என் மலர்
உள்ளூர் செய்திகள்
- அமைச்சர் மா.சுப்பிரமணியன் கன்னியாகுமரி வந்தார்.
- தனிநபர் மினி மாரத்தானில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று ஓடினார்.
கன்னியாகுமரி:
தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று இரவு கன்னியாகுமரி வந்தார். அங்கு வந்து அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இரவு அங்குள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான புதிய அரசு விருந்தினர் மாளிகையில் தங்கினார்.
இன்று அதிகாலை 4 மணிக்கு கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் இருந்து காணிமடம் வரை உள்ள 21.4 கிலோ மீட்டர் தூரம் நடந்த தனிநபர் மினி மாரத்தானில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பங்கேற்று ஓடினார். அவருடன் அமைச்சர் மனோதங்கராஜ் கலந்து கொண்டு ஓடினார்.
கன்னியாகுமரியில் நடந்த இந்த மினி மாரத்தானில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் 148-வது முறையாக ஓடி சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
- அங்கித் திவாரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கடந்த டிசம்பர் 1ம் தேதி கைது செய்யப்பட்டார்.
- 4வது முறையாக நீதிமன்றக்காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டரான சுரேஷ்பாபுவிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கடந்த டிசம்பர் 1ம் தேதி கைது செய்யப்பட்டார். நீதிமன்ற காவலில் அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அங்கித் திவாரி கைது செய்யப்பட்டு இன்றுடன் 67 நாட்கள் ஆகிறது. இதுவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை. எனவே அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் அவரது தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனு கடந்த 1ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது இதுகுறித்து விசாரித்த நீதிபதி மோகனா அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்குவது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் பதில் அளிக்கக்கோரி விசாரணையை இன்றைக்கு (5ம் தேதி) ஒத்தி வைத்தார். இந்நிலையில் இன்று அந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. விசாரணையின் போது அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்க அரசு தரப்பு வக்கீல்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த வழக்கில் மேலும் சிலரை விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் இவருக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது என தெரிவித்தனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மோகனா மாலை உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்தார்.
ஏற்கனவே அங்கித் திவாரி ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது என்பதும், அவருக்கு 4வது முறையாக நீதிமன்றக்காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
- விஜயகாந்த் மீது அவரது மனைவி மற்றும் குடும்பத்தினரும் மிகுந்த பாசம் வைத்திருந்தனர்.
- விஜயகாந்தின் எண்ணப்படியே பிரேமலதாவின் முயற்சியால் இந்த அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
சென்னை:
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மரணமடைந்து ஒரு மாதத்திற்கும் மேல் ஆகிறது. கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பொதுமக்கள் தினமும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
விஜயகாந்த் மீது அவரது கட்சியினரும் பொது மக்களும் வைத்திருக்கும் அளவு கடந்த பாசம் இதன் மூலம் வெளிப்பட்டுள்ளது. விஜயகாந்த் மீது அவரது மனைவி மற்றும் குடும்பத்தினரும் மிகுந்த பாசம் வைத்திருந்தனர்.
உடல் நலக்குறைவால் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே ஓய்வெடுத்து வந்த நிலையில் அவரது மனைவி பிரேமலதா விஜய காந்த்தை ஒரு தாய் போல இருந்து கவனித்துக் கொண்டார் என்றே கட்சியினர் அவரைப் பற்றி குறிப்பிடுவதுண்டு. விஜயகாந்தால் கடைசி காலத்தில் எந்த செயலையும் தனியாக செய்ய முடியாத நிலை இருந்து வந்தது.
அப்போது அவருக்கு தோள் கொடுத்து துணையாக இருந்தது பிரேமலதாவும் அவரது குடும்பத்தினரும் தான்.
விஜயகாந்த் உயிருடன் இருந்த போது அவருக்கு பணி விடைகள் செய்யும் வீடியோக்களையும் இதற்கு முன்பு பிரேமலதா வெளியிட்டுள்ளார். விஜய காந்த்துக்கு அவர் முடிவெட்டி டை அடித்து விடும் வீடியோ ஒன்று அவரது மரணத்திற்கு பிறகும் வைரலாக பரவியது. இப்படி விஜயகாந்தின் மீது வைத்திருந்த அன்பு, பாசம் காரணமாக அவரது பெயரில் அறக்கட்டளை ஒன்றையும் தொடங்க இருப்பதாக பிரேமலதா அறிவித்து உள்ளார்.
