என் மலர்
உள்ளூர் செய்திகள்
- ஆற்றங்கரையின் ஓரத்தில் கட்டப்பட்டுள்ள மிகப்பெரும் மதில் சுவர்களை இடித்து ஆக்கிரமிப்புகளை அகற்ற தி.மு.க. அரசிற்குத் துணிவிருக்கிறதா?
- அப்பாவி மக்கள் வாழும் வாழ்விடங்களை இடித்து, அதிகாரத் துணைகொண்டு மிரட்டி, விரட்டுவது கொடுங்கோன்மையின் உச்சமாகும்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அடையாறு ஆற்றின் கரையைப் பலப்படுத்துவதாகக் கூறி சென்னை அனகாபுத்தூர் பகுதியில் அமைந்துள்ள 750 வீடுகளை இடித்து, அங்கு வசிக்கும் 3500க்கும் மேற்பட்ட மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற தி.மு.க. அரசு முயல்வது வன்மையான கண்டனத்திற்குரியது.
குடியிருப்புகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து வீதியில் இறங்கிப் போராடிய பூர்வகுடி மக்களின் மீது காவல்துறை மூலம் கடுமையான அடக்குமுறைகளை ஏவி தி.மு.க. அரசு கைது செய்திருப்பது சிறிதும் மனிதநேயமற்ற கொடுஞ்செயலாகும்.
அடையாறு ஆற்றினை 110 அடியிலிருந்து 360 அடியாக அகலப்படுத்தும் பொருட்டு ஆற்றங்கரை ஒரு புறத்தில் அமைந்துள்ள ஏழை எளிய மக்களின் குடியிருப்புகளை அகற்ற முயலும் தி.மு.க. அரசு, கரையின் மறுபுறத்தில் உள்ள பெருமுதலாளிகளுக்கு சொந்தமான இடங்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? அவையெல்லாம் ஆக்கிரமிப்பு இல்லையா? ஆற்றங்கரையின் ஓரத்தில் கட்டப்பட்டுள்ள மிகப்பெரும் மதில் சுவர்களை இடித்து ஆக்கிரமிப்புகளை அகற்ற தி.மு.க. அரசிற்குத் துணிவிருக்கிறதா?
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, மின்சார இணைப்பு, குடிநீர் இணைப்பு என அனைத்து சான்றுகளையும் பெற்று, வீட்டு வரி உள்ளிட்ட அனைத்து வரிகளும் செலுத்தி, வாக்கும் செலுத்தி வசிக்கும் மக்களை ஆக்கிரமிப்பு என்றுகூறி வெளியேற்றுவது சிறிதும் நியாயமற்ற செயலாகும். அம்மக்களிடம் வாக்கு கேட்டுச் செல்லும்போது ஆக்கிரமிப்பு என்று தெரியாத வீடுகள் இப்போது மட்டும் ஆக்கிரமிப்பாகத் தெரிகிறதா? காவல்துறை மூலம் அடக்குமுறைகளை ஏவி மண்ணின் மக்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த முயல்வது, தி.மு.க. அரசின் எதேச்சதிகார மனப்பான்மையையே வெளிக்காட்டுகிறது.
தி.மு.க. அரசு பொறுப்பேற்ற கடந்த 4 ஆண்டுகளில் சென்னையின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் பூர்வகுடி மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் பணியைத் தொடர்ச்சியாகச் செய்து வருகிறது. ஏழை மக்களிடமிருந்து நிலங்களைப் பறித்து பன்னாட்டுப் பெருமுதலாளிகள், வடநாட்டு வியாபாரிகள், நிலவிற்பன்னர்கள் ஆகியோருக்கு பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை தி.மு.க. அரசு தாரைவார்க்கிறது. அரசியல்வாதிகள் ஆக்கிரமித்துள்ள அரசு நிலங்களை மீட்க திறனற்ற தி.மு.க. அரசு, அப்பாவி மக்கள் வாழும் வாழ்விடங்களை இடித்து, அதிகாரத் துணைகொண்டு மிரட்டி, விரட்டுவது கொடுங்கோன்மையின் உச்சமாகும்.
ஏற்கனவே கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் 5-ம் நாள் பாதிக்கப்படும் அனகாபுத்தூர் மக்களை நேரில் சந்தித்து ஆறுதலும், ஆதரவும் தெரிவித்தேன். அதே ஆண்டு நவம்பர் 14-ம் நாள் மீண்டும் அம்மக்களை நேரில் சந்தித்து பாதிக்கப்படும் பகுதிகளை நேரில் பார்வையிட்டு வீடுகளை இடிக்க நாம் தமிழர் கட்சி ஒருபோதும் விடாது என்றும் உறுதி கூறியிருந்தேன். இதையடுத்து வீடுகளை இடிக்கும் திட்டத்தைக் கிடப்பில் போட்ட தி.மு.க. அரசு தற்போது மீண்டும் வீடுகளை இடிக்க முயல்வதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சிக்கும், அச்சத்திற்கும் ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில் ஆதரவற்று நிற்கும் அனகாபுத்தூர் மக்களை இன்று (21-05-2025) மீண்டும் நேரில் சந்தித்து, நாம் தமிழர் கட்சி இருக்கும் வரை மக்கள் இருக்க இடமற்ற நிற்கதியான நிலைக்கு ஆளாக ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என்ற உறுதியை அளித்து, அம்மக்களின் கண்ணீர் துடைத்து கவலை போக்கி, அச்சம் நீக்கி ஆறுதல் கூறவிருக்கிறேன்.
