என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தன்னை நம்பும் சமூகத்தை தி.மு.க.விடம் அடகு வைத்துவிட்டார்- திருமாவளவன் மீது அண்ணாமலை பாய்ச்சல்
    X

    'தன்னை நம்பும் சமூகத்தை தி.மு.க.விடம் அடகு வைத்துவிட்டார்'- திருமாவளவன் மீது அண்ணாமலை பாய்ச்சல்

    • பட்டியல் சமூக இளம்பெண் தாக்கப்பட்ட சம்பவத்திலும் திருமாவளவன் தி.மு.க. அரசை கண்டிக்க முன் வரவில்லை.
    • தி.மு.க. அரசு, மக்களைப் பயமுறுத்தி, மூன்று மொழிகள் கற்றுக் கொள்வதைத் தடுக்கிறது.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    சனாதன எதிர்ப்பு, சனாதன ஒழிப்பு என்று யாராவது ஒரு கூட்டம் போட்டால் அழைப்பு கூட இல்லாமல் திருமாவளவன் கலந்து கொள்வார்.

    போலி சமூகநீதி பேசிக் கொண்டு, தி.மு.க. ஆட்சியில் பட்டியல் சமூக மக்களுக்கு தொடர்ந்து நடக்கும் கொடுமைகளை கண்டுகொள்ளாமல் இருக்கிறார். வேங்கை வயல் சம்பவத்திலும், தி.மு.க. எம்.எல்.ஏ. மகன் வீட்டில் வேலை செய்த பட்டியல் சமூக இளம்பெண் தாக்கப்பட்ட சம்பவத்திலும் திருமாவளவன் தி.மு.க. அரசை கண்டிக்க முன் வரவில்லை. தன்னை நம்பும் ஒரு பெரும் சமூகத்தை தி.மு.க.விடம் அடகு வைக்க நினைக்கிறார்.

    அயோத்தி ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை நிகழ்வை ஒளிபரப்பவும், அன்னதானம், பஜனை போன்ற நிகழ்ச்சிகளையும் தி.மு.க. அரசு தடை செய்தது.

    தமிழக பாஜக தான் நீதிமன்றத்திற்குச் சென்று நேரடி ஒளிபரப்பு செய்ய அனுமதி பெற்றது. அதையே தி.மு.க. மறைக்கப் பார்க்கிறது.

    வரும் பாராளுமன்றத் தேர்தல், இளைஞர்களுக்கான, மாணவர்களுக்கான, விவசாயிகளுக்கான, பெண்களுக்கான நலத்திட்டங்களைச் செயல்படுத்தி, பொதுமக்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியிருக்கும் பிரதமர் மோடிக்கும், ஊழல் மற்றும் குடும்ப ஆட்சி நடத்தும் தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளுக்கும் இடையே நடக்கும் தேர்தல். நமது பிரதமர் மோடி 3-வது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்க இம்முறை தமிழகமும் துணை நிற்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

    வள்ளலார் பிறந்த மண்ணில், அரசுப்பள்ளி மாணவர்கள் மூன்று மொழிகள் கற்பதற்கு தமிழக தடை விதித்துள்ளது. பிரதமர் கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கை, தாய்மொழிக் கல்வியை வலியுறுத்துவதோடு, ஆங்கிலமும் மற்றுமொரு விருப்ப மொழியும் கற்றுக் கொள்வதை ஊக்குவிக்கிறது.

    ஆனால், தி.மு.க. அரசு, மக்களைப் பயமுறுத்தி, மூன்று மொழிகள் கற்றுக் கொள்வதைத் தடுக்கிறது. மூன்று தலைமுறைகளை பிற மொழிகள் கற்றுக் கொள்ளாமல் தடுத்துவிட்டு, 4-வது தலைமுறையையும் நாசமாக்க முயற்சிக்கிறது தி.மு.க. அரசு.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    Next Story
    ×