என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • சிறுவர்கள் தாங்கள் வைத்திருந்த அரிவாளால் போலீசாரை வெட்ட முயன்றுள்ளனர்.
    • சிறுவர்கள் 2 பேரும் அந்த வீட்டின் கதவை அரிவாளால் வெட்டி சேதப்படுத்தி திறக்க முயன்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள பாப்பாக்குடி சமத்துவபுரத்தை சேர்ந்த 17 வயது சிறுவர்கள் 2 பேர் மீது பாப்பாக்குடி போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    இவர்கள் சமீபத்தில் சாதி மோதலை உண்டாக்கும் வகையிலான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டதாக 2 சிறுவர்களும் கைது செய்யப்பட்ட நிலையில் அதன்பின்னர் ஜாமினில் வெளியே வந்து வெளியூருக்கு சென்றுவிட்டனர்.

    அவர்களை சிறிது காலம் வெளியூரில் இருக்கும்படி போலீசார் அறிவுறுத்தி இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் 2 பேரும் நேற்று முன்தினம் நள்ளிரவு ஊருக்கு வந்துள்ளனர்.

    அப்போது முக்கூடலில் பானி பூரி கடை நடத்தி வரும் பாப்பாக்குடி சமத்துவபுரம் இந்திரா காலனியை சேர்ந்த சக்திகுமார்(வயது 22) என்பவரிடம் பானிபூரி வாங்கிவிட்டு சென்றுள்ளனர்.

    இதனிடையே அவர்கள் வீட்டுக்குள் செல்வதற்குள் போலீசார் அங்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் பானிபூரி கடைக்காரரான சக்திகுமார் தான் தங்கள் வருகையை போலீசாருக்கு தெரிவித்துள்ளார் என்று 2 சிறுவர்களும் கருதி உள்ளனர். இதனால் நேற்று இரவு முக்கூடல் அருகே உள்ள ரஸ்தாவூருக்கு 2 சிறுவர்களும் மதுபோதையில் சென்று உள்ளனர்.

    சமீபகாலமாக ரஸ்தாவூரில் வசித்து வரும் சக்திகுமாரிடம் சென்று பேச வேண்டும் என்று கூறி ஊருக்கு சற்று தொலைவில் உள்ள குளத்துக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு வைத்து தங்களை போலீசில் எப்படி மாட்டிவிடலாம் என்று கூறி சக்திகுமாரை காலில் வெட்டியுள்ளனர். காயம் அடைந்த அவர் அங்கிருந்து தப்பி ஓடி வரவே அப்போது இரவு நேர ரோந்து போலீசார் அங்கு வந்து உள்ளனர்.

    தகவல் அறிந்து 2 சிறுவர்களையும் பிடிக்க முயன்றனர். அப்போது சிறுவர்கள் தாங்கள் வைத்திருந்த அரிவாளால் போலீசாரை வெட்ட முயன்றுள்ளனர். இதனால் 2 போலீசாரும் அங்கிருந்து தப்பி ஓட முயற்சிக்கவே, அதில் ரஞ்சித் என்ற காவலருக்கு காலில் காயம் ஏற்பட்டது. தகவல் கிடைக்கப்பெற்று துப்பாக்கியுடன் பாப்பாக்குடி சப்-இன்ஸ்பெக்டர் முருகன் அங்கு விரைந்து சென்றார்.

    அவர் 2 சிறுவர்களையும் பிடிக்க முயன்றார். அப்போது அவரையும் அந்த சிறுவர்கள் அரிவாளால் வெட்ட முயன்றனர். உடனே சப்-இன்ஸ்பெக்டர் முருகன் அங்கிருந்து தப்பி ஓடி அருகில் இருந்த ஒரு பெண்ணின் வீட்டுக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார்.

