என் மலர்
உள்ளூர் செய்திகள்
- சரத்குமாரின் முதல் விருப்ப தொகுதியாக இருக்கும் நெல்லை தொகுதியை விட்டுக்கொடுக்க மாட்டேன் என்று நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. பிடிவாதமாக இருப்பதாக கூறப்படுகிறது.
- ஒருவேளை நெல்லை தொகுதி கிடைக்காத பட்சத்தில், அவர் விருதுநகர் தொகுதியை பா.ஜனதா கூட்டணியில் கேட்டு பெறுவதற்கு ஆயத்தமாகி உள்ளார்.
நெல்லை:
நெல்லை பாராளுமன்ற தொகுதி நெல்லை, பாளை, ராதாபுரம், நாங்குநேரி, அம்பை, ஆலங்குளம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியதாகும்.
இந்த பாராளுமன்ற தொகுதியில் நாடார் சமுதாயத்தினரின் வாக்கு சதவீதம் அதிகம் என்பதால் அந்த சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அதிக அளவில் வழங்கப்படும்.
தற்போது பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி திராவிட கட்சிகளும், தேசிய கட்சிகளும் கூட்டணி பலத்தை அதிகரிக்க ஒவ்வொரு கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா ஆகிய கட்சிகள் தங்களது கட்சிகளை முன்னிறுத்தி கூட்டணியில் சேர மற்ற கட்சிகளுக்கு அழைப்பு விடுத்து வருகின்றன.
அந்த வகையில் பா.ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட போவதாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.
அவர் பா.ஜனதா கூட்டணியில் தென் மாவட்டங்களில் ஒரு தொகுதி, கொங்கு மண்டலத்தில் ஒரு தொகுதி என 2 தொகுதிகள் கேட்டதாகவும், இது தவிர ஒரு ராஜ்ய சபா பதவி கேட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தென் மாவட்டங்களில் நெல்லை தொகுதியை சரத்குமார் குறிவைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்த தொகுதியில் நாடார் சமுதாய ஓட்டுக்கள் வெற்றியை தீர்மானிக்கும் என்பதாலும், ஏற்கனவே இங்கு கடந்த தேர்தல்களில் அவர் களம் கண்டுள்ளார் என்பதாலும் அவருக்கு நெல்லை தொகுதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை மனதில் வைத்தே கடந்த சில மாதங்களுக்கு முன்பு சரத்குமார் நெல்லையில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தை நடத்தினார். தொடர்ந்து கட்சி நிர்வாகிகளையும் தேர்தலுக்கு தயாராகுமாறு முடுக்கி விட்டுள்ளார்.
இன்னும் ஓரிரு நாட்களில் சரத்குமார் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்று தெரிந்துவிடும். ஆனாலும் அவர் நெல்லை தொகுதியை அதிகம் விரும்புவதாக கூறப்படுகிறது.
ஒருவேளை நெல்லை தொகுதி கிடைக்காத பட்சத்தில், அவர் விருதுநகர் தொகுதியை பா.ஜனதா கூட்டணியில் கேட்டு பெறுவதற்கு ஆயத்தமாகி உள்ளார். மேலும் காமராஜரின் சொந்த மாவட்டமான விருதுநகர் தொகுதி கிடைக்கும் பட்சத்தில் அங்கு தனது மனைவியான ராதிகா சரத்குமாரை நிறுத்தலாமா? என்று அவர் நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருகிறார்.
ஏற்கனவே சரத்குமார் விருதுநகரில் சுமார் 12 ஏக்கர் இடத்தில் தனது சொந்த செலவில் பெருந்தலைவர் காமராஜருக்கு மணிமண்டபம் அமைத்து கொடுத்துள்ளார்.
மேலும் அங்கு வருங்காலத்தில் பள்ளிக்கூடம் கட்டி இலவச கல்வி வழங்க எதிர்கால திட்டத்தையும் வைத்துள்ளார்.
இதன் காரணமாக பா.ஜனதா கூட்டணி சார்பில் ஒரு தொகுதி மட்டும் வழங்கப்பட்டால், விருதுநகரை கேட்டு பெற்று அங்கு ராதிகாவை போட்டியிட வைப்பதோடு, ராஜ்ய சபா எம்.பி. பதவியை சரத்குமார் கேட்டு பெற முனைப்புடன் உள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க, சரத்குமாரின் முதல் விருப்ப தொகுதியாக இருக்கும் நெல்லை தொகுதியை விட்டுக்கொடுக்க மாட்டேன் என்று நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. பிடிவாதமாக இருப்பதாக கூறப்படுகிறது.
