என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பாராளுமன்ற தொகுதி வாரியாக மொத்தம் 37 கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன.
- கன்னியாகுமரி-திண்டுக்கல் லியோனி, மயிலாடுதுறை-சபாபதிமோகன், திருவண்ணாமலை-கோவி.செழியன்.
பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் 3 நாட்களுக்கு தி.மு.க. தொடர் பொதுக் கூட்டங்களை நடத்துகிறது.
உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல்-பாசிசம் வீழட்டும். இந்தியா வெல்லட்டும் என்ற தலைப்பில் பாராளுமன்ற தொகுதி வாரியாக மொத்தம் 37 கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன.
இதில் இன்று மட்டும் 11 ஊர்களில் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. அதில் பேசுபவர்கள் விவரம் வருமாறு:-
ஸ்ரீபெரும்புதூர்-அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, சிவகங்கை-ஐ.பெரியசாமி, திருநெல்வேலி-கனிமொழி எம்.பி., விழுப்புரம்-அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தூத்துக்குடி-பொன்முத்துராமலிங்கம், கடலூர்-எஸ்.எஸ்.சிவசங்கர், ஈரோடு-அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நாமக்கல்-தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்.பி., கன்னியாகுமரி-திண்டுக்கல் லியோனி, மயிலாடுதுறை-சபாபதிமோகன், திருவண்ணாமலை-கோவி.செழியன்.

சனிக்கிழமை (17-ந்தேதி) நடைபெறும் பொதுக் கூட்டங்கள் விவரம்:-
கிருஷ்ணகிரி- அமைச்சர் துரைமுருகன், திருச்சி டி.ஆர்.பாலு எம்.பி., திருப்பூர்- அமைச்சர் கே.என்.நேரு, அரக்கோணம்-முன்னாள் அமைச்சர் பொன்முடி, மதுரை- ஆ.ராசா எம்.பி., விருதுநகர்- கனிமொழி எம்.பி., ராமநாதபுரம்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வேலூர்- அமைச்சர் எ.வ.வேலு, கள்ளக்குறிச்சி- அமைச்சர் மா.சுப்பிரமணியன், கோவை- அன்பில்மகேஸ் பொய்யாமொழி, திண்டுக்கல்- பொன்முத்துராமலிங்கம், சிதம்பரம்- கோவி.செழியன்.
இதேபோல் 18-ந்தேதி (ஞாயிறு) திருவள்ளூர், தஞ்சாவூர், பெரம்பலூர், கரூர், புதுச்சேரி, பொள்ளாச்சி, காஞ்சிபுரம், தருமபுரி, நாகை, தேனி, நீலகிரி, தென்காசி, சேலம், ஆரணி ஆகிய இடங்களில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
- சாலையோரம் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் காற்றாடி என்ஜின் ஏற்றிய டாரஸ் லாரி டீசல் போடுவதற்காக நின்று கொண்டிருந்தது.
- லாரியை ஓட்டி வந்த டிரைவர் மற்றும் கிளீனர் தப்பியோடி விட்டனர்.
சேலம்:
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் வெட்டு வெந்நியை அடுத்த தறியன் விளையை சேர்ந்தவர் பிரபாகர் சிங், இவரது மகன் கேம்கோ (21), தக்கலை அருகே உள்ள மேக்காமண்டபத்தை சேர்ந்தவர் சத்தியபிரவீன் (21), சேலம் அங்கம்மாள் காலனி குப்தா நகரை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் கவுதம் (21), சரண் (21) மற்றும் ஜெகநாத் (21) இவர்கள் 5 பேரும் புதுச்சேரியில் உள்ள மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரியில் 3-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வருகின்றனர்.
இந்தநிலையில் கல்லூரி விடுமுறையையொட்டி மாணவர்கள் 5 பேரும் கேம்கோவுக்கு சொந்தமான காரில் சேலத்திற்கு புறப்பட்டனர். காரை மாணவர் கேம்கோ ஓட்டி வந்தார். இவர்கள் வந்த கார் நள்ளிரவு 12.30 மணியளவில் சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மல்லூர் அருகே உள்ள பொய்மான் கரடு பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு சாலையோரம் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் காற்றாடி என்ஜின் ஏற்றிய டாரஸ் லாரி டீசல் போடுவதற்காக நின்று கொண்டிருந்தது. இதை கவனிக்காத கேம்கோ கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த லாரியின் பின் பகுதியில் பயங்கரமாக மோதினார்.
