என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • வினாத்தாள் வைக்கப்பட்டிருந்த மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
    • மாணவர்கள் நன்கு படித்து புரிந்து விடைகளை திறம்பட எழுதியுள்ளனர்.

    தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் கடந்த 8-ந் தேதி வெளியிடப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியத்தில் உள்ள செஞ்சி அரசு பெண்கள் பள்ளியில் தேர்வு எழுதிய 167 மாணவ-மாணவிகள், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 17 பேர், செஞ்சி தனியார் பள்ளி தேர்வு மையத்தில் 35 பேர், அனந்தபுரம் அரசு பள்ளியில் 11 பேர், அவலூர்பேட்டை அரசு ஆண்கள் பள்ளியில் 14 பேர், சத்தியமங்கலம் அரசு பள்ளியில் 7 பேர் என மொத்தம் 251 பேர் வேதியியல் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

    இதுவரை இப்படிப்பட்ட தேர்ச்சி கிடைத்தது இல்லை. அதுவும் செஞ்சி அரசு பெண்கள் பள்ளியில் தேர்வு எழுதியவர்களில் 167 பேர் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றிருப்பது ஆசிரியர்கள், மற்ற மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் அதிக சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மேற்கண்ட தேர்வு மையங்களில் மாணவர்கள் காப்பியடிக்க ஆசிரியர்கள் உதவி செய்திருக்க வேண்டும் அல்லது முன்கூட்டியே வினாத்தாள் கசிந்து மாணவர்களுக்கு விடைகள் தயார் செய்து வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், இந்த முறைகேடுக்கு காரணமானவர்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் எழுந்துள்ளது.

    இதற்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அறிவழகன் மறுப்பு தெரிவித்து கூறியதாவது:-

    செஞ்சி அரசு பெண்கள் பள்ளி தேர்வு மையத்தில் 3 பள்ளிகளை சேர்ந்த 414 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். இவர்களில் செஞ்சி அரசு பெண்கள் பள்ளி மாணவிகள் 65 பேர், தனியார் பள்ளியை சேர்ந்த 148 மாணவர்களில் 91 பேர், மற்றொரு தனியார் பள்ளியை சேர்ந்த 138 பேரில் 11 பேர் என மொத்தம் 167 பேர் வேதியியல் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் நன்றாக படிக்கக்கூடியவர்கள். மாதந்தோறும் பள்ளி அளவில் குறுந்தேர்வு நடத்தி ஆசிரியர்கள் சிறந்த முறையில் பயிற்சி அளித்துள்ளனர். இதனால் கடந்த அரையாண்டு தேர்விலும் அம்மாணவர்கள் சிறந்த மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

    மாநில அளவில் 3,181 மாணவ-மாணவிகள் வேதியியல் பாடத்தில் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். வேதியியல் பாடத்தில் வினாக்கள் மிகவும் எளிதாக கேட்கப்பட்டிருந்ததாக பெரும்பாலான மாணவ-மாணவிகள் கூறியிருந்தனர். அனைத்து தேர்வு மையங்களிலும் பறக்கும்படை குழுவினர் தீவிரமாக கண்காணித்தனர். வினாத்தாள் வைக்கப்பட்டிருந்த மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆகவே தேர்வில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை, முறைகேடு நடப்பதற்கு வாய்ப்பும் இல்லை என்று அவர் கூறி இருந்தார்.

    இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக தேர்வுத்துறை அதிகாரிகள் அளித்துள்ள விளக்கத்தில்,

    தேர்வின்போது காப்பியடித்ததற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை, மாணவர்கள் நன்கு படித்து புரிந்து விடைகளை திறம்பட எழுதியுள்ளனர் என்று கூறி உள்ளனர்.

    இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில்,

    அந்தப் பள்ளியில் மாணவர்கள் 100/100 மதிப்பெண்கள் பெற சிறப்பான பயிற்சி முறை காரணம் என்றால், அதை அறிந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் கொண்டு சேர்ப்போம் என கூறி உள்ளார்.

    • சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • ராமச்சந்திரன் மகன் இல்லத்தில் 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சேவூரில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சேவூர் பகுதியில் உள்ள ராமச்சந்திரன் இல்லம் மற்றும் அவரது மகன் இல்லத்தில் 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    இதற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிவு வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்து அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    ஆரணி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான அன்புச் சகோதரர் சேவூர் S. ராமச்சந்திரன் அவர்களையும், முன்னாள் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் நீதிபதி அவர்களையும் குறிவைத்து ஸ்டாலின் மாடல் திமுக அரசின் ஏவல்படைகளுள் ஒன்றாக மாறிவிட்ட லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகிறது.

    டாஸ்மாக் வழக்கில் நடக்கும் ED ரெய்டுகள் ஸ்டாலின்-க்கு

    பயத்தை உருவாக்கியிருக்கிறது, பயத்தில் என்ன செய்வதென்று தெரியாமல், பழிவாங்கும் நடவடிக்கையாக அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அஇஅதிமுக-வினர் வீட்டிற்கு தன் ஏவல்துறையை அனுப்பியுள்ளார்.

    டாஸ்மாக் ரெய்டுகள் குறித்து மு.க.ஸ்டாலின், மக்களிடம் எப்போது மவுனம் கலைக்கப் போகிறார்?

    பின்னப்பட்ட புனைகதைகளால், போலி வழக்குகளின் அடிப்படையில் நடத்தப்படும் இந்த ரெய்டுகள் அதிமுக இயக்கத்தை

    அசைத்து கூட பார்க்க முடியாது. இவை அனைத்தையும் நிச்சயம்

    சட்டரீதியாக எதிர்கொள்வோம். வெல்வோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
    • ஒரே நாளில் அடுத்தடுத்து 4 மாணவிகள் தற்கொலைக்கு முயன்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள பேளாரஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். கட்டிட மேஸ்திரி.

    இவருக்கு 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இளைய மகள் காசிகா (வயது15) அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதி விட்டு தேர்வு முடிவுக்காக காத்திருந்தார்.

    நேற்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் காசிகா கணித பாடத்தில் தேர்ச்சி பெறாததால் 10-ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்தார்.

    இதனால் விரக்தியடைந்த காசிகா நேற்று மாலை வீட்டின் அருகே உள்ள மாட்டு கொட்டகையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவலறிந்த பாலக்கோடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை க்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனிடையே 10,11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் பழைய தருமபுரியை சேர்ந்த சின்னப்பன் மகள் ஸ்ரீமதி, ரமேஷ் மகள் தர்சினி, சக்திவேல் மகள் சாய்மதி, விஜயகுமார் மகள் விஜயதர்சினி ஆகியோர் தேர்வில் மதிப்பெண்கள் குறைவாக வாங்கியுள்ளனர்.

    இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர்கள் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர். இதனால் அவர்களை பெற்றோர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    ஒரே நாளில் அடுத்தடுத்து 4 மாணவிகள் தற்கொலைக்கு முயன்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
    • தைரியம் மற்றும் துணிச்சலான செயல்களை புரிந்திருக்க வேண்டும்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சுதந்திர தின விழாவின் போது, துணிவு மற்றும் சாகச செயல் புரிந்த வீரப் பெண்மணிக்கு கல்பனா சாவ்லா விருது தமிழ்நாடு அரசால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது.

    வீர தீர செயல் புரிந்த பெண் ஒருவருக்கு ரூ. 5 லட்சம் ரொக்கப்பரிசுடன் தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளிப் பதக்கம் விருதாளருக்கு வழங்கப்படும்.

    இதனைத் தொடர்ந்து 2025-ம் ஆண்டு சுதந்திர தின விழாவின் போது, கல்பனா சாவ்லா விருது வழங்கப்படவுள்ளதால், இந்த விருதுக்கான விண்ணப்ப விவரங்கள் அனைத்தும் நேற்று முதல் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் (https://awards.tn.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

    கல்பனா சாவ்லா விருது பெற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டியவர்களின் தகுதிகள் :-

    * தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.