நெல்லை தொகுதி தனக்கு தான் என்று முடிவு செய்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பே பா.ஜனதாவின் நெல்லை பாராளுமன்ற அலுவலகத்தை அவர் திறந்துவிட்டார்.
சமீபத்தில் பிரதமர் மோடியை நெல்லைக்கு அழைத்துவந்து பிரமாண்ட பொதுக்கூட்டத்தை அவர் முன்னின்று நடத்தி தனக்கு தான் நெல்லை சீட் என்று மேலும் பிடிவாதத்தை அதிகப்படுத்தி உள்ளார்.
ஏற்கனவே எம்.எல்.ஏ.வாக இருக்கும் சூழ்நிலையில் நெல்லை தொகுதியில் போட்டியிட பல வேட்பாளர்கள் இருக்கிறார்கள். அவர் விட்டு கொடுக்க வேண்டியது தானே என்று சொந்த கட்சியினரே ஆதங்கப்படுகின்றனர்.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்ட பா.ஜனதா அலுவலகத்தில் வேட்பாளர்கள் குறித்த கருத்து கேட்பு நடத்தப்பட்டது.
இதில் சுமார் 170 நிர்வாகிகள் கலந்து கொண்டு விருப்ப வேட்பாளர்களை எழுதி கொடுத்தனர்.
தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன், நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர் தயாசங்கர் உள்ளிட்ட சிலரது பெயர்கள் எழுதி கொடுக்கப்பட்ட நிலையில், நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவு அதிகமாக இல்லை என்றாலும் அவர் எம்.பி. சீட்டை யாருக்கும் விட்டுக் கொடுக்க முன்வரவில்லை என கூறப்படுகிறது.
இதற்கிடையே தென் மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசிக்க சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நிர்வாகிகளை இன்று சென்னைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பின்னரே சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் எத்தனை? வேட்பாளர் சரத்குமாரா? அல்லது ராதிகா சரத்குமாரா என்பது தெரியவரும் என நிர்வாகிகள் கூறினர்.
- தமிழக அரசு ரூ.9.50 கோடி மதிப்பில் ரோப்கார் அமைக்கும் பணியை தொடங்கியது.
- பணிகள் முழுவதுமாக முடிந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரோப்கார் சோதனை ஓட்டமும் நடந்தது.
புலிவலம்:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள சோளிங்கரில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது. இதில் 1,305 படிகள் உள்ளது. ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமியை தரிசித்து செல்கின்றனர்.
இந்த நிலையில், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மலை மீது ஏறிச்சென்று தரிசிக்க முடியாமல் சிரமப்பட்டு வந்தனர்.
அவர்கள் எளிதில் மலைக்கு சென்று யோக நரசிம்மரை தரிசிக்கும் வகையில் ரோப்கார் அமைத்து தர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.
அதன்பேரில் தமிழக அரசு ரூ.9.50 கோடி மதிப்பில் ரோப்கார் அமைக்கும் பணியை தொடங்கியது. இப்பணிகள் முழுவதுமாக முடிந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரோப்கார் சோதனை ஓட்டமும் நடந்தது.
மேலும் ரோப்கார் அமைவிடத்தில் அமைச்சர் ஆர். காந்தி தலைமையிலான நன்கொடையாளர்கள் மூலம் ரூ.11 கோடி மதிப்பில் அடிப்படை வசதிகளுக்கான கட்டுமான பணிகளும் மும்முரமாக நடைபெற்று வந்தது.
இந்த பணிகளும் தற்போது நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் ரோப்கார் அமைவிடத்தில் ஆய்வு செய்தனர்.
அப்போது விரைவில் ரோப்கார் பக்தர்களின் பயன்பாட்டிற்கு தொடங்கப்படும் என தெரிவித்தனர்.
லட்சுமி நரசிம்மர் மலைக் கோவிலின் ரோப்கார் சேவையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.
இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர்.
சென்னையிலிருந்து சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு செல்ல 105 கிலோமீட்டர் தூரம் இருக்கிறது.
சென்னையில் இருந்து ரெயில் மூலம் அரக்கோணம் வந்தால் சோளிங்கரில் உள்ள லட்சுமி நரசிம்மரை எளிதில் தரிசனம் செய்யலாம்.
இதனால் அதிகமான பக்தர்கள் சென்னையில் இருந்து வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- போச்சம்பள்ளி 4 வழிச்சாலையில் போக்குவரத்து இடையூறாக நின்றுக் கொண்டும், படுத்துக் கொண்டும் இருந்தார்.
