search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குடியரசு தினவிழா: வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கங்களை வழங்கினார் மு.க. ஸ்டாலின்
    X

    குடியரசு தினவிழா: வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கங்களை வழங்கினார் மு.க. ஸ்டாலின்

    • குடியரசு தின விழாவில் ஆர்.என். ரவி தேசியக்கொடி ஏற்றினார்.
    • முதலமைச்சர் மற்றும் ஆளுநர் முப்படை மற்றும் காவல் சிறப்புப்பிரிவின் மரியாதையை ஏற்றனர்.

    ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு வீரதீரச் செயல்கள் புரிந்த அரசு ஊழியர்கள், பொதுமக்களுக்கு வீரதீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கங்களை வழங்கி வருகின்றன. இப்பதக்கம் பெறுபவர்களுக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலை, ரூ. 9 ஆயிரம் மதிப்புள்ள தங்க முலாம் பூசிய பதக்கம் மற்றும் சான்றிதழும் வழங்கப்படும்.

    இந்த ஆண்டுக்கான வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கங்களை ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் சிவக்குமார், காயல்பட்டினம் யாசர் அராபத், நெல்லை டேனியல் ஆகியோருக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

    சிவக்குமார்

    தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் கடந்த டிசம்பர் மாதம் 17, 18-ந்தேதிகளில் பெய்த அதிதீவிர கனமழையினால் வரலாறு காணாத வகையில் ஏற்பட்ட தாமிரபரணி ஆற்று வெள்ளம் மற்றும் காட்டாற்று வெள்ளம் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.

    ஸ்ரீவைகுண்டம் வட்டத்திற்குட்பட்ட தாமிரபரணி ஆற்றங்கரையில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள 14 கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டார்.

    மேற்படி கிராமங்களில் இரவு 10.30 மணி முதல் ஒவ்வொரு வீடாக சென்று தாமிரபரணியில் வெள்ளம் வரப்போவதாகவும், உடனே வீடுகளை விட்டு வெளியேறுமாறும் கூறி அவர்களை வாகனங்களில் ஏற்றி பாதுகாப்பான பகுதிக்கு அழைத்து சென்று தங்க வைத்தார். மேலும் அவர் நேரடி துரித கண்காணிப்பில் சுமார் 2,400 பேர் மீட்கப் பட்டனர்.

    தன்னலம் கருதாமல் துணிச்சலோடு மீட்புப் பணிகளில் ஈடுபட்ட அவரது துணிச்சலான செயலை பாராட்டி சிவக்குமாருக்கு 2024-ம் ஆண்டிற்கான வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்கி அரசு சிறப்பித்துள்ளது.

    யாசர் அராபத்

    தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கடந்த டிசம்பர் மாதம் 17, 18-ந் தேதிகளில் பெய்த அதிதீவிர கன மழையினால் வரலாறு காணாத வெள்ளம் மற்றும் காட்டாற்று வெள்ளம் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.

    இதனால் கடம்பா குளத்திற்கு கீழ் உள்ள பல்வேறு குளங்களில் இருந்து பாய்ந்தோடிய மழை வெள்ளம் திருச்செந்தூர் வட்டம், தண்ணீர்பந்தல் கிராமத்தையும் மூழ்கடித்தது. அந்த கிராமத்தில் உள்ளவர்கள் சுமார் 250 பேர் தண்ணீரில் சிக்கித் தவித்தனர்.

    அவர்களை மீட்க தனியார் அமைப்புகள், அரசு அதிகாரிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்த நிலையில் காயல்பட்டினம், சிங்கித்துறையை சேர்ந்த மீனவர் யாசர் அராபத் என்பவரிடம் உதவி கோரப்பட்டது.

    இதையடுத்து அவரது தலைமையில் 16 மீனவர்கள் ஒரு குழுவாக தங்களது உயிரையும் துச்சமென நினைத்து தண்ணீரில் தத்தளித்த தண்ணீர் பந்தல் கிராமத்தில் உள்ள மக்களை தங்களுடைய படகில் சென்று மீட்டு வந்தனர். மேலும் அங்குள்ள ஒரு உப்பளத்தில் தவித்துக் கொண்டிருந்த 13 உப்பளத் தொழிலாளர்களையும் 2 மணி நேர கடும் போராட்டத்திற்குப் பின் மீட்டு வந்துள்ளனர்.

    தனது உயிரையும் துச்சமென நினைத்து தண்ணீரில் தத்தளித்த மக்களை காப்பாற்றிய அவரது துணிச்சலான செயலை பாராட்டி யாசர் அராபத்துக்கு 2024-ம் ஆண்டுக்கான வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்கி அரசு சிறப்பித்துள்ளது.

    டேனியல் செல்வ சிங்

    நெல்லை மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த கன மழை மற்றும் தாமிரபரணி வெள்ளத்தினால் திருநெல்வேலி மாநகரின் பல்வேறு குடியிருப்புப் பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது.

    இந்த நிலையில் திருநெல்வேலி டவுன் தடிவீரன் கோவில் கீழத்தெருவை சேர்ந்த டேனியல் செல்வ சிங் என்பவர் தான் வசிக்கும் தெருக்களில் வெள்ள நீரால் சூழப்பட்ட வீடுகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு பால் பாக்கெட், ரொட்டி பாக்கெட், மருந்துகள் ஆகியவற்றை தண்ணீரில் நீந்தியவாறு கொண்டு சென்று சேர்த்துள்ளார்.

    இவர் தன்னலம் கருதாமல் துணிச்சலோடு தன் உயிரையும் துச்சமென நினைத்து கடந்த டிசம்பர் மாதம் 18, 19-ந்தேதி ஆகிய 2 நாட்கள் தன்னார்வ மீட்புப் பணிகளில் ஈடுபட்டு உள்ளார்.

    தன்னலம் கருதாமல் துணிச்சலோடு தன் உயிரையும் துச்சமென நினைத்து மீட்புப் பணிகளில் ஈடுபட்ட அவரது துணிச்சலான செயலை பாராட்டி டேனியல் செல்வசிங்குக்கு 2024-ம் ஆண்டிற்கான வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்கி அரசு சிறப்பித்துள்ளது.

    Next Story
    ×