என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தாம்பரம் டூ நாகர்கோவிலுக்கு செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 27 வரை திங்கள்தோறும் சிறப்பு ரெயில்.
- எழும்பூர் டூ நெல்லைக்கு செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 23 வரை வியாழன் தோறும் சிறப்பு ரெயில்.
ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இதற்கான முன்பதிவு நாளை தொடங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
* செப்டம்பர் 28ஆம் தேதி முதல் அக்டோபர் 26ஆம் தேதி வரை ஞாயிறுதோறும் நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு சிறப்பு ரெயில். மறுமார்க்கத்தில் செப்டம்பர் 29ஆம் தேதி முதல் அக்டோபர் 27ஆம் தேதி வரை திங்கட்கிழமைகளில் தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரெயில்.
* சென்ட்ரல்- செங்கோட்டைக்கு செப்டம்பர் 24ஆம் தேதி முதல் அக்டோபர் 24ஆம் தேதி வரை புதன்கிழமைகளில் ரெயில் இயக்கம். மறுமார்க்கத்தில் செப்டம்பர் 26ஆம் தேதி முதல் அக்டோபர் 25ஆம் தேதி வரை வியாழக்கிழமைகளில் இயக்கம்.
* எழும்பூர்- நெல்லைக்கு செப்டம்பர் 25ஆம் தேதி முதல் அக்டோபர் 23ஆம் தேதி வரை வியாழக்கிழமைகளில் ரெயில் இயக்கம். மறுமார்க்கத்தில் செப்டம்பர் 26ஆம் தேதி முதல் அக்டோபர் 24ஆம் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் ரெயில் இயக்கம்.
* எழும்பூர்- தூத்துக்குடிக்கு செப்டம்பர் 29ஆம் தேதி முதல் அக்டோபர் 27ஆம் தேதி வரை திங்கள்தோறும் ரெயில் இயக்கம். மறுமார்க்கத்தில் செப்டம்பர் 30ஆம் தேதி முதல் அக்டோபர் 28ஆம் தேதி வரை செவ்வாய்க்கிழமைகளில் இயக்கம்.
* சென்ட்ரல்- போத்தனூர் (கோவை) இடையே செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 23 வரை வியாழக்கிழமைகளில் ரெயில் இயக்கம். மறுமார்க்கத்தில் செப்டம்பர் 26ஆம் தேதி முதல் அக்டோபர் 24ஆம் தேதிவை வரை வெள்ளிக்கிழமைகளில் இயக்கம்.
- தெளிவு, நிதானம், எடுத்துக்கொண்ட துறைகளில் ஆழங்காற்பட்ட அறிவு, நீண்ட அனுபவம் ஒருங்கே அமையப் பெற்ற அருமை நண்பர்.
- ஒன்றிய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களுக்கு என் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
ஒன்றிய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தெளிவு, நிதானம், எடுத்துக்கொண்ட துறைகளில் ஆழங்காற்பட்ட அறிவு, நீண்ட அனுபவம் ஆகியவை ஒருங்கே அமையப் பெற்ற அருமை நண்பர், ஒன்றிய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களுக்கு என் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
தாங்கள் நீண்டகாலம் நல்ல உடல்நலத்துடன் திகழ்ந்து, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் இந்தியாவின் உயர்வுக்கும் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என விழைகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சுமார் 500 நபர்கள் நேரடியாகவும், 1000 நபர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை பெறுவர்.
- மாநில அரசின் பங்களிப்பு ரூ.1.80 கோடி மற்றும் பயனாளிகள் பங்களிப்பு ரூ.80 லட்சம் ஆகும்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று 4 புதிய தொழிற் பேட்டைகளை திறந்து வைத்தார். அதன் விவரம் வருமாறு:-
தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மூலம் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம், காவேரி ராஜபுரம் கிராமத்தில் 29.24 ஏக்கர் பரப்பளவில் ரூ.12.16 கோடி மதிப்பீட்டில் 74 தொழில்மனைகளுடன் புதிய தொழிற்பேட்டை அமைக்கப்பட்டு, தற்போது மேம்படுத்தப்பட்ட தொழில்மனைகள் தொழில்முனைவோர்களுக்கு ஒதுக்கீடு செய்ய தயாராக உள்ளது. இத்தொழிற்பேட்டை உருவாக்கத்தின் மூலம் சுமார் 400 நபர்கள் நேரடியாகவும், 800 நபர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை பெறுவர்.
தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மூலம் திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், முத்தூர் கிராமத்தில் 33.36 ஏக்கர் பரப்பளவில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் 91 தொழில்மனைகளுடன் புதிய தொழிற்பேட்டை அமைக்கப்படவுள்ளது, இத்தொழிற்பேட்டையில் முதற்கட்டமாக 24.37 ஏக்கர் பரப்பளவில் ரூ.9.58 கோடி மதிப்பீட்டில் 34 தொழில்மனைகள் மேம்படுத்தப்பட்டு தொழில்முனைவோர்களுக்கு ஒதுக்கீடு செய்ய தயாராக உள்ளது. இத்தொழிற்பேட்டை உருவாக்கத்தின் மூலம் சுமார் 500 நபர்கள் நேரடியாகவும், 1000 நபர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை பெறுவர்.
தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மூலம் செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், கடம்பாடி கிராமத்தில் சிற்ப கலைஞர்களுக்காக 21.07 ஏக்கர் பரப்பளவில் ரூ.15.39 கோடி மதிப்பீட்டில் 111 தொழில்மனைகளுடன் புதிய சிற்பக்கலை பூங்கா அமைக்கப்பட உள்ளது. இச்சிற்பக்கலை பூங்காவில் முதற்கட்டமாக 11.73 ஏக்கரில் ரூ.4.44 கோடி மதிப்பீட்டில் 66 தொழில்மனைகள் மேம்படுத்தப்பட்டு சிற்பக்கலை சார்ந்த தொழில்முனைவோர்களுக்கு ஒதுக்கீடு செய்ய தயாராக உள்ளது. இச்சிற்பக்கலை பூங்கா உருவாக்கத்தின் மூலம் சுமார் 600 நபர்கள் நேரடியாகவும், 1200 நபர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை பெறுவர்.
தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மூலம் திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், கொருக்கை கிராமத்தில் 15.44 ஏக்கர் பரப்பளவில் ரூ. 3.57 கோடி மதிப்பீட்டில் 58 தொழில்மனைகளுடன் புதிய தொழிற்பேட்டை அமைக்கப்பட உள்ளது, முதற்கட்டமாக 12.52 ஏக்கரில் ரூ.2.15 கோடி மதிப்பீட்டில் 47 தொழில் மனைகள் மேம்படுத்தப்பட்டு தொழில் முனைவோர்களுக்கு ஒதுக்கீடு செய்ய தயாராக உள்ளது. இத்தொழிற்பேட்டை உருவாக்கத்தின் மூலம் சுமார் 300 நபர்கள் நேரடியாகவும், 600 நபர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை பெறுவர்.
கடலூர் மாவட்டம், கடலூர் நகர்புறத்தில் இயங்கி வரும் ஆட்டோமொபைல் பழுதுபார்க்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தொழில்முனைவோர்கள் பயன்பெறும் வகையில் மருதாடு கிராமத்தில் 11.57 ஏக்கரில் ரூ.4.39 கோடி மதிப்பீட்டில் தனியார் தொழிற்பேட்டை அமைப்பதில் தற்போது ரூ.3.60 கோடி மதிப்பீட்டில் அடிப்படை வசதிகளுடன் 105 தொழிற் மனைகளை உள்ளடக்கிய புதிய தனியார் தொழிற்பேட்டை உருவாக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் சுமார் 600 நபர்கள் நேரடியாகவும், 1200 நபர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை பெறுவர்.