இதில் கார் அப்பளம் போல நொறுங்கியது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த மாணவர் கேம்கோ மற்றும் பின் சீட்டில் அமர்ந்திருந்த மாணவர் கவுதம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உடல் நசுங்கி துடிதுடித்து உயிரிழந்தனர். காயம் அடைந்த மற்றவர்கள் வலியால் அலறி துடித்தனர்.
இதனை பார்த்த அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு வந்த மல்லூர் போலீசார் மற்றும் ரோந்து போலீசார் விபத்தில் படுகாயம் அடைந்த மாணவர் ஜெகநாத்தை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள இவருக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. லேசான காயம் அடைந்த சத்தியபிரவீன் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் மாணவர் சரண் காயமின்றி தப்பினார்.
விபத்தில் இறந்த கேம்கோ மற்றும் கவுதமின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர். அவர்கள் இறந்தவர்களின் உடல்களை பார்த்து கதறி அழுது புரண்டனர். இந்த சம்பவம் அரசு ஆஸ்பத்திரியில் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்து குறித்து மல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே லாரியை ஓட்டி வந்த டிரைவர் மற்றும் கிளீனர் தப்பியோடி விட்டனர்.
- ஆர்ப்பாட்டம் முடிந்து நிர்வாகிகள் மட்டும் அந்தப் பகுதியில் நின்று பேசிக் கொண்டிருந்தபோது அப்பகுதி மாடி கட்டிடத்தில் இருந்து பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
- விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு முன்கூட்டியே முறையாக தகவல் தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
கறம்பக்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மழையூரில் நேற்று முன்தினம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பட்டியல் இன மாணவர் தாக்கப்பட்ட சம்பவத்தில் குற்றவாளியை கைது செய்யக்கோரி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் மண்டல செயலாளர் சிவகுமார், வடக்கு மாவட்ட செயலாளர் இளமதி அசோகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டம் முடிந்து நிர்வாகிகள் மட்டும் அந்தப் பகுதியில் நின்று பேசிக் கொண்டிருந்தபோது அப்பகுதி மாடி கட்டிடத்தில் இருந்து பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் அங்கு பேசிக் கொண்டிருந்த இளமதி அசோகனின் சேலையில் தீ பிடித்தது.
இதைத் தொடர்ந்து பெட்ரோல் குண்டு வீசிய குற்றவாளிகளை கைது செய்ய கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மழையூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு 8 மணிக்கு தொடங்கிய மறியல் நள்ளிரவு ஒரு மணி வரை நீடித்தது. பின்னர் புதுக்கோட்டை உதவி கலெக்டர் ஐஸ்வர்யா நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்டது.
பின்னர் போலீஸ் நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கொடுத்த புகாரில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் பா.ஜ.க பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறியிருந்தனர். இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு முன்கூட்டியே முறையாக தகவல் தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
மேலும் காவல்துறை அனுமதி அளித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் போலீசாரின் அலட்சியத்தால் தான் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை தொடர்ந்து மழையூர் தனிப்பிரிவு போலீஸ்காரர் முருகேசன் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பணியாற்றும் போலீஸ்காரர்கள் அன்பு மற்றும் அன்பு ராஜா ஆகிய 3 பேரை அதிரடியாக ஆயுதப்படைக்கு பணியிடம் மாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உத்தரவிட்டுள்ளார்.
- பல்வேறு தரப்பட்ட பொதுமக்களை சந்தித்து தேர்தல் அறிக்கைக்கான பரிந்துரைகளை கேட்டு வருகிறது.
- 27-ந்தேதி சென்னை (மாலை 3 மணி முதல்) காஞ்சிபுரம் வடக்கு, காஞ்சிபுரம் தெற்கு, திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு, திருவள்ளூர் மத்திய மாவட்டம்.
சென்னை:
பாராளுமன்றத் தேர்தலுக்காக தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரித்து வருகிறது. இதற்காக தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையிலான குழு ஒவ்வொரு மாவட்டங்களில் உள்ள பிரச்சனைகளை அறிய பல்வேறு தரப்பட்ட பொதுமக்களை சந்தித்து தேர்தல் அறிக்கைக்கான பரிந்துரைகளை கேட்டு வருகிறது.
இந்த குழுவினர் ஒவ்வொரு மாவட்டமாக சென்று வந்த நிலையில் கடந்த சில நாட்களாக சட்டசபை நடைபெற்ற காரணத்தாலும் பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருவதாலும் இக்குழுவினர் சுற்றுப்பயணம் கீழ்க்கண்டவாறு மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.