ஆகவே, தமிழ்நாடு அரசு சென்னை அனகாபுத்தூர் பகுதியில் வாழ்ந்து வரும் பூர்வகுடி மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதை உடனடியாக நிறுத்தி, அவர்களது வீடுகளை இடிக்கும் உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டுமென்றும், வீடுகள் இடிக்கும் திட்டத்தை நிரந்தரமாக கைவிட வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.
மேலும், பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் வசிப்பிடங்களை விட்டு பூர்வகுடி மக்களைத் திட்டமிட்டு அப்புறப்படுத்தும் இதுபோன்ற கொடுங்கோன்மைச் செயல்கள், இனியும் தொடரக்கூடாதென்றும் தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நேற்று இரவு பாலபிரபு தனது மனைவி குழந்தை மற்றும் மாமனாருடன் சென்னை நோக்கி காரில் புறப்பட்டார்.
- விபத்தில் காரின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது.
குன்னம்:
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் சூரக்குடி தெற்கு கிரி வளை பகுதியை சேர்ந்தவர் பாலபிரபு (வயது 28) இவரது மனைவி கவுரி (26) சித்தா டாக்டர். இந்த தம்பதியரின் 2 வயது மகள் கவிகா. பாலபிரபுவின் மாமனார் திருப்பூர் பல்லடத்தை சேர்ந்தவர் கந்தசாமி (50).
பாலபிரபு தனது குடும்பத்துடன் சென்னையில் வசித்து வந்தார். கவுரி சென்னையில் கிளினிக் வைத்து நடத்தி வருகிறார். கோடை விடுமுறையை தொடர்ந்து பாலபிரபு குடும்பத்துடன் சொந்த ஊரான அகஸ்தீஸ்வரம் சென்றார். ஜூன் 2-ந் தேதி பள்ளி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் அவர்கள் சென்னை புறப்பட ஆயத்தம் ஆகினர்.
நேற்று இரவு பாலபிரபு தனது மனைவி, குழந்தை மற்றும் மாமனாருடன் சென்னை நோக்கி காரில் புறப்பட்டார். காரை பாலபிரபு ஓட்டினார். கார் இன்று காலை திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியை அடுத்த பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் பகுதியில் சென்றபோது விபத்தில் சிக்கியது. பெருமாள் பாளையம் பூமாலை ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய சாலையோரத்தில் நின்ற புளிய மரத்தில் பயங்கரமாக மோதியது.
இதில் காரின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி பாலபிரபு, மாமனார் கந்தசாமி ஆகிய 2 பேரும் சம்பவ இடத்தில் உடல் நசுங்கி பலியாகினர். உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று பார்த்தபோது குழந்தை கவிகா, தாய் டாக்டர் கவுரி ஆகியோர் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
உடனே ஆம்புலன்ஸை வரவழைத்து பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவர்கள் 2 பேரையும் மீட்டு ஆம்புலன்சில் ஏற்றினர். ஆனால் ஆம்புலன்சில் ஏற்றப்பட்ட சில நொடிகளில் குழந்தை கவிகா உயிர் பிரிந்து விட்டது. அதன் பின்னர் கவுரியை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இது பற்றி தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பலியான 3 பேரின் உடல்களையும் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கார் புளிய மரத்தில் மோதிய விபத்தில் தந்தை, மகள் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
- சமூக நீதியை இந்திய அளவில் பேச என்னை விட்டால் வேறு யாரும் இல்லை.
- நான் எப்போதும் இனிப்பான செய்தியை மட்டும் தான் சொல்லுவேன்.
திண்டிவனம்:
திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சமூக நீதி பேரவை நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
வன்னியர் சமுதாயத்தில் கையெழுத்து போட தெரியாமல் இருந்த நிலையில் அவர்களை ஆயிரம் வக்கீல்களாகவும், நீதிபதிகளாகவும் உருவாக்கி உள்ளோம். இவர்கள் இட ஒதுக்கீட்டில் படித்தவர்கள், நிறைய நீதிபதிகள் நீதிமன்றத்தில் இருந்து மேலவை நீதிமன்றம் வரைக்கும் உருவாகியுள்ளார்கள். என்னுடைய உழைப்பால் என்னுடைய போராட்டத்தால் அனைவரும் பயன்பெற்றுள்ளனர்.
சமூக நீதியை இந்திய அளவில் பேச என்னை விட்டால் வேறு யாரும் இல்லை. நான் ஒருவன் தான் அதைப்பற்றி பேச முடியும். வேறு யாரும் பேச முடியாது, தெரியாது. மிகப் பிற்படுத்தப்பட்ட இந்த சமுதாயம் படித்துக் கொண்டிருக்கிறது. படித்து வக்கீலாக வந்து கொண்டிருக்கிறார்கள். வக்கீல் சங்கங்களுக்கு ஊடகங்களின் ஆதரவு தேவை நீங்கள் கொடுப்பீர்கள் என நம்புகிறோம். நீதித்துறையில் இட ஒதுக்கீடு வேண்டும். நீதிமன்றங்களில் சமூக நீதி இல்லை, உயர் நீதிமன்றத்தில் சமூக நீதி இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
அவரிடம் அன்புமணி ராமதாஸ் தங்களை சந்திக்க வாய்ப்புள்ளதா என கேட்டபோது வருவார். விரைவில் தன்னை வந்து சந்திப்பார். இருவருக்கும் இடையே மனகசப்பு இல்லை. நான் எப்போதும் இனிப்பான செய்தியை மட்டும் தான் சொல்லுவேன். நான் தொடர்ந்து நிருபர்கள் சந்திப்பில் இனிப்பான செய்திகளை மட்டும் தான் சொல்லுவேன். டாக்டராக இருந்தாலும் இனிப்பான மருந்து தான் கொடுப்பேன். கசப்பான மருந்தை கொடுக்க மாட்டேன். திருத்துறைப்பூண்டியை சேர்ந்த சுப்பிரமணிய அய்யர் சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும் சீற்றம் குறையவில்லை என்று சொன்னார். ஆனால் சிங்கத்தின் கால்கள் பழுதடையவில்லை, சீற்றமும் குறையவில்லை என டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.
