என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்டு சாக்கடையில் தூக்கி வீசப்பட்ட இந்நிகழ்வைப் பார்த்துதான் உலகமே, காரி உமிழ்ந்து கொண்டிருக்கிறது.
    • புதுச்சேரி பா.ஜ.க. ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது என்பதை இந்த பாலியல் வன்கொடுமை உலகிற்கே படம்பிடித்துக் காட்டியிருக்கிறது.

    சென்னை:

    தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடக்கும் புதுச்சேரி மாநிலத்தில் பா.ஜ.க.வின் மாநில முன்னாள் தலைவரும்-மகளிருமான டாக்டர் தமிழிசை துணை நிலை கவர்னராக பொறுப்பு வகித்து வரும் புதுச்சேரி மாநிலத்தில் முத்தியால்பேட்டை பகுதியில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அச்சிறுமியை கழுத்தை நெறித்து படுகொலை செய்து வேட்டியில் மூட்டையாக கட்டி சாக்கடை கால்வாயில் தூக்கி வீசியுள்ள இரக்கமற்ற- இதயமற்ற கொடுமை நடந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

    2024 ஜனவரி 24 அன்று தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி "பெண் குழந்தைகள் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது" என்று தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டார். இதுதான் பா.ஜ.க.வினர் கூறும் பெண் குழந்தைகள் வளர்ச்சியா…? என கேட்கிறேன்.

    அத்துடன், "உலகத்தையே பா.ஜ.க. ஆட்சிதான், இந்தியாவின் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது" என்று புளுகிக் கொண்டிருக்கும் பா.ஜ.க. கட்சியினரே, நீங்கள் சொல்வது உண்மை தான். ஒன்பது வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்டு சாக்கடையில் தூக்கி வீசப்பட்ட இந்நிகழ்வைப் பார்த்துதான் உலகமே, காரி உமிழ்ந்து கொண்டிருக்கிறது. புதுச்சேரி பா.ஜ.க. ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது என்பதை இந்த பாலியல் வன்கொடுமை உலகிற்கே படம்பிடித்துக் காட்டியிருக்கிறது.



    அதுமட்டுமல்லாமல், பிரதமர் மோடி, இந்தியா முழுவதும் பெண் குழந்தையை காப்பாற்றவும், பெண் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கவும் 2015-ல் "பேட்டி பச்சாவோ பேட்டி படாவோ" திட்டத்தை துவக்கினார். ஆனால் இன்று பா.ஜ.க. ஆட்சியில் நடப்பதோ பாலியல் வன்கொடுமை-அதுவும் சின்னஞ்சிறு சிறுமியின் மனிதாபிமானமற்ற கொலை!

    "மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்" என்று முழக்கமிட்ட மகாகவி பாரதி உலவிய மண்ணில், ஒரு பெண் சிறுமிக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமையை, காட்டுமிராண்டித் தனமான கொலையையும்-பெண்களை பாதுகாக்கத் தவறிய பா.ஜ.க. ஆட்சிக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடுங்கண்டனத்தை தெரிவிப்பதோடு, புதுச்சேரி மாநில தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    • பக்தர்கள் இன்று சிவாலய ஓட்டத்தை தொடங்கினார்கள்.
    • வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    நாகர்கோவில்:

    நாட்டில் வேறொங்கும் இல்லாத வகையில் மகா சிவராத்திரி தினத்தில் 12 சிவாலயங்களுக்கும் பக்தர்கள் ஓடிச்சென்று தரிசிக்கும் முறை குமரி மாவட்டத்தில் மட்டுமே உள்ளது. பாரம்பரியமாக நடக்கும் இந்த நிகழ்வு வரலாற்று சிறப்பு மிக்கதாகும். சிவாலய ஓட்டத்தில் கலந்துகொள்ளும் பக்தர்கள் மாசி மாதம் ஏகாதசி தினத்தில் மாலை அணிந்து விரதம் தொடங்குவார்கள்.

    விரத நாளில் தீயினால் வேகவைக்கும் அனைத்து உணவுகளையும் தவிர்த்து விரதம் இருப்பார்கள். குறிப்பாக நுங்கு, இளநீர், பதநீர், பழங்கள் சாப்பிடுவது வழக்கம். அதுமட்டுமின்றி விரத நாட்களில் காலை, மாலை நேரங்களில் சிவாலயத்தின் அருகில் உள்ள நீர்நிலைகளில் நீராடி விட்டு ஈரத்துணியுடன் சிவபெருமானை தரிசிப்பார்கள். இந்த ஆண்டுக்கான சிவராத்திரி விழா நாளை (8-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இதையடுத்து இன்று (7-ந்தேதி) பக்தர்கள் சிவாலய ஓட்டத்தை தொடங்கினார்கள்.

    முஞ்சிறையில் உள்ள திருமலை மகாதேவர் ஆலயத்தில் இருந்து பக்தர்கள் ஓட்டத்தை தொடங்கினர். காவி உடை அணிந்து கோவிந்தா... கோபாலா... என்ற பக்தி கோஷத்துடன் கையில் விசிறி ஏந்தி சிவாலய ஓட்டத்தில் கலந்து கொண்டனர்.

    திக்குறிச்சி மகாதேவர் கோவில், திற்பரப்பு வீரபத்திரர் கோவில், திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோவில், பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோவில், கல்குளம் நீலகண்டசாமி கோவில், மேலாங்கோடு மகாதேவர் கோவில், திருவிடைக்கோடு மகாதேவர் கோவில், திருவிதாங்கோடு மகாதேவர் கோவில், திருப்பன்றிகோடு மகாதேவர் கோவிலில் தரிசனம் செய்து விட்டு சுமார் 110 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து பக்தர்கள் நாளை (8-ந்தேதி) மாலை நட்டாலம் சங்கரநாராயணர் கோவிலை வந்தடைவார்கள்.

    அங்கு இரவு முழுவதும் தூங்கா நோன்பு இருந்து ஓட்டத்தை நிறைவு செய்கின்றனர். சிவாலய ஓட்டத்தில் குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளா மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    சிவாலய ஓட்டத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கு சிவாலயங்களில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. சிவராத்திரியை யொட்டி நாளை (8-ந்தேதி) குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

    • பணம் மற்றும் பொருட்கள் பிடிபட்டால், அந்தந்த பகுதி தலைமை அதிகாரிகளுக்கு உடனே தகவல் கொடுக்க வேண்டும்.
    • நட்சத்திர பேச்சாளர்கள் தங்களது சொந்த தேவைக்காக ரூ.1 லட்சம் வரை கொண்டு செல்லலாம்.

    கோவை:

    பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.

    தேர்தல் சமயத்தில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வது, பரிசு பொருட்கள் வழங்குவதை தடுத்து பறிமுதல் செய்வதற்கு பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    தேர்தல் பணியில் ஈடுபட உள்ள இந்த தேர்தல் கண்காணிப்பு குழுவினருக்கு, தேர்தல் புகார்களை கையாள்வது எப்படி என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

    கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நடந்தது.

    இதில் மாவட்ட கலெக்டர் தேர்தல் பணியாற்ற உள்ள அதிகாரிகளுக்கும், கண்காணிப்பு குழுவினருக்கும் தேர்தல் பணிகள் குறித்தும், தேர்தலின் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும் விரிவாக விளக்கினார்.

    கூட்டத்தில் கலெக்டர் கிராந்திகுமார் பாடி பேசியதாவது:-

    பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததும், பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுவினர், வீடியோ கண்காணிப்பு குழுவினர் சரியான முறையில் செயல்பட வேண்டும்.

    பணம் மற்றும் பொருட்கள் பிடிபட்டால், அந்தந்த பகுதி தலைமை அதிகாரிகளுக்கு உடனே தகவல் கொடுக்க வேண்டும்.

    ஒவ்வொரு பகுதி பொறுப்பாளரும் அந்தந்த பகுதிகளுக்கு பொறுப்புடன் செயல்பட வேண்டும்.

    விதிகளை அமல்படுத்துகிறோம் என்ற பெயரில் பொதுமக்களுக்கு தொந்தரவு கொடுக்ககூடாது.

    கள்ளத்தனமாக பணம் எடுத்து செல்வது, மதுபானங்கள் வினியோகிக்க கொண்டு செல்வது உள்பட வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் விதமான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த குழுவினர் கண்காணிப்பார்கள்.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல், தேர்தல் முடியும் வரை இந்த குழுவானது செயல்பாட்டில் இருக்கும். லஞ்சம் கொடுப்பது, பெறுவது குறித்த புகார்கள், சமூக விரோதிகள் நடமாட்டம், சட்டத்துக்கு புறம்பான பொருட்கள் கைப்பற்றுவது குறித்து போலீசில் தகவல் தெரிவிக்க வேண்டும்.

