என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத் தரவுகளின்படி, 306 புலிகளைக் கொண்டுள்ளது தமிழ்நாடு.
    • தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரினக் குற்றங்கள் கட்டுப்பாட்டுப் பிரிவு எனும் சிறப்புப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    உலகப் புலிகள் நாளில் தமிழ்நாடு பெருமிதத்துடன் முழங்குகிறது!

    தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத் தரவுகளின்படி, 306 புலிகளைக் கொண்டுள்ளது தமிழ்நாடு. இந்த வெற்றிக்குக் காரணம், கடினமான பகுதிகளில், முக்கியத்துவம் மிகுந்த புலிகளின் வாழிடங்களைப் பாதுகாக்கும் நமது வனத்துறைப் பணியாளர்களும், வேட்டைத் தடுப்பு அணியினரும்தான்.

    வனங்களைப் பாதுகாக்கும் பணியினை மேம்படுத்திட, 1,947 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன, வனத்துறையினருக்கு நவீன உடைகள், தொழில்நுட்பக் கருவிகள் வழங்கப்படுகின்றன, கால்நடை மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    அயல்-ஆக்கிரமிப்புத் தாவரங்களை அகற்றி, புலிகளின் வாழிடங்கள் மீளுருவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. காடுகளின் வளம் மேம்படுத்தப்படுகிறது. கானுயிர் மீதான குற்றங்கள் புரியும் கும்பல்களை அடக்க, தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரினக் குற்றங்கள் கட்டுப்பாட்டுப் பிரிவு எனும் சிறப்புப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. புலிகளைப் பாதுகாப்பதன் வழியே, நம் காடுகளின் ஆன்மாவை நாம் பாதுகாக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சதிக்குக் கால் முளைத்துச் சாதியாகி உழைக்கும் மக்களை ஒடுக்கினாலும், விதி வலியது.
    • சமூகநீதிக்கான இந்த அரசியலையும் - போராட்டத்தையும் நாம் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    20,088 இடங்கள் = பல குடும்பங்களின் பல தலைமுறைக் கனவு!

    சதிக்குக் கால் முளைத்துச் சாதியாகி உழைக்கும் மக்களை ஒடுக்கினாலும், விதி வலியது - இதுதான் நம் தலையில் எழுதியது எனச் சுருண்டுவிடாமல், போராடி பெறும் உரிமைகளால் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் நமக்கான இடங்களை உறுதிசெய்கிறோம்!

    சமூகநீதிக்கான இந்த அரசியலையும் - போராட்டத்தையும் நாம் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். நம் விரல்களைக் கொண்டே நம் கண்களைக் குத்தும் வித்தையறிந்தவர்கள் செய்யும் சூழ்ச்சி அரசியலை முறியடிக்க, இந்நாளின் வரலாற்று முக்கியத்துவத்தை உரக்கச் சொல்வோம்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற 10-க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
    • நூற்றுக்கணக்கான பக்தர்கள் அடிவாரத்தில் வெகுநேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் சென்றனர்.

    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு ஆடி அமாவாசையை முன்னிட்டு கடந்த வாரம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    இந்தநிலையில் கடந்த 25-ந்தேதி வத்திராயிருப்பில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் திடீரென காட்டுத்தீ பரவியது. உடனே வனத்துறையினர் விரைந்து செயல்பட்டு காட்டுத்தீ பரவாமல் தடுத்தனர். இதற்கிடையே நேற்று முன்தினம் சாப்டூர் வனச்சரகம் வருசநாடு வழியாக சதுரகிரிக்கு செல்லும் பாதையில் உள்ள கள்ளிச்சுனை என்ற இடத்தில் காட்டுத்தீ ஏற்பட்டது. காற்றின் வேகம் காரணமாக அந்தப்பகுதியில் உள்ள மரங்களுக்கு தீ பரவியது. இதனால் வன விலங்குகள் பாதிக்கப் பட்டன.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற 10-க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் மலைப்பகுதியில் ஏற்பட்டுள்ள வறண்ட சூழ்நிலை காரணமாக தீ வேகமாக பரவி கட்டுப்படுத்துவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. 2-வது நாளாக இன்றும் சதுரகிரி மலைப்பகுதியில் உள்ள மணிக்கட்டி என்ற இடத்தில் காட்டுத்தீ பரவியுள்ளது. இந்த தீயில் மூலிகை மற்றும் அரிய வகை மரங்கள் எரிந்து சாம்பலாகி உள்ளன.