- சுசீலாவை போலீஸ் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உள்ள நகைக்கடையின் பின்புறம் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு ஓட்டை போட முயற்சித்துள்ளனர்.
கடையின் உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சி அடிப்படையில் பழைய போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்த ஜெகநாதன், விக்னேஷ் மற்றும் கண்ணன் ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் பழைய போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்த சுசிலா (வயது55) என்பவர் மது போதையில் போச்சம்பள்ளி 4 வழிச்சாலையில் போக்குவரத்து இடையூறாக நின்றுக் கொண்டும், படுத்துக் கொண்டும் இருந்தார். வாகன ஓட்டிகள் மீறி செல்ல முயன்றால் அவர்களை மிரட்டி வாகனத்தை தடுத்து நிறுத்தினார்.
இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் ஸ்தம்பித்து நின்றன. விபரம் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போச்சம்பள்ளி போலீசார் சுசீலாவை சமாதானம்பபடுத்த முயன்றனர். அப்போது எனது மகன்களான ஜெகநாதன், விக்னேஷ் மற்றும் எனது மருமகன் கண்ணன் ஆகிய 3 பேர் மீது பொய் வழக்கு போட்டு ஜெயிலுக்கு அனுப்பியதாக வாதாடினார். மகன்கள் மற்றும் மருமகன் ஆகியோரை போலீசார் கைது செய்ததால் அவ்வப் போது மதுபோதையில் போலீஸ் நிலையம் சென்று வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டு வந்த நிலையில் போச்சம்பள்ளி 4 வழிச்சாலையில் போக்கு வரத்துக்கு இடையூறாக செயல்பட்டார். பின்னர் சுசீலாவை போலீஸ் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அரசியல் தலைவர்கள் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
உலகம் முழுவதும் நாளை (மார்ச்-8ம் தேதி) மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. பெண்களை போற்றும் விதமாக கொண்டாடப்படும் இத்தினத்தை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் தினத்தை முன்னிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
சமூகத்தின் சரிபாதியான பெண்கள் அவர்களுக்கு உரிய அனைத்து உரிமைகளையுயும், நலன்களையும் முழுமையாக பெறும்வரை அதை நோக்கிய நமது பயணம் தொடரும் என்ற உறுதியுடன் மகளிர் தன வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ஜாபர் சாதிக்கின் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன் நோட்டீசை அவரது தாய் படம்பிடித்து கிழித்து உள்ளார்.
- வங்கி கணக்குகளை ஆய்வு செய்து பண பரிவர்த்தனை குறித்து ஏற்கனவே கொடுத்த தகவல்களுடன் ஒப்பிட்டு பார்த்து வருவதாக தெரிவித்தார்.
சென்னை:
டெல்லியில் உள்ள மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் மேற்கு டெல்லியின் கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள குடோனில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடத்திய சோதனையின் போது போதை பொருட்கள் தயாரிக்கப் பயன்படும் ரூ.2 ஆயிரம் கோடிமதிப்புள்ள 50 கிலோ ரசாயனப் பொருட்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் மூளையாகச் செயல்பட்ட தமிழ் திரைப்பட தயாரிப்பாளராகவும், தி.மு.க.வில் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராகவும் இருந்த ஜாபர் சாதிக்கை விசாரிக்க முயன்றபோது தலைமறைவாகிவிட்டார். இதைத் தொடர்ந்து அவர் வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்க, அனைத்து விமான நிலையங்களுக்கும் 'லுக்-அவுட்' நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. அவரது 8 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டு உள்ளன. மேலும் அவரது சகோதரர்கள் முகமது சலீம், மைதீன் ஆகியோரையும் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
இதற்கிடையே அவர்கள் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களை சேர்க்க நிதிஉதவி செய்ததாகவும் சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் ஜாபர் சாதிக் பற்றி மேலும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக அதிகாரி ஒருவர் கூறும்போது, கோவையில் கடந்த 2022-ம் ஆண்டு ஈஸ்வரன் கோவில் முன்பு நடந்த கார் வெடிப்பு தொடர்பாக தமிழகம் முழுவதும் சந்தேக நபர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையின் போது மூளைச்சலவை செய்யப்பட்ட வாலிபர்களுக்கு சென்னை, கோவையில் உள்ள கல்லூரி ஒன்றில் பயங்கரவாத பயிற்சி அளிக்கப்பட்டது தெரிந்தது.
