என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • 2020-ம் ஆண்டு முதல் சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது "என்ற பெயரில் வழங்கப்பட்டு வருகிறது.
    • மாநிலத்திலேயே அதிக நெல் உற்பத்தி திறன் பெற்றுள்ள விவசாயி.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு மத நல்லிணக்கத்திற்காக பாடுபட்டு உயிர்நீத்த கோட்டை அமீர் பெயரால் கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம் என்ற பதக்கத்தினைத் தோற்றுவித்து, ஆண்டு தோறும் மத நல்லிணக்கத்திற்காக சிறந்த சேவையாற்றி வரும் ஒருவருக்கு அப்பதக்கத்தை வழங்கி வருகிறது.

    இப்பதக்கம் பெறுபவர்களுக்கு பதக்கமும், ரூ.25,000-ற்கான கேட்புக் காசோலையும் மற்றும் சான்றிதழும் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ஜூபேருக்கு வழங்கப்பட்டது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம், தளி பஞ்சாயத்து, உருது பள்ளி தெரு என்ற முகவரியில் வசித்து வரும் முகமது ஜூபேர் என்பவர் மத நல்லிணக்கத்திற்காகப் பல்வேறு பணிகளை ஆற்றி வருகிறார்.

    முகமது ஜூபேர் 'ஆல்ட் நியூஸ்' என்ற பெயரில் இணையதளத்தைத் தொடங்கி, சமூக ஊடகங்களில் வெளிவரும் செய்திகளின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து உண்மையான செய்திகளை மட்டும் தனது இணைய தளத்தில் வெளியிட்டு மக்களுக்கு தொடர்ந்து அளித்து வருகிறார்.


    அவரது இந்த பணியானது பொய்யான செய்தியினால் சமூகத்தில் ஏற்படும் வன்முறைகளைத் தடுக்க உதவி வருகிறது.

    கடந்த 2023-ந் ஆண்டு மார்ச் மாதம் தமிழ்நாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுகிறார்கள் என்று சமூக ஊடகங்களில் வேகமாக பரவிய காணொளி காட்சிகளின் உண்மை தன்மையை சரிபார்த்து சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காணொளி உள்ள காட்சிகள் தமிழ்நாட்டில் நடைபெற்றது அல்ல என தனது 'ஆல்ட் நியூஸ்' இணையதளம் மூலம் வெளியிட்டு தமிழ் நாட்டிற்கு எதிராக வதந்தி பரப்பி வருவதைத் தடுத்து தமிழ்நாட்டில் சாதி, மத, இனமற்றும் மொழியினால் ஏற்படும் வன்முறைகள் நிகழாதவண்ணம் செயல்பட்டுள்ளார்.

    இவ்வாறு, மத நல்லிணக்கத்திற்காகப் பாடுபட்டு வரும் முகமது ஜூபேரை பாராட்டும் வகையில் இவருக்கு 2024-ம் ஆண்டிற்கான கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம் வழங்கப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு இந்த விருதை வழங்கினார்.

    மாநில அளவில் திருந்திய நெல் சாகுபடி தொழில் நுட்பங்களைக் கடைபிடித்து, அதிக உற்பத்தித்திறன் விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும், குடியரசு தின விழாவின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் ரொக்கப் சிறப்பு பரிசு ரூ. 5 லட்சம் மதிப்புள்ள தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளிப் பதக்கம் மற்றும் சான்றிதழ் ஆகியவை, 2011-2012-ம் ஆண்டு முதல் வழங்கப்பட ஆணையிடப்பட்டுள்ளது.

    இவ்விருது, 2020-ம் ஆண்டு முதல் சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது "என்ற பெயரில் வழங்கப்பட்டு வருகிறது.

    சேலம் மாவட்டம், பூலாம்பட்டி கிராமம், சின்னப் பில்லுக்குறிச்சியைச் சேர்ந்த சி.பாலமுருகன் என்னும் விவசாயி, 2022-23-ம் ஆண்டிற்கான இவ்விருதைப் பெற்றிடத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இந்த விவசாயி வேளாண்மைத் துறையின் மூலம் வழங்கப்பட்ட நவீன தொழில் நுட்ப பயிற்சிகளின் மூலமாக திருந்திய நெல் சாகுபடி முறையை நன்கு கற்று, அதன் அடிப்பையில் திருந்திய நெல் சாகுபடியை தொடர்ந்து மேற் கொண்டு வருகிறார்.

