என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    குடமுழுக்கு விழாவில் பாகுபாடு: இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்
    X

    குடமுழுக்கு விழாவில் பாகுபாடு: இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்

    • வல்லக்கோட்டை முருகன் கோவில் குடமுழுக்கு விழா நேற்று நடைபெற்றது.
    • இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செல்வப்பொருந்தகையை சமூக ரீதியான உணர்வுடன் பாகுபாட்டுடன் நடத்தியுள்ளனர்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர், வல்லக்கோட்டை முருகன் கோவில் குடமுழுக்கு விழா நேற்று நடைபெற்றது. திருப்பெரும்புதூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவருமான கு.செல்வப்பெருந்தகை விழாவில் பங்கேற்க வந்துள்ளார்.

    ஆனால், அங்கு பணியில் இருந்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அவரை சமூக ரீதியான உணர்வுடன் பாகுபாட்டுடன் நடத்தியுள்ளனர். ஆகம விதிகள் என்ற பெயரில் ஒரு சட்டமன்ற உறுப்பினரையே அவமரியாதையாக நடத்தியதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

    இதே நிகழ்வில் பங்கேற்ற வேறு சில கட்சிகளின் தலைவர்களுக்கு அனைத்து விதமான மரியாதைகளும் அளிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான கு. செல்வப்பெருந்தகைக்கு உரிய மரியாதை அளிக்கப்படாதது ஏன் என்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மக்கள் முன் பதில் அளித்திட வேண்டும்.

    இது தொடர்பாக தமிழ்நாடு அரசும், இந்து சமய அறநிலையத் துறையும் உடனடியாக உரிய விசாரணைகள் நடத்தி இதற்கு காரணமான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

    இவ்வாறு சண்முகம் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×