என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தமிழ்நாடு தனித்தன்மையான மாநிலம்.
    • தமிழன் என்று கூறுவதற்கு தாய்மொழி தமிழ் உள்ளது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் பள்ளி, கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் மாநில அளவிலான அடைவுத்திறன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஆர்.டி.இ. நிதி அதிக பங்கீடு மாநில அரசுதான் கொடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகிறார். 60:40 என்ற விகிதாசாரம் இருக்கும்போது மாநில அரசு எப்படி முழுமையாக நிதி கொடுக்க முடியும்?

    அவர் சொல்வது அரைகுறையாக கொடுத்து நிறுத்துங்கள் என்பது போல உள்ளது. ஆர்.டி.இ. ஆக்ட் என்பது உச்சநீதிமன்றத்தால் கொண்டு வரப்பட்டு மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஏழை மாணவர்களும் தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் படிக்க வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்பட்டது. இதில் யாரும் தலையிட முடியாது. ஒரு அரசாங்கம் வருடம் தோறும் அதற்கான நிதியை மட்டுமே வெளியிட வேண்டும். ஆனால் மத்திய அரசு உச்சநீதிமன்றம் சொல்வதையே கேட்காமல் உள்ளது. மாணவர்களின் நலன் கருதி உடனடியாக அந்த பணத்தை மத்திய அரசு விடுவிக்க வேண்டும். ஒரு வருடத்தில் 1 லட்சம் மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் கல்வி பயின்று வருகின்றனர். மத்திய அரசின் செயல்பாடுகளால் அந்த இணையதளத்தையே திறக்க முடியாத நிலை உள்ளது.

    இந்தியாவில் எல்லா மாநிலங்களும் ஏற்றுக் கொண்டதை தமிழகம் ஏற்றுக்கொள்ளவில்லை என்று மத்திய அமைச்சர் தெரிவிக்கிறார். தமிழ்நாடு தனித்தன்மையான மாநிலம். இங்கு இரு மொழிக் கொள்கை போதுமானது. அண்ணா அந்த காலத்தில் இருந்தே கூறி வருகிறார். தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளை வைத்து நம் திறமைகளை வளர்த்துக் கொள்ள முடியும். மத்திய அரசு சொல்வதைப் போல 3 மொழிகள் மட்டுமின்றி 22 ெமாழிகளையும் கற்றுக் கொள்ள வேண்டும் என நாங்களும் கூறுகிறோம். ஆனால் அதில் கட்டாயம் இருக்கக்கூடாது. விருப்பத்தின் அடிப்படையில் கற்றுக்கொள்ள வேண்டும். தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களில் நல்ல மதிப்பெண்கள் பெற்று விட்டு 3-வது மொழியில் தேர்ச்சி பெறவில்லை என்றால் மீண்டும் அதே வகுப்பில் படிக்க கூறுவது எந்தவிதத்தில் நியாயம்.

    2 இட்லி போதும் என்கிறோம். ஆனால் 3வது இட்லியை வாயில் திணித்தால் குழந்தைகள் வாந்திதான் எடுப்பார்கள். எங்களுக்கு தேவையென்றால் நாங்கள் படிக்கிறோம். எங்களுக்கு அறிவுதான் முக்கியம். உலகம் முழுவதும் எங்கு சென்றாலும் ஒரு செல்போன் போதுமானது. எந்த மொழியில் கேள்வி கேட்க வேண்டும் என்றாலும் கூகுள் மூலம் மொழி பெயர்ப்பு செய்து பூர்த்தி செய்து கொள்ளலாம். தமிழ் என்பது அடையாளம். ஆங்கிலம் என்பது வாய்ப்புகள். தமிழன் என்று கூறுவதற்கு தாய்மொழி தமிழ் உள்ளது.

    உலகம் முழுவதும் எனது கருத்தை கொண்டு செல்வதற்கு ஆங்கிலம் போதுமானதாக உள்ளது என நாங்கள் கூறுகிறோம். ஆனால் மத்திய அரசு 3-வது மொழி என கூறி ஹிந்தி மற்றும் சமஸ்கிருதத்தை திணிக்க பார்க்கின்றனர். சமஸ்கிருதம் வந்தால் பிற்போக்கு சிந்தனைகள் வந்து விடும். புராண கதைகளை எடுத்து கூறி மாணவர்களை அறிவியல் சார்ந்து சிந்திக்க விடாமல் மழுங்கடிக்கும் பணிகளை அவர்கள் செய்வார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அஜித்குமாரின் அடுத்த திரைப்படமான ஏ.கே.65 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.
    • 'அஜித்குமார் ரேஸிங்' என்ற பந்தய நிறுவனத்தை அஜித் உருவாக்கியுள்ளார்.