விஜயகாந்தின் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வருபவர்களுக்கு தினமும் அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது. விஜயகாந்தின் எண்ணப்படியே பிரேமலதாவின் முயற்சியால் இந்த அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பிரேம லதா தனது கணவர் விஜயகாந்தின் உருவத்தை வலது கையில் டாட்டுவாக வரைந்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
டாட்டூ கலைஞர் ஒருவர் பிரேமலதாவை அமர வைத்து அவரது வலது கையில் விஜயகாந்த் சிரித்த முகத்துடன் இருக்கும் உருவத்தை வரைந்துள்ளார். அதனை பிரேமலதா பார்த்து ரசிக்கும் காட்சிகளும் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளன.
இந்த வீடியோவை தே.மு.தி.க.வினரும் பொது மக்களும் தங்களது நண்பர்களுக்கு அனுப்பி வருகிறார்கள் இதன் மூலமாக தனது கணவர் விஜயகாந்த் மீது பிரேமலதா வைத்துள்ள அன்பின் வெளிப்பாடு மீண்டும் வெளிப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
- கொடியின் நிறம் மற்றும் கொள்கைகளை விளக்கும் வகையில் கொடி வடிவமைக்கப்படுகிறது.
- பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை:
தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் விஜய் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார்.
விஜய் அறிவிப்பு அரசியல் வட்டாரத்தை மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் முழுவதும் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
கட்சியின் பெயரை கூறி தொண்டர்கள் வீடு வீடாக சென்று இனிப்பு வழங்கி அறிமுகம் செய்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.
அடுத்த கட்டமாக விஜய் கட்சியின் கொடியை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். கொடியின் நிறம் மற்றும் கொள்கைகளை விளக்கும் வகையில் கொடி வடிவமைக்கப்படுகிறது.
இந்நிலையில் கட்சி யின் சின்னம் பற்றி கட்சி தலைவர் விஜய் அகில இந்திய விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார்.
கட்சி சின்னம் பெண்களை கவரும் வகையில் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தீவிரமாக ஆலோசனை செய்து சின்னம் தேர்வு செய்யப்பட உள்ளது.
ஏற்கனவே தேர்தல் கமிஷனுக்கு 5 சின்னம் கொடுக்கப்பட்ட நிலையில் அடுத்த கட்டமாக பெண்களை கவரும் வகையில் கட்சி சின்னம் தேர்வு செய்யப் பட்டு தேர்தல் கமிஷனுக்கு விரைவில் அனுப்பப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
- போராட்டத்தில் ஈடுபட போவதாக கோவில் பக்தர்கள் சார்பில் அறிவிக்கப்பட்டது.
- பக்தர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
நெல்லை:
நெல்லை சந்திப்பு கருப்பந்துறை பகுதியில் பிரசித்தி பெற்ற அழியாபதி ஈஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
தாமிரபரணி நதிக்கரையில் அமைந்திருக்கும் இந்த கோவிலுக்கு முன் பகுதியில் 39.52 சென்ட் நிலம் கோவில் நந்தவனமாக பயன் படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலம் சில நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு நந்தவனம் பயன்பாட்டுக்கு இல்லாத நிலை உருவாகி இருப்பதாக அப்பகுதியினர் புகார் கூறினர்.
இதனால் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி சுவாமி அழியாபதி ஈஸ்வரரிடம் விண்ணப்பம் செய்து பிரார்த்தனை செய்து போராட்டத்தில் ஈடுபட போவதாக கோவில் பக்தர்கள் சார்பில் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை அங்கு பக்தர்கள் பிரார்த்தனை போராட்டம் நடத்தப் போவதாக வந்த தகவலை அடுத்து நெல்லை சந்திப்பு போலீஸ் உதவி கமிஷனர் ராஜேஸ்வரன் தலைமையில் போலீசார் கோவில் வளாகத்தில் குவிக்கப்பட்டனர்.
