என் மலர்
உள்ளூர் செய்திகள்
- கடலூரில் பள்ளி வேன் மீது ரெயில் மோதி விபத்து ஏற்பட்டது.
- வேனில் இருந்து 5 பேரில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர்.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே கேட்டை கடக்க முயன்ற தனியார் பள்ளி வேன் மீது ரெயில் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதில் அக்கா, தம்பியான சாருமதி மற்றும் செழியன் ஆகியோர் உயிரிழந்தனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பேர் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கவனக்குறைவாக இருந்து கேட்கீப்பர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் விபத்தில் உயிரிழந்த அக்கா-தம்பி சாருமதி மற்றும் செழியன் உடல்களுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அஞ்சலி செலுத்தினார். பிள்ளைகளை இழந்து வாடும் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்து, முதலமைச்சர் அறிவித்த ரூ.5 லட்சம் உதவித் தொகையை வழங்கினார்.
- பக்தர்கள் தேரை இழுத்தபோது சக்கரத்தின் அச்சு முறிந்து தேர் சாய்ந்தது.
- அருகில் இருந்த தேர் மீது சாய்ந்து நின்றதால் பெரும் விபத்து தவிர்ப்பு.
பெரம்பலூர் மாவட்டம் தேனூரில் உள்ள கருப்பசாமி கோவில் தேரோட்டம் இன்று நடைபெற்றது. தேரோட்டத்தை பார்க்க ஆயிரகணக்கான மக்கள் திரண்டிருந்தனர். போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். அவர் தேரோட்டத்தை தொடங்கி வைத்ததும், பக்தர்கள் தேரை இழுக்க முயன்றனர். அப்போது ஒரு சக்கரத்தின் அச்சு முறிந்து தேர் சாய்ந்தது.
இதனால் தேர் அருகில் பாதுகாப்பிற்கு நின்ற போலீசார் மற்றும் பக்தர்கள் பீதி அடைந்தனர். சாய்ந்த தேர் அருகில் உள்ள தேர் மீது மோதி அப்படியோ நின்றதால் தரையில் விழவில்லை. தரையில் விழுந்திருந்தால் மிகப்பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும்.
அருகில் உள்ள தேரில் சாய்ந்து நின்றதும் தேர் அருகில் இருந்து போலீசார் மற்றும் பக்தர்கள் அவசர அவசரமாக அப்புறப்படுத்தப்பட்டனர்.
- பழங்கரை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் 10-ந் தேதி நடக்கிறது.
- மகாலட்சுமி நகர், முல்லை நகர், தன்வர்ஷினி அவென்யூ ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
அவினாசி:
தமிழ்நாடு மின்சார வாரியம் அவினாசி மின்பகிர்மான அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பழங்கரை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் 10-ந் தேதி நடக்கிறது. எனவே அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பழங்கரை, அவினாசி லிங்கம் பாளையம், அணைப்புதூர், தங்கம் கார்டன், விஸ்வ பாரதி பார்க், தேவம் பாளையம், டீ பப்ளிக் பள்ளி, ஸ்ரீ ராம் நகர், நல்லி கவுண்டம் பாளையம், கைகாட்டி புதூர் ஒரு பகுதி,
ரங்கா நகர் ஒரு பகுதி, ராஜன் நகர், ஆர்.டி.ஓ. அலுவலகம், கமிட்டியார் காலனி, குளத்துப் பாளையம், வெங்கடாசலபதி நகர், துரைசாமி நகர், பெரியாயிபாளையம் ஒரு பகுதி, பள்ளிபாளையம், வி.ஜி.வி. நகர், திருநீலகண்டர் வீதி, நெசவாளர் காலனி, எம்.ஜி.ஆர். நகர், மகாலட்சுமி நகர், முல்லை நகர், தன்வர்ஷினி அவென்யூ ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
- வல்லக்கோட்டை முருகன் கோவில் குடமுழுக்கு விழா நேற்று நடைபெற்றது.
- இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செல்வப்பொருந்தகையை சமூக ரீதியான உணர்வுடன் பாகுபாட்டுடன் நடத்தியுள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர், வல்லக்கோட்டை முருகன் கோவில் குடமுழுக்கு விழா நேற்று நடைபெற்றது. திருப்பெரும்புதூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவருமான கு.செல்வப்பெருந்தகை விழாவில் பங்கேற்க வந்துள்ளார்.