இது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களின் வங்கி கணக்கு பரிவர்த்தனை விபரங்களை ஏற்கனவே டெல்லியை சேர்ந்த மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. தற்போது போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேடப்படும் ஜாபர் சாதிக், அவரது சகோதரர்கள் முகமது சலீம், மைதீன் ஆகியோரது வங்கி கணக்குகளை ஆய்வு செய்து பண பரிவர்த்தனை குறித்து ஏற்கனவே கொடுத்த தகவல்களுடன் ஒப்பிட்டு பார்த்து வருவதாக தெரிவித்தார்.
இதல் ஜாபர் சாதிக், மற்றும் அவரது சகோதரர்கள் அரபிக் கல்லூரி பேராசிரியர் மற்றும் முன்னாள் மாணவர்கள் வாயிலாக ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பிற்கு ஆட்களை சேர்க்கவும், ஆயுதப்பயிற்சி அளிக்கவும் நிதி உதவி செய்து இருப்பது தெரியவந்து உள்ளது. எனவே அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்றார்.
ஜாபர் சாதிக் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்த போது வெவ்வேறு பெயர்களில் 3-க்கும் மேற்பட்ட போலி பாஸ்போர்ட்டுகளை ஜாபர் சாதிக் பயன்படுத்தி வந்ததும் தெரியவந்து உள்ளது.
இதற்கிடையே சென்னை சாந்தோம் அருளானந்தம் தெருவில் உள்ள ஜாபர் சாதிக்கின் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன் நோட்டீசை அவரது தாய் படம்பிடித்து கிழித்து உள்ளார். அவர் எதற்காக படம் பிடித்தார்? அந்த படம் ஜாபர் சாதிக்கிற்கு அனுப்பட்டதா? மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக ஜாபர் சாதிக்கின் தாயிடம் விசாரிக்க முடிவு செய்து உள்ளனர். இதற்காக அவருக்கு முறைப்படி சம்மன் அனுப்ப அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.
- சோலார் விளக்குகள் 10 ஆண்டு வாரண்டியுடன் அமைக்கப்பட்டு வருகிறது.
- நிகழ்ச்சிகளில் மக்கள் பிரதிநிதிகள், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒவ்வொரு வட்டாரத்திலும் உயர் கோபுர சோலார் மின்விளக்குகள் அமைக்கப்பட்டு வருகிறது.
7.40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இந்த சோலார் விளக்குகள் 10 ஆண்டு வாரண்டியுடன் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அழகப்பபுரம் பேரூராட்சி, ஆரோக்கியபுரம் பேரூராட்சி மற்றும் லீபுரம் பேரூராட்சியில் அமைத்த விளக்குகளை மக்கள் தேவைக்காக காங்கிரஸ் எம்.பி., விஜய் வசந்த் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சிகளில் மக்கள் பிரதிநிதிகள், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- அதியமானுக்காகக் காஞ்சியிலிருந்து ஆட்சிப் புரிந்த தொண்டைமானிடம் தூது சென்று நிகழவிருந்த போரை நிறுத்திய பெருமை மிக்கவர் அவவையார்.
- உலக வரலாற்றில் இரண்டு வேந்தர்களுக்கிடையில் தூது சென்ற பெரு மடந்தையராகப் பெருமை கொண்டவர் அவ்வையார் ஆவார்.
சென்னை:
ஈராயிரம் ஆண்டுகளாகத் தமிழ் மக்கள் நன்கு அறிந்திருக்கும் புலவர் பெருமாட்டியருள் அவ்வையாரின் அருமைத் திருப்பெயர் என்றும் அழியாமல் நிலைத்திருக்கும் திருப்பெயரும் தவப்பெயருமாகும்.
'அகர முதல எழுத்தெல்லாம்' என்பது போல ஒளவை முதல அறிவெல்லாம் என்று அறிவுக்கே பரியாய நாமமாக அவ்வையார் ஆண், பெண், இளைஞர், முதியவர் என எல்லோராலும் வழிபாட்டுணர்ச்சியோடு வணங்கப்படுகிறார்.
அதியமானுக்காகக் காஞ்சியிலிருந்து ஆட்சிப் புரிந்த தொண்டைமானிடம் தூது சென்று நிகழவிருந்த போரை நிறுத்திய பெருமை மிக்கவர் அவவையார். உலக வரலாற்றில் இரண்டு வேந்தர்களுக்கிடையில் தூது சென்ற பெரு மடந்தையராகப் பெருமை கொண்டவர் அவ்வையார் ஆவார்.
