என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஏ.சி.சண்முகம் கதிர் ஆனந்திடம் தோற்றார்.
    • பா.ஜ.க. தேர்தல் பணிகளை இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து செய்து வருகிறது.

    வேலூர் :

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது. இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வேலூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் கதிர் ஆனந்த், பா.ஜ.க. சார்பில் ஏ.சி.சண்முகன், அ.தி.மு.க. சார்பில் பசுபதி, நாம் தமிழர் கட்சி சார்பில் மகேஷ் ஆனந்த் களம் காண்கிறார்கள்.

    அதிக அளவு முஸ்லிம்கள் வேலூர் தொகுதியில் வசிப்பதால், அவர்கள் வாக்கு வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது. திமுகவின் வாக்கு வங்கி இங்கு அதிகம். அதனால் இந்த முறையும் அதனை சரியாக பயன்படுத்தி வெற்றி பெற்றுவிட கதிர் ஆனந்த் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறார்.

    அதே நேரம் பா.ஜ.க. தேர்தல் பணிகளை இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து செய்து வருகிறது. வேலூரின் முன்னாள் எம்.பி., ஏ.சி.சண்முகம் பாஜக சார்பில் களம் காண்பதால், திமுக - பாஜக - அதிமுகவுக்கு இடையே போட்டி உள்ளது.

    கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஏ.சி.சண்முகம் கதிர் ஆனந்திடம் தோற்றார். அதனால் இந்த முறையும் கதிர் ஆனந்த் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. வேலூர் தி.மு.க. கோட்டை என்பதால் கதிர் ஆனந்த்தை வீழ்த்துவது எளிதல்ல.

    அதிமுகவும் வன்னியரான பசுபதியை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. ஆனால் கதிர் ஆனந்த் தான் பலமான வேட்பாளராக இருப்பார் என திமுக அவரை தேர்ந்தெடுத்தது. பெரிய அளவில் பரிட்சையம் இல்லாத பசுபதி என்பவரை அதிமுக வேட்பாளராக நிறுத்தியது கட்சியினருக்கே அதிர்ச்சி தான். பாஜகவில் இருந்து மக்கள் நலனுக்காக பிரிந்து விட்டோம் என்பதை மட்டுமே முன்நிறுத்தி அதிமுக நிர்வாகிகள் வாக்கு கேட்டு வருகின்றனர். இது எந்த அளவுக்கு வெற்றி வாய்ப்புக்கு கை கொடுக்கும் என்பது தெரியவில்லை.

    • நீங்கள் திமுகவிற்கு வாக்களிப்பதும், பாஜகவுக்கு வாக்களிப்பதும் ஒன்றுதான்.
    • அது நம் மாநிலத்தின் எதிர்காலத்தையே பாதித்துவிடும்.

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீடியோ மூலம் வெளியிட்டுள்ள செய்தியுள்ள கூறியிருப்பதாவது:-

    நீட் தேர்வு ரத்து, போதைப்பொருள் புழக்கம், காவிரி-மேகதாது விவகாரம் என அனைத்து முக்கிய பிரச்சனைகள் குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் விடியா முதல்வரிடம் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினேன்- பதில் சொல்ல முடியாமல் திணறினார்!

    அறிக்கை வாயிலாகவும், ஊடகங்கள் வாயிலாகவும் கேட்டேன்- பதில் சொல்ல முடியாமல் நழுவினார்!

    இப்போது எஜமானர்களாம் உங்களிடமே வந்தேன்- 40 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் முன்னிலையில் மேடையில் நம் கேள்விகளை உரக்கக் கேட்டேன்- பதில் சொல்ல திராணியின்றி என் மீது தனிப்பட்ட விமர்சனம்தான் வைத்தார்!

    மு.க. ஸ்டாலின் என்னைப்பற்றி கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் நான் பதில் அளித்துவிட்டேன். நான் கேட்ட ஒரு கேள்விக்காவது அவருக்கு பதில் சொல்ல தெம்பு, திராணி இருந்ததா?

