என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகமாக இருந்தாலும் அந்த அளவிற்கு வீரியம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
திருச்சி மாவட்டம் ராஜீவ் காந்தி நகரில் ரூ.18.4 கோடியில் கட்டப்பட்ட உயர்நிலைப்பள்ளி கட்டட திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகமாக இருந்தாலும் அந்த அளவிற்கு வீரியம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
* இருந்தாலும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
* தேவைப்பட்டால் பள்ளிகளில் முகக்கவசம் அணிவதற்கு உத்தரவிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் தினகரன் மன உளைச்சலில் இருந்துள்ளார்.
- சித்தேரி பகுதியில் ரெயில் முன் பாய்ந்து தினகரன் தற்கொலை செய்து கொண்டார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த கல்லூரி பேராசிரியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அரக்கோணம் அருகே கல்லூரி பேராசிரியர் தினகரன் (42) ஆன்லைன் ரம்மியில் ரூ.25 லட்சத்தை இழந்துள்ளார். ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் தினகரன் மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் சித்தேரி பகுதியில் ரெயில் முன் பாய்ந்து தினகரன் தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தினகரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
- செங்கோட்டை-சென்னை எழும்பூர் இடையே பொதிகை எக்ஸ்பிரசும் இருமார்க்கத்திலும் தினசரி இயக்கப்படுகின்றன.
- 2-ம் வகுப்பு பெட்டிகளை குறைக்கக் கூடாது என்றும், தேவைப்பட்டால் கூடுதல் ரெயில்களை இயக்க வேண்டும் என்றும் பயணிகள் வலியுறுத்தினர்.
நெல்லை:
தென்னக ரெயில்வேயின் மதுரை கோட்டத்தில் முக்கிய ரெயில் நிலையங்களில் ஒன்றாக நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் உள்ளது. மதுரை கோட்டத்தில் மதுரைக்கு அடுத்தப்படியாக நெல்லை ரெயில் நிலையம் கோடிக்கணக்கில் வருவாயை கொட்டிக்கொடுக்கிறது.
தென் மாவட்டங்களான நெல்லை, தென்காசி ஆகிய பகுதிகளை தலைநகரான சென்னையுடன் இணைப்பதில் நெல்லை எக்ஸ்பிரஸ் மற்றும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. நெல்லை சந்திப்பு-சென்னை எழும்பூர் இடையே நெல்லை எக்ஸ்பிரசும், செங்கோட்டை-சென்னை எழும்பூர் இடையே பொதிகை எக்ஸ்பிரசும் இருமார்க்கத்திலும் தினசரி இயக்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் தலா 22 பெட்டிகளை கொண்ட ரெயில்களாகும்.
இந்த ரெயில்கள் 8 ஸ்லீப்பர் பெட்டிகள், 3-ம் வகுப்பு ஏ.சி. பெட்டிகள்-5, 2-ம் வகுப்பு ஏ.சி. பெட்டிகள்-2 மற்றும் முதலாம் வகுப்பு ஏ.சி. பெட்டி-1 உள்பட 22 பெட்டிகள் கொண்டதாக இயக்கப்பட்டு வருகிறது. எப்போதும் இந்த ரெயில்களில் இருக்கைகள் நிரம்பியே இருக்கும்.
இந்நிலையில் வருகிற ஆகஸ்ட் மாதம் முதல் நெல்லை எக்ஸ்பிரஸ் மற்றும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில்களில் தூங்கும் வசதி கொண்ட 2-ம் வகுப்பு பெட்டிகள் தலா 1 குறைக்கப்பட்டு, அதற்குப் பதிலாக மூன்றடுக்கு ஏ.சி. பெட்டி-1 இணைக்கப்படும் என்று தென்னக ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இந்த அறிவிப்பு வெளியானதுமே பயணிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதனிடையே 2-ம் வகுப்பு பெட்டிகளை ஒருபோதும் குறைக்கக் கூடாது என்றும், தேவைப்பட்டால் கூடுதல் ரெயில்களை இயக்க வேண்டும் என்றும் பயணிகள் வலியுறுத்தினர்.