கிட்டாம்பாளையம் அறிஞர் அண்ணா கூட்டுறவு தொழிற்பேட்டையில் 316.04 ஏக்கரில் ரூ.24.61 கோடி மதிப்பில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியினை சார்ந்த மின்முலாம் பூசும் தொழிலில் ஈடுபட்டுள்ள சுமார் 100-க்கும் மேற்பட்ட குறுந்தொழில் முனைவோர்கள் பயன்பெறும் வகையில் திருமுடிவாக்கம் தொழிற்பேட்டையில் ரூ.2.60 கோடி மதிப்பில் 200 கே.எல்.டி. திறன்கொண்ட பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மாநில அரசின் பங்களிப்பு ரூ.1.80 கோடி மற்றும் பயனாளிகள் பங்களிப்பு ரூ.80 லட்சம் ஆகும்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பகுதியினை சார்ந்த 50-க்கும் மேற்பட்ட உணவுப்பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள குறுந்தொழில்முனைவோர்கள் பயன்பெறும் வகையில் கருமாபுரம் கிராமத்தில் ரூ.8.20 கோடி மதிப்பீட்டில் உணவுப் பொருட்கள் தயாரிப்பில் அதன் மதிப்புக் கூட்டலுக்குத் தேவையான நவீன எந்திரங்கள் மற்றும் பரிசோதனைக் கூடங்கள் உள்ளடக்கிய உணவுப்பதப்படுத்துதல் குழுமத்திற்கான பொது வசதி மையம் நிறுவப்பட்டுள்ளது. இதில் மாநில அரசின் பங்களிப்பு ரூ.6.56 கோடி மற்றும் பயனாளிகள் பங்களிப்பு ரூ.1.64 கோடி ஆகும். ஆக மொத்தம் ரூ.67.34 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்ட 8 முடிவுற்ற திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிட்கோ தொழிற்பேட்டையில் வேளாண் பொருட்கள் உற்பத்தி சார்ந்த தொழில்முனைவோர்கள் பயன்பெறும் வகையில் 17.95 ஏக்கரில் தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் (சிட்கோ) மூலம் சுமார் ரூ.15.23 கோடி மதிப்பீட்டில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளுடன் 47 தொழில்மனைகள் மேம்படுத்தப்படவுள்ளது. இதன்மூலம் வேளாண் பொருட்கள் உற்பத்தி சார்ந்த தொழில்முனைவேர்கள் பயன் பெறுவதோடு சுமார் 300 நபர்கள் நேரடியாகவும், 600 நபர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை பெறுவர்.
சிட்கோ நிறுவனத்தின் மூலம் திருமுடிவாக்கம் தொழிற்பேட்டையில் 1.36 ஏக்கரில் ரூ.29.27 கோடி மதிப்பீட்டில் தரை தளம் மற்றும் 3 தளங்களுடன் சுமார் 688 தொழிலாளர்கள் தங்கும் வகையில் 100 அறைகளுடன் தொழிலாளர் தங்கும் விடுதி கட்டப்பட உள்ளது.
தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மூலம் பராமரிக்கபட்டு வரும் 135 தொழிற்பேட்டைகளில், 18 தொழிற்பேட்டைகளின் சாலை, மழைநீர் வடிகால் கால்வாய் மற்றும் தெரு விளக்கு போன்ற அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை ரூ.34.07 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படவுள்ளது. ஆக மொத்தம் ரூ.78.57 கோடி மதிப்பீட்டிலான 20 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் சிட்கோ நிறுவனத்தில் உதவி மேலாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட 11 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
- மாணவர்கள், பொதுமக்கள் வசதிக்காக இயக்கப்பட்டு வந்த அரசு பஸ் தற்போது இயக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
- அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் காரத்தொழுவில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் நாட்டுக்கல்பாளையம் கிராமத்தை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்தநிலையில் இப்பகுதி மாணவர்கள், பொதுமக்கள் வசதிக்காக இயக்கப்பட்டு வந்த அரசு பஸ் தற்போது இயக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் பள்ளிக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் தவித்து வந்தனர். இது குறித்து அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதைத்தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் இன்று காலை காரத்தொழுவு மெயின் ரோட்டில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கணியூர் போலீசார் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களிடையே சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பஸ் வசதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- கொல்லைப்புறம் வழியாக இந்தியைத் திணிக்க ஒன்றிய பா.ஜ.க. அரசு முயன்றது.