    * தைரியம் மற்றும் துணிச்சலான செயல்களை புரிந்திருக்க வேண்டும்.

    * விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசு விருதுகள் இணையதளத்தில் (https://awards.tn.gov.in) தமிழ் மற்றும் ஆங்கிலம் (மருதம்) (வர்டானா) மொழிகளில் அடுத்த மாதம் (ஜூன்) 16-ந்தேதி வரை பதிவு செய்ய வேண்டும்.

    இணையதளத்தில் விண்ணப்பித்தவர்கள் சம்மந்தப்பட்ட மாவட்ட சமூக நல அலுவலகத்தில் கீழ்க்கண்டவற்றை நேரில் சென்று ஒப்படைக்க வேண்டும்.

    * விண்ணப்பதாரரின் 4 கருத்துருக்களை தமிழ்-2. ஆங்கிலம்-2 புத்தக வடிவத்தில் தயாரித்து சமர்ப்பிக்க வேண்டும்.

    * பக்கம் எண்ணுடன் கூடிய உள்ளடக்க அட்டவணை.

    * விண்ணப்பதாரரின் வாழ்க்கை வரலாறு மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்-2

    * இணைப்பு-படிவம் I & II, தமிழ் (மருதம் எழுத்துருவில்) மற்றும் ஆங்கிலம் முழுவதுமாக பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

    * தைரியம் மற்றும் துணிச்சலுடன் மேற்கொண்ட அனுபவத்தை பற்றி ஒரு பக்கம் எழுத்து விளக்கம்.

    * படிவம்-I மற்றும் II முழுமையாக நிரப்பப்பட வேண்டும் (தமிழில்-மருதம் எழுத்துரு, ஆங்கிலத்தில்-வர்டானா எழுத்துரு)

    எனவே, அனைத்து மாவட்டங்களிலும், துணிவு மற்றும் சாகச செயல் புரிந்த வீரப் பெண்மணிக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கிட ஏதுவாக, இணைய தளத்தின் மூலம் வருகின்ற 16-ந்தேதிக்குள் கருத்துருக்களை சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • டாஸ்மாக் நிறுவனத்தில் எந்த ஊழலும் நடக்கவில்லை என்றால், அதை தமிழக அரசு துணிச்சலுடன் எதிர்கொள்ள வேண்டும்.
    • அமலாக்கத்துறை சோதனைக்கு காரணமான மூல வழக்குகளை ஒன்றுமில்லாமல் செய்யும் வேலைகளில் அரசு ஈடுபட்டிருக்கிறது.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    தமிழ்நாடு அரசின் மது வணிக நிறுவனமான டாஸ்மாக்கில் நடந்த ஊழல்கள் தொடர்பாக அமலாக்கத்துறை கடந்த இரு நாட்களாக நடத்தி வரும் சோதனைகளில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. மது கொள்முதல், ஒப்பந்தம் வழங்குதல் போன்றவை தொடர்பாக ஆட்சியாளர்களுக்கு நெருக்கமானவர்களால் டாஸ்மாக் மேலாண் இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகள் எப்படியெல்லாம் ஆட்டுவிக்கப்பட்டனர் என்பதற்கான ஆதாரங்கள் வெளியாகியுள்ள நிலையில், இவற்றுக்கு காரணமான மூல வழக்குகளை விசாரணையின்றி ஒழித்துக்கட்ட ஆட்சியாளர்கள் முயல்வது கண்டிக்கத்தக்கது.

