என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பொள்ளாச்சி வழக்கை இபிஎஸ் தானாக முன் வந்து சிபிஐ விசாரணைக்கு மாற்றவில்லை- கனிமொழி
- அந்த குற்றவாளிக் கூடாரத்தை கைது செய்தது எனது அரசு என இபிஎஸ் கூறினார்.
- நடுநிலையோடு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டேன் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
பொள்ளாச்சியில் நடந்த கூட்டு பாலியல் வழக்கு தமிழகத்தில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்குகளில் ஒன்று. ஒரு கல்லூரி மாணவி மற்றும் பெண்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச வீடியோ எடுத்து துன்புறுத்தப்பட்டனர். இந்த சம்பவம் கடந்த 2019-ம் ஆண்டு நடந்தது.
தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என்று நீதிபதி நந்தினி தேவி இன்று தீர்ப்பு வழங்கினார். மேலும் குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
இந்த தீர்ப்பை முதலமைச்சர் முக ஸ்டாலின் வரவேற்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். அதில் "பொல்லாத அ.தி.மு.க. நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது. அ.தி.மு.க. குற்றவாளி அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சித்த 'சார்'கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்" என பதிவிட்டார்.
இந்த பதிவுக்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்தார். அதில், அந்த குற்றவாளிக் கூடாரத்தை கைது செய்தது எனது அரசு. உங்களைப் போல் திமுக அனுதாபி என்பதால் காப்பாற்றத் துடிக்கவில்லை. நடுநிலையோடு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டேன். அதற்கான நீதியே இன்று கிடைத்துள்ளது என கூறினார்.
இந்நிலையில் பொள்ளாச்சி வழக்கை சிபிஐ விசாரணைக்கு எடப்பாடி பழனிசாமி மாற்றியது திமுக உள்ளிட்ட பல தரப்பில் இருந்து வந்த அழுத்தங்களால் தான் என திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
தனது ஆட்சியில் நடந்த குற்றத்தை தன்னுடைய நிர்வாகமே விசாரிக்கக் கூடாது என்ற எண்ணத்தில் எல்லாம், எடப்பாடி பழனிசாமி பொள்ளாச்சி வழக்கை சிபிஐக்கு மாற்றவில்லை.
இவ்விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்யவில்லை, விசாரணை இல்லை, குற்றவாளிகள் ஆட்சியாளர்களால் காப்பாற்றப்படுகின்றனர் என்பதால் எதிர்க்கட்சியான திமுக உள்ளிட்ட பல தரப்பிலும் இருந்து வந்த அழுத்தம், போராட்டங்களால், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றும் நிலைக்கு எடப்பாடி பழனிசாமி தள்ளப்பட்டார் என கனிமொழி கூறினார்.