- இந்தியைத் திணிப்பதில் ஒன்றிய பா.ஜ.க. அரசு தொடர்ந்து தோல்வி கண்டபோதிலும், விடாமல் இந்தியைத் திணிக்க முயன்று வருகிறது.
தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்தி மொழி நாளையொட்டி தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்துச் செய்தியைப் பதிவிட்டுள்ள ஒன்றிய உள்துறை அமைச்சர், "இந்திய நாட்டின் மொழிகள் மற்றும் பேச்சு வழக்குகளுக்கு இடையே ஒரு பாலமாக இந்தி செயல்படுகிறது. இந்தி மொழி வெறும் தகவல் தொடர்பு ஊடகமாக மட்டுமல்லாமல், தொழில்நுட்பம், அறிவியல், நீதி, கல்வி மற்றும் நிர்வாகத்தின் அச்சாணியாக மாறுவதை உறுதி செய்வதே எங்கள் குறிக்கோள். நாட்டின் குடிமக்களை ஒன்றிணைப்பதில் இந்தி, முக்கியப் பங்கு வகித்துள்ளது. அனைத்து மொழிகளையும் இணைத்து, வளர்ந்த மொழியியல் ரீதியாகத் தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்குவதில் இந்தி தொடர்ந்து முக்கியப் பங்கு வகிக்கும்' என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டிருக்கும் ஒரு தேசத்தில், 22 அலுவல் மொழிகளைக் கொண்டிருக்கும் அரசின் நிர்வாகத்தில் ஒற்றை மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பது என்பது எதேச்சதிகாரப் போக்காகும்.
ஒன்றிய அரசு நிர்வாகத்தின் அச்சாணியாக இந்தியை மாற்றுவதே லட்சியம் என்று கூறுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது ஆகும்.
பா.ஜ.க. முதன்முதலில் ஆட்சி அமைத்ததில் இருந்தே ஒரே நாடு ஒரே ரேஷன், ஒரே நாடு ஒரே தேர்தல் என்று பன்முகத்தன்மை கொண்ட நாட்டை ஒற்றைத் தன்மையில் சுருக்க முயல்கிறது. இந்த வரிசையில்தான் இப்போது ஒரே நாடு ஒரே மொழி என்று இந்தியைத் திணிக்க முயல்கிறார்கள். ஒன்றிய அரசு கொண்டுவந்த தேசியக் கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கையை அறிமுகப்படுத்தி, கொல்லைப்புறம் வழியாக இந்தியைத் திணிக்க ஒன்றிய பா.ஜ.க. அரசு முயன்றது.
யார் வேண்டுமானாலும் எந்த மொழியை வேண்டுமானாலும் எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் படிக்கலாம். அதில் மாற்றுக் கருத்து இல்லை. வலுக்கட்டாயமாகத் திணிப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது ஆகும். ஆனால், தமிழகத்தில் இருமொழிக் கொள்கை என்பதுதான் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கையும்கூட. இதனை எங்கள் பொதுக்குழுவிலும் செயற்குழுவிலும் தீர்மானமாகவே நிறைவேற்றி இருக்கிறோம்.
இந்தியைத் திணிப்பதில் ஒன்றிய பா.ஜ.க. அரசு தொடர்ந்து தோல்வி கண்டபோதிலும், விடாமல் இந்தியைத் திணிக்க முயன்று வருகிறது. ஒன்றிய அரசின் நிர்வாகத்தில் அலுவல் மொழியாக 22 மொழிகள் இருக்கும்போது, இந்தியை மட்டுமே தொழில்நுட்பம், அறிவியல், நீதி, கல்வி மற்றும் நிர்வாகத்தின் அச்சாணியாக மாற்ற நினைப்பது எதேச்சதிகாரப் போக்கு.