23-ந்தேதி வேலூரில் சந்திப்பு காலையில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், ஆரணி மாலை 3 மணி திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு 26-ந்தேதி தஞ்சாவூரில் சந்திப்பு காலையில் தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை மாலை 3 மணிக்கு விழுப்புரத்தில் சந்திப்பு. கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள்.
27-ந்தேதி சென்னை (மாலை 3 மணி முதல்) காஞ்சிபுரம் வடக்கு, காஞ்சிபுரம் தெற்கு, திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு, திருவள்ளூர் மத்திய மாவட்டம்.
28-ந்தேதி சென்னை (காலை 10 மணி) சென்னை வடக்கு, சென்னை வடகிழக்கு, சென்னை கிழக்கு, சென்னை மேற்கு, சென்னை தென்மேற்கு, சென்னை தெற்கு.
- சென்னையில் இருந்தும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- ஞாயிற்றுக்கிழமை அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கு ஏற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை:
வார இறுதி நாளான நாளை (சனிக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் 18-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை), வருகிற 19-ந்தேதி (திங்கட்கிழமை) சுபமுகூர்த்தம் உள்ளிட்ட விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்தும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்கள் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிட்டுள்ளது.
சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கும் மற்றும் சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கும் இயக்கப்படுகிறது.
தினசரி இயக்க கூடிய பஸ்களுடன் இன்று கூடுதலாக 550 சிறப்பு பஸ்களும், மேற்கூறப்பட்ட இடங்களிலிருந்தும் மற்றும் பெங்களூருவிலிருந்தும் பிற இடங்களுக்கு 200 சிறப்பு பஸ்களும் சேர்த்து ஆக மொத்தம் 750 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கு ஏற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) பயணம் செய்ய இதுவரை 9 ஆயிரத்து 679 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். அதேபோல் நாளை (சனிக்கிழமை) 5 ஆயிரத்து 468 மற்றும் வருகிற 18-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) 8 ஆயிரத்து 481 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.
இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் செல்போன் செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம். சிறப்பு பஸ்கள் இயக்கத்தை கண்காணிக்க அனைத்து பஸ் நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அரசு விரைவு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
- பிறந்த பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதற்காக இன்குபேட்டர் வசதி உள்ளது.
- குழந்தைகளின் தீவிர சிகிச்சை பிரிவான இன்குபேட்டர் சிகிச்சையிலேயே இதுபோன்ற அவல நிலை ஏற்பட்டுள்ளதால் பெற்றோர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
கள்ளக்குறிச்சி:
குறை பிரசவம் அல்லது உடல் எடை குறைவாக பிறந்த குழந்தைகளை வைத்து பாதுகாப்பதற்காக தற்போது அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் இன்குபேட்டர் வசதிகள் உள்ளன. அதாவது பிரிமெச்சூர் குழந்தைக்கு தேவையான உடல் வெப்பநிலையை பராமரிக்க இன்குபேட்டர் பயன்படுத்தப்படும். இதில் குழந்தையின் ரத்த அழுத்தம், இதயதுடிப்பு, சுவாசம் மற்றும் வெப்பநிலையை கண்காணிக்க சென்சார்கள் பயன்படுத்தப்படும். அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியிலும், பிறந்த பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதற்காக இன்குபேட்டர் வசதி உள்ளது.
ஆனால் அந்த இன்குபேட்டர் எந்திரத்தின் கருவியின் 4 புறத்திலும் இரும்பில் ஆன கால்கள் அமைக்கப்பட்டு, அதை தள்ளிக்கொண்டு செல்வதற்காக சக்கரம் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் உள்ள இன்கு பேட்டரில் 3 பகுதிகளில் மட்டும் சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 1 இடத்தில் சக்கரம் இல்லாததால், அந்த எந்திரத்திற்கு 2 கல் வைத்து முட்டுக்கொடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. குழந்தைகளின் தீவிர சிகிச்சை பிரிவான இன்குபேட்டர் சிகிச்சையிலேயே இதுபோன்ற அவல நிலை ஏற்பட்டுள்ளதால் பெற்றோர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். மேலும் மருத்துவக்கல்லூரி பெயர் அளவிற்கு மட்டுமே மருத்துவக் கல்லூரியாக செயல்படுவதாகவும், அங்கு முறையாக சிகிச்சை அளிப்பதில்லை எனவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதற்கிடையே இன்குபேட்டரில் ஒரு குழந்தை வைத்திருக்கும் நிலையில், அதை தாங்கி நிற்கும் கம்பியில் ஒரு பகுதியில் மட்டும் கல் வைத்து முட்டுக்கொடுத்துள்ள வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- கோயம்பேடு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
- டிக்கெட் பையில் ரூ.20 ஆயிரம் ரொக்கம் இருந்ததாக தகவல்.