ஆனால், அங்கு பணியில் இருந்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அவரை சமூக ரீதியான உணர்வுடன் பாகுபாட்டுடன் நடத்தியுள்ளனர். ஆகம விதிகள் என்ற பெயரில் ஒரு சட்டமன்ற உறுப்பினரையே அவமரியாதையாக நடத்தியதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
இதே நிகழ்வில் பங்கேற்ற வேறு சில கட்சிகளின் தலைவர்களுக்கு அனைத்து விதமான மரியாதைகளும் அளிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான கு. செல்வப்பெருந்தகைக்கு உரிய மரியாதை அளிக்கப்படாதது ஏன் என்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மக்கள் முன் பதில் அளித்திட வேண்டும்.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசும், இந்து சமய அறநிலையத் துறையும் உடனடியாக உரிய விசாரணைகள் நடத்தி இதற்கு காரணமான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
இவ்வாறு சண்முகம் தெரிவித்துள்ளார்.
- விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
- மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் பூரண நலத்துடன் விரைவில் வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடலூர் மாவட்டம், செம்மங்குப்பம் அருகே ரெயில்வே கேட்டைக் கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் மாணவர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த செய்தி, அதிர்ச்சியும் மிகுந்த மன வேதனையையும் அளிக்கிறது. விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் பூரண நலத்துடன் விரைவில் வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
விபத்து நடைபெற்ற பகுதியில் சுரங்கப் பாதை அமைக்க முடிவெடுத்தும் அதற்கு ஒரு வருடமாக மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் அளிக்கவில்லை எனச் செய்திகள் வெளியாகி உள்ளன.
எனவே, விபத்து நடைபெற்ற இடத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாக பயணிக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகளை ஒன்றிய, மாநில அரசுகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன் என விஜய் கூறினார்.
- 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் நாளை பொது வேலைநிறுத்தம் அறிவிப்பு.
- தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு.
17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் நாளை பொது வேலைநிறுத்தம் அறிவித்துள்ளன.
மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொழிலாளர்களை வஞ்சிப்பதற்காக அமல்படுத்த உள்ள 4 சட்ட தொகுப்புகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடக்கிறது.
தமிழ்நாட்டில் இந்த வேலைநிறுத்த போராட்டத்துக்கு தி.மு.க.வின் தொழிற்சங்கமான தொ.மு.ச., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமான சி.ஐ.டி.யு., இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமான ஏ.ஐ.டி.யூ.சி., காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த தொழிற்சங்கங்கள் உள்பட 13 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்து உள்ளன.
இந்த நிலையில் தமிழகத்தில் நாளை வழக்கம்போல் பேருந்துகள் இயங்கும். வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் அதற்குரிய மாற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனர். முழுமையாக பேருந்துகள் இயக்க போக்குவரத்துத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
- முடிவுற்ற பணிகள் குறித்தும் அவ்வப்போது ஆலோசனைகள் வழங்கி வந்தார்.
- நாடு போற்றுகின்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா சிறப்புடன் நிறைவேறியது.
சென்னை:
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நல்வழிகாட்டுதலின்படி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பெருந்திட்ட வரைவு மூலமாக கோவிலின் வளர்ச்சி மற்றும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்வதற்காக வடிவமைக்கப்பட்டு, பெருந்திட்ட வரைவு பணிக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி அளித்தும், பல்வேறு துறைசார்ந்த கலந்தாய்வு கூட்டங்களில் இத்திட்டத்தின் நிலைக்குறித்தும், முடிவுற்ற பணிகள் குறித்தும் அவ்வப்போது ஆலோசனைகள் வழங்கியும் வந்தார்.
அதனை தொடர்ந்து, நேற்று (7-ந்தேதி) வரலாற்று சிறப்புமிக்க நாடு போற்றுகின்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா சிறப்புடன் நிறைவேறியது. திராவிட மாடல் ஆட்சியில் மேலும் ஒரு மைல்கல், 'எல்லார்க்கும் எல்லாம்' என ஆட்சி புரியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இந்து சமய அறநிலையத் துறையும் பொதுமக்களும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் நாளை பொது வேலைநிறுத்தம் அறிவிப்பு.
- தமிழ்நாட்டில் தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தொழிற்சங்கங்கள் ஆதரவு.
17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் நாளை பொது வேலைநிறுத்தம் அறிவித்துள்ளது.
மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொழிலாளர்களை வஞ்சிப்பதற்காக அமல்படுத்த உள்ள 4 சட்ட தொகுப்புகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடக்கிறது.
தமிழ்நாட்டில் இந்த வேலைநிறுத்த போராட்டத்துக்கு தி.மு.க.வின் தொழிற்சங்கமான தொ.மு.ச., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமான சி.ஐ.டி.யு., இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமான ஏ.ஐ.டி.யூ.சி., காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த தொழிற்சங்கங்கள் உள்பட 13 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்து உள்ளன.