    அவரது நெல் வயல், மாநில மற்றும் மாவட்ட பிரதிநிதிகள் முன்னிலையில், 11.01.2023 அன்று அறுவடை செய்யப்பட்டதில், எக்டருக்கு 13,625 கிலோ நெல் உற்பத்தி திறன் கிடைக்கப் பெற்றுள்ளது.

    இந்த உற்பத்தித்திறன். மாநிலத்திலேயே முதன்மையாக இருப்பதால், இந்த விவசாயி 2022-2023-ம் ஆண்டின் சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருதுக்கு தகுதியுடையவர் ஆகிறார்.

    திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பங்களை முறையாகக் கடைபிடித்து, மாநிலத்திலேயே அதிக நெல் உற்பத்தி திறன் பெற்றுள்ள விவசாயி. சி.பாலமுருகனை பாராட்டிப் போற்றும் வகையில், இவருக்கு 2023-ம் ஆண்டின் சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருதுச் சான்றிதழ், பரிசுத் தொகை ரூ.5 லட்சம், ரூ.7 ஆயிரம் மதிப்பிலான தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி பதக்கம் ஆகியவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

    • பட்டியல் சமூக இளம்பெண் தாக்கப்பட்ட சம்பவத்திலும் திருமாவளவன் தி.மு.க. அரசை கண்டிக்க முன் வரவில்லை.
    • தி.மு.க. அரசு, மக்களைப் பயமுறுத்தி, மூன்று மொழிகள் கற்றுக் கொள்வதைத் தடுக்கிறது.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    சனாதன எதிர்ப்பு, சனாதன ஒழிப்பு என்று யாராவது ஒரு கூட்டம் போட்டால் அழைப்பு கூட இல்லாமல் திருமாவளவன் கலந்து கொள்வார்.

    போலி சமூகநீதி பேசிக் கொண்டு, தி.மு.க. ஆட்சியில் பட்டியல் சமூக மக்களுக்கு தொடர்ந்து நடக்கும் கொடுமைகளை கண்டுகொள்ளாமல் இருக்கிறார். வேங்கை வயல் சம்பவத்திலும், தி.மு.க. எம்.எல்.ஏ. மகன் வீட்டில் வேலை செய்த பட்டியல் சமூக இளம்பெண் தாக்கப்பட்ட சம்பவத்திலும் திருமாவளவன் தி.மு.க. அரசை கண்டிக்க முன் வரவில்லை. தன்னை நம்பும் ஒரு பெரும் சமூகத்தை தி.மு.க.விடம் அடகு வைக்க நினைக்கிறார்.

    அயோத்தி ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை நிகழ்வை ஒளிபரப்பவும், அன்னதானம், பஜனை போன்ற நிகழ்ச்சிகளையும் தி.மு.க. அரசு தடை செய்தது.

    தமிழக பாஜக தான் நீதிமன்றத்திற்குச் சென்று நேரடி ஒளிபரப்பு செய்ய அனுமதி பெற்றது. அதையே தி.மு.க. மறைக்கப் பார்க்கிறது.

    வரும் பாராளுமன்றத் தேர்தல், இளைஞர்களுக்கான, மாணவர்களுக்கான, விவசாயிகளுக்கான, பெண்களுக்கான நலத்திட்டங்களைச் செயல்படுத்தி, பொதுமக்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியிருக்கும் பிரதமர் மோடிக்கும், ஊழல் மற்றும் குடும்ப ஆட்சி நடத்தும் தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளுக்கும் இடையே நடக்கும் தேர்தல். நமது பிரதமர் மோடி 3-வது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்க இம்முறை தமிழகமும் துணை நிற்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

    வள்ளலார் பிறந்த மண்ணில், அரசுப்பள்ளி மாணவர்கள் மூன்று மொழிகள் கற்பதற்கு தமிழக தடை விதித்துள்ளது. பிரதமர் கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கை, தாய்மொழிக் கல்வியை வலியுறுத்துவதோடு, ஆங்கிலமும் மற்றுமொரு விருப்ப மொழியும் கற்றுக் கொள்வதை ஊக்குவிக்கிறது.