- இசையமைப்பாளர் சாம் சி.எஸ் மீது சினிமா தயாரிப்பாளர் சமீர் அலிகான் புகார் அளித்துள்ளார்.
- 2021 ஆம் ஆண்டு தமிழ் பையன் இந்தி பொண்ணு என்ற படம் தொடங்கப்பட்டது.
பிரபல இசையமைப்பாளர் சாம் சி.எஸ். மீது சினிமா தயாரிப்பாளர் மோசடி புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சினிமா தயாரிப்பாளர் சமீர் அலிகான் என்பவர் கோயம்பேடு காவல் நிலையத்தில் இசையமைப்பாளர் சாம் சி.எஸ். மீது ரூ.25 லட்சம் மோசடி புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், "கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழ் பையன் இந்தி பொண்ணு என்ற படத்திற்கு இசை அமைப்பதற்காக இசையமைப்பாளர் சாம் சி.எஸ்.-க்கு ரூ.25 லட்சம் முன்பணம் கொடுத்தேன். ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தினால் அப்படத்தின் பணிகள் பாதியிலேயே நின்றது. தற்போது அப்படத்தின் பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன. ஆனால் இப்படத்திற்கு இசை அமைக்காமலும் கொடுத்த பணத்தை திரும்ப தராமலும் சாம் சி.எஸ் ஏமாற்றி வருகிறார்" என்று சமீர் அலிகான் தெரிவித்துள்ளார்.
இந்த புகார் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- கோவை மாவட்டத்தில் மட்டும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு தொழில்முனைவோர்கள் உள்ளனர்.
- 22 கேரட் தங்கத்தின் விலையை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடப்படும் என்பதும், பழைய நகையை வைத்திருப்பவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
தங்க நகைக்கடன் வழங்குவதில் புதிய நடைமுறைகளை அமல்படுத்த முடிவு செய்துள்ள ரிசர்வ் வங்கி, இதற்காக வங்கிகள் மற்றும் தங்க நகைக் கடன் வழங்கும் தனியார் நிறுவனங்கள் என அனைத்திற்கும் ஒரே விதமான வரைவு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக கோவை இடையர்பாளையத்தை சேர்ந்த தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் சிறுகுறு தொழில்முனைவோர் சங்க தலைவர் ஜேம்ஸ் கூறியதாவது:-
வங்கிகள் மற்றும் தங்க நகைக்கடன்கள் வழங்கும் தனியார் நிறுவனங்களுக்கு நகைக்கடன் வழங்க ரிசர்வ் வங்கி விதித்து இருக்கும் 9 கட்டுப்பாடுகள் அனைவரையும் கடுமையாக பாதிக்கும்.
குறிப்பாக சிறு, குறு, தொழில் செய்பவர்கள் மற்றும் விசைத்தறி தொழில் செய்யும் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
கோவை மாவட்டத்தில் மட்டும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு தொழில்முனைவோர்கள் உள்ளனர்.
சிறு, குறு தொழில் செய்பவர்கள், தங்களது தொழிலுக்கு, அவசர தேவை என்றால், உடனே வங்கிக்கு சென்று தங்க நகையை அடமானம் வைத்து கடன் பெற்று அதனை சரி செய்து கொள்வார்கள்.
தற்போது தங்கத்தின் மதிப்பில் 90 சதவீதம் வரை கடன் வழங்கப்பட்டு வந்தது. தற்போது அதனையும் 75 சதவீதம் மட்டுமே வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். இது மிகவும் கடுமையாக பாதிக்கும்.

22 கேரட் தங்கத்தின் விலையை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடப்படும் என்பதும், பழைய நகையை வைத்திருப்பவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதேபோன்று ஒரு நபருக்கு ஒரு கிலோ தங்கம் மட்டுமே அடமானம் வைக்க முடியும்.
உரிமையாளர்கள் நாங்கள் தான் என்பதற்கு சான்று கண்டிப்பாக ஒப்படைக்க வேண்டும் என்பன போன்ற கட்டுப்பாடுகளும் அவசர தேவைக்காக அடகு வைத்து பணம் உதவி பெறுவதில் சிக்கல்களை ஏற்படுத்தும்.
ஏற்கனவே பல்வேறு சிக்கல்களில் உள்ள தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் சிறு, குறு தொழில் செய்பவர்கள் இந்த கட்டுப்பாடுகளால் மேலும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
எனவே மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கும் கட்டுப்பாடுகளை வாபஸ் பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து கோவை வையம்பாளையத்தை சேர்ந்த முரளி என்பவர் கூறும்போது, ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும்.
சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வங்கியில் அடகு வைத்த நகைகளுக்கு ஆண்டுதோறும் வட்டியை கட்டி அதனை மீண்டும் திருப்பி வைத்து வைப்பது வழக்கம். ஆனால் இந்த புதிய கட்டுப்பாட்டால் பணத்தை முழுமையாக செலுத்தி நகையை திருப்ப வேண்டும் என்பது முடியாத காரியம்.
எனவே இந்த கட்டுப்பாடுகளை வாபஸ் பெற வேண்டும் என்றார்.
- 25 வகையான போக்குவரத்து விதிமீறலுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.
- சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
சென்னை:
சாலை விபத்துக்களை தவிர்க்க வாகன ஓட்டிகளுக்கு போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தும், அறிவுரை வழங்கியும் வருகின்றனர். இருப்பினும் ஒரு சில வாகன ஓட்டிகளின் அஜாக்கிரதையால் விபத்து நிகழத்தான் செய்கிறது.
இதற்காகவே போக்குவரத்து விதிமீறல்களை தடுக்க போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஹெல்மெட் அணியாதது உள்ளிட்ட 25 வகையான போக்குவரத்து விதிமீறலுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. இதனால் போலீசாரை கண்டதும் இருசக்கர வாகன ஓட்டிகள் வேகமாக வானத்தை இயக்கி விபத்தில் சிக்குவதும் நடைபெறுகிறது.
இந்த நிலையில், சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில் 25 வகையான போக்குவரத்து விதிமீறல்களுக்கு இதுவரை அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் இனி 5 வகையான போக்குவரத்து விதிமீறல்களுக்கு மட்டுமே அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
அதன்படி, வாகனத்தை அதிவேகமாக ஓட்டுதல், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுதல், நோ எண்ட்ரியில் வாகனத்தை ஓட்டிச் செல்லுதல், மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டுதல், இரு சக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் செல்லுதல் ஆகிய 5 வகையான விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் போக்குவரத்து போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
- வியாபாரிகள், விவசாயிகள், தொழிலாளர்கள் உள்பட அனைத்து விதமான ஏழை மக்களும் உடனடி பண தேவையை தங்கத்தை அடகு வைத்து தான் பூர்த்தி செய்து வருகிறார்கள்.
- வளர்ந்து வரும் நாடான இந்தியாவுக்கு இந்த திட்டம் தேவையில்லாதது.
தங்க நகைக்கடன் வழங்குவதில் புதிய நடைமுறைகளை அமல்படுத்த முடிவு செய்துள்ள ரிசர்வ் வங்கி, இதற்காக வங்கிகள் மற்றும் தங்க நகைக் கடன் வழங்கும் தனியார் நிறுவனங்கள் என அனைத்திற்கும் ஒரே விதமான வரைவு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக சேலத்தை சேர்ந்த மாம்பழம் மற்றும் தக்காளி மொத்த வியாபாரியான தக்காளி ஆறுமுகம் என்பவர் கூறியதாவது:
வியாபாரிகள், விவசாயிகள், தொழிலாளர்கள் உள்பட அனைத்து விதமான ஏழை மக்களும் உடனடி பண தேவையை தங்கத்தை அடகு வைத்து தான் பூர்த்தி செய்து வருகிறார்கள்.
ஆனால் ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பில் அடகு வைக்கும் நகைகளை திருப்ப முழு தொகையும் வங்கியில் செலுத்தி திருப்ப வேண்டிய நிலை உள்ளதால் அதற்கான பணத்தை திரட்ட தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் தனியார் வங்கிகளை பொதுமக்கள் நாடும் நிலை உள்ளது. இதில் ஒரு நாளைக்கு ஒரு மாத வட்டி செலுத்த வேண்டிய நிலை உள்ளதால் பொதுமக்களுக்கு பொருளாதார பேரிழப்பு ஏற்படும் நிலை உள்ளது
மேலும் ஒவ்வொருவருக்கும், தனது தாய் மற்றும் மனைவியின் பெற்றோர் மூலம் தங்க நகைகள் கிடைக்கிறது. இந்த நகைகளை தங்களுக்குள்ளது என்று எப்படி யாரிடம் சான்று வழங்க முடியும், இது முடியாத செயல், இதில் பல்வேறு இடையூறுகள் உள்ளன. அதற்கு தனியாக செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது.
கடந்த காலங்களில் நகைகளின் மதிப்பில் 90 சதவீதம் கடன் கொடுத்த நிலையில் தற்போது 75 சதவீதம் மட்டுமே வழங்கப்படும் என்று அறிவித்துள்ளதால் தொழிலுக்கு போதுமான பணத்தை திரட்ட முடியாத நிலை ஏற்படும். இதனால் தொழிலை தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்படும்.
எனது வியாபாரத்திற்கு தேவையான பணத்தை பெற அரசு வங்கிகளில் நகைகளை அடகு வைத்துள்ளேன். இதன் மூலம் வங்கிகளுக்கு லட்சக்கணக்கில் வட்டி கட்டி வருகிறேன். இனி வரும் நாட்களில் புதிய அறிவிப்புகளால் தனியார் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு என்னை போன்றவர்கள் செல்லும் நிலை உள்ளது. இதனால் அரசு வங்கிகளுக்கு வருமான இழப்பு ஏற்படும்.
