என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • நான் ஒரு சாதாரண விவசாயி. இங்கு விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாக உள்ளது.
    • தி.மு.க. அரசு கிராம மக்களின் அத்தியாவசிய தேவைகளைக்கூட நிறைவேற்றவில்லை.

    பசும்பொன்:

    ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி அதி.மு.க. வேட்பாளர் பா.ஜெயபெருமாள் இரட்டை இலைக்கு வாக்குகள் கேட்டு சாயல்குடி பகுதியில் பூப்பாண்டியபுரம், பிள்ளையார்குளம், நோம்பகுளம், எஸ்.கீரந்தை, காணிக்கூர், கீழசெல்வனூர், பன்னந்தை மேல சிறு போது, இளஞ்செம்பூர் பூக்குளம், ஒருவானேந்தல், தேவர்குறிச்சி ஆகிய கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    அப்போது அவர் பேசுகையில், நான் ஒரு சாதாரண விவசாயி. இங்கு விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாக உள்ளது. ஆனால் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் இல்லாததால் வானம் பார்த்த பூமியாக உள்ளது. கிராம மக்கள் குடிப்பதற்கே போதுமான குடிநீர் கிடைக்காத நிலை இருக்கிறது. வைகை தண்ணீரை கடலாடி, கமுதி, முதுகுளத்தூர் தாலுகா விவசாயத்திற்கு திறந்துவிட நடவடிக்கை மேற் கொள்ளப்படும். மழைநீர் கடலில் வீணாக கலக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தி.மு.க. அரசு கிராம மக்களின் அத்தியாவசிய தேவைகளைக்கூட நிறைவேற்றவில்லை. படித்த இளைஞர்களுக்கு கிராமங்களிலேயே தொழில் செய்ய தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். கிராமங்களில் வேலை வாய்ப்பு இல்லை. வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, கிராமங்களில் இரட்டை இலைக்கு அமோக வரவேற்பு உள்ளது. தாய்மார்களிடையேட இரட்ரை இலைக்கு அதிக மவுசு, இரட்டை இலைக்கு வாக்களித்து அமோக வெற்றி பெறச்செய்யுங்கள் என்று பேசினார்.

    அப்போது பெண்கள் குலவையிட்டு எங்கள் ஓட்டு இரட்டை இலைக்கே என கோஷமிட்டனர். அதிமுக வேட்பாளருடன் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி, கடலாடி ஒன்றிய பெருந்தலைவர் முத்துலட்சுமி முனியசாமியாண்டியன், கடலாடி ஒன்றிய செயலாளர் முனியசாமி பாண்டியன், சாயல்குடி ஒன்றிய கழக செயலாளர் ஏ.எஸ்.அந்தோணிராஜ், தனிச்சியம் ராஜேந்திரன், சிக்கல் பிரவீன், தேமுதிக, மாவட்டச் செயலாளர் சிங்கை ஜின்னா மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாக கலந்துகொண்டனர்.

    • வரைபடங்கள் மூலம் 80 முதல் 100 மதிப்பெண்கள் வரை பெற்று தமிழ்நாடே முதலிடம்.
    • குழந்தைகளைப் பராமரித்துக் காப்பதிலும் தமிழ்நாடுதான் முன்னனியில் உள்ளது.

    பொதுவான ஏற்றுமதிகள், பொறியியல் சார்ந்த ஏற்றுமதிகள், கர்ப்பிணிகள் சுகாதாரம், மகப்பேறுக்குப் பின் கவனிப்பு, சிறப்பு பொருளாதார மண்டலங்கள், கணினி பொருள்கள் ஏற்றுமதி ஆகிய பிரிவுகளின் ஆய்வுகள் குறித்த மத்திய அரசின் அறிக்கைகள் அனைத்திலும் தமிழ்நாடே முதலிடம் என்று திமுக அறிக்கை வெளியிட்டுள்ளது. 

    அந்த அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:-

    பொதுவான ஏற்றுமதிகள், பொறியியல் சார்ந்த ஏற்றுமதிகள், கர்ப்பிணி பெண்கள் சுகாதாரம் நிறுவனங்கள் வழங்கும் பயன்கள்.

    மகப்பேற்றுக்குபின் கவனிப்பு கணினி பொருள்கள் ஏற்றுமதி இந்தியாவில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் ஆகிய ஏழு பிரிவுகளின் ஆய்வுகள் குறித்த அறிக்கைகள் மத்திய அரசு நிறுவனங்களால் வெளியிடப்பட்டுள்ளன.

    அவை அனைத்திலும் தமிழ்நாடு மாநிலமே சிறந்து விளங்குவதாக அந்த அறிக்கைகளும் வரைபடங்களும் தெளிவு படுத்துகின்றன.

    ஏற்றுமதி ஆயத்த நிலைக்கான 2022 ஆம் ஆண்டின் குறியீடுகள் உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான ஆயத்த நிலைகள் குறித்து ஒன்றிய அரசின் நிதி ஆயோக் நிறுவனம் ஆய்வு செய்துள்ளது மாநில அரசுகள், ஒன்றிய நிர்வாகப் பகுதிகள் அனைத்தையும் குறித்த ஆய்வுகளில் நிதி ஆயோக் நிறுவனம் மாநில வாரியாக நிலைமைகளை ஆய்வு செய்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளது,

    அந்த அறிக்கைகள், வரைபடங்கள் மூலம் 80 முதல் 100 மதிப்பெண்கள் வரை பெற்று தமிழ்நாடே முதலிடம் பெற்றுள்ளது என்ற செய்தி வெளியாகி உள்ளது.