    தொடர்ந்து காட்டுத்தீ பரவி வருவதால் சதுரகிரி கோவிலுக்கு செல்ல நேற்று தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று 2-வது நாளாகவும் பக்தர்கள் மலைக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. நூற்றுக்கணக்கான பக்தர்கள் அடிவாரத்தில் வெகுநேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் சென்றனர்.

    • கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலை நடுவே உள்ள மெட்ரோ ரெயில் நிலைய தூணில் பயங்கரமாக மோதியது.
    • விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்த கிஷோரும், ஏனோசும் தூக்கி வீசப்பட்டனர்.

    குரோம்பேட்டை அடுத்த அஸ்தினா புரத்தை சேர்ந்தவர் சிவக்குமார். டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வருகிறார். இவரது மகன் கிஷோர்(வயது 17). பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று இரவு அதே பகுதியை சேர்ந்த நண்பரான ஏனோஷ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் அண்ணாநகரில் உள்ள நண்பர்களை பார்க்க புறப்பட்டார்.

    இரவு 10 மணியளவில் ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே ஆசர்கானா வளைவில் திரும்பினர். அப்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலை நடுவே உள்ள மெட்ரோ ரெயில்நிலைய தூணில் பயங்கரமாக மோதியது.

    இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த கிஷோரும், ஏனோசும் தூக்கி வீசப்பட்டனர். தலையில் பலத்த காயம் அடைந்த கிஷோர் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த ஏனோசை மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது விபத்து நடந்து உள்ள இதே இடத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஐ.பி.எல். கிரிக்கெட் பார்த்து திரும்பியபோதும் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் மோதி பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சென்னை மாநகராட்சி கழிப்பறைகள் பயன்படுத்தப்பட முடியாத நிலையில் துர்நாற்றம் வீசி வருகிறது.
    • சென்னை மாநகராட்சி தூய்மை இந்தியா திட்டத்தின் (SBM) கீழ் 620 கோடி ரூபாயை செலவிட்டுள்ளது.

    சென்னை மாநகராட்சியில் உள்ள பொது கழிப்பறைகளை சுத்தம் செய்ய ₹1,000 கோடிக்கு மேல் செலவிடப்பட்ட பிறகும், அவை பயன்படுத்தப்பட முடியாத நிலையில் துர்நாற்றம் வீசி வருகிறது.

    இந்நிலையில், மீண்டும் பொது கழிப்பறைகளை சுத்தம் செய்ய சென்னை மாநகராட்சி ரூ.1,000 கோடியை செலவிட திட்டமிட்டுள்ளது

    சென்னை நகரத்தில் 1,260 இடங்களில் 10,000 பொது கழிப்பறை இருக்கைகளை சுத்தம் செய்தல், பராமரித்தல் மற்றும் கட்டுதல் ஆகியவற்றிற்காக, கடந்த ஐந்து ஆண்டுகளில் சென்னை மாநகராட்சி தூய்மை இந்தியா திட்டத்தின் (SBM) கீழ் 620 கோடி ரூபாயை செலவிட்டுள்ளது.

    ராயபுரம், திரு.வி.க. நகர் ஆகிய இரண்டு மண்டலங்களில் கழிப்பறைகளை 9 ஆண்டுகள் தனியார்மயமாக்க 430 கோடி ரூபாயை செலவிட்டுள்ளது. இது தவிர, மொபைல் கழிப்பறைகள், மின் கழிப்பறைகள் மற்றும் சிங்காரா சென்னையின் 'ஒப்பனை கழிப்பறைகள்' ஆகியவற்றைக் கட்டவும் பராமரிக்கவும் சுமார் 50 கோடி செலவிட்டுள்ளது.

