என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஜனநாயக ரீதியில் போராடும் பகுதிநேர ஆசிரியர்களை கைது செய்வதா?- டி.டி.வி.தினகரன் கண்டனம்
- தி.மு.க. அரசின் ஏதேச்சதிகாரப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
- நீண்டநாள் கோரிக்கையான பணி நிரந்தரம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
சென்னை:
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-
பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி சென்னையில் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற நூற்றுக்கணக்கான பகுதிநேர ஆசிரியர்கள் காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழக அரசுப்பள்ளிகளில் ஓவியம், இசை, உடற்கல்வி மற்றும் கணினி பாடங்களை பயிற்றுவிக்க நியமிக்கப்பட்ட பகுதிநேர ஆசிரியர்களின் பணி நிரந்தரம் என்ற நீண்டநாள் கோரிக்கையை ஏற்க மறுத்து அவர்கள் மீது அடக்கு முறையை ஏவியிருக்கும் தி.மு.க. அரசின் ஏதேச்சதிகாரப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
தி.மு.க, ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளைக் கடந்த பின்பும் அவற்றை நிறைவேற்ற மறுப்பதும், ஒவ்வொரு போராட்டத்தின் போதும் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றுவதும் ஒட்டுமொத்த ஆசிரியர்களுக்கும் இழைக்கும் மாபெரும் அநீதி ஆகும்.
எனவே, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, பகுதிநேர ஆசிரியர்களின் நீண்டநாள் கோரிக்கையான பணி நிரந்தரம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