இந்த நிலையில், பயணிகளின் கோரிக்கைகளை ஏற்று தென்னக ரெயில்வேயின் மதுரை போக்குவரத்துப் பிரிவு சார்பில் ஒரு புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், நெல்லை எக்ஸ்பிரஸ் மற்றும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஆகஸ்ட் மாதம் ஏ.சி. மற்றும் 2-ம் வகுப்பு பெட்டிகள் மாற்றம் செய்வதற்கான அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது.
தற்போது உள்ளது போல் 2-ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் இந்த ரெயில்கள் இயக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேநேரம் சென்னை-கோவை இடையே இயக்கப்படும் சேரன் எக்ஸ்பிரஸ், சென்னை-மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் நீலகிரி எக்ஸ்பிரசின் பெட்டிகளில் அறிவிக்கப்பட்ட மாற்றம் அந்த அறிவிப்பின்படியே நடைமுறைக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- 2 நாள் மழை ஓய்ந்திருந்த நிலையில் நேற்று முதல் மீண்டும் நீலகிரியில் மழை பெய்ய தொடங்கியது.
- ஒரு மணி நேரத்திற்கு பின்பு போக்குவரத்து தொடங்கியது.
ஊட்டி:
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் முன்னரே வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் ஏற்பட்ட புயல் சின்னம் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் அதிகனமழை பெய்தது. மழையால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததுடன், மண் சரிவுகளும் ஏற்பட்டது.
மழையின் தாக்கம் அதிகரித்ததால், சுற்றுலா தலங்களும் மூடப்பட்டிருந்தது. இதனால் கோடைசீசன் பாதிக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் வருகையும் குறைந்து விட்டது.
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நீலகிரியை மழை மிரட்டி வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மாவட்டத்தில் மழை சற்று குறைந்து இருந்தது. மிதமான வெயில் அடிக்க தொடங்கியதால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.
இந்த நிலையில் 2 நாள் மழை ஓய்ந்திருந்த நிலையில் நேற்று முதல் மீண்டும் நீலகிரியில் மழை பெய்ய தொடங்கியது.
ஊடடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான குந்தா, காந்தல் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் காற்றுடன் கூடிய லேசான சாரல் மழை பெய்தது.
சூறாவளி காற்றுக்கு ஊட்டி-மஞ்சூர் சாலையில் லவ்டேல் பகுதியில் சாலையோரத்தில் இருந்த ராட்சத மரம் ஒன்று சாலையின் குறுக்கே விழுந்தது.
இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் அப்பகுதிக்கு சென்று மரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். ஒரு மணி நேரத்திற்கு பின்பு அங்கு போக்குவரத்து தொடங்கியது.
தொடர்ந்து சாரல் மழை பெய்து வரும் நிலையில் ஒரு சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கும் அபாயம் உள்ளது. குறிப்பாக ஊட்டி-மஞ்சூர் சாலையில் லவ்டேல் முதல் காந்திப்பேட்டை வரை மரங்கள் விழும் அபாயம் இருக்கிறது.
சாரல் மழையால் காலநிலை மாறி குளிர் அதிகரித்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் சுவர்ட்டர் உள்ளிட்ட ஆடைகளை அணிந்து கொண்டனர். சாரல் மழையால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் மலை காய்கறி தோட்டங்களுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழையால் காட்டேரி அணைக்கு நீர் வரத்து அதிகரித்து அணை நிரம்பியது.இதனை தொடர்ந்து அணை திறக்கப்பட்டு உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இந்த நீர் காட்டேரி அருவியில் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனை ஊட்டிக்கு சுற்றுலா வரக்கூடிய பயணிகள் காரில் இருந்தபடியே பார்த்து ரசித்து செல்கின்றனர்.
- அண்ணாமலை இன்று தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
- தாங்கள் துடிப்புடன் மக்கள் பணியாற்றிட எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
சென்னை:
முன்னாள் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை இன்று தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையடுத்து அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழிசை சவுந்தரராஜன், அண்ணாமலைக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழிசை சவுந்தரராஜன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தமிழக பா.ஜ.க. முன்னாள் மாநிலத்தலைவர் அன்புத்தம்பி அண்ணாமலைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். தாங்கள் துடிப்புடன் மக்கள் பணியாற்றிட எனது மனமார்ந்த வாழ்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.
