என் மலர்
உள்ளூர் செய்திகள்
- இன்று சுவாமிக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு தேரோட்டம் தொடங்கியது.
- தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
கொண்டையம்பாளையம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கொண்டையம்பாளையம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பொன்மலை ஆண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இன்று சுவாமிக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு தேரோட்டம் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். வீதியில் உலா வந்த தேர் வளைவில் திரும்பும் போது, சாலையோரம் இருந்த குழியில் தேரின் சக்கரங்கள் இறங்கியதால் நிலைத்தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தேர் கவிழ்வதை பார்த்த பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதில் அதிர்ஷ்டவசமாக காயம் எதுவும் இன்றி பக்தர்கள் உயிர் தப்பினர். இதனையடுத்து, பொக்லைன் இயந்திரம் மூலம் தேரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தேரோட்டத்தையொட்டி முன்னெச்சரிக்கையாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
- முளைப்பாரி ஊர்வலமானது ஆலாந்துறையை அடுத்துள்ள கள்ளிப்பாளையத்தில் இருந்து தொடங்கியது.
- உள்ளூர் கிராம மக்கள் பாத யாத்திரை வந்த பக்தர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
ஈஷாவில் உள்ள லிங்கபைரவி சந்நிதியில் தைப்பூச திருவிழா இன்று (ஜன 25) மிகச் சிறப்பாக நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பெண் பக்தர்கள் முளைப்பாரிகளை ஊர்வலமாக எடுத்து வந்து லிங்கபைரவி தேவிக்கு அர்ப்பணித்தனர்.
இந்த முளைப்பாரி ஊர்வலமானது ஆலாந்துறையை அடுத்துள்ள கள்ளிப்பாளையத்தில் இருந்து காலை 6.30 மணிக்கு தொடங்கியது. உள்ளூர் கிராம மக்கள், பழங்குடி மக்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த தேவி பக்தர்கள் என ஜாதி, மத பாகுபாடுகள் இன்றி இந்த பாத யாத்திரையில் கலந்து கொண்டனர்.
ஆண்கள் சக்தி கரகம் ஏந்தி முன் செல்ல அவர்களை தொடர்ந்து முளைப்பாரியில் வடிவமைக்கப்பட்ட லிங்கபைரவி திருமேனியின் ரதத்தை பக்தர்கள் ஊர்வலமாக இழுத்து வந்தனர்.
வரும் வழியில் ஆலாந்துறை, இருட்டுப்பள்ளம், செம்மேடு, மலைவாசல் உள்ளிட்ட இடங்களில் உள்ளூர் கிராம மக்கள் பாத யாத்திரை வந்த பக்தர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். மதியம் 12 மணியளவில் இந்த யாத்திரை லிங்கபைரவி சந்நிதிக்கு வந்தடைந்தது. இதை தொடர்ந்து தேவிக்கு அபிஷேகமும் நடைபெற்றது.
புனிதமான தைப்பூச திருநாளில் ஏராளமான பக்தர்கள் தேவிக்கு தானியங்கள், தேங்காய், நெய் தீபம் உள்ளிட்டவற்றை அர்ப்பணித்து தேவியின் அருளை பெற்றனர். மேலும், தைப்பூசத்தை முன்னிட்டு கடந்த 21 நாட்கள் 'பைரவி சாதனா' என்ற பெயரில் விரதம் இருந்த ஆயிரக்கணக்கானோர் தங்களின் விரதத்தை இன்று நிறைவு செய்தனர்.
- வாவத்துறை தேவாலய பங்கு தந்தை லிகோரியஸ், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் ஆகியோரும் உடன் இருந்தனர்.
- விஜய் வசந்துடன் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
கன்னியாகுமரியில் வாவத்துறை புனித ஆரோக்கியநாதர் தேவாலயம் மற்றும் கடல் நடுவே சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை பாறைக்கு அருகாமையில் உள்ள தூண்டில் பாலத்தில், கடல் அலைகள் எப்போதும் வேகமாக மோதும் பகுதியில் உள்ள பாறைகள் அகன்று சிதறி உள்ள நிலையில் வாவத்துறை மீனவ மக்களின் அழைப்பை ஏற்று பாதிக்கப்பட்டுள்ள தூண்டில் பாலம் பகுதிகளை இன்று குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் பார்வையிட்டார்.
