என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • ஒரு குடும்பத்திற்கு இடமாற்றுப்படியாக ரூ.5000, வாழ்வாதார உதவிக்காக ஓராண்டுக்கு ரூ.30,000 வழங்கப்படுகிறது.
    • உயர்நீதிமன்ற உத்தரவுப்படியே ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகின்றன.

    சென்னையை அடுத்த அனகாபுத்தூரில் அடையாறு ஆற்றின் கரையோரம் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டு, அங்கிருந்தவர்களுக்கு இலவச வீடுகள் வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    அதன்படி அவர்களுக்கு, ரூ.17 லட்சம் மதிப்பிலான 390 சதுர அடியில் இலவச வீடுகள் வழங்கப்பட உள்ளன.

    மேலும், ஒரு குடும்பத்திற்கு இடமாற்றுப்படியாக ரூ.5000, வாழ்வாதார உதவிக்காக ஓராண்டுக்கு ரூ.30,000 வழங்கப்படுகிறது.

    உயர்நீதிமன்ற உத்தரவுப்படியே ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகின்றன என்றும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

    இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    அடையாறு நதியை சீரமைக்க தமிழ்நாடு அரசின் புதிய நிறுவனமான சென்னை நதிகள் புனரமைப்பு நிறுவனம் (CRTCL) மூலம் ரூபாய் 1500 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ள வரவு செலவு திட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிவிக்கப்பட்டது.

    இந்த திட்டத்தினை செயல்படுத்த நடப்பு ஆண்டில் தமிழக அரசு ரூபாய் 300 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அடையாறு நதியை முழுவதுமாக புனரமைத்து கரையோரம் உள்ள பகுதிகளில் கழிவுநீர் கலப்பதை அறவே தடுத்து, நீர்வாழ் உயிரினங்கள் வாழும் சிறந்த சூழலை உருவாக்க வேண்டும் என்றால், கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றியும் அதன் மூலம் மாசுபடுவதை தடுக்கவும் கரையோரம் உள்ள குடியிருப்புகளை மறுகுடியமர்வு செய்வது அவசியமாகும்.

    இதன் ஒரு பகுதியாக அனகாபுத்துரில் அடையாறு ஆற்றங்கரையோரம் உள்ள காயிதே மில்லத் நகர், தாய் மூகாம்பிகை நகர்.

    சாந்தி நகர், எம்ஜிஆர் நகர் 3வது தெரு ஆகிய இடங்களில் வசித்து வரும் 593 குடும்பங்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் தைலாவரம், கீரப்பாக்கம், பெரும்பாக்கம் மற்றும் நாவலூர் ஆகிய இடங்களில் 390 சதுர அடியில் இலவசமாக வீடுகள் கட்டப்பட்டு வழங்கப்பட உள்ளன. (ஒரு வீடு 17 லட்சம்: 390 சதுர அடி)

    மேலும், அடையாறு ஆற்றங்கரையில் உள்ள ஜோதி ராமலிங்கம் நகர். திடீர் நகர், ஜோதி அம்மாள் நகர், சூர்யா நகர், மல்லிகைப்பூ நகர்ஆகிய 5 இடங்களில் வசித்து வரும் குடும்பங்களுக்கு 390 சதுர அடி பரப்பளவில் அனைத்து வசதிகளுடன் கூடிய வீடுகள் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமாக சுமார் ரூபாய் 17 லட்சம் மதிப்பிலான வீடுகள் கட்டப்பட்டு இலவசமாக வழங்கப்பட உள்ளன.

    மேலும், பயனாளிகளுக்கு குடும்பம் ஒன்றுக்கு இடமாற்றுப்படியாக ஒருமுறை ரூபாய் 5000. வாழ்வாதார உதவிக்காக மாதம் ரூபாய் 2500 என்ற அடிப்படையில் ஒரு வருடத்திற்கு ரூபாய் 30000. மின்சார இணைப்பு கட்டணம் ரூபாய் 2500 என்ற அடிப்படையிலும் குடியமர்விற்கும் வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமாக விரிவான சமுதாய வளர்ச்சி திட்டங்கள். உடனடி குடும்ப அட்டை மாற்றம் செய்தல், விதவை, முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு உடனடி சமூக பாதுகாப்பு திட்ட உதவி மாற்றம் செய்தல், கல்வி, அங்கன்வாடி, தொடக்க, நடுநிலை மற்றும் மேல்நிலை பள்ளி சேர்க்கை போன்ற அனைத்து திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும், மாண்பமை உயர்நீதிமன்ற நீதிமன்ற உத்தரவின்படி ஆற்றங்கரையில் வசித்து வரும் ஆக்கிரமிப்பாளர்கள் மறு குடியமர்வு செய்யப்பட்டு வருகின்றனர். மறு குடியமர்விற்கு ஒப்புதல் தராத ஆக்கரமிப்பாளர்களை உடனடியாக அப்புறப்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும், நதிநீர்சீரமைப்பு திட்டம் என்பதாலும், மழைக்கால வெள்ளத்தடுப்பு காரணங்களுக்காக ஆற்றங்கரையில் வசிக்கும் ஆக்கரமிப்பாளர்களை அரசு உரிய உதவிகளுடன் மறு குடியமர்வு செய்து வரும் அரசின் இந்த செயலுக்கு அனைவரும் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ரெய்டைப் பார்த்து யாருக்கு பயம்? திரு. மு.க.ஸ்டாலின் அவர்களே- அது கண்ணாடி..!
    • அம்மா அவர்கள் வழி வந்த என்னிடம் பேச உங்களுக்கு எந்த அருகதையும் இல்லை.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேற்று ஒரு பதிவு வெளியிட்டு இருந்தார். அதில், மத்திய அரசு தமிழ்நாட்டை புறக்கணிப்பதால் நிதி ஆயோக் கூட்டத்தை நான் புறக்கணிக்கிறேன் என்று வீராவேசமாக பேசிய பொம்மை வேந்தர் மு.க. ஸ்டாலின், தற்போது நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லிக்கு பறக்கிறாராம்! தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு தேவை என்றால் போகாதவர், தன் குடும்பத்திற்கு ஒரு தேவை என்றதும் செல்கிறார்! என்று விமர்சித்து இருந்தார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக," தமிழ்நாட்டிற்கான நியாயமான நிதி உரிமையை நிதி ஆயோக் கூட்டத்தில் வெளிப்படுத்த 24-ஆம் தேதி டெல்லி செல்கிறேன்!

    சசிகலா முதல் அமித் ஷா வரை ஆள் மாறினாலும், டேபிளுக்கு அடியில் காலைப் பிடிக்கும் பழக்கம் மாறாத எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு இதனைக் கண்டு ஏன் வலிக்கிறது? என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

    இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    முந்தைய மூன்று ஆண்டுகள் #NITIAayog கூட்டங்களை

    "தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறது" என வீர வசனம் பேசி, தமிழ்நாட்டின் முதல்வராக, தமிழ்நாட்டின் நியாயமான நிதி உரிமையைப் பெறச் செல்லாத நீங்கள், இப்போது மட்டும் செல்ல வேண்டிய காரணம் என்ன? தமிழ்நாடா? இல்லவே இல்லை. உங்கள் குடும்பம் தானே?

    ரெய்டைப் பார்த்து யாருக்கு பயம்? திரு. மு.க.ஸ்டாலின்

    அவர்களே- அது கண்ணாடி! …

    உங்களைப் பார்த்து நீங்களே ஏன் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்?

    அறிவாலய மேல் மாடியில் சிபிஐ ரெய்டு வந்த போது, கீழ்மாடியில் நீங்களும், உங்கள் தந்தையும் 63 தொகுதிகளை தாரைவார்த்த போது டேபிளுக்கு கீழ்

    தவழ்ந்து சென்றீர்களா? ஊர்ந்து சென்றீர்களா?