சேரமான் மாரி வண்கோவும், சோழன் ராச சூயம் வேட்ட பெரு நற்கிள்ளியும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதியும் ஒருங்கிருப்பக் கண்டு உவந்து' என்றும் தமிழ் மூவேந்தர்கள் இவ்வாறே இருப்பீர்களாக' என அறிவுறுத்திய புலமைச் செல்வியார் ஆவார். நெடுமான் அஞ்சி போர்க் களத்தில் வேல் பாய்ந்து இறந்தபோது, அவ்வையார் வருந்திப் பாடிய கையறு நிலைப்பாட்டு மிகவும் உருக்கம் வாய்ந்தது.
சங்கப் புலமைப் பெரும் செவ்வியராகிய இப்பெருமாட்டியார் பாடியனவாக உள்ள ஐம்பத்தொன்பது பாடல்களுள் அகப்பொருள் பற்றியன இருபத்தாறாகும். எஞ்சிய முப்பத்து மூன்று பாடல்களுள் புறப்பொருளுக்குரியன வாய்ப் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளன.
மாந்தர் குலத்திற்குப் பெருமை சேர்த்த அவ்வை பெருமாட்டியாரைப் போற்றும் வகையில் உலக மகளிர் நாளான 08.03.2024 வெள்ளிக்கிழமையன்று காலை 10 மணிக்கு தமிழ்நாடு அரசின் சார்பில், தமிழ் வளர்ச்சித் துறையால், சென்னை காமராசர் சாலையில் அமைந்துள்ள அவ்வையாரின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்தலும், தமிழ்ப் பெருமாட்டியின் திருவுருவப்படத்திற்கு மலர் வணக்க நிகழ்வும் நடைபெற உள்ளன. அமைச்சர் பெருமக்கள், மேயர், துணை மேயர், அரசு உயர் அலுவலர்கள், தமிழ் அறிஞர்கள், தமிழ் வளர்ச்சித் துறை அலுவலர்கள், பொதுமக்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
- முதலமைச்சர் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், முடிக்கப்பட்ட திட்டங்களை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்தும் வைக்க உள்ளார்.
- நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், பொள்ளாச்சி மட்டுமின்றி, வெளி மாவட்டங்களில் இருந்து பயனாளிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொள்ளாச்சி:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 13-ந்தேதி பொள்ளாச்சிக்கு வருகிறார். அங்கு அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழா நடக்கிறது.
இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இந்த விழா பொள்ளாச்சி வடக்கிபாளையம் பிரிவு ஆச்சிப்பட்டியில் உள்ள மைதானத்தில் நடக்க உள்ளது. இதற்காக அந்த இடத்தில், மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் நடக்க உள்ளது. இந்த நிலையில் விழா நடைபெற உள்ள இடத்தை இன்று அமைச்சர் முத்துசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
வருகிற 13-ந்தேதி பொள்ளாச்சியில் 20 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.
இதுமட்டுமின்றி இந்த விழாவில், முதலமைச்சர் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், முடிக்கப்பட்ட திட்டங்களை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்தும் வைக்க உள்ளார்.
இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், பொள்ளாச்சி மட்டுமின்றி, வெளி மாவட்டங்களில் இருந்து பயனாளிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விழா நடத்துவதற்காக இந்த மைதானத்தை தேர்ந்தெடுத்துள்ளோம். அதனை இன்று பார்வையிட்டுள்ளோம். இங்கு பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணிகள் தொட ங்கி நடைபெற உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து நிருபர்கள் அவரிடம், பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு தி.மு.க இருக்காது என பிரதமர் மோடி கூறியுள்ளாரே என கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அமைச்சர் அவர்கள் இப்படி சொல்ல, சொல்ல சொல்ல நாங்கள் வளர்ந்து கொண்டு தான் இருக்கிறோம். அவர்கள் சொல்வது எங்களுக்கு இன்னும் வேகமாக உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தை தான் கொடுக்கிறது என தெரிவித்தார்.
ஆய்வின் போது கலெக்டர் கிராந்திகுமார் பாடி, சப்-கலெக்டர் கேத்ரின் சரண்யா, கோவை தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் தளபதி முருகேசன், நகர மன்ற தலைவர் ஷியமளா நவநீத கிருஷ்ணன், தி.மு.க. நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன் உள்பட பலர் இருந்தனர்.
- முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் கலந்து கொண்டு தேர்தல் பத்திரங்கள் விற்பனை தொடர்பாக உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறி மத்திய அரசுக்கு எதிராக கண்டன உரையாற்றினார்.
- ஆர்ப்பாட்டத்தின் முடிவில் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் இரும்பு சங்கிலி மற்றும் பூட்டுடன் நிர்வாகிகள் திரண்டு சென்று பாரத ஸ்டேட் வங்கிக்கு பூட்டு போட முயன்றனர்.
நெல்லை:
தேர்தல் பத்திரம் மூலம் மத்திய அரசு மோசடியில் ஈடுபட்டதாக கூறி அதனை கண்டித்தும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை நிறைவேற்றாமல் பாரத ஸ்டேட் வங்கி காலதாமதம் செய்வதை கண்டித்தும் தமிழகம் முழுவதும் இன்று காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று காலை பாளை பஸ் நிலையம் அருகே உள்ள வங்கி முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.
முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் கலந்து கொண்டு தேர்தல் பத்திரங்கள் விற்பனை தொடர்பாக உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறி மத்திய அரசுக்கு எதிராக கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் வக்கீல் பிரிவு மாநில துணைத் தலைவர் மகேந்திரன், மாவட்ட பொருளாளர் ராஜேஷ் முருகன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் உதயகுமார், கவி பாண்டியன், சொக்கலிங்க குமார், பொதுச்செயலாளர் மகேந்திரன், ஓ.பி.சி. பிரிவு டியூக் துரைராஜ், வட்டார துணை தலைவர் பாண்டிய ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் முடிவில் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் இரும்பு சங்கிலி மற்றும் பூட்டுடன் நிர்வாகிகள் திரண்டு சென்று பாரத ஸ்டேட் வங்கிக்கு பூட்டு போட முயன்றனர்.
அப்போது அங்கே பாதுகாப்பு பணிக்கு நின்ற பாளை உதவி போலீஸ் கமிஷனர் பிரதீப் மற்றும் பாளை இன்ஸ்பெக்டர் முத்து கணேஷ் தலைமையிலான போலீசார் அவர்களை கைது செய்து வேனில் அழைத்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- பாபாவின் மீது அதிகம் பக்தி கொண்ட சாய் முருகன் தன் வீட்டையே பாபா ஆலயமாக மாற்ற முயற்சி செய்துவந்தார்.
- ஷீரடி பாபா ஆலயத்தில் காலடி பதித்தாலே போதும் நினைத்த காரியம் நடந்து விடுகிறது என பக்தர்கள் கூற நாமும் கேட்டறிந்தோம்.
திண்டுக்கல் நாகல்நகர் பாரதிபுரத்தில் அமைந்துள்ளது சீரடி சாய்பாபா ஆலயம் இந்த ஆலயத்தின் நிர்வாகி சாய் முருகன் அவர்கள் சாய்பாபா மீது அளவுகடந்தபக்தி கொண்டு அவர் வீட்டின் முன்புறமாக கடந்த 2014 ஆம் ஆண்டு ஒரு சிறிய பாபா ஆலயத்தை தன் தாய், தந்தையின் உதவியுடன் ஆலயத்தை கட்டினார். திண்டுக்கல் நகர் பகுதி மக்கள் பாபா ஆலயம் இருப்பதை அறிந்து ஆலயத்திற்கு வர தொடங்கினர்.சாய் பக்தர்கள் அனைவரும் பாபாவை வணங்கிச் செல்ல வழிவகை செய்தார். இந்த பாபாவிற்கு ஆரத்தி நிகழ்ச்சியின்போது ஏராளமான பொதுமக்கள் சாலையில் அமர்ந்து பாபாவை தரிசனம் செய்தனர். வியாழக்கிழமை தோறும் திண்டுக்கல் நகர் பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரத் தொடங்கினார். சாய் பக்தர்களுக்கு அருட்பிரசாதமாக சப்பாத்தி வழங்கப்பட்டது. பக்தர்களின் எண்ணிக்கை நாளடைவில் அதிகமான காரணத்தினால் சப்பாத்தி இயந்திரம் ஒன்று வாங்கப்பட்டது. அதன்பின் பக்தர்களுக்கு தாரளாமாக சப்பாத்தி அருட்பிரசாதமாக வழங்கப்பட்டது. பாபாவின் மீது அதிகம் பக்தி கொண்ட சாய் முருகன் தன் வீட்டையே பாபா ஆலயமாக மாற்ற முயற்சி செய்துவந்தார்.

