என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஒரே மதிப்பெண் பெற்ற இரட்டை சகோதரிகள் கவிதா, கனிகா.
மருத்துவராகி சேவை செய்வதே எங்களின் கனவு - 10-ம் வகுப்பு தேர்வில் ஒரே மதிப்பெண் பெற்ற இரட்டை சகோதரிகள்
- எங்களின் தந்தை தேவாலயத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார்.
- பிளஸ்-2 பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் வாங்குவது தான் எங்களது அடுத்த இலக்கு.
கோவை:
தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது.
கோவையை சேர்ந்த இரட்டை சகோதரிகள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண் பெற்றுள்ளனர்.
கோவை ராமநாதபுரம் ஒலம்பஸ் பகுதியை சேர்ந்தவர்கள் சுந்தர்ராஜன்-பாரதி செல்வி தம்பதியர். இந்த தம்பதிக்கு கவிதா, கனிகா என 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் இரட்டை சகோதரிகள்.
இவர்கள் 2 பேரும் கோவை ராமநாதபுரம் மாநகராட்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தனர்.
நேற்று 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் இரட்டை சகோதரிகள் 2 பேரும் ஒரே மாதிரியாக 474 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
இதில் கவிதா தமிழில்-95, ஆங்கிலத்தில்-98, கணிதத்தில்-94, அறிவியலில்-89, சமூக அறிவியலில்-95 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.
கனிகா தமிழில்-96, ஆங்கிலத்தில்-97, கணிதத்தில்-94, அறிவியலில்-92, சமூக அறிவியலில்-95 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவர்கள் கணித பாடத்திலும் ஒரே மாதிரியான மதிப்பெண்களை எடுத்துள்ளனர்.
இதுகுறித்து கவிதா, கனிகா ஆகியோர் கூறியதாவது:-
எங்களின் தந்தை தேவாலயத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். கடவுளின் ஆசியால் நாங்கள் இருவரும் ஒரே மதிப்பெண்கள் பெற்றுள்ளோம். இது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆசிரியர்கள் எங்களுக்கு நன்கு உதவினார்கள்.
நிறைய சிறப்பு வகுப்புகள் நடத்தினார்கள். கல்விக் கட்டணத்துக்கு கூட உதவி செய்தார்கள். ஒரே மாதிரியான மதிப்பெண் எடுப்போம் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
மருத்துவராகி சேவை செய்வதே எங்களின் கனவு. இதனால் பிளஸ்-1 வகுப்பில் 2 பேருமே உயிரியல் கணிதம் பாடப்பிரிவை எடுக்க உள்ளோம். மேலும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் வாங்குவது தான் எங்களது அடுத்த இலக்கு.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.






