என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறவுள்ளது.
    • இந்நிலையில், பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது

    தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறவுள்ளது.

    இந்நிலையில், பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது

    காஞ்சிபுரம், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 10 தொகுதிகளில் பாமக போட்டியிடுகிறது.

    அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில், ராமநாதபுரம் தொகுதியில் ஓ பன்னீர் செல்வம் போட்டியிடுகிறார்.

    திருவள்ளூர், வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, கரூர், சிதம்பரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 10 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது.

    இந்திய மக்கள் முன்னேற்ற கழகம் சிவகங்கை தொகுதியிலும், தமிழக் மக்கள் முன்னேற்ற கழகம் தென்காசி தொகுதியிலும், அமமுக தேனீ, திருச்சி தொகுதியிலும் போட்டியிடுகிறது. தமிழ் மாநில காங்கிரஸ், ஈரோடு, ஸ்ரீபெரம்பத்தூர், தூத்துக்குடி தொகுதிகளில் போட்டியிடுகிறது

    • நாங்கள் 15க்கும் மேற்பட்ட தொகுதிகளை கேட்டிருந்தோம்.
    • அதிகமான தொகுதிகளை தர பாஜகவினர் விருப்பம் தெரிவித்தனர்.

    தேசிய ஜனநாயக கூட்டணி 39 தொகுதிகளுக்கான தொகுதிப் பங்கீடு நிறைவடைந்ததாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

    இதில், 20 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் போட்டியிடுவதாகவும், 4 தொகுதிகளில் பாஜகவின் தாமரை சின்னத்தில் கூட்டணி வேட்பாளர்கள் போட்டியிடுவதாகவும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 3 தொகுதிகளும், பாமக 10 தொகுதிகளிலும், அமமுக 2 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

    மேலும், இந்திய ஜனநாயக கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், புதிய நீதிக் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தலா ஒரு தொகுதிகளில் போட்டியிடுகின்றன.

    அப்போது, ஓ.பன்னீர்செல்வம் முடிவு குறித்து நான் அறிவிப்பது நன்றாக இருக்காது. அவரே விரைவில் அறிவிப்பார் என அண்ணாமலை கூறினார்.

    இந்நிலையில், சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    நாங்கள் 15க்கும் மேற்பட்ட தொகுதிகளை கேட்டிருந்தோம். அதிகமான தொகுதிகளை தர பாஜகவினர் விருப்பம் தெரிவித்தனர்.

    தொண்டர்களின் பலத்தை அறிய ஒரு தொகுதியில் நிற்க முடிவு செய்துள்ளோம்.

    அதனால், ராமநாதபுரத்தில் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறேன். எங்களுக்குள் எந்தவித கருத்துவேறுபாடும் கிடையாது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சென்னை அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • புதிய கேப்டன் நியமனம் குறித்து சென்னை அணி பயிற்சியாளர் பிளமிங் விளக்கம் அளித்தார்.

    சென்னை:

    ஐ.பி.எல் தொடரின் 17-வது சீசன் நாளை சென்னையில் தொடங்க உள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

    இதற்கிடையே, சென்னை சூப்பர் கிங் அணி கேப்டனாக இருந்த டோனி மாற்றப்பட்டு புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

    இந்நிலையில், சி.எஸ்.கே. கேப்டன் பொறுப்பில் இருந்து டோனி மாற்றப்பட்டது ஏன் என்பது சென்னை அணி பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பிளமிங் கூறியதாவது:

    புதிய கேப்டனை நியமிக்க இதுவே சரியான நேரம் என டோனி கருதியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    டோனியின் ஆலோசனைப்படியே ருதுராஜ் புதிய கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். வருங்கால திட்டங்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    கடந்த 2022-ம் ஆண்டு ஜடேஜாவை கேப்டனாக நியமித்ததில் இருந்து நிறைய கற்றுக்கொண்டோம். ருதுராஜை கேப்டனாக்கும் முடிவுக்கு ஜடேஜாவும் முழுமையாக ஆதரவு தெரிவித்துள்ளார். இந்த சீசனில் டோனியின் உடல்தகுதி மிகவும் சிறப்பாக உள்ளது என தெரிவித்தார்.

    • பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது.
    • பா.ஜ.க. சார்பில் தென் சென்னை தொகுதியில் தமிழிசை சவுந்தரராஜன் களமிறங்க உள்ளார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது.

    தென் சென்னை தொகுதியில் தி.மு.க. சார்பில் தற்போதைய எம்.பி.யான தமிழச்சி தங்கபாண்டியன் மீண்டும் போட்டியிடுகிறார்.

    அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்த்தன் நிறுத்தப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் முதல் கட்ட பட்டியல இன்று மாலை வெளியானது.

    இதில் தென் சென்னை தொகுதியில் தமிழிசை சவுந்தரராஜன் களமிறங்க உள்ளார்.

    இதனால் தென் சென்னை தொகுதி பிரபலங்கள் மோதும் ஸ்டார் தொகுதியாக உருவெடுத்துள்ளது. தென் சென்னையில் வெற்றி பெறுவது தமிழிசையா அல்லது தமிழச்சி தங்க பாண்டியனா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

    கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலில் தமிழச்சியும், ஜெயவர்த்தனனும் களம் கண்டனர். அதில் 5,64,000-க்கும் அதிகமான வாக்குகளை பெற்று தமிழ்ச்சி தங்க பாண்டியன் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் ஆ.ராசா வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்
    • நீலகிரி தொகுதியில் எல். முருகன் மீண்டும் போட்டியிடுகிறார்

    நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் ஆ.ராசா வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். ஏற்கனவே இவர் 2 முறை இந்த தொகுதியில் வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினராக உள்ளார். கடந்த பல மாதங்களுக்கு முன்பே தேர்தல் பணியை தொடங்கி களப்பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் அ.தி.மு.க. சார்பில் நீலகிரி தொகுதி வேட்பாளராக லோகேஷ் தமிழ்ச்செல்வன் அறிவிக்கப்பட்டு உள்ளார். இவர் முன்னாள் சபாநாயகர் ப.தனபாலின் மகன் ஆவார். இவர் அ.தி.மு.க. தொழில்நுட்ப பிரிவில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.

    இவருக்கு முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர்., தமிழ்ச்செல்வன் என்ற பெயரை வைத்துள்ளார். இவரது திருமணத்தை முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நடத்தி வைத்துள்ளார்.

    இந்நிலையில், தற்போது பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில், நீலகிரி தொகுதியில் எல். முருகன் மீண்டும் போட்டியிடுகிறார்.

    இதனால் நீலகிரி தொகுதியில் போட்டி கடுமையாகியுள்ளது. அவ்வகையில் ஆ. ராசா, எல். முருகன் மற்றும் லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆகியோருக்கு இடையே மும்முனை போட்டி உருவாகியுள்ளது. 

    • ஆர்.என். ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு.
    • உயர்ந்த பொறுப்பில் இருக்கும் ஆர்.என். ரவி, பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் போல நடந்து கொள்வதை எவரும் ஏற்றுக் கொள்ள முடியாது.

    தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை முடக்குகின்ற வகையில் செயல்படுகிற பா.ஜ.க.வின் ஏஜெண்டாக இருக்கிற ஆர்.என். ரவி ஆளுநர் பொறுப்பிலிருந்து உடனடியாக விலக வேண்டுமென்பதே தமிழக மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாகும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக ஆளுநராக ஆர்.என்.வி நியமிக்கப்பட்டது முதற்கொண்டு அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க. ஆட்சிக்கு எதிராக பல்வேறு தடைகளை ஏற்படுத்தி வருகிறார். கடந்த காலங்களில் தமிழக சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டிய கடமை அவருக்கு உண்டு.

    ஆனால், அரசமைப்புச் சட்ட உறுப்பு 163(1)-ன்படி அமைச்சரவையின் ஆலோசனையோ, அறிவுரையோ இன்றி தன்னிச்சையாக ஆளுநர் செயல்பட முடியாது என்று தெளிவாக கூறுகிறது. இதில் அவருக்குள்ள விருப்புரிமை மிகமிக குறைவானதே ஆகும். இந்நிலையில் தமிழக சட்டப்போவை நிறைவேற்றிய நீட் தேர்வு விலக்கு உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் முடக்கி வருகிறார். இது அப்பட்டமான தமிழக விரோத செயலாகும்.