அப்போது பக்தர்கள் பிரார்த்தனை செய்ய கோவிலுக்கு வருகை தந்த நிலையில் கோவில் முன்பு ஒற்றை காலில் நின்றவாறு சிவ நாமம் பாடி ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நந்தவனத்தை மீட்க பிரார்த்தனை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து பக்தர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது பிரார்த்தனையில் ஈடுபட்ட பக்தர்கள் தரப்பில், உடனடியாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலம் மீட்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் நில அளவை பிரிவு அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு பிரச்சனைக்குரிய இடம் அளவீடு செய்யப்பட்டது.
தொடர்ந்து அரசு ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்ட நிலையில் சம்பந்தப்பட்ட இடம் கோவில் நந்தவனம் என கண்டறியப்பட்டதை தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
இன்னும் ஒரு சில நாட்களில் இடத்தை மீட்டு தருவது தொடர்பான உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் அதிகாரிகளும், வருவாய் துறை அதிகாரிகளும் உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து பக்தர்கள் அங்கிருந்து தற்காலிகமாக கலைந்து சென்றனர்.
இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மாநில செயலாளர் குற்றாலநாதன், மாவட்ட பொதுச்செயலாளர் பிரம்மநாயகம், மாவட்ட துணைத்தலைவர்கள் செல்வராஜ், ராஜ செல்வம், மாவட்ட செயலாளர்கள் சுடலை, சுரேஷ், சங்கர், விமல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கலெக்டர் அலுவலகத்திற்கு பி.ஆர்.பாண்டியன் தலைமையில் ஏராளமான விவசாயிகள் வந்தனர்.
- மேகதாதுவில் அணைக்கட்ட கூடாது என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
தஞ்சாவூர்:
காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் கடந்த 1 - ந்தேதி நடைபெற்றது. இதில், மேகதாது அணை கட்டுவது தொடர்பாக கர்நாடகா அரசின் வரைவு திட்ட அறிக்கை குறித்த வாக்கெடுப்பில் தமிழக அரசின் பிரதிநிதியான நீர் வளத்துறை செயலர் சந்தீப் சக்சேனா எதிர்ப்பு தெரிவித்தார். இந்த எதிர்ப்பையும் மீறி வாக்கெடுப்பு நடத்த ஆணையத் தலைவர் அனுமதித்தபோது, அதில் சந்திப் சக்சேனா பங்கேற்றார்.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள போது நீதிமன்றத்தை அவமதிக்கும் நோக்கோடு வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. இது முற்றிலும் சட்டத்துக்கு புறம்பானது மட்டுமல்லாமல் நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கும் முரணானது என்று தமிழகத்தில் பல்வேறு கட்சி தலைவர்கள், விவசாயிகள் தெரிவித்தனர். மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்று வலியுறுத்தினர்.
இந்த நிலையில் தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் ஏராளமான விவசாயிகள் வந்தனர்.
பின்னர் அவர்கள் கலெக்டர் தீபக்ஜேக்கப்பிடம் , மேகதாதுவில் அணை கட்ட முயலும் கர்நாடக அரசின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி மனு அளித்தனர்.
இதையடுத்து கலெக்டர் அலுவலகம் முன்பு நின்று கொண்டு மேகதாது அணை தொடர்பான காவிரி மேலாண்மை ஆணையத்தின் தீர்மான நகலை தீயிட்டு எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மேகதாதுவில் அணைக்கட்ட கூடாது என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். உடனே போலீசார் எரிந்து கொண்டிருந்த நகல் மீது தண்ணீர் ஊற்றினர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- பொதுமக்களிடம் இனிப்பு வழங்கி கட்சியின் பெயரை சொல்லி ஆதரவு திரட்டி வருகின்றனர்.
- மாநிலம் முழுவதும் பரபரப்பு வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் தொண்டர்களால் ஒட்டப்பட்டன.
சென்னை:
தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் விஜய் கடந்த 2-ந் தேதி தனது அரசியல் பயணத்தை தொடங்கினார்.
இதைத் தொடர்ந்து கட்சி தொண்டர்கள் உற்சாகத்தில் தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.
மாநிலம் முழுவதும் பரபரப்பு வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் தொண்டர்களால் ஒட்டப்பட்டன.
இந்நிலையில் கட்சி தொடங்கியதற்கு வாழ்த்து தெரிவித்த அரசியல் கட்சி தலைவர்கள், திரை உலக பிரபலங்கள், தொண்டர்கள், பொதுமக்களுக்கு விஜய் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். கிராமங்களிலும் நகர் புறங்களிலும் தொண்டர்கள் வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் இனிப்பு வழங்கி கட்சியின் பெயரை சொல்லி ஆதரவு திரட்டி வருகின்றனர்.