    ரூ.1000 கோடி செலவு செய்த பின்னரும் சென்னை மாநகராட்சியில் உள்ள கழிப்பறைகள் அசுத்தமாக பயன்படுத்தப்பட முடியாத நிலையில் தான் உள்ளது. அப்படியெனில் இந்த 1000 கோடி ரூபாய் எங்கே போனது என்ற கேள்வி எழுந்துள்ளது.

    • கிராமப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வாழ்வாதாரத்திற்கான தங்களது வீட்டின் ஒரு பகுதியில் தேநீர்க்கடை, பெட்டிக்கடை ஆகியவற்றை அமைத்திருப்பார்கள்.
    • உரிமத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் ’பாட்டிகளின் வடை கடைகள்’ வரலாற்றில் மட்டுமே இருக்கும்.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    தமிழகத்தின் கிராம ஊராட்சிகளில் இட்லிக்கடை, தேநீர்க்கடை உள்ளிட்ட 48 வகையான உற்பத்தித் தொழில்கள் செய்வதற்கும், தையல் தொழில், சலவைக்கடைகள் போன்ற 119 வகையான சேவைத் தொழில் செய்வதற்கும் உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சீர்திருத்தம் என்ற பெயரில் தமிழக அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை கிராமப்புற பொருளாதாரத்தையும், கிராம மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் தன்மைக் கொண்டவை ஆகும்.

    கிராமப்புற கடைகளுக்கு ரூ.250 முதல் ரூ.50 ஆயிரம் வரை உரிமக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, உரிமத்திற்கான விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிக வருவாயும், இலாபமும்

    தரக்கூடிய கடைகளுக்கு உரிமம் பெறுவதை கட்டாயமாக்குவதில் தவறு இல்லை. ஆனால், வாழ்வாதாரத்திற்காக செய்யப்படும் தொழில் - வணிகத்திற்கும் உரிமம் பெற வேண்டும் என்பது ஏழை மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் ஆகும்.

    கிராமப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வாழ்வாதாரத்திற்கான தங்களது வீட்டின் ஒரு பகுதியில் தேநீர்க்கடை, பெட்டிக்கடை ஆகியவற்றை அமைத்திருப்பார்கள். அதேபோல், ஆதரவற்ற மூதாட்டிகள், பிறரை எதிர்பார்த்திருக்கக் கூடாது என்ற சுயமரியாதை உணர்வுடன் இடலி சுட்டு விற்பது, மாலையில் வடை சுட்டு விற்பது போன்ற தொழில்களை செய்வார்கள். இதற்கும் உரிமம் பெற வேண்டும் என்பது பெரும் அநீதி. இது அவர்களின் வாழ்வாதாரங்களை முற்றிலுமாக அழித்து விடும்.

    கிராமப்புற கடைகள் உரிமம் பெறுவதுடன் மற்றும் இந்த நடவடிக்கை நின்று விடப் போவதில்லை. உரிமம் பெற்ற கடைகளுக்கு தமிழக அரசின் சார்பில் எந்த உதவியும் செய்யப்படாது. அதே நேரத்தில் உரிமம் வைத்திருப்பவர்களைத் தேடித் தேடி தொழில் வரி வசூலிக்கும் நடவடிக்கைகளில் உள்ளாட்சிகள் ஈடுபடும். வீடுகளில் சிறிய அளவில் நடத்தப்படும் பெட்டிக்கடை, இட்லிக்கடை ஆகியவற்றுக்கு உரிமம் பெறப்பட்டால், அதையே காரணம் காட்டி, அந்த வீட்டுக்கான மின் இணைப்பை வணிக இணைப்பாக மாற்ற மின்வாரியம் முயலும்.

    உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய நிதியையும், அதிகாரத்தையும் வழங்காமல் தன்னிடம் வைத்துக் கொள்ளும் திமுக அரசு, உள்ளாட்சிகளின் வருவாயைப் பெருக்குவதற்காக இப்படி ஒரு திட்டத்தைக் கொண்டு வந்திருப்பது குரூரமான நகைச்சுவை ஆகும். இந்த உரிமத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் 'பாட்டிகளின் வடை கடைகள்' வரலாற்றில் மட்டுமே இருக்கும்; நடைமுறையில் இருக்காது. எனவே, கிராமப்புற பொருளாதாரத்தை பாதிக்கக்கூடிய சிறிய கடைகளுக்கும் உரிமத்தைக் கட்டாயமாக்கும் சட்டத்தை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பிரதமர் மோடியிடம் மனு அளித்ததும் சிபில் ஸ்கோர் நடைமுறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
    • தேர்தலுக்கு இன்னும் 8 மாதம் உள்ளது. எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

    திருச்சி விமான நிலையத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * சிபில் ஸ்கோர் பிரச்சனையால் விவசாய கடன்கள் பெற முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்படுவதாக பிரதமர் மோடியிடம் மனு அளித்தேன்.

    * பிரதமர் மோடியிடம் மனு அளித்ததும் சிபில் ஸ்கோர் நடைமுறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    * பயிர்க்கடன் வழங்குவதில் பழைய நடைமுறையையே கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    * எங்கள் கூட்டணியில் பா.ஜ.க. உள்ளது. பா.ஜ.க. கூட்டணியில் பல கட்சிகள் உள்ளன. அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் யார் சேருவார்கள் என அவர்களிடம் தான் கேட்க வேண்டும்.

    * தேர்தலுக்கு இன்னும் 8 மாதம் உள்ளது. எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

    * காங்கிரஸ் தலைமையில் த.வெ.க. கூட்டணியா? - எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மீனவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர் மன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர்.
    • ராமேசுவரத்தில் இருந்து டேவிட் என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் 9 பேர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றிருந்தனர்.

    ராமேசுவரம்:

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்களை எல்லைதாண்டி மீன் பிடித்ததாகக்கூறி இலங்கை கடற்படை கைது செய்யும் சம்பவம் தொடர்ந்து நடை பெற்று வருகிறது. அத்துடன் மீனவர்களின் விசைப்படகுகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது.

    இதனால் தமிழ்நாடு மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்ந்து பாதிக்கப்படுகிறது. அத்துடன் இலங்கை கடற்கொள்ளையர்கள், தமிழ்நாடு மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி மீன், வலை உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் செல்வதும் தொடர்கதையாக உள்ளது.

    ராமேசுவரத்தில் இருந்து கடலுக்கு செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 45 நாட்களில் மட்டும் 40-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டதுடன் அவர்களின் பல லட்சம் மதிப்பிலான விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    கடந்த சில தினங்களாக வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக பாக்ஜலசந்தி கடல் பகுதி கடுமையான சீற்றத்துடன் காணப்பட்டது. பாம்பனில் முதலாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்ட நிலையில் குறைந்த எண்ணிக்கையிலான மீனவர்களே கடலுக்கு சென்றனர்.

    இந்தநிலையில் நேற்று காலை ராமேசுவரம் துறைமுகத்தில் இருந்து மீன்துறை அலுவலக அனுமதியுடன் 350 விசைப்படகுகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இதில் பெரும்பாலான மீனவர்கள் தனுஷ்கோடி, தலைமன்னார் இடைப்பட்ட பகுதியில் வலைகளை விரித்து மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர்.