நகைக்கு தர உறுதி சான்றிதழ் வாங்க வேண்டும் என்ற அறிவிப்பால் அதற்கு தனியாக செலவு செய்யும் நிலை உள்ளது. வளர்ந்து வரும் நாடான இந்தியாவுக்கு இந்த திட்டம் தேவையில்லாதது. ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்புகள் தனியார் நிதி நிறுவனங்கள், வங்கிகளுக்கு உதவுவது போல அமைந்துள்ளது.
இதனால் நாடு முழுவதும் உள்ள என்னை போன்ற நடுத்தர வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே இந்த புதிய அறிவுப்புகளை உடனடியாக ரிசர்வ் வங்கி திரும்ப பெற்று அனைத்து தரப்பு மக்களுக்கும் உதவும் வகையில் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

தக்காளி ஆறுமுகம் - ஆட்டோ டிரைவர் ஏழுமலை
வேலூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஏழுமலை கூறுகையில்,
ஆட்டோ ஓட்டும் தொழில் மூலம் சில நேரங்களில் போதிய வருமானம் கிடைப்பதில்லை. அவசர தேவை மற்றும் பிள்ளைகளின் படிப்பு செலவுக்காக கடன் வாங்க வேண்டி உள்ளது.
ஏற்கனவே வங்கியில் அடமானம் வைத்த நகைகளை மீட்கும் போது மொத்தமாக பணத்தைக் கட்டி அதனை மீட்க வேண்டும் என ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு கொண்டு வந்துள்ளதால் நகைகளை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தற்போது கொண்டு வந்துள்ள புதிய கட்டுப்பாடுகளால் நகைகளை எளிதில் வங்கிகளில் அடகு வைக்க முடியாது. 20 ஆண்டுக்கு முன்பு வாங்கிய தங்க நகைக்கான ஆதாரத்தை எங்கிருந்து நாங்கள் கொண்டு வருவோம். இதுபோன்ற கட்டுப்பாடுகளால் கந்து வட்டி வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவோம். இதனால் எங்களுடைய வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கும் என்றார்.
- பா.ம.க. சமூக நீதி பேரவை நிர்வாகிகளுடன் தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாஸ் இன்று ஆலோசனை நடத்தினார்.
- 3 நாள் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டுள்ளது.
திண்டிவனம்:
திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க.வின் பல்வேறு அணி நிர்வாகிகளின் கூட்டத்தை டாக்டர் ராமதாஸ் கூட்டினார்.
இதில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள், மகளிரணி, இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் நிர்வாகிகள் பெருமளவில் கலந்து கொள்ளவில்லை.
ஆனால் நேற்றுமுன்தினம் நடந்த வன்னியர் சங்க வடக்கு மண்டல மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் 62 பேரில் 55 பேர் கலந்து கொண்டனர். மற்ற நிர்வாகிகள் 310 பேரில் 200 பேர் வரை பங்கேற்றதால் ராமதாஸ் உற்சாகம் அடைந்தார்.
3 நாட்கள் நடைபெற்ற கூட்டங்களையும் அன்புமணி புறக்கணித்தார். கட்சியை தனது கட்டுப்பாட்டில் அவர் வைத்திருந்த நிலையில் வன்னியர் சங்கம் ராமதாசுக்கு ஆதரவாக நின்றதால் பா.ம.க.வை முழுமையாக தன் வசமாக்கும் அன்புமணியின் முயற்சி தோல்வியில் முடிந்தது.
இந்த நிலையில் நேற்று டாக்டர் ராமதாஸ் எந்த நிர்வாகிகள் கூட்டத்தையும் கூட்டாமல் தோட்டத்தில் ஓய்வெடுத்தார்.
இந்த நிலையில் இன்று பா.ம.க. சமூக நீதிப் பேரவையின் வக்கீல் பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இக்கூட்டத்தில் கலந்து கொள்ள அனைத்து நிர்வாகிகளுக்கும் வாட்ஸ்அப் மூலம் தகவல் அனுப்பப்பட்டு இருந்தது. டாக்டர் அன்புமணி, சமூக நீதி பேரவை தலைவர் வக்கீல் பாலு ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், பா.ம.க. சமூக நீதி பேரவை நிர்வாகிகளுடன் தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாஸ் இன்று ஆலோசனை நடத்தினார்.
2026 சட்டமன்ற தேர்தலில் எவ்வாறு செயல்பட வேண்டும் என டாக்டர் ராமதாஸ் நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
இந்த கூட்டத்தில் பா.ம.க. கவுரவத்தலைவர் ஜி.கே. மணி எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். அவர் நிருபர்களிடம் கூறும்போது:-
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் விரைவில் சந்திப்பார்கள். 3 நாள் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டுள்ளது. இருவரும் ஒன்று கூடி செய்தியாளர்களை சந்திப்பார்கள் என்றார்.
அவரிடம் ஏற்கனவே நடைபெற்ற 3 கூட்டங்களிலும் மாநில பொருளாளர் திலகபாமா, எம்.எல்.ஏ.க்கள் மயிலம் சிவக்குமார், மேட்டூர் சதாசிவம் ஆகியோர் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனரே என கேட்ட போது அவர்களும் வருகிற கூட்டத்திற்கு வருவார்கள், வருவார்கள் என 2 முறை அழுத்தமாக தெரிவித்தார்.
- ஒரு வருடத்திற்கு செலுத்த வேண்டிய வட்டி தொகையை விட இந்த புதிய நடைமுறையால் இரண்டு முறை வட்டி கட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.