    ஆனால், தி.மு.க. அரசு, மக்களைப் பயமுறுத்தி, மூன்று மொழிகள் கற்றுக் கொள்வதைத் தடுக்கிறது. மூன்று தலைமுறைகளை பிற மொழிகள் கற்றுக் கொள்ளாமல் தடுத்துவிட்டு, 4-வது தலைமுறையையும் நாசமாக்க முயற்சிக்கிறது தி.மு.க. அரசு.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • 10 நாட்கள் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.
    • பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் நாகராஜா கோவிலும் ஒன்று. தமிழகத்தில் நாகதோஷ பரிகார தலங்களில் நாகரே மூலவராக வீற்றிருப்பது இங்கு மட்டும் தான். இதனாலேயே வெளி மாவட்டங்களில் இருந்து மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.

    அவ்வாறு வரும் பக்தர்கள் கோவில் வளாகத்தில் உள்ள நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபாடு செய்கி றார்கள். இப்படி சிறப்பு மிகுந்த நாகராஜா கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் 10 நாட்கள் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான தை திருவிழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலையில் சாமி வாகன பவனி, சிறப்பு அபிஷேகம், சிறப்பு வழிபாடு, ஆன்மிக சொற்பொழிவு, பரதநாட்டியம் மற்றும் இன்னிசை கச்சேரி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.

    9-ம் திருவிழாவான இன்று தேரோட்டம் நடந்தது. இதையொட்டி காலை 7.30 மணிக்கு பாமா மற்றும் ருக்மணியுடன் அனந்த கிருஷ்ணர் தேரில் எழுந்தருளினார். அதன்பிறகு தேர் சக்கரத்தில் தேங்காய் உடைக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து தேரை ஏராளாமான ஆண்களும், பெண்களும் வடம் பிடித்து இழுத்தனர்.

    தேரோட்டத்தில் மாவட் டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். தேரோட்டத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் ஹரே கிருஷ்ணா...ஹரே கிருஷ்ணா என்ற பக்தி கோஷம் எழுப்பியபடி தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். தேரானது 4 ரத வீதியையும் சுற்றி நிலைக்கு வந்து சேர்ந்தது.

    ஆடி அசைந்து வந்த தேரை ஏராளமான மக்கள் வீடுகளின் மாடியில் நின்றும், ரத வீதிகளின் இருபுறமும் நின்றும் பார்த்து சாமி தரிசனம் செய்தனர். தேரோட்டத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு குளிர்பானங்கள், மோர் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

    தேரோட்டத்தை யொட்டி நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    தேரோட்டத்தை யொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தேர் நிலைக்கு வந்ததும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    இன்று இரவு 8 மணிக்கு கச்சேரியும், 9.30 மணிக்கு சப்தாவர்ணம் நிகழ்ச்சியும் நடக்கிறது. 10-ம் திருவிழாவான 27-ந்தேதி காலை சிறப்பு அபிஷேகமும், சிறப்பு பூஜையும், மாலை 5.30 மணிக்கு ஆராட்டும் நடக்கிறது. இரவு 9.30 மணிக்கு ஆராட்டு துறையில் இருந்து சாமி திருக்கோவிலுக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது.

    • திருக்கல்யாண உற்சவம் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • தைப்பூச தேர் திருவிழா.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் பிரசித்தி பெற்ற கதித்தமலை வெற்றி வேலாயுதசாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் தைப்பூச தேர்த்திருவிழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி காலை சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சியும் மாலை 4 மணிக்கு மேல் சாமி திருக்கல்யாண உற்சவம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு மகா அபிஷேகமும் அதனைத் தொடர்ந்து காலை 5 மணிக்கு மேல் சுவாமி புறப்பாடு நிகழ்ச்சியும், காலை 6.30 மணிக்கு சுவாமி ரத ஆரோகணம் கீழ் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். மாலை 4 மணிக்கு மேல் திருத்தேர் நிலை சேர்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 27 -ந்தேதி பரிவேட்டை, 28-ந்தேதி இரவு கோவிலுக்கு முன்புறம் அமைந்துள்ள நவீன தெப்பத்தில் சுவாமி உலா காட்சி நடைபெறும்.

    29-ந்தேதி திருவிழாவின் முக்கிய நிகழ்வாக காலை 7 மணிக்கு மகா அபிஷேகம் அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனையும், சாமி ரத ஆரோகணமும், காலை 10 மணிக்கு மேல் மலைதேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெறும்.