வாவத்துறை தேவாலய பங்கு தந்தை லிகோரியஸ், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், அந்த பகுதியின் வார்டு உறுப்பினர் ஆட்லின், முன்னாள் வார்ட் உறுப்பினர் தாமஸ், ஊர் தலைவர் வர்க்கீஸ், மற்றும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- தண்ணீர் சூடான பிறகு மின்சார ஸ்விட்ச் ஆப் செய்தனர்.
- சிறுமி சுபிக்ஷா வாட்டர் ஹீட்டரை கையில் எடுத்தார்.
குளித்தலை:
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே சிவாயம் ஊராட்சிக்கு உட்பட்ட சிவாயம் தெற்குத் தெருவை சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மனைவி பார்வதி. இவர்களது குழந்தைகள் தருண்(வயது 12 ), நித்திஷ்(8), சுபிக்ஷா(6). ரங்கசாமியும், பார்வதியும் கூலி வேலை செய்து குழந்தைகளை படிக்க வைத்து வாழ்ந்து வருகின்றனர்.
சுபிக்ஷா 2-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை வீட்டில் உள்ள குளியலறையில் குளிப்பதற்காக வாட்டர்ஹூட்டரை பக்கெட்டில் வைத்து தண்ணீரை சுட வைத்துள்ளனர்.
தண்ணீர் சூடான பிறகு மின்சார ஸ்விட்ச் ஆப் செய்தனர். இந்நிலையில் சிறுமி சுபிக்ஷா வாட்டர் ஹீட்டரை கையில் எடுத்தார். அப்போது வாட்டர் ஹீட்டரில் இருந்து மின்சாரம் தாக்கியது. இதில் சுபிக்ஷா குளியலறையிலேயே மயங்கி கிடந்தார்.
இதனை பார்த்த பெற்றோர்கள் உடனடியாக குழந்தையை வெளியே எடுத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்து வமனைக்கு கொண்டு வந்து சிகிச்சைக்காக சேர்ந்தனர்.
சோதனை செய்த மருத்துவர் சுபிக்ஷா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். தகவலை குளித்தலை காவல் நிலையத்திற்கு தெரிவித்து குளித்தலை போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனையில் வைத்துள்ளனர். சிறுமி மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- ஊடக செய்தியாளர் மீதான இந்த தாக்குதல் நிகழ்ச்சி மிகவும் கண்டனத்திற்குரியது.
- தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை:
தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்த, தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் நேச பிரபு, நேற்று அடையாளம் தெரியாத சில நபர்களால் தாக்கப்பட்ட செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன்.
ஊடக செய்தியாளர் மீதான இந்த தாக்குதல் நிகழ்ச்சி மிகவும் கண்டனத்திற்குரியது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சம்பவம் நடப்பதற்கு முன்பாக செய்தியாளர் நேச பிரபு காவல் நிலையத்தில் பாதுகாப்பு கோரியதன் மீது உரிய நடவடிக்கை எடுக்காத சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர் உடனடியாக காத்திருப்போர் பட்டியலில் வைக்க ஆணையிடுகிறேன்.
மேலும் இதனை ஒரு சிறப்பு நிகழ்வாக கருதி, மருத்துவ சிகிச்சையில் உள்ள நேச பிரபுவுக்கு, பத்திரிகையாளர் நல வாரியத்திலிருந்து ரூ.3 லட்சம் வழங்கிடவும் ஆணையிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
- முதலமைச்சர் வெளிநாடு சென்று வந்த பிறகு இந்த திட்டத்தை தொடங்கலாம் என திட்டமிட்டுள்ளோம்.
- சென்னை மீஞ்சூரில் 100 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் நன்றாக செயல்பட்டு வருகிறது.
சென்னை:
நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் 2013-ம் ஆண்டில் இருந்து இயங்கி வருகிறது. இங்கிருந்து தினமும் 10 கோடி லிட்டர் நீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு திருவான்மியூர், ஈச்சம்பாக்கம், பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் முதலாவது ஆலைக்கு அருகே ஜெர்மன் நாட்டு நிதியுதவியுடன் ரூ.1516.82 கோடியில் 2-வது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் இப்போது முடிவுறும் தருவாயில் உள்ளது.