அவரின் முயற்சியின்போது பல கஷ்டமான பாதைகளை கடந்து.. 2019ம் ஆண்டு தான் குடியிருந்த வீட்டை ஒழுங்குபடுத்தி சீரடி பாபா ஆலயத்தை உருவாக்க தொடங்கினார் . மேற்கூறையில் ஷீரடியில் உள்ள கோபுரம் போல அமைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஆறு அடி உயரம் கொண்ட பளிங்கி கல்லால் ஆன பாபா சிலையினை நிறுவினார்.
அதனைத் தொடர்ந்து பாபா ஆலயத்தில் மேற்புற பகுதியில் பக்தர்கள் தியானம் செய்வதற்காக தியான மண்டபத்தையும் உருவாக்கினார்
நமதுசீரடி சாய்பாபா ஆலயத்தில் வியாழக்கிழமை தோறும் அருட்பிரசாதமாக சப்பாத்தி வழங்கி வந்தனர் அதனை தொடர்ந்து சாய் பக்தர் சாய் முருகன் மதிய வேலை பக்தர்களுக்கு அறுசுவை உணவு அளிக்க வேண்டும் எண்ணி கடந்த மூன்று ஆண்டுகளாக சிறப்பான அன்னதானத்தை தொடங்கினார். பாபா எண்ணுவாதெல்லாம் பசி என்று யாரும் இருக்க கூடாது என எண்ணம் கொண்டவர். சாய் பக்தரான முருகன் புதிய முயற்சியாக கடந்த 2023 ஆம் ஆண்டு பொங்கல் திருநாள் முதல் சாய் பக்தர்களுக்கு காலை வேளை தினசரி பக்தர்களின் பசியாற்ற அருட்பிரசாதமாக காலை இட்லி சுட சுட தர தொடங்கினார் . திண்டுக்கல் நாகல்நகர் பாரதி புரத்தில் அமையப்பெற்ற பாபாவின் புகழ் அதிக அளவில் பக்தர்கள் மத்தியில் வரத் தொடங்கியது. ஆலயத்திற்கு ஏராளமான பக்தர்கள் வரத் தொடங்கினர். திண்டுக்கல் நகர் மட்டுமல்லாமல் மதுரை, திருச்சி, சென்னை என பல்வேறு ஊர்களில் இருந்து திண்டுக்கல் சீரடி சாய்பாபா ஆலயம் இருப்பதை அறிந்து வர தொடங்கினர்.
ஷீரடி பாபா ஆலயத்தில் காலடி பதித்தாலே போதும் நினைத்த காரியம் நடந்து விடுகிறது என பக்தர்கள் கூற நாமும் கேட்டறிந்தோம்.
பாபா ஆலயத்திற்கு மனநிலை பாதிக்கபட்ட நபர்கள். அழைத்து வரப்பட்டனர் ஆலயத்திற்கு வந்து சென்றபிறகு இப்பொழுது முன்னேற்றம் அடைந்து வருவதாக பெற்றோர்கள் கூற நாம் வியந்துபோனோம்'', ஆலயத்திற்கு வருகின்ற பக்தர்கள் பாபாவிற்கு பாலாபிஷேகம் செய்ய கோரிக்கை வைத்தனர். பாபாவின் ஆசியை பெற்ற ஆலய நிர்வாகி சாய் முருகன் உடனடியாக பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றும் வண்ணம் சாய் பக்தர்களின் திருக்கரங்களால் 5 ஆயிரம் லிட்டர் பால் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் கார்த்திகை மாதம் ஆலய முன்பாகவும் ஐம்பதாயிரம் கார்த்திகை தீபம் ஏற்றபட்டு பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் வழிபட்டனர்.