- புதிய நடைமுறையால் என்னை போன்ற நடுத்தர பெண்கள் நடுத்தர குடும்பத்தினர் பெரும் இன்னல்களுக்கு ஆளாகும் சூழ்நிலை உருவாகி வருகிறது.
தங்க நகைக்கடன் வழங்குவதில் புதிய நடைமுறைகளை அமல்படுத்த முடிவு செய்துள்ள ரிசர்வ் வங்கி, இதற்காக வங்கிகள் மற்றும் தங்க நகைக் கடன் வழங்கும் தனியார் நிறுவனங்கள் என அனைத்திற்கும் ஒரே விதமான வரைவு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக மதுரை மாவட்டம் திடீர் நகரை சேர்ந்த பூ வியாபாரி தனம் கூறுகையில்,
மதுரை என்றாலே அனைவரின் நினைவுக்கும் வருவது குண்டு மல்லி தான். நாங்கள் பல தலைமுறைகளாக பூ வியாபாரம் பார்த்து வருகிறோம். என் கணவர் இறந்து 15 வருடங்கள் ஆகிறது. 4 குழந்தைகள் உள்ளனர். பிள்ளைகளை வளர்ப்பதற்காக கடந்த 37 வருடங்களாக பெரியார் பேருந்து நிலையம் அருகே பூ கட்டி வியாபாரம் செய்து வருகிறேன்.
குடும்ப தேவைகளுக்காகவும், பிள்ளைகளின் கல்வி, திருமணம் உள்ளிட்ட பல்வேறு செலவுகளுக்கும் கடந்த 8 ஆண்டுகளாக நான் சிறிது சிறிதாக வாங்கிய நகைகளை வங்கியில் அடமானம் வைத்து கடன் பெற்று வாழ்க்கை நடத்தி வருகிறேன். முன்பெல்லாம் வங்கியில் நகைகளை அடமானம் வைத்தால் ஒரு வருடத்திற்குள் நகைகளை திருப்ப வேண்டும் என்ற நடைமுறை இருந்து வந்தது. மேலும் நகைகளை திருப்ப இயலவில்லை என்றால் நகைகள் மீது கூடுதலாக பணம் பெற்றுக்கொண்டு மறு அடகு வைக்கும் நடைமுறையும் இருந்தது.
ஆனால் தற்போது நகைகளை ஆறு மாதத்திற்கு ஒரு முறை வட்டி தொகையை செலுத்தி திருப்ப வேண்டுமெனவும், அதன் பிறகு மறுநாளில் மீண்டும் அடகு வைத்துக் கொள்ளலாம் என்றும் உத்தரவு போடப்பட்டுள்ளதாக வங்கி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஒரு வருடத்திற்கு செலுத்த வேண்டிய வட்டி தொகையை விட இந்த புதிய நடைமுறையால் இரண்டு முறை வட்டி கட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.
இதனால் எங்களைப் போன்ற ஏராளமான நடுத்தர குடும்பத்தினர் மிகவும் பாதிப்படைந்து உள்ளனர். ஏழை, எளிய மக்கள் தங்கம் வாங்குவது என்பது இன்றைய விலையில் சாத்தியமில்லாத ஒன்றாக உள்ளது. இந்த நிலையில் நாங்கள் வாங்கிய தங்கத்தை அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வங்கியில் அடமானம் வைத்து பணம் பெறுகிறோம். அதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தால் நாங்கள் என்ன செய்வது என்று தெரியவில்லை.
முன்பெல்லாம் நகை வாங்கும்போது ஜி.எஸ்.டி. வரி என்பது கிடையாது. ஆனால் தற்போது ஜி.எஸ்.டி. வரி போடுகிறார்கள். அவ்வாறு இருக்கும் சூழ்நிலையில் தங்கத்தை அடகு வைக்கும்போது அதற்கான பில்லை சாமானிய மக்களால் எப்படி வங்கியில் தர முடியும். இது நகை அடகு வைப்பவர்களை மிகவும் பாதிக்கும். மொத்தத்தில் இந்த புதிய கட்டுப்பாடுகள் என்னை போன்ற அன்றாட கூலிகளுக்கு நகை அடமானம் வைப்பதையே மறக்கடித்துவிடும் என்றார்.

பூ வியாபாரி தனம் - இல்லத்தரசி அஞ்சலி
தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியை சேர்ந்த இல்லத்தரசி அஞ்சலி கூறியதாவது:-
முன்பெல்லாம் வங்கிகளில் நகைகளை அடமானம் வைத்தால், குறித்த காலக்கெடு முடியும் தருவாயில், அதற்கான வட்டியை மட்டும் கட்டிவிட்டு, நகையை மறு அடமானம் வைத்துக்கொண்டு வந்தோம்.
ஆனால் தற்போது ரிசர்வ் வங்கியின் அறிவிப்பால் நகை அடைமானம் காலக்கெடு முடிவதற்குள் கடன் தொகையை முற்றிலும் கட்டி நகையை திருப்ப வேண்டும் என வங்கி கூறியுள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எங்களுடயை கடன் சுமையை குறைக்க வேண்டியே வங்கிகளில் நகைகளை அடமானம் வைக்கிறோம். முழுத் தொகை செலுத்தி அதனை எடுக்க முடியாத சூழ்நிலையில் நகைக்கடனுக்காக வட்டியை மட்டும் கட்டி விட்டு அதனை மறுபடியும் வங்கியில் அடமானம் வைத்து வந்தோம்.