    சென்னை:

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு கார் ரேசில் கவனம் செலுத்தி வருகிறார் .

    அஜித்குமாரின் அடுத்த திரைப்படமான ஏ.கே.65 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.

    கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கில் தீவிரம் காட்டி வரும் அஜித்குமார், 'அஜித்குமார் ரேஸிங்' என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இந்தக் கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளது.

    இந்நிலையில், நடிகர் அஜித்குமார் ஸ்பெயினில் நடைபெற உள்ள கார் பந்தயங்களில் கலந்துகொள்ள உள்ளார். அந்த பந்தயங்களின் அட்டவணை விவரம் வருமாறு:

    செப்டம்பர் 27–28: க்ரெவென்டிக் 24H

    செப்டம்பர் 30– அக்டோபர் 1: LMP3 சோதனை

    அக்டோபர் 6: மஹிந்திரா பார்முலா E சோதனை:

    அக்டோபர் 11–12: GT4 ஐரோப்பிய தொடர்

    என மொத்தம் 4 கார் பந்தயங்களில் பங்கேற்க உள்ளார் என அஜித்குமார் ரேசிங் நிறுவனம் அறிவித்துள்ளது.

    • வாகன வருகை நிபந்தனைகளால் ஊட்டி, குன்னூர் பகுதி வியாபாரிகள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.
    • சுற்றுலாவுக்கு முன்னுரிமை கொடுக்கும் அரசாக அ.தி.மு.க அரசு இருந்தது.

    குன்னூர்:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இன்றும், நாளையும் அவர் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்கிறார்.

    குன்னூர் பஸ் நிலையம் அருகே இன்று காலை திரண்டு இருந்த பொதுமக்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அவர் கூறியதாவது:-

    தி.மு.க ஆட்சியில் விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து விட்டது. அரிசி, பருப்பு, எண்ணெய் என எல்லா பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. தி.மு.க. அரசு, ஏழை, எளிய மக்களை பற்றியோ, விலைவாசி உயர்வை பற்றியோ கவலைப்படவில்லை. ஏழை மக்களை பற்றி கவலைப்படாத ஒரே முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் உள்ளார். நிர்வாக திறமையற்ற முதலமைச்சராக இருக்கிறார்.

    வாகன வருகை நிபந்தனைகளால் ஊட்டி, குன்னூர் பகுதி வியாபாரிகள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் நீதிமன்றத்தை நாடி, வியாபாரிகளின் நிலைமையை எடுத்து சொல்லி, வாகன நிபந்தனைகளை நீக்க நடவடிக்கை எடுப்போம்.

    சுற்றுலாவுக்கு முன்னுரிமை கொடுக்கும் அரசாக அ.தி.மு.க அரசு இருந்தது. ஆனால் தி.மு.க அதை கண்டுகொள்ளவில்லை. தி.மு.க ஆட்சியில் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் போதைப்பொருள் விற்பனை அமோகமாக நடக்கிறது. 2026-ல் அ.தி.மு.க ஆட்சி அமைந்ததும் தமிழகம் போதை இல்லாத தமிழகமாக மாற்றப்படும்.

    நகராட்சி பகுதிகளில் சொத்து வரி 100 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் நகராட்சி பகுதிகளில் குடிநீர் வரி, வீட்டு வரி பல மடங்கு உயர்த்தப்பட்டு விட்டது. கொள்ளையடிக்கும அரசாக இந்த தி.மு.க அரசு உள்ளது. தி.மு.க ஆட்சியில் வேலை வாய்ப்புகள் குறைந்து விட்டது. ஆனால் செலவுகள் அதிகரித்து விட்டது.

    தி.மு.க. ஆட்சியில் ஊழல் இல்லாத துறையே இல்லை. எல்லா துறைகளிலும் ஊழல் நடக்கிறது. தமிழ்நாட்டில் 6 ஆயிரம் டாஸ்மாக் கடைகள் உள்ளன. 6 ஆயிரம் டாஸ்மாக் கடைகளிலும் ஒருநாளைக்கு கிட்டத்தட்ட 1½ கோடி பாட்டில்கள் விற்பனையாகிறது. ஒரு பாட்டிலுக்கு ரூ.10 அதிகமாக வசூல் செய்கின்றனர்.

