ஆலந்தூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர் பலி

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலை நடுவே உள்ள மெட்ரோ ரெயில் நிலைய தூணில் பயங்கரமாக மோதியது.விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்த கிஷோரும், ஏனோசும் தூக்கி வீசப்பட்டனர்.
ஆலந்தூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர் பலி
Published on

குரோம்பேட்டை அடுத்த அஸ்தினா புரத்தை சேர்ந்தவர் சிவக்குமார். டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வருகிறார். இவரது மகன் கிஷோர்(வயது 17). பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று இரவு அதே பகுதியை சேர்ந்த நண்பரான ஏனோஷ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் அண்ணாநகரில் உள்ள நண்பர்களை பார்க்க புறப்பட்டார்.

இரவு 10 மணியளவில் ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே ஆசர்கானா வளைவில் திரும்பினர். அப்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலை நடுவே உள்ள மெட்ரோ ரெயில்நிலைய தூணில் பயங்கரமாக மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த கிஷோரும், ஏனோசும் தூக்கி வீசப்பட்டனர். தலையில் பலத்த காயம் அடைந்த கிஷோர் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த ஏனோசை மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது விபத்து நடந்து உள்ள இதே இடத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஐ.பி.எல். கிரிக்கெட் பார்த்து திரும்பியபோதும் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் மோதி பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com