    டாஸ்மாக் நிறுவனத்திற்கான போக்குவரத்து ஒப்பந்தம், பார் ஒதுக்கீடு, மதுப்புட்டிகளுக்கு ரூ.10 முதல் ரூ.30 வரை கூடுதல் விலை வைத்து விற்பனை செய்தது, பணியாளர்களை பணியிடமாற்றம் செய்ய கையூட்டு வாங்கியது உள்ளிட்ட பல முறைகேடுகள் தொடர்பாக 40க்கும் மேற்பட்ட வழக்குகளை தமிழக காவல்துறையின் கையூட்டுத் தடுப்புப் பிரிவு பதிவு செய்துள்ளது. அவற்றின் அடிப்படையில் தான் டாஸ்மாக் மற்றும் அதனுடன் தொடர்புடைய மது ஆலைகளில் கடந்த மார்ச் 6-ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அதில், டாஸ்மாக் நிறுவனத்தில் குறைந்தது ரூ.1000 கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாகவும், அதன் மூலம் கிடைத்த பணம் சட்டவிரோதமான முறையில் பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் அமலாக்கத்துறை கடந்த மார்ச் மாதம் கூறியிருந்தது.

    மார்ச் மாதம் நடத்திய சோதனையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் விசாகன், ஆட்சியாளர்களின் குடும்பத்தைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் உள்ளிட்ட பலரது வீடுகளில் மே 16-ஆம் தேதி முதல் நடத்தப்பட்டு வரும் சோதனைகளில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் விசாகனுடன் ஆட்சியாளர்களுக்கு நெருக்கமாக இருக்கும் சிலர் வாட்ஸ்-ஆப் மூலம் நடத்திய தகவல் பரிமாற்றத்தில் எந்த நிறுவனத்தின் மது வகைகளை அதிக எண்ணிக்கையில் கொள்முதல் செய்ய வேண்டும்; யாருக்கு பார் ஒப்பந்தம் வழங்க வேண்டும்; வாகன ஒப்பந்தம் யாருக்கு வழங்க வேண்டும் என்பது குறித்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை டாஸ்மாக் மேலாண்மை இயக்குனரும் முழுமையாக செய்து முடித்ததற்கான ஆதாரங்களும் வெளியாகியுள்ளன. டாஸ்மாக் நிறுவன செயல்பாடுகளில் ஆட்சியாளர்களுக்கு வேண்டிய தரகர்களின் தலையீடு இருந்திருக்கிறது; ஊழல்கள் நடந்திருக்கின்றன என்பதற்கு இவையே சான்று.

    டாஸ்மாக் நிறுவன மேலாண்மை இயக்குனரின் வீட்டில் தொடர்ந்து இரண்டாவது நாளாக நடத்தப்படும் சோதனைகளில் தொடர்ந்து பல ஆவணங்கள் கிடைத்து வருவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, மேலாண்மை இயக்குனரிடம் அமலாக்கத்துறையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக அவரது வீட்டிலும், அமலாக்கத்துறை அலுவலகத்திலும் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையின் முடிவில் டாஸ்மாக் ஊழல்கள் குறித்து மேலும் ஏராளமான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான குடும்பங்கள் சீரழிவதற்குக் காரணமாக இருக்கும் டாஸ்மாக் நிறுவனம் தான் அரசுக்கு காமதேனுவாக பணத்தைக் கொட்டிக் கொண்டிருக்கிறது. அரசுக்கு மட்டுமின்றி, ஆட்சியாளர்களுக்கும் பணம் காய்க்கும் மரமாக திகழ்வது டாஸ்மாக் தான் என்பதை அண்மைக்காலமாக வெளியாகி வரும் செய்திகள் உறுதி செய்கின்றன. அரசு நிர்வாகத்தில் ஊழலை ஒழிக்கப் போவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த திமுக, அதற்கு மாறாக டாஸ்மாக்கை ஊழல் சுரங்கமாக மாற்றியிருப்பதுடன், அதில் சம்பந்தப்பட்டவர்களையும் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

    டாஸ்மாக் ஊழலை மூடி மறைக்கும் நோக்குடன் அது தொடர்பாக பதிவு செய்யப்பட்டிருக்கும் 40-க்கும் மேற்பட்ட வழக்குகளை போதிய ஆதாரங்கள் இல்லை என்று மூடி விடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே, சில வழக்குகள் மூடப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது. இதை அனுமதிக்க முடியாது.