    எதிர்க்கட்சியாக கருப்பு பலூன் காட்டிவிட்டு, ஆளுங்கட்சியாக வெள்ளைக் குடை காட்டினீர்களே- அப்போது தவழ்ந்து சென்றீர்களா? ஊர்ந்து சென்றீர்களா?

    எது ஸ்டாலினின் கை?

    அண்ணா பல்கலை. வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர் உள்ளிட்ட சுயவிவரங்களோடு FIR லீக் செய்த கை ஸ்டாலினின் கை.

    ஜாபர் சாதிக் போன்ற International Drug Mafia தலைவனை அயலக அணி அமைப்பாளராக நியமித்த கை உங்கள் கை!

    ஞானசேகரன் முதல் தெய்வச்செயல் வரை சகல பாலியல் குற்றவாளிகளையும், அவர்கள் பின்னணியில் இருக்கும் "SIR"களையும் பாதுகாக்கும் கை, உங்கள் கை.

    அண்ணா நகர் 10 வயது சிறுமி பாலியல் வழக்கில், உங்கள் கீழ் இயங்கும் காவல்துறை மீது நம்பிக்கை இல்லாமல், உயர்நீதிமன்றம் தாமாக வந்து CBI விசாரணைக்கு உத்தரவிட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்ற கை, உங்கள் கை.

    தேர்தல் கூட்டணிக்காக, மேகதாது முதல் முல்லைப் பெரியாறு வரை தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்த கை தான் உங்கள் கை!

    7.5% உள் இடஒதுக்கீடு வந்தபோது, ஆளுநர் ஒப்புதல் அளிக்காத சூழலிலும், அரசியலமைப்பு சட்டத்தின் 162-வது பிரிவைப் பயன்படுத்தி அரசாணை வெளியிட்டு மாநில உரிமையை நிலைநாட்டியவன் நான்!

    அப்போது நீங்கள் ராஜ் பவன் வாசலில் அரசியலோ, அவியலோ செய்துகொண்டு இருந்தீர்களே.. நினைவிருக்கிறதா? அதனால், மாநில உரிமைகளைப் பற்றி மாண்புமிகு அம்மா அவர்கள் வழி வந்த என்னிடம் பேச உங்களுக்கு எந்த அருகதையும் இல்லை!

    கச்சதீவு முதல் காவிரி வரை தமிழ்நாட்டின் உரிமைகளை தாரைவார்த்த நீங்கள், மாநில உரிமை பற்றியெல்லாம் பேசினால், மக்கள் சிரிப்பார்கள்!

    இதற்கெல்லாம் பின்னர் வருவோம்...

    நான் கேட்ட கேள்வி என்ன?

    யார் அந்த தம்பி ?

    உங்களுக்கும் அவருக்கும் என்ன சம்மந்தம்?

    உங்களுக்கும் உங்கள் மகனுக்கும் மிகவும் வேண்டிய நபர் (தம்பி) என்று சொல்கிறார்களே, ED ரெய்டு என்றதும்

    ஏன் அந்த தம்பி , நாட்டை விட்டே தப்பிச் சென்றார்?

    டாஸ்மாக்கில் "தம்பி" அடித்த கொள்ளையில் உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் பங்கு இருக்கிறதோ? என்ற சந்தேகம் மக்களிடையே வலுவாக இருக்கிறது.

    உங்களுக்கு தெம்பு இருந்தால், திராணி இருந்தால், வக்கு இருந்தால், அதற்கு முதலில் பதிலை சொல்லிவிட்டு, மற்றதைப் பேசுங்கள்!

    உங்களின் எல்லா மடைமாற்று பேச்சுகளுக்கும் பதில் அளிக்க நான் தயார்!

    ஆனால், மக்களுக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்!

    மீண்டும் கேட்கிறேன்- யார் அந்ததம்பி?

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பொம்மை முதலமைச்சரின் நிர்வாக சீர்கேட்டிற்கு மற்றுமொரு உதாரணம் சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரி.
    • திமுக-வின் அவல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி.