இதுகுறித்து அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது:-
நெம்மேலியில் அமைக்கப்பட்டுள்ள 2-வது கடல் நீரை குடிநீராக்கும் திட்டப் பணிகள் முடிந்துள்ளதால் இன்னும் 10 நாட்களில் இதை திறக்க முடிவு செய்துள்ளோம். முதலமைச்சர் வெளிநாடு சென்று வந்த பிறகு இந்த திட்டத்தை தொடங்கலாம் என திட்டமிட்டுள்ளோம்.

நெம்மேலியில் 2-வது நிலையத்தில் இருந்து தென்சென்னை பகுதிகளான வேளச்சேரி, ஆலந்தூர், புனித தோமையார்மலை, மேடவாக்கம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம், கீழ்க்கட்டளை, மூவரசம்பேட்டை, சோழிங்கநல்லூர், மடிப்பாக்கம், தாம்பரம், பல்லாவரம் பகுதிகளில் உள்ள 9 லட்சம் மக்கள் பயன் அடைவார்கள்.
சென்னை மீஞ்சூரில் 100 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் நன்றாக செயல்பட்டு வருகிறது. நெம்மேலியில் 2 நிலையங்கள் உள்ள நிலையில் போரூரில் 400 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையமும் அமைக்கப்பட்டு வருகிறது. இது 2026 டிசம்பரில் செயல்பாட்டுக்கு வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பல்வேறு மாநிலங்களிலும் சிறப்பாக பணியாற்றிய சுகாதார ஊக்குவிப்பாளர்களை கவுரவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
- சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு இன்று புறப்பட்டு செல்கின்றனர்.
திண்டுக்கல்:
நாட்டின் 75-வது குடியரசு தினவிழா நாளை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களிலும் சிறப்பாக பணியாற்றிய சுகாதார ஊக்குவிப்பாளர்களை கவுரவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி ஊராட்சிகளில் திடக்கழிவு, திரவக்கழிவு மேலாண்மை செயல்பாட்டில் சிறப்பாக செயல்பட்ட சுகாதார ஊக்குவிப்பாளர்களுக்கு டெல்லி குடியரசு தினவிழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி தமிழகத்தில் திண்டுக்கல், திருநெல்வேலி, பெரம்பலூர், வேலூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலிருந்து மொத்தம் 7 ஊக்குவிப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் பலக்கனூத்து ஊராட்சியை சேர்நத நாச்சம்மாள், காளாஞ்சிபட்டியை சேர்ந்த கற்பகம், நெல்லை மாவட்டம் கீழகோட்டத்தை சேர்ந்த சுமதி, வேலூர் மாவட்டம் மெட்டுகுளத்தை சேர்ந்த புஷ்பா, செங்கல்பட்டு மாவட்டம் புத்தூரை சேர்ந்த சத்யா, பெரம்பலூர் மாவட்டம் புதுநடுவனூரை சேர்ந்த சுதா, ஆலம்பாடியை சேர்ந்த புஷ்பலதா ஆகியோர் டெல்லி குடியரசு தினவிழாவில் பங்கேற்கின்றனர்.
முழுசுகாதார இயக்கத்தின் மாநில தொடர்பு அலுவலர் ஏகாம்பரம், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராமாநிதி, வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் ஆகியோருடன் சுகாதார ஊக்குவிப்பாளர்கள் 7 பேர் என மொத்தம் 10 பேர் கொண்ட குழுவினர் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு இன்று புறப்பட்டு செல்கின்றனர். குடியரசு தினவிழாவை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுகாதார ஊக்குவிப்பாளர்களுடனான கலந்தாய்வு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டள்ளது.
இந்த கூட்டத்தில் திடக்கழிவு, திரவக்கழிவு, மேலாண்மை செயல்பாடு, நீடிக்கும் சவால்கள், அதனை எதிர்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்த அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஊரகவளர்ச்சித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- பையா கவுண்டருக்கு காளப்பட்டியில் தோட்டத்துடன் கூடிய மற்றொரு வீடும் உள்ளது.
- பையா கவுண்டரை மீட்டு சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
கோவை:
கோவை காளப்பட்டி பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் பையா கவுண்டர் என்ற கிருஷ்ணன் (வயது65).