ஆனால் தற்போது முழுதொகை மற்றும் அதற்கான வட்டியை முழுவதும் கட்டி நகையை பெற்று அதனை மீண்டும் மறுநாள் அடமானம் வைக்கலாம் எனக் கூறும் இந்த புதிய நடைமுறையால் என்னை போன்ற நடுத்தர பெண்கள் நடுத்தர குடும்பத்தினர் பெரும் இன்னல்களுக்கு ஆளாகும் சூழ்நிலை உருவாகி வருகிறது.
சில தனியார் வங்கிகள் முழுதொகை மற்றும் அசல் வட்டியை உடனே கட்ட வேண்டும். இல்லையெனில் நகை ஏலத்திற்கு சென்று விடும் கூறி வருகின்றனர்.
இதனால் நடுத்தர குடும்பத்தினர் வங்கியின் அச்சுறுத்தல்களுக்கு பயந்து கந்து வட்டியில் கடன் வாங்கி நகையை மீட்டு மறுபடியும் நகையை வங்கியில் அடமானம் வைத்து கந்துவட்டி நபர்களுக்கு பணத்தை கொடுத்து வரும் சூழ்நிலை தற்போது ஏற்பட்டு உள்ளது.
ஆகையால் ஏழை எளிய மக்களின் நலன் கருதி ரிசர்வ் வங்கி இந்த அறிவிப்பினை திரும்ப பெற வேண்டும் என்பது எங்களை போன்ற நடுத்தர குடும்பத்தினரின் கோரிக்கையாக உள்ளது என பேசி முடித்தார்.
- விதை விதைப்பது, நாற்றாங்கால்களைத் தயார் படுத்துவது போன்ற பணிகளை உழவர்கள் மேற்கொள்ள வேண்டும்.
- நடப்பாண்டிற்கான குறுவைத் தொகுப்பு இன்னும் அறிவிக்கப்படாதது உழவர்களிடையே பல்வேறு யூகங்களை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து வரும் ஜூன் 12-ஆம் தேதி காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படுவது உறுதியாகி விட்ட நிலையில், குறுவை சாகுபடி செய்ய உழவர்களை ஊக்குவிப்பதற்கான குறுவைத் தொகுப்புத் திட்டம் இன்று வரை அறிவிக்கப்படவில்லை. காவிரி பாசன மாவட்ட உழவர்களின் நலனில் தமிழக அரசு அக்கறையின்றி செயல்படுவது கண்டிக்கத்தக்கது.
மேட்டூர் அணையிலிருந்து குறித்த காலத்தில் தண்ணீர் திறந்து விடப்படாத ஆண்டுகளில், நிலத்தடி நீரை பயன்படுத்தி உழவர்களை ஊக்குவிக்கு நோக்குடன் தான் குறுவைத் தொகுப்புத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது என்றாலும் கூட, பல்வேறு காரணங்களால் குறுவை பருவத்தில் உழவர்கள் இழப்பை சந்திப்பது வாடிக்கையாகி விட்ட நிலையில், அதைக் கருத்தில் கொண்டு அனைத்து ஆண்டுகளும் குறுவைத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், நடப்பாண்டிற்கான குறுவைத் தொகுப்பு இன்னும் அறிவிக்கப்படாதது உழவர்களிடையே பல்வேறு யூகங்களை ஏற்படுத்தியுள்ளது.
குறுவை பாசனத்திற்காக இன்னும் 3 வாரங்களில் காவிரியில் தண்ணீர் திறக்கப்படவுள்ள நிலையில், அதற்கு முன்பாகவே குறுவைப் பாசனத்திற்கு காவிரி பாசன மாவட்ட உழவர்கள் தயாராக வேண்டும். விதை விதைப்பது, நாற்றாங்கால்களைத் தயார் படுத்துவது போன்ற பணிகளை உழவர்கள் மேற்கொள்ள வேண்டும். அதற்குத் தேவையான விதை, உரங்கள், நுண்ணூட்டச் சத்துகள் போன்றவற்றை மானிய விலையில் வழங்குவது தான் குறுவைத் தொகுப்பு திட்டமாகும். அதை தாமதப்படுத்துவது எந்த வகையிலும் நியாயமல்ல.
கடந்த ஆண்டில் வேளாண் துறை மிக மோசமான பின்னடைவை சந்தித்திருக்கிறது. 2024-25ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த வேளாண் துறையும் மைனஸ் 0.09% வளர்ச்சியடைந்துள்ளது. உழவுத் தொழிலின் வளர்ச்சியை மட்டும் பார்த்தால் மைனஸ் 5.93 விழுக்காடாக வீழ்ச்சியடைந்துள்ளது. இத்தகைய சூழலில் நடப்பாண்டிலாவது வேளாண் துறை வளர்ச்சியை நேர்மறையாக மாற்ற சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும். அதற்கு மாறாக வழக்கமான திட்டங்களையே தாமதப்படுத்தக்கூடாது.