ஒன்றியத்தை ஆளும் அரசானது, நாட்டிலுள்ள அத்தனை மதத்தினரையும் மொழியினரையும் மாநிலத்தவரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும். இதுவே நாட்டின் ஒட்டு மொத்தப் பகுதிகளும் வளர்ச்சி அடைவதற்கான வழி ஆகும். இந்தி பேசாத மாநிலங்கள், பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் என்று பிரித்துப் பார்ப்பதும், ஒற்றை மொழிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பதும் கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானவை. எனவே கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான இந்தி மொழியைத் திணிக்கும் முயற்சியை ஒன்றிய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் ஒன்றிய அரசு நிர்வாகத்தின் அச்சாணியாக இந்தியை மாற்றுவதே லட்சியம் என்ற தன் கருத்தை ஒன்றிய உள்துறை அமைச்சர் திரும்பப் பெற வேண்டும் என்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இரண்டு பாமக எம்.எல்.ஏ.-க்கள் ஒற்றுமையாக பாராட்டியுள்ளனர்.
- அவர்கள் எப்போதும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். மக்கள் பணி ஆற்ற வேண்டும்.
சேலம் அருகே உள்ள கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு அடையாள அட்டை மற்றும் வங்கி கடன் இணைப்பு வழங்கும் விழா நடைபெற்றது. இதில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு அடையாள அட்டை மற்றும் வங்கி கடன் இணைப்பு வழங்கி பேசினார்.
அப்போது உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:-
இங்கு நடப்பது அரசு விழாவா? மகளிர் விழாவா? என்ற அளவிற்கு எழுச்சியோடு, மகிழ்ச்சியோடு வந்துள்ளீர்கள். இந்த விழாவிற்கு இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் வந்துள்ளனர். அவர்கள் நம்முடைய இயக்கம் கிடையாது. நம்முடைய கூட்டணியில் கூட (இப்போது) கிடையாது.
சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருண், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் ஆகிய இருவரும், சேலம் மாவட்டத்திற்கு திமுக அரசு பல்வேறு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறது. அதற்கு பாராட்டுகள் என போட்டி போட்டு கொண்டு பாராட்டியிருக்கிறார்கள். ஆனால் ஒற்றுமையாக பாராட்டியிருக்கிறார்கள். அவர்கள் எப்போதும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். மக்கள் பணி ஆற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
- திருப்பூரில் அடுத்த மாதம் 5-ந்தேதி விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
- போலீசார் சார்பில் பாண்டியன் நகரில் பிரசாரம் செய்ய அனுமதி வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.
திருப்பூர்:
த.வெ.க. தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார். கடந்த 13-ந்தேதி திருச்சியில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கிய விஜய், அன்றைய தினம் திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 3 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டிருந்தார். ஆனால், வழியெங்கும் அதிகளவில் தொண்டர்கள் திரண்டதால், குறிப்பிட்ட நேரத்துக்குள் அனுமதி வழங்கப்பட்ட இடங்களுக்கு விஜய்யால் செல்ல முடியவில்லை.
இதனால், திருச்சி, அரியலூரில் மட்டும் மக்கள் சந்திப்பை நடத்திவிட்டு, பெரம்பலூர் செல்லாமல், விஜய் சென்னை திரும்பினார். இந்நிலையில் திருப்பூரில் அடுத்த மாதம்(அக்டோபர்) 5-ந்தேதி விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
இதற்காக, திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பாலமுருகன் தலைமையில் தவெக., நிர்வாகிகள் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து அனுமதி கோரி மனு அளித்தனர்.