    ஆனாலும் அந்த சிறுவர்கள் 2 பேரும் அந்த வீட்டின் கதவை அரிவாளால் வெட்டி சேதப்படுத்தி திறக்க முயன்றனர். இதனால் அசாதாரண சூழல் அங்கு நிலவியதால் தற்காப்பு நடவடிக்கையாக துப்பாக்கியால் அந்த சிறுவர்களை நோக்கி சப்-இன்ஸ்பெக்டர் முருகன் சுட்டார். அதில் ஒரு சிறுவனுக்கு நெஞ்சு பகுதி வழியாக குண்டு துளைத்து சென்றது. மற்றொரு சிறுவன் துப்பாக்கி குண்டு படாமல் தப்பித்து விட்டான்.

    இந்த சம்பவங்கள் குறித்து அறிந்த கூடுதல் காவல் படையினர் அங்கு காயத்துடன் இருந்த சக்திகுமார், மார்பு பகுதியல் குண்டு பாய்ந்து காயமடைந்த சிறுவன், காயம் அடைந்த காவலர் ரஞ்சித் உள்ளிட்டோரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இதில் குண்டு காயம் பட்டு சிகிச்சை பெற்று வரும் சிறுவன் மீது பெட்ரோல் குண்டு வீசியது உள்பட 4 வழக்குகளும், தப்பி ஓடிய சிறுவன் மீது கொலை, பெட்ரோல் குண்டு வீசியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளும் நிலுவையில் இருக்கிறது.

    இதையடுத்து தப்பி ஓடிய சிறுவனை இரவோடு இரவாக போலீசார் கைது செய்தனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் சிறுவன் இருக்கும் வார்டில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்த பகுதியிலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் மேற்பார்வையில், டி.எஸ்.பி.க்கள் சதீஸ்குமார், சத்தியராஜ் ஆகியோர் தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • கொடூர ஆணவக் கொலைக்கு உடந்தையாக இருந்த சுபாசினியின் பெற்றோர் இன்னும் கைது செய்யப்படவில்லை.
    • ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கான சட்டத்தை இந்திய சட்ட ஆணையம் வடிவமைத்து பல ஆண்டுகளாகியும் இன்னும் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது.

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஆறுமுகமங்கலத்தை சார்ந்த மென்பொறியாளர் கவின் செல்வகணேஷ் அவர்கள் ஆணவக் கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

    வெவ்வேறு சமூகங்களைச் சார்ந்த கவினும் சுபாசினி என்ற பெண்ணும் சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்னர் இதனையறிந்த சுபாசினியின் பெற்றோர் கவின்குமாரையும் அவரது பெற்றோரையும் எச்சரித்துள்ளனர். அதனால் கவின்குமாரின் பெற்றோர் கவின்குமாரை கண்டித்துள்ளனர்.

    இந்நிலையில் சென்னையில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த கவின் விபத்தில் சிக்கி திருச்செந்தூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது தாத்தாவை பார்ப்பதற்காக ஊருக்கு சென்றுள்ளார். அப்போது திருநெல்வேலியில் சித்த மருத்துவராக தான் பணியாற்றும் தனியார் சிகிச்சை மையத்தில் கவினின் தாத்தாவிற்கு சிகிச்சை அளிக்கலாம் என சுபாஷினி தெரிவித்ததன் அடிப்படையில் சுபாஷினியிடம் ஆலோசனை பெறுவதற்கு கவின் அவரது அம்மா மற்றும் மாமா ஆகிய மூவரும் சிகிச்சை மையத்திற்கு சென்றுள்ளனர்.

    சிகிச்சை மையத்தின் உள்ளே சுபாஷினியிடம் கவினின் அம்மாவும் மாமாவும் பேசிக் கொண்டிருந்தபோது வெளியே நின்று கொண்டிருந்த கவினை சுபாஷினியின் தம்பி சுர்ஜித் தனது இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்று தனது வீட்டு வாசலில் வைத்து கவினை வெட்டி படுகொலை செய்துள்ளான்.

    பின்னர் காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்ததாக தெரியவருகிறது.