இந்த நிலையில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் "No Work, No Pay" என்ற அடிப்படைபில் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என தலைமைச் செயலாளர் எச்சரித்துள்ளார்.
- எங்கள் வீட்டில் 4 டாக்டர். மருத்துவர் அய்யா போட்ட பிச்சை. அவர் பெற்றுக்கொடுத்த இடஒதுக்கீடு.
- அய்யாவை பார்த்து இந்த கட்சிக்கு வந்தேன்.
திண்டிவனம் அருகே உள்ள ஓமந்தூரில் பா.ம.க. செயற்குழு கூட்டம் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் கூறியதாவது:
அப்பல்லோ மருத்துவமனை கட்டி உள்ளாரே ரெட்டி அவரைப்போல அய்யாவாலும் பெரிய ஆளாக வந்திருக்க முடியும்.
அன்றைக்கு எங்கேயோ ஒரு டாக்டர் தான் இருப்பார்கள். இன்றைக்கு ஊர் ஊருக்கு டாக்டர்.
யாரால் ஊர் ஊருக்கு டாக்டர். எங்கள் வீட்டில் 4 டாக்டர். மருத்துவர் அய்யா போட்ட பிச்சை. அவர் பெற்றுக்கொடுத்த இடஒதுக்கீடு.
இன்று வெள்ளை சட்டை போட்டு இருக்கிறேன் என்றால் அது என் தம்பி எடுத்துக்கொடுத்தது. நான் வந்த கார் என் தம்பி வாங்கி கொடுத்தது. இதையெல்லாம் தம்பி வாங்கி கொடுத்தான் என்று தான் பேரு. ஆனால் அதற்கு காரணம் குலதெய்வம் மருத்துவர் அய்யா.
இப்படிப்பட்டதெய்வத்தை ஒரு நிமிடம் கூட நாம் மறந்தோம் என்றால் நாம் அழிந்து போவோம்.
இந்த இனத்தில் பிறந்த ஒவ்வொருவரும் மருத்துவர் அய்யாவை தெய்வமாக பார்க்க வேண்டும். அய்யா சொல்வதை செய்ய தயாராக இருக்கிறோம். அய்யாவை பார்த்து இந்த கட்சிக்கு வந்தேன்.
நீங்கள் எனக்கு மேயர் சீட், எம்.எல்.ஏ. சீட், இன்னும் பல பதவிகள் கொடுத்தீர்கள், இன்றைக்கு இணைப்பொதுச்செயலாளர் என்ற பெரிய பதவி கொடுத்து உள்ளீர்கள்.
அய்யா அவர்கள் விரும்பியது இட ஒதுக்கீடு. அந்த இட ஒதுக்கீட்டிற்காகத்தான் உழைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
என்னை கட்சியை விட்டு நீக்கி விட்டதாக சொல்கிறார்கள். அதனால் எனக்கு வருத்தம் கிடையாது. என்னை கட்சியில் இருந்து நீக்குவதற்கோ, பொறுப்பு மாற்றுவதற்கோ அதிகாரம் உள்ளவர் மருத்துவர் அய்யா மட்டும் தான்.
அருள் உன் உயிர் எனக்கு வேண்டும் என்று அய்யா சொன்னால் இந்த டி.வி.க்காரர்கள் முன்னாடி என் கழுத்தை அறுத்துக்கொண்டு சாவதற்கு தயாராக உள்ளேன்.
என்றைக்கும் என் தலைவர்... என் உயிர் உள்ளவரை, என் மகன் உள்ளவரை, என் குடும்பம் உள்ளவரை மருத்துவர் அய்யா நீங்கள் மட்டுமே என்று கூறினார்.
- இந்திய பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 21ஆம் தொடங்குகிறது.
- கூட்டத்தொடரில் முன்வைக்கப்பட வேண்டிய பிரச்சினைகள் தொடர்பாக உரிய அறிவுறுத்தல்களை வழங்குவார் எனத் தகவல்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வரும் 18ஆம் தேதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இக்கூட்டம் அன்றைய தினம் காலை 10.30 மணியளவில் சென்னை அறிவாலயத்தில் நடைபெற உள்ளது.