அக்டோபர் 5-ந்தேதி திருப்பூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் விஜய் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளை ஒருங்கிணைத்து ஏதாவது ஒரு இடத்தில் பிரசாரம் செய்ய உள்ளார். பிரசாரம் செய்வதற்காக திருப்பூர் மாநகரில் சின்னக்கரை, பாண்டியன் நகர், அவினாசி, பல்லடம் ஆகிய 4 இடங்களை த.வெ.க. நிர்வாகிகள் தேர்ந்தெடுத்துள்ளனர்.
இதில் ஏதாவது ஒரு இடத்தில் பிரசாரம் செய்வார் என தெரிகிறது. போலீசார் சார்பில் பாண்டியன் நகரில் பிரசாரம் செய்ய அனுமதி வழங்குவதாக தெரிவித்துள்ளனர். இருப்பினும் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் நேரில் வந்து பார்வையிட்டு அவர் கூறும் இடத்தில் விஜய் பிரசாரம் செய்ய போலீசாரிடம் அனுமதி கேட்க உள்ளனர்.
மனு கொடுக்கும் நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகர் மாவட்ட இணை செயலாளர் சுகுமார், துணை செயலாளர் குத்புதீன், பொருளாளர் வெள்ளைச்சாமி உள்பட பலர் உடனிருந்தனர்.
- இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தென்னிந்திய பகுதி மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை, நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, மதுரை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலும்
நாளை மறுநாள் நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் கனமழை பெய்யலாம்.
19-ந்தேதி திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
20-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
21 மற்றும் 22-ந்தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இரவு மற்றும் நள்ளிரவு நேரங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- முதலமைச்சர் நாற்காலியை சாமானியன் அலங்கரித்தான் என்ற சாதனையை தொடங்கி வைத்த இந்த அண்ணாதுரை அன்று தலைமை தாங்க தம்பிகளை அழைத்தேன்.
சென்னை:
தி.மு.க., அ.தி.மு.க. இரு கட்சிகளும் அறிஞர் அண்ணா கொள்கைகளை பின்பற்றி அரசியல் பணிகளை செய்து வருகின்றன.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி த.வெ.க. தலைவர் விஜய்யை அண்ணா பாராட்டி பேசுவது போல் சிறப்பு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வீடியோவில் கோடான கோடி உழைக்கும் மக்களின் உணர்வுமிக்க தம்பிகளின் பேராதரவை பெற்று தமிழ் மாநிலத்தின் முதலமைச்சர் நாற்காலியை சாமானியன் அலங்கரித்தான் என்ற சாதனையை தொடங்கி வைத்த இந்த அண்ணாதுரை அன்று தலைமை தாங்க தம்பிகளை அழைத்தேன்.
'இன்று தம்பி விஜய் உன்னை அழைக்கிறேன், தம்பி வா. தலைமை தாங்க வா' என்பது உள்பட விஜய்யை புகழ்ந்து பேசும் பல வசனங்களுடன் அண்ணா, பெரியாருடன் விஜய் இருப்பது போல் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாகி வெளியாகி உள்ள இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவதுடன் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பையும் உருவாக்கி உள்ளது.
- அனைத்து சமுதாய மக்களுக்கும் முறையான இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
- சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுத்தால் தான் சமூக நீதி நிலைநாட்டப்படும்.
கிண்டி:
சென்னை கிண்டியில் ராமசாமி படையாட்சியாருக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி மரியாதை செலுத்தினார். இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-
* சமூக நீதிக்கு தி.மு.க. துரோகி மட்டுமல்ல விரோதி. தி.மு.கவுக்கும் சமூக நீதிக்கும் சம்பந்தமில்லை.
* சாதிவாரி கணக்கெடுப்பு என்ற பெயர் பிடிக்கவில்லை என்றால் சமூக நீதி கணக்கெடுப்பு என்று பெயர் வைத்துக்கொள்ளுங்கள்.
* மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் இல்லை என முதலமைச்சர் பொய் சொல்கிறார்.
