என் மலர்
உள்ளூர் செய்திகள்
- குடியரசு தின விழாவில் ஆர்.என். ரவி தேசியக்கொடி ஏற்றினார்.
- முதலமைச்சர் மற்றும் ஆளுநர் முப்படை மற்றும் காவல் சிறப்புப்பிரிவின் மரியாதையை ஏற்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு வீரதீரச் செயல்கள் புரிந்த அரசு ஊழியர்கள், பொதுமக்களுக்கு வீரதீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கங்களை வழங்கி வருகின்றன. இப்பதக்கம் பெறுபவர்களுக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலை, ரூ. 9 ஆயிரம் மதிப்புள்ள தங்க முலாம் பூசிய பதக்கம் மற்றும் சான்றிதழும் வழங்கப்படும்.
இந்த ஆண்டுக்கான வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கங்களை ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் சிவக்குமார், காயல்பட்டினம் யாசர் அராபத், நெல்லை டேனியல் ஆகியோருக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
சிவக்குமார்
தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் கடந்த டிசம்பர் மாதம் 17, 18-ந்தேதிகளில் பெய்த அதிதீவிர கனமழையினால் வரலாறு காணாத வகையில் ஏற்பட்ட தாமிரபரணி ஆற்று வெள்ளம் மற்றும் காட்டாற்று வெள்ளம் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.
ஸ்ரீவைகுண்டம் வட்டத்திற்குட்பட்ட தாமிரபரணி ஆற்றங்கரையில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள 14 கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டார்.
மேற்படி கிராமங்களில் இரவு 10.30 மணி முதல் ஒவ்வொரு வீடாக சென்று தாமிரபரணியில் வெள்ளம் வரப்போவதாகவும், உடனே வீடுகளை விட்டு வெளியேறுமாறும் கூறி அவர்களை வாகனங்களில் ஏற்றி பாதுகாப்பான பகுதிக்கு அழைத்து சென்று தங்க வைத்தார். மேலும் அவர் நேரடி துரித கண்காணிப்பில் சுமார் 2,400 பேர் மீட்கப் பட்டனர்.
தன்னலம் கருதாமல் துணிச்சலோடு மீட்புப் பணிகளில் ஈடுபட்ட அவரது துணிச்சலான செயலை பாராட்டி சிவக்குமாருக்கு 2024-ம் ஆண்டிற்கான வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்கி அரசு சிறப்பித்துள்ளது.
யாசர் அராபத்
தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கடந்த டிசம்பர் மாதம் 17, 18-ந் தேதிகளில் பெய்த அதிதீவிர கன மழையினால் வரலாறு காணாத வெள்ளம் மற்றும் காட்டாற்று வெள்ளம் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.
இதனால் கடம்பா குளத்திற்கு கீழ் உள்ள பல்வேறு குளங்களில் இருந்து பாய்ந்தோடிய மழை வெள்ளம் திருச்செந்தூர் வட்டம், தண்ணீர்பந்தல் கிராமத்தையும் மூழ்கடித்தது. அந்த கிராமத்தில் உள்ளவர்கள் சுமார் 250 பேர் தண்ணீரில் சிக்கித் தவித்தனர்.
அவர்களை மீட்க தனியார் அமைப்புகள், அரசு அதிகாரிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்த நிலையில் காயல்பட்டினம், சிங்கித்துறையை சேர்ந்த மீனவர் யாசர் அராபத் என்பவரிடம் உதவி கோரப்பட்டது.
இதையடுத்து அவரது தலைமையில் 16 மீனவர்கள் ஒரு குழுவாக தங்களது உயிரையும் துச்சமென நினைத்து தண்ணீரில் தத்தளித்த தண்ணீர் பந்தல் கிராமத்தில் உள்ள மக்களை தங்களுடைய படகில் சென்று மீட்டு வந்தனர். மேலும் அங்குள்ள ஒரு உப்பளத்தில் தவித்துக் கொண்டிருந்த 13 உப்பளத் தொழிலாளர்களையும் 2 மணி நேர கடும் போராட்டத்திற்குப் பின் மீட்டு வந்துள்ளனர்.