    ஆதாரமின்றி எடுத்து செல்லப்படும் பணம் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்க எடுத்து சென்றதாக கணக்கில் கொண்டு பறிமுதல் செய்ய வேண்டும். அதனை வீடியோவிலும் பதிவு செய்ய வேண்டும்.

    ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்படும் பணம், மதுபானங்களை கைப்பற்ற வேண்டும். ரூ.10 ஆயிரத்திற்கு மேல் மதிப்புள்ள பரிசுப்பொருட்களை எடுத்து சென்றால் பறிமுதல் செய்ய வேண்டும்.

    நட்சத்திர பேச்சாளர்கள் தங்களது சொந்த தேவைக்காக ரூ.1 லட்சம் வரை கொண்டு செல்லலாம். ரூ.10 லட்சத்துக்கு மேல் பணம் கண்டறியப்பட்டால் வருமான வரித்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    பெண்களின் கைப்பைகளை பெண் போலீசாரே சோதனை செய்ய வேண்டும். அனைவரும் இணைந்து சிறப்பாக பணியாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனை தொடர்ந்து உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு இன்று பயிற்சி அளிக்கப்பட்டது. நாளை மறுநாள்(சனிக்கிழமை) மண்டல குழு அலுவலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    போலீஸ் அதிகாரிகள் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்களுக்கு 11-ந் தேதியும், மைக்ரோ அப்சர்வர்கள் மற்றும் வீடியோ கிராபர்களுக்கு 15-ந் தேதியும் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    • கோபாலபுரம் இளைஞர் தி.மு.க. காலம் முதல் பொதுக் குழுவில் என்னைக் கழகத் தலைவராக அறிவித்தது வரை என் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் அவர் நிறைந்திருக்கிறார்.
    • என் நெஞ்சில் என்றும் நீங்காதிருப்பார்! அவர்தம் கொள்கைப் பெருவாழ்வு நம்மை வழிநடத்தும்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-

    "குலையா உறுதி, அசையாக் கொள்கை, தாழா மானம், மங்கா உணர்வு, மாறா நட்பு, மறையாப் புகழ் என இனிவரும் இயக்கத்து இளைஞர்களுக்கெல்லாம் எடுத்துக்காட்டாய் வாழ்ந்த இனமானப் பேராசிரியர் நினைவுநாள்.

    கோபாலபுரம் இளைஞர் தி.மு.க. காலம் முதல் பொதுக் குழுவில் என்னைக் கழகத் தலைவராக அறிவித்தது வரை என் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் அவர் நிறைந்திருக்கிறார். என் நெஞ்சில் என்றும் நீங்காதிருப்பார்! அவர்தம் கொள்கைப் பெருவாழ்வு நம்மை வழிநடத்தும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பொதுத் தளங்களில் இயங்கும் பெண்களை காணுகின்ற போது மனம் பேர் உவகை கொள்கிறது.
    • பெண்மையால் பெருமை கொள்வோம்!

    சென்னை:

    சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பெண்மையைப் போற்றி வணங்கவும், பெண்கள் இன்றி இந்த உலகம் இல்லை என்பதை உணர்த்தவும், பெண்களின் தியாக வாழ்வு க்கு வணக்கம் செலுத்தவும், ஆண்டுதோறும் வருகிற 8-ந் தேதி "சர்வ தேச மகளிர் தினமாக" கொண்டாடப்படு கிறது. பெண்களுக்குப் பெருமை சேர்க்கும் இந்த நாளில் பெண்கள் அனை வருக்கும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது இதயமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

    ஒரு நூற்றாண்டுக்கு முன், பாரதி கண்ட புதுமைப் பெண்களின் வடிவமாக புரட்சித் தலைவி அம்மா திகழ்ந்ததையும், அவர்களைப் போல பல்வேறு பொதுத் தளங்களில் இயங்கும் பெண்களையும் காணுகின்றபோது மனம் பேர் உவகை கொள்கிறது.

    பெண்மையின் மேன்மையைப் போற்றுவோம்!

    பெண்மையை வணங்கு வோம்!

    பெண்மையால் பெருமை கொள்வோம்!