* அனைத்து சமுதாய மக்களுக்கும் முறையான இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
* சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுத்தால் தான் சமூக நீதி நிலைநாட்டப்படும் என்றார்.
- ஆந்திரா, டெல்லி மற்றும் சென்னையில் இருந்து 6 பேர் அடங்கிய என்.ஐ.ஏ. அதிகாரிகள் குழுவினர் நாகர்கோவிலுக்கு வந்தனர்.
- விசாரணைக்காக வாலிபரை விசாகப்பட்டினம் என்.ஐ.ஏ. அலுவலகத்திற்கு வருமாறு கூறினர்.
நாகர்கோவில்:
ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தில் தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக சிலரை என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
மேலும் அவர்களுடன் தொடர்பு உள்ளவர்களை கண்டறிய, அவர்களது செல்போன் ஆய்வு செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் செல்போன் மூலம் யார் யாருடன் பேசினார்கள்? சமூக வலைதளங்களில் யாரையெல்லாம் பின் தொடர்ந்தனர்? மேலும் யாரெல்லாம் கைதானவர்களை பின் தொடர்ந்தார்கள்? என்பது குறித்து தீவிர ஆய்வு நடந்தது.
அப்போது கைதான ஒருவருடன் குமரி மாவட்டம் நாகர்கோவில் வட்டவிளை பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் சமூக வலைதளம் மூலம் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட வாலிபரிடம் விசாரணை நடத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இதற்காக ஆந்திரா, டெல்லி மற்றும் சென்னையில் இருந்து 6 பேர் அடங்கிய என்.ஐ.ஏ. அதிகாரிகள் குழுவினர் இன்று காலை நாகர்கோவிலுக்கு வந்தனர். பின்னர் வாலிபரின் வீட்டை கண்டறிந்து சோதனை நடத்த அங்கு சென்றனர். ஆனால் அந்த வாலிபர் வீட்டில் இல்லை.
அவரது பெற்றோர் மட்டும் வீட்டில் இருந்தனர். வாலிபரை பற்றி அவர்களிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தங்களது மகன் வேலை விஷயமாக சென்னை சென்றிருப்பதாக பெற்றோர் தெரிவித்தனர். காலை 6 மணிக்கு தொடங்கிய என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை 9 மணி வரை நடைபெற்றது.
அப்போது வாலிபர் குறித்த அனைத்து விவரங்களையும் கேட்டறிந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள், விசாரணைக்காக வாலிபரை விசாகப்பட்டினம் என்.ஐ.ஏ. அலுவலகத்திற்கு வருமாறு கூறிவிட்டு புறப்பட்டு சென்றனர்.
என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட வாலிபரின் வீட்டின் முன் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதனால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
- பா.ஜ.க.வின் அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் முன்னிலையில் விவாதம் நடந்து வருகிறது.
- விவாதத்தில் கருத்துக்களை சொல்ல யாருக்கும் எந்த கட்டுப்பாடும் கிடையாது.
சென்னை:
தமிழ்நாட்டில் பா.ஜ.க.- அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளது. இந்த சூழ்நிலையில் கட்சியின் அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் தமிழக பா.ஜ.க. நிர்வாகிகளுடன் ஆலோசிப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பா.ஜ.க.வில் இருப்பவர்களுக்கு அரசியல், சமூக ரீதியாக பிரச்சனைகளை எதிர்கொள்வது எப்படி? கட்சியை பலப்படுத்தி சூழ்நிலைகளுக்கு ஏற்ப அரசியல் களத்தை சந்திப்பது எப்படி? என்பது உள்பட பல்வேறு செயல்கள் பற்றி விவாதித்து ஆலோசனைகள் வழங்கப்படும்.
சிந்தன்பைடெக் (சிந்தனை அரங்கம்) என்ற பெயரில் இந்த நிகழ்ச்சியை ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் நடத்துவார்கள். ஆண்டுக்கு ஒரு முறையாவது நடத்தப்படும் இந்த நிகழ்ச்சி கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டில் நடைபெறவில்லை.