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் முன்வைக்கப்பட வேண்டிய பிரச்சினைகள் தொடர்பாக உரிய அறிவுறுத்தல்களை முதலமைச்சர் வழங்குவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
2025ஆம் ஆண்டின் இந்திய பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 21ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
- தி.மு.க. அரசின் ஏதேச்சதிகாரப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
- நீண்டநாள் கோரிக்கையான பணி நிரந்தரம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
சென்னை:
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-
பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி சென்னையில் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற நூற்றுக்கணக்கான பகுதிநேர ஆசிரியர்கள் காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழக அரசுப்பள்ளிகளில் ஓவியம், இசை, உடற்கல்வி மற்றும் கணினி பாடங்களை பயிற்றுவிக்க நியமிக்கப்பட்ட பகுதிநேர ஆசிரியர்களின் பணி நிரந்தரம் என்ற நீண்டநாள் கோரிக்கையை ஏற்க மறுத்து அவர்கள் மீது அடக்கு முறையை ஏவியிருக்கும் தி.மு.க. அரசின் ஏதேச்சதிகாரப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
தி.மு.க, ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளைக் கடந்த பின்பும் அவற்றை நிறைவேற்ற மறுப்பதும், ஒவ்வொரு போராட்டத்தின் போதும் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றுவதும் ஒட்டுமொத்த ஆசிரியர்களுக்கும் இழைக்கும் மாபெரும் அநீதி ஆகும்.
எனவே, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, பகுதிநேர ஆசிரியர்களின் நீண்டநாள் கோரிக்கையான பணி நிரந்தரம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- இன்று காலை சாப்பாடு கொடுப்பதற்காக பாலசுந்தர் சென்றபோது வெளிக்கதவு பூட்டிக்கிடந்தது.
- ருக்மணி அணிந்திருந்த கம்மல் மற்றும் மூக்குத்தி அப்படியே இருந்தது.
வள்ளியூர்:
நெல்லை மாவட்டம் வள்ளியூர் மின்வாரிய குடியிருப்பு காலனியை சேர்ந்தவர் அர்ஜூனன் (வயது 78). இவரது மனைவி ருக்மணி (71). இவர்களுக்கு பாலசுந்தர், செந்தில் முருகன் என்ற 2 மகன்களும், சண்முக சுந்தரி என்ற மகளும் உள்ளனர். செந்தில் முருகன் சென்னையிலும், சண்முக சுந்தரி நெல்லையிலும் குடும்பத்துடன் வசிக்கின்றனர்.
பாலசுந்தர் காவல்கிணறு இஸ்ரோவில் பணியாற்றி வருகிறார். இவர் பெற்றோர் வீட்டுக்கு அருகே உள்ள வீட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
அர்ஜூனன் கடந்த மாதம் இறந்து விட்டார். இதனால் ருக்மணி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். அவருக்கு பால சுந்தர் தினமும் சாப்பாடு கொண்டு கொடுப்பது வழக்கம்.
அதன்படி இன்று காலை சாப்பாடு கொடுப்பதற்காக பாலசுந்தர் சென்றபோது வெளிக்கதவு பூட்டிக்கிடந்தது. உடனே பாலசுந்தர் பலமுறை தனது தாயை அழைத்தும் அவர் வரவில்லை. இதனால் வீட்டின் பின்புறம் சென்றபோது அங்கு பின்கதவு திறந்து கிடந்தது.
பின்வாசல் அருகே ருக்மணி தலையில் ரத்தக் காயத்துடன் இறந்து கிடந்தார். அவர் கழுத்தில் 7 பவுன் செயின் மற்றும் கையில் அணிந்திருந்த 7 பவுன் எடை கொண்ட வளையல்கள் என 14 பவுன் நகைகள் கொள்ளை போயிருந்தது தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த பாலசுந்தர் வள்ளியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு டி.எஸ்.பி. வெங்கடேஷ், இன்ஸ்பெக்டர் நவீன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
ருக்மணி தனியாக இருப்பதை அறிந்து மர்மநபர்கள் அவரை அடித்துக்கொலை செய்து விட்டு நகையை கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
ருக்மணி அணிந்திருந்த கம்மல் மற்றும் மூக்குத்தி அப்படியே இருந்தது. எனவே மர்மநபர்கள் கழுத்து, கையில் இருந்த நகைகளை பறித்தபோது ருக்மணி தடுத்திருக்கலாம் என்றும், அப்போது கொள்ளையர்கள் ருக்மணியை தள்ளி விட்டு நகையை பறித்துக் கொண்டு ஓடியிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
மேலும் வீட்டில் இருந்த பீரோ திறந்து கிடந்தது. ஆனால் அதில் லாக்கர் இருந்ததால் அதற்குள் வைக்கப்பட்டிருந்த நகை தப்பி உள்ளது.
சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை சேகரித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