    அன்று இரவு மகா தரிசனம் சுப்பிரமணியசாமி வள்ளி தெய்வானையுடன் புஷ்ப பல்லக்கில் சாமி திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறும். 30-ந்தேதி மஞ்சள் நீராட்டு விழா உடன் தைப்பூச தேர் திருவிழா நிகழ்ச்சிகள் நிறைவடைகின்றது.

    • விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • அம்பேத்கர் படத்தை வைத்து தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணைக்கு திருமூர்த்தி அணையில் இருந்து பி.ஏ.பி. வாய்க்கால் மூலம் உபரி நீரை வழங்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆனால் பொதுப்பணித்துறையினரோ திருமூர்த்தி அணை முழு கொள்ளளவை எட்டிய பிறகுதான் தண்ணீர் திறக்க முடியும் என கூறி வருகின்றனர்.

    இந்நிலையில் உப்பாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இது குறித்து திருப்பூர் மாவட்ட உப்பாறு அணை விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாக குழு உறுப்பினர் சிவக்குமார் கூறும்போது,

    கடந்த 4 ஆண்டுகளாக உப்பாறு அணைக்கு தண்ணீர் வழங்கக்கோரி வலியுறுத்தி வருகிறோம். பலமுறை பி.ஏ.பி. அதிகாரிகளிடம் மனு கொடுத்து உள்ளோம். இது தொடர்பாக 4 முறை பேச்சுவார்த்தைக்கு அழைத்துவிட்டு முந்தையநாள் பேச்சுவார்த்தையை ரத்து செய்கின்றனர். உப்பாறு அணை பகுதி விவசாயிகளுக்கு, கால்நடைகளுக்கு கூட தண்ணீர் கிடைப்பதில்லை. இதே நிலை நீடித்தால் ஊரை காலி செய்துவிட்டு விவசாயத்தை விட்டு விட்டு கூலி வேலைக்கு செல்லும் அவல நிலை ஏற்படும். எங்களுக்கு தண்ணீர் கிடைக்கும் வரை தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

    இதையடுத்து இன்று 2-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடக்கிறது. மேலும் விவசாயிகள் அம்பேத்கர் படத்தை வைத்து தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

    • வள்ளி கும்மிக்கு சிறப்பு சேர்த்த இவருக்கு கடந்த 2019-ம் ஆண்டு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்தது.
    • பள்ளிகளில் இக்கலையை அறிமுகப்படுத்தி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் சென்றடையும் வகையில் இதனை கொண்டு செல்ல வேண்டும்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த வள்ளி கும்மியாட்ட நடன ஆசிரியர் பத்ரப்பனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேட்டுப்பாளையம் அருகே உள்ள தாசனூரில் 1936-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16-ந் தேதி பிறந்தவர் பத்ரப்பன். வள்ளி கும்மியாட்ட கலைஞராக உள்ளார். 8-ம் வகுப்பு வரை படித்துள்ள பத்ரப்பன், சிறுவயது முதலே கிராமிய கலைகள் மீது ஆர்வம் கொண்டு இருந்தார். அதன் காரணமாக கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு கிராமங்களில் நடைபெறும் திருவிழாக்க ளில் வள்ளி கும்மி என்னும் கிராமிய நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார்.

    இதுதவிர 20 ஆண்டுகளில் தாசனூரில் உள்ள மாணவ, மாணவிகள் 170 பேருக்கு இலவசமாக வள்ளி கும்மி கிராமிய கலையை கற்றுக் கொடுத்தார். மேட்டுப்பாளையம் நகராட்சி ராஜபுரத்தில் உள்ள மகளிர் குழுவிற்கும் இலவசமாக வள்ளி கும்மி கிராமிய கலையை கற்றுக் கொடுத்துள்ளார்.

    வள்ளி கும்மிக்கு சிறப்பு சேர்த்த இவருக்கு கடந்த 2019-ம் ஆண்டு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்தது.

    கிராமிய கலையான வள்ளி கும்மி கலையில் ஆண்கள் மட்டுமே பெரும்பாலும் ஈடுபட்டு வந்த நிலையில், அதை மாற்றி பெண்களும் அதிகளவில் பங்கேற்கவும், அவர்களுக்கு பயிற்சியும் அளித்த பெருமைக்குரியவர் பத்ரப்பன்.

    அந்த கலையின் வாயிலாக தேசப்பற்று, வரலாறு ஆகியவற்றையும் கற்றுக் கொடுத்து வருகிறார்.