- தைலாபுரம் தோட்டத்தில் கட்சியின் மூத்த உறுப்பினர்கள், நிர்வாகிகளை தொடர்ந்து சந்தித்து ராமதாஸ் கருத்துக்களை கேட்டு வருகிறார்.
- அன்புமணிக்கு ஆதரவு அதிகமாக உள்ள மண்டலங்களை குறி வைத்து அங்குள்ள நிர்வாகிகள் மாற்றப்பட்டு வருகின்றனர்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் நீடித்து வருகிறது. இந்த மோதல் முடிவுக்கு வராத நிலையில் வன்னியர் சங்க நிர்வாகிகள் நீக்கம், புதிய மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் நியமனம் தொடர்பான அறிவிப்புகள் நீடித்து வருகிறது.
அடுத்ததாக கூட்டுகின்ற பொதுக்குழுவின் போது தான் வெற்றி பெறுவதுடன் தனது பக்கம் தனிப்பெரும்பான்மை உருவாக்கும் வகையில் இந்த நடவடிக்கையில் ராமதாஸ் தீவிரம் காட்டி வருகிறார்.
அதிலும் குறிப்பாக அன்புமணிக்கு ஆதரவு அதிகமாக உள்ள மண்டலங்களை குறி வைத்து அங்குள்ள நிர்வாகிகள் மாற்றப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கட்சியின் முன்னணி நிர்வாகிகளுடன் நேற்றும் டாக்டர் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து புதிய மாவட்ட செயலாளர்கள் பட்டியல் நேற்றும் வெளியானது.
அதன்படி இதுவரை காலியாக இருந்த மாவட்டங்களில் புதிய மாவட்ட செயலாளர்களாக எஸ்.டி.கே. சேகர் (திருவள்ளூர் வடக்கு) பகவான் பழனி (திருவள்ளூர் கிழக்கு) ரஜினி (திருவள்ளூர் தெற்கு) பழனிசாமி (தென்சென்னை தெற்கு) மயிலை ஆறுமுகம் ( தென்சென்னை கிழக்கு) வி.எஸ். வெங்கடேஷ் (வேலூர் கிழக்கு), முருகன் (மதுரை புறநகர் தெற்கு) பாண்டி காமாட்சி என்ற பாரதி பாண்டியன் (மதுரை புறநகர்) சந்தானதாஸ் (ராமநாதபுரம் கிழக்கு) சிங்கராயன் (தென்காசி தெற்கு) திருமலைசாமி (தென்காசி வடக்கு) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 16-ந்தேதி முதல் டாக்டர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் கட்சியின் மூத்த உறுப்பினர்கள், நிர்வாகிகளை தொடர்ந்து சந்தித்து கருத்துக்களை கேட்டு வருகிறார்.
அதன்படி இன்றும் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை டாக்டர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவரிடம் அன்புமணி ராமதாஸ் கட்சியில் இருந்து நீக்கப்படுவாரா? பொதுக்குழு எப்போது கூட்டப்படும்? என கேட்டபோது வருகிற வியாழக்கிழ மை (நாளை) பதில் அளிப்பதாக கூறினார்.
அதன் படி ராமதாஸ் நாளை முக்கிய முடிவை அறிவிப்பார் என பா.ம.க. தொண்டர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
- பொதுத்துறை, உள்ளாட்சித் துறைத் தணிக்கையை செய்வதற்கு சி.ஏ நிறுவனங்களை விண்ணப்பிக்குமாறு கோரியுள்ளது.
- இந்த நிறுவனங்களைத் தணிக்கை செய்வதில் சி.ஏ.ஜி துறை அதிகாரிகளின் தனித்திறன் நிபுணத்துவமுடையது.
பொதுத்துறை மற்றும் உள்ளாட்சி துறைகளை தணிக்கை செய்ய தனியார் சிஏ நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாமென சிஏஜி அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்முக்கு மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் எழுதி உள்ளார். அதில்,
அண்மையில் சி.ஏ.ஜி வெளியிட்டுள்ள ஒரு டெண்டர் அதிர்ச்சியளிக்கிறது. அது பொதுத்துறை, உள்ளாட்சித் துறைத் தணிக்கையை செய்வதற்கு சி.ஏ நிறுவனங்களை விண்ணப்பிக்குமாறு கோரியுள்ளது. கணக்குத் தணிக்கை ஊழியர்களுடன் சேர்ந்து இந்த சி.ஏ நிறுவனங்கள் தணிக்கை செய்வார்களாம்.