    டாஸ்மாக் நிறுவனத்தில் எந்த ஊழலும் நடக்கவில்லை என்றால், அதை தமிழக அரசு துணிச்சலுடன் எதிர்கொள்ள வேண்டும். ஆனால், டாஸ்மாக் ஊழல் வழக்கின் விசாரணைக்கு தமிழக அரசு தொடக்கம் முதலே முட்டுக்கட்டை போட்டு வருகிறது. டாஸ்மாக் நிறுவனத்தில் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறை நடத்திய சோதனையை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று தமிழக அரசு வழக்கு நடத்தியது. ஆனால், தமிழக அரசின் முயற்சிக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததுடன், அமலாக்கத்துறை நடத்திய சோதனை சட்டப்பூர்வமானது தான் என்று சென்னை உயர்நீதிமன்றமும் தீர்ப்பு அளித்தது. அதனால், இந்த வழக்கிலிருந்து தப்பிப்பதற்கு வேறு வழியில்லாததால், அமலாக்கத்துறை சோதனைக்கு காரணமான மூல வழக்குகளை ஒன்றுமில்லாமல் செய்யும் வேலைகளில் அரசு ஈடுபட்டிருக்கிறது.

    டாஸ்மாக் ஊழல் தொடர்பான மூல வழக்குகளை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கையூட்டுத் தடுப்புப் பிரிவு விசாரித்தால், தவறு செய்தவர்கள் தப்ப வைக்கப்பட்டு விடுவார்கள்; அந்த வழக்குகளில் நீதி கிடைக்காது. எனவே, டாஸ்மாக் நிறுவனத்தில் நிகழ்ந்த ஊழல்கள், முறைகேடுகள் தொடர்பான 40-க்கும் மேற்பட்ட வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு ஆணையிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 'நான் முதல்வன் திட்டம்' என்னை மிகவும் கவர்ந்தது.
    • 11-ம் வகுப்பில் பயோ மேக்ஸ் எடுத்துட்டு, நீட் தேர்வு எழுதி டாக்டர் ஆக வேண்டும்.

    சென்னை அடுத்த கவுல் பஜாரில் உள்ள அரசுப் பள்ளியில் பயின்ற பீகாரை சேர்ந்த ஜியா குமாரி, 10-ம் வகுப்பில் மொத்த மதிப்பெண் 467-ம், தமிழில் 93 மதிபெண் எடுத்து அசத்தி உள்ளார்.

    இது தொடர்பாக மாணவி ஜியா குமாரி கூறுகையில், தமிழ்நாட்டின் கல்வி மற்றும் அரசின் திட்டங்கள் சிறப்பாக இருப்பதாக பாராட்டு தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:

    * பள்ளியில் கோச்சிங் சிறப்பாக இருந்தது. தினமும் ஸ்பெஷல் கிளாஸ் இருக்கிறது.

    * 'நான் முதல்வன் திட்டம்' என்னை மிகவும் கவர்ந்தது.

    * சொந்த ஊர் பீகார். படிப்பிற்காக இங்கு வந்தோம். என்னுடைய ஆசிரியர்கள் தமிழில் நல்ல மதிப்பெண் எடுக்க உதவினார்கள்.

    அதனால் தான் இவ்வளவு மதிப்பெண் எடுக்க முடிந்தது.

    * வீட்டில் அனைவரும் இந்தி தான் பேசுவோம். அப்பாவிற்கு தமிழ் தெரியாது. அம்மாவிற்கு தமிழ் தெரியும்.

    * 17 வருடத்திற்கு முன்பு தமிழ்நாட்டிற்கு வந்தோம். ஆரம்பத்தில் தமிழ் படிக்க கடினமாக இருந்தது. போக போக தமிழ் பழகி விட்டது.

    * அதிக மார்க் எடுக்க ஆசிரியர்களும் உதவி செய்தார்கள்.

    * பள்ளியில் வழங்கிய புத்தகம், ஷூ, நான் முதல்வன் திட்டம், சிஜி வகுப்பு உதவியாக இருந்தது.

    * 11-ம் வகுப்பில் பயோ மேக்ஸ் எடுத்துட்டு, நீட் தேர்வு எழுதி டாக்டர் ஆக வேண்டும்.