தி.மு.க பிரமுகரான இவர் விவசாயம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் உள்பட பல்வேறு தொழில்கள் செய்து வந்தார்.
பையா கவுண்டருக்கு காளப்பட்டியில் தோட்டத்துடன் கூடிய மற்றொரு வீடும் உள்ளது. இந்த தோட்டத்தில் அந்த பகுதியை சேர்ந்த சிலர் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் தினமும் அதிகாலையிலேயே தோட்ட வேலைக்கு வந்து விடுவார்கள்.
இன்று காலையும் தொழிலாளர்கள் வழக்கம்போல வேலைக்கு வந்தனர். அப்போது அங்குள்ள மரத்தில் பையா கவுண்டர் என்ற கிருஷ்ணன் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார்.
இதை பார்த்ததும் அதிர்ச்சியான அவர்கள் சம்பவம் குறித்து உடனடியாக அவரது மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலை கேட்டதும் அவர்கள் பதறி அடித்துக்கொண்டு தோட்டத்திற்கு ஓடி வந்தனர். அங்கு மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்த பையா கவுண்டரை மீட்டு சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதை கேட்டு அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில், பையா கவுண்டருக்கு கடந்த சில மாதங்களாகவே குடும்ப பிரச்சனை இருந்து வந்ததும், அதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.
தற்கொலை செய்து கொண்ட பையா கவுண்டர் என்ற கிருஷ்ணன் கடந்த 2006-ம் ஆண்டு காளப்பட்டி பேரூராட்சி தேர்தலில் தலைவர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிட்டார்.
அந்த தேர்தலில் வெற்றி பெற்ற அவர், கடந்த 2011-ம் ஆண்டு வரை காளப்பட்டி பேரூராட்சியின் தலைவராக பதவி வகித்து வந்தார். பேரூராட்சி தலைவராக இருந்த போது, அவர் தன்னை தி.மு.க.வில் இணைத்து கொண்டார்.
தி.மு.கவிலும் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தார். குறிப்பாக கடந்த 2021-ம் ஆண்டு வரை கோவை மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளராகவும் பதவி வகித்து வந்தார்.
மேலும் இவர் கடந்த 2016 மற்றும் 2021-ம் ஆண்டு என 2 முறை நடந்த சட்டமன்ற தேர்தல்களிலும் கவுண்டம்பாளையம் தொகுதியில் தி.மு.க. சார்பாக போட்டியிட்டார். ஆனால் 2 தடவையும் அவருக்கு வெற்றி கிடைக்காமல் தோல்வியையே தழுவினார்.
2021 தேர்தலுக்கு பிறகு அவரது மாவட்ட செயலாளர் பொறுப்பும் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டது. அதன்பிறகு கடந்த ஒரு ஆண்டு காலமாக அவர் கட்சி பணிகளில் எந்தவித நாட்டமும் காட்டாமல் சற்று ஒதுங்கியே இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்சலில் கடத்தல் பொருட்கள் இருப்பதால் உங்களுக்கு வாட்ஸ் அப் மூலமாகவே வாரண்டை அனுப்பி கைது செய்ய முடியும் என்று மிரட்டல் விடுக்கிறார்கள்.
- வெளிநாடுகளில் இருந்து வெளி மாநிலங்களில் இருந்தும் மிகப்பெரிய ‘நெட்வொர்க்’ அமைத்து மோசடியை அரங்கேற்றி வருகிறார்கள்.
சென்னை:
செல்போன்கள் மூலமாக இன்று இருந்த இடத்தில் இருந்தே எல்லா வேலைகளையும் செய்துவிட முடிகிறது. அதே நேரத்தில் செல்போன் வழியாக பல்வேறு இழப்புகளையும் சந்திக்க நேரிடுகிறது.
செல்போனில் தொடர்பு கொண்டு பேசும் நபர்கள் சம்பந்தப்பட்ட நபர்களின் வங்கி கணக்கில் இருந்து விதவிதமான வழிகளில் பணத்தை உருவிக் கொண்டிருக்கிறார்கள்.
