என் மலர்
உள்ளூர் செய்திகள்
- மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்ட சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இந்த வழக்கில் ஏற்கனவே ஒரு போலீஸ்காரர் உள்பட 2 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனை செய்யப்பட்டது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்ட சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் ஏற்கனவே 38 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை செய்யப்பட்டதில் அதன் மாதிரி குடிநீர் தொட்டியில் கலக்கப்பட்ட அசுத்தத்தின் மாதிரியுடன் ஒத்துப்போகவில்லை.
இந்த நிலையில் வேங்கைவயல், இறையூர் பகுதிகளை சேர்ந்த 10 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் புதுக்கோட்டை எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு தள்ளுபடியானது.
தற்போது இந்த வழக்கில் அப்பகுதியை சேர்ந்த 3 பேரின் குரல் மாதிரியை பரிசோதனை செய்ய அனுமதி கோரி சி.பி.சி.ஐ.டி போலீசார் மாவட்ட வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு வருகிற 19-ந் தேதி விசாரணைக்கு வருகிறது.
மேலும் இந்த வழக்கில் ஏற்கனவே ஒரு போலீஸ்காரர் உள்பட 2 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- கடுமையான வெயிலின் தாக்கம் காரணமாக நீர் நிலைகளிலும் தண்ணீரின் அளவு கணிசமாக குறைய தொடங்கி உள்ளது.
- அனைத்து அருவிகளும் வறண்டு காணப்படுவதால் சுற்றுலா பயணிகளின் வரத்துகள் இன்றி அருவி கரையானது வெறிச்சோடி காணப்படுகிறது.
தென்காசி:
தமிழகத்தில் தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளதால் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
இதனால் பொதுமக்கள் பலரும் குளிப்பதற்காக நீர் நிலைகளை அதிகம் நாடி வருகின்றனர். இந்நிலையில் கடுமையான வெயிலின் தாக்கம் காரணமாக நீர் நிலைகளிலும் தண்ணீரின் அளவு கணிசமாக குறைய தொடங்கி உள்ளது.
இந்நிலையில் தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள முக்கிய சுற்றுலா தளமான குற்றால அருவிகளும் தற்போது சுட்டெரிக்கும் வெயிலால் தண்ணீர் வரத்து குறைந்து அருவிகள் வறண்டு காணப்படுகின்றன.
இதேபோல் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலி அருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளும் வறண்டு காணப்படுவதால் சுற்றுலா பயணிகளின் வரத்துகள் இன்றி அருவி கரையானது வெறிச்சோடி காணப்படுகிறது. தென்மேற்கு பருவமழை தொடங்கும் பொழுது குற்றால சீசன் தொடங்கும்.
- தர்பூசணி பழங்களில் செயற்கையாக நிறம் ஏற்றப்படும் செயல்கள் நடந்து வருகிறது.
- கலப்படம் கண்டறியப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை:
அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தர்பூசணி பழங்களில் செயற்கையாக நிறம் ஏற்றப்படும் செயல்கள் நடந்து வருகிறது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. கலப்படம் கண்டறியப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் குழந்தைகள் நல காப்பகத்திற்கு பின்புறம் உள்ள காலி நிலத்தில் ரூ.22 கோடி மதிப்பில் மாணவர்கள் தங்கும் விடுதியும், ரூ.13 கோடியில் புதிய நர்சிங் பள்ளியும் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், பரந்தாமன் எம்.எல்.ஏ., மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக துணை வேந்தர் நாராயணசாமி, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
- ஆபத்தான முறையில் பெட்ரோலை ஊற்றி இதுபோன்ற சாகச செயல்களில் ஈடுபட்ட நபர்களுக்கு பலர் இணையத்தில் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
- சம்பந்தப்பட்டவர்களை போலீசார் உடனே கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
மதுரை:
இன்றை நவீன காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சமூக வலைதளங்களில் மூழ்கி கிடக்கின்றனர். அதிக பார்வையாளர்கள் தங்கள் வீடியோக்களை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இளைஞர்கள் வித்தியாசமான வீடியோக்களை உருவாக்கி இணையத்தில் பதிவேற்றி வருகிறார்கள். சிலர் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் செயல்களை செய்து அதனை இணையத்தில் பதிவிடுகின்றனர்.