சென்னையில் பல்வேறு இடங்களில் குறிப்பாக அம்பத்தூரில் கண்தான முகாம், மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, வில்லிவாக்கம், கே.கே.நகரில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து கட்சித் தலைவர் விஜய்யின் அடுத்த அறிவிப்பை எதிர்பார்த்து உற்சாகத்தில் தொண்டர்கள் காத்திருக்கின்றனர்.
- தேசிய அளவில் இந்தியா கூட்டணியின் நிலைமை நாளுக்கு நாள் பரிதாபமாக மாறிக் கொண்டு இருக்கிறது.
- இந்தியா கூட்டணியில் இதுவரை ஒரு மாநிலத்தில் கூட சுமூகமான தொகுதி உடன்பாடு ஏற்படவில்லை.
பாராளுமன்ற தேர்தல் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. பாரதிய ஜனதா கட்சி மிக விரைவில் அதிரடியாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு விடும் என்று டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாரதிய ஜனதாவின் நடவடிக்கைகள் அனைத்தும் அடுத்தடுத்து அதிரடியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. கூட்டணி தேர்வு என தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு அனைத்து விவகாரங்களிலும் பாரதிய ஜனதா ரகசியத்தை கடை பிடிக்கிறது.
தமிழகத்திலும் பாரதிய ஜனதாவின் வளர்ச்சியும், எழுச்சியும் பிரமிக்க தக்க வகையில் உள்ளது. அதே சமயத்தில் தேசிய அளவில் இந்தியா கூட்டணியின் நிலைமை நாளுக்கு நாள் பரிதாபமாக மாறிக் கொண்டு இருக்கிறது.
இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், தி.மு.க., ராஷ்டீரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதாதளம், சமாஜ்வாடி, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்பட 28 கட்சிகள் இருந்தன.
திடீரென ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார் அந்தர் பல்டி அடித்து இந்தியா கூட்டணியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கூட்டணிக்கு போய்விட்டார். இது இந்தியா கூட்டணிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய பின்னடைவாகும்.
அடுத்து இந்தியா கூட்டணியில் இதுவரை ஒரு மாநிலத்தில் கூட சுமூகமான தொகுதி உடன்பாடு ஏற்படவில்லை. மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி காங்கிரசை மிரள வைத்துக் கொண்டே இருக்கிறார்.
இரண்டே இரண்டு தொகுதிதான் தருவேன் என்ற அவர் தனது பிடி வாதத்தை இன்றுவரை தளர்த்தவில்லை. காங்கிரஸ் ஒத்துவராவிட்டால் திரிணா முல் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என்று அவர் உறுதியாக இருக்கிறார்.
உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் காங்கிரசை அலற வைத்துள்ளார். மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் வெறும் 11 தொகுதி தான் காங்கிரசுக்கு தரப்ப டும் என்று அவர் அறிவித்தார். அவரை காங்கிரசார் சமரசம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
கொஞ்சம் மனம் இரங்கி இருக்கும் அகிலேஷ் யாதவ் இறுதியில் 15 முதல் 20 தொகுதிகள் வரை கொடுக்கலாம் என்று கூறப்படுகிறது.
பீகாரில் லல்லு பிரசாத் யாதவ் ஓரளவு தொகுதிகளை காங்கிரசுக்கு கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மராட்டியத்தில் சிவசேனாவுக்கும், தேசியவாத காங்கிரசுக்கும் போக மிச்சம் இருக்கும் இடங்கள் தான் காங்கிரசுக்கு கிடைக்கும்.
டெல்லியிலும், பஞ்சாபிலும் ஆம்ஆத்மி கட்சி ஆதிக்கம் செலுத்துகிறது. அந்த கட்சி காங்கிரசுக்கு அதிக இடங்கள் தர இயலாது என்று திட்டவட்டமாக கூறி உள்ளது. இதனால் தலைநகரிலும் காங்கிரஸ் சரியான பிடிமானம் இல்லாமல் தவிக்கிறது.