    இல்லை. ஏனெனில், தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுக்கொடுத்து, தமிழ்நாட்டைக் காக்கத் தவறிய, பொய் வாக்குறுதிகளால் பொதுமக்களையும், அரசு ஊழியர்களையும் ஏமாற்றிய ஒரு விடியா ஆட்சிதான் ஸ்டாலினின் ஆட்சி.

    ஒரு மக்களவை உறுப்பினரின் அடிப்படைக் கடமையான "MPLADS" நிதியைக் கூட சரிவரக் கேட்டு பெறமுடியாமல், வெறும் 25 சதவீதம் மட்டுமே செலவிட்டு, 75 சதவீத ஒதுக்கீட்டை வீணடித்த திமுக கூட்டணி எம்பிக்களுக்கு மீண்டும் வாக்களித்து என்ன பயன்?

    இவர்கள் ஒருபுறம் எனில், நம் மாநிலத்தின் உரிமைகளை கிஞ்சற்றும் மதிக்காத, நாட்டின் கூட்டாட்சியில் நமக்குரிய பங்கை அளிக்க மறுக்கும் பாரதிய ஜனதா அரசு மறுபுறம். மதத்தின் மூலம் மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியே கொள்கையாக வைத்துக்கொண்டு, மாநில கட்சிகளில் பிளவுகள் ஏற்படுத்த முயன்று, அதன் மூலம் அரசியல் லாபம் தேடும் பாரதிய ஜனதாவின் எண்ணம் ஒருபோதும் தமிழ்நாட்டில், குறிப்பாக அதிமுவிடம் ஈடேறாது.

    அன்பார்ந்த தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்களே- வரும் 19-ம் தேதி நீங்கள் அளிக்கப் போகும் வாக்கு மிகவும் முக்கியமானது. நீங்கள் திமுகவிற்கு வாக்களிப்பதும், பாஜகவுக்கு வாக்களிப்பதும் ஒன்றுதான்; அது நம் மாநிலத்தின் எதிர்காலத்தையே பாதித்துவிடும்.

    நம் மாநிலத்தின் உரிமைகளை மறுக்கும் தேசிய கட்சிகளையும், 38 எம்பிக்கள் இருந்தும் மவுனியாக இருந்து மாநில உரிமைகளை தாரைவார்த்த திமுகவையும் ஒற்றைவிரலால்_ஓங்கிஅடிப்போம்!

    அதிமுகவின் தலைமையிலான வெற்றிக் கூட்டணியின் வேட்பாளர்கள், மக்களவையில் உங்களின் குரலாக, நம் தமிழ்நாட்டின் உரிமைக்குரலாக ஓங்கி ஒலிப்பார்கள் என்ற வாக்குறுதியை நான் உங்களுக்கு அளிக்கிறேன்.

    தந்தை பெரியார்- பேரறிஞர் அண்ணா- புரட்சித்தலைவர் எம்ஜிஆர்- புரட்சித்தலைவி அம்மா ஆகிய திராவிடப் பேரியக்கத்தின் மாபெரும் ஆளுமைகள் கட்டமைத்த வளமிக்க தமிழ்நாட்டை, சமூகநீதி-சமத்துவம்-சகோதரத்துவம் ஆகிய கொள்கை நெறிகொண்ட ஒருங்கிணைந்த வளர்ச்சிசார் பாதையில் வழிநடத்த உங்கள் பொன்னான வாக்குகளை இரட்டைஇலை சின்னத்திலும் முரசு சின்னத்திலும் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

    • தேர்தல் பணியில் 19,419 அதிகாரிகள் ஈடுபடுகிறார்கள்.
    • அனைத்து வாக்குச் சாவடிகளும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வாக்குப் பதிவு எந்திரங்கள் கணினி முறையில் ஒவ்வொரு பகுதிகளுக்கும் பிரிக்கப்பட்டது. மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடந்தது.