உங்களது ஏ.டி.எம். கார்டு செயல் இழந்துவிட்டது. அதனை சரிசெய்ய வேண்டும் என்று பேசி வங்கி கணக்கு விவரங்களை கேட்டு பணத்தை சுருட்டி வந்த மோசடி பேர்வழிகள் நாளுக்கு நாள் புதுப்புது வழிகளில் பொதுமக்களின் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை வாரிச் சுருட்டிக் கொண்டே இருக்கிறார்கள். இதுபோன்ற மோசடிக்காரர்கள் வெளிநாடுகளில் இருந்து வெளி மாநிலங்களில் இருந்தும் மிகப்பெரிய 'நெட்வொர்க்' அமைத்து மோசடியை அரங்கேற்றி வருகிறார்கள். இதனால் அவர்களை பிடிப்பது என்பது சவாலாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில் இந்த ஆன்லைன் மோசடி கும்பல் பொதுமக்களின் வங்கி கணக்கில் இருந்து தற்போது புதிதாக நூதன முறையில் பலரை ஏமாற்றி பணத்தை அபகரிக்க தொடங்கி உள்ளனர்.
உங்களது முகவரிக்கு தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பார்சலில் வந்துள்ளது. நாங்கள் கண்டுபிடித்துவிட்டோம். போதை பொருள் தடுப்பு பிரிவில் இருந்து பேசுகிறோம் என்று மோசடி ஆசாமி ஒருவன் முதலில் போனில் பேசுகிறார். பின்னர் பேசும் நபர் போலீஸ் அதிகாரி என்று கூறுகிறார்.
இதனால் எதிர்முனையில் பேசிக் கொண்டிருக்கும் அப்பாவி மக்கள் அரண்டு விடுகிறார்கள். இதுபோன்று சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் 62 லட்சம் பணத்தை இழந்துள்ளார்.
தொழில் அதிபரின் செல்போனுக்கு அறிமுகம் இல்லாத புதிய நம்பரில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் மும்பை துணை கமிஷனர் பேசுவதாக கூறியுள்ளார். உங்களது பெயரில் மும்பையில் உங்களது பெயரில் மும்பையில் இருந்து தாய்லாந்துக்கு கூரியர் மூலமாக பார்சல் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் 5 பாஸ்போர்ட்டுகள் 3 கிரெடிட் கார்டுகள் மற்றும் போதை பொருட்கள் உள்ளன என்றும் இதனால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப் போகிறோம் என்றும் அந்த நபர் எச்சரித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சென்னை தொழில் அதிபர், நான் சென்னையில் இருக்கிறேன். எனது பெயரை யாரோ தவறாக பயன்படுத்தி உள்ளனர். எனக்கும், அந்த பார்சலுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறியுள்ளார்.
இருப்பினும் மோசடி ஆசாமி போனில் மிரட்டி, நாங்கள் சொல்லும் வங்கி கணக்குக்கு பணம் அனுப்ப வேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் பயந்து போன சென்னை தொழில் அதிபர் ரூ.62 லட்சத்து 99 ஆயிரம் பணத்தை அனுப்பி உள்ளார்.
இதுபற்றி யாரிடமும் கூறக்கூடாது என்று மிரட்டல் விடுத்த மோசடி கும்பல் பின்னர் தொடர்பை துண்டித்துவிட்டது. முன்னதாக தொழில் அதிபர் திரும்ப திரும்ப தொடர்பு கொண்டு பேச முற்பட்டுள்ளார். ஆனால் அதற்கு பயன் கிடைக்கவில்லை.
இந்த மோசடி தொடர்பாக சென்னை சைபர் கிரைம் போலீஸ் துணை கமிஷனர் கீதாஞ்சலி கூறியதாவது:-
இதுபோன்ற சைபர் கிரைம் மோசடி பேர்வழிகள் அதிக சம்பளம் வாங்கும் நபர்களை கண்காணித்து அவர்களிடமிருந்து பணத்தை பறிக்கிறார்கள்.
