என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    நெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏ.சி. பெட்டி அதிகரிப்பு அறிவிப்பு வாபஸ்
    X

    நெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏ.சி. பெட்டி அதிகரிப்பு அறிவிப்பு வாபஸ்

    • செங்கோட்டை-சென்னை எழும்பூர் இடையே பொதிகை எக்ஸ்பிரசும் இருமார்க்கத்திலும் தினசரி இயக்கப்படுகின்றன.
    • 2-ம் வகுப்பு பெட்டிகளை குறைக்கக் கூடாது என்றும், தேவைப்பட்டால் கூடுதல் ரெயில்களை இயக்க வேண்டும் என்றும் பயணிகள் வலியுறுத்தினர்.

    நெல்லை:

    தென்னக ரெயில்வேயின் மதுரை கோட்டத்தில் முக்கிய ரெயில் நிலையங்களில் ஒன்றாக நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் உள்ளது. மதுரை கோட்டத்தில் மதுரைக்கு அடுத்தப்படியாக நெல்லை ரெயில் நிலையம் கோடிக்கணக்கில் வருவாயை கொட்டிக்கொடுக்கிறது.

    தென் மாவட்டங்களான நெல்லை, தென்காசி ஆகிய பகுதிகளை தலைநகரான சென்னையுடன் இணைப்பதில் நெல்லை எக்ஸ்பிரஸ் மற்றும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. நெல்லை சந்திப்பு-சென்னை எழும்பூர் இடையே நெல்லை எக்ஸ்பிரசும், செங்கோட்டை-சென்னை எழும்பூர் இடையே பொதிகை எக்ஸ்பிரசும் இருமார்க்கத்திலும் தினசரி இயக்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் தலா 22 பெட்டிகளை கொண்ட ரெயில்களாகும்.

    இந்த ரெயில்கள் 8 ஸ்லீப்பர் பெட்டிகள், 3-ம் வகுப்பு ஏ.சி. பெட்டிகள்-5, 2-ம் வகுப்பு ஏ.சி. பெட்டிகள்-2 மற்றும் முதலாம் வகுப்பு ஏ.சி. பெட்டி-1 உள்பட 22 பெட்டிகள் கொண்டதாக இயக்கப்பட்டு வருகிறது. எப்போதும் இந்த ரெயில்களில் இருக்கைகள் நிரம்பியே இருக்கும்.

    இந்நிலையில் வருகிற ஆகஸ்ட் மாதம் முதல் நெல்லை எக்ஸ்பிரஸ் மற்றும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில்களில் தூங்கும் வசதி கொண்ட 2-ம் வகுப்பு பெட்டிகள் தலா 1 குறைக்கப்பட்டு, அதற்குப் பதிலாக மூன்றடுக்கு ஏ.சி. பெட்டி-1 இணைக்கப்படும் என்று தென்னக ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

    இந்த அறிவிப்பு வெளியானதுமே பயணிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

    இதனிடையே 2-ம் வகுப்பு பெட்டிகளை ஒருபோதும் குறைக்கக் கூடாது என்றும், தேவைப்பட்டால் கூடுதல் ரெயில்களை இயக்க வேண்டும் என்றும் பயணிகள் வலியுறுத்தினர்.

    இந்த நிலையில், பயணிகளின் கோரிக்கைகளை ஏற்று தென்னக ரெயில்வேயின் மதுரை போக்குவரத்துப் பிரிவு சார்பில் ஒரு புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், நெல்லை எக்ஸ்பிரஸ் மற்றும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஆகஸ்ட் மாதம் ஏ.சி. மற்றும் 2-ம் வகுப்பு பெட்டிகள் மாற்றம் செய்வதற்கான அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது.

    தற்போது உள்ளது போல் 2-ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் இந்த ரெயில்கள் இயக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த அறிவிப்பால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேநேரம் சென்னை-கோவை இடையே இயக்கப்படும் சேரன் எக்ஸ்பிரஸ், சென்னை-மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் நீலகிரி எக்ஸ்பிரசின் பெட்டிகளில் அறிவிக்கப்பட்ட மாற்றம் அந்த அறிவிப்பின்படியே நடைமுறைக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×