    * அப்பா வெல்டிங் வேலை செய்கிறார்கள்.

    * தமிழ்நாட்டில் இருந்துதான் நாம் ஏதாவது ஆக வேண்டும் என்றும், graduate, doctor ஆன பிறகு தான் ஊருக்கு போகணும் என்றும் அப்பா சொல்லி இருக்கிறார்கள். அம்மா மெடிக்கல் கம்பெனியில் வேலை செய்கிறார்கள்.

    * பீகாரில் education குறைவாக இருந்ததால் இங்கே வந்து விட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாணவி ஜியா குமாரியின் பேட்டி வெளியான நிலையில் இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    தமிழ்நாடு - எதிர்கால இந்தியாவின் நம்பிக்கை! என்று தெரிவித்துள்ளார்.

    • திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியும் நல்ல முறையில் வளர்ச்சி அடைந்துள்ளது.
    • கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.3 ஆயிரத்து 500 கோடிக்கு ஏற்றுமதியாகியுள்ளது.

    திருப்பூர்:

    இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் மாதந்தோறும் கணக்கீடு செய்யப்பட்டு அறிவிக்கப்படுவது வழக்கம். கடந்த ஏப்ரல் மாதத்துக்கான ஆயத்த ஆடை ஏற்றுமதி முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது ரூபாய் மதிப்பில் 17.4 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. அதாவது கடந்த 2024-25-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரூ.9 ஆயிரத்து 995 கோடியே 40 லட்சத்துக்கு வர்த்தகம் நடந்துள்ளது. நடப்பு ஆண்டில் ஏப்ரல் மாதம் ரூ.11 ஆயிரத்து 733 கோடியே 40 லட்சத்துக்கு ஆயத்த ஆடை வர்த்தகம் நடைபெற்றுள்ளது.

    திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியும் நல்ல முறையில் வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.3 ஆயிரத்து 500 கோடிக்கு ஏற்றுமதியாகியுள்ளது. பின்னலாடை வர்த்தகம் அதிகரிக்க தொடங்கியுள்ளது திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.

    இது குறித்து ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.) துணை தலைவர் சக்திவேல் கூறியதாவது:-

    அமெரிக்காவின் வரி உயர்வு கொள்கை மற்றும் வங்கதேச உள்நாட்டு குழப்பங்கள் போன்ற பிரச்சனைகளுக்கு இடையிலும், நமது பின்னலாடை ஏற்றுமதியாளர்களின் சிறந்த செயல்திறனால் பின்னலாடைத்துறை புதிய நிதியாண்டிலும் வலுவான வளர்ச்சிப்பாதையில் தொடர்கிறது. அதாவது கடந்த ஏப்ரல் மாதம் 1.37 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டு 1.20 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இது 15 சதவீத வளர்ச்சியை காட்டுகிறது. இந்த சீரான, நிலையான மாதாமாத வளர்ச்சி தொடரும்போது, திருப்பூர் பின்னலாடை வர்த்தக இலக்கான ரூ.50 ஆயிரம் கோடியை இந்த நிதியாண்டில் எட்டுவதில் எந்தவித தடையும் இருக்காது. நடப்பு ஆண்டின் தொடக்க மாதமே வளர்ச்சியோடு தொடங்கியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • 20-ந்தேதி கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
    • கனமழை பெய்யும் போது 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

    சென்னை :

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 4நாட்களுக்கான கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, இன்று தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும்.

    நாளை தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலும் நாளை மறுநாள் கோவை, நீலகிரி, தருமபுரி, நாமக்கல், ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, திருச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    20-ந்தேதி கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். கனமழை பெய்யும் போது 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

    சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மாலை அல்லது அதிகாலை வேளையில் லேசானது முதல் மிதமான மழை வாய்ப்பு உள்ளது. மதிய வேளையில் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைவதற்கான வாய்ப்பு உள்ளது.

    • காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
    • பெய்து வரும் மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து இதமான சூழல் நிலவுவதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    சென்னை:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் தற்போது சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மதுரவாயல், நெற்குன்றம், வளசரவாக்கம், வானகரம், போரூர், அய்யப்பன்தாங்கல் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.

