search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலையில் நின்ற லாரி மீது கார் மோதி விபத்து- மருத்துவ கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி
    X

    சாலையில் நின்ற லாரி மீது கார் மோதி விபத்து- மருத்துவ கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

    • சாலையோரம் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் காற்றாடி என்ஜின் ஏற்றிய டாரஸ் லாரி டீசல் போடுவதற்காக நின்று கொண்டிருந்தது.
    • லாரியை ஓட்டி வந்த டிரைவர் மற்றும் கிளீனர் தப்பியோடி விட்டனர்.

    சேலம்:

    கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் வெட்டு வெந்நியை அடுத்த தறியன் விளையை சேர்ந்தவர் பிரபாகர் சிங், இவரது மகன் கேம்கோ (21), தக்கலை அருகே உள்ள மேக்காமண்டபத்தை சேர்ந்தவர் சத்தியபிரவீன் (21), சேலம் அங்கம்மாள் காலனி குப்தா நகரை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் கவுதம் (21), சரண் (21) மற்றும் ஜெகநாத் (21) இவர்கள் 5 பேரும் புதுச்சேரியில் உள்ள மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரியில் 3-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் கல்லூரி விடுமுறையையொட்டி மாணவர்கள் 5 பேரும் கேம்கோவுக்கு சொந்தமான காரில் சேலத்திற்கு புறப்பட்டனர். காரை மாணவர் கேம்கோ ஓட்டி வந்தார். இவர்கள் வந்த கார் நள்ளிரவு 12.30 மணியளவில் சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மல்லூர் அருகே உள்ள பொய்மான் கரடு பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு சாலையோரம் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் காற்றாடி என்ஜின் ஏற்றிய டாரஸ் லாரி டீசல் போடுவதற்காக நின்று கொண்டிருந்தது. இதை கவனிக்காத கேம்கோ கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த லாரியின் பின் பகுதியில் பயங்கரமாக மோதினார்.

    இதில் கார் அப்பளம் போல நொறுங்கியது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த மாணவர் கேம்கோ மற்றும் பின் சீட்டில் அமர்ந்திருந்த மாணவர் கவுதம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உடல் நசுங்கி துடிதுடித்து உயிரிழந்தனர். காயம் அடைந்த மற்றவர்கள் வலியால் அலறி துடித்தனர்.

    இதனை பார்த்த அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு வந்த மல்லூர் போலீசார் மற்றும் ரோந்து போலீசார் விபத்தில் படுகாயம் அடைந்த மாணவர் ஜெகநாத்தை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள இவருக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. லேசான காயம் அடைந்த சத்தியபிரவீன் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் மாணவர் சரண் காயமின்றி தப்பினார்.

    விபத்தில் இறந்த கேம்கோ மற்றும் கவுதமின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர். அவர்கள் இறந்தவர்களின் உடல்களை பார்த்து கதறி அழுது புரண்டனர். இந்த சம்பவம் அரசு ஆஸ்பத்திரியில் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்து குறித்து மல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே லாரியை ஓட்டி வந்த டிரைவர் மற்றும் கிளீனர் தப்பியோடி விட்டனர்.

    Next Story
    ×