    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    பெண்கள் மரியாதையுடனும், கௌரவத்துடனும், பாதுகாப்புடனும் வாழத் தகுதியற்ற மாநிலமாக தமிழ் நாடு மாறிவிட்டதற்கு மற்றும் ஒரு சம்பவம் சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் நடந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

    அப்பாவி பெண்களை 'சார்'-களுக்கு இரையாக்கும் ஒருசில திமுக நிர்வாகிகளின் லீலைகள் ஒருபுறம் தொடர்ந்தாலும், மறுபுறம் கல்வியைக் கற்பிக்கும் ஒருசில ஆசிரியர்கள் தங்கள் வரம்புகளை மீறி உளவியல் ரீதியாக பெண்களை, குறிப்பாக உடன் பணியாற்றும் ஆசிரியைகளையும், மாணவிகளையும் தகாத வார்த்தைகளில் பேசுவதும், வரம்பு மீறிய செயல்களில் ஈடுபடுவதும் இப்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

    'சென்னை பல் மருத்துவக் கல்லூரியில்' பணிபுரியும் ஒரு துறையின் தலைவர், உடன் பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் கல்வி கற்கும் மாணவிகளிடம் ஆபாச வார்த்தைகளைப் பேசுவது; உடல் உருவ அமைப்பை கேலி செய்வது; அவர்களை வீடியோ படங்கள் எடுப்பது; பேசுவதை ரெக்கார்டு செய்வது போன்ற தகாத செயல்களில் ஈடுபட்டு வருவதால், அக்கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியைகளும், மாணவிகளும் தினம் தினம் மன உளைச்சலைச் சந்தித்து அவதியுற்று வருகின்றனர்.

    ஒரு துறையின் தலைவர் இவ்வாறு நடந்துகொள்வதை கண்டித்தும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டியும், பாதிக்கப்பட்ட பெண்கள் கடந்த 2024-ஆம் ஆண்டு மார்ச் மாதமே கல்லூரி நிர்வாகத்திடம், தகாத செயல்களில் ஈடுபடும் பேராசிரியரைப் பற்றி புகார் அளித்தும், பல் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை; அவரது செயல்களைக் கண்டிக்கவும் இல்லை. இதன் காரணமாக, பாதிக்கப்பட்ட ஒரு பேராசிரியை இந்த ஆண்டு (2025) ஜனவரி மாதம் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக நாளிதழ்களில் செய்திகள் வந்துள்ளன.

    பெண்கள் பணிபுரியும் இடங்களில் `விசாகா கமிட்டி' அமைக்கப்பட வேண்டும் என்ற வழிகாட்டுதல் என்ன ஆனது? மாணவிகள் புகார் கொடுத்தும் ஒருவருட காலமாக

    ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு எந்த அரசியல் தலைவரின் தலையீடு, யாருடைய அழுத்தம்? போன்ற பல்வேறு கேள்விகள் எழுகின்றன.

    ஏற்கெனவே, அண்ணா பல்கலைக்கழக பாலியல் புகாரில் `விசாகா கமிட்டி' பற்றி அமைச்சர் ஒரு பதிலும், காவல் ஆணையாளர் ஒரு பதிலும் கூறி இருந்தது அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்த நிலையில், தற்போது, விடியா ஸ்டாலின் மாடல் அரசு இந்தப் பல் மருத்துவக் கல்லூரிக்கு `விசாகா கமிட்டி' குறித்து என்ன பதில் அளிக்கப் போகிறது? இந்நிகழ்வு, இந்த விடியா திமுக அரசின் கையாலாகாத்தனத்தை வெட்ட வெளிச்சமாகக் காட்டுகிறது.

    மாதா, பிதா, குரு, தெய்வம் என்று ஆசிரியரை தெய்வமாக வணங்கும் வழியில், 'மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்' எனும் பாரதியின் வரிகள் நமக்கு நினைவுக்கு வருகின்றன.