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • பெண்களை ஆண்களுக்கு அடுத்தப்படியாக வைத்துப் பார்க்கும் மனநிலை விலக வேண்டும்.
    • அனைத்துத் துறைகளிலும் சாதனைகளை படைத்ததைப் போன்றே இதிலும் சாதிப்பார்கள்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    உலகின் தவிர்க்க முடியாத சக்தியான மகளிரைப் போற்றும் உலக மகளிர் தினம் நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில், உலகெங்கும் வாழும் மகளிருக்கு உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

    பெண்களை ஆண்களுக்கு அடுத்தப்படியாக வைத்துப் பார்க்கும் மனநிலை விலக வேண்டும். நாட்டையும், வீட்டையும் தலைமையேற்று நடத்தும் வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். அவ்வாறு வழங்கப்பட்டால், அனைத்துத் துறைகளிலும் சாதனைகளை படைத்ததைப் போன்றே இதிலும் சாதிப்பார்கள்.

    எனவே, வீட்டையும், நாட்டையும் மகளிரே வழிநடத்தும் உன்னத சூழலை உருவாக்குவதற்காக கடுமையாக உழைக்க மகளிர் நாளான இந்த நாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • காவல் அதிகாரிகளின் பதவி உயர்வை தேவையின்றி தாமதப்படுத்துவது கண்டிக்கத்தக்கது.
    • உரிய காலத்தில் பதவி உயர்வு வழங்கினால் தான் உற்சாகத்துடன் பணி செய்வார்கள்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகக் காவல்துறையில் உதவி ஆய்வாளர் நிலையில் தொடங்கி கூடுதல் கண்காணிபாளர் நிலை வரையிலான அதிகாரிகளின் பதவி உயர்வு பட்டியல் தயாரிக்கப்பட்டு பல மாதங்களாகியும், அதற்கு அரசு ஒப்புதல் அளிக்காத தால் 400-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கடுமையான மன உளைச்சலும், மனச்சோர்வும் அடைந்துள்ளனர். காவல் அதிகாரிகளின் பதவி உயர்வை தேவை யின்றி தாமதப்படுத்துவது கண்டிக்கத்தக்கது.

    உதவி ஆய்வாளர்களுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பதவி உயர்வு வழங்கப்படவில்லை. 15 ஆண்டுகளுக்கு முன் வருவாய்த்துறையில் உதவியாளராக பணியில் சேர்ந்த பலர் வட்ட ஆட்சியராகவும், தலைமை செயலகத்தில் தட்டச்சராக பணியில் சேர்ந்தவர்கள் நிர்வாக அலுவலராகவும் பதவி உயர்வு பெற்று விட்டனர். ஆனால், காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்தவர்கள் 15 ஆண்டுகளுக்குப் பிறகு இன்னும் அதே நிலையில் தொடர்கின்றனர். இது மிகப்பெரிய அநீதி ஆகும்.

    காவல்துறையின் இதயமாக திகழ்பவர்கள் துணை கண்காணிப்பாளர் நிலை முதல் உதவி ஆய்வாளர் நிலை வரை உள்ள அதிகாரிகள் தான். அவர்கள்தான் வழக்கு விசாரணைகளை முன்னெடுப்பவர்கள்.

    அவர்களுக்கு உரிய காலத்தில் பதவி உயர்வு வழங்கினால் தான் உற்சாகத்துடன் பணி செய்வார்கள்.

    எனவே, மக்களவைத் தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அடுத்த ஓரிரு தினங்களில் தேர்தல் அறிவிப்பு செய்தி வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • பா.ஜனதா குறி வைத்துள்ள தொகுதிகளில் கோவை, நீலகிரி, பொள்ளாச்சி, திருப்பூர் ஆகிய தொகுதிகள் முக்கியமானவை.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தடம் பதிக்க வேண்டும் என்ற முனைப்புடன் பா.ஜனதா கட்சி ஈடுபட்டு வருகிறது. இதற்காகவே கடந்த 2 மாதங்களில் பிரதமர் மோடி 4 முறை தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார்.