பார்சலில் கடத்தல் பொருட்கள் இருப்பதால் உங்களுக்கு வாட்ஸ் அப் மூலமாகவே வாரண்டை அனுப்பி கைது செய்ய முடியும் என்று மிரட்டல் விடுக்கிறார்கள். இந்த யோசனைகள் 'ஸ்கைப்' செயலி மூலமாக அரங்கேற்றப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
இந்த மோசடி பேர்வழிகள் ஆரம்பத்தில் பணத்தை கேட்பது இல்லை. வங்கி கணக்குகள் மற்றும் அதன் உள்ளே நுழையக்கூடிய வழிகளை மிரட்டி கேட்டுப் பெற்று வருகிறார்கள். இதன் பிறகே வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுக்கிறார்கள் அல்லது மிரட்டி பணத்தை பரி மாற்றம் செய்ய சொல்கிறார்கள். தாய்லாந்து மற்றும் ஹாங்காங் பகுதியில் இருந்தே இந்த மோசடிகள் அரங்கேற்றப்பட்டு வருகிறது.
எனவே இதுபோன்ற நபர்களிடம் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.
ஆன்லைன் மூலமாக பணத்தை இழந்துவிட்டால் உடனடியாக சைபர் கிரைம் உதவி எண்ணை 1930-ல் உடனடியாக புகார் செய்தால் அந்த பணம் கிடைப்பதற்கு வாய்ப்பு ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதுபோன்ற சைபர் கிரைம் மோசடி பேர்வழிகளிடம் ஏமாறும் பொது மக்கள் www.cybercrime gov.in என்ற முகவரியிலும் புகார் செய்யலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
- இன்றைய ஆர்ப்பாட்டம், கடந்த ஒரு ஆண்டில் மட்டும், எனக்கு எதிராக இந்தக் கும்பலால் நடத்தப்படும் மூன்றாவது ஆர்ப்பாட்டமாகும்.
- தங்கள் உயிரைப் பணயம் வைத்து, மக்கள் பிரச்சனைகளை வெளிக்கொண்டு வரும் பத்திரிகையாளர்களுடன் தோளோடு தோள் நிற்கிறேன்.
சென்னை:
தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
எனக்கு எதிராகக் களமிறக்கப்பட்டுள்ள, திமுக என்ற வெங்காயத்தின் முதல் அடுக்கு என்று பரவலாக அறியப்பட்டவர்கள், இன்றைய தினம் ஒரு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்திருக்கிறார்கள் என்பதை அறிகிறேன்.
இன்றைய ஆர்ப்பாட்டம், கடந்த ஒரு ஆண்டில் மட்டும், எனக்கு எதிராக இந்தக் கும்பலால் நடத்தப்படும் மூன்றாவது ஆர்ப்பாட்டமாகும். இதனை நான் பெருமையாகவே கருதுகிறேன்.
தாங்கள் ஒரு பத்திரிகையாளர் என்பதை மறந்துவிட்டு, திமுகவின் செய்தித் தொடர்பாளர் போல் நடந்து கொள்ளும், வெங்காயத்தின் முதல் அடுக்கான இவர்களின் உண்மை நிலைப்பாடு குறித்த சில எடுத்துக்காட்டுகள் இதோ.
பத்திரிகையாளர்கள் வேஷம் போட்ட இந்த சில திமுக அடிவருடிகளால், இனியும் தமிழ்நாட்டு அரசியலின் போக்கை முடிவு செய்யவோ, கட்டுப்படுத்தவோ முடியாது.
தங்கள் உயிரைப் பணயம் வைத்து, மக்கள் பிரச்சனைகளை வெளிக்கொண்டு வரும் பத்திரிகையாளர்களுடன் தோளோடு தோள் நிற்கிறேன். அதே நேரத்தில், ஆளும் திமுக அரசை மகிழ்விக்கும் பிரசார இயந்திரமாகச் செயல்படுபவர்களை நான் வெறுக்கிறேன். அவர்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகத்துறைக்கே அவமானம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
எனக்கு எதிராகக் களமிறக்கப்பட்டுள்ள, திமுக என்ற வெங்காயத்தின் முதல் அடுக்கு என்று பரவலாக அறியப்பட்டவர்கள், இன்றைய தினம் ஒரு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்திருக்கிறார்கள் என்பதை அறிகிறேன்.
