என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தல்லாகுளத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாளையொட்டி ரத்த தான விழா நடைபெற்றது.
    • நன்றி, வணக்கம் எனக்கூறிவிட்டு செய்தியாளர் சந்திப்பை செல்லூர் ராஜூ முடித்துக்கொண்டார்.

    தல்லாகுளம்:

    மதுரை மாவட்டம் தல்லாகுளத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாளையொட்டி ரத்த தான விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில், இது பீருக்காக வந்த கூட்டம் இல்லை. ரத்தம் கொடுப்பதற்காக வந்த கூட்டம் என்றார்.

    இதனிடையே, பா.ம.க.வில் உள்ள பிரச்சனைகள் குறித்த செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, நன்றி, வணக்கம் எனக்கூறிவிட்டு செய்தியாளர் சந்திப்பை செல்லூர் ராஜூ முடித்துக்கொண்டார்.

    கடந்த மாதம் கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியத்தில் திமுக இளைஞரணி கூட்டத்தில் "பீர்" மதுபானம் பரிமாறப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய. இந்த சம்பவத்திற்கு கண்டனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

    • முதலில் அவருடைய பிரச்சனைகளை தீர்த்துவிட்டு அதன்பிறகு வெற்றி தோல்வி பற்றி நிர்ணயிக்க வேண்டும்.
    • மக்களின் மீது நாட்டம் இல்லாதவர்கள், மக்களை பற்றி கவலைப்படாதவர்கள் தான் இப்படி சொல்வார்கள்.

    சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவரிடம், படுத்துக்கொண்டே 50 தொகுதிகளில் ஜெயிப்பேன் என்று பா.ம.க. நிறுவனர் கூறியிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது:

    * முதலில் அவருடைய பிரச்சனைகளை தீர்த்துவிட்டு அதன்பிறகு வெற்றி தோல்வி பற்றி நிர்ணயிக்க வேண்டும். வெற்றி தோல்வி பற்றி கருத்து சொல்ல வேண்டும்.

    * அவர்கள் குடும்பத்துக்குள்ளேயே குத்து, வெட்டு நடந்துகொண்டு இருக்கிறது. இவர்கள் எப்படி 50 தொகுதிகளை படுத்துக்கொண்டே ஜெயிக்க முடியும்.

    * மக்களின் மீது நாட்டம் இல்லாதவர்கள், மக்களை பற்றி கவலைப்படாதவர்கள் தான் இப்படி சொல்வார்கள்.

    * மக்களை நாடி செல்பவர் தான் உண்மையான மக்கள் பிரதிநிதியாக இருக்க முடியும். மக்களுடைய சேவகராக இருக்க முடியும். அந்த கருத்தில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கவிஞர் வைரமுத்து தாயாரின் இறுதிச்சடங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை தேனி மாவட்டத்தில் நடைபெற்றது.
    • தாயார் மறைவிற்கு வைரமுத்து மற்றும் அவரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து இருந்தார்.

    கவிஞர் வைரமுத்துவின் தாயார் அங்கம்மாள் வயதுமூப்பு காரணமாக கடந்த 10-ந்தேதி காலமானார். அவரது இறுதிச்சடங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை தேனி மாவட்டத்தில் நடைபெற்றது.

    அவருடைய இறப்பைத் தொடர்ந்து வைரமுத்து மற்றும் அவரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் சென்னை பெசன்ட் நகரில் உள்ள கவிஞர் வைரமுத்து இல்லத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். அவருடன் எம்.பி.க்கள் டி.ஆர் பாலு, ஆ.ராசா, அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    வைரமுத்துவின் மகன்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

    • பா.ம.க.வில் விரைவில் சுமூக சூழல் திரும்பும்.
    • பா.ம.க.விற்கு நான் ஒருபோதும் துரோகம் செய்ய மாட்டேன்.

    தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது.

    அப்போது பா.ம.க. நிறுவனர் ராமதாசிடம், கூட்டத்திற்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்காதது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    இதுதொடர்பாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறுகையில்,

    இந்த கூட்டத்துக்கு கட்சியின் செயல் தலைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

    கட்சிக்குள் அப்பா, மகன் என்ற கோஷ்டி பிரச்சனை ஏதுமில்லை. சட்டசபை தேர்தலில் நிச்சயமாக கூட்டணி உண்டு. 10.5 சதவீத இடஒதுக்கீடு பெறுவதற்கு கடுமையான போராட்டம் நடத்துவோம்.