    கடந்த கால தேர்தல்களில் இருந்த வரவேற்பைவிட இந்த தேர்தலில் பா.ஜ.க.வுக்கு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள எழுச்சியும் மிகுந்த வரவேற்பும் பிரதமர் மோடியையும் அகில இந்திய தலைவர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

    அதே நேரத்தில் பிரதமர் மோடி அடிக்கடி தமிழகம் வருவதால் மக்கள் ஆதரவை பெற்றுவிட முடியாது என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

    இந்த அரசியல் சூட்டை தணியாமல் தொடர்ந்து முன்னெடுத்து செல்ல பா.ஜனதா திட்டமிட்டு உள்ளது. பிரதமர் மோடியின் முதற்கட்ட சுற்றுப் பயணம் வருகிற 13-ந்தேதி குஜராத்தில் முடிவடைகிறது.

    அடுத்த ஓரிரு தினங்களில் தேர்தல் அறிவிப்பு செய்தி வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அடுத்த கட்டமாக பிரதமர் மோடியின் சுற்றுப்பயணம் தயாராகி வருகிறது.

    இந்த மாதம் 22-ந்தேதி பிரதமர் மோடி மீண்டும் தமிழகத்துக்கு பிரசாரத்துக்கு வர இருப்பதாக தெரிகிறது. பெரும்பாலும் கோவைக்கு அவர் வருவார் என்று கூறப்படுகிறது. பா.ஜனதா குறி வைத்துள்ள தொகுதிகளில் கோவை, நீலகிரி, பொள்ளாச்சி, திருப்பூர் ஆகிய தொகுதிகள் முக்கியமானவை.

    இதை மையமாக வைத்து பிரதமர் மோடி கோவையில் பிரசாரத்தை தொடங்குவார் என்று கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது. அங்கு நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இந்த மேடையில் பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அனைவரையும் அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டு உள்ளார்.

    இதற்கிடையில் இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடும் வேலூர், பாரிவேந்தர் போட்டியிடும் கள்ளக்குறிச்சி ஆகிய தொகுதிகளுக்கும் பிரதமர் மோடியை பிரசாரத்துக்கு அழைத்துள்ளனர்.

    எனவே முதல் கட்ட பிரசாரத்தில் கோவையை மட்டும் நிறைவு செய்கிறார். அதன் பிறகு மீண்டும் சில நாட்களில் தமிழகத்துக்கு பிரசாரத்துக்கு மோடி வருவார். அப்போது தமிழகத்தில் உள்ள வேலூர், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட பெரும்பாலான முக்கிய நகரங்களுக்கு செல்லும் வகையில் அவரது பயணத் திட்டம் அமையும் என்று கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

    • ஆண்கள் பிரிவில் 16 அணிகளும், பெண்கள் பிரிவில் 12 அணிகளும் கலந்து கொள்கின்றன.
    • காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் நடைபெறுகிறது.

    சென்னை:

    மெரீனா பீச் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் இந்தியன் பீச் வாலிபால் புரோ டூர் பந்தயம் சென்னையில் நடத்தப்படுகிறது.

    அகில இந்திய அளவிலான பீச் வாலிபால் போட்டியான இந்த போட்டிகள் நாளை (8-ந் தேதி) முதல் 10-ந் தேதி வரை நீலாங்கரை கடற்கரையில் நடக்கிறது.

    இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, புதுச்சேரி, கோவா, டாமன் டையூ ஆகிய மாநிலங்களில் இருந்து 28 அணிகள் பங்கேற்கின்றன. ஆண்கள் பிரிவில் 16 அணிகளும், பெண்கள் பிரிவில் 12 அணிகளும் கலந்து கொள்கின்றன.

    லீக் மற்றும் நாக் அவுட் முறையில் பீச் வாலிபால் போட்டி நடக்கிறது. இந்த போட்டியில் ஆண்களுக்கான பரிசு தொகை ரூ.1 லட்சம் ஆகும். பெண்களுக்கு ரூ.50 ஆயிரம் பரிசு தொகை வழங்கப்படுகிறது. போட்டிகள் பகலிலும், இரவிலும் நடக்கிறது. காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் நடைபெறு கிறது.

    மேற்கண்ட தகவலை மெரீனா பீச் ஸ்போர்ட்ஸ் கிளப் பொதுச் செயலாளர் ஏ.ஜே.மார்ட்டின் சுதாகர் தெரிவித்துள்ளார்.