எனவே, இனியும் தாமதிக்காமல், காவிரி பாசன மாவட்ட உழவர்களுக்கு விதைகள், உரங்கள், நுண்ணூட்ட சத்துகள் உள்ளிட்டவற்றை மானியத்தில் வழங்கும் குறுவைத் தொகுப்புத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். கடந்த ஆண்டைப் போல ஒரு லட்சம் ஏக்கருக்கு மட்டும் தான் குறுவைத் தொகுப்பு உதவிகள் வழங்கப்படும் என்று இலக்கு நிர்ணயிக்காமல், அனைத்து உழவர்களுக்கும் வழங்க வேண்டும். அத்துடன், குறுவை சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் தெலுங்கானா மாநிலத்தில் வழங்கப்படுவதைப் போன்று ஏக்கருக்கு ரூ.5,000 வீதம் ஊக்குவிப்பு மானியமும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தங்க நகை கடன் பெறுவது தொடர்பாக அனைத்து தரப்பு மக்களும் பாதிக்காதவாறு எளிய வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
- வாரந்தோறும் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என்பதால் பலரும் கடன் பெறுவது வழக்கம்.
தங்க நகைக்கடன் வழங்குவதில் புதிய நடைமுறைகளை அமல்படுத்த முடிவு செய்துள்ள ரிசர்வ் வங்கி, இதற்காக வங்கிகள் மற்றும் தங்க நகைக் கடன் வழங்கும் தனியார் நிறுவனங்கள் என அனைத்திற்கும் ஒரே விதமான வரைவு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக தஞ்சையை சேர்ந்த விவசாயி முகமது இப்ராஹிம் கூறுகையில்,
தமிழகத்தில் தங்க நகை கடன் பெறுவோர் அதிகளவில் உள்ளனர். குறிப்பாக விவசாயிகள் விவசாய பணிகள் மேற்கொள்ள தங்கத்தை அடமானமாக வைத்து கடன் பெறுகின்றனர் . தற்போது நகை கடனுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
குறிப்பாக தங்கத்தின் மதிப்பில் 75 சதவீத பணம் மட்டுமே கடனாக வழங்கப்படும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது . மேலும் அடகு வைக்கும் தங்கத்திற்கு உரிமையாளர் என்பதற்கான ஆதாரம் வழங்க வேண்டும் என்பது விவசாயிகள் மட்டுமின்றி அனைத்து தரப்பிற்கும் சிரமத்தையே கொடுக்கும்.
முழுத்தொகை மற்றும் அதற்கான வட்டியை முழுமையாக கட்டி நகையை பெற்று அதனை மீண்டும் மறுநாள் அடமானம் வைக்கலாம் என கூறும் புதிய நடைமுறையால் நடுத்தர குடும்பத்தினர் பாதிப்பை சந்திப்பர். இது விவசாய மக்களையும் பெருமளவில் பாதிக்கும்.
எனவே புதிய கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி உடனே திரும்ப பெற வேண்டும். தங்க நகை கடன் பெறுவது தொடர்பாக அனைத்து தரப்பு மக்களும் பாதிக்காதவாறு எளிய வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

திருப்பூர் பனியன் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் முத்துரத்தினம் - விவசாயி முகமது இப்ராஹிம்
திருப்பூர் பனியன் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் முத்துரத்தினம் கூறியதாவது:-
திருப்பூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்கள் மூலம் தினமும் கோடிக்கணக்கில் ஆடை உற்பத்தி செய்யப்பட்டு உள்நாடுகள் மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. வர்த்தகம் கோடிக்கணக்கில் நடைபெற்றாலும், தொழில்துறையினர் பலரும் தங்களது நிறுவனத் தேவைக்காக வங்கிகளில் நகைகளை அடகு வைத்து கடன் வாங்கியும் வருகிறார்கள். குறிப்பாக வாரந்தோறும் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என்பதால் பலரும் கடன் பெறுவது வழக்கம்.
இதன் பின்னர் ஆடைகளுக்கான பணம் கிடைத்தவுடன் அடகு வைத்த நகைகள் மற்றும் உள்ளிட்ட ஆவணங்களை திரும்ப பெறுவது வழக்கம். ஆனால் தற்போது விதிக்கப்பட்டுள்ள இந்த 9 கட்டுப்பாடுகள் எங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. அதில் 75 சதவீதம் தான் கடன் தொகை வழங்கப்படும் என்பது உள்பட கட்டுப்பாடுகள் திருப்பூர் தொழில்துறையினருக்கு கடும் சவாலாக உள்ளது.
சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வங்கியில் அடகு வைத்த நகைகளுக்கு ஆண்டுதோறும் வட்டியை கட்டி அதனை மீண்டும் திருப்பி வைத்து வைப்பது வழக்கம். ஆனால் இந்த புதிய கட்டுப்பாட்டால் பணத்தை முழுமையாக செலுத்தி நகையை திருப்ப வேண்டும் என்பது முடியாத காரியம்.
எனவே இந்த கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.
- நீர் வரத்து அதிகமாக உள்ளதால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
மேட்டூர்:
கர்நாடக மாநிலத்தில் உள்ள தெற்கு கன்னடம் மாவட்டம் மங்களுரு, குடகு, மாண்டியா, மைசூரு, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணை மற்றும் எச்.டி.கோட்டை தாலுகாவில் உள்ள கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
இந்த இரு அணைகளில் இருந்து உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 6,233 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 9,698 கன அடியாக அதிகரித்தது.
இன்று நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 12,819 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நீர் வரத்து அதிகமாக உள்ளதால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று காலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 109.33 அடியாக இருந்த நிலையில் இன்று நீர்மட்டம் 110.03 அடியாக உயர்ந்துள்ளது.
நீர் இருப்பு 78.45 டி.எம்.சி.உள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது.






