என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ராமதாஸ்-அன்புமணி விரைவில் சந்திப்பார்கள்: ஜி.கே.மணி
- பா.ம.க. சமூக நீதி பேரவை நிர்வாகிகளுடன் தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாஸ் இன்று ஆலோசனை நடத்தினார்.
- 3 நாள் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டுள்ளது.
திண்டிவனம்:
திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க.வின் பல்வேறு அணி நிர்வாகிகளின் கூட்டத்தை டாக்டர் ராமதாஸ் கூட்டினார்.
இதில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள், மகளிரணி, இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் நிர்வாகிகள் பெருமளவில் கலந்து கொள்ளவில்லை.
ஆனால் நேற்றுமுன்தினம் நடந்த வன்னியர் சங்க வடக்கு மண்டல மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் 62 பேரில் 55 பேர் கலந்து கொண்டனர். மற்ற நிர்வாகிகள் 310 பேரில் 200 பேர் வரை பங்கேற்றதால் ராமதாஸ் உற்சாகம் அடைந்தார்.
3 நாட்கள் நடைபெற்ற கூட்டங்களையும் அன்புமணி புறக்கணித்தார். கட்சியை தனது கட்டுப்பாட்டில் அவர் வைத்திருந்த நிலையில் வன்னியர் சங்கம் ராமதாசுக்கு ஆதரவாக நின்றதால் பா.ம.க.வை முழுமையாக தன் வசமாக்கும் அன்புமணியின் முயற்சி தோல்வியில் முடிந்தது.
இந்த நிலையில் நேற்று டாக்டர் ராமதாஸ் எந்த நிர்வாகிகள் கூட்டத்தையும் கூட்டாமல் தோட்டத்தில் ஓய்வெடுத்தார்.
இந்த நிலையில் இன்று பா.ம.க. சமூக நீதிப் பேரவையின் வக்கீல் பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இக்கூட்டத்தில் கலந்து கொள்ள அனைத்து நிர்வாகிகளுக்கும் வாட்ஸ்அப் மூலம் தகவல் அனுப்பப்பட்டு இருந்தது. டாக்டர் அன்புமணி, சமூக நீதி பேரவை தலைவர் வக்கீல் பாலு ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், பா.ம.க. சமூக நீதி பேரவை நிர்வாகிகளுடன் தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாஸ் இன்று ஆலோசனை நடத்தினார்.
2026 சட்டமன்ற தேர்தலில் எவ்வாறு செயல்பட வேண்டும் என டாக்டர் ராமதாஸ் நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
இந்த கூட்டத்தில் பா.ம.க. கவுரவத்தலைவர் ஜி.கே. மணி எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். அவர் நிருபர்களிடம் கூறும்போது:-
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் விரைவில் சந்திப்பார்கள். 3 நாள் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டுள்ளது. இருவரும் ஒன்று கூடி செய்தியாளர்களை சந்திப்பார்கள் என்றார்.
அவரிடம் ஏற்கனவே நடைபெற்ற 3 கூட்டங்களிலும் மாநில பொருளாளர் திலகபாமா, எம்.எல்.ஏ.க்கள் மயிலம் சிவக்குமார், மேட்டூர் சதாசிவம் ஆகியோர் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனரே என கேட்ட போது அவர்களும் வருகிற கூட்டத்திற்கு வருவார்கள், வருவார்கள் என 2 முறை அழுத்தமாக தெரிவித்தார்.