    அப்படி கூடுதலாக வசூலிப்பதன் மூலம் ஒரு நாளைக்கு ரூ.15 கோடி டாஸ்மாக் கடை மூலமாக வருமானம் வருகிறது. ஒரு மாதத்துக்கு 450 கோடி ரூபாய் வருமானம் வருகிறது. வருடத்துக்கு 5,400 கோடி ரூபாய் வருகிறது. கடந்த நான்கரை ஆண்டுகளில் 22 ஆயிரம் கோடி ரூபாய் டாஸ்மாக் கடைகளில் முறைகேடு நடந்துள்ளது.

    10 ரூபாய் வாங்குவது உண்மை தான் என அந்த துறையின் அமைச்சரே சொல்லிவிட்டார். இந்த பணம் எங்கு போகிறது. எந்த கணக்கில் இருக்கிறது. எத்தனை பாட்டில் திரும்ப பெற்றீர்கள். எவ்வளவு வசூல் வந்தது. இது எதற்கும் அவர்களிடம் கணக்கு இல்லை.

    அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் டாஸ்மாக் முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டு, இதில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவருக்கும் சட்டப்படி தண்டனை பெற்று தருவோம். அ.தி.மு.க அரசு கொண்டு வந்த நல்ல திட்டங்களை எல்லாம் தி.மு.க நிறுத்தி விட்டது. அ.தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் தாலிக்கு தங்கம் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும்.

    அ.தி.மு.க அலுவலகம், டெல்லியில் உள்ள உள்துறை அமைச்சர் வீட்டில் இருப்பதாக கனிமொழி எம்.பி கூறுகிறார். அவர் கனவு கண்டாரோ என்னவோ தெரியவில்லை. அ.தி.மு.க அலுவலகம் சென்னையில் தான் உள்ளது. வேண்டும் என்றால் வந்து பார்த்து கொள்ளுங்கள். நீங்களும் ஆள் வைத்து உடைத்து பார்த்தீர்கள். ஆள் வைத்து அ.தி.மு.க கட்டிடத்தை நொறுக்கி பார்த்தீர்கள். ஆனால் நொறுக்க முடியவில்லை. அ.தி.மு.க. அலுவலகத்தை உடைக்க தி.மு.க மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் முறியடிக்கப்பட்டது.

    நீங்கள் அ.தி.மு.க.வை உடைக்க, அ.தி.மு.க.வை பிளக்க எத்தனையோ சதி செய்து பார்த்தீர்கள். எத்தனையோ பேரை கொம்பு சீவி பார்த்தீர்கள். ஆனால் அது அத்தனையையும் எங்களது தொண்டர்கள் முறியடித்தனர்.

    அ.தி.மு.க உழைப்பால் உயர்ந்த கட்சி. தொண்டர்களால் உருவான கட்சி. முதலமைச்சர் ஸ்டாலின் நீங்கள் எத்தனை அவதாரம் எடுத்து வந்தாலும் அதி.மு.கவை அசைக்கவோ, ஆட்டவோ முடியாது. அத்தனை தொண்டர்களும் அ.தி.மு.கவை தாங்கி பிடித்து கொண்டுள்ளனர்.

    அ.தி.மு.கவுக்கு எவ்வளவோ சோதனையை ஏற்படுத்தி கொண்டிருக்கிறீர்கள். அவை அத்தனையும் தொண்டர்களால் தூள்தூளாக்கப்படும்.

    இதே நேரத்தில் தி.மு.க.வுக்கு சோதனை வந்தபோது, தி.மு.கவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் உங்கள் கட்சி அலுவலகத்தை கைப்பற்ற நினைத்த போது அதனை காப்பாற்றி கொடுத்தவர் ஜெயலலிதா. தி.மு.க 2 ஆக போனது. கருணாநிதி தடுமாறி கொண்டிருந்தார். அப்போது பிரிந்து சென்றவர்கள் தி.மு.க அலுவலகத்தை கைப்பற்ற முயன்றனர். அதனை காப்பாற்றி கொடுத்தது அ.தி.மு.க தான் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

    அ.தி.மு.கவுக்கு எப்போதும் மற்றவர்களுக்கு உதவி செய்து தான் பழக்கம். தி.மு.க.வுக்கும், கூட்டணி கட்சிகளுக்கும் மக்களுக்கு உதவி செய்த வரலாறு எப்போதும் கிடையாது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பாராளுமன்றம் கூடும் நாட்கள் தவிர வாரத்தில் குறைந்தது 4 நாட்கள் தொகுதியில் தங்கி மக்கள் பணியாற்ற வேண்டும்.
    • 15 நாட்களுக்கு ஒருமுறை தொகுதியில் தாங்கள் ஆற்றிய பணிகள் குறித்து அறிக்கை அளிக்க வேண்டும்.