இந்த நிலையில் இந்த சிந்தனை அமர்வு நிகழ்ச்சி தமிழ்நாட்டில் இன்று நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சி மாமல்லபுரத்தில் உள்ள அரங்கத்தில் இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது. பா.ஜ.க.வின் அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் முன்னிலையில் விவாதம் நடந்து வருகிறது.
கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய மந்திரி எல்.முருகன், அண்ணாமலை, மாநில பொறுப்பாளர்கள் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி, பொன்.ராதாகிருஷ்ணன், டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜா, அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகன், கரு.நாகராஜன் மற்றும் பா.ஜ.க. மாநில துணை தலைவர்கள், செயலாளர்கள், 7 அணிகளின் தலைவர்கள், அணி பிரிவுகளின் பொறுப்பாளர்கள் 25 பேர், முக்கிய நிர்வாகிகள் என சுமார் 70 பேர் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தார்கள். கூட்டம் நடைபெறும் அரங்குக்குள் செல்போன் கொண்டு செல்ல அனுமதி இல்லை. காலை தொடங்கிய இந்த கூட்டம் இரவு வரை நடக்கிறது.
இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் சூழல், கூட்டணிக்குள் ஏற்படும் குழப்பங்கள், மக்கள் மனநிலை அமைப்பு ரீதியாக கட்சியின் நிலை, தேர்தல் பிரசாரத்தை எவ்வாறு முன்னெடுப்பது, தேர்தல் வெற்றிக்கான வழி முறைகள் மற்றும் கூட்டணியை வலுப்படுத்துவது என்பது உள்பட 10-க்கும் மேற்பட்ட தலைப்புகளில் மூத்த தலைவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கருத்துக்களை முன் வைத்தார்கள்.
ஒவ்வொருவரும் பேசி முடித்ததும் அதன் மீது விவாதம் நடந்தது. இந்த விவாதத்தில் கருத்துக்களை சொல்ல யாருக்கும் எந்த கட்டுப்பாடும் கிடையாது.

இந்த அமர்வின் போது அவ்வப்போது தேனீர் இடைவேளை மட்டும் விடப்படும். இந்த கூட்டத்தில் அமைப்பு ரீதியாக கட்சி வலுப்படாமல் இருப்பதற்கு நிர்வாகிகளிடையே நிலவும் கோஷ்டி பூசல்கள், கட்சியை விட தங்கள் சுயநலத்தின் மீது கொண்டுள்ள அக்கறை உள்ளிட்ட சில முக்கிய காரணங்கள் உள்ளன. இதுபற்றி எடுத்துச் சொல்லப்போவதாக கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
நாள் முழுவதும் அனைவரது கருத்துக்கள், சிந்தனைகள், ஒவ்வொரு பிரச்சனைக்கும் அவர்கள் முன்வைக்கும் ஆலோசனைகள், எதிர்பார்ப்பது பற்றிய விவரங்களை பி.எல்.சந்தோஷ் கேட்கிறார்.
நிறைவாக மாலை 6 மணியளவில் அவர் ஆலோசனை வழங்குகிறார். அப்போது அரசியல் ரீதியாக கட்சியினர் என்ன மாதிரி நடந்து கொள்ள வேண்டும். கட்சி அமைப்பை பலப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், கட்சி கட்டுப்பாடு, தேர்தல் நேரத்தில் கூட்டணிக்கு இணக்கமாக செயல்படுவது உள்ளிட்ட விஷயங்களில் பா.ஜ.க.வினர் நடந்து கொள்ள வேண்டிய விதங்கள் பற்றி எடுத்துரைப்பார் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியில் குழப்பங்கள் நடந்து வரும் நிலையில் இன்று இந்த கூட்டம் நடப்பதால் கட்சி மேலிடத்தின் முடிவு பற்றியும் அவர் விரிவாக விளக்கம் அளிப்பார் என்று கூறப்படுகிறது.