    பெய்து வரும் மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து இதமான சூழல் நிலவுவதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதனிடையே, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி மற்றும் புதுச்சேரியில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

    • விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக அதிகாலையிலேயே படகுத்துறையில் சுற்றுலா பயணிகள் வந்து காத்திருந்தனர்.
    • திருவள்ளுவர் சிலையை பார்வையிட்ட பிறகு சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து படகு மூலம் கரைக்கு திரும்பினர்.

    கன்னியாகுமரி:

    கோடை விடுமுறையையொட்டி சனிக்கிழமையான இன்று கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. குறிப்பாக கேரளா மற்றும் வட மாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.

    இதனால் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. இன்று அதிகாலை கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமாகும் காட்சியை காண முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலி துறை கடற்கரை பகுதியிலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு கிழக்கு பக்கம் உள்ள கிழக்கு வாசல் கடற்கரை பகுதியிலும் சுற்றுலா பயணிகள் திரண்டு இருந்தனர். இன்று அதிகாலை சூரியன் உதயமான காட்சி தெளிவாக தெரிந்ததால் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.

    அதேபோல விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக அதிகாலையிலேயே படகுத்துறையில் சுற்றுலா பயணிகள் வந்து காத்திருந்தனர். காலை 7 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. சுமார் 2 மணி நேரம் படகுதுறையில் சுற்றுலா பயணிகள் காத்திருந்து படகில் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு திரும்பினர்.

    திருவள்ளுவர் சிலைக்கும், விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து கண்ணாடி கூண்டு பாலம் வழியாக ஏராளமான சுற்றுலா பயணிகள் நடந்து சென்றனர். திருவள்ளுவர் சிலையை பார்வையிட்ட பிறகு சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து படகு மூலம் கரைக்கு திரும்பினர்.

    மேலும் கன்னியாகுமரி பகவதி அம்மன், திருப்பதி வெங்கடாஜலபதி, கொட்டாரம் ராமர், சுசீந்திரம் தாணுமாலயசாமி, விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள பாரத மாதா, ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

    தற்போது கோடையை மிஞ்சும் வகையில் வெயில் கொளுத்துவதால் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் கடலில் ஆனந்த குளியல் போட்டு உற்சாகம் அடைந்தனர்.

    மேலும் மாலை நேரங்களில் கடற்கரையில் இதமான குளிர்காற்று வீசுவதால் வெயில் வெப்பத்தை தணிக்கும் வகையில் இரவு 9 மணி வரை கடற்கரையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. சுற்றுலா பயணிகள் வருகை "திடீர்"என்று அதிகரித்ததால் கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கடலோர பாதுகாப்பு குழும போலீசார், சுற்றுலா போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • அ.தி.மு.க. ஆட்சியில் பதிந்த வழக்கை தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற முறைகேடு போல் சித்தரிப்பதற்காக ரெய்டு.
    • தவறான அறிக்கையை நியாயப்படுத்த ED டாஸ்மாக் நிறுவன ஊழியர்களை தொடர்ந்து துன்புறுத்துகிறது.

    டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் விசாகன் வீட்டில் 2-வது நாளாக சோதனை நடத்தி வரும் அமலாக்கத்துறை அதிகாரிகள், அவரை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் தமிழ்நாடு அரசு ஊழியர்களை துன்புறுத்தும் அமலாக்கத்துறைக்கு கண்டனம் தெரிவித்து மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    * அரசியல் உள்நோக்கத்தோடு அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வருகிறது.

    * உச்சநீதிமன்ற விதிமுறைகளை மீறி அமலாக்கத்துறை மேற்கொண்டு வரும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைக்கு கண்டனம்.

    * அ.தி.மு.க. ஆட்சியில் விஜிலென்ஸ் பதிவு செய்த வழக்குகளை அடிப்படையாக கொண்டு அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

    * அ.தி.மு.க. ஆட்சியில் பதிந்த வழக்கை தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற முறைகேடு போல் சித்தரிப்பதற்காக ரெய்டு.

