search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அமலாக்கத்துறை வழக்கின் விசாரணையை தள்ளி வைக்கக்கோரிய செந்தில் பாலாஜியின் மனு தள்ளுபடி
    X

    அமலாக்கத்துறை வழக்கின் விசாரணையை தள்ளி வைக்கக்கோரிய செந்தில் பாலாஜியின் மனு தள்ளுபடி

    • 20-வது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • குற்றச்சாட்டு பதிவுக்காக நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு.

    சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தில் தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். அவருக்கு ஜாமின் மறுக்கப்பட்டுள்ளதால் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது நீதிமன்றம் காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.

    சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஜனவரி 22-ந்தேதி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படுவதாக தேதி குறிப்பிடப்பட்டது.

    இந்த நிலையில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள மூன்று வழக்குகள் முடியும் வரை அமலாக்கத்துறையால் பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணை தொடங்க தடைவிதிக்க வேண்டும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

    அந்த மனு மீதான விசாரணை முடிவடைந்து இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி தீர்ப்பு அளித்தார். அப்போது அமலாக்கத்துறை வழக்கு விசாரணையை தொடங்கக் கூடாது என்ற செந்தில் பாலாஜியின் மனுவை தள்ளுபடி செய்தார்.

    அதோடு குற்றச்சாட்டு பதிவுக்காக செந்தில் பாலாஜியை நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

    தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதால் விசாரணையை தள்ளி வைக்கக்கோரி மெமோ தாக்கல் செய்கிறோம். அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    மெமோ குறித்து பின்னர் முடிவெடிக்கப்படும் என தெரிவித்த நீதிபதி, இன்றுடன் நீதிமன்ற காவல் முடிவடையும் நிலையில், நாளை வரை காவலை நீட்டித்தும் நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இத்துடன் அவரது நீதிமன்ற காவல் 20-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கக் கூடாது என அமலாக்கத்துறை சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. வழக்கு தொடர்பான டிஜிட்டல் ஆதாரங்களை திருத்தவில்லை. அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததை தவிர வேறு எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஜாமின் மனு விசாரணைக்கு வருவதற்கு ஒருநாள் முன்தான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். சாட்சிகள் இன்னும் விசாரிக்கப்படாததால் ஜாமின் வழங்கினால் சாட்சிகளை கலைக்கக் கூடும். அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தாலும், செந்தில் பாலாஜி செல்வாக்கான நபர்தான் என அமலாக்கத்துறை தெரிவித்தனர்.

    Next Story
    ×