    ஆனால் இன்று, பெண்களை இழிவுபடுத்துவது மட்டுமல்லாமல், 'பல சார்களுக்கு இரையாக்கும் நிகழ்வுகளும்' அன்றாடம் நடந்த வண்ணம் இருந்தாலும், இதைப்பற்றி எந்தக் கவலையும் இன்றி தினம் தினம் மக்களை ஏமாற்றும் விளம்பர மாடல் முதலமைச்சரின் நிர்வாகச் சீர்கேட்டால் இன்று தமிழ் நாடு, பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாகத் திகழ்கிறது.

    பெண் பிள்ளைகளை பள்ளிக்கும், கல்லூரிக்கும் அனுப்புவதற்கே பெற்றோர்கள் அஞ்சி நடுங்கும் நிலை இந்த நீர்வாகச் சீர்கேடான ஆட்சியில் ஏற்பட்டுள்ளது கொடுமையிலும் கொடுமை. இதற்கொரு முடிவு கட்டும்வரை நாங்கள் ஓயமாட்டோம்.

    "வேலியே பயிரை மேய்வது போல்" இன்று கல்வியை கற்றுக்கொடுக்கும் கல்வி வளாகங்களிலேயே பாலியல் வன்கொடுமைகளும், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் நடைபெறுவதற்கு, எனது கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    நிர்வாகத் திறமையற்ற பொம்மை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இனியாவது பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துவதுடன், தமிழ் நாட்டில் எந்த இடத்தில் பெண்கள் பாதிக்கப்பட்டாலும்,

    மாநிலம் தழுவிய போராட்டத்தை முன்னெடுக்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தயங்காது என்று எச்சரிக்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • விமானங்கள் திடீர் ரத்துக்கான காரணம் குறித்து இதுவரையில் விமான நிறுவனங்கள் அறிவிக்கவில்லை.
    • விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

    சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி, கொச்சி, புனே, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்குச் செல்ல இருந்த 10 ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஏர் இந்தியா நிறுவனம் எந்த முன்னறிவிப்பும் இன்றி திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    விமானங்கள் திடீர் ரத்துக்கான காரணம் குறித்து இதுவரையில் விமான நிறுவனங்கள் அறிவிக்கவில்லை.

    ஆனால், நிர்வாக காரணங்களால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

    ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

    • பெருந்துறையில் 2013-இல் ஹேமலதா மற்றும் பாலாஜி கடத்தல் வழக்கில் யுவராஜ் மீது குற்றம் சாட்டப்பட்டது.
    • இந்த வழக்கு கடந்த 12 ஆண்டுகளாக ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

    ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் 2013-இல் ஹேமலதா மற்றும் பாலாஜி கடத்தல் வழக்கில், தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உட்பட மூன்று பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கு கடந்த 12 ஆண்டுகளாக ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

    இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையின் போது யுவராஜ் உள்ளிட்ட 3 பேருக்கும் எதிரான சாட்சிகள் அனைத்தும் பிறழ் சாட்சியாக மாறியதால் யுவராஜ் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து ஈரோடு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த விடுதலை குறித்து எக்ஸ் தளத்தில், யுவராஜின் ஆதரவாளர்கள் கொண்டாட்ட பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.

    இருப்பினும், இந்த வழக்கு கோகுல்ராஜ் கொலை வழக்குடன் தொடர்புடையதல்ல. இரண்டும் வெவ்வேறு சம்பவங்கள் ஆகும். இதனால் கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஏற்கனவே ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளதால், மீண்டும் கோவை மத்திய சிறைக்கு யுவராஜ் அழைத்துச் செல்லப்பட்டார். 

    • தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு வழக்கத்தைவிட கூடுதலாக இருக்கும்.