    சிங்கத்தின் கால்கள் பழுதுபடவும் இல்லை, சீற்றம் அதிகமாகி கொண்டு இருக்கிறது. ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற அந்த எண்ணம் அதிகமாகி கொண்டுதான் உள்ளது என்று கூறினார்.

    இதையடுத்து பா.ம.க.வில் ராமதாஸ் - அன்புமணி இடையே மோதல் முற்றுவதாக தகவல் வெளியானது.

    இந்த நிலையில், பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * தந்தை - மகனிடம் அமைதி பேச்சுவார்த்தை நடத்துகிறேன்.

    * பா.ம.க.வில் விரைவில் சுமூக சூழல் திரும்பும்.

    * நல்ல தீர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காக முழு முயற்சி எடுத்து வருகிறேன்.

    * பா.ம.க.விற்கு நான் ஒருபோதும் துரோகம் செய்ய மாட்டேன்.

    * விரைவில் ராமதாஸ் - அன்புமணி இருவரும் சந்திப்பார்கள்.

    * நேற்று இரவு முழுவதும் ராமதாசுடன் பேசி கொண்டிருந்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சமூக வலைதளங்களில் தேவையற்ற கருத்துக்களை பகிர வேண்டாம் என ஜி.கே.மணி தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
    • ஸ்ரீ தேவி நகர், கண்ணபாளையம், கோபாலபுரம், விஜிஎன் நகர்.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    இந்த நிலையில், தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சென்னையில் நாளை மறுநாள் (19.05.2025) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

    அதன்படி, பட்டாபிராம் மற்றும் சேக்காடு பகுதிகள் முழுவதும், ஐப்பன் நகர், தந்துறை, ஸ்ரீ தேவி நகர், கண்ணபாளையம், கோபாலபுரம், விஜிஎன் நகர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
    • வீடுகளுக்குள் மழை நீர் நுழைந்ததால் பொதுமக்கள் செய்வது தெரியாமல் தவித்தனர்.

    அன்னூர்:

    அன்னூர் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று அன்னூர், கஞ்சப்பள்ளி, கரியாம்பாளையம், பொங்கலூர், கணேசபுரம், காட்டம்பட்டி, மசக்கவுண்டன் செட்டிபாளையம், பிள்ளையப்பம்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது.

    இதில் கரியம்பாளையம் பகுதியில் எல்லப்பாளையம் அடுத்த காலனியில் சூறாவளி காற்றுடன் வீசிய கனமழைக்கு வீட்டின் மேற்கூரைகள் காற்றில் பறந்து சென்றன. இதையடுத்து மழைநீர் வீடுகளுக்கு உள்ளேயே பெய்யத் தொடங்கியது.

    இதனால் இப்பகுதி பொதுமக்கள் செய்வதறியாமல் தவித்தனர். இதேபோல் கணேசபுரம் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்று விளம்பரத்திற்காக வைக்கப்பட்டிருந்த விளம்பர பிளக்ஸ் பேனர் ஒன்று காற்றில் தூக்கி வீசப்பட்டு அப்பகுதியில் இருந்த மின்கம்பத்தின் மீது விழுந்தது. இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

    இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்து மின் கம்பத்தின் மீது உரசி அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்த விளம்பர பிளக்ஸ் பேனரை அப்புறப்படுத்தினர்.

    மேலும் கணேசபுரம் சங்கீத் மில், கரியாம்பாளையம், நல்லிசெட்டிபாளையம், எல்லப்பாளையம், கஞ்சப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சூறாவளி காற்றுடன் வீசிய கனமழைக்கு சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் முறிந்து விழுந்தன.

    மேலும் கணேசபுரம், காட்டம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு வீடுகளுக்குள் மழை நீர் நுழைந்ததால் பொதுமக்கள் செய்வது தெரியாமல் தவித்தனர். கனமழையின் காரணமாக அன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் பல இடங்களில் மின் ஒயர்கள் சேதமடைந்ததால் பல மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 

    • எங்களின் தந்தை தேவாலயத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார்.
    • பிளஸ்-2 பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் வாங்குவது தான் எங்களது அடுத்த இலக்கு.

    கோவை:

    தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது.

    கோவையை சேர்ந்த இரட்டை சகோதரிகள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண் பெற்றுள்ளனர்.

    கோவை ராமநாதபுரம் ஒலம்பஸ் பகுதியை சேர்ந்தவர்கள் சுந்தர்ராஜன்-பாரதி செல்வி தம்பதியர். இந்த தம்பதிக்கு கவிதா, கனிகா என 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் இரட்டை சகோதரிகள்.

    இவர்கள் 2 பேரும் கோவை ராமநாதபுரம் மாநகராட்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தனர்.

    நேற்று 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் இரட்டை சகோதரிகள் 2 பேரும் ஒரே மாதிரியாக 474 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

    இதில் கவிதா தமிழில்-95, ஆங்கிலத்தில்-98, கணிதத்தில்-94, அறிவியலில்-89, சமூக அறிவியலில்-95 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.

    கனிகா தமிழில்-96, ஆங்கிலத்தில்-97, கணிதத்தில்-94, அறிவியலில்-92, சமூக அறிவியலில்-95 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவர்கள் கணித பாடத்திலும் ஒரே மாதிரியான மதிப்பெண்களை எடுத்துள்ளனர்.

    இதுகுறித்து கவிதா, கனிகா ஆகியோர் கூறியதாவது:-

    எங்களின் தந்தை தேவாலயத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். கடவுளின் ஆசியால் நாங்கள் இருவரும் ஒரே மதிப்பெண்கள் பெற்றுள்ளோம். இது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆசிரியர்கள் எங்களுக்கு நன்கு உதவினார்கள்.

    நிறைய சிறப்பு வகுப்புகள் நடத்தினார்கள். கல்விக் கட்டணத்துக்கு கூட உதவி செய்தார்கள். ஒரே மாதிரியான மதிப்பெண் எடுப்போம் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

    மருத்துவராகி சேவை செய்வதே எங்களின் கனவு. இதனால் பிளஸ்-1 வகுப்பில் 2 பேருமே உயிரியல் கணிதம் பாடப்பிரிவை எடுக்க உள்ளோம். மேலும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் வாங்குவது தான் எங்களது அடுத்த இலக்கு.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • சட்டசபை கூட்டத்தொடரில் 18 மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
    • 4 மசோதாக்களையும் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேரவையில் தாக்கல் செய்திருந்தார்.

    தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 4 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கி உள்ளார்.

    கடந்த மார்ச் 14-ந்தேதி முதல் ஏப். 29-ந்தேதி வரை நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் 18 மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    நீண்ட நாட்களாக ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருந்த நிலையில் இன்று 4 சட்டதிருத்த மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கி உள்ளார்.

    4 மசோதாக்களையும் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேரவையில் தாக்கல் செய்திருந்தார்.

    4 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ள நிலையில் 14 மசோதாக்கள் நிலுவையில் உள்ளன.

    • சாலையில் இருந்த சிறு குழியால் 2 பேர் பலியான இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் சம்பவம் குறித்து விசாரித்தனர்.

    சேலம்:

    சேலம் இரும்பாலை அருகே உள்ள தளவாய்பட்டியை சேர்ந்தவர் சசிகுமார், இவரது மகன் சாரதி (22), தாதகாப்பட்டியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன், இவரது மகள் சாருபிரியா (22) இவர்கள் 2 பேரும் சேலம் மாமாங்கம் பகுதியில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணி புரிந்து வந்தனர்.

    இந்த நிலையில் சாரதி மற்றும் சாருபிரியா ஆகிய 2 பேரும் உடன் பணிபுரியும் நண்பர்கள் சிலருடன் ஏற்காடு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். அதன்படி இன்று அதிகாலை 3 மணியளவில் தாதகாப்பட்டி கேட்டில் இருந்து சாரதி, சாருபிரியா ஆகியோர் ஒரே மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.

    தொடர்ந்து அவர்கள் திருவாக்கவுண்டனூர் மேம்பாலம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற போது அங்கிருந்த சிறு பள்ளத்தில் தண்ணீர் தேங்கியிருந்ததால் சற்று ஒதுங்கி செல்ல முயன்று மோட்டார் சைக்கிளை திருப்பினார். அப்போது அந்த வழியாக சென்ற ஒரு வாகனம் அவர்கள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர். இதில் தலை நசுங்கிய நிலையில் சாரதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். வயிற்று பகுதியில் காயம் அடைந்த சாருபிரியாவும் சற்று நேரத்தில் பலியானார்.

    பின்னால் வந்தவர்களை காணவில்லையே என்று அவர்களுடன் சென்றவர்கள் திரும்பி வந்து பார்த்த போது விபத்தில் சிக்கி 2 பேரும் இறந்து கிடந்தது தெரிய வந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறிய அவர்கள் சம்பவம் குறித்து சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் சம்பவம் குறித்து விசாரித்தனர். பின்னர் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே ஆஸ்பத்திரியில் திரண்ட அவர்களது உறவினர்கள் 2 பேரின் உடல்களையும் பார்த்து கதறி அழுது புரண்டனர். இதனால் ஆஸ்பத்திரி வளாகமே சோகத்தில் மூழ்கியது.

    இந்த விபத்து குறித்து சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகிறார்கள். சாலையில் இருந்த சிறு குழியால் 2 பேர் பலியான இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் தண்ணீரில் மாட்டிக்கொண்டன.
    • தொடர்ந்து மழை வெள்ளம் பல பகுதிகளில் வடியாததால் பொதுமக்கள் பாதிப்படைந்தனர்.

    ஊட்டி:

    தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அவற்றை ஒட்டிய பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இதனால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

    இதன்படி நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை மிதமான காலநிலை நிலவிய நிலையில் மதியத்திற்கு பிறகு கனமழை கொட்டி தீர்த்தது.

    மதியம் 12 மணிக்கு தொடங்கிய கனமழை 2 மணி வரை கொட்டியது. ஊட்டியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

    இந்த மழையால் மத்திய பஸ் நிலையம், அரசு தாவரவியல் பூங்கா, தலைகுந்தா, பிங்கர்போஸ்ட் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கி சாலை முழுவதும் காட்டாற்று வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடியது.

    அதேபோல் ரெயில் நிலைய பாலத்தில் தண்ணீர் தேங்கி நின்றதால் சுற்றுலா பயணிகள் படகு இல்லம் செல்ல முடியாமல் மாற்றுப்பாதையில் சென்றனர்.

    ரெயில் நிலைய காவல் நிலையத்தை மழைநீர் சூழ்ந்தது. இதனால் அங்கு பணியில் இருந்த காவலர்கள் வெளியேறினர். ரெயில்வே பாலத்தில் பஸ்கள் மற்றும் ஒரு சில கார்கள் தண்ணீரில் தத்தளித்தபடி சென்றன.

    ரெயில் நிலைய வளாகத்தில் உள்ள வாகன நிறுத்தத்தில் தண்ணீர் தேங்கி நின்றதால் குளம் போல் காட்சியளித்தது. அந்த பகுதியில் இருந்து வெளியேறிய மழைநீர் சாலையே தெரியாத அளவிற்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    மேலும் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் தண்ணீரில் மாட்டிக்கொண்டன. இதனால் சுற்றுலாப் பயணிகள் வாகனங்களை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. தொடர்ந்து மழை வெள்ளம் பல பகுதிகளில் வடியாததால் பொதுமக்கள் பாதிப்படைந்தனர்.

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடந்து வருகிறது. நேற்று கொட்டிய மழையையும் பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள் குடைபிடித்த படி மலர் கண்காட்சியை கண்டு ரசித்தனர்.

    • இருவரும் மேலூர் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினர்.
    • 5 பாடங்களில் வெவ்வேறு மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் ஒட்டுமொத்தமாக இருவரும் 459 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

    மதுரை:

    தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. மதுரையை சேர்ந்த இரட்டையர்கள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண் பெற்றுள்ளனர்.

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது கீழையூர். இந்த ஊரைச் சேர்ந்தவர் வைரவன் இவர் வட்டார காங்கிரஸ் கமிட்டி நிர்வாகி. இவரது மகன்கள் ராமநாதன், லட்சுமணன் இருவரும் இரட்டையர்கள்.

    இவர்கள் இருவரும் மேலூர் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினர். நேற்று வெளிவந்த மதிப்பெண் பட்டியலில் இவர்கள் இருவரும் ஒரே மாதிரியாக 459 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

    5 பாடங்களில் வெவ்வேறு மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் ஒட்டுமொத்தமாக இருவரும் 459 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

    • அணையின் நீர்மட்டம் 108.31 அடியாக உள்ளது.
    • அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    சேலம்:

    தமிழக, கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கோடை மழை காரணமாக மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து கணிசமாக அதிகரித்து காணப்படுகிறது.

    இந்த நிலையில் இன்று காலை முதல் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,479 கனஅடியாக அதிகரித்து காணப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 108.31 அடியாக உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணை பகுதியில் 2.4 மி.மீட்டர் மழை பெய்தது.

    ×