    * எந்த ஆதாரமும் கிடைக்காததால் ரூ.1,000 கோடி ஊழல் என கற்பனை செய்தியை அமலாக்கத்துறை வெளியிட்டது.

    * வெளியிட்ட தவறான அறிக்கையை நியாயப்படுத்த ED டாஸ்மாக் நிறுவன ஊழியர்களை தொடர்ந்து துன்புறுத்துகிறது.

    * அமலாக்கத்துறை நடவடிக்கைகளுக்கு எதிராக அனைத்து சட்டபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு, நமது அலுவலர்களுடன் அரசு எப்போது துணை நிற்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று அப்பு குட்டியின் தோட்டத்தில் பதிந்து இருந்த கால் தடங்களை ஆய்வு செய்தனர்.
    • சிறுத்தையினை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்திருந்தனர்.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம், சென்னிமலை வனப்பகுதி 1,700 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதன், தெற்கு வனப்பகுதி ஒட்டி அமைந்துள்ள ஊர் சில்லாங்காட்டுவலசு, இங்குள்ள பாப்பங்காடு பகுதியைச் சேர்ந்தவர் அப்புகுட்டி. விவசாயியான இவர் தனது குடும்பத்துடன் வனப்பகுதியை ஒட்டி உள்ள தோட்டத்து வீட்டில் வசித்து வருகிறார். இவர் எருமை மாடுகள், வெள்ளாடுகள் வளர்த்து வருகிறார்.

    நேற்று அதிகாலை பால் கறப்பதற்காக அப்புகுட்டி எருமைகள் கட்டி இருந்த பகுதிக்குச் சென்றார். அங்கு பார்த்த பொழுது பட்டியில் இருந்த ஒரு வெள்ளாடு காணாமல் போயிருந்தது. அதனால், அப்புகுட்டி ஆடு தோட்டத்தில் எங்காவது உள்ளதா? என தேடி பார்த்தார்.

    அப்பொழுது தோட்டத்தை ஒட்டி போடப்பட்டுள்ள கம்பி வேலி வரை அவர் சென்றார். அங்கு கம்பி வேலிக்கான கல் தூணில் அவர் வளர்த்து வந்த ஆட்டின் ரோமங்கள் ஒட்டியிருந்தது. மேலும், அதே பகுதியில் மர்ம விலங்கு ஒன்றின் கால் அடித்தடங்கள் காணப்பட்டது.

    இது குறித்து அவர் சென்னிமலை வனத்துறை அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தார்.

    வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று அப்பு குட்டியின் தோட்டத்தில் பதிந்து இருந்த கால் தடங்களை ஆய்வு செய்தனர். அப்போது அது சிறுத்தையின் கால் தடம் என்பதை உறுதி செய்தனர். சிறுத்தை புலி வனப்பகுதியை விட்டு வெளியேறி வெள்ளாட்டை கொன்று கம்பி வேலி வழியாக இழுத்துச் சென்று உள்ளது தெரிய வந்தது.

    கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் சிலாங்காட்டு வலசு பகுதியைச் சேர்ந்த விவசாயி குமாரசாமி என்பவர் தோட்டத்தில் தொடர்ந்து ஆடுகள் மற்றும் கன்று குட்டிகள் காணாமல் போன நிலையில் அவற்றை சிறுத்தை வேட்டையாடி தூக்கி சென்றதை வனத்துறை உறுதி செய்தது.

    அதை தொடர்ந்து அவரது தோட்டத்தில் சிறுத்தையினை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்திருந்தனர். ஆனால், கூண்டுக்குள் சிக்காமல் தப்பி சென்ற சிறுத்தை தற்போது பாப்பாங்காடு பகுதியில் ஆடுகளை வேட்டையாடி தனது அட்டகாசத்தை தொடங்கி உள்ளது.

    இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் நேற்று ஆட்டை கட்டி போட்டு இலை தலைகளை போட்டு வைத்து கூண்டு வைத்து உள்ளனர்.

    ×