தனது உயிரையும் துச்சமென நினைத்து தண்ணீரில் தத்தளித்த மக்களை காப்பாற்றிய அவரது துணிச்சலான செயலை பாராட்டி யாசர் அராபத்துக்கு 2024-ம் ஆண்டுக்கான வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்கி அரசு சிறப்பித்துள்ளது.
டேனியல் செல்வ சிங்
நெல்லை மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த கன மழை மற்றும் தாமிரபரணி வெள்ளத்தினால் திருநெல்வேலி மாநகரின் பல்வேறு குடியிருப்புப் பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது.
இந்த நிலையில் திருநெல்வேலி டவுன் தடிவீரன் கோவில் கீழத்தெருவை சேர்ந்த டேனியல் செல்வ சிங் என்பவர் தான் வசிக்கும் தெருக்களில் வெள்ள நீரால் சூழப்பட்ட வீடுகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு பால் பாக்கெட், ரொட்டி பாக்கெட், மருந்துகள் ஆகியவற்றை தண்ணீரில் நீந்தியவாறு கொண்டு சென்று சேர்த்துள்ளார்.
இவர் தன்னலம் கருதாமல் துணிச்சலோடு தன் உயிரையும் துச்சமென நினைத்து கடந்த டிசம்பர் மாதம் 18, 19-ந்தேதி ஆகிய 2 நாட்கள் தன்னார்வ மீட்புப் பணிகளில் ஈடுபட்டு உள்ளார்.
தன்னலம் கருதாமல் துணிச்சலோடு தன் உயிரையும் துச்சமென நினைத்து மீட்புப் பணிகளில் ஈடுபட்ட அவரது துணிச்சலான செயலை பாராட்டி டேனியல் செல்வசிங்குக்கு 2024-ம் ஆண்டிற்கான வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்கி அரசு சிறப்பித்துள்ளது.
- ஆளுநர் ஆர்.என். ரவியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரவேற்றார்.
- தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார் ஆர்.என். ரவி.
குடியரசு தின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை 7.52 மணிக்கு மோட்டார் சைக்கிள் புடைசூழ வந்தார். அவர் அங்கு கூடியிருந்த பார்வையாளர்களுக்கு வணக்கம் செலுத்தியபடி வந்தார். அவரை தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா வரவேற்றார்.
இதைத்தொடர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவி காரில் 7.54 மணியளவில் அவரது மனைவியுடன் வந்தார். அவரும் பார்வையாளர்கள் இருக்கும் பகுதிகளுக்கு வந்து வணக்கம் தெரிவித்தார். காலை 7.58 மணியளவில் தேசியக்கொடி ஏற்றும் இடம் அருகே கவர்னர் ஆர்.என். ரவி வந்தார். அவரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கைகுலுக்கி பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.
பின்னர் முப்படை தளபதிகள் மற்றும் போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால், சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர், கூடுதல் டி.ஜி.பி. அருண் ஆகியோரை கவர்னருக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்.

இதைத்தொடர்ந்து சரியாக காலை 8 மணிக்கு கவர்னர் ஆர்.என். ரவி தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் ரோஜா மலர் தூவியபடி சென்றது.
அதன் பிறகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேடைக்கு சென்று அமர்ந்தார். கவர்னர் ஆர்.என்.ரவி அணிவகுப்பு மேடைக்கு வந்து பல்வேறு படைப்பிரிவுகளின் அணிவகுப்பை ஏற்றார். அதனைத்தொடர்ந்து 41 வகை படைப்பிரிவுகள் அணிவகுத்து வந்தன. இந்த அணிவகுப்பு மரியாதையை கவர்னர் ஆர்.என். ரவி ஏற்றுக் கொண்டார்.
அதன் பிறகு அவர் மேடைக்கு சென்று அமர்ந்தார். இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வீரதீர துணிச்சல் மிகுந்த செயல்களுக்கான பதக்கங்கள் மற்றும் விருதுகளை வழங்கினார்.
கோட்டை அமீர் மதநல்லிணக்க பதக்கத்தை கிருஷ்ணகிரி மாவட்ட தளி பகுதியை சேர்ந்த முகமது ஜுபேருக்கு வழங்கினார். இவருக்கு ரூ.25 ஆயிரம் காசோலை, பதக்கம் மற்றும் சான்றிதழை முதல்-அமைச்சர் முக.ஸ்டாலின் வழங்கினார்.
சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது சேலம் பூலாம்பட்டியை சேர்ந்த பாலமுருகனுக்கு வழங்கப்பட்டது. இவருக்கு ரொக்கப் பரிசு ரூ.5 லட்சம் மற்றும் ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளிப் பதக்கம், சான்றிதழ் ஆகியவற்றை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
- வீட்டில் வேலை செய்தபோது கொடுமைப்படுத்தியதாக சிறுமி புகார் அளித்திருந்தார்.
- எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை சட்டப்பிரிவு உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ இ. கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மெர்லினா ஆகியோர் அவர்களுடைய வீட்டில் வேலைபார்த்து வந்த சிறுமியை கொடுமைப்படுத்தியதாக அந்த சிறுமி புகார் அளித்திருந்தார்.
இதனால் மதிவாணன்- மெர்லினா தம்பதி மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை சட்டப்பிரிவு உள்ளிட்ட 6 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதனால் மதிவாணன் தம்பதி தலைமறைவானது. மூன்று தனிப்படைகள் அமைத்து அவர்களை போலீசார் தேடிவந்தனர். இந்த நிலையில் ஆந்திராவில் தலைமறைவாக இருந்த அவர்களை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அவர்கள் சென்னை அழைத்து வரப்பட்டு, எழும்பூர் நீதிமன்ற குடியிருப்பில் உள்ள நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது வருகிற 9-ந்தேதி வரை அவர்களுக்கு நீதிமன்ற காவல் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
இதனால் அவர்கள் புழல் ஜெயிலில் அடைக்கப்படுகிறார்கள்.
- பவதாரிணி இழப்பு இசைத்துறைக்கு பேரிழப்பாகும்- தமிழிசை
- தனித்தன்மையுடன் கூடிய குரலால் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருந்த அவரது மரணம், தமிழ் இசை உலகிற்கு பேரிழப்பாகும்- உதயநிதி
இசைஞானி இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரிணி புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்ற வந்த நிலையில் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
இசையமைப்பாளர் இளையராஜா மகளும், பிரபல பின்னணி பாடகியுமான பவதாரிணி உடல் நலக்குறைவால் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் மன வேதனை அடைந்தேன்.
தனது இனிமையான குரல் வளத்தால் பல இசை ரசிகர்களை கவர்ந்து தேசிய விருது உட்பட பல விருதுகளை வென்று இசை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். அவரின் இழப்பு இசைத்துறைக்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் இசையமைப்பாளர் திரு.இளையராஜா அவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவிப்பதோடு சகோதரி பவதாரிணியின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். #Bhavadharani
என தமிழிசை குறிப்பிட்டுள்ளார்.
தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் செய்தில் கூறியிருப்பதாவது:-
இசைஞானி இளையராஜாவின் அன்பு மகள் பின்னணி பாடகி சகோதரி பவதாரிணி, உடல் நலக்குறைவால் மரணமடைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன்.
தனித்தன்மையுடன் கூடிய குரலால் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருந்த அவரது மரணம், தமிழ் இசை உலகிற்கு பேரிழப்பாகும்.
அவருடைய மரணத்துக்கு என் ஆழ்ந்த இரங்கல்.
பவதாரிணியை இழந்து வாடும் இசைஞானி இளையராஜா சார், சகோதரர்கள் கார்த்திக்ராஜா, யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட அவருடைய குடும்பத்தார் - நண்பர்களுக்கு என்னுடைய ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தில் கூறியிரப்பதாவது:-
பிரபல திரைப்பட இசையமைப்பாளர் 'இசைஞானி' இளையராஜாவின் மகளும், பிரபல பின்னணிப் பாடகியும், இசையமைப்பாளருமான பவதாரிணி உடல் நலக் குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.
சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினை இளம் வயதிலேயே பெற்ற சிறப்புக்குரியவர் பவதாரிணி. வித்தியாசமான குரல் வளத்தைக் கொண்டுள்ள பவதாரிணி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல பாடல்களை பாடி ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்ட பெருமைக்குரியவர். இவரது இழப்பு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.
