search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sholingur Temple"

    • தமிழக அரசு ரூ.9.50 கோடி மதிப்பில் ரோப்கார் அமைக்கும் பணியை தொடங்கியது.
    • பணிகள் முழுவதுமாக முடிந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரோப்கார் சோதனை ஓட்டமும் நடந்தது.

    புலிவலம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள சோளிங்கரில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது. இதில் 1,305 படிகள் உள்ளது. ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமியை தரிசித்து செல்கின்றனர்.

    இந்த நிலையில், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மலை மீது ஏறிச்சென்று தரிசிக்க முடியாமல் சிரமப்பட்டு வந்தனர்.

    அவர்கள் எளிதில் மலைக்கு சென்று யோக நரசிம்மரை தரிசிக்கும் வகையில் ரோப்கார் அமைத்து தர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.

    அதன்பேரில் தமிழக அரசு ரூ.9.50 கோடி மதிப்பில் ரோப்கார் அமைக்கும் பணியை தொடங்கியது. இப்பணிகள் முழுவதுமாக முடிந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரோப்கார் சோதனை ஓட்டமும் நடந்தது.

    மேலும் ரோப்கார் அமைவிடத்தில் அமைச்சர் ஆர். காந்தி தலைமையிலான நன்கொடையாளர்கள் மூலம் ரூ.11 கோடி மதிப்பில் அடிப்படை வசதிகளுக்கான கட்டுமான பணிகளும் மும்முரமாக நடைபெற்று வந்தது.

    இந்த பணிகளும் தற்போது நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் ரோப்கார் அமைவிடத்தில் ஆய்வு செய்தனர்.

    அப்போது விரைவில் ரோப்கார் பக்தர்களின் பயன்பாட்டிற்கு தொடங்கப்படும் என தெரிவித்தனர்.

    லட்சுமி நரசிம்மர் மலைக் கோவிலின் ரோப்கார் சேவையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.

    இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர்.

    சென்னையிலிருந்து சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு செல்ல 105 கிலோமீட்டர் தூரம் இருக்கிறது.

    சென்னையில் இருந்து ரெயில் மூலம் அரக்கோணம் வந்தால் சோளிங்கரில் உள்ள லட்சுமி நரசிம்மரை எளிதில் தரிசனம் செய்யலாம்.

    இதனால் அதிகமான பக்தர்கள் சென்னையில் இருந்து வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ×