என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அன்னூர் சுற்றுவட்டாரத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை: 5 ஆயிரம் வாழைகள் சேதம்
    X

    அன்னூர் சுற்றுவட்டாரத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

    • சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
    • வீடுகளுக்குள் மழை நீர் நுழைந்ததால் பொதுமக்கள் செய்வது தெரியாமல் தவித்தனர்.

    அன்னூர்:

    அன்னூர் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று அன்னூர், கஞ்சப்பள்ளி, கரியாம்பாளையம், பொங்கலூர், கணேசபுரம், காட்டம்பட்டி, மசக்கவுண்டன் செட்டிபாளையம், பிள்ளையப்பம்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது.

    இதில் கரியம்பாளையம் பகுதியில் எல்லப்பாளையம் அடுத்த காலனியில் சூறாவளி காற்றுடன் வீசிய கனமழைக்கு வீட்டின் மேற்கூரைகள் காற்றில் பறந்து சென்றன. இதையடுத்து மழைநீர் வீடுகளுக்கு உள்ளேயே பெய்யத் தொடங்கியது.

    இதனால் இப்பகுதி பொதுமக்கள் செய்வதறியாமல் தவித்தனர். இதேபோல் கணேசபுரம் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்று விளம்பரத்திற்காக வைக்கப்பட்டிருந்த விளம்பர பிளக்ஸ் பேனர் ஒன்று காற்றில் தூக்கி வீசப்பட்டு அப்பகுதியில் இருந்த மின்கம்பத்தின் மீது விழுந்தது. இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

    இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்து மின் கம்பத்தின் மீது உரசி அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்த விளம்பர பிளக்ஸ் பேனரை அப்புறப்படுத்தினர்.

    மேலும் கணேசபுரம் சங்கீத் மில், கரியாம்பாளையம், நல்லிசெட்டிபாளையம், எல்லப்பாளையம், கஞ்சப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சூறாவளி காற்றுடன் வீசிய கனமழைக்கு சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் முறிந்து விழுந்தன.

    மேலும் கணேசபுரம், காட்டம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு வீடுகளுக்குள் மழை நீர் நுழைந்ததால் பொதுமக்கள் செய்வது தெரியாமல் தவித்தனர். கனமழையின் காரணமாக அன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் பல இடங்களில் மின் ஒயர்கள் சேதமடைந்ததால் பல மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    Next Story
    ×