    சென்னையில் 3 தொகுதிகளுக்கும் 11,843 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 4469 கட்டுப்பாட்டு எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. நாளை காலையில் ஒவ்வொரு தொகுதிக்கும் எந்தெந்த வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்குச்சாவடி வாரியாக அனுப்புவதற்கு குலுக்கல் முறையில் ஒதுக்கப்படுகிறது.

    3,726 வாக்குச் சாவடிகளுக்கும் ஜி.பி.எஸ். கருவி பொருத்திய வாகனத்தில் எந்திரங்கள், பிற உபகரணங்கள், பொருட்கள் அனுப்பப்படுகின்றன. தேர்தல் பணியில் 19,419 அதிகாரிகள் ஈடுபடுகிறார்கள்.

    அனைத்து பணிகளும் இரவு பகலாக நடந்து வருகிறது. தேர்தல் நடத்த தயார் நிலையில் இருக்கிறோம். 19-ந்தேதி வாக்களிக்க பொதுமக்கள் தயாராக வர வேண்டும், அடுக்குமாடி குடியிருப்பு மக்கள், ஏழை-எளிய மக்கள் எளிதாக ஓட்டுப்பதிவு செய்ய வழி வகை செய்யப்பட்டுள்ளது.

    காவல் துறையுடன் இணைந்து பாதுகாப்பு ஏற்பாடும் செய்யப்பட்டு உள்ளது. பதட்டமான 708 வாக்குச் சாவடிகளில் கூடுதலாக போலீஸ் குவிக்கப்படுகிறது. அனைத்து வாக்குச் சாவடிகளும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. 65 சதவீத வாக்குச் சாவடிகளில் வெப் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது.

    தேர்தலை சுமூகமாக நடத்த 708 நுண் பார்வையாளர்கள் பதட்டமான வாக்குச் சாவடிகளை கண்காணித்து அறிக்கை தருவார்கள். வாக்குச் சாவடி மையங்களில் பந்தல், குடிநீர் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.

    வாக்குப்பதிவு மையங்களில் கூட்டம் இருந்தாலும் காத்திருந்து பதிவு செய்யுங்கள். வாக்களிப்பில் நமது கடமை, உரிமை.

    வாக்காளர்கள் 12 வகையான அடையாள அட்டையில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தலாம். ஒவ்வொரு வாக்குச் சாவடிகளிலும் பொதுமக்களுக்கு உதவ "பெசிலிட்டி பூத்" ஒன்று அமைக்கப்படுகிறது. உங்கள் பெயரை சொன்னால் போதும், எந்த பூத்தில் ஓட்டு இருக்கிறது, எங்கு ஓட்டு போடலாம் என்று விவரமாக சொல்வார்கள்.

    பூத் சிலிப் 86 சதவீதம் வீடு வீடாக கொடுக்கப்பட்டு உள்ளது. நாளை வரை கொடுப்பார்கள். நாளை மதியத்திற்கு மேல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு சாவடிகளுக்கு கொண்டு செல்லப்படும். 899 செக்டார் ஜோனல் பார்ட்டி இதனை பாதுகாப்பாக கொண்டு போய் சேர்ப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த 6-ந்தேதி இரவு தாம்பரம் ரெயில் நிலையத்தில் பறக்கும் படையினரால் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது
    • இந்த பணத்துக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நயினார் நாகேந்திரன் கூறியிருந்தார்

    கடந்த 6-ந்தேதி இரவு தாம்பரம் ரெயில் நிலையத்தில் பறக்கும் படையினரால் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. நெல்லை தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என தகவல் பரவியது. இது தொடர்பாக நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஓட்டல் மேலாளர் சதீஷ், நவீன், பெருமாள் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    விருகம்பாக்கத்தைச் சேர்ந்த முருகன், ஜெய்சங்கர், ஆசைத்தம்பி ஆகியோர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான கீழ்ப்பாக்கம் ஓட்டலில் பணத்தை வைத்து விட்டு சென்றதாக கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