சென்னை கோயம்பேட்டில் இருந்து புதுச்சேரி சென்ற அரசுப் பேருந்தில், நடத்துனரின் டிக்கெட் பை கொள்ளையடிக்கப்பட்டது.
பின்னர், நடத்துனர் அளித்த புகாரின் பேரில் கோயம்பேடு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
டிக்கெட் பையில் ரூ.20 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ.38 ஆயிரம் மதிப்பிலான டிக்கெட் இருந்ததாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதைதொடர்ந்து, போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
- முஸ்லீம்கள் சவுதி அரேபியா செல்வதால் அந்த நாட்டிற்கு வருமானம் அதிகரித்துள்ளது.
- இந்தியாவிலேயே அதிகம் கடன் வாங்கிய மாநிலம் தமிழகம்.
என் மண் என் மக்கள் யாத்திரை மற்றும் பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் அண்ணாமலை ஆட்டோ ஓட்டுநரில் காக்கிச்சட்டை அணிந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
இந்தியா, உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் வரிசையில் இடம்பெற்றுள்ளது. முஸ்லீம்கள் சவுதி அரேபியா செல்வதால் அந்த நாட்டிற்கு வருமானம் அதிகரித்துள்ளது.
அயோத்திக்கு 5 கோடி பேர் செல்வார்கள் என ஆய்வறிக்கை கூறுகிறது. 5 கோடி பேர் வருகையால் உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு 4 லட்சம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும்.
உ.பி அரசுக்கு மட்டும் 25 ஆயிரம் கோடி வரியாக கிடைக்கும். ராமர் கோவில் நமக்கு வழிகாட்டுகிறது.
இந்தியாவிலேயே அதிகம் கடன் வாங்கிய மாநிலம் தமிழகம். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மக்கள் அவதிப்படுகின்றனர்.
முழுமையாக சென்னை மாநகரை மாற்ற வேண்டிய நேரம் இது. பள்ளி, சாலை, மருத்துவமனை உள்பட அனைத்தையும் சரிசெய்ய வேண்டிய நேரம் இந்த தேர்தல்.
மத்தியில் அமைப்புச்சார தொழிலாளர்களுக்கு பென்ஷன் வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- 20-வது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
- குற்றச்சாட்டு பதிவுக்காக நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு.
சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தில் தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். அவருக்கு ஜாமின் மறுக்கப்பட்டுள்ளதால் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது நீதிமன்றம் காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.
சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஜனவரி 22-ந்தேதி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படுவதாக தேதி குறிப்பிடப்பட்டது.
இந்த நிலையில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள மூன்று வழக்குகள் முடியும் வரை அமலாக்கத்துறையால் பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணை தொடங்க தடைவிதிக்க வேண்டும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனு மீதான விசாரணை முடிவடைந்து இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி தீர்ப்பு அளித்தார். அப்போது அமலாக்கத்துறை வழக்கு விசாரணையை தொடங்கக் கூடாது என்ற செந்தில் பாலாஜியின் மனுவை தள்ளுபடி செய்தார்.
அதோடு குற்றச்சாட்டு பதிவுக்காக செந்தில் பாலாஜியை நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதால் விசாரணையை தள்ளி வைக்கக்கோரி மெமோ தாக்கல் செய்கிறோம். அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மெமோ குறித்து பின்னர் முடிவெடிக்கப்படும் என தெரிவித்த நீதிபதி, இன்றுடன் நீதிமன்ற காவல் முடிவடையும் நிலையில், நாளை வரை காவலை நீட்டித்தும் நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இத்துடன் அவரது நீதிமன்ற காவல் 20-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கக் கூடாது என அமலாக்கத்துறை சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. வழக்கு தொடர்பான டிஜிட்டல் ஆதாரங்களை திருத்தவில்லை. அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததை தவிர வேறு எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஜாமின் மனு விசாரணைக்கு வருவதற்கு ஒருநாள் முன்தான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். சாட்சிகள் இன்னும் விசாரிக்கப்படாததால் ஜாமின் வழங்கினால் சாட்சிகளை கலைக்கக் கூடும். அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தாலும், செந்தில் பாலாஜி செல்வாக்கான நபர்தான் என அமலாக்கத்துறை தெரிவித்தனர்.
- திருச்சியில் பணியாற்றிய 9 கல்வி அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு.
- சாந்தி மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் தற்போது பள்ளிக் கல்வித் துறையில் இணை இயக்குனர்களாக உள்ளனர்.
கல்வி மேம்பாட்டிற்கான மத்திய அரசு நிதியில் முறைகேடு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் பணியாற்றிய 9 கல்வி அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில், அதிமுக ஆட்சியில் முதன்மை கல்வி அலுவலராக இருந்த அறிவழகன், சில தலைமை ஆசிரியர்கள் மீது புகார் எழுந்துள்ளது.
விதிகளுக்கு புறம்பாக பெரு நிறுவனங்களிடம் ஒட்டுமொத்தமாக தேவையற்ற பொருட்களை கொள்முதல் செய்து பள்ளிகளுக்கு விநியோகித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும், பள்ளி தலைமை ஆசிரியர்களாக இருந்த முத்துச்சாமி, சாந்தி, ராஜேந்திரன், சற்குணம், அகிலா, டெய்சி ராணி, ஜெய்சிங், கண்ணன் உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சாந்தி மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் தற்போது பள்ளிக் கல்வித் துறையில் இணை இயக்குனர்களாக உள்ளனர்.
முக கவசம், கிருமி நாசினி உள்ளிட்ட கல்வி மேம்பாட்டுக்கு தொடர்பு இல்லாத பொருள்களை அதிகம் விலை கொடுத்து வாங்கியுள்ளனர்.
- பழனி முருகன் கோயிலிலும் திருப்பதியை போல பக்தர்களை அழைத்துச் செல்ல கிரிவல வீதிகளில் பேட்டரி மற்றும் மின்சார வாகனங்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
- கிரிவலப் பாதையில் வணிக நிறுவனங்களை முற்றிலும் ஏன் தடுக்கக் கூடாது? என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது
பழனி முருகன் கோயிலில் பக்தர்களின் வசதிக்காக பேட்டரி மற்றும் மின்சார வாகனங்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
பழனி முருகன் கோயிலுக்குச் சொந்தமான இடங்கள், கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்பை அகற்றவில்லை என்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அவ்வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அதில், கிரிவல வீதிகளில் ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டால் காவல்துறை உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வரும் காலங்களில் கிரிவல வீதிகளில் ஆக்கிரமிப்பு இல்லாத அளவுக்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மேலும், கிரிவலப் பாதையில் வணிக நிறுவனங்களை முற்றிலும் ஏன் தடுக்கக் கூடாது? என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
பழனி முருகன் கோயிலிலும் திருப்பதியை போல பக்தர்களை அழைத்துச் செல்ல கிரிவல வீதிகளில் பேட்டரி மற்றும் மின்சார வாகனங்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவச பார்க்கிங் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
- காவல்துறையினரைக் கொண்டு அப்புறப்படுத்திய தமிழக அரசு, அவர்களுடன் பேச்சு நடத்த எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.
- பார்வை மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கை ஏற்கப்படாதது வருத்தமளிக்கிறது.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அரசு வேலைவாய்ப்புகளில் 1 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், பார்வையற்றோருக்கு டி.என்.பி.எஸ்.சி மூலம் சிறப்புத் தேர்வு நடத்தி பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 கோரிக்கைகளை முன்வைத்து சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பார்வை மாற்றுத்திறனாளிகள் மறியல் செய்திருக்கின்றனர். அவர்களை காவல்துறையினரைக் கொண்டு அப்புறப்படுத்திய தமிழக அரசு, அவர்களுடன் பேச்சு நடத்த எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ளது. முதலமைச்சரை சந்தித்து பேச அனுமதிக்க வேண்டும் என்ற பார்வை மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கை ஏற்கப்ப டாதது வருத்தமளிக்கிறது.
பார்வை மாற்றுத்திறனாளிகளின் நலன்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை ஆகும். அவர்களின் கோரிக்கைகள் கொள்கை முடிவு தொடர்பானவை தான். அதற்காக அரசுக்கு கூடுதல் செலவு எதுவும் ஏற்படப் போவது இல்லை. எனவே, பார்வை மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை குறித்து அவர்களுடன் தமிழக அரசு பேச்சு நடத்தி, சாத்தியமானவற்றை நிறைவேற்ற முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.