ரெயில் செல்லும்போது தண்டவாளத்தில் நின்று வீடியோ எடுப்பது, மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று வீலிங் செய்வது உள்ளிட்ட வரம்பு மீறிய செயல்களால் சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது.
இந்த நிலையில் வாலிபர்கள் சிலர் ரீல்ஸ் மோகத்தால் ஆற்றில் பெட்ரோலை ஊற்றி எரித்து அதில் குதிப்பது போன்ற வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆற்றுப்பகுதிக்கு செல்லும் 4 வாலிபர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த பெட்ரோலை ஆற்றுக்குள் பெட்ரோலை வட்டமாக ஊற்றுகின்றனர். பின்னர் அதில் ஒரு வாலிபர் தீக்குச்சியை கொளுத்தி அதில்போட வட்ட வடிவில் தீ குபீரென்று எரிய தொடங்கியது.

அந்த நேரத்தில் அருகில் இருந்த சுவற்றில் ஏறியிருந்த வாலிபர் ஒருவர் அந்த தீயில் குதிக்கிறார். சிறிது நேரத்தில் தீ அணைந்து விட அந்த வாலிபர் தண்ணீரில் இருந்து வெளியேறுகிறார். இன்ஸ்டாகிராமில் பதிவேற்றப்பட்டுள்ள இந்த வீடியோ தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியில் உள்ள தாமிரபரணி ஆறு என குறிப்பிடப்பட்டு உள்ளது. இதுபோன்ற செயல்களால் நீர்நிலைகளுக்கும் அதில் வாழும் மீன்களுக்கும் பாதிப்பு ஏற்படும்.
ஆபத்தான முறையில் பெட்ரோலை ஊற்றி இதுபோன்ற சாகச செயல்களில் ஈடுபட்ட நபர்களுக்கு பலர் இணையத்தில் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ சிலருக்கு தவறான முன்னுதாரணமாகி விடும். எனவே சம்பந்தப்பட்டவர்களை போலீசார் உடனே கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
- இளநீர் 30 முதல் 60 ரூபாய் வரையும், தர்பூசணி ஒரு கிலோ 25 ரூபாய் வரையும் விற்பனையானது.
- கோடை வெயிலில் இருந்து தப்பிக்க அதிக அளவிலான நீர் பருக வேண்டும்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும், ஆனால் இந்தாண்டு பிப்ரவரி மாதமே வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்தது.
சேலம் மாவட்டத்தில் பிப்ரவரி மாதத்தில் தொடங்கிய வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து நேற்று உச்சத்தை எட்டியது. நேற்று முன்தினம் 102.2 டிகிரியாக இருந்த வெயிலின் தாக்கம் நேற்று மேலும் அதிகரித்து 103.3 டிகிரியாக பதிவானது.
இதனால் காலையில் தொடங்கிய வெயில் மாலை 6 மணி வரை சுட்டெரித்தது. மேலும் 7 மணி வரை அனல் காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கினர். மதிய நேரங்களில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்ததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் சாலைகளில் சென்றவர்கள் குடைகள் பிடித்தபடியும், துணிகளால் தலையை மூடியபடியும் சென்றனர். நேற்றிரவும் கடும் புழுக்கம் நீடித்ததால் இரவிலும் தூங்க முடியாமல் பொதுமக்கள் தவித்தனர்.
கோடை வெயிலில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் குளிர்பான கடைகளான நுங்கு, பழச்சாறு, இளநீர், தர்பூசணி, கம்பங்கூழ், மோர் கடைகளில் அதிக அளவில் குவிந்தனர். குளிர்பானங்களை பருகி உஷ்ணத்தை தவிர்த்தனர். இதனால் குளிர்பான கடைகளில் கூட்டம் அலைமோதியது. இளநீர் 30 முதல் 60 ரூபாய் வரையும், தர்பூசணி ஒரு கிலோ 25 ரூபாய் வரையும் விற்பனையானது. இதனால் அதிக அளவில் தர்பூசணிகளை வாங்கி சாப்பிட்டனர்.