    இன்று அதிகாலையில் அந்த பகுதிக்கு இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் மின்னல் வேகத்தில் வந்தது. இதனால் மீனவர்கள் கடலில் விரித்திருந்த வலைகளை சுருட்டி படகில் போட்டுக்கொண்டு அங்கிருந்து புறப்பட ஆயத்தமானார்கள். அனைத்து படகுகளும் சென்றுவிட்டபோதும், தங்கச்சிமடத்தை சேர்ந்த ஜஸ்டின் (வயது 51) என்பவருக்கு சொந்தமான விசைப்படகை இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்தனர்.

    அந்த படகில் தாவிக்குதித்த வீரர்கள், மீனவர்கள் பிடித்து வைத்திருந்த விலையுயர்ந்த மீன்களை அபகரித்துக்கொண்டனர். இது எங்கள் நாட்டு எல்லை என்று கூறிய அவர்கள், அந்த படகில் இருந்த உரிமையாளர் ஜஸ்டின், டெனிசன் (39), மோபின் (24), சைமன் (55), சேகர் (55) ஆகிய 5 மீனவர்களையும் எல்லைதாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி கைது செய்தனர்.

    மேலும் அவர்களுக்கு சொந்தமான விசைப்படகையும் பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர் மன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர். முதல்கட்ட விசாரணைக்கு பிறகு அவர்கள் 5 பேரும் மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். பிற்பகலில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னரே அவர்கள் விடுதலை ஆவார்களா அல்லது சிறையில் அடைக்கப்படுவார்களா? என்பது தெரியவரும்.

    இதற்கிடையே இன்று காலை ராமேசுவரத்தில் இருந்து டேவிட் என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் 9 பேர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றிருந்தனர். அவர்களின் படகை இன்று அதிகாலையில் இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி அதிலிருந்த 9 பேரையும் கைது செய்தனர்.

    இதற்கிடையே ஒரே நாளில் 14 பேர் கைது செய்யப்பட்ட தகவல் ராமேசுவரம் மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே இயற்கை சீற்றம், இலங்கை கடற்படையினர் தாக்குதல் உள்ளிட்ட காரணங்களால் மீன்பிடி தொழில் நாளுக்கு நாள் நசிந்துவரும் நிலையில் தொடர்ந்து மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவது அதிர்ச்சி அளிப்பதாகவும், தாங்கள் வேறு தொழிலுக்கு செல்ல எண்ணுவதாகவும் தெரிவித்தனர்.

    கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் தமிழக மீனவர்களின் நலன் குறித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ராமேசுவரம் மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை விசைப்படகுகளை குறிவைத்து மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர் தற்போது நாட்டுப்படகையும் பறிமுதல் செய்ய தொடங்கியுள்ளனர்.

    எல்லை தாண்டியதாக பொய்யான குற்றச்சாட்டை கூறி தமிழக மீனவர்களை சிறைபிடிப்பு என்ற பெயரில் நடுக்கடலில் கடத்தி செல்லும் இலங்கை கடற்படையால் கைதாகி சிறையில் வாடும் தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என்ற மீனவர் சங்க பிரதிநிதிகள், மீனவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 1 லட்சத்து 25 ஆயிரம் கன அடியாக அதிகரித்து வந்தது.
    • தண்டோரா மூலம் தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

    ஒகேனக்கல்:

    கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கி பெய்து வருகிறது. குறிப்பாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு, கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் தொடர் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

    இதனால் கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணையும், கபினி அணையும் நிரம்பி விட்டன.

    நேற்று இரவு 8 மணிக்கு கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 1 லட்சத்து 23 ஆயிரத்து 794 கன அடியாக அதிகரித்தது.

    இந்த தண்ணீர், கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக காவிரி ஆற்றில் கரைபுரண்டு தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.

    நீர்வரத்து அதிகரிப்பால் காவிரி ஆற்றில் இருக்கரை யும் தொட்டப்படி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

    இந்த நிலையில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நேற்று காலை 1 லட்சத்து 05 ஆயிரம் கனஅடி வந்தது. பின்னர் படிபடியாக நீர்வரத்து உயர்ந்து இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 1 லட்சத்து 25 ஆயிரம் கன அடியாக அதிகரித்து வந்தது.