அதுபோல வேறு எந்த மாநிலத்திலும் காங்கிரசுக்கு தோழமை கட்சிகள் சாதகமாக இல்லை. விதிவிலக்காக தமிழகத்தில் மட்டும் தி.மு.க. சற்று பெருந்தன்மையுடன் காங்கிரசை நடத்துகிறது. கடந்த தடவை போல 9 தொகுதிகளை காங்கிரஸ் மீண்டும் கேட்கிறது.
தி.மு.க. அதிக தொகுதிகளில் போட்டியிட உறுதியாக முடிவு செய்தால் காங்கிரசுக்கு 7 தொகுதிகள்தான் கிடைக்கும் என்கிறார்கள்.
இந்த நிலையில் மற்ற எந்த மாநிலங்களிலும் காங்கிரசுக்கு ஒருமித்த நிலை இல்லை. இதன் காரணமாக இந்தியா கூட்டணி இடியாப்ப சிக்கலில் உள்ளது. கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், ஒடிசா உள்பட பல மாநிலங்களில் காங்கிரஸ் தனித்து விடப்பட்டுள்ளது.
வருகின்ற பாராளுமன்ற தேர்தல் குறித்து விளவங்கோடு சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி நிர்வாகிகள் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டார்.
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளரும் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினருமான ராஜ்குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தில் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார், மாவட்ட தலைவர் பினுலால் சிங், வட்டார நகர தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.
- பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் ரூ. 2 கோடியே 32 லட்சம் வாடகை பாக்கி செலுத்தாமல் பாக்கி வைத்து இருந்தது.
- இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் பல தடவை நோட்டீசு அனுப்பியும் எந்தவித பலனும் இல்லாமல் இருந்தது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 12 ஆயிரத்து 431 சதுர அடி காலிமனையில் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து நடத்தி வரும் தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்துக்கு 1984-ம் ஆண்டில் இருந்து வாடகைக்கு வழங்கப்பட்டது.
இந்த வகையில் கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந்தேதி வரை 34 ஆண்டு காலத்துக்கு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் ரூ. 2 கோடியே 32 லட்சம் வாடகை பாக்கி செலுத்தாமல் பாக்கி வைத்து இருந்தது. இந்த வாடகை பாக்கி வசூலிக்க குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகத்தின் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் பல தடவை நோட்டீசு அனுப்பியும் எந்தவித பலனும் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் இந்த வாடகை பாக்கியை வட்டியுடன் வசூலிக்கு உத்தரவிட வேண்டும் என்று திருத்தொண்டர் சபை ராதாகிருஷ்ணன் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துஇருந்தார். இந்த மனுவை விசாரித்து நீதிபதி புகழேந்தி, பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்திடம் இருந்து வாடகை பாக்கியை வசூலிக்க இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தார்.
இதற்கிடையில் அறநிலையத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின் காரணமாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு செலுத்த வேண்டிய வாடகை பாக்கியில் ஒரு தவணையாக முதல் கட்டமாக ரூ.84 லட்சத்து 70 ஆயிரத்து 46-க்கு காசோலையை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நிர்வாகத்தினருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
- பிப்ரவரி 11-ந்தேதி "என் மண் என் மக்கள்" யாத்திரை 200-வது தொகுதியாக சென்னை வர இருக்கிறது.
- தற்போது வரை 183 தொகுதிகளை கடந்திருக்கிறோம். பல்லடத்தில் யாத்திரை நிறைவு பெறுகிறது.
தமிழக பா.ஜனதாவின் தலைமை தேர்தல் அலுவலகம் சென்னை அமைந்தகரையில் அமைக்கப்பட்டு உள்ளது. 40 தொகுதிகளுக்கும் தனித்தனி அறைகள், மற்றும் பல்வேறு துறைகளுக்கான அறைகள் இணையதள வசதியுடன் அமைக்கப்பட்டு உள்ளது.
இதன் திறப்பு விழா இன்று நடந்தது. தேர்தல் பொறுப்பாளர்கள் சுதாகர் ரெட்டி, அரவிந்த் மேனன் ஆகியோர் முன்னிலையில் இந்த அலுவலகத்தை தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை திறந்து வைத்தார்.
பின்னர் அவர் நிர்வாகிகள் மத்தியில் பேசியதாவது:-
கடந்த 2019 தேர்தலை வைத்து பார்க்கும்போது வருகிற ஏப்ரல் 2 அல்லது 3-வது வாரத்தில் தமிழகத்தில் தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளது.