பவதாரிணியை இழந்து வாடும் அவரது தந்தை இளையராஜா, அவரது கணவர், குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு ஓ. பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
சிறந்த பின்னணிப் பாடகியும், இசையமைப்பாளரும், இசைஞானி இளையராஜாவின் புதல்வியுமான பவதாரிணி, உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி, மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
தனது தனிச் சிறப்பான குரலால், இதயத்தை நெகிழச் செய்யும் பல பாடல்களைப் பாடியவர் பவதாரிணி. இளம் வயதிலேயே தேசிய விருது வென்ற பவதாரிணி இசையுலகில் பல சாதனைகள் படைப்பார் என்று அனைவரும் விரும்பியிருந்தபோது, அவரது எதிர்பாராத மறைவு சற்றும் ஏற்க முடியாததாக இருக்கிறது.
பவதாரிணியை பிரிந்து வாடும் இசைஞானி இளையராஜா குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. இந்தக் கடினமான நேரத்தில் அவர்களுக்கு இறைவன் துணையிருக்கட்டும்.
ஓம் சாந்தி!
இவ்வாறு அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
மக்களவை எம்.பி. கனிமொழி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
இசைக் கலைஞர் பவதாரிணி மறைவெய்திய செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. பின்னணி பாடகராக தனித்துவமிக்க பாடல்களைத் தந்த அவரது மறைவு தமிழ் திரைத்துறைக்குப் பேரிழப்பாகும். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.
இவ்வாறு கனிமொழி தெரிவித்துள்ளார்.
- பவதாரிணியின் திடீர் மறைவு இசையுலகில் ஈடுசெய்தற்கரிய இழப்பு.
- தனது பாசமகளை இழந்து துடிக்கும் இசைஞானிக்கும் அவரது சகோதரர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்.
இசைஞானி இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரிணி இலங்கையில் புற்றுநோயால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மாலை காலமானார்.
இவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
பிரபல பின்னணிப் பாடகியும் இசைஞானியின் அன்பு மகளுமான பவதாரிணி அவர்களின் அகால மரணத்தால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
இசைமேதைகள் நிறைந்த குடும்பத்தில் பிறந்த பவதாரிணி, தேனினும் இனிய தனது குரல்வளத்தால் இளம் வயதிலேயே ரசிகர்களின் நெஞ்சில் தனியிடம் பிடித்தவர் ஆவார்.
கேட்டதும் அடையாளம் கண்டுகொண்டு பரவசமடையச் செய்யும் மிகவும் தனித்துவமான குரல் அவருடையது.
பாரதி திரைப்படத்தில் தனது தந்தையின் இசையமைப்பில் பாடிய 'மயில் போல பொண்ணு ஒன்னு' பாடலுக்காக இளம் வயதிலேயே தேசிய விருதும் பெற்றவர். இசையமைப்பாளராகவும் பல படங்களுக்குப் பணிபுரிந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து இசையுலகில் எத்தனையோ சாதனைகளைச் செய்திருக்க வேண்டிய பவதாரிணி அவர்களின் திடீர் மறைவு இசையுலகில் ஈடுசெய்தற்கரிய இழப்பு. அவர் விட்டுச் செல்லும் இடம் அப்படியே இருக்கும்.
தனது பாசமகளை இழந்து துடிக்கும் இசைஞானி அவர்களுக்கும், பவதாரணி அவர்களின் சகோதரர்கள் யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் திரையுலகினருக்கும் இரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- தமிழை புறக்கணித்து இந்தியை பாஜக திணிக்கிறது.
- நீட் தேர்வை தமிழகத்திற்குள் நுழையவிட்டவர் எடப்பாடி பழனிசாமி.
சென்னை அமைந்தகரையில், மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
மொழிப்போர் தியாகிகள் நாளான இன்று, திருச்சியில் கருணாநிதிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் சிலை திறந்துள்ளார்.
மொழிக்காக உயிர் நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கத்தை செலுத்துகிறேன். மொழிப்போர் களத்தில் தந்தை பெரியார், அண்ணா, கருணாநிதி உள்ளிட்டோர் முன்நின்றனர்.
தமிழுக்காக உயிர் நீத்தவர்கள் தான் மொழிப்போர் தியாகிகள்.
இந்தி திணிப்பை எதிர்த்து 12 வயதில் களத்தில் நின்றவர் கருணாநிதி. உலகில் வேறெங்கும் மொழிக்காக இப்படி ஒரு போராட்டம் நடைபெற்றது இல்லை.
மொழிப் போராட்டத்திற்கு பிறகு தான் திமுக ஆட்சிக்கு வந்தது. மொழியின் பழம்பெருமையை பேசுவது மட்டுமே மொழிப்பற்று அல்ல.

மொழியை கல்வியறிவின் வாயிலாக வளர்த்தோம், அதனால் தான் கல்வியில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது.
தமிழை புறக்கணித்து இந்தியை பாஜக திணிக்கிறது. இந்தி பேசும் மக்களை ஏமாற்றவே, பாஜக இந்தி மொழியை கையில் எடுத்துள்ளது.
கொரோனாவை விட கொடியவர்கள் பாஜக அரசு. பாஜகவின் தோல்வி பட்டியில் மிக நீளமானது.
பாஜக ஆட்சியில் சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை பெரிதும் உயர்ந்துள்ளது. பாஜகவுக்கு நேற்று வரை ஆமாம் சாமி போட்டவர் எடப்பாடி பழனிசாமி.
நீட் தேர்வை தமிழகத்திற்குள் நுழையவிட்டவர் எடப்பாடி பழனிசாமி. இந்தியா கூட்டணி ஆட்சி, உண்மையான கூட்டாட்சியாக அமையும்.
ராமர் கோவிலை காண்பித்து வடமாநில மக்களை திசை திருப்பி வருகிறது பாஜக. ஆனால், இந்த முறை வடமாநிலங்களிலும் பாஜக தோல்வியை சந்திக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் இருவரும் தலைமறைவாகினர்.
- இருவரையும் பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது.
சென்னை:
பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள், தனது வீட்டில் சிறுமி ஒருவரை வீட்டு வேலைக்காக அழைத்துச் சென்று கொடுமை செய்ததாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக திருவான்மியூர் மகளிர் காவல் நிலையத்தில் எஸ்.சி., எஸ்.டி. உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் இருவரும் தலைமறைவாகினர். இதையடுத்து இருவரையும் பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது. இதனிடையே சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இன்று மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், தலைமறைவாக இருந்த ஆண்டோ மதிவாணன் மற்றும் மெர்லினா ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
- கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி ஆய்வு செய்தார்.
- மாடுகள் நடமாட்டத்தை கேமரா மூலமாக அங்காடி அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.
சென்னை:
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கடைகளில் விற்பனையாகாமல் வீணாகும் காய்கறி மற்றும் பழங்கள் மார்க்கெட் வளாகத்தில் கொட்டி வைக்கப்படுகிறது.
இவைகளை சாப்பிடுவதற்காக கோயம்பேடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான எறுமை மாடுகள் மார்க்கெட்டுக்கு படையெடுக்கின்றன. இப்படி வரும் நூற்றுக்கணக்கான மாடுகளால் பொது மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் கடும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
இதைத்தொடர்ந்து மார்க்கெட் பகுதிகளில் சுற்றி திரியும் மாடுகளை பிடிக்க வேண்டும் என்று வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையடுத்து கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி ஆய்வு செய்தார். அப்போது அங்கு சுற்றி திரிந்த மாடுகள் பிடிக்கப்பட்டன. இப்படி பிடிக்கப்படும் மாடுகளை ஏலம் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அங்காடி நிர்வாக அதிகாரிகள் கூறும்போது, "கோயம்பேடு மார்க்கெட் பகுதிக்கு மாடுகளை வளர்ப்பவர்கள் தங்களது மாடுகளை அவிழ்த்துவிடக்கூடாது. அதுபோன்று அவிழ்த்து விடப்படும் மாடுகளுக்கு முதல்முறை அபராதம் விதிக்கப்படும்
2-வது முறையாக பிடிபடும் மாடுகளை உரிமை யாளர்களிடம் திரும்ப ஒப்படைக்கமாட்டோம். அந்த மாடுகள் நிச்சயமாக ஏலத்தில் விடப்படும் என்று தெரிவித்தனர்.
இதற்கிடையே மாடுகளை வளர்ப்பவர்கள் தங்களது மாடுகளை இனி மார்க்கெட் பகுதிக்கு வர விடமாட்டோம் என்று அதிகாரிகளிடம் உறுதி அளித்து எழுதி கொடுத்துள்ளனர்.
இருப்பினும் மாடுகள் நடமாட்டத்தை கேமரா மூலமாக அங்காடி அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். தடையை மீறி மார்க்கெட்டுக்குள் வரும் மாடுகளை பிடிக்க ஆட்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கையில் கயிறு மற்றும் தடியுடன் கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் சுற்றி வருகிறார்கள்.
- தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க.- காங்கிரஸ் இடையே வருகிற 28-ந்தேதி அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
- கூட்டணிக் கட்சி தலைவர்களையும் மல்லிகார்ஜூன கார்கே சந்திக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை:
2024 மக்களவை தேர்தல் தேதி அறிவிப்புக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தேர்தல் பணிகளில் அரசியல் கட்சியினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் குழு, தொகுதி பங்கீடு, கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை என தேர்தல் பணியில் மும்முரம் காட்டி வருகின்றனர்.
தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க.- காங்கிரஸ் இடையே வருகிற 28-ந்தேதி அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடைபெறும் என நேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அடுத்த மாதம் 13-ந்தேதி தமிழகம் வர உள்ளார்.
மக்களவை தேர்தல் பணிகள் குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் இடையே மல்லிகார்ஜூன கார்கே பேச உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கூட்டணிக் கட்சி தலைவர்களையும் அவர் சந்திக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- கோவை மேற்கு மாவட்ட கழகத்தின் முன்னாள் பொறுப்பாளர் பையா என்ற ஆர்.கிருஷ்ணன் மரணமடைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
- பையா என்ற ஆர்.கிருஷ்ணனின் களப்பணியும், கழகப் பணியும் என்றென்றும் நினைவுகூரப்படும்.
சென்னை:
தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-
கோவை மேற்கு மாவட்ட கழகத்தின் முன்னாள் பொறுப்பாளர் பையா என்ற ஆர்.கிருஷ்ணன் மரணமடைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். கவுண்டம்பாளையம் பகுதியில் அவர் ஆற்றி வந்த மக்கள் தொண்டு மகத்தானது. அவருடைய அயராத சமூகப்பணிகள், அப்பகுதி மக்களால் மட்டுமின்றி கழகத்தவராலும் என்றென்றும் மறக்க இயலாதது.
பையா என்ற கிருஷ்ணனின் திடீர் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கழக உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். பையா என்ற ஆர்.கிருஷ்ணனின் களப்பணியும், கழகப் பணியும் என்றென்றும் நினைவுகூரப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- 5 பேர் கொண்ட மர்மநபர்கள் தாக்கியதில் நேசபிரபு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
- செய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவை சேர்ந்த நேசபிரபு என்பவர் தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றில் செய்தியாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்றிரவு 5 பேர் கொண்ட மர்மநபர்கள் தாக்கியதில் நேசபிரபு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
நேசபிரபு மர்மநபர்கள் பின்தொடர்ந்து வருவதும், தாக்குவது குறித்தும் காவல்துறையின் அவசர எண்ணை தொடர்பு கொண்டு கூறியபோது காவல்துறை அதிகாரி அலட்சியமாக பதில் கூறியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
செய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், செய்தியாளர் நேசபிரபு தாக்கப்பட்டது தொடர்பாக 4 தனிப்படை அமைத்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பிரவீன் மற்றும் சரவணன் ஆகியோரை கைது செய்துள்ளதாக மேற்கு மண்டல ஐஜி புவனேஸ்வரி தெரிவித்துள்ளார்.
- இன்று சுவாமிக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு தேரோட்டம் தொடங்கியது.
- தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
கொண்டையம்பாளையம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கொண்டையம்பாளையம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பொன்மலை ஆண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இன்று சுவாமிக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு தேரோட்டம் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். வீதியில் உலா வந்த தேர் வளைவில் திரும்பும் போது, சாலையோரம் இருந்த குழியில் தேரின் சக்கரங்கள் இறங்கியதால் நிலைத்தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தேர் கவிழ்வதை பார்த்த பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதில் அதிர்ஷ்டவசமாக காயம் எதுவும் இன்றி பக்தர்கள் உயிர் தப்பினர். இதனையடுத்து, பொக்லைன் இயந்திரம் மூலம் தேரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தேரோட்டத்தையொட்டி முன்னெச்சரிக்கையாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.






