.ஸ்டாலின் போன்று நாங்கள் உருட்டவும் இல்லை; உங்களை போன்று எந்த SIR-ஐ காப்பாற்ற முயற்சிக்கவும் இல்லை!

    திமுக எவ்வளவு அரசியல் கேவலங்களை அரங்கேற்றினாலும், இறுதியில் உண்மை மட்டுமே வெல்லும்! இது இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இனியும் நிரூபிக்கப்படும்!

    2026-ல் புரட்சித்தமிழர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைந்ததும் #யார்_அந்த_SIR என்ற கேள்விக்க்கான பதிலும், உரிய நீதியும் நிச்சயம் கிடைக்கும்! அன்று திமுக தலைகுனிந்து நிற்கும்! இது உறுதி.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×