பா.ஜனதாவுக்காக காலம் காலமாக உழைத்தவர்களின் ஏக்கமும், கனவும் நிறைவேறும் காலம் நெருங்கி வருகிறது. இன்னும் 75 நாட்கள் இருக்கிறது. இதுவரை கட்சிக்காக உழைத்து கொண்டிருப்பவர்கள் தங்கள் உழைப்பை இரட்டிப்பாக்க வேண்டும்.
என் மண் என் மக்கள் யாத்திரை மூலமாக இதுவரை 183 சட்டமன்ற தொகுதிகளை சந்தித்துள்ளோம். 200-வது தொகுதியாக சென்னையில் வருகிற 11-ந்தேதி யாத்திரை செல்கிறோம். இதில் ஜே.பி. நட்டா கலந்து கொள்வார். 234-வது தொகுதியாக திருப்பூரில் யாத்திரை நிறைவு பெறுகிறது.
எல்லா தொகுதிகளிலும் பிரதமர் மோடியின் திட்டங்களால் பயன் அடைந்த 100 பேரை தேடி கண்டுபிடித்து அவர்களில் 10 பேரை மேடையில் ஏற்றி பேச வைத்தோம்.
ரோட்டில் நடந்து சென்ற யாத்திரையை தாண்டி பல தரப்பட்ட மக்களை சந்தித்து வருகிறோம். அரசியல் களம் எப்படி மாறி இருக்கிறது என்பது நமக்கு தெரியும். இந்த ஆண்டு மிகப்பெரிய அரசியல் புரட்சி ஏற்படும்.
பிரதமர் மோடி ராமர் சிலை பிரதிஷ்டைக்காக சங்கல்பம் மேற்கொண்டு 11 நாள் விரதம் இருந்தார். அதேபோல் மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைய வருகிற 75 நாட்களும் உழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
என் மண் என் மக்கள் யாத்திரை வருகிற 25-ந்தேதி பல்லடத்தில் நிறைவு பெறுகிறது. அன்றைய தினம் பிரதமர் மோடி பங்கேற்கும் பிரமாண்ட கூட்டம் நடக்கிறது. இதில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்பார்கள்.
கடந்த 2 ஆண்டுகளாக பிரதமர் மோடி கோவை பகுதிக்கு செல்லவில்லை. எனவே இந்த கூட்டத்தை பல்லடத்தில் நடத்துகிறோம்.
இந்த தேர்தல் வித்தியாசமான தேர்தல். மாற்று கட்சிகளை சேர்ந்தவர்களும் மத்தியில் பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று விரும்பு கிறார்கள். தமிழகத்தில் பா.ஜனதா மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது. எல்லோரும் திரும்பி பார்க்கும் வகையில் தேர்தல் முடிவுகள் அமையும்.

கூட்டணியை பொறுத்த வரை ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நிலைப்பாடு இருக்கிறது. கூட்டணி பேச்சுவார்த்தை என்பது கடினமான ஒன்று. பேச்சுவார்த்தை தொடர்ந்து நடக்கிறது. இன்னும் காலம் இருக்கிறது.
தி.மு.க. 31 மாதங்களில் செய்துள்ள தவறுகளை சுட்டிக் காட்டுவோம். பா.ஜனதா அரசு செய்துள்ள சாதனைகளையும் மக்கள் மத்தியில் எடுத்து சொல் வோம். அவர்கள் முடிவு செய்வார்கள்.
இந்த தேர்தலில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படபோவதில்லை. இப்போது ஒரே நாடு ஒரே தேர்தல் வரப்போவதில்லை. மத்தியில் யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை முடிவு செய்யும் தேர்தல் இது.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் தமிழக பா.ஜனதா தேர்தல் குழுக்களின் ஒருங்கிணைப்பாளராக சக்கரவர்த்தியும், இணை ஒருங்கிணைப்பாளர்களாக நாராயணன் திருப்பதி, நரேந்திரன், நாச்சியப்பன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
- புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ஒதுக்கப்பட்டது.
- நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மருங்கூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பத்மனாபன்புதூரில் புதிய அங்கன்வாடி கட்டிடம் தேவை என்று மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
அவர்களின் கோரிக்கை ஏற்று புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.14.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு புதிய அங்கன்வாடி கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