    இந்த பணத்துக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நயினார் நாகேந்திரன் கூறியிருந்தார். இதையடுத்து, ரூ.4 கோடி பிடிபட்ட விவகாரத்தில் திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் நேரில் விசாரணைக்கு ஆஜராக தாம்பரம் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

    இதுதொடர்பாக நெல்லை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் ராகவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    அதில், "தாம்பரம் ரெயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பிடிபட்டது தொடர்பாக பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது சட்ட விரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு அமலாக்கத்துறையிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால், அந்த மனு மீது அமலாக்கத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    மேலும், வாக்களர்களுக்கு அளிப்பதற்காக பணம் பதுக்கி வைத்திருந்ததால் நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென தமிழக தேர்தல் ஆணையரிடம் மனு அளித்தும், அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட வேண்டும். அவரை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இம்மானுவேல் முறையிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், நாளை விசாரிப்பதாக தெரிவித்தது.

    • வீரராகவப் பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்று.
    • விழாவின் 3-ம் நாளான இன்று கருட சேவை நடைபெற்றது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரில் உள்ள ஸ்ரீவைத்திய வீரராகவப் பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழ்கிறது. வழக்கமாக தை மற்றும் சித்திரை பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெறும்.

    இந்தநிலையில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, தினமும் காலை, மாலை இரு வேளையும் வெவ்வேறு வாகனத்தில் உற்சவர் வீரராகவ பெருமாள் சமேதராய் ஸ்ரீதேவி பூதேவி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். விழாவின் 3-ம் நாளான இன்று கருட சேவை நடைபெற்றது.

    இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் வீரராகவ பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி கோபுர தரிசனமும், 6 மணிக்கு திருவீதி உலாவும் நடைபெற்றது. இந்த கருடசேவையில் திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, பூந்தமல்லி, ஊத்து க்கோட்டை, திருத்தணி, ஆவடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அவர்கள் கோவிந்தா... கோவிந்தா... என்று பக்தி கோஷமிட்டு வீரராகவ பெருமாளை தரிசனம் செய்தனர்.

    பிரம்மோற்சவத்தின் 7-ம் நாளான வருகிற 21-ந் தேதி காலை தேரோட்டம் நடக்கிறது. 23-ந் தேதி தீர்த்தவாரியும், 24-ந்தேதி இரவு 9 மணிக்கு கண்ணாடி பல்லாக்கில் உற்சவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளிக்கிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ஊழியர்கள் செய்து உள்ளனர்.

    • தமிழகத்தில் 5 தொகுதிகளில் கடும் போட்டி காணப்படுகிறது.
    • பா.ஜ.க. கூட்டணி புதுச்சேரியில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    2024 பாராளுமன்ற தேர்தலையொட்டி தந்தி டி.வி. சார்பில் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் 35 ஆயிரத்து 600 வாக்காளர்களிடம் மார்ச் 20-ந்தேதி முதல் ஏப்ரல் 14-ந்தேதி வரை இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன.

    இதில் 42 சதவீதம் பேர் தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்க போவதாக கூறியுள்ளனர். 34 சதவீதம் பேர் அ.தி.மு.க. கூட்டணிக்கும், 18 சதவீதம் பேர் பா.ஜ.க. கூட்டணிக்கும் வாக்களிக்க விரும்புவதாக தெரிவித்து உள்ளனர். நாம் தமிழர் கட்சிக்கு 5 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

    தந்தி டி.வி. கடந்த பிப்ரவரி மாதம் கருத்து கணிப்பு நடத்திய போது தி.மு.க.வுக்கு 42 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்திருந்தனர். தி.மு.க.வின் செல்வாக்கு அப்படியே தொடருகிறது.