    • குறிப்பாக யானைகள் உணவு, தண்ணீருக்காக ஊருக்குள் புகுவதும், பயிர்களை நாசம் செய்வதும் தொடர்கதையாகி வருகிறது.
    • சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர் குட்டி யானையை மீட்டு அழைத்து சென்றுவிட்டனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான வனவிலங்கு வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் வனவிலங்குகள் குறிப்பாக யானைகள் உணவு, தண்ணீருக்காக ஊருக்குள் புகுவதும், பயிர்களை நாசம் செய்வதும் தொடர்கதையாகி வருகிறது.

    இந்த நிலையில் ஆசனூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட அரோபாளையம் கிராமத்தில் இன்று காலை 6 மணி அளவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு குட்டி யானை அங்கு உலா வந்தது.

    இதைக்கண்ட அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் உடனடியாக ஆசனூர் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். குட்டி யானை அங்கும் இங்குமாக சுற்றி கொண்டிருந்தது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர் குட்டி யானையை மீட்டு அழைத்து சென்று விட்டனர். குட்டி யானை வனப்பகுதியில் இருந்து எப்படி வெளியே வந்தது என தெரியவில்லை.

    இந்நிலையில் அந்த குட்டி யானை கடந்த 2 நாட்களுக்கு முன்பு பவானிசாகர் வனப்பகுதியில் விடப்பட்ட குட்டி யானை என ஒரு தகவல் பரவியது. ஆனால் இது குறித்து வனத்துறையினர் எந்த ஒரு தகவலும் தெரிவிக்கவில்லை.

    • ஆர்.கே. நகர் தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து தி.மு.க. வேட்பாளராக சிம்லா முத்துச்சோழன் போட்டியிட்டார்.
    • ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்டதால், சிம்லா முத்துச்சோழன் தமிழகம் முழுவதும் பிரபலமானார்.

    சென்னை:

    தி.மு.க. முன்னாள் அமைச்சர் சற்குணபாண்டியனின் மருமகளும், ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டவருமான சிம்லா முத்துச்சோழன் தி.மு.க.விலிருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்துள்ளார்.

    பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் சிம்லா முத்துச்சோழன் அ.தி.மு.க.வில் இணைந்துள்ளார்.

    கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது அவரது அமைச்சரவையில் முக்கிய அமைச்சராக இருந்தவர் சற்குணபாண்டியன். தி.மு.க. துணைப் பொதுச் செயலாளராகவும் இருந்த அவர் சென்னை ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதியில் பலமுறை நின்று வெற்றி பெற்றுள்ளார்.

    கடந்த 2016-ம் ஆண்டு ஆர்.கே.நகர் தேர்தலில் ஜெயலலிதாவுக்கு எதிராக, தி.மு.க. களமிறக்கிய வேட்பாளர்தான் சற்குணபாண்டியனின் மருமகள் சிம்லா முத்துச்சோழன். கடுமையான போட்டியின் முடிவில் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயலலிதா வெற்றி பெற்றார். ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்டதால், சிம்லா முத்துச்சோழன் தமிழகம் முழுவதும் பிரபலமானார்.

    • விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், ம.தி.மு.க. ஆகியவை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • விடுதலை சிறுத்தைகள் கூடுதலாக ஒரு தொகுதியை ஒதுக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் தேதி குறித்தான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ளது. அதற்குள்ளாக அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

    தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், ம.தி.மு.க. ஆகியவை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.

    தி.மு.க.-விடம் 3 தனித் தொகுதிகளையும் ஒரு பொதுத் தொகுதியையும் விடுதலை சிறுத்தைகள் கட்சி கேட்டு வலியுறுத்தியது. ஆனால் தி.மு.க. தரப்பு 2 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முன் வருகிறது. கடந்த முறை ஒதுக்கப்பட்ட அளவில்தான் கூட்டணி கட்சிகளுக்கு தி.மு.க. தொகுதிகளை ஒதுக்க விரும்புகிறது. ஆனால் விடுதலை சிறுத்தைகள் கூடுதலாக ஒரு தொகுதியை ஒதுக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.

    காங்கிரஸ், ம.தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு கடந்த முறையை விட குறைவான தொகுதிகளை தி.மு.க. ஒதுக்க முன் வருவதால் அக்கட்சிகள் தொகுதி பங்கீட்டு குழுவை சந்திக்க ஆர்வம் காட்டவில்லை எனக் கூறப்படுகிறது.

    இந்நிலையில்,தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழுவுடன் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொகுதி பங்கீடு தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

    ×