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற மந்திர சொல்லுக்கு ஏற்ப சாதி, மதம் பேதமின்றி ஏராளமான சாய் பக்தர்கள் ஆலயதிற்கு வர தொடங்கினர். தொடர்ந்து சாய்பாபா மீது அளவு கடந்த பக்தியினால் மீண்டும் ஒரு முயற்சியினை கையில் எடுத்தார் நிர்வாகி சாய் முருகன். ஆலயம் அருகிலேயே மாபெரும் ஒரு அன்னதானம் கூடத்தை கட்ட வேண்டும் என்று முயற்சி வீண்போகவில்லை வெற்றி பெற்று ஆலயத்திற்கு அருகிலேயே சாய் பக்தரின் ஒருவரின் உதவியோடு காலி இடம் வாங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சிறப்பு பூமி பூஜை போடப்பட்டு பக்தர்களின் உதவியோடு அன்னதான கூட கட்டுப்பணியை தொடங்கினார்கள் இந்த கட்டுமான பணிக்கு ஆலயத்துக்கு வருகின்ற சாய் பக்தர்கள் ஏராளமானோர் கட்டிடத்திற்கு தேவையான மணல், ஜல்லி, இரும்பு கம்பி, சிமெண்ட் என கட்டிடத்தின் மூலப் பொருட்களை வாங்குவதற்காக ஒவ்வொரு பக்தர்களும் தங்கள் இயன்றதை செய்தனர். .இந்த அன்னதான கூடம் கட்டி முடிக்கப்பட்டு வருகின்ற (28.03. 24) வியாழக்கிழமை திறப்பு விழா காண உள்ளது. அன்று முதலே தினசரி காலை இட்லி, பொங்கல், மதியம் வடை, பாயசத்துடன் உணவு, இரவு சப்பாத்தி, கோதுமை தோசை குருமா, சட்னி என மூன்று வேலையும் சாய் பக்தர்களுக்கு உணவளிக்க போவதாக திட்டமிட்டு உள்ளேன் என கோயில் நிர்வாகியும் சாய் பக்தருமான சாய் முருகன் தெரிவித்தார்.
- குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் தெரிவிக்கவே அவர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்தனர்.
- அங்கன்வாடி பணியாளரிடம் குழந்தைகளுக்கு உணவு வழங்குவதில் பாரபட்சம் காட்டக்கூடாது.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை யூனியனுக்கு உட்பட்ட அய்யலூர் அருகே உள்ள களர்பட்டி 7-வது வார்டு பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்த நிலையில் சுமார் 70 மாணவ-மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் காலை உணவு திட்டத்திற்கு மாணவிகளை காலை 8 மணிக்கு வரச் சொல்வதாகவும், தாமதமாக வரும் குழந்தைகளுக்கு உணவு கொடுக்க மறுப்பதாகவும் புகார்கள் வந்தது. இதுகுறித்து குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் தெரிவிக்கவே அவர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்தனர். பின்னர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.
இங்கு காலை உணவு திட்டத்தின் கீழ் அமைப்பாளராக பணியாற்றி வரும் அம்பிகா என்பவர் பள்ளிக்கு வரும் குழந்தைகளிடம் தண்ணீர் குடத்தில் எடுத்து வரச்சொல்வதாகவும், தாமதமாக வந்தால் உணவு கிடையாது என்றும் கூறியதாக குழந்தைகள் தெரிவித்தனர்.
கடந்த சில நாட்களாகவே இப்பிரச்சினை அடுத்தடுத்து எழுந்த நிலையில் இது குறித்து அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்த முடிவு செய்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசன் தலைமையில் வடமதுரை ஊட்டச்சத்து அங்கன்வாடி மேலாளர்கள், திண்டுக்கல் மண்டல துணைத் திட்ட தாசில்தார் ஆகியோர் நேரடியாக பள்ளி மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். அப்போது அங்கன்வாடி பணியாளரிடம் குழந்தைகளுக்கு உணவு வழங்குவதில் பாரபட்சம் காட்டக்கூடாது. தாமதமாக வந்தாலும் உணவு வழங்க வேண்டும் என்று எச்சரித்து சென்றனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- ஐகோர்ட் உத்தரவை அமல்படுத்தாததை அடுத்து கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
- 2010-ம் ஆண்டு ஆகஸ்டு 30-ந்தேதி முதல் அம்பத்தூர் தாசில்தாராக பதவி வகித்த 16 பேருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டிருந்தார்.
சென்னை:
சென்னை அம்பத்தூரில் உள்ள மோலி அலெக்சாண்டர் என்பவரது நிலத்துக்கு பட்டா வழங்கும் படி, அம்பத்தூர் வட்டாட்சியருக்கு கடந்த 2010-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை அமல்படுத்தாததை அடுத்து கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு மேலாக ஐகோர்ட் உத்தரவு அதிகாரிகளால் வேண்டுமென்று அவமதிக்கப்பட்டுள்ளதாக கூறி, 2010-ம் ஆண்டு ஆகஸ்டு 30-ந்தேதி முதல் அம்பத்தூர் தாசில்தாராக பதவி வகித்த 16 பேருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டிருந்தார்.
இதனை எதிர்த்து மேல்முறையீடு மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் ஆகியோர் தாசில்தார்களுக்கு விதிக்கப்பட்ட ஒரு மாத சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.