இந்தியாவின் உயர்ந்த தணிக்கை அதிகாரியான சி.ஏ.ஜி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்டவர். நாடாளுமன்றத்துக்கு மட்டுமே கட்டுப்பட்டவர். அவரது பணி அரசுடைமையான பொதுத்துறை, தன்னாட்சி பெற்ற நிறுவனங்கள், உள்ளாட்சி நிறுவனங்களை தணிக்கை செய்வது ஆகும். சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட் (சி.ஏ) செய்யும் தணிக்கையும், சி.ஏ.ஜியின் தணிக்கையும் ஒன்றல்ல. இந்த நிறுவனங்களைத் தணிக்கை செய்வதில் சி.ஏ.ஜி துறை அதிகாரிகளின் தனித்திறன் நிபுணத்துவமுடையது.
அதேபோல் உள்ளாட்சி தணிக்கையும் சிஏஜியின் தணிக்கை வரம்புக்கு உட்பட்டதேயாகும். சுருக்கமாக சிஏஜி என்பவரும், அவரது கணக்குத் தணிக்கைத் துறையும், இந்திய மக்களின் நிதியின் பாதுகாவலர்கள் என்றால் மிகையாகாது.
இந்த நிலையில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் புரளும் இந்தத் தணிக்கையைத் தனியார் சி.ஏ நிறுவனங்கள் மேற்கொள்ள அழைப்பது என்பது சிஏஜியிடம் அரசியலமைப்புச் சட்டம் கொடுத்துள்ள கடமையை மீறுவதாகும். மேலும் இந்த நிறுவனங்களிடம் இருக்கும் ரகசியமான விவரங்களும் தனியார் கைகளுக்குப் போய்ச் சேரும் ஆபத்தும் உண்டு.
சி.ஏ.ஜி எந்த அரசியல் தலையீடும் இல்லாமல் பணிபுரிய வேண்டும் என்பதால்தான் அண்ணல் அம்பேத்கார் இயற்றிய அரசியலமைப்புச் சட்டம் அவரைத் தனி உரிமையுடன் வைத்தது. அந்த அரசியலமைப்புச் சட்ட விதிகளுக்கு மாறாக சிஏஜியே தனியாரை துணைக்கு அழைப்பது ஆபத்தானது.
எனவே சி.ஏ.ஜி உடனடியாக இந்த நடவடிக்கையைக் கைவிட வேண்டும். இந்தத் துறையின் தனித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும். அப்போதுதான் மக்களது நிதியைக் காப்பாற்ற முடியும். எனவே தனியார் சி.ஏ. நிறுவனங்களை அழைத்து வெளியிட்டிருக்கும் அறிவிக்கையை சி.ஏ.ஜி உடனடியாகத் திரும்பப் பெற அறிவுறுத்த வேண்டும்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
- பரிசை பெற்றுக்கொண்ட மாணவர்களும் விஜய்க்கு நன்றி தெரிவித்து பேசினர்.
சென்னை:
தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்தாண்டும் கடந்த 30-ந்தேதி முதற்கட்டமாக 18 மாவட்டங்களைச் சேர்ந்த 88 தொகுதி மாணவர்களுக்கு பரிசுகளை த.வெ.க. தலைவர் விஜய் வழங்கினார்.
இதனை தொடர்ந்து, இன்று 2-ம் கட்டமாக கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் தொடங்கிய நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் பங்கேற்றுள்ளார்.
இன்று 84 தொகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழும், ஊக்கத்தொகையையும் த.வெ.க. தலைவர் விஜய் வழங்க உள்ளார். முன்னதாக, நிகழ்ச்சி நடைபெறும் மண்டபத்திற்கு வருகை தந்த விஜய்க்கு நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதையடுத்து, மாணவர்களுக்கு பொன்னாடை போர்த்தி சான்றிதழ் மற்றும் பரிசை விஜய் வழங்கி வருகிறார். மேலும் மாணவர்களின் குடும்பத்தாருடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். பரிசை பெற்றுக்கொண்ட மாணவர்களும் விஜய்க்கு நன்றி தெரிவித்து பேசினர்.