இன்று மேலும் 2 முதல் 3 டிகிரி வரை வெயிலின் தாக்கம் இருக்கும் என்றும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கோடை வெயிலில் இருந்து தப்பிக்க அதிக அளவிலான நீர் பருக வேண்டும், மோர், இளநீர், உப்பு கலந்த அரிசி கஞ்சி, உப்பு கலந்த எலுமிச்சை பழச்சாறு, ஆகியவற்றை அதிக அளவில் பருகலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- கார்களில் தலா ஒரு டன் என மொத்தம் 3 டன் எடை மதிப்பில் ஹான்ஸ், குட்கா, போன்ற புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது.
- சென்னைக்கு யாருக்கு கடத்தி சென்றார்கள் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா சுங்கச்சாவடியில் இன்று அதிகாலை வாலாஜா போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமன் ராஜா தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜன் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி செல்வதற்காக அதிவேகமாக வந்த 3 கார்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். கார்களில் தலா ஒரு டன் என மொத்தம் 3டன் எடை மதிப்பில் ஹான்ஸ், குட்கா, போன்ற புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது.
இதை தொடர்ந்து போலீசார் கார்களுடன் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
அதனை கடத்தி வந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பரத்குமார் (வயது22), கல்யாணராம் (26), சுரேஷ் (25), கணபத்ராம் (28) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட 3 கார்களின் மதிப்பு ரூ.15 லட்சம் எனவும், 3 டன் குட்கா பொருட்களின் மதிப்பு ரூ.6 லட்சம் என மொத்தம் ரூ.21 லட்சம் மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சென்னைக்கு யாருக்கு கடத்தி சென்றார்கள் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அரசு போக்குவரத்துக் கழக பஸ்களில் 30 நாட்களுக்கு முன் முன்பதிவு செய்து பயணம் செய்யும் முறை நடைமுறையில் இருந்து வந்தது.
- தொலைதூரம் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம்.
சென்னை:
தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் ஆர்.மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பஸ்களில் 30 நாட்களுக்கு முன் முன்பதிவு செய்து பயணம் செய்யும் முறை நடைமுறையில் இருந்து வந்தது. பயணிகளின் வசதிக்காக 15-ந் தேதி (நேற்று) முதல் பயண முன்பதிவு காலம் 30 நாட்களுக்கு பதிலாக 60 நாட்களுக்கு முன் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
எனவே தொலைதூரம் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் மேற்கண்ட வசதியை பயன்படுத்தி தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு www.tnstc.in மற்றும் மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சிறப்பு கோர்ட்டு, எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தது.
- தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், எஸ்.வி.சேகர் மேல்முறையீடு செய்தார்.
சென்னை:
பா.ஜனதாவைச் சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர். கடந்த 2018-ம் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து தரக்குறைவான ஒரு பதிவை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்தார். இதையடுத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் மிதார் மொய்தின் அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு, எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், எஸ்.வி.சேகர் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், 'மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நடிகர் எஸ்.வி.சேகருக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுதிவைக்கிறேன். மனுவுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதில் அளிக்க வேண்டும்'' என்று உத்தரவிட்டார்.
- ராகுல் காந்தியின் பாரத ஒற்றுமை நீதி யாத்திரை நாளையுடன் முடிவடைகிறது.
- கார்கே, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் கலந்து கொள்கிறார்கள்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி 'பாரத ஒற்றுமை நீதி யாத்திரை'யை கடந்த ஜனவரி 14-ந்தேதி மணிப்பூரில் தொடங்கினார். இந்த யாத்திரை மராட்டியத்தில் நேற்று 4-வது நாளாக நடந்தது. பால்கர் மாவட்டத்தில் அவர் திறந்தவெளி வாகனத்தில் சென்றபடி பொதுமக்களை சந்தித்தார். மேலும் ஆங்காங்கே அவர் மக்கள் மத்தியில் பேசினார்.
ராகுல்காந்தியின் யாத்திரை இன்று (சனிக்கிழமை) தானே மாவட்டத்தில் நடைபெறுகிறது. அவர் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மும்பை தாதரில் உள்ள சட்டமேதை அம்பேத்கரின் நினைவிடமான சைத்யபூமியில் யாத்திரையை நிறைவு செய்கிறார்.
பின்னர் அன்று மாலையில் மும்பை சிவாஜி பார்க்கில் இந்தியா கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டத்துக்கு காங்கிரஸ் ஏற்பாடு செய்து உள்ளது. இந்த கூட்டத்தில் ராகுல்காந்தி பங்கேற்று பேசுகிறார்.