    தொடர்ந்து வள்ளி கும்மி கலைக்கு சேவையாற்றி வரும் இவரை கவுரவிக்கும் விதமாக மத்திய அரசு பத்ரப்பனுக்கு பத்மஸ்ரீ விருதை அறிவித்துள்ளது.

    இவருக்கு மாதம்மாள் என்ற மனைவியும், நக்கீரன் என்ற மகனும், முத்தம்மாள் என்ற மகளும் உள்ளனர். இவரது மனைவியும், மகனும் இறந்துவிட்டதால் தனது மகள் முத்தம்மாள் வீட்டில் தங்கி இருந்து விவசாயம் பார்த்து வருகிறார். முத்தம்மாளின் கணவர் ரங்கசாமி. இவர் விவசாயம் பார்த்து வருகிறார்.


    பத்மஸ்ரீவிருது குறித்து பத்ரப்பன் கூறியதாவது:-

    நாட்டுப்புற கலை என்பது இயல்பாகவே நம் மண்ணில் உருவானது. இந்த கலைவடிவம் மூலம் தான் மற்ற தகவல்களை மக்களுக்கு கொண்டு போய் சேர்க்க முடியும். நான் 20 வயதில் இருந்தே வள்ளி கும்மி நடனம் ஆடி வருகிறேன்.

    இக்கலை என்னோடு அழிந்து விடாமல் இருப்பதற்காக மேட்டு ப்பாளையம், காரமடை, சிறுமுகை, அன்னூர், சூலூர், கருமத்தம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள 200-க்கும் மேற்பட்டோருக்கு கற்றுக் கொடுத்துள்ளேன்.

    அவர்கள் தற்போது பல பேருக்கு கற்றுக்கொடுப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பாரம்பரிய கலைகளுக்கு எல்லாம் முன்னோடியாக வள்ளி கும்மி கலை உள்ளது. இதன்மூலம் உடலில் நரம்புகள் வலுப்பெற்று உடல் ஆரோக்கியத்துடன் வாழ முடியும். பாரம்பரிய கலை, பண்பாடு, பழக்க வழக்கம், ஒழுக்கத்தை தர முடியும்.

    பள்ளிகளில் இக்கலையை அறிமுகப்படுத்தி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் சென்றடையும் வகையில் இதனை கொண்டு செல்ல வேண்டும். 87 வயதில் எனக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் வள்ளி கும்மி மட்டுமல்லாமல் மற்ற கலைத்துறைகளிலும் உள்ளவர்கள் ஊக்கத்துடன் செயல்பட இந்த விருது துணை புரியும். எனக்கு விருது அறிவித்துள்ள மத்திய அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறனே். இந்த விருதுக்காக தேர்வு செய்யப்பட்டு இருப்பதை நான் எனக்காக கருதாமல் ஒட்டுமொத்த கிராமிய கலைஞர்களுக்கு கிடை க்கும் பரிசாகவும், அங்கீகாரமாகவும் கருதுகிறேன்.

    நான் ஏற்கனவே தமிழக அரசின் கலைமாமணி விருது, கலைமுதுமணி விருதுகளை பெற்றுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

    பத்மஸ்ரீவிருது அறிவிக்கப்பட்டுள்ள பத்ரப்பனை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி எல்.முருகன் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

    இதுகுறித்து எல் முருகன் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதவாது

    ஒயிலாட்ட நாட்டுப்புற கலைகளின் முன்னோடியான, அய்யா பத்ரப்பன் அவர்களுக்கு, மத்திய அரசு "பத்மஶ்ரீ" விருது அறிவித்ததை அடுத்து உடனடியாக அவர்களது இல்லதிற்கு சென்று ஐயா அவர்களை நேரில் சந்தி்த்து மிகுந்த மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் பகிர்ந்து கொண்டேன்.

    வள்ளிக்கும்மி எனும் நாட்டுப்புற நடனத்தில் இடம்பெறும் பாடல்கள் மூலம், தெய்வங்களின் வரலாறு, தேச வரலாறு மற்றும் சமூகத்தின் பிரச்சனைகள் குறித்து பேசுபவர்.

    ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த கலையில், பெண்களுக்கும் சமமான அதிகாரமளித்து பயிற்சி கொடுத்த முன்னோடி.

    தொடர்ந்து 66 ஆண்டு காலமாக தான் நேசித்து செய்யும் இக்கலையின் மூலம், 150-க்கும் மேற்பட்ட தலைசிறந்த மாணவர்களை உருவாக்கி, குருவாக்கியுள்ளார். 300-க்கும் அதிகமான "கும்மி" நிகழ்ச்சிகளை அரங்கேற்றியுள்ளார். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • இளையராஜாவைத் தேற்ற என்ன செய்வதென்று தெரியவில்லை.
    • இந்தப் பெருந்துயரில் என் சகோதரர் இளையராஜா மனதை இழக்காதிருக்க வேண்டும்.

    சென்னை :

    இசைஞானி இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரிணி புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்ற வந்த நிலையில் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், நடிகரும், மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல்ஹாசன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,


    மனம் பதைக்கிறது. அருமைச் சகோதரர் இளையராஜாவைத் தேற்ற என்ன செய்வதென்று தெரியவில்லை. அவர் கைகளை மானசீகமாகப் பற்றிக்கொள்கிறேன். பவதாரிணியின் மறைவு பொறுத்துக்கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ முடியாத ஒன்று. இந்தப் பெருந்துயரில் என் சகோதரர் இளையராஜா மனதை இழக்காதிருக்க வேண்டும். பவதாரிணியின் குடும்பத்தாருக்கு என் நெஞ்சார்ந்த இரங்கல் என கூறியுள்ளார்.

    • தொடர்ந்து வரும் நாட்களிலும் பதிவுகள் அதிகரிக்கும் என்பதற்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
    • அதிக பட்சமாக ரூ.217 கோடி வருவாய் ஈட்டப்பட்டு சாதனை படைக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    பத்திரப் பதிவுத்துறை செயலர் ஜோதி நிர்மலா சாமி வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பொதுவாக ஆண்டு தோறும் தைப்பொங்கலுக்கு பிந்தைய நாட்களில் அதிக அளவில் பத்திரப்பதிவுகள் நடைபெறும். இதையடுத்து, வருகிற 31-ந் தேதி வரை பதிவுக்கான டோக்கன்களை கூடுதலாக வழங்கும்படி சார்பதிவாளர்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. அந்த வகையில், போதிய அளவில் தினசரி கூடுதல் டோக்கன்கள் வழங்கப்பட்டு, பதிவுகள் நடைபெற்று வருகின்றன.

    கடந்த 22-ந் தேதி, ஒரேநாளில் தமிழகம் முழுவதும் 21,004 பத்திரப் பதிவுகள் நடைபெற்று ரூ.168.83 கோடி வருவாய் ஈட்டப்பட்டது. தொடர்ந்து வரும் நாட்களிலும் பதிவுகள் அதிகரிக்கும் என்பதற்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    இந்நிலையில், நேற்று முன்தினம் (24-ந்தேதி) பதிவுத்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 26 ஆயிரம் பத்திரப்பதிவுகள் நடைபெற்றதுடன், அதிக பட்சமாக ரூ.217 கோடி வருவாய் ஈட்டப்பட்டு சாதனை படைக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • பவதாரிணி உடல் நலக்குறைவால் மரணமடைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன்.
    • பவதாரிணி குடும்பத்தார் - நண்பர்களுக்கு என்னுடைய ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை:

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    இசைஞானி இளையராஜா அவர்களின் அன்பு மகள் பின்னணி பாடகி சகோதரி பவதாரிணி, உடல் நலக்குறைவால் மரணமடைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன்.

    தனித்தன்மையுடன் கூடிய குரலால் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருந்த அவரது மரணம், தமிழ் இசை உலகிற்கு பேரிழப்பாகும்.

    அவருடைய மரணத்துக்கு என் ஆழ்ந்த இரங்கல்.

    பவதாரிணியை இழந்து வாடும் இசைஞானி இளையராஜா சார், சகோதரர்கள் கார்த்திக்ராஜா, யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட அவருடைய குடும்பத்தார் - நண்பர்களுக்கு என்னுடைய ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • முப்படை சார்பில் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பதக்கங்கள் பெற்றவர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

    சென்னை :

    சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே 75-வது குடியரசு தின விழா நடைபெற்று வருகிறது. இன்று காலை 8 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கவர்னர் ஆர்.என். ரவி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து முப்படை சார்பில் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை கவர்னர் ஆர்.என். ரவி ஏற்றுக் கொண்டார்.