    நீர்வரத்து அதிகரிப்பால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீரில் முழ்கின. மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி மெயின் அருவி, ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 4-வது நாளாக மாவட்ட கலெக்டர் சதீஸ் தடை விதித்துள்ளார்.

    இதனால் மெயின் அருவிக்கு செல்லும் பாதை பூட்டு போட்டு பூட்டப்பட்டது. சுற்றுலா பயணிகள் செல்லாதவாறு கேட்டு முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் காவிரி ஆற்றின் அழகை ரசிக்க மட்டும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். நீர்வரத்து அதிகரித்ததால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் ஒகேனக்கல், ஊட்டமலை, நாடார் கொட்டாய், நாக மரை உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் தீவிர ரோந்து சென்று கண் காணித்து வருகின்றனர். மேலும் தண்டோரா மூலம் தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

    மேலும் கர்நாடகா அணைகளில் இருந்து நீர் திறப்பு அதிகளவு திறக்கப்பட்டு உள்ளதால் ஒகேனக்கல்லுக்கு மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 

    • கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ், தற்போது தனியார் பள்ளிகளில் பயின்று வரும் மாணவ, மாணவியரின் கல்வியும் கேள்விக்குறியாகி உள்ளது.
    • சமக்ரா சிக்ஷா திட்டத்தின்கீழ் 2024-2025 ஆம் ஆண்டிற்கான 2,151 கோடி ரூபாய் நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்.

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    மழலையர் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை பயிலும் குழந்தைகளின் தரமான கல்வியை உறுதி செய்தல், மாணவர்களின் சேர்க்கையை அதிகரித்தல், அனைத்து குழந்தைகளுக்கும் சம வாய்ப்பினை வழங்குதல், சமூக மற்றும் பாலின இடைவெளிகளைக் குறைத்தல் போன்ற நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு சமக்ரா சிக்ஷா திட்டம் மத்திய, மாநில அரசுகளால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின்கீழ் மத்திய அரசின் பங்கு அறுபது விழுக்காடு எனவும், மாநில அரசின் பங்கு நாற்பது விழுக்காடு எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    சமக்ரா சிக்ஷா நிதி குறித்து அண்மையில் மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ள மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் இணை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி, தமிழ்நாடு அரசு முன்மொழிக் கொள்கையை பின்பற்றாததன் காரணமாக 2024-2025 ஆம் ஆண்டு சம்கரா சிக்ஷா திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டிய 2,151 கோடி ரூபாய் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

    சமக்ரா சிக்ஷா திட்டத்தின் நிதியை நம்பி கிட்டத்தட்ட 65 லட்சம் மாணவ, மாணவியர் தனியார் பள்ளிகளில் கல்வி பெற்று வருவதோடு, 6 லட்சம் தனியார் பள்ளி ஆசிரியர்களும் பயனடைந்து வருகிறார்கள். இந்தத் திட்டத்தின்கீழான மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதன் காரணமாக தனியார் பள்ளிகள் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதோடு மட்டுமல்லாமல், அரசு சார்பில் ஆசிரியர்களுக்கான பயிற்சி, பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய தூய்மைப் பணி உள்ளிட்ட பல பணிகள் முடங்கிப் போயுள்ளன.

    மேலும், மத்திய அரசின் இந்த நடவடிக்கை காரணமாக, கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் இந்த ஆண்டு 25 விழுக்காடு மாணவ, மாணவியரை தனியார் பள்ளிகளில் சேர்க்க இயலாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ், தற்போது தனியார் பள்ளிகளில் பயின்று வரும் மாணவ, மாணவியரின் கல்வியும் கேள்விக்குறியாகி உள்ளது. மத்திய அரசின் நிபந்தனைகளை மாநில அரசு ஏற்காதது என்பது மத்திய, மாநில அரசுகளுக்கிடையேயான பிரச்சனை. இந்தக் காரணத்தைச் சுட்டிக்காட்டி நிதியை விடுவிக்காமல் இருப்பது அப்பாவி ஏழை எளிய மாணவ, மாணவியரின் கல்வியையும், ஆசிரியர்களையும் பாதிக்கும் செயல். இது கடும் கண்டனத்திற்குரியது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை கல்வி உரிமைச் சட்டத்திற்கும், கூட்டாட்சித் தத்துவத்திற்கும் எதிரானது.