    பொறியியல் சார்ந்த பொருட்களின் ஏற்றுமதி மதிப்பு குறித்த 2022 2023 ஆம் ஆண்டின் அறிக்கையை ஒன்றிய அரசின் தேசிய நிர்யாத் வெளியிட்டுள்ளது.

    இறக்குமதி ஏற்றுமதி பதிவுகள் குறித்து 2022, 2023ம் ஆண்டிற்கான விவரங்களை National Import Export Record for Yearly Analysis of Trade (NIRYAT) என்று ஒன்றிய அரசு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்திய நாடு முழுவதும் செய்துள்ள ஏற்றுமதியில் தமிழ்நாடு மட்டும் 16.30 சதவீத பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியாவில் மராட்டிய மாநிலத்தை அடுத்து இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது என்று தெரிவித்துள்ளது.

    கர்ப்பிணிப் பெண்கள் சுகாதாரம்

    கர்ப்பிணிப் பெண்கள் சுகாதாரம் தேசிய ஏழ்மைக் குறியீடுகள் குறித்த 2023 ஆம் ஆண்டுக்கான அறிக்கையில்: கர்ப்பிணிப் பெண்கள் சுகாதாரக் குறியீடுகளில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

    கர்ப்பிணிப் பெண்கள் பராமரிப்புடன் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு 3.31 புள்ளிகளைப் பெற்று இந்தியாவில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு 3.31 புள்ளிகளைப் பெற்றுள்ள நிலையில் குஜராத் 12.72 புள்ளிகளையும்.

    பிகார் 29.75 புள்ளிகளையும், உத்தரப்பிரதேசம் 30.03 புள்ளிகளையும் பெற்று தமிழ்நாடே முதலிடம் என்பதைப் பறைசாற்றுகிறது. மருத்துவமனைகளில் மகப்பேறுகள் ஆண்டு வாரி சுகாதார ஆய்வு மக்கள் தொகை ஆணையர் மற்றும் தலைமைப் பதிவாளர் அலுவலகத்தின் முக்கியப் புள்ளியியல் பிரிவு ஆய்வுகளின்படி நாட்டி நடைபெறும் பிரசவங்களில் மருத்துவமனைகளில் பாதுகாப்புடன் நடைபெறக்கூடியது தமிழ்நாட்டில் தான் அதிகம். 

    அதாவது 99 சதவீதப் பிரசவங்கள் மருத்துவமனைகளில் கேரளாவிற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் தான் நடைபெறுகின்றன என்று தமிழ்நாடு வெகுவாகப் பாராட்டப்பட்டுள்ளது.

    குழந்தை பிறந்த பின் சிசு கவனிப்பில் அனைத்து வசதிகளுடனும் குழந்தைகளைப் பராமரித்துக் காப்பதிலும் தமிழ்நாடுதான் முன்னனியில் உள்ளது.

    மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கான சமூக முன்னேற்றக் குறியீடுகள் பற்றிய ஆய்வில் பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு 89.9 சதவீதங்களைப் பெற்று முன்னணி மாநிலமாகத் திகழ்வதாக கூறப்பட்டுள்ளது.

    இந்தியாவில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் இந்தியாவில் தொழில் வளர்ச்சி முதலான பிரிவுகளில் மாநிலங்களை முன்னேற்றுவதில் பெரிதும் துணைபுரிவது சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்.

    இதில் தமிழ்நாடு மாநிலம்தான் அதிக அளவில் 50 சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் பெருக்கி இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது.

    வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் 2022-2023 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கை இதைப் புலப்படுத்தியுள்ளது. மோடி ஆட்சி செய்த குஜராத் மாநிலத்தில் 21 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மட்டுமே உள்ளன.

    இப்படி, தமிழ்நாடு எதிலும் முதலிடமும், அதனைத் தொடர்ந்து பல்வேறு சிறப்புக்களையும் உள்ளடக்கி வளர்ச்சியை எய்தியுள்ளதாக ஒன்றிய அரசின் ஆவணங்களே இதற்கு சாட்சியாகும். தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் தத்துவமே இந்தியாவின் எழுச்சிக்கு வழிகாட்டியாக விளங்குகிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கோயமுத்தூர் செட்டிபாளையம் எல்.அன்.டி. பைபாஸ் சாலையில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினோடு இணைந்து பங்கேற்கிறார்.
    • இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக தமிழகம் இருக்கிறது என்பதை உறுதி செய்ய அன்போடு அழைக்கிறேன்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்தியா கூட்டணி சார்பாக நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 3 மணிக்கு நெல்லை பெல் மைதானத்தில் நடைபெறும் மாபெரும் தேர்தல் பிரசார கூட்டத்திற்கு ராகுல் காந்தி வருகை புரிகிறார்.

    அதேபோல, மாலை 6 மணிக்கு கோயமுத்தூர் செட்டிபாளையம் எல்.அன்.டி. பைபாஸ் சாலையில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினோடு இணைந்து பங்கேற்கிறார். இந்த தேர்தல் பிரசார கூட்டங்களுக்கு அணி அணியாக, அலைகடலென மக்கள் திரண்டு வருகை புரிந்து இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக தமிழகம் இருக்கிறது என்பதை உறுதி செய்ய அன்போடு அழைக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கிருத்திகை மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும்.
    • நடிகையும் ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜாவும் சாமி தரிசனம் செய்தார்.

    திருத்தணி:

    திருத்தணி முருகன் கோவில் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படையாக திகழ்கிறது. தினந்தோறும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கிறார்கள். மேலும் கிருத்திகை மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். 

    இந்த நிலையில் இன்று கிருத்திகை மற்றும் அரசு விடுமுறை நாள் என்பதால் திருத்தணி கோவிலுக்கு அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இதனால் மலைக்கோவில் முழுவதும் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது. நடிகையும் ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜாவும் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பக்தர்கள் சரவண பொய்கை திருக்குளத்தில் புனித நீராடி படிக்கட்டு வழியாக நடந்து சென்றும் சுவாமியை வழிபட்டனர். கூட்ட நெரிசல் காரணமாக பக்தர்கள் சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து வழிபட்டனர். பக்தர்கள் வருகை அதிகரிப்பு காரணமாக திருத்தணி நகரம், அரக்கோணம் சாலை, மலைப்பாதையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.

    • ரத்த சிவப்பாக இருந்தால் நன்றாக முதிர்ந்து பழுத்த பழம் என்பது நம்பிக்கை.
    • வெட்டப்படாத முழு தர்பூசணியை வாங்குவது நல்லது.

    சென்னை:

    அடிக்கிற வெயிலில் அரை மணிநேரத்துக்கு ஒரு முறை தண்ணீர் குடித்தாலும் தாகம் தீருவதில்லை. வெளியே சுற்றும் போது தாகம் தணிக்க இளநீர் குடிக்கலாமென்றால் ரூ.60 முதல் ரூ.70 வரை விற்கிறது.

    தர்பூசணி துண்டுகள் கண்ணை கவர்கிறது. ரத்த சிவப்பாக காட்சியளிக்கும் ஒரு துண்டின் விலை ரூ.20 தான். விலை குறைவு அதிக தண்ணீர் சத்தும் இருப்பதால் எல்லோரும் அதை விரும்பி சாப்பிடுகிறார்கள்.

    ரத்த சிவப்பாக இருந்தால் நன்றாக முதிர்ந்து பழுத்த பழம் என்பது நம்பிக்கை. ஆனால் கலருக்கு வண்ண சாயங்களை ஊசி மூலம் செலுத்துவதாக அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.

    விழிப்புணர்வு, சோதனைகள் மூலம் இப்போது கலருக்கான ஊசி செலுத்துவது குறைந்து வருவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி டாக்டர் சதீஷ்குமார் கூறினார்.

    இருப்பினும் விற்பனையாளர்கள் தர்பூசணி துண்டுகளில் கலர் பொடியை சர்க்கரை பாகுவில் கலந்து பூசுவதை பார்க்க முடிவதாகவும் தெரிவித்தார். இது இயற்கையான சுவையை மாற்றியமைக்கும். உணவில் தேவையற்ற சர்க்கரையை சேர்க்கிறது. ஒரு வகையில் உடலுக்கு தீங்கை தான் ஏற்படுத்தும்.

    வெட்டப்பட்ட தர்பூசணி துண்டுகளை கையாள்வதும் நீண்ட நேரம் திறந்தவெளியில் வைத்திருப்பதால் சுகாதாரமற்ற சூழலால் கெடும். ஆனால் விற்பனையாளர்கள் அழுகுவதை மறைக்கவே சர்க்கரை பாகுவை தடவுவதாக கூறப்படுகிறது.


    தர்பூசணி ஜூஸ் தயாரிக்க விற்பனையாளர்கள் சுகாதாரமற்ற தண்ணீர் மற்றும் ஐஸ் கட்டிகளை பயன்படுத்துகிறார்கள். கண்ணாடி டம்ளர்களை ஓடுகிற தண்ணீரில் கழுவுவதில்லை.

    ஒரு வாளி தண்ணீர் வைத்துள்ளார்கள். அதிலேயே தொடர்ந்து டம்ளர்களை கழுவுகிறார்கள். இது கடுமையான உடல்நல கோளாறை ஏற்படுத்தலாம்.

    ஏனெனில் அசுத்தமான தண்ணீர் உணவில் பரவும் நோய்களுக்கு வழிவகுக்கும். தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை கொண்டு உள்ளது.

    எனவே நுகர்வோர்கள் தான் விழிப்புடன் இருக்க வேண்டும். வெட்டப்படாத முழு தர்பூசணியை வாங்குவது நல்லது. துண்டுகள் மற்றும் ஜூஸ் வாங்கி சாப்பிடுவதாக இருந்தால் சுகாதாரமாக இருப்பதையும், செயற்கை வண்ணம் சேர்க்கவில்லை என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று உணவு பாதுகாப்புத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

    • வங்கி உயர்அதிகாரிகள் மற்றும் ஏ.டி.எம். எந்திரத்தை கையாளும் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்படாமல் இருந்ததால் அதில் கொள்ளை நடந்தது உடனடியாக தெரியவில்லை.

    தாம்பரம்:

    படப்பை, பிரதான சாலையில் சவுத் இந்தியன் வங்கி செயல்பட்டு வருகிறது. இதன் அருகில் அந்த வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. கடந்த 6-ந் தேதி மாலையில் ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.23 லட்சத்து 35 ஆயிரத்து 300 பணத்தை ஊழியர்கள் நிரப்பி சென்றனர். வழக்கமாக பணம் நிரப்பப்பட்ட பின்னர் ஒரு வாரத்திற்கு பிறகு மீண்டும் எந்திரத்தில் பணம் வைப்பது வழக்கம். ஆனால் புதிதாக பணம் நிரப்பப்பட்ட பின்னர் கடந்த 2 நாட்களிலேயே வாடிக்கையார்களால் ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க முடியவில்லை. அனைவருக்கும் ஏ.டி.எம்.மில் பணம் இல்லை என்ற தகவலே காண்பித்தது.

    இதுபற்றி வாடிக்கையாளர்கள் வங்கியில் புகார் செய்தனர். அதிகாரிகள் ஏ.டி.எம். எந்திரத்தை ஆய்வு செய்தபோது, வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முடியாதபடி நம்பர் லாக் செய்யப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர்.

    இதுபற்றி வங்கி உயர்அதிகாரிகள் மற்றும் ஏ.டி.எம். எந்திரத்தை கையாளும் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ஏ.டி.எம்.மில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

    அதில் ஏ.டி.எம்.மில் பணம் நிரப்பப்பட்ட 2 நாட்களுக்கு பிறது நம்பர் பிளேட் இல்லாத காரில் 4 மர்ம ஆசாமிகள் வருவதும், அவர்கள் ஏ.டி.எம். எந்திரத்தில் பயன்படுத்தும் நம்பர் லாக் மூலம் அடுத்தடுத்து 2 நாட்களில் மொத்தம் ரூ.13 லட்சத்து 3 ஆயிரத்து 200 கொள்ளையடித்து சென்றிருப்பதும் தெரிந்தது.

    முதல் நாளில் ரூ.8 லட்சத்து 17 ஆயிரத்து 200 மற்றும் மறுநாள் காலை 9:40 மணிக்கு வந்து ரூ.4 லட்சத்து 86 ஆயிரத்தை எந்தவித பதட்டமும் இன்றி பட்டப்பகலில் கொள்ளையடித்து சென்று உள்ளனர். ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்படாமல் இருந்ததால் அதில் கொள்ளை நடந்தது உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து வங்கியின் மேலாளர், தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார். இது தொடர்பாக மணிமங்கலம் போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொள்ளை கும்பல் ஏ.டி.எம்.மின் ரகசிய எண்களை தெரிந்து கைவரிசை காட்டி உள்ளதால் வங்கியோடு தொடர்புடைய நபர்கள் இதில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக ஏ.டி.எம்.மில் பணம் நிரப்பிய ஊழியர்கள் மற்றும் வங்கி ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வீட்டிலுள்ள ஒவ்வொரு பகுதியிலும் அங்குலம்-அங்குலமாக சோதனை நடத்தப்பட்டது.
    • காங்கிரஸ் நிர்வாகி தாமஸ் வீட்டில் சுமார் 11 மணிநேரம் சோதனை நடத்தப்பட்டது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா, ஸ்ரீ மதுரை ஊராட்சிக்கு உட்பட்ட மண்வயல் கம்மாத்தி பகுதியை சேர்ந்தவர் ஏ.ஜெ.தாமஸ். இவர் ஸ்ரீமதுரை ஊராட்சி முன்னாள் தலைவராக பதவி வகித்தவர்.

    மேலும் தமிழக காங்கிரஸ் முக்கிய பிரமுகராகவும் செயல்பட்டு வருகிறார்.

    இந்த நிலையில் காங்கிரஸ் நிர்வாகி தாமஸ் வீட்டில் கோடிக்கணக்கில் பணம் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக வருமானவரித்துறைக்கு ரகசிய தகவல்கள் வந்தது. தொடர்ந்து அவரது வீட்டுக்கு நேற்று காலை 11 மணியளவில் 8 பேர் அடங்கிய வருமான வரித்துறை அதிகாரிகள், 2 கார்களில் புறப்பட்டு வந்தனர்.

    பின்னர் அவர்கள் வீட்டில் உள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து வீட்டிலுள்ள ஒவ்வொரு பகுதியிலும் அங்குலம்-அங்குலமாக சோதனை நடத்தப்பட்டது. மேலும் பீரோ லாக்கர்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    காங்கிரஸ் நிர்வாகி தாமஸ் வீட்டில் சுமார் 11 மணிநேரம் சோதனை நடத்தப்பட்டது. இதில் கத்தை, கத்தையாக 500 ரூபாய் நோட்டுகள் சிக்கியது. கணக்கில் வராத மொத்தம் ரூ.3 கோடி ரொக்கப்பணம் பிடிபட்டது.

    தொடர்ந்து கைப்பற்றப்பட்ட பணத்துக்கான ஆவணங்களை வருமானவரி அதிகாரிகள் கேட்டனர். தாமசிடம் மேற்கண்ட பணத்துக்கான உரிய ஆதாரங்கள் இல்லை என்று தெரிகிறது. பின்னர் ரூ.3 கோடி ரொக்கப்பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர்.

    இதுதொடர்பாக வருமானவரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    கூடலூர் காங்கிரஸ் நிர்வாகி தாமஸ் வீட்டில் கோடிக்கணக்கில் பணம் பதுக்கப்பட்டு இருப்பதாக புகார் வந்ததை தொடர்ந்து அவரது வீட்டில் சுமார் 10 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடத்தினோம். அப்போது அவரது வீட்டில் கணக்கில் வராத ரூ.3 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

    இந்த பணத்தை அவர் பாராளுமன்ற தேர்தலில் செலவழிப்பதற்காக பதுக்கி வைத்திருந்தாரா என்பது பற்றிய விவரம் தெரியவில்லை. இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

    நீலகிரி மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒருசில நாட்களே இருக்கும் சூழ்நிலையில், கூடலூர் காங்கிரஸ் நிர்வாகி தாமஸ் வீட்டில் கணக்கில் வராத ரூ.3 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை குமரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக தக்கலையில் வேனில் நின்றபடி பேசுகிறார்.
    • காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. நெல்லையில் நாளை மாலை 4 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

    நெல்லை:

    தமிழ்நாட்டிற்கு வருகிற 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) ஒரே கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது.

    இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பிரசாரத்துக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் மற்றும் கட்சிகளின் முன்னணி நிர்வாகிகள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அரசின் சாதனைகளை எடுத்து கூறி பிரசாரம் செய்து வருகிறார். அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தி.மு.க. அரசின் குறைகளை சுட்டிக்காட்டி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    தேசிய கட்சியான பா.ஜனதா, காங்கிரசும் தங்களுக்கே உரித்தான வழியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

    இந்நிலையில் தென் மாவட்டங்களை நோக்கி முக்கிய தலைவர்களின் கண் பார்வை தற்போது விழுந்துள்ளது. இந்த மாவட்டங்களில் உள்ள பாராளுமன்ற தொகுதிகளில் அதிக இடங்களை கைப்பற்றவேண்டும் என்ற நோக்கத்துடன் போட்டியிடும் அனைத்து கட்சியின் வேட்பாளர்களும் தங்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்கு கட்சி மேலிட நிர்வாகிகள், நட்சத்திர பேச்சாளர்கள் உள்ளிட்டவர்களை அழைத்து வந்து வாக்கு சேகரிக்கின்றனர்.

    பா.ஜனதாவை பொறுத்தவரை பிரதமர் மோடி நேற்று வரை 7-வது முறையாக தமிழகத்திற்கு வந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு உள்ளார். அவர் ஏற்கனவே தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாகவே கடந்த மாதம் நெல்லை பாராளுமன்ற தொகுதியில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

    இந்நிலையில் பிரதமர் மோடி வருகிற 15-ந்தேதி நெல்லை தொகுதி பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ.வுக்கு ஆதரவாக அம்பை அகஸ்தியர் பட்டியில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். இதனால் நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    இதேபோல் உள்துறை மந்திரி அமித்ஷா நாளை (வெள்ளிக்கிழமை) மதுரைக்கு சிறப்பு விமானத்தில் வருகிறார். அங்கிருந்து சிவகங்கை தொகுதிக்கு செல்லும் அமித்ஷா, ரோடு- ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

    பின்னர் புதுக்கோட்டையில் உள்ள கோட்டை பைரவர் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்யும் அவர் விமானத்தில் மீண்டும் மதுரை செல்கிறார். அங்கு மதுரை பாராளுமன்ற தொகுதி வேட்பாளரை ஆதரித்து ரோடு ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

    தொடர்ந்து இரவு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்கிறார். பின்னர் மதுரையில் இரவில் ஓய்வெடுக்கும் அமித்ஷா, நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை தனி விமானத்தில் திருவனந்தபுரம் செல்கிறார்.

    பின்னர் காரில் குமரி மாவட்டம் தக்கலைக்கு செல்லும் அமித்ஷா அங்கு பா.ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து ரோடு ஷோவில் பங்கேற்கிறார். பின்னர் மதியம் 12 மணிக்கு தனி விமானத்தில் திருச்சி செல்கிறார். அங்கிருந்து திருவாரூர் சென்று கார் மூலமாக நாகப்பட்டினம் செல்கிறார். அங்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசும் அமித்ஷா, மீண்டும் திருச்சி வந்து அங்கிருந்து விமானத்தில் தூத்துக்குடிக்கு மாலை 6 மணிக்கு வந்தடைகிறார்.

    அங்கிருந்து ஹெலிகாப்டரில் தென்காசிக்கு புறப்படும் அமித்ஷா, இலஞ்சியில் ராமசாமி பிள்ளை பள்ளி மைதானத்தில் வந்து இறங்குகிறார். அன்றைய தினம் மாலை 6.30 மணிக்கு தென்காசி பாராளுமன்ற தொகுதி கூட்டணி கட்சி வேட்பாளரை ஆதரித்து ஆசாத் நகர் முதல் தென்காசி புதிய பஸ் நிலையம் வரை 5 கிலோ மீட்டர் தூரம் நடக்கும் ரோடு ஷோவில் பங்கேற்று ஆதரவு திரட்டுகிறார்.

    பின்னர் அங்கிருந்து மீண்டும் ஹெலிகாப்டரில் தூத்துக்குடி புறப்படும் அமித்ஷா, இரவு 8.30 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து சிறப்பு விமானம் மூலம் டெல்லி புறப்படுகிறார்.

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. நெல்லையில் நாளை மாலை 4 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். இதற்காக ஹெலிகாப்டரில் நெல்லை வந்திறங்கும் ராகுல் காந்தி, பொதுக்கூட்ட மேடை வரை ரோடு ஷோவில் ஈடுபடுகிறார்.

    பின்னர் குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் உள்ளிட்டவர்களை ஆதரித்து அவர் ஆதரவு திரட்டுகிறார்.

    தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை குமரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக தக்கலையில் வேனில் நின்றபடி பேசுகிறார். பின்னர் வேப்பமூடு சந்திப்பு பகுதியில் பேசுகிறார்.

    அங்கிருந்து இரவு 7 மணிக்கு புறப்படும் உதயநிதி நெல்லைக்கு வருகிறார். அவர் நெல்லை தொகுதி வேட்பாளர் ராபர்ட் புரூசை ஆதரித்து நாங்குநேரி பஜார் தெருவில் வேனில் நின்றபடி மக்களிடையே வாக்கு சேகரித்து பேசுகிறார். பின்னர் இரவு 8 மணிக்கு பாளை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேலப்பாளையம் ரவுண்டானா பகுதியில் பொதுமக்களிடையே ஆதரவு திரட்டுகிறார். இரவில் நெல்லையில் தங்குகிறார்.

    பின்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாளை காலை 10 மணிக்கு தென்காசி புதிய பஸ் நிலையம் பகுதியில் பிரசாரம் செய்கிறார்.

    தொடர்ந்து கடையநல்லூர் மணிக்கூண்டு பெரிய பள்ளிவாசல் பகுதியில் பிரசாரம் செய்யும் அவர் மாலை 4 மணிக்கு சங்கரன்கோவிலில் பிரசாரம் செய்கிறார். பின்னர் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி எம்.பி.க்கு ஆதரவாக நாளை மாலை கோவில்பட்டி பஸ் நிலையம் முன்பும், இரவு 7 மணிக்கு மாப்பிள்ளை யூரணியில் உள்ள சந்தன மாரியம்மன் கோவில் முன்பும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆதரவு திரட்டி பேசுகிறார்.

    தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், நெல்லை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் ஜான்சிராணியை ஆதரித்து இன்று மாலை 6 மணிக்கு நெல்லை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தச்சநல்லூர் சந்தி மறிச்சம்மன் கோவில் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.

    அடுத்தடுத்து தலைவர்கள் முற்றுகையிட்டு தேர்தல் பிரசாரம் செய்வதால் தென் மாவட்ட தொகுதிகளின் பிரசார களத்தில் அனல் பறக்கிறது.

    • எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் பழைய பஞ்சாங்கத்தையே பேசி வருகிறார்.
    • பா.ஜ.க தலைவர்கள் செய்வது ரோடு ஷோ அல்ல. மக்கள் தரிசன யாத்திரை.

    கோவை:

    கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளரும், பா.ஜ.க. மாநில தலைவருமான அண்ணாமலை இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எடப்பாடி பழனிசாமி பழைய பஞ்சாங்கத்தையே பேசி வருகிறார். இ.பி.எஸ். ரோடு ஷோ நடத்த தயாராக இருக்கிறாரா?. அவர் ரோடு ஷோ நடத்தட்டும் எவ்வளவு கூட்டம் வருகிறது என்று பார்ப்போம். பணத்தை கொடுத்து கூட்டம் கூட்டுபவர்கள் ரோடு ஷோ நடத்தலாமே?. அதற்கு மக்கள் யாரும் வரமாட்டார்கள்.

    நாங்கள் ரோடு ஷோவை வெறும் ரோடு ஷோவாக கருதவில்லை. அதனை நாங்கள் மக்கள் தரிசன யாத்திரையாக கருதுகிறோம். எங்கள் தலைவர்கள் மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் ஆசியை பெற்று வருகின்றனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடி தான் கேட்கும் கேள்விகளுக்கு கியாரண்டி தருவாரா? என கேட்கிறார்.

    அதற்கு நான் சொல்கிறேன். பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்ததும் 2024-க்கு பிறகு ஊழல் செய்தவர்கள் ஜெயிலில் இருப்பார்கள் என்று பிரதமர் மோடி கியாரண்டி தருகிறார்.

    8½ கோடி தமிழக மக்களையும் தி.மு.க என்ற தீயசக்தியில் இருந்து காப்பாற்றுவோம் என பிரதமர் கியாரண்டி தருகிறார். தமிழ்நாட்டை டாஸ்மாக்கில் இருந்து காப்பாற்றுவோம் என கியாரண்டி கொடுக்கிறார்.

    தமிழ்நாட்டில் பிரிவினைவாதம் பேசும் சக்திகளை அடக்குவோம். குடும்ப ஆட்சியை ஒழிப்போம் என பிரதமர் கியாரண்டி தருகிறார்.

    பா.ஜ.க மேல்தட்டு கட்சி, வடமாநில கட்சி என தமிழக மக்களிடம் திராவிட கட்சிகள் ஒரு பிம்பத்தை உருவாக்கியுள்ளனர். அதேபோல் ஜி என்று சொன்னாலே கெட்டவர்கள் என்பது போலவும் திராவிட கட்சிகள் மாய பிம்பத்தை உருவாக்குகின்றனர். இந்த பிம்பங்கள் எல்லாம் உடைய போகிறது.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்தின் போது, குழந்தைக்கு ரோலக்ஸ் என்று பெயர் சூட்டுகிறார். கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தில் போதைக்கடத்தல் கும்பல் தலைவனாக வரும் கதாபாத்திரத்தின் பெயர் தான் ரோலக்ஸ். அந்த பெயரை குழந்தைக்கு சூட்டலாமா?.

    கொங்கு மண்டலம் தங்களது கோட்டை என திராவிட கட்சிகள் சொல்லி வருகின்றன. வருகிற பாராளுமன்ற தேர்தல் முடிந்ததும், வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4-ந்தேதி கொங்கு மண்டலம் யாருடையது என்பது தெரிந்து விடும். அப்போது திராவிட கட்சிகளின் இந்த பிம்பம் உடைந்து போய்விடும். இதனை நீங்கள் பார்க்க தான் போகிறீர்கள்.

    ஸ்டாலின் ஊழல் பல்கலைக்கழகம் என ஒன்று அமைந்தால், அதன் தவறுகளை திருத்தும் வேந்தராக பிரதமர் மோடி இருப்பார். எனக்கு அரசியலில் நண்பர்கள் கிடையாது. ஜனநாயகம் என்ற வார்த்தையை பயன்படுத்துவதற்கு தகுதி இல்லாத ஒரு தலைவர் யார் என்றால் அது மு.க.ஸ்டாலின் தான்.

    தமிழகத்தில் பணத்தையும், பரிசு பொருளையும் கொடுத்து ஜெயித்து விடலாம் என எதிர்கட்சிகள் நினைக்கின்றன. வருகின்ற தேர்தலில் மக்கள் அதற்கு சரியான பாடம் புகட்டுவார்கள். பண அரசியல் என்னும் பேயை மக்கள் ஜூன் 4-ந் தேதி வேப்பிலையுடன் விரட்டி அடிப்பார்கள். இதனை இந்த தேர்தலில் நாம் பார்க்க போகிறோம்.

    மத்தியில் பாஜக ஆட்சியில் மந்திரி பதவியில் இடம்பெறுவது குறித்து எனது நோக்கம் அல்ல. 2026-ல் தமிழகத்தில் நிலைமை மாற்றி அமைக்க வேண்டும் என்பதே எனது லட்சியம்.

    மீண்டும் பாரதிய ஜனதா மத்தியிலே ஆட்சிக்கு வந்தால் தேர்தல் முறையே இருக்காது என்று கூறுவது சரியல்ல. அப்படி என்றால் 2014-க்கு பிறகு தேர்தல் நடைபெறவே இல்லையா. 2019-க்கு பிறகு தேர்தல் நடைபெறவே இல்லையா.

    இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதுதான் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் எண்ணமும்கூட. மோடி அதை நிறைவேற்றும் பொழுது கருணாநிதியின் ஆசி விண்ணில் இருந்து மோடிக்கு கண்டிப்பாக கிடைக்கும்.

    இந்திய கூட்டணியை பொறுத்தவரை அவர்கள் தோல்வியை எப்போதோ ஒப்புக்கொண்டு விட்டார்கள். அவர்கள் எண்ணம் 400 தொகுதிகளில் எங்களுக்கு வெற்றி கிடைக்கக் கூடாது என்பதுதான்.பாரதிய ஜனதா 300 தொகுதிகளுக்கு மேல் தாண்ட கூடாது என்று நினைக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பா.ஜ.க வேட்பாளரை ஆதரித்து நடிகர் கூல் சுரேஷ் பிரசாரம் செய்து வருகிறார்.
    • பா.ஜ.க. கூட்டணியிலும் மக்கள் நலன் சார்ந்த பல கட்சிகள் உள்ளன.

    செங்கம்:

    திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க வேட்பாளரை ஆதரித்து நடிகர் கூல் சுரேஷ் பிரசாரம் செய்து வருகிறார். இவர் பிரசாரத்தில் பேசும் வசனங்கள் காமெடி கலாட்டா என களைகட்டி வருகிறது.

    செங்கம் பகுதியில் பிரசாரம் செய்த கூல் சுரேஷ் செருப்பு தைக்கும் தொழிலாளியிடம் செருப்புகளை வாங்கிக்கொண்டு செருப்புகளை தைத்து பா.ஜ.க.வுக்கு வாக்கு கேட்டார். அப்போது ஜெய் ஸ்ரீ ராம் என கோஷம் எழுப்பினார்.

    மேலும் அங்கு தர்பூசணி, ஐஸ்கிரீம், பழம் விற்பனையாளரிடம் சென்று அவற்றை விற்பது போல கூவி கூவி பொதுமக்களை அழைத்து வியாபாரம் செய்தார். மேலும் பிரதமர் மோடியின் கரங்களை வலுப்படுத்த பா.ஜ.க. வேட்பாளருக்கு ஆதரவு தாருங்கள் என கேட்டுக்கொண்டார்.

    பொறி வியாபாரி ஒருவரிடம் சென்று இதில் பொறி கடலை உள்ளிட்ட சத்தான பொருட்கள் கலக்கப்பட்டுள்ளன. அதே போல தான் பா.ஜ.க. கூட்டணியிலும் மக்கள் நலன் சார்ந்த பல கட்சிகள் உள்ளன. அந்த கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.

    திறந்தவெளி வேனில் கூல் சுரேஷ் பிரசாரம் செய்த போது அங்கிருந்த டீக்கடையில் இருந்த பெண் ஒருவர் அவருக்கு டீ வழங்கினார். இந்த டீயில் அன்பு பண்பு பாசம் எல்லாவற்றையும் கலந்து தந்திருக்கிறீர்கள். உங்களுக்கு நன்றி என பேசிக்கொண்டிருந்த போதே அந்த வழியாக சென்ற டவுன் பஸ்சில் இளைஞர்கள் தொங்கியபடி சென்றனர்.

    இதனை பார்த்துக் கூல் சுரேஷ் டேய் தொங்காதிங்கடா.. தொங்காதிங்கடா.. உங்கள் வாழ்க்கை முக்கியம் தாய், தந்தை, தங்கை என உங்கள் வாழ்க்கையை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள் என அவர்களுக்கு அறிவுரை கூறினார்.

    • தென்சென்னை, மத்திய சென்னை, வடசென்னை என 3 தொகுதிகளிலும் இதற்காக தனித்தனி மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.
    • விளவங்கோடு சட்டமன்ற தொகுதி மற்றும் வெளிமாவட்டங்களில் உள்ள மற்ற பாராளுமன்றத் தொகுதிகள் அனைத்துக்கும் சென்னையில் பணிபுரியும் போலீசார் ஓட்டு போட வசதி செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலையொட்டி பாதுகாப்பு பணியில் 1 லட்சத்து 90 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்படுகிறார்கள். சென்னையில் 19 ஆயிரம் போலீசார் தேர்தல் நாளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    தேர்தல் நாளில் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவதால் போலீசாரால் வாக்குப் பதிவு மையங்களுக்கு நேரில் சென்று ஓட்டு போட முடியாது என்பதால் ஒவ்வொரு தேர்தலின் போதும் தபால் ஓட்டுகளை போட வசதி செய்து கொடுக்கப்படுவது வழக்கம்.

    அந்த வகையில் சென்னையில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் 19 ஆயிரம் போலீசாரும் தபால் ஓட்டுகளை இன்று முதல் 3 நாட்கள் போடுவதற்கு வசதி செய்யப்பட்டு உள்ளது.

    தென்சென்னை, மத்திய சென்னை, வடசென்னை என 3 தொகுதிகளிலும் இதற்காக தனித்தனி மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. வடசென்னை தொகுதி வாக்காளர்களாக இருக்கும் போலீசார் வண்ணாரப்பேட்டை பேசின் பால சாலையில் உள்ள வட்டார துணை ஆணையர் அலுவலகத்துக்கு சென்று வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தென்சென்னை தொகுதியில் வசிக்கும் போலீசார் அடையாறு முத்துலட்சுமி சாலையில் உள்ள அலுவலகத்திலும், மத்திய சென்னை தொகுதியில் வாக்காளர்களாக இருக்கும் போலீசார் செனாய் நகர் புல்லா அவென்யூவில் உள்ள அலுவலகத்திலும் ஓட்டு போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    வெளி மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் வாக்காளர்களாக இருந்து கொண்டு சென்னையில் பணிபுரியும் போலீசாரும் தங்களது தொகுதி வேட்பாளர்களுக்காக ஓட்டு போடுவதற்கும் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. விளவங்கோடு சட்டமன்ற தொகுதி மற்றும் வெளிமாவட்டங்களில் உள்ள மற்ற பாராளுமன்றத் தொகுதிகள் அனைத்துக்கும் சென்னையில் பணிபுரியும் போலீசார் ஓட்டு போட வசதி செய்யப்பட்டுள்ளது.

    இன்று முதல் வருகிற 13-ந்தேதி வரையில் போலீசார் தபால் ஓட்டுகளை போடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் நாளான இன்றே போலீசார் 3 மையங்களிலும் திரண்டு தங்களது தபால் ஓட்டுகளை பதிவு செய்தனர்.

    • ரம்ஜான் பண்டிகையையொட்டி ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் வாழ்த்து.
    • பாஜக சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தமிழகத்தில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, மசூதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

    ரம்ஜான் பண்டிகையையொட்டி ஜனாதிபதி, பிரதமர், தமிழக ஆளுநர், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    அதில் கூறியிருப்பதாவது:-

    புனித ரமலான் பண்டிகையைக் கொண்டாடும் இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும், பாஜக சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அனைவருக்கும் இந்த தினம், அமைதியையும், மகிழ்ச்சியையும், ஆசீர்வாதங்களையும் தந்து, அனைவர் வாழ்விலும் அன்பும், நிம்மதியும் நிலைக்கவும், நல்லிணக்கம் மற்றும் செழிப்பை அளிக்க கூடிய நன்னாளாக அமையவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

    இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×