    சொத்துக் குவிப்பு வழக்கு ஒன்றில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடிக்கும், அவரது மனைவிக்கும் விதிக்கப்பட்ட தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துக் கடந்த 11 ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதைத் தொடர்ந்து, திருக்கோவிலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பொன்முடி நீடிக்கிறார் என்று சட்டப்பேரவை சபாநாயகர் அறிவித்திருந்தார்.

    இந்நிலையில் பொன்முடியை மீண்டும் அமைச்சராக்க வேண்டும் என்ற பரிந்துரையுடன் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு முதலமைச்சர் கடிதம் எழுதினார். இதனடிப்படையில் ஆளுநர், பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், முதலமைச்சர் எழுதிய கடிதத்திற்கு "உச்சநீதிமன்றம் அவரை நிரபராதி என்று தீர்ப்பு வழங்கவில்லை. அவர் மீதான குற்றச்சாட்டுகள் அப்படியே இருக்கின்றன. எனவே, பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது" என்று ஆளுநர் பதில் கூறியிருந்தார். ஆளுநரின் இந்த செயல் தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சியினரையும் கொந்தளிக்க செய்தது. அரசமைப்புச் சட்டப்படி ஓர் உயர்ந்த பொறுப்பில் இருக்கும் ஆர்.என். ரவி, பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் போல நடந்து கொள்வதை எவரும் ஏற்றுக் கொள்ள முடியாது.

    உச்சநீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைத்த பிறகு பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க சட்டரீதியாக தடை எதும் இல்லாத நிலையில் தி.மு.க. மீது ஆளுநருக்கு உள்ள வன்மத்துடன் , வேண்டுமென்றே பதவி பிரமாணம் செய்து வைக்காமல் சண்டித்தனம் செய்து வருவதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.

    இந்நிலையில், பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைப்பதை மறுக்கும் ஆர்.என். ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடுத்தது.இதன்படி உறுப்பு 154, உட்பிரிவு 1-ஐ ஆளுநர் அப்பட்டமாக மீறுவதாக முறையிடப்பட்டது. முதல்வர் பரிந்துரைத்த பின்பும் பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் மறுத்து வருவது சட்டவிரோதம் என கூறப்பட்டது.

    இதனை அவசர வழக்காக விசாரித்த உச்சநீதிமன்றம், "உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதித்த பிறகும் பொன்முடிக்கு பதவியேற்பு நடத்தி வைக்க ஆளுநர் மறுப்பது ஏன்? நீதிமன்ற உத்தரவை மீறி பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது என்று அவர் எப்படி கூற முடியும்? இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. ஆளுநர் மீது நடவடிக்கை எடுக்க நேரிடும். நாங்கள் கண்ணை மூடிக்கொண்டு இருக்கவில்லை. ஆளுநரின் செயல் அரசியல் சாசனத்திற்கு எதிரானது. எனவே, பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பது குறித்து பதிலளிக்க ஆளுநருக்கு நாளை வரை அவகாசம் வழங்குகிறோம். இல்லையென்றால் உரிய நடவடிக்கை எடுப்போம்" என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு ஆளுநருக்கு எதிராக கடுமையான கேள்விக் கணைகளை எழுப்பி எச்சரித்திருக்கிறது.

    இதற்குப் பிறகும் பொன்முடி அமைச்சராக ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கவில்லை என்றால் ஆளுநர் பொறுப்பிலிருந்து அவரை தூக்கி எறிகிற காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை உச்சநீதிமன்ற தீர்ப்பு நமக்கு உணர்த்துகிறது.

    எனவே, அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும், தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை முடக்குகின்ற வகையிலும் செயல்படுகிற பா.ஜ.க.யின் ஏஜெண்டாக இருக்கிற ஆர்.என் ரவி ஆளுநர் பொறுப்பிலிருந்து உடனடியாக விலக வேண்டுமென்பதே தமிழக மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாகும். இதனை பா.ஜ.க. அரசு செயல்படுத்தவில்லை என்றாலும் உச்சநீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம்" என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். 

    • பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் போட்டி.
    • கிருஷ்ணகிரியில் நரசிம்மன் போட்டியிடுகிறார்.

    மக்களவை தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் வெளியானது.

    முதற்கட்ட பட்டியலில் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    இதில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் போட்டியிடுகிறார்.

    இதேபோல், தெற்கு சென்னையில் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய சென்னையில் வினோத் பி செல்வம், கன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணன், நெல்லையில் நயினார் நாகேந்திரன், நீலகிரியில் எல்.முருகன் போட்டியிடுகின்றனர்.

    தொடர்ந்து, கிருஷ்ணகிரியில் நரசிம்மன், வேலூரில் ஏ.சி.சண்முகம், பெரம்பலூரில் பாரிவேந்தர் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

    • டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் புதிய மனு தாக்கல்.
    • கட்சி உடைந்து நிற்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

    இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி அவசர மனு ஒன்றை தொடர்ந்துள்ளார்.

    மனு மீது நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இதுதொடர்பான மனுவில," தொண்டர்களையும், கட்சியையும் பாதிக்கும் என்பதால் இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும்.

    இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தி படுதோல்வியை தழுவுவதை அதிமுக தொண்டர்கள் விரும்பவில்லை.

    கட்சி உடைந்து நிற்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

    • பிளஸ் 2 படித்து வந்த மாணவன் ஆதித்ய பிரணவ் அறிவியலில் மிகுந்த ஆர்வம் உள்ளவர்.
    • தந்தையின் அரவணைப்பில் மாணவன் வளர்ந்து வந்தார்.

    சென்னை கொளத்தூரை சேர்ந்த மாணவன் வீட்டில் இருந்த மர்ம பொருள் வெடித்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

    பிளஸ் 2 படித்து வந்த மாணவன் ஆதித்ய பிரணவ் அறிவியலில் மிகுந்த ஆர்வம் உள்ளவர். எந்த நேரமும் அறிவியல் சார்ந்த சோதனைகளை வீட்டில் செய்து வருவது வழக்கம்.

    கடந்த 10 நாட்களுக்கு முன்பு கூட ஆராய்ச்சியின்போது வீட்டில் இருந்து கரும்புகை வருவதாக கண்ட அக்கம் பக்கத்தினர் இதுதொடர்பாக அவரது தந்தைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    தாய் கொரோனா தொற்றுக்கு பலியான நிலையில், தந்தையின் அரவணைப்பில் மாணவன் வளர்ந்து வந்தார்.

    இந்நிலையில், இன்று மதியம் திடீரென மாணவனின் வீட்டில் இருந்து சத்தம் வரவே அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தபோது மாணவன் சடலமாக கிடந்ததுள்ளார்.

    இதுதொடர்பான விசாரணையில், வீட்டில் இருந்த மர்ம பொருள் வெடித்து மாணவன் ஆதித்ய பிரணவ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

    • பறக்கும் படை மற்றும் நிலையான படை குழுவினர் தீவிர வாகன சோதனை செய்து வருகின்றனர்.
    • பறிமுதல் செய்த பணத்தை வருவாய்த்துறை அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

    தென்காசி:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தென்காசி மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு வினியோகம் செய்வதற்காக பணம் எடுத்துச் செல்லப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்ய மாவட்டம் முழுவதும் பறக்கும் படை மற்றும் நிலையான படை குழுவினர் தீவிர வாகன சோதனை செய்து வருகின்றனர்.

    தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடியில் கடந்த 2 நாட்களாக உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லப்பட்ட லட்சக்கணக்கான பணத்தை பறக்கும் படையினர் பறி முதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று இரவு தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசை பகுதியில் பறக்கும்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மதுரையில் இருந்து தென்காசியை நோக்கி வந்த அரசு பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அப்போது பஸ்சில் பயணம் செய்த ஒருவர் வைத்திருந்த கைப்பையை போலீசார் வாங்கி சோதனை செய்து பார்த்தனர். அதில் கட்டுகட்டாக ரூ.35 லட்சம் இருந்தது. இதையடுத்து அதன் உரிமையாளரிடம் பறக்கும் படையினர் விசாரணை நடத்தியதில், அவர் தென்காசி அருமனை தெருவை சேர்ந்த செய்யது அலி (வயது 32) என்பது தெரியவந்தது.

    மேலும் செய்யது அலி தென்காசியில் நகைக்கடை நடத்தி வருகிறார். மதுரைக்கு நகை வாங்குவதற்காக பஸ்சில் பணத்துடன் சென்ற நிலையில், அங்கு நகை வாங்கவில்லை என்பதால் கொண்டு சென்ற பணத்தை அப்படியே திரும்பவும் கொண்டு வந்ததாக கூறினார்.

    ஆனாலும் அதற்கான ஆவணங்கள் ஏதும் இல்லாததால், பறக்கும் படையினர் பறிமுதல் செய்த பணத்தை வருவாய்த்துறை அலுவலரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1 லட்சம் சிக்கியது.
    • நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடசேரி, பார்வதிபுரம், கோட்டார், இருளப்பபுரம் பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அடுத்த மாதம் 19-ந்தேதி நடக்கிறது. இதையடுத்து வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதை கண்காணிக்க சட்டமன்ற தொகுதிக்கு 3 பறக்கும் படை வீதம் 18 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு அதிகாரிகள் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த 2 நாட்களாக மாவட்டம் முழுவதும் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

    நேற்று மாலை வரை நடந்த சோதனையில் ரூ.12 லட்சத்து 50 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு நடத்தப்பட்ட சோதனையில் உண்ணாமலை கடையில் ரூ.1.50 லட்சமும், கொல்லங்கோடு பகுதியில் ரூ.2 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டது.

    இன்று அதிகாலை 6 மணி நிலவரப்படி மாவட்டம் முழுவதும் ரூ.15 லட்சத்தில் 96 ஆயிரத்து 882 பறிமுதல் செய்யப்பட்டது.

    தொடர்ந்து இன்று காலையில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செட்டி குளம் பகுதியில் பறக்கும் படையினர் தாசில்தார் ராஜாசிங் தலைமையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அவர் பேக் ஒன்றில் ரூ.2 லட்சம் பணம் வைத்திருந்தார். அந்த பணம் குறித்த விவரங்களை பறக்கும் படையினர் கேட்டனர். ஆனால் அவரால் அதற்கு பதில் அளிக்க முடியவில்லை. மேலும் உரிய ஆவணங்களும் இல்லாதது தெரியவந்தது.

    இதையடுத்து ரூ.2 லட்சம் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதேபோல் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1 லட்சம் சிக்கியது. மேலும் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.62,100 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆரல்வாய்மொழி பகுதியில் ரூ.50,800 பறிமுதல் செய்யப்பட்டது. இன்று காலை மாவட்டம் முழுவதும் ரூ.4 லட்சத்து 12 ஆயிரத்து 900 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளில் இதுவரை ரூ.23 லட்சத்து 71 ஆயிரத்து 882 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து பறக்கும்படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடசேரி, பார்வதிபுரம், கோட்டார், இருளப்பபுரம் பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது. இதேபோல் கன்னியாகுமரி பகுதியில் உள்ள பறக்கும் படை அதிகாரிகள் சுசீந்திரம், கன்னியாகுமரி பகுதியிலும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பறக்கும்படையினர் மார்த்தாண்டம், கருங்கல் பகுதிகளிலும் சோதனை மேற்கொண்டனர்.

    • காலை முதல் இரவு வரை தொடர்ந்து மாபெரும் அன்னதானம் நடைபெற உள்ளது.
    • பக்தர்கள் தவறாது கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.

    திண்டுக்கலில் நாகல் நகர் பாரதிபுரம் ஸ்ரீ சீரடி சாய்பாபா ஆலயம் அமைந்துள்ளது.

    பாபா ஆசியுடனும், பக்தர்களின் பேராதரவுடனும் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட அன்னதானம் கூடம் திறப்பு விழா மற்றும் 3ம் ஆண்டு வருடாபிஷேக விழா வருகின்ற மார்ச் மாதம் 28 ஆம் தேதி வியாழக்கிழமை வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.

    தொடர்ந்து அன்று காலை முதல் இரவு வரை தொடர்ந்து மாபெரும் அன்னதானம் நடைபெற உள்ளது. பக்தர்கள் தவறாது கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.

    ×