என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ராமதாஸ் தலைமையில் பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: கூட்டணி குறித்து கருத்துகேட்பு
- தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. உயர்மட்ட ஆலோசனை குழு கூட்டம் நடைபெற்றது.
- பா.ஜ.க. அல்லது யாருடன் கூட்டணி அமைப்பது சம்பந்தமாகவும் இந்தக் கூட்டத்தில் கருத்து கேட்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
திண்டிவனம்:
பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் அவரது மகன் அன்புமணியை கடந்த சில தினங்களுக்கு முன்பு கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கி உத்தரவிட்டார். இந்த நிலையில் பா.ம.க. தலைவராக அன்புமணியை தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்து மாம்பழம் சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கி உள்ளது என அன்புமணி தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.
இது உண்மைக்கு மாறானது. அவர்கள் போலியான முகவரிகள் கொடுத்து உள்ளனர். அவர்களுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கவில்லை என டாக்டர் ராமதாஸ் தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.
இது சம்பந்தமாக டாக்டர் ராமதாஸ் தரப்பினர் தேர்தல் ஆணையத்தில் பல்வேறு ஆவணங்களையும்அளித்தனர். இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தேர்தல் ஆணையத்தை சட்டரீதியாக அணுகுவது சம்பந்தமாக தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. உயர்மட்ட ஆலோசனை குழு கூட்டம் நடைபெற்றது. அதேபோல நேற்றும் முன்னாள் நீதிபதி அருள், ஜி.கே. மணி ஆகியோர் டாக்டர் ராமதாசுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
அதனை தொடர்ந்து இன்று பா.ம.க.மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் டாக்டர் ராமதாஸ் தலைமையில் தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்று வருகிறது. இதில் அன்புமணியை கட்சியிலிருந்து அடிப்படை உறுப்பினர் பதவிலிருந்து நீக்கியது சம்பந்தமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க டாக்டர் ராமதாஸ் தரப்பினர் முடிவு செய்துள்ளனர்.
அதேபோல பா.ஜ.க. அல்லது யாருடன் கூட்டணி அமைப்பது சம்பந்தமாகவும் இந்தக் கூட்டத்தில் கருத்து கேட்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே. மணி, அருள் எம்.எல்.ஏ., தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், டாக்டர் ராமதாசின் மகள் ஸ்ரீ காந்தி மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நாளை (புதன்கிழமை) வன்னியர் சங்க மாவட்ட செயலாளர், மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.