    இந்த கொடூர ஆணவக் கொலைக்கு உடந்தையாக இருந்த சுபாசினியின் பெற்றோர் இன்னும் கைது செய்யப்படவில்லை. காவல்துறையில் பணியாற்றும் அவர்கள் இருவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும், அவர்களை காவல்துறை பணியிலிருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும். மேலும் அவர்கள் காவல்துறையில் பணியாற்றுவதால் இவ்வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு மாற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

    தென்மாவட்டங்களில் குறிப்பாக திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் ஆதிக்க சாதி வெறிக் கொலைகள், சாதிவெறித் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெறுவது வேதனையளிக்கிறது. ஆதிக்க சாதிவெறியாட்டத்தைத் தடுப்பதற்கு காவல்துறையில் ஒரு தனி நுண்ணறிவுப் பிரிவை உருவாக்க வேண்டும் என்னும் கோரிக்கையை மீண்டும் மீண்டும் முன்வைக்கிறோம்.

    ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கான சட்டத்தை இந்திய சட்ட ஆணையம் வடிவமைத்து பல ஆண்டுகளாகியும் இன்னும் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது.

    ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கான சட்டத்தை உடனடியாக மாநில அரசு உருவாக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

    கவின் செல்வகணேஷை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு உரிய இழப்பீட்டுத் தொகையும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மனம்விரும்பி வாழ்க்கையைத் தொடங்கும் இணையர்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்யவும் வேண்டியது ஆளும் அரசின் தார்மீகப் பொறுப்பும், கடமையுமாகும்.
    • சாதிய ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டுமெனவும் திமுக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த மென்பொறியாளர் தம்பி கவின்குமார் அவர்கள் பட்டப்பகலில் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன். ஆற்ற முடியாத பேரிழப்பைச் சந்தித்து நிற்கும் தம்பியின் குடும்பத்தாருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

    நவீனமும், அறிவியல் தொழில்நுட்பமும் உச்சப்பட்ச வளர்ச்சி பெற்றிருக்கும் தற்காலத்தில் நடந்தேறும் இத்தகைய ஆணவப் படுகொலைகள் நாகரீகச் சமுதாயத்தையே முற்றுமுழுதாகக் கேள்விக்குள்ளாக்குகின்றன. தமிழினத்தின் ஓர்மையைச் சிதைக்கும் வகையில் நடைபெறும் சாதிய வன்முறை வெறியாட்டங்களும், கொடுங்கோல் செயல்பாடுகளும் ஒருநாளும் ஏற்புடையதல்ல. சக மனிதரின் உயிரைப் பறிக்கும் கொடுஞ்செயல்கள் மனிதத்தன்மையே அற்றவை என்பதைத் தாண்டி, சாதியின் பெயரால் அவை நிகழ்த்தப்படுவது ஒட்டுமொத்தச் சமூகத்தையும் வெட்கித் தலைகுனியச் செய்கின்றன.

    ஒரு ஆணும், பெண்ணும் மனமொத்து விரும்பி, வாழ்க்கையைத் தொடங்குவதற்கு எதிராக சாதியை நிறுத்துவதும், அந்த சாதிக்காகப் பச்சைப்படுகொலைகளை செய்வதும் மிருகத்தனத்தின் உச்சமாகும். சமத்துவத்திற்கும், சமூக அமைதிக்கும் எதிரான இத்தகைய சாதிய ஆணவப் படுகொலைகள் நம்மைக் கற்காலத்திற்கு இழுத்துச் செல்கின்றன. ஆகவே, சாதியின் பெயரால் நிகழ்த்தப்படும் வன்முறைகளும், ஆணவக்கொலைகளும் முற்றாக நிறுத்தப்பட ஆளும் ஆட்சியாளர்கள் கடும் நடவடிக்கைகளையும், முன்னேற்பாடுகளையும் செய்ய வேண்டியது பேரவசியமாகிறது. அந்தவகையில், சாதிய ஆணவக்கொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் இயற்றவும், மனம்விரும்பி வாழ்க்கையைத் தொடங்கும் இணையர்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்யவும் வேண்டியது ஆளும் அரசின் தார்மீகப் பொறுப்பும், கடமையுமாகும்.

    ஆகவே, தம்பி கவின்குமார் அவர்கள் ஆணவப் படுகொலையில் தொடர்புடைய கொலையாளி சுர்ஜித், அதற்குத் துணைபோன பெற்றோரையும் சிறைப்படுத்தி, அவர்களுக்குக் கடும் தண்டனை கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டுமெனவும், சாதிய ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டுமெனவும் திமுக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஜஸ்டின் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகை இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது.
    • கைது செய்யப்பட்ட 5 பேரும் மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

    எல்லை தாண்டி மீன் பிடித்ததாக மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

    ராமேஸ்வரம் மீனவர்கள் தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை 5 மீனவர்களை கைது செய்தது. மேலும், ஜஸ்டின் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது.

    கைது செய்யப்பட்ட 5 பேரும் மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • திருப்போரூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு நடைபயணத்தை தொடங்கினார்.
    • 4வது நாளாக சென்னை மதுரவாயலில் உரிமை மீட்க தலைமுறை காக்க நடைபயணத்தை மேற்கொண்டார்.

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் 'உரிமை மீட்க தலைமுறை காக்க' என்ற தலைப்பில் கடந்த 25ம் தேதி தொடங்கி நவம்பர் 1ம் தேதி வரை 100 நாட்கள் நடைபயணம் செல்கிறார்.

    முதல் நாள் அன்று திருப்போரூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு நடைபயணத்தை தொடங்கினார்.

    சமூகநீதி, பெண்களுக்கான உரிமை, விவசாயம், வேலை வாய்ப்பு, நல்லாட்சி, கல்வி உரிமை, உணவு, வளர்ச்சி மற்றும் அடிப்படை சேவைகள் என 10 உரிமைகளை மீட்கும் நோக்கில் அன்புமணி பயணம் மேற்கொண்டு வருகிறார்.

    இந்நிலையில், அன்புமணி இன்று 4வது நாளாக சென்னை மதுரவாயலில் உரிமை மீட்க தலைமுறை காக்க நடைபயணத்தை மேற்கொண்டார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    மின்சாரத்துறையில் மிகப்பெரிய ஊழல் நடைபெறுகிறது என பாமக தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.

    கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக திமுகவினர் பொய் சொல்கிறார்கள். 541 வாக்குறுதியில் 60 வாக்குறுதிகளை மட்டுமே திமுக நிறைவேற்றி உள்ளது.

    மாதந்தோறும் மின் கணக்கீடு செய்யப்படும் என கூறினார்கள். அதையும் செய்யவில்லை. மின்துறையில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்ற வருகிறது.

    இவ்வாறு குறிப்பிட்டார்.

    • இந்திய சமூகச் சூழலில் சாதிய வேறுபாட்டை முதலில் ஒழிக்க வேண்டும்.
    • நானும் கம்யூனிஸ்ட்டாகியிருப்பேன் என்று முத்தமிழறிஞர் கலைஞர் சொன்னது இதனால்தான்!

    காலம்தோறும் கம்யூனிஸ்டுகள் நூல் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    'எல்லார்க்கும் எல்லாம்' என்ற சமத்துவச் சிந்தனையின் தோற்றமே பொதுவுடைமைக் கருத்தியல்!

    வர்க்க வேறுபாடுகளைக் களைந்திட உலகளவில் கம்யூனிஸ்டுகள் போராடுகையில், இந்திய சமூகச் சூழலில் சாதிய வேறுபாட்டை முதலில் ஒழிக்க வேண்டும் என்ற சிந்தனையின் தோற்றம்தான் திராவிட இயக்கம்! தந்தை பெரியாரையும் - பேரறிஞர் அண்ணாவையும் சந்தித்திருக்காவிட்டால் நானும் கம்யூனிஸ்ட்டாகியிருப்பேன் என்று முத்தமிழறிஞர் கலைஞர் சொன்னது இதனால்தான்!

    தமிழ்நாட்டில் இடதுசாரி இயக்கங்கள் வலுவாகக் காலூன்ற - உழைப்பாளர்களின் உரிமைகள் நிலைபெற்றிடச் செந்நீர் சிந்தி உழைத்த - பொதுவுடைமைக் கருத்தியலை விதைத்த 100 போராளிகளை இளம்தலைமுறையினர் அறிந்துகொள்ளக் "#காலம்தோறும்_கம்யூனிஸ்டுகள்" நூலைப் படைத்திருக்கிறார் கவிஞர் ஜீவபாரதி!

    ஆதிக்கமும் - சுரண்டலும் ஒழியப் போராடிய தியாக வரலாற்றை நீங்கள் அனைவரும் உள்வாங்கிட இந்த நூல் துணையாக இருக்கும்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கேரளாவைச் சேர்ந்த இரு கன்னியாஸ்திரிகள் சத்தீஸ்கரில் கைது.
    • வகுப்புவாதத்தின் ஆபத்தான வடிவத்தின் பிரதிபலிப்பு.

    மத மாற்ற புகாரில் கேரளாவைச் சேர்ந்த இரு கன்னியாஸ்திரிகள் சத்தீஸ்கரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதற்கு கண்டனம் தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    சத்தீர்கரில் பஜ்ரங் தள் அமைப்பினரால் கேரள கன்னியாஸ்திரிகள் துன்புறுத்தல், பொய் குற்றச்சாட்டுக்கு ஆளாவது கவலையளிக்கிறது.

    வகுப்புவாதத்தின் ஆபத்தான வடிவத்தின் பிரதிபலிப்பு. சிறுபான்மையினரை பயமுறுத்தக் கூடாது.

    இந்தியாவில் சிறுபான்மையினர் கண்ணியத்திற்கும் சம உரிமைகளுக்கும் தகுதியானவர்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொலைபேசியில் பிறந்தநாள் வாழ்த்து !
    • ஜூலை 25-ஆம் தேதி, எனக்கு வெளியில் வேறு அலுவல்கள் இருந்ததால் வாழ்த்த முடியாமல் போனது.

    பா.ம.க. நிறுவனர் ராமதாசுக்கு பிரதமர் மோடி தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மருத்துவர் அய்யாவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொலைபேசியில் பிறந்தநாள் வாழ்த்து !

    பா.ம.க. நிறுவனர் தலைவர், மருத்துவர் அய்யா ராமதாசுக்கு இந்திய பிரதமர் மாண்புமிகு நரேந்திரமோடி அவர்கள் தொலைபேசி மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

    அப்போது, 'உங்கள் பிறந்தநாளான ஜூலை 25-ஆம் தேதி, எனக்கு வெளியில் வேறு அலுவல்கள் இருந்ததால் அன்றைய நாளில் வாழ்த்த முடியாமல் போய் விட்டது' என்று தெரிவித்தார்

    அப்போது, அய்யா அவர்கள், "நீங்கள் நூறாண்டு காலம் நலமுடன் வாழ்ந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என்று பிரதமரை வாழ்த்தினார்.

    அய்யாவின் வாழ்த்தை ஏற்றுக் கொண்ட மாண்புமிகு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், முன் மாதிரியாக நீங்கள் வாழ்ந்து மக்கள் தொண்டாற்ற வேண்டும்" என்று அய்யாவை வாழ்த்தி மகிழ்ந்தார்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • உதயசூரியன் அவர்களின் இந்தப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
    • மடியில் கனமில்லை என்றால் வழியில் பயம் எதற்கு?

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள கிராமத்தில் திமுக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. அப்போது, சாலை வசதி செய்து தராமல் உறுப்பினர் சேர்க்கைக்கு மட்டும் ஏன் வருகிறீர்கள்? என இளைஞர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

    இந்நிலையில், கேள்வி கேட்ட இளைஞர்களுக்கு திமுக எம்எல்ஏ உதயசூரியன் மிரட்டல் விடுத்ததாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து, நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கைக்காக சென்ற சங்கராபுரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் அவர்களிடம், "சாலை வசதி செய்து தராமல் உறுப்பினர் சேர்க்கைக்கு மட்டும் ஏன் வருகிறீர்கள்?" என அப்பகுதி இளைஞர்கள் கேள்வியெழுப்புகின்றனர்.

    வாக்களித்த மக்களின் நியாயமான கேள்விகளுக்கு பதில் சொல்லி பழக்கமில்லாத திமுகவைச் சேர்ந்த உடன்பிறப்புகள் அந்த இளைஞர்களை அடக்க முற்படுகின்றனர்.

    திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. உதயசூரியன் அவர்களோ ஒருபடி மேலே சென்று அந்த இளைஞர்களைத் தகாத வார்த்தைகளால் திட்டி, மிரட்டும் தொனியில் பேசுகிறார்.

    உதயசூரியன் அவர்களின் இந்தப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. இதுதான் கட்டப்பஞ்சாயத்து மாடல் அரசின் உண்மை முகம்.

    திமுகவின் வெற்று விளம்பரங்களை நம்பி தமிழக மக்கள் ஏமாந்து விடுவார்கள் என மனக்கோட்டை கட்டி வந்த திமுக தலைவர்களை, போகும் இடங்களிலெல்லாம் மக்கள் தங்கள் கேள்விகளால் துளைத்தெடுக்கிறார்கள்.

    ஆட்சி அமைந்ததும் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தராத திமுக கட்சிக்கு, ஆள்சேர்க்கை ஒரு கேடா? என மக்கள் கொந்தளிக்கிறார்கள்.

    அதை எதிர்பாராத திமுக தலைவர்கள் என்ன செய்வதென தெரியாமல் தங்கள் நிதானத்தை இழக்கிறார்கள். மடியில் கனமில்லை என்றால் வழியில் பயம் எதற்கு?

    கடந்த நான்கு வருடங்களாக கால் வைக்கும் இடங்களிலெல்லாம், கையில் கிடைக்கும் துறைகளிலெல்லாம் ஊழல் செய்துவிட்டு, தேர்தல் நெருங்கும் காலத்தில் ஒன்றும் தெரியாதது போல் மக்களை சென்று நலம் விசாரித்தால் இதுதான் நடக்கும். கோடிக்கோடியாக மக்கள் பணத்தைக் கொள்ளையடித்த திமுக அரசின் அழிவிற்கான ஆரம்பம் இது!

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழக வெற்றிக் கழகம் தனித்து போட்டியிடுமா? அல்லது யாருடனாவது கூட்டணி அமைத்து களம் இறங்குமா? என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
    • நமது கழகத்தின் வெற்றி வாகையை முக்கடல் சங்கமிக்கும் குமரியில் இருந்து ஆரம்பமாகட்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

    நாகர்கோவில்:

    நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக் கழகம் 2026 சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கட்சியின் முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்த விஜய், 2-வது மாநாட்டை மதுரையில் நடத்த உள்ளார். அதற்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகிறது. 2026 சட்டமன்ற தேர்தலை தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி எதிர்கொள்ளும் நிலையில் தமிழக வெற்றிக் கழகம் தனித்து போட்டியிடுமா? அல்லது யாருடனாவது கூட்டணி அமைத்து களம் இறங்குமா? என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

    இந்த நிலையில் வருகிற சட்டமன்ற தேர்தலில் விஜய், நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று த.வெ.க. கட்சியினர் சுவரொட்டி ஒட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாகர்கோவில் நகரில் பல இடங்களில் இந்த சுவரொட்டி ஒட்டப்பட்டு உள்ளது. அதில், 2026-ல் மக்கள் விரும்பும் முதல்வராக பதவியேற்க இருக்கும் எங்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றித் தலைவர் விஜய் அவர்களே கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட அழைக்கின்றோம்.

    நமது கழகத்தின் வெற்றி வாகையை முக்கடல் சங்கமிக்கும் குமரியில் இருந்து ஆரம்பமாகட்டும் என குறிப்பிட்டுள்ளனர். தமிழக வெற்றிக் கழகம் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் சார்பில் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • என்னை மிரட்டி பணிய வைக்க தி.மு.க. நினைத்தது.
    • கொலை குற்றச்சாட்டு சொல்லியிருந்தால் கூட ஏற்றுக் கொண்டிருப்பேன்.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் வருகிற 7 மற்றும் 8-ந்தேதிகளில் இந்த மாவட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி சுற்றுப்பயணம் செய்கிறார். அவருக்கு அளிக்க வேண்டிய வரவேற்பு தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை வழங்கிய முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமாகிய கே.டி.ராஜேந்திர பாலாஜி கண்கலங்கியபடி பேசியதாவது:-

    தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் என் மீது குறிவைத்து பொய் வழக்கு போட்டு கைது செய்தனர். தனிமை சிறையில் தவித்தேன். ஆனாலும் நான் யாருக்கும் பயப்படமாட்டேன். என்னை மிரட்டி பணிய வைக்க தி.மு.க. நினைத்தது. என்னைத்தான் அழிக்க நினைத்தார்கள்.

    கொலை குற்றச்சாட்டு சொல்லியிருந்தால் கூட ஏற்றுக் கொண்டிருப்பேன். யாரிடமாவது நான் வேலைக்காக பணம் வாங்கியதாக வரலாறு உண்டா? எடப்பாடியாரின் பிரசார முகமாக இருப்பதால் என்னை குறி வைக்கின்றனர். சிவகாசி சட்டமன்ற தொகுதியில்தான் வரும் சட்டமன்ற தேர்தலில் நிற்பேன். சிவகாசி என்னுடைய மண். யார் போட்டியிட்டாலும் நான் வெற்றி பெறுவேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கழிப்பறையை சுத்தம் செய்ய வேறு புதிய இடங்களையும் பரிந்துரைக்கலாம்.
    • படிப்படியாக பல ரெயில் நிலையங்களிலும் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது.

    சென்னை:

    நீண்ட தூரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கழிப்பறைகள் முறையாக சுத்தம் செய்யப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. தண்ணீர் குழாய்கள் உடைந்திருப்பது, ரெயில்களில் போதிய தண்ணீர் நிரப்பாதது போன்ற காரணங்களால் கழிப்பறைகள் பல நேரங்களில் அசுத்தமாக காணப்படுகின்றன.

    இந்த நிலையில் 10 நிமிடம் அல்லது அதற்கு மேல் நிறுத்தப்படும் நிலையங்களில் ரெயில் கழிப்பறைகளை கட்டாயம் சுத்தம் செய்ய வேண்டும் என்று ரெயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. அத்தகைய நிலையங்கள் தவிர, கழிப்பறையை சுத்தம் செய்ய வேறு புதிய இடங்களையும் பரிந்துரைக்கலாம். இது குறித்து ரெயில்வே தலைமை எந்திரவியல் பொறியாளரே முடிவு எடுக்க வேண்டும். அதுபோல ஒவ்வொரு ரெயிலுக்கும் அடையாளம் காணப்பட்ட ரெயில் நிலைய இடங்களில் விவரங்களை தொகுத்து 31-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று ரெயில்வே வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

    குறிப்பிட்ட நிலையங்களில் ரெயில்கள் நிற்கும்போது, ரெயில் கழிப்பறைகளை தூய்மைப்படுத்தும் நோக்கில், 'சுத்தமான ரெயில் நிலையம்' திட்டத்தை இந்திய ரெயில்வே கடந்த 2003-ல் அறிமுகம் செய்தது. படிப்படியாக பல ரெயில் நிலையங்களிலும் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது. கழிப்பறையை முழுமையாக சுத்தம் செய்வது கிருமி நாசினி தெளிப்பது, குப்பையை அகற்றுவது உள்பட எந்திரமயமாக்கப்பட்ட துப்புரவு செயல்முறைகள் இதில் அடங்கும்.

    ×