இதில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ராஷ்டிரிய ஜனதாதளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ்- சரத்சந்திர பவார் கட்சி தலைவர் சரத்பவார் கலந்துகொள்கிறார்கள்.

மேலும் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆம் ஆத்மி உள்ளிட்ட மற்ற கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்க இருப்பதாக மராட்டிய சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் விஜய் வடேடிவார் தெரிவித்தார்.
இந்த விழாவில் கலந்து கொள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை காலை விமானம் மூலம் மும்பை செல்கிறார். மும்பை செல்லும் அவர் ராகுல் காந்தியின் யாத்திரையில் கலந்த கொள்வதும், இந்தியா கூட்டணி பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருப்பதால், இந்த பொதுக்கூட்ட செலவு காங்கிரஸ் கட்சியின் செலவில் சேர்த்துக் கொள்ளப்படும் என விஜய் வடேடிவார் தெரிவித்துள்ளார்.
- தமிழ்நாட்டில், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகளும், புதுச்சேரியில் ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன.
- விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து திங்கட்கிழமை முதல் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தெரிகிறது.
சென்னை:
தமிழ்நாட்டில், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகளும், புதுச்சேரியில் ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாட்டில் போட்டியிடும் இடங்கள் இன்னமும் இறுதி செய்யப்படவில்லை. இந்த பட்டியல் இன்று (சனிக்கிழமை) அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் விருப்ப மனுக்கள் வினியோகிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. 3 அல்லது 4 நாட்கள் வினியோகிக்கப்படும் விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து திங்கட்கிழமை முதல் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தெரிகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்பு இருக்கிறது.
அதைத்தொடர்ந்து வேட்பாளர் நேர்காணல் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
- துபாயிலிருந்து சென்னைக்கு தங்கம் கடத்தி வரப்பட்டது.
- சுமார் ரூ.85 லட்சம் மதிப்புடைய தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் சட்டவிரோதமாக தங்கம், போதைப் பொருள்கள் உள்ளிட்டவை கடத்தப்பட்டு வருவது தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்நிலையில், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றும் ஆண் ஊழியர், தனது இரவு பணியை முடித்துவிட்டு நேற்று விமான நிலைய ஊழியர்கள் வெளியேறும் வாசல் வழியாக வந்து கொண்டிருந்தார். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த வீரர்கள் அவரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அவர் அணிந்திருந்த ஷூவை கழற்றும்படி பாதுகாப்புப் படை வீரர்கள் கூறினர். அவர் ஷூவை கழற்ற மறுத்ததால் சந்தேகம் அடைந்த வீரர்கள் அவரை தனி அறைக்குச் சென்று சோதனை செய்தனர்.
அப்போது அவர் காலில் அணிந்திருந்த சாக்சுக்குள் 3 சிறிய பார்சல்கள் இருந்தன. அவைகளைப் பிரித்துப் பார்த்தபோது தங்கம்இருந்தது தெரியவந்தது. சுமார் 1.281 கிலோ எடையுடைய தங்கத்தின் சர்வதேச மதிப்பு ரூ.85 லட்சம் என கூறப்படுகிறது.
இதையடுத்து பாதுகாப்புப் படை அதிகாரி ஒப்பந்த ஊழியரையும், தங்கத்தையும் சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Always alert & vigil to protect & secure!#CISF nabbed a housekeeping staff along with 1.281 kg gold (worth approximately Rs 85 lakh) concealed inside his socks @ Chennai Airport. The staff was handed over to Customs.#CISFTHEHONESTFORCE@HMOIndia @MoCA_GoI @JM_Scindia pic.twitter.com/pUPE5yHrdp
— CISF (@CISFHQrs) March 15, 2024
- 15 மீனவர்கள், படகுகளை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை.
- அடிக்கடி கைது செய்யப்படுவதால், மீனவர்களின் வாழ்வாதாரம் சீர்குலைகிறது.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள், படகுகளை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
இந்தியா- இலங்கை இடையேயான கூட்டு நடவடிக்கை குழுவை விரைவில் கூட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 15 மீனவர்கள், படகுகளை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மீனவர்களை கைது செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதால் மீனவர்களின் வாழ்வாதாரம் சீர்குலைகிறது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.







