என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திருப்பூரில் விஜய் பிரசாரம் செய்யும் இடம் தேர்வு பணிகள் தீவிரம்
- திருப்பூரில் அடுத்த மாதம் 5-ந்தேதி விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
- போலீசார் சார்பில் பாண்டியன் நகரில் பிரசாரம் செய்ய அனுமதி வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.
திருப்பூர்:
த.வெ.க. தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார். கடந்த 13-ந்தேதி திருச்சியில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கிய விஜய், அன்றைய தினம் திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 3 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டிருந்தார். ஆனால், வழியெங்கும் அதிகளவில் தொண்டர்கள் திரண்டதால், குறிப்பிட்ட நேரத்துக்குள் அனுமதி வழங்கப்பட்ட இடங்களுக்கு விஜய்யால் செல்ல முடியவில்லை.
இதனால், திருச்சி, அரியலூரில் மட்டும் மக்கள் சந்திப்பை நடத்திவிட்டு, பெரம்பலூர் செல்லாமல், விஜய் சென்னை திரும்பினார். இந்நிலையில் திருப்பூரில் அடுத்த மாதம்(அக்டோபர்) 5-ந்தேதி விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
இதற்காக, திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பாலமுருகன் தலைமையில் தவெக., நிர்வாகிகள் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து அனுமதி கோரி மனு அளித்தனர்.
அக்டோபர் 5-ந்தேதி திருப்பூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் விஜய் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளை ஒருங்கிணைத்து ஏதாவது ஒரு இடத்தில் பிரசாரம் செய்ய உள்ளார். பிரசாரம் செய்வதற்காக திருப்பூர் மாநகரில் சின்னக்கரை, பாண்டியன் நகர், அவினாசி, பல்லடம் ஆகிய 4 இடங்களை த.வெ.க. நிர்வாகிகள் தேர்ந்தெடுத்துள்ளனர்.
இதில் ஏதாவது ஒரு இடத்தில் பிரசாரம் செய்வார் என தெரிகிறது. போலீசார் சார்பில் பாண்டியன் நகரில் பிரசாரம் செய்ய அனுமதி வழங்குவதாக தெரிவித்துள்ளனர். இருப்பினும் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் நேரில் வந்து பார்வையிட்டு அவர் கூறும் இடத்தில் விஜய் பிரசாரம் செய்ய போலீசாரிடம் அனுமதி கேட்க உள்ளனர்.
மனு கொடுக்கும் நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகர் மாவட்ட இணை செயலாளர் சுகுமார், துணை செயலாளர் குத்புதீன், பொருளாளர் வெள்ளைச்சாமி உள்பட பலர் உடனிருந்தனர்.