— K.Annamalai (@annamalai_k) January 25, 2024
இன்றைய ஆர்ப்பாட்டம், கடந்த ஒரு ஆண்டில் மட்டும், எனக்கு எதிராக இந்தக் கும்பலால் நடத்தப்படும்… pic.twitter.com/7xQ76AWTUA
- விடியா அரசின் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தன போக்குடன் செயல்பட்டது
- பாதிக்கப்பட்ட செய்தியாளர் நேசபிரபு விரைவில் பூரண உடல்நலம் பெற்று வீடுதிரும்ப எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
செய்தியாளர் நேசபிரபு தாக்கப்பட்ட சம்பவம் குறித்து எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் செய்தியாளர் நேசபிரபு கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.
மர்ம நபர்கள் தன்னை தாக்குவதற்கான அச்சமான சூழ்நிலை நிலவுவதாக நேசபிரபு தொடர்ச்சியாக காவல்துறையிடம் முறையிட்டும், தாக்குதலுக்கு 4 மணிநேரங்களுக்கு முன்பே தெரிவித்தும் இந்த விடியா அரசின் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தன போக்குடன் செயல்பட்டது கடும் கண்டனத்திற்குரியது.
சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளால் ஏற்கனவே பொதுமக்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் தமிழகத்தில் நிலவி வருவதை நான் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்தும், எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததன் விளைவே இன்று செய்தியாளர் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலாகும்.
பாதிக்கப்பட்ட செய்தியாளர் நேசபிரபு விரைவில் பூரண உடல்நலம் பெற்று வீடுதிரும்ப எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவதோடு, அவர் குணமடைய உரிய மருத்துவ சிகிச்சை வழங்குமாறும், கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்து கடும் நடவடிக்கை எடுத்து, பத்திரிக்கையாளர்கள் சுதந்திரமாக செயல்படுவதற்கான சூழ்நிலையை உறுதிசெய்யுமாறு இந்த விடியா அரசை கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், ஆட்சிக்கு வந்த நாள் முதலே சந்திசிரிக்கும் வண்ணம் சட்டம் ஒழுங்கை சீர்குலையச் செய்துள்ள, காவல்துறையை தன் கையில் வைத்திருப்பதாக சொல்லும் இந்த விடியா அரசின் பொம்மை முதல்வர், தன் கும்பகர்ண தூக்கத்தில் இருந்து விழித்துக்கொண்டு இதுபோன்ற சம்பவங்கள் இனியாவது நிகழாவண்ணம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்துகிறேன்.
- சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம்.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மதுரை:
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தை தெப்பத்திரு விழா வருடந்தோறும் விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடங்கிய நாளில் இருந்தே தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் சித்திரை வீதிகளில் பஞ்சமூர்த்திகளுடன் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
கடந்த 23-ந்தேதி தெப்பத்திருவிழாவை முன்னிட்டு மாரியம்மன் கோவில் தெப்பக்குளத்தில் தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சி நடந்தது.
11-ம் நாளான நேற்று தங்கப்பல்லக்கில் சுவாமி-அம்பாள் சிறப்பு அலங்கா ரத்தில் எழுந்தருளினர். அதனைத்தொடர்ந்து கோவிலில் இருந்து புறப்பாடாகி அம்மன் சன்னதி, காமராஜர் சாலை வழியாக சிந்தாமணியில் உள்ள கதிர் அறுப்பு மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு கதிர் அறுப்பு திருவிழா நடந்தது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தெப்பத்திரு விழா இன்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் மீனாட்சி அம்மன் கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதிகாலை 5 மணிக்கு வெள்ளி அவுதா தொட்டில், வெள்ளி சிம்மாசனத்தில் மீனாட்சி, பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் ஆகியோர் எழுந்தருளினர்.
பின்னர் கோவிலில் இருந்து புறப்பாடாகி அம்மன் சன்னதி, விளக்குத்தூண், கீழவாசல், காமராஜர் சாலை வழியாக மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்துக்கு சென்றடைந்தனர். அங்கு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் காலை 10.40 மணியளவில் சுவாமி-அம்மாள் எழுந்தருளினர்.
தொடர்ந்து பக்தர்கள் தெப்பக்குளத்தின் வெளிப்புறமாக நின்று வடம் பிடித்து தெப்பத்தை இழுத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இன்று இரவும் தெப்பத்தில் சுவாமி-அம்மாள் வலம் வந்து அருள்பாலிக்க உள்ளனர். தெப்பத்திரு விழாவை முன்னிட்டு மாரியம்மன் தெப்பக்குளம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.