    சமக்ரா சிக்ஷா திட்டத்தின்கீழ் நிதியை விடுவிக்காதது பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் ஏழையெளிய மாணவ, மாணவியரின் கல்வி மற்றும் ஆசிரியர்களை பாதிக்கும் செயல் என்பதைக் கருத்தில் கொண்டு, சமக்ரா சிக்ஷா திட்டத்தின்கீழ் 2024-2025 ஆம் ஆண்டிற்கான 2,151 கோடி ரூபாய் நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டுமென்று மத்திய அரசை அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நேற்று தங்கம் விலையில் மாற்றம் இல்லாமல் விற்பனையானது.
    • வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.

    சென்னை:

    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. விலை மாற்றம் இல்லாத நாட்களே இல்லை என்ற வகையில் ஏறுவதும், இறங்குவதுமாக தங்கம் இருந்து வருகிறது.

    வார தொடக்க நாளான நேற்று தங்கம் விலையில் மாற்றம் இல்லாமல் விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.9,160-க்கும், ஒரு சவரன் ரூ.73,280-க்கு விற்பனையாகிறது.

    இந்நிலையில் தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.73 ஆயிரத்து 200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.9,150-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையில் இன்றும் மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி 126 ரூபாய்க்கும் பார் வெள்ளி 1 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

     

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    28-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,280

    27-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,280

    26-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,280

    25-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,680

    24-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,040

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    28-07-2025- ஒரு கிராம் ரூ.126

    27-07-2025- ஒரு கிராம் ரூ.126

    26-07-2025- ஒரு கிராம் ரூ.126

    25-07-2025- ஒரு கிராம் ரூ.128

    24-07-2025- ஒரு கிராம் ரூ.128

    • சிறுவர்கள் தாங்கள் வைத்திருந்த அரிவாளால் போலீசாரை வெட்ட முயன்றுள்ளனர்.
    • சிறுவர்கள் 2 பேரும் அந்த வீட்டின் கதவை அரிவாளால் வெட்டி சேதப்படுத்தி திறக்க முயன்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள பாப்பாக்குடி சமத்துவபுரத்தை சேர்ந்த 17 வயது சிறுவர்கள் 2 பேர் மீது பாப்பாக்குடி போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    இவர்கள் சமீபத்தில் சாதி மோதலை உண்டாக்கும் வகையிலான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டதாக 2 சிறுவர்களும் கைது செய்யப்பட்ட நிலையில் அதன்பின்னர் ஜாமினில் வெளியே வந்து வெளியூருக்கு சென்றுவிட்டனர்.

    அவர்களை சிறிது காலம் வெளியூரில் இருக்கும்படி போலீசார் அறிவுறுத்தி இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் 2 பேரும் நேற்று முன்தினம் நள்ளிரவு ஊருக்கு வந்துள்ளனர்.

    அப்போது முக்கூடலில் பானி பூரி கடை நடத்தி வரும் பாப்பாக்குடி சமத்துவபுரம் இந்திரா காலனியை சேர்ந்த சக்திகுமார்(வயது 22) என்பவரிடம் பானிபூரி வாங்கிவிட்டு சென்றுள்ளனர்.