    இதனை தொடர்ந்து, வீரதீர செயல் புரிந்தவர்களுக்கு பதக்கங்களையும், விருதுகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அரசு பள்ளி கட்டுவதற்காக ரூ.7 கோடி மதிப்புள்ள நிலத்தை அரசுக்கு நன்கொடையாக கொடுத்த ஆயி பூரணம் அம்மாளுக்கு முதலமைச்சரின் சிறப்பு விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.


    பின்னர், பதக்கங்கள் பெற்றவர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

    • சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது.
    • விண்ணையே பிளக்கும் வகையில் அரோகரா... சரணகோஷம்

    பழனி:

    தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனியில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு தைப்பூச திருவிழா கடந்த 19-ந்தேதி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 6-ம் நாளான நேற்று முன்தினம் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது.

    இந்நிலையில் தைப்பூச திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மாலை 4.30 மணிக்கு நடைபெற்றது. தைப்பூச திருவிழாவில் திருக்கல்யாணம், தேரோட்டத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் பழனியில் குவிந்தனர்.

    தேரோட்டத்தையொட்டி முன்னதாக நேற்று அதிகாலை 5 மணிக்கு தோளுக்கினியாள் வாகனத்தில் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானையுடன் சண்முகநதியில் தீர்த்தவாரிக்கு எழுந்தருளினார். அங்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்கப்பட்டது.

    பின்னர் பகல் 11.15 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி- தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து கோவிலில் இருந்து முத்துக்குமாரசுவாமி, வள்ளி- தெய்வானையுடன் தேர்கட்டி மண்டபத்திற்கு வந்தார். பகல் 12 மணிக்கு திருத்தேரில் சாமி எழுந்தருளினார்.

    தேரோட்டம்

    மாலை 4.30 மணிக்கு திருத்தேரில் எழுந்தருளி இருந்த முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது. அதன்பின்னர் தேர் சக்கரங்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டது.

    அப்போது கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...! வீரவேல் முருகனுக்கு அரோகரா...! ஞானதண்டாயுதபாணிக்கு அரோகரா...!" என்று சரண கோஷம் எழுப்பினர். இதனால் விண்ணையே பிளக்கும் வகையில் சரணகோஷம் முழங்கியது.

    தொடர்ந்து நிலையில் இருந்து பெரிய தேர் புறப்பட்டு கிழக்கு, தெற்கு, மேற்கு ரதவீதிகள் வழியாக வலம் வந்தது. அப்போது தேரின் பின்னால் கோவில் யானை கஸ்தூரியும் நடந்து வந்தது. தேரோட்ட நிகழ்ச்சியை காண தேரடி, நான்கு ரத வீதிகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர். வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு வழிபாடு நடத்தி தரிசனம் செய்தனர்.

    • குடியரசு தின விழாவில் ஆர்.என். ரவி தேசியக்கொடி ஏற்றினார்.
    • முதலமைச்சர் மற்றும் ஆளுநர் முப்படை மற்றும் காவல் சிறப்புப்பிரிவின் மரியாதையை ஏற்றனர்.

    ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு வீரதீரச் செயல்கள் புரிந்த அரசு ஊழியர்கள், பொதுமக்களுக்கு வீரதீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கங்களை வழங்கி வருகின்றன. இப்பதக்கம் பெறுபவர்களுக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலை, ரூ. 9 ஆயிரம் மதிப்புள்ள தங்க முலாம் பூசிய பதக்கம் மற்றும் சான்றிதழும் வழங்கப்படும்.

    இந்த ஆண்டுக்கான வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கங்களை ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் சிவக்குமார், காயல்பட்டினம் யாசர் அராபத், நெல்லை டேனியல் ஆகியோருக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

    சிவக்குமார்

    தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் கடந்த டிசம்பர் மாதம் 17, 18-ந்தேதிகளில் பெய்த அதிதீவிர கனமழையினால் வரலாறு காணாத வகையில் ஏற்பட்ட தாமிரபரணி ஆற்று வெள்ளம் மற்றும் காட்டாற்று வெள்ளம் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.

    ஸ்ரீவைகுண்டம் வட்டத்திற்குட்பட்ட தாமிரபரணி ஆற்றங்கரையில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள 14 கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டார்.