    மத்திய கிழக்கு அரபிக்கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மேலும் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

    இதற்கிடையே, தென்மேற்கு பருவமலை கேரளாவில் இன்னும் 3 முதல் 4 நாட்களில் துவங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதனால், தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு வழக்கத்தைவிட கூடுதலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

    • மலைக்கோட்டைக்கு உள்ளேயும், அதனைச் சுற்றியும் ஏராளமான ஆக்கிரமிப்புகள் அமைந்துள்ளன.
    • மலைக்கோட்டையில் உள்ள அய்யன் குளத்தை முறையாக சுத்தம் செய்து பராமரிக்க அதிகாரிகள் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை

    மதுரை:

    திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த செந்தில்வேலு என்பவர் மதுரை ஐகோர்ட்டு மதுரை அமர்வில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், திண்டுக்கல் மலைக்கோட்டை பகுதி தொல்லியல் துறையால் பராமரிக்கப்பட்டு வரும் பிரபலமான சுற்றுலா தளம். மலைக்கோட்டை பகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட நுழைவாயில்கள் உள்ள நிலையில், அனைத்து நுழைவாயில்களிலும் காவலர்கள் நியமிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் மலைக்கோட்டைக்கு உள்ளேயும், அதனைச் சுற்றியும் ஏராளமான ஆக்கிரமிப்புகள் அமைந்துள்ளன. இவை மலைக்கோட்டையின் தனித்தன்மையும், பழமையும் சிதைக்கும் வகையில் அமைந்துள்ளன. மலைக்கோட்டையில் உள்ள அய்யன் குளத்தை முறையாக சுத்தம் செய்து பராமரிக்க அதிகாரிகள் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அக்குளம் குப்பை கூழங்கள் நிறைந்து மோசமான நிலையில் காணப்படுகிறது.

    அதோடு திண்டுக்கல் மலைக்கோட்டை அருகே கிறித்தவ அலங்கார வளைவும் அமைக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இவை தொடர்பாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் மனு அளித்து எவ்வித பயனும் இல்லை. ஆகவே திண்டுக்கல் மலைக்கோட்டை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், அய்யன் குளத்தை சுத்தம் செய்து தூய்மையாக பராமரிக்கவும், அப்பகுதியில் வழிபட அனுமதிக்கவும் உத்தரவிட வேண்டும். அதோடு மலைக்கோட்டை அருகிலேயே கிறிஸ்தவ அலங்கார நுழைவு வாயில் அமைக்க தடை விதித்து உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஸ்ரீமதி, விஜயகுமார் அமர்வு, திண்டுக்கல், மலைக்கோட்டை அருகே கிறிஸ்தவ அலங்கார நுழைவு வாயில் அமைக்கும் விவகாரத்தில் தற்போதைய நிலையை தொடரவும், வழக்கு தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட கலெக்டர், மாநகராட்சி ஆணையர் பதிலளிக்கவும் உத்தரவிட்டு வழக்கை ஜூன் 18-ந்தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

    • தமிழ்நாடு, கேரளா மாநிலங்களில் வருகிற 25-ந்தேதியில் இருந்து தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளது.
    • விமான சேவைகளை பாதுகாப்பான முறையில் இயக்குவது குறித்தும் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

    ஆலந்தூர்:

    தமிழ்நாடு, கேரளா மாநிலங்களில் வருகிற 25-ந்தேதியில் இருந்து தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளது. இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ளவும், குறிப்பாக விமான சேவைகளை பாதுகாப்பான முறையில் இயக்குவது குறித்தும் ஆலோசனைக் கூட்டம் சென்னை விமான நிலைய இயக்குனர் சி.வி தீபக் தலைமையில் நடந்தது.

    கூட்டத்தில், வானிலை ஆய்வு மைய அதிகாரிகள், விமான நிலைய உயர் அதிகாரிகள், விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து பிரிவு அதிகாரிகளும் கலந்து கொண்டனர். பாதுகாப்பான விமான சேவை, பயணிகளின் சிரமங்களை குறைப்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் செய்யப்பட்டது.

    • 5 கால்நடை டாக்டர்கள் கொண்ட குழுவினர் யானைக்கு சிகிச்சை அளித்தனர்.
    • கடந்த 3 நாட்களாக கால்நடை டாக்டர்கள் யானைக்கு தொடர் சிகிச்சை அளித்து வந்தனர்.