- மூதாட்டி சேத்துப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
- உயிரிழந்த மூதாட்டிக்கு கேன்சருடன், நீரழிவு பாதிப்பும் இருந்ததாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர்.
சென்னையில் கொரோனா பாதிப்பால் மூதாட்டி உயிரிழந்துள்ளார்.
சென்னையில் சவுகார்பேட்டை பகுதியை சேர்ந்த மூதாட்டிக்கு சுவாசப்பிரச்சனை இருந்ததால் அவரை சோதனை செய்தபோது, கொரோனா பாதிப்பு உறுதியானது. அவர் சேத்துப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உயிரிழந்த மூதாட்டிக்கு கேன்சருடன், நீரழிவு பாதிப்பும் இருந்ததாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர்.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,000-ஐ கடந்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் புதிதாக 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
- நேற்று சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,640-க்கும் விற்பனையானது.
- இரண்டாவது நாளாக வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.
சென்னை:
தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. பெரும்பாலும் தங்கம் விலை உயர்ந்து காணப்படுகிறது. வார தொடக்க நாளான திங்கட்கிழமை சவரனுக்கு ரூ.1,120-ம், நேற்று சவரனுக்கு ரூ.160-ம் உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,640-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், மூன்றாவது நாளாக இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,090-க்கும் சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,720-க்கும் விற்பனையாகிறது.
இரண்டாவது நாளாக வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 114 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 14 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
03-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,640
02-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,480
01-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,360
31-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,360
30-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,360
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
03-06-2025- ஒரு கிராம் ரூ.113
02-06-2025- ஒரு கிராம் ரூ.111
01-06-2025- ஒரு கிராம் ரூ.111
31-05-2025- ஒரு கிராம் ரூ.111
30-05-2025- ஒரு கிராம் ரூ.111
- கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.
- தற்போது மேட்டூர் அணையில் 82.74 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
சேலம்:
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை இந்தாண்டு மே மாத இறுதியிலேயே தொடங்கியது. இதன் காரணமாக கடலோர மற்றும் மலை மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் அங்குள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹாரங்கி உள்ளிட்ட அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. மேலும் பல்வேறு ஆறுகள், நதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. அந்த தண்ணீர் கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டு இருந்தது. அணைக்கு நேற்று வினாடிக்கு 5 ஆயிரத்து 908 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று காலை 6 ஆயிரத்து 234 கனஅடியாக அதிகரித்து உள்ளது.
இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 113 அடியை எட்டியுள்ளது. வழக்கமாக ஆகஸ்ட் மாதத்தில் தான் அணையின் நீர்மட்டம் இந்த அளவுக்கு இருக்கும். ஆனால் இந்த ஆண்டில் ஜூன் மாத முதல் வாரத்திலேயே 113 அடிக்கு தண்ணீர் தேங்கி நிற்பது குறிப்பிடத்தக்கது. மேலும் குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து தொடர்ந்து 1000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. தற்போது மேட்டூர் அணையில் 82.74 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- தமிழக அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் படகுகள் இயக்கப்பட்டு வருகிறது.
- சிறப்பு கட்டணத்தில் எந்த மாற்றமும் இன்றி அதே ரூ.300 ஆக நீடிக்கிறது.
கன்னியாகுமரி:
சர்வதேச சுற்றுலா தலமாக கன்னியாகுமரி விளங்கி வருகிறது. இங்கு கடலின் நடுவே அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும், அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டுள்ளது. இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து ரசித்து வருகின்றனர்.
இதற்காக தமிழக அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த படகு போக்குவரத்து தினமும் காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை இடைவேளையின்றி தொடர்ச்சியாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் விவேகானந்தர் மண்டபத்துக்கு இயக்கப்படும் படகு கட்டணம் நாளை முதல் உயர்த்தப்படுகிறது. அதன்படி சாதாரண கட்டணம் ரூ.75-ல் இருந்து ரூ.100 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், மாணவர்களுக்கு சலுகை கட்டணம் ரூ.30-ல் இருந்து ரூ.40ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. சிறப்பு கட்டணத்தில் எந்த மாற்றமும் இன்றி அதே ரூ.300 ஆக நீடிக்கிறது.
இந்த தகவலை பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.