    கடந்த பிப்ரவரி மாதம் அ.தி.மு.க.வுக்கு 30 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்திருந்தனர். தற்போது அ.தி.மு.க. ஆதரவு 4 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் பா.ஜ.க.வுக்கு 13 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்திருந்தனர். தற்போது பா.ஜ.க.வுக்கு 5 சதவீதம் ஆதரவு அதிகரித்துள்ளது.

    நாம் தமிழர் கட்சிக்கு கடந்த பிப்ரவரி மாதம் 8 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்திருந்தனர். தற்போது அக்கட்சிக்கு 3 சதவீத வாக்குகள் சரிந்துள்ளது.

    யார் பிரதமர் ஆக வேண்டும் என்பதற்கு 66 சதவீதம் பேர் ராகுல் காந்திக்கும், 33 சதவீதம் பேர் மோடிக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    தி.மு.க. கூட்டணி 29 தொகுதிகளில் எளிதாக வெற்றி பெற வாய்ப்புள்ளது. மத்திய சென்னை, திருவள்ளூர், அரக்கோணம், காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூர், ஆரணி, திருவண்ணாமலை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, தென்காசி, கிருஷ்ணகிரி, சேலம், தூத்துக்குடி, விருதுநகர், கடலூர், நீலகிரி, பெரம்பலூர், சிதம்பரம், விழுப்புரம், நாமக்கல், திருப்பூர், தர்மபுரி, கன்னியாகுமரி, வடசென்னை, கரூர் ஆகிய 29 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி எளிதாக வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.

    ஈரோடு, திருச்சி, தேனி, ராமநாதபுரம், தென்சென்னை தொகுதிகளில் கடும் போட்டிக்கு மத்தியில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.

    பா.ஜ.க. கூட்டணி புதுச்சேரியில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. புதுச்சேரியில் பா.ஜ.க. 39 சதவீதம் முதல் 45 சதவீத வாக்குகளையும், காங்கிரஸ் 36 முதல் 42 சதவீத வாக்குகளையும், அ.தி.மு.க. 10 முதல் 16 சதவீத வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி 5 சதவீதம் முதல் 8 சதவீத வாக்குகளையும், மற்றவர்கள் 1 சதவீதம் முதல் 4 சதவீத வாக்குகளையும் பெற வாய்ப்பு உள்ளது.

    தமிழகத்தில் 5 தொகுதிகளில் கடும் போட்டி காணப்படுகிறது. பா.ஜனதா கூட்டணியில் பிரபலங்கள் போட்டியிடும் வேலூர், திருநெல்வேலி, கோவை ஆகிய தொகுதிகளில் கடும் இழுபறி ஏற்பட வாய்ப்பு உள்ளது. கள்ளக்குறிச்சி, பொள்ளாச்சியில் தி.மு.க., அ.தி.மு.க. இடையே கடும் போட்டி ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்றாக பா.ஜ.க. கூட்டணி 18 இடங்களில் 20 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற வாய்ப்பு உள்ளது. மத்திய சென்னை, அரக்கோணம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், தென்காசி, விருதுநகர், கடலூர், நீலகிரி, பெரம்பலூர், திருப்பூர், தர்மபுரி, கன்னியாகுமரி, தேனி, ராமநாதபுரம், தென்சென்னை, வேலூர், திருநெல்வேலி, கோவை ஆகிய தொகுதிகளில் பா.ஜனதா கூட்டணி 20 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற வாய்ப்பு உள்ளது.

    பா.ஜ.க. கூட்டணி கணிசமான வாக்குகளை பிரிப்பதால் மத்திய சென்னை, தஞ்சாவூர், கடலூர், பெரம்பலூர், தர்மபுரி, கன்னியாகுமரி, தேனி, ராமநாதபுரம், வேலூர், திருநெல்வேலி ஆகிய தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணி 3-ம் இடம் பிடிக்கவும் வாய்ப்பு உள்ளது.

    தமிழகம், புதுச்சேரியில் தி.மு.க. கூட்டணி 34 தொகுதிகளிலும், பா.ஜ.க. கூட்டணி 1 தொகுதியிலும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. 5 தொகுதிகளில் கடும் இழுபறி இருக்கலாம் எனவும் தெரிகிறது.

    இவ்வாறு தந்தி டி.வி. கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சுரேஷ் ராஜனை செல்போனில் தொடர்பு கொண்டு அவரது அறைக்கு வருமாறு அழைக்கவே, அவரும் விடுதி அறைக்கு வந்து அறையை திறந்து கொடுத்துள்ளார்.
    • சுமார் 5 மணிநேரம் நடந்த சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கட்டுக்கட்டாக ரூ.11 லட்சம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    தென்காசி:

    தி.மு.க. முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ்ராஜன். இவர் நெல்லை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியின் தி.மு.க. தேர்தல் பொறுப்பாளராக செயல்பட்டு வருகிறார்.

    இவர் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கடையம் ஒன்றிய பகுதிகளில் தேர்தல் பணியாற்றினாலும், பழைய குற்றாலம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி உள்ளார்.

    சம்பவத்தன்று அவர் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் வருமான வரித்துறையினர் அவர் தங்கி இருந்த பழைய குற்றாலம் தனியார் விடுதிக்கு சென்றுள்ளனர்.

    பின்னர் அவர்கள் சுரேஷ் ராஜனை செல்போனில் தொடர்பு கொண்டு அவரது அறைக்கு வருமாறு அழைக்கவே, அவரும் விடுதி அறைக்கு வந்து அறையை திறந்து கொடுத்துள்ளார்.

    பின்னர் உள்ளே சென்று வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். மதியம் 3 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரையிலும் சுமார் 5 மணிநேரம் நடந்த இந்த சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கட்டுக்கட்டாக ரூ.11 லட்சம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர்.

    இதற்கிடையே முன்னாள் அமைச்சர் தங்கியிருந்த அறையில் சோதனை நடைபெற்ற செய்தி அந்த பகுதியில் வேகமாக பரவியது. இதனால் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அந்த விடுதியின் முன்பு குவிந்தனர். தனியார் விடுதிக்குள் வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியே தீருவோம்.
    • மத்திய அரசின் நிதி கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும், எங்கள் சொந்த நிதியை பயன்படுத்தி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம்.

    திருப்பரங்குன்றம்:

    விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சார்பில் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இன்று காலை அவர் திறந்த ஜீப்பில் தொகுதிக்கு உட்பட்ட திருப்பரங்குன்றத்தில் பஸ் நிலையம் முதல் சுப்பிரமணியசுவாமி கோவில் வாசல் வரை பேரணியாக சென்று வாக்கு சேகரித்தார்.

    அப்போது ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பிரேமலதாவுக்கு வேல் ஒன்றை பரிசாக வழங்கினார். அதனை பெற்றுக்கொண்ட பிரேமலதா திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:-

    முருகப்பெருமானின் முதலாம் படை வீடான திருப்பரங்குன்றம் கோவில் முன்பு எனது மகனுக்கு வாக்கு கேட்டு வந்திருக்கிறேன். நமது கேப்டன் தே.மு.தி.க.வை தொடங்கியதும் இங்குதான். அதே இடத்தில் இன்று உங்கள் வீட்டுப் பிள்ளை விஜயபிரபாகரனுக்கு வாக்கு கேட்டு வந்திருக்கிறேன். அவர் இந்த தொகுதியைச் சேர்ந்தவர், மண்ணின் மைந்தர், கேப்டனின் மகன், உங்கள் மகன். நாங்கள் குடும்பத்துடன் பிழைக்க வரவில்லை, மக்களுக்காக உழைக்க வந்திருக்கிறோம்.

    விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியே தீருவோம். மத்திய அரசின் நிதி கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும், எங்கள் சொந்த நிதியை பயன்படுத்தி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம்.

    எற்கனவே இந்த தொகுதியில் 10 ஆண்டுகளாக எம்.பி.யாக இருக்கும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாணிக்கம் தாகூருக்கு ஓய்வு கொடுங்கள், விஜயபிரபாகரனுக்கு வாய்ப்பு கொடுங்கள். உங்கள் வீட்டு பிள்ளையாக நினைத்து உங்களிடம் ஒப்படைத்து விட்டேன், அவரை மகத்தான வெற்றி பெற செய்யுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அ.தி.மு.க. சார்பில் தனக்கு பரிசாக வழங்கப்பட்ட வேலை, மகனிடம் வழங்கிய பிரேமலதா தொடர்ந்து பேசுகையில், சூரபத்மனை வதம் செய்ய சக்தியிடம் வேல் வாங்கிய முருகப்பெருமான், போரில் வெற்றி பெற்றது போல் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் மகத்தான வெற்றியை பெற இதனை தருகிறேன் என்றார்.

    • தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
    • மது பாட்டில்களை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தூத்துக்குடி:

    நாளை மறுநாள் (19-ந்தேதி) பாராளுமன்ற தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுவதை முன்னிட்டு இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதனை பயன்படுத்தி கூடுதல் விலைக்கு மது பாட்டில்களை விற்பனை செய்யும் நோக்கத்தோடு சிலர் அதிக அளவில் மது பாட்டில்களை பதுக்கி வருவதாக தூத்துக்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனைத் தொடர்ந்து முத்தையாபுரம் இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரம் மற்றும் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜ் ஆகியோர் தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில் நேசமணி நகரை சேர்ந்த ஸ்பிக் நகர் பகுதி தி.மு.க. நிர்வாகியாக உள்ள பொன் கற்பகராஜ் (வயது33) என்பவர் அனுமதியின்றி விற்பனை செய்ய மது பாட்டில்களை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதனைத்தொடர்ந்து நேசமணி நகர் சந்திப்பில் வைத்து பொன் கற்பக ராஜை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    இதில், அவர் மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்ய வைத்திருந்தது உறுதியானது. அவரிடம் இருந்து 432 மது பாட்டில்கள், 36 பீர் பாட்டில்கள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்து பொன் கற்பக ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேசிய மக்கள் தொகை பதிவேட்டின்கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை.
    • வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை.

    சென்னை:

    நாளை மறுநாள் வாக்களிப்பதற்கு வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டால் 12 ஆவணங்களை காட்டி வாக்களிக்கலாம். அந்த 12 ஆவணங்கள் விவரம் வருமாறு:-

    * மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அடையாள அட்டை,

    * புகைப்படத்துடன் கூடிய வங்கி, அஞ்சலக கணக்குப் புத்தகங்கள்,

    * தொழிலாளர் நல அமைச்சகத் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு அட்டை,

    * வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை,

    * தேசிய மக்கள் தொகை பதிவேட்டின்கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை,

    * புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்,

    * மத்திய, மாநில அரசுகள்/பொதுத்துறை நிறுவனங்கள், வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள்,

    * பாராளுமன்ற/சட்டமன்ற/சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை,

    * இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட இயலாமைக்கான தனித்துவமான அடையாள அட்டை உள்ளிட்ட 12ஆவணங்களை காண்பித்து வாக்களிக்கலாம்.

    • கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பகுதியில் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன.
    • தி.மு.க. ஆட்சியிலும் பல முறை புகார் எழுப்பியும் யாரும் கண்டு கொள்ளவில்லை.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நல்லூர் சாலையில் டிரெண்ட் சிட்டி என்ற தனியார் லே அவுட்பகுதி உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

    இந்த நிலையில், கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பகுதியில் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன.

    கடந்த ஆட்சியிலும், தற்போதைய தி.மு.க. ஆட்சியிலும் பல முறை புகார் எழுப்பியும் யாரும் கண்டு கொள்ளவில்லை என இப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    எனவே எங்கள் பகுதியில் சாலை வசதி செய்து தர யாரும