    மேற்படி கிராமங்களில் இரவு 10.30 மணி முதல் ஒவ்வொரு வீடாக சென்று தாமிரபரணியில் வெள்ளம் வரப்போவதாகவும், உடனே வீடுகளை விட்டு வெளியேறுமாறும் கூறி அவர்களை வாகனங்களில் ஏற்றி பாதுகாப்பான பகுதிக்கு அழைத்து சென்று தங்க வைத்தார். மேலும் அவர் நேரடி துரித கண்காணிப்பில் சுமார் 2,400 பேர் மீட்கப் பட்டனர்.

    தன்னலம் கருதாமல் துணிச்சலோடு மீட்புப் பணிகளில் ஈடுபட்ட அவரது துணிச்சலான செயலை பாராட்டி சிவக்குமாருக்கு 2024-ம் ஆண்டிற்கான வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்கி அரசு சிறப்பித்துள்ளது.

    யாசர் அராபத்

    தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கடந்த டிசம்பர் மாதம் 17, 18-ந் தேதிகளில் பெய்த அதிதீவிர கன மழையினால் வரலாறு காணாத வெள்ளம் மற்றும் காட்டாற்று வெள்ளம் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.

    இதனால் கடம்பா குளத்திற்கு கீழ் உள்ள பல்வேறு குளங்களில் இருந்து பாய்ந்தோடிய மழை வெள்ளம் திருச்செந்தூர் வட்டம், தண்ணீர்பந்தல் கிராமத்தையும் மூழ்கடித்தது. அந்த கிராமத்தில் உள்ளவர்கள் சுமார் 250 பேர் தண்ணீரில் சிக்கித் தவித்தனர்.

    அவர்களை மீட்க தனியார் அமைப்புகள், அரசு அதிகாரிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்த நிலையில் காயல்பட்டினம், சிங்கித்துறையை சேர்ந்த மீனவர் யாசர் அராபத் என்பவரிடம் உதவி கோரப்பட்டது.

    இதையடுத்து அவரது தலைமையில் 16 மீனவர்கள் ஒரு குழுவாக தங்களது உயிரையும் துச்சமென நினைத்து தண்ணீரில் தத்தளித்த தண்ணீர் பந்தல் கிராமத்தில் உள்ள மக்களை தங்களுடைய படகில் சென்று மீட்டு வந்தனர். மேலும் அங்குள்ள ஒரு உப்பளத்தில் தவித்துக் கொண்டிருந்த 13 உப்பளத் தொழிலாளர்களையும் 2 மணி நேர கடும் போராட்டத்திற்குப் பின் மீட்டு வந்துள்ளனர்.

    தனது உயிரையும் துச்சமென நினைத்து தண்ணீரில் தத்தளித்த மக்களை காப்பாற்றிய அவரது துணிச்சலான செயலை பாராட்டி யாசர் அராபத்துக்கு 2024-ம் ஆண்டுக்கான வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்கி அரசு சிறப்பித்துள்ளது.

    டேனியல் செல்வ சிங்

    நெல்லை மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த கன மழை மற்றும் தாமிரபரணி வெள்ளத்தினால் திருநெல்வேலி மாநகரின் பல்வேறு குடியிருப்புப் பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது.

    இந்த நிலையில் திருநெல்வேலி டவுன் தடிவீரன் கோவில் கீழத்தெருவை சேர்ந்த டேனியல் செல்வ சிங் என்பவர் தான் வசிக்கும் தெருக்களில் வெள்ள நீரால் சூழப்பட்ட வீடுகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு பால் பாக்கெட், ரொட்டி பாக்கெட், மருந்துகள் ஆகியவற்றை தண்ணீரில் நீந்தியவாறு கொண்டு சென்று சேர்த்துள்ளார்.

    இவர் தன்னலம் கருதாமல் துணிச்சலோடு தன் உயிரையும் துச்சமென நினைத்து கடந்த டிசம்பர் மாதம் 18, 19-ந்தேதி ஆகிய 2 நாட்கள் தன்னார்வ மீட்புப் பணிகளில் ஈடுபட்டு உள்ளார்.

    தன்னலம் கருதாமல் துணிச்சலோடு தன் உயிரையும் துச்சமென நினைத்து மீட்புப் பணிகளில் ஈடுபட்ட அவரது துணிச்சலான செயலை பாராட்டி டேனியல் செல்வசிங்குக்கு 2024-ம் ஆண்டிற்கான வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்கி அரசு சிறப்பித்துள்ளது.

    ×