    இதனிடையே அவர்கள் வீட்டுக்குள் செல்வதற்குள் போலீசார் அங்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் பானிபூரி கடைக்காரரான சக்திகுமார் தான் தங்கள் வருகையை போலீசாருக்கு தெரிவித்துள்ளார் என்று 2 சிறுவர்களும் கருதி உள்ளனர். இதனால் நேற்று இரவு முக்கூடல் அருகே உள்ள ரஸ்தாவூருக்கு 2 சிறுவர்களும் மதுபோதையில் சென்று உள்ளனர்.

    சமீபகாலமாக ரஸ்தாவூரில் வசித்து வரும் சக்திகுமாரிடம் சென்று பேச வேண்டும் என்று கூறி ஊருக்கு சற்று தொலைவில் உள்ள குளத்துக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு வைத்து தங்களை போலீசில் எப்படி மாட்டிவிடலாம் என்று கூறி சக்திகுமாரை காலில் வெட்டியுள்ளனர். காயம் அடைந்த அவர் அங்கிருந்து தப்பி ஓடி வரவே அப்போது இரவு நேர ரோந்து போலீசார் அங்கு வந்து உள்ளனர்.

    தகவல் அறிந்து 2 சிறுவர்களையும் பிடிக்க முயன்றனர். அப்போது சிறுவர்கள் தாங்கள் வைத்திருந்த அரிவாளால் போலீசாரை வெட்ட முயன்றுள்ளனர். இதனால் 2 போலீசாரும் அங்கிருந்து தப்பி ஓட முயற்சிக்கவே, அதில் ரஞ்சித் என்ற காவலருக்கு காலில் காயம் ஏற்பட்டது. தகவல் கிடைக்கப்பெற்று துப்பாக்கியுடன் பாப்பாக்குடி சப்-இன்ஸ்பெக்டர் முருகன் அங்கு விரைந்து சென்றார்.

    அவர் 2 சிறுவர்களையும் பிடிக்க முயன்றார். அப்போது அவரையும் அந்த சிறுவர்கள் அரிவாளால் வெட்ட முயன்றனர். உடனே சப்-இன்ஸ்பெக்டர் முருகன் அங்கிருந்து தப்பி ஓடி அருகில் இருந்த ஒரு பெண்ணின் வீட்டுக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார்.

    ஆனாலும் அந்த சிறுவர்கள் 2 பேரும் அந்த வீட்டின் கதவை அரிவாளால் வெட்டி சேதப்படுத்தி திறக்க முயன்றனர். இதனால் அசாதாரண சூழல் அங்கு நிலவியதால் தற்காப்பு நடவடிக்கையாக துப்பாக்கியால் அந்த சிறுவர்களை நோக்கி சப்-இன்ஸ்பெக்டர் முருகன் சுட்டார். அதில் ஒரு சிறுவனுக்கு நெஞ்சு பகுதி வழியாக குண்டு துளைத்து சென்றது. மற்றொரு சிறுவன் துப்பாக்கி குண்டு படாமல் தப்பித்து விட்டான்.

    இந்த சம்பவங்கள் குறித்து அறிந்த கூடுதல் காவல் படையினர் அங்கு காயத்துடன் இருந்த சக்திகுமார், மார்பு பகுதியல் குண்டு பாய்ந்து காயமடைந்த சிறுவன், காயம் அடைந்த காவலர் ரஞ்சித் உள்ளிட்டோரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இதில் குண்டு காயம் பட்டு சிகிச்சை பெற்று வரும் சிறுவன் மீது பெட்ரோல் குண்டு வீசியது உள்பட 4 வழக்குகளும், தப்பி ஓடிய சிறுவன் மீது கொலை, பெட்ரோல் குண்டு வீசியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளும் நிலுவையில் இருக்கிறது.

    இதையடுத்து தப்பி ஓடிய சிறுவனை இரவோடு இரவாக போலீசார் கைது செய்தனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் சிறுவன் இருக்கும் வார்டில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்த பகுதியிலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் மேற்பார்வையில், டி.எஸ்.பி.க்கள் சதீஸ்குமார், சத்தியராஜ் ஆகியோர் தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ×