என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • ஒரே தண்டவாளத்தில் ஒரே நேரத்தில 2 ரெயில்கள் வந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
    • இது ஒரு முறை அல்ல, நிர்வாக குளறுபடியால் நாள்தோறும் நடக்கும் அவலம் என பயணிகள் புகார் தெரிவித்தனர்.

    சென்னை பெருநகரத்தோடு புறநகர் பகுதி மக்களை இணைக்கும் போக்குவரத்து சேவையில் மின்சார ரெயில் சேவை முக்கிய பங்காற்றுகிறது.

    போக்குவரத்து நெரிசலை குறைப்பதில் மின்சார ரெயிலின் சேவை இன்றியமையாதது. அந்தவகையில், தெற்கு ரெயில்வேயின் சென்னை ரெயில்வே கோட்டத்தின் கீழ் நாள்தோறும் 600-க்கும் மேற்பட்ட மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றது.

    இந்த நிலையில், சென்னை பல்லாவரத்தில் ஒரே தண்டவாளத்தில் 2 ரெயில்கள் வந்து நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக 2 மின்சார ரெயில்களும் நிறுத்தப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    ஒரே தண்டவாளத்தில் ஒரே நேரத்தில 2 ரெயில்கள் வந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    15 நிமிட இடைவெளியில் வர வேண்டிய மின்சார ரெயில் முன்கூட்டியே வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த சம்பவம் குறித்து பயணிகள் கூறுகையில், இது ஒரு முறை அல்ல, நிர்வாக குளறுபடியால் நாள்தோறும் நடக்கும் அவலம் என புகார் தெரிவித்தனர்.

    • அரக்கோணம் பழைய பேருந்து நிலையம் அருகில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
    • நேற்றிரவு திடீரென அனுமதி மறுத்துள்ளதாக அ.தி.மு.க.வினர் புகார் கூறியுள்ளனர்.

    ராணிப்பேட்டை:

    அரக்கோணம் பகுதியில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த அரக்கோணம் திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் மீது நடவடிக்கை எடுக்காத ஸ்டாலின் மாடல் அரசின் காவல் துறையைக் கண்டித்தும், தமிழகத்தில் தொடர்ந்து பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களை வேடிக்கை பார்த்து வரும் ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும், ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில், அரக்கோணம் பழைய பேருந்து நிலையம் அருகில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என நேற்றுமுன்தினம் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார்.

    இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், அரக்கோணத்தில் இன்று நடைபெற இருந்த அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு முறையாக அனுமதி வழங்க கோரி கடிதம் வழங்கப்பட்ட நிலையில் நேற்றிரவு திடீரென அனுமதி மறுத்துள்ளதாக அ.தி.மு.க.வினர் புகார் கூறியுள்ளனர். மேலும், ஆர்ப்பாட்டத்தை எவ்வாறு நடத்துவது என்பது தொடர்பாக அ.தி.மு.க. நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 

    • கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து இன்று காலை 8 மணிக்கு வினாடிக்கு 3,268 கனஅடி தண்ணீர் வந்தது.
    • தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் சீறிப் பாய்ந்து அணை பூங்காவிற்கு செல்லும் தரைப்பாலம் மூழ்கியபடி செல்கிறது.

    கிருஷ்ணகிரி:

    கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையால் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இந்த அணைக்கு இன்று காலை 8 மணி நிலவரப்படி 1410 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 44.28 அடி கொள்ளளவான அணையில் 44.28 அடி நீர் இருப்பு உள்ளது.

    இதனால் அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து அப்படியே தண்ணீரை வெளியேற்றப் பட்டு வருகிறது. இந்த தண்ணீர் கால்வாய் வழியாக நேராக கிருஷ்ணகிரி கே.ஆர்.எஸ். அணைக்கு வருகிறது.

    அதன்படி, கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து இன்று காலை 8 மணிக்கு வினாடிக்கு 3,268 கனஅடி தண்ணீர் வந்தது.

    அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் நீர்மட்டம் 50.85 அடியாக உள்ளது.

    அணையின் பாதுகாப்பு கருதி நேற்று மாலை 4500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை வினாடிக்கு 3,571 கனஅடி தண்ணீர் குறைத்து வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதனால் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் சீறிப் பாய்ந்து அணை பூங்காவிற்கு செல்லும் தரைப்பாலம் மூழ்கியபடி செல்கிறது.

    இதன் காரணமாக தரைப்பாலம் வழியாக பூங்காவிற்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தரைப்பாலத்தின் இருபகுதிகளிலும் போலீசார், தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது.
    • நேற்று சவரனுக்கு ரூ.360 குறைந்து ஒரு சவரன் ரூ.69,680-க்கும் விற்பனையானது.

    சென்னை:

    தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. வார தொடக்க நாளான நேற்றுமுன்தினம் சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.70,040-க்கும், நேற்று சவரனுக்கு ரூ.360 குறைந்து ஒரு சவரன் ரூ.69,680-க்கும் விற்பனையானது.

    இந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 220 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,930-க்கும் சவரனுக்கு 1,760 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.71,440-க்கும் விற்பனையாகிறது. இதனால் சவரன் விலை மீண்டும் ரூ.71 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

    வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு 3 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 111-க்கும் கிலோவுக்கு மூவாயிரம் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 11ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    20-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.69,680

    19-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,040

    18-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.69,760

    17-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.69,760

    16-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.69,760

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    20-05-2025- ஒரு கிராம் ரூ.108

    19-05-2025- ஒரு கிராம் ரூ.109

    18-05-2025- ஒரு கிராம் ரூ.108

    17-05-2025- ஒரு கிராம் ரூ.108

    16-05-2025- ஒரு கிராம் ரூ.108

    • ராமாபுரம் நோக்கி சென்ற கார் காத்திப்பாரா மேம்பாலத்தில் சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது.
    • காரில் பயணித்த பெண்கள் காயமடைந்த நிலையில் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    கிண்டி:

    சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தின் சென்டர் மீடியனில் கார் மோதி விபத்துக்குள்ளானது.

    திருவொற்றியூரில் இருந்து ராமாபுரம் நோக்கி சென்ற கார் காத்திப்பாரா மேம்பாலத்தில் சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. காரில் பயணித்த பெண்கள் காயமடைந்த நிலையில் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த விபத்தால் அப்பகுதியில் சிலமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

    • புதிய கல்வி கொள்கை, சமக்ரா சிக்ஷா திட்டங்களின் கீழ் வழங்க வேண்டிய நிதி வழங்கப்படவில்லை.
    • தேசிய கல்விக்கொள்கையை ஏற்றால்தான் ரூ.2291 கோடி நிதி தரப்படும் என மத்திய அரசு கூறுவது சட்டவிரோதம்.

    சென்னை:

    தமிழ்நாட்டுக்கு நியாயமாக தர வேண்டிய கல்வி நிதியை உடனடியாக விடுவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.

    அந்த மனுவில், புதிய கல்வி கொள்கை, சமக்ரா சிக்ஷா திட்டங்களின் கீழ் வழங்க வேண்டிய நிதி வழங்கப்படவில்லை எனவும் தேசிய கல்விக்கொள்கையை ஏற்றால்தான் ரூ.2291 கோடி நிதி தரப்படும் என மத்திய அரசு கூறுவது சட்டவிரோதம் என தமிழ்நாடு அரசு குற்றம் சாட்டியுள்ளது.

    மேலும், சமக்ரா திட்டத்துக்கான நிதியை 6% வட்டியுடன் ரூ. 2,291 கோடி வழங்க உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு அரசு வலியுறுத்தி உள்ளது.

    • பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் சென்னை சென்டிரல்- சாய் நகர் சீரடி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • இன்று மற்றும் 28 ஆகிய தேதிகளில் சென்னை சென்டிரலில் இருந்து காலை 11.25 மணிக்கு புறப்பட்டு சாய் நகர் சீரடி செல்லும்.

    சென்னை:

    சென்னை கோட்டத்தில் பல்வேறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் சென்னை சென்டிரல்- சாய் நகர் சீரடி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை சென்டிரலில் இருந்து காலை 10.25 மணிக்கு புறப்பட்டு மகாராஷ்டிர மாநிலம் சாய் நகர் சீரடி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.22601), இன்று (புதன்கிழமை) மற்றும் 28 ஆகிய தேதிகளில் சென்னை சென்டிரலில் இருந்து காலை 11.25 மணிக்கு புறப்பட்டு (1 மணி நேரம் தாமதமாக) சாய் நகர் சீரடி செல்லும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மெரினா கடலில் குளிப்பதை தடுக்க போலீசார் எவ்வளவோ நடவடிக்கை எடுத்தும் பலன் இல்லை.
    • கடலில் குளிப்பதை தடுக்கும் விதமாக பாதுகாப்பு அரண்களை அமைத்து போலீசார் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    சென்னை:

    சென்னை மெரினா கடலில் குளிக்கும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அடிக்கடி உயிரை இழக்கும் சம்பவங்கள் நடக்கிறது. மெரினா கடலில் குளிப்பதை தடுக்க போலீசார் எவ்வளவோ நடவடிக்கை எடுத்தும் பலன் இல்லை.

    இந்தநிலையில் இணை கமிஷனர் விஜய குமார் தற்போது புதிய முயற்சியில் இறங்கி உள்ளார்.

    நேப்பியர் பாலம் முதல் பட்டினம்பாக்கம் வரை உள்ள மெரினா கடல் பகுதியில் 7 இடங்களில் கடல் நீருக்குள் சுழற்சி இருப்பதாகவும் அந்த பகுதியில் கடலில் குளிப்பவர்கள் சுழற்சியில் சிக்கி அலையால் இழுத்து செல்லப்பட்டு உயிரை விடுகிறார்கள். எனவே அந்த பகுதியில் கடலில் குளிப்பதை தடுக்கும் விதமாக பாதுகாப்பு அரண்களை அமைத்து போலீசார் விழிப்புணர்வு பிரசாரத்திலும் ஈடுப்பட்டுள்ளனர். இந்த புதிய முயற்சிக்கு பலன் கிடைக்கும் என் நம்புவதாக போலீசார் தெரிவித்தனர்.

    • பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் சில எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.
    • கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12665), வள்ளியூர்-கன்னியாகுமரி இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, வள்ளியூரில் நிறுத்தப்படும்.

    சென்னை:

    திருவனந்தபுரம் கோட்டத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் சில எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பகுதி நேர ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    * சென்னை எழும்பூரில் இருந்து வரும் 24-ந்தேதி காலை 10.20 மணிக்கு புறப்பட்டு குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.16127), சாலக்குடி-குருவாயூர் இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, சாலக்குடியில் நிறுத்தப்படும்.

    * மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து வரும் ஜூன் 9-ந்தேதி மாலை 4 மணிக்கு புறப்பட்டு கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12665), வள்ளியூர்-கன்னியாகுமரி இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, வள்ளியூரில் நிறுத்தப்படும்.

    * தாம்பரத்தில் இருந்து வரும் ஜூன் 10-ந்தேதி இரவு 10.40 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் (20691), நெல்லை-நாகர்கோவில் இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, நெல்லையில் நிறுத்தப்படும்.

    *மறுமார்க்கமாக, நாகர்கோவிலில் இருந்து ஜூன் 11-ந்தேதி மாலை 3.50 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் (20692), நாகர்கோவில்-நெல்லை இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, நெல்லையில் இருந்து மாலை 5.10 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும்.

    * திருச்சியில் இருந்து வரும் ஜூன் 11-ந்தேதி காலை 7.20 மணிக்கு புறப்பட்டு திருவனந்தபுரம் சென்ட்ரல் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (22627), நெல்லை-திருவனந்தபுரம் இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, நெல்லையில் நிறுத்தப்படும்.

    * திருவனந்தபுரம் சென்ட்ரலில் இருந்து ஜூன் 11-ந்தேதி காலை 11.35 மணிக்கு புறப்பட்டு திருச்சி வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (22628), திருவனந்தபுரம்-நெல்லை இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, நெல்லையில் இருந்து மதியம் 2.25 மணிக்கு புறப்பட்டு திருச்சி செல்லும்.

    * நாகர்கோவிலில் இருந்து வரும் ஜூன் 11-ந்தேதி காலை 8 மணிக்கு புறப்பட்டு கோவை வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16321), நாகர்கோவில்-வள்ளியூர் இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, வள்ளியூரில் இருந்து காலை 8.26 மணிக்கு புறப்பட்டு கோவை செல்லும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தங்கத்தின் மதிப்பில் 75 சதவீதம் மட்டுமே கடன் வழங்க வேண்டும்.
    • தங்க நகைபோல், வெள்ளி பொருட்களுக்கும் கடன் வழங்கலாம்.

    சென்னை:

    தங்கத்தின் மவுசு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மக்கள் தங்கத்தை ஆடம்பரத்துக்காக மட்டும் பயன்படுத்தவில்லை. தங்களது அவசர தேவைக்குஉதவும் பொருளாகவும் பார்க்கிறார்கள்.

    ஏழை-எளிய மற்றும் நடுத்தர மக்கள் தங்களுக்கு ஏற்படும் உடனடி பணத்தேவைக்கு தங்களிடம் உள்ள தங்க நகைகளை அடகு வைத்தே பணத்தை பெற்று வந்தனர். தனியார் நடத்தும் அடகு கடைகளில் வட்டி அதிகம் என்பதால் பெரும்பாலானவர்கள் வங்கிகளிலேயே தங்களது நகைகளை குறைந்த வட்டிக்கு அடகு வைத்து பணம் பெற்று வந்தனர்.

    இந்த சூழ்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய கட்டுப்பாடு ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு பேரிடியாக விழுந்தது.

    அதாவது முன்பெல்லாம் வங்கிகளில் நகைகளை அடமானம் வைத்தால், குறித்த காலக்கெடு முடியும் தருவாயில், அதற்கான வட்டியை மட்டும் கட்டிவிட்டு, நகையை மறு அடமானம் வைத்துக்கொள்ளலாம். தற்போது ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்கு பின்னர், இந்த முறை முற்றிலும் மாறியது. குறிப்பிட்ட காலக்கெடு முடிவதற்குள் கடன் தொகையை முற்றிலும் கட்டி நகையை திருப்ப வேண்டும். அதற்கு அடுத்த நாளில்தான் அந்த நகையை சம்பந்தப்பட்டவரால் மீண்டும் அடமானம் வைக்க முடியும்.

    இந்த கட்டுப்பாடு அனைத்து தரப்பினரையும் பெருமளவு பாதித்தது.

    இந்த சூழ்நிலையில் மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி தகவலாக, நகைக் கடனுக்கு புதிய கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்துள்ளது.

    தங்க நகைக்கடன் வழங்குவதில் புதிய நடைமுறைகளை அமல்படுத்த முடிவு செய்துள்ள ரிசர்வ் வங்கி, இதற்காக வங்கிகள் மற்றும் தங்க நகைக் கடன் வழங்கும் தனியார் நிறுவனங்கள் என அனைத்திற்கும் ஒரே விதமான வரைவு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதில் 9 அம்சங்கள் முன் மொழியப்பட்டுள்ளன.

    அதன் விவரம் வறுமாறு:-

    * தங்கத்தின் மதிப்பில் 75 சதவீதம் மட்டுமே கடன் வழங்க வேண்டும். தற்போது 90 சதவீதம் வரை வழங்கப்படுகிறது. அதாவது ஒரு லட்சம் மதிப்புள்ள தங்கத்திற்கு அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் தான் கடன் வழங்கப்படும்.

    * தங்க நகையை அடமானம் வைப்பவர்கள், அதன் உரிமையாளர்கள் தாங்கள் தான் என்ற ஆதாரத்தை சமர்பிக்க வேண்டும்.

    * வங்கிகள், தங்கத்தின் மீது கடன் வழங்கும்போது, அந்த தங்க நகையின் தரத்தை உறுதிப்படுத்த ஒரு தரச்சான்றிதழ் வேண்டும்.

    * தங்க நகைகள், அலங்காரப் பொருட்கள் மற்றும் குறிப்பிட்ட தங்க நாணயங்கள் மட்டுமே அடமானமாக ஏற்கப்படும்.

    * தங்க நகைபோல், வெள்ளி பொருட்களுக்கும் கடன் வழங்கலாம்.

    * ஒரு நபருக்கு அதிகபட்சமாக ஒரு கிலோ தங்க நகைகள் மற்றும் 50 கிராம் தங்க நாணயங்கள் வரை மட்டுமே அடமானமாக வைக்க அனுமதிக்கப்படும்.

    * தங்க நகை கடன் வழங்குபவர்கள் 22 காரட் தங்கத்தின் விலையை அடிப்படையாக கொண்டு தங்கத்தின் மதிப்பை கணக்கிட வேண்டும்.

    * தங்க நகை கடன் வழங்குபவர்கள் அதற்கான ஒப்பந்தத்தில் அடமானமாக வைக்கப்பட்ட தங்கத்தின் விவரம், மதிப்பு, ஏல நடைமுறை போன்றவற்றை சேர்க்க வேண்டும்.

    * கடன் தொகையை திருப்பி செலுத்திவிட்டால், 7 வேலை நாட்களுக்குள் தங்கத்தை திருப்பி தர வேண்டும்.

    * அடமான நகையை திருப்பி தர தாமதிக்கும் ஒவ்வொரு நாளுக்கும் ரூ.5,000 பணத்தை கடன் வழங்கிய நிறுவனம் வாடிக்கையாளருக்கு செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சட்டசபை தேர்தலை பொறுத்தவரையில், கட்சியின் மாநாட்டிலேயே எங்கள் நிலைபாட்டை தெளிவாக அறிவித்துவிட்டோம்.
    • டிசம்பர் மாதத்திற்கு பிறகு, தமிழக அரசியலில் பெரிய அதிர்வுகள் ஏற்படும்.

    சென்னை:

    தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் (தேர்தல் மேலாண்மை) ஆதவ் அர்ஜூனா சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    எதிர்க்கட்சியாக இருந்தபோது சி.ஏ.ஏ சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசியல் அமைப்பை காப்போம் என்று உறுதியாக இருந்து போராட்டம் நடத்திய தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு, வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராக அதேபோன்ற நிலையில் இல்லை. வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டசபையில் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியதை வரவேற்கிறோம். ஆனால், அது கண்துடைப்பாகவே இருக்கிறது. வக்பு வாரிய சட்டத்திற்கு எதிரான வழக்கில் தன்னை ஏன் தமிழக அரசு இணைத்துக் கொள்ளவில்லை?. கேரள அரசை போல, வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர வேண்டும். அரசியல் அமைப்பின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க உண்மையாக குரல் கொடுக்க வேண்டும்.

    அதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் குரல் கொடுக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தையும் கூட்ட வேண்டும்.

    இதை வாக்கு வங்கி ரீதியாக தமிழக வெற்றிக்கழகம் அணுகவில்லை. வடகாடு விவகாரத்தில் திருமாவளவன் போலீஸ் துறையை விமர்சித்தார். போராட்டம் முடித்த பிறகு தி.மு.க. அரசு சமூக நீதிக்கான அரசு என்று மாற்றி பேசுகிறார்.

    சட்டசபை தேர்தலை பொறுத்தவரையில், கட்சியின் மாநாட்டிலேயே எங்கள் நிலைபாட்டை தெளிவாக அறிவித்துவிட்டோம். அரசியல் எதிரியான தி.மு.க.வுடனும், கொள்கை எதிரியான பா.ஜ.க.வுடனும் கூட்டணி கிடையாது என்பது எங்கள் நிலைப்பாடு. அ.தி.மு.க.வை ஏன் எதிர்க்கவில்லை என்று கேட்கிறார்கள்.

    எதிர்க்கட்சியாக உள்ள ஒரு கட்சியை ஏன் எதிர்க்க வேண்டும்?. அந்த கட்சிக்கு மக்கள் தண்டனை கொடுத்துள்ளார்கள். பல தேர்தல்களில் தோல்வியை சந்தித்த அ.தி.மு.க.வை நாங்கள் ஏன் எதிர்க்க வேண்டும்?. பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்ததும், தமிழக வெற்றிக்கழகம் இந்த கூட்டணி தவறானது என தன்னுடைய நிலைபாட்டை அறிவித்துள்ளது. விஜய் வருகை உண்மையான அரசியலை உருவாக்கும். டிசம்பர் மாதத்திற்கு பிறகு, தமிழக அரசியலில் பெரிய அதிர்வுகள் ஏற்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கர்நாடக மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது.
    • நேற்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

    பென்னாகரம்:

    வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மேலும் கர்நாடக மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான ஓசூர், கனகபுரா, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, கேரட்டி, ராசி மணல், பிலிகுண்டுலு உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    இதனிடையே நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

    இந்த நிலையில் ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கான நீர்வரத்து இன்று காலை 8,000 கனஅடியில் இருந்து 14,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

    ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்ட தொடங்கியது. மேலும் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    இந்த நீர்வரத்தை காவிரி நுழைவிடமான தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளந்து கண்காணித்து வருகின்றனர்.

    ×