    வடவள்ளி:

    கோவை மருதமலை அருகே கடந்த 17-ந்தேதி நோய்வாய்ப்பட்டு தனது குட்டியுடன் ஒரு பெண் யானை மயங்கிய நிலையில் இருந்தது.

    தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து யானையை கண்காணித்தனர்.

    துரியன் மற்றும் சுயம்பு ஆகிய 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு, கும்கிகள் உதவியுடன் யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 5 கால்நடை டாக்டர்கள் கொண்ட குழுவினர் யானைக்கு சிகிச்சை அளித்தனர்.

    கடந்த 3 நாட்களாக கால்நடை டாக்டர்கள் அந்த யானைக்கு தொடர் சிகிச்சை அளித்து வந்தனர்.

    இந்நிலையில் நேற்று ஹைட்ரோ தெரபி சிகிச்சை வழங்குவதாக கூறி யானையை குழிக்குள் இறக்கி நீரை ஊற்றி சிகிச்சை அளித்தனர்.

    அப்போது சிறிது நேரத்திலேயே அந்த யானை உயிரிழந்தது.

    இன்று காலை இறந்த பெண் யானைக்கு பிரேத பரிசோதனை நடைபெற்றது.

    மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், கோவை வனச்சரக அலுவலர் திருமுருகன், வனவர் அய்யப்பன், வனக்காப்பாளர் சரவணக்குமார், ஆனைமலை புலிகள் காப்பாக கால்நடை டாக்டர் சுகுமார், கால்நடை மருத்துவர்கள் விஜயராகவன், முகில் அரசு ஆகியோர் முன்னிலையில் யானை உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

    அப்போது வயிற்றில் 15 மாத குட்டி யானை இருந்தது தெரியவந்தது.

    அந்த குட்டி யானையை வனத்துறையினர் வெளியில் எடுத்தனர். அந்த குட்டி யானையும் இறந்த நிலையிலேயே இருந்ததும் தெரியவந்தது.

    கடந்த 3 நாட்களாக சிகிச்சை அளித்து வந்த வனத்துறையினர் பெண் யானை கருவுற்று இருந்ததை கண்டறியாமல் இருந்தது வன ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

    • இன்றைக்குக் கூட, தமிழ்நாட்டின் உரிமைக்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளேன்.
    • கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்பேன்! தமிழ்நாட்டிற்கான நிதியைப் போராடிப் பெறுவேன்!

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேற்று ஒரு பதிவு வெளியிட்டு இருந்தார். அதில், மத்திய அரசு தமிழ்நாட்டை புறக்கணிப்பதால் நிதி ஆயோக் கூட்டத்தை நான் புறக்கணிக்கிறேன் என்று வீராவேசமாக பேசிய பொம்மை வேந்தர் மு.க. ஸ்டாலின், தற்போது நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லிக்கு பறக்கிறாராம்! தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு தேவை என்றால் போகாதவர், தன் குடும்பத்திற்கு ஒரு தேவை என்றதும் செல்கிறார்! என்று விமர்சித்து இருந்தார்.

    இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு பதில் அளிக்கும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தமிழ்நாட்டிற்கான நியாயமான நிதி உரிமையை நிதி ஆயோக் கூட்டத்தில் வெளிப்படுத்த 24-ஆம் தேதி டெல்லி செல்கிறேன்!

    சசிகலா முதல் அமித் ஷா வரை ஆள் மாறினாலும், டேபிளுக்கு அடியில் காலைப் பிடிக்கும் பழக்கம் மாறாத எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு இதனைக் கண்டு ஏன் வலிக்கிறது?

    "பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது" என்று அடித்துச் சொன்ன நாக்கின் ஈரம் காய்வதற்குள், ஒரே ரெய்டில் 'புலிகேசி'யாக மாறி 'வெள்ளைக்கொடி ஏந்தச் சென்ற' பழனிசாமி என்னைப் பார்த்து வெள்ளைக் கொடி ஏந்தியதாகப் பேச நா கூசவில்லையா?

    இந்த ஸ்டாலினின் கை கருப்பு சிவப்புக் கழகக் கொடியை ஏந்தும் கை! பேரறிஞரால் தூக்கிவிடப்பட்ட கை! கலைஞரின் கரம் பற்றி நடந்த கை! எந்நாளும் உரிமைக்கொடியைத்தான் ஏந்துவேன்! ஊர்ந்து போகமாட்டேன்!

    இன்றைக்குக் கூட, தமிழ்நாட்டின் உரிமைக்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளேன்.

    கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்பேன்! தமிழ்நாட்டிற்கான நிதியைப் போராடிப் பெறுவேன்! என்று கூறியுள்ளார். 

    • பூங்காவில் உள்ள மாடங்களில் 35 ஆயிரம் தொட்டிகளில் பல்வேறு வகையான வண்ண மலர் தொட்டிகளும் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.
    • தினமும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்தபடியே உள்ளது.

    ஊட்டி:

    ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் வைக்கப்பட்டுள்ள ஆர்கிட் மலர்கள், லில்லியம் மலர்கள் வாடாமல் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.

    ஆண்டுதோறும் கோடைகாலமான மே மாதம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான 127-வது மலர் கண்காட்சி கடந்த 15-ந்தேதி தொடங்கியது.

    இந்த மலர் கண்காட்சியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    இந்த மலர் கண்காட்சியில் 2 லட்சம் மலர்களால் பொன்னியின் செல்வன் அரண்மனை, நுழைவுவாயில், கரிகாலன் கல்லணை, ராஜ சிம்மாசனம், ஊஞ்சல், சிப்பாய்கள், யானை, அன்னபறவை ரதம் உள்ளிட்ட பல்வேறு மலர் அலங்காரங்கள் இடம் பெற்றுள்ளது.

    மேலும் பூங்காவில் உள்ள மாடங்களில் 35 ஆயிரம் தொட்டிகளில் பல்வேறு வகையான வண்ண மலர் தொட்டிகளும் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

    இதில் 200 லில்லியம் மலர்கள், 100-க்கும் மேற்பட்ட தொட்டிகளில் ஆர்க்கிட் மலர்கள் ஆகியவைகள் வைக்கப்பட்டுள்ளன.

    மலர் கண்காட்சி தொடங்கியதில் இருந்து கண்காட்சியை காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். தினமும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்தபடியே உள்ளது.

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் நடந்து வரும் ஊட்டி மலர் கண்காட்சியை கடந்த 6 நாட்களில் மட்டும் 1 லட்சத்து 13 ஆயிரம் பேர் கண்டு ரசித்துள்ளதாக தோட்டக்கலைத்துறை தெரிவித்துள்ளது.

    • மேடை மற்றும் ஒலிபெருக்கி வசதி செய்யப்படவில்லை.
    • சுமார் ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 21 வயது கல்லூரி மாணவி. இவர் அரக்கோணம் அனைத்து மகளிர் போலீசில் புகார் ஒன்றை அளித்தார்.

    அதில் அரக்கோணம் அடுத்த காவனூர் பகுதியைச் சேர்ந்த முன்னாள் தி.மு.க. ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தெய்வசெயல் என்பவர் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார். பின்னர் தன்னை முக்கிய பிரமுகர்களுக்கு இறையாக்க முயற்சி மேற்கொண்டார். அதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்ததால் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டேன் என புகார் மனுவில் கூறி இருந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கல்லூரி மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதியை கண்டித்து அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் இன்று காலை அரக்கோணம் பழைய பஸ் நிலையத்தில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்ட செயலாளர் சு.ரவி எம்எல்ஏ தலைமை தாங்கினார்.

    அ.தி.மு.க. மகளிர் அணி செயலாளர் வளர்மதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். தமிழகத்தில் தி.மு.க. வினர் தொடர்ந்து அராஜக போக்கில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அரக்கோணத்தில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்காத அரக்கோணம் டி.எஸ்.பி.யை இடமாற்றம் செய்ய வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை. மேடை மற்றும் ஒலிபெருக்கி வசதி செய்யப்படவில்லை. சுமார் ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். 

    ×