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க.வை சேர்ந்த எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எம்.பி.க்களுக்கு சில உத்தரவுகளை பிறப்பித்தார். அதில்,

    * பாராளுமன்றம் கூடும் நாட்கள் தவிர வாரத்தில் குறைந்தது 4 நாட்கள் தொகுதியில் தங்கி மக்கள் பணியாற்ற வேண்டும்.

    * மக்களை சந்தித்து அவர்களின் தேவைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    * 15 நாட்களுக்கு ஒருமுறை தொகுதியில் தாங்கள் ஆற்றிய பணிகள் குறித்து அறிக்கை அளிக்க வேண்டும்.

    * தங்கள் தொகுதிகளில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்களில் கலந்துகொள்ள வேண்டும். முகாம்களில் கலந்துகொண்டு மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.

    * தகுதியுள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

    * சட்டசபை தேர்தலில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களின் வெற்றிக்கு கடுமையாக பணியாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தென்காசியில் தனியார் மென்பொருள் நிறுவன வளாகத்தில் உள்ள குடியிருப்பில் ராம்நாத் கோவிந்த் தங்கினார்.
    • கோவிந்தபேரியில் இருந்து காரில் புறப்பட்ட அவர் கடையம், மத்தளம்பாறை வழியாக தென்காசிக்கு சென்றடைந்தார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார்.

    அங்கிருந்து தென்காசியில் தனியார் மென்பொருள் நிறுவன வளாகத்தில் உள்ள குடியிருப்பில் ராம்நாத் கோவிந்த் தங்கினார். அவர் இன்று காலை தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

    இதற்காக காலை கோவிந்தபேரியில் இருந்து காரில் புறப்பட்ட அவர் கடையம், மத்தளம்பாறை வழியாக தென்காசிக்கு சென்றடைந்தார். கோவில் முன்பு முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்துக்கு தென்காசி மாவட்ட கலெக்டர் கமல்கிஷோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

    பின்னர் காசி விஸ்வநாதர் சன்னதியில் தரிசனம் செய்தார். அப்போது அவருக்கு பட்டர்கள் வேத மந்திரங்கள் முழங்க அறங்காவலர் குழு தலைவர் பாலகிருஷ்ணன், கோவில் செயல் அலுவலர் பொன்னி ஆகியோர் தலைமையில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.

    சாமி தரிசனத்திற்கு பிறகு அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அப்போது அவருடன் தென்காசி மாவட்ட பா.ஜ.க. தலைவர் ஆனந்தன் அய்யாசாமி, ஷோகோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு மற்றும் அரசு அதிகாரிகள், அரசியல் கட்சியினர் உடனிருந்தனர். 

    • மணிகண்டன் நேற்று வேலைக்காக தனது மோட்டார் சைக்கிளில் திருச்செந்தூரை நோக்கி நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார்.
    • கொலை குறித்து போலீசார் அங்குள்ள சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றினர்.

    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஆலந்தலை சுனாமி நகர் குடியிருப்பை சேர்ந்த முருகன் மகன் மணிகண்டன் (வயது 24). எலக்ட்ரீசியன்.

    இவருக்கும் திருச்செந்தூரை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் இடையே காதல் இருந்துள்ளது. இருவரும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தனது மகளை காணவில்லை என சிறுமியின் தந்தை கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் அவரது மகளை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். இது தொடர்பாக இரு வீட்டாருக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது.

    இந்நிலையில் மணிகண்டன் நேற்று வேலைக்காக தனது மோட்டார் சைக்கிளில் திருச்செந்தூரை நோக்கி நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் அவரை தடுத்து நிறுத்தி வெட்ட முயன்றுள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உயிருக்கு பயந்து வண்டியை கீழே போட்டு விட்டு அருகே இருந்த மரக்கடைக்குள் புகுந்துள்ளார்.

    ஆனாலும் அந்த கும்பல் விடாது துரத்தி மரக்கடைக்குள் சென்று மணிகண்டனை ஓட ஓட சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் மணிகண்டன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.

    இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த திருச்செந்தூர் டி.எஸ்.பி. மகேஷ்குமார் மற்றும் போலீசார் உயிரிழந்த மணிகண்டன் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கொலை குறித்து போலீசார் அங்குள்ள சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றினர்.

    இக்கொலை தொடர்பாக சிறுமியின் தந்தை நட்டார், உறவினர் கணேசன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து காதல் விவகாரத்தில் இளைஞரை வெட்டி படுகொலை செய்ததாக சிறுமியின் தந்தை நட்டார் (48), தம்பி உட்பட 4 பேரை தாலுகா போலீசார் நேற்று இரவு கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் கருத்து கேட்டறிந்து கலந்துரையாடினார்.
    • நமது இந்தியாவும் வளர்ந்து வருகிறது என தெரிவித்தார்.

    கோவை:

    ஜி.எஸ்.டி. வரி குறைப்பு நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்கள், உணவு பொருட்கள் மற்றும் டி.வி, ஏசி உள்பட பல்வேறு பொருட்களின் விலையும் குறைந்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஜி.எஸ்.டி. வரி குறைப்பை தொடர்ந்து கோவையில் உள்ள டீக்கடை, உணவு பொருள் விற்பனை செய்யும் நிறுவனங்களில் பொருட்கள் விலை குறைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. அங்கு நேரில் சென்று வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் கருத்து கேட்டறிந்து கலந்துரையாடினார்.

    காந்திபுரத்தில் உள்ள ஒரு இனிப்பு கடைக்கு சென்ற வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., ஜி.எஸ்.டி. வரி குறைப்புக்கு பிறகு அங்கு விற்பனை செய்யப்படும் பொருட்களின் விலை குறித்து ஊழியர்களிடம் கேட்டறிந்தார்.

    அப்போது கடையின் ஊழியர், முன்பு ஒரு கிலோ மைசூர் பாகு ரூ.420-க்கு விற்பனையானது. ஜி.எஸ்.டி குறைப்புக்கு பிறகு ரூ.380-க்கு விற்பனையாகி வருகிறது.

    சிப்ஸ் ஒரு கிலோ ரூ.640-க்கு விற்பனையாகியது. தற்போது ஒரு கிலோ சிப்ஸ் ரூ.540-க்கு விற்பனையானது. விலை குறைந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது.

    வாடிக்கையாளர்களும் சந்தோஷமாக பொருட்கள் வாங்கி செல்கின்றனர். நாங்களும் மன நிறைவோடு இருக்கிறோம். 2 பொருட்கள் வாங்கிய வாடிக்கையாளர்கள் தற்போது விலை குறைந்ததை தொடர்ந்து 3 பொருட்கள் வாங்கி செல்கின்றனர் என்றார்.

    அப்போது வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. இதற்கு நடவடிக்கை எடுத்தது யார் தெரியுமா? என கடையின் ஊழியரிடம் கேட்டார். அதற்கு அவர் பிரதமர் மோடி என்றார். உடனே அவருக்கு நன்றி கூறுங்கள் என அவர் தெரிவித்தார். கடை ஊழியரும் நிச்சயமாக பிரதமருக்கு நன்றி. பிரதமர் வந்த பிறகு நிறைய முயற்சிகள் எடுத்து வருகிறார். நமது இந்தியாவும் வளர்ந்து வருகிறது என தெரிவித்தார்.

    அதன்பின் கடைக்கு வந்த வாடிக்கையாளர்களிடம் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கருத்து கேட்டறிந்தார். அப்போது ஒரு வாடிக்கையாளர், நான் மோட்டார் சைக்கிள் வாங்க வாகன ஷோரூமுக்கு சென்றேன். அவர்கள் இன்னும் சில நாட்களில் ஜி.எஸ்.டி. வரி குறைந்துவிடும். அதன்பின்னர் வந்து எடுத்து கொள்ளுங்கள் என்றனர். மேலும் இந்த கடையில் பொருட்கள் வாங்கும் போது, நேற்றை விட பொருட்கள் விலை குறைத்து விற்கப்படுவதகவும் தெரிவித்தார்.

    இதையடுத்து வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கூறும்போது, பிரதமரின் ஒரே நோக்கம் விலை குறைப்பு என்பது சாதாரண மக்களிடம் சென்றடைய வேண்டும் . எவ்வளவு குறைக்கப்பட்டு உள்ளது. 5 மற்றும் 15 சதவீதம் என்று குறைந்துள்ளது. அது மக்களுக்கு தெரியவேண்டும் என அவர் தெரிவித்தார். 

    • தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. உயர்மட்ட ஆலோசனை குழு கூட்டம் நடைபெற்றது.
    • பா.ஜ.க. அல்லது யாருடன் கூட்டணி அமைப்பது சம்பந்தமாகவும் இந்தக் கூட்டத்தில் கருத்து கேட்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    திண்டிவனம்:

    பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் அவரது மகன் அன்புமணியை கடந்த சில தினங்களுக்கு முன்பு கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கி உத்தரவிட்டார். இந்த நிலையில் பா.ம.க. தலைவராக அன்புமணியை தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்து மாம்பழம் சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கி உள்ளது என அன்புமணி தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.

    இது உண்மைக்கு மாறானது. அவர்கள் போலியான முகவரிகள் கொடுத்து உள்ளனர். அவர்களுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கவில்லை என டாக்டர் ராமதாஸ் தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.

    இது சம்பந்தமாக டாக்டர் ராமதாஸ் தரப்பினர் தேர்தல் ஆணையத்தில் பல்வேறு ஆவணங்களையும்அளித்தனர். இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தேர்தல் ஆணையத்தை சட்டரீதியாக அணுகுவது சம்பந்தமாக தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. உயர்மட்ட ஆலோசனை குழு கூட்டம் நடைபெற்றது. அதேபோல நேற்றும் முன்னாள் நீதிபதி அருள், ஜி.கே. மணி ஆகியோர் டாக்டர் ராமதாசுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

    அதனை தொடர்ந்து இன்று பா.ம.க.மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் டாக்டர் ராமதாஸ் தலைமையில் தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்று வருகிறது. இதில் அன்புமணியை கட்சியிலிருந்து அடிப்படை உறுப்பினர் பதவிலிருந்து நீக்கியது சம்பந்தமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க டாக்டர் ராமதாஸ் தரப்பினர் முடிவு செய்துள்ளனர்.

    அதேபோல பா.ஜ.க. அல்லது யாருடன் கூட்டணி அமைப்பது சம்பந்தமாகவும் இந்தக் கூட்டத்தில் கருத்து கேட்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே. மணி, அருள் எம்.எல்.ஏ., தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், டாக்டர் ராமதாசின் மகள் ஸ்ரீ காந்தி மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நாளை (புதன்கிழமை) வன்னியர் சங்க மாவட்ட செயலாளர், மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • கூடுதல் செலவிற்கான மானிய கோரிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும்.
    • எத்தனை நாட்கள் சட்டமன்றம் என்பது அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.

    சென்னை :

    சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அக்டோபர் மாதம் 14-ந்தேதி சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கும். அன்றைய தினம் 2025-2026-ம் ஆண்டு கூடுதல் செலவிற்கான மானிய கோரிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும்.

    எத்தனை நாட்கள் சட்டமன்றம் என்பது அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றார். 

    • ஓட்டுநர் இல்லாத 32 மெட்ரோ ரெயில்கள் உட்பட மொத்தம் 138 ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.
    • மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையே 6 பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரெயில் வரும் 2027 மார்ச் மாதத்தில் இயக்கப்படும்.

    சென்னை மெட்ரோ 2-ம் கட்ட திட்டம் 116 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் ரூ.63,246 கோடி செலவில் நடைபெற்று வருகிறது. மாதவரம் - சிப்காட், பூந்தமல்லி - லைட் ஹவுஸ், மற்றும் மாதவரம் - மணப்பாக்கம் ஆகிய வழித்தடங்களில் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இப்பணிகள் அனைத்தும் வரும் 2028-ல் முடித்து, மெட்ரோ ரெயில் சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    ஓட்டுநர் இல்லாத 32 மெட்ரோ ரெயில்கள் உட்பட மொத்தம் 138 ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த ரெயில்களை நிறுத்தி பராமரிக்க மாதவரம், பூந்தமல்லி ஆகிய இடங்களில் மெட்ரோ ரெயில் பணிமனை அமைக்கும் பணி நடைபெறுகிறது.

    இந்நிலையில் பூவிருந்தவல்லி - போரூர் இடையே 6 பெட்டிகள் கொண்ட ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரெயில் வரும் டிசம்பர் மாதம் பயன்பாட்டிற்கு வருகிறது.

    மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையே 6 பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரெயில் வரும் 2027 மார்ச் மாதத்தில் இயக்கப்படும்.

    வரும் 2026 ஜூனில் போரூர் - கோடம்பாக்கம் இடையே, கோயம்பேடு - நந்தம்பாக்கம் இடையே ரெயில் சேவை இயக்கப்படும். மெட்ரோ ரெயில் பாதையின் 2-ம் கட்டப்பணிகள் இறுதி நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஆயிரக்கணக்கான அ.தி.மு.க.வினர் திரண்டு வந்து எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
    • நேற்று நள்ளிரவே செங்கோட்டையன் சென்னை சென்று சென்று விட்டார்.

    கோபி:

    அ.தி.மு.க பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் எழுச்சி பயணம் மேற்கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    அதன்படி நீலகிரி மாவட்டத்தில் இன்று மாலை நடைபெறும் பிரசாரத்தில் கலந்து கொள்வதற்காக இன்று காலை 6 மணி அளவில் சேலத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து எடப்பாடி பழனிசாமி காரில் கிளம்பினார்.

    ஈரோடு மாவட்டம் பவானி வழியாக இன்று காலை 7 மணி அளவில் கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையம் அருகே வந்தார்.

    எடப்பாடி பழனிசாமிக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கும் வகையில் கவுந்தப்பாடியில் இருந்து கோபி செட்டிபாளையம் பஸ் நிலையம் வரை சாலையின் இருபுறம் அ.தி.மு.க கட்சி கொடிகள் கட்டப்பட்டிருந்தன.

    ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க பொறுப்பாளர் செல்வராஜ் எம்.எல்.ஏ தலைமையில், ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கே.சி. கருப்பணன் எம்.எல்.ஏ, ஜெயக்குமார் எம்.எல்.ஏ, கோபி நகரச் செயலாளர் பிரிணியோ கணேஷ் முன்னிலையில் ஆயிரக்கணக்கான அ.தி.மு.க.வினர் திரண்டு வந்து எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    கூட்டத்தை பார்த்து உற்சாகமடைந்த எடப்பாடி பழனிசாமி காரை விட்டு கீழே இறங்கி நிர்வாகிகள், தொண்டர்கள் வரவேற்பை ஏற்றுக்கொண்டார். அவருக்கு சால்வை அணிவிக்கப்பட்டது. காரில் இருந்தவாறு தொண்டர்களின் நோக்கி கையை அசைத்தார். அப்போது கூடி இருந்தவர்கள் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்க என கோஷம் எழுப்பினர்.

    முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தொகுதியில் ஆயிரக்கணக்கான அ.தி.மு.க.வினர் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்ததால் எடப்பாடி பழனிசாமி உற்சாகமாக காணப்பட்டார்.

    சுமார் 30 நிமிடமாக கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையத்தில் இருந்த எடப்பாடி பழனிசாமி தொண்டர்களின் வரவேற்பை ஏற்று அதன் பிறகு அங்கிருந்து காரில் சத்தியமங்கலம் கிளம்பி சென்றார். அங்கும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அ.தி.மு.க ஒருங்கிணைப்பை வலியுறுத்தி எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டார். இதையடுத்து உடனடியாக செங்கோட்டையன் வசித்து வந்த கட்சி பொறுப்புகளை பறித்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

    அப்போது அ.தி.மு.க ஒருங்கிணைக்காமல் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தில் பங்கேற்க மாட்டேன் என செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் கோபி செட்டிபாளையம் வரும் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சியை புறக்கணிக்கும் வகையில் நேற்று நள்ளிரவே செங்கோட்டையன் சென்னை சென்று சென்று விட்டார்.

    ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி முதல் முதலாக கோவை மாவட்டத்தில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரசார பயணத்தை தொடங்கும் போது கோபிசெட்டிபாளையம் வழியாக சென்றார். அப்போதும் செங்கோட்டையன் நிகழ்ச்சியில் பங்கேற்காமல் புறக்கணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
    • நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    ஒகேனக்கல்:

    கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 3-வது நாளாக தொடர்ந்து 9,500 கனஅடியாக நீடித்து வந்தது.

    இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    இதனால் சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.

    மேலும் அவர்கள் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர். பின்னர் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.

    சுற்றுலா பயணிகள் மீன் சாப்பாடு வாங்கி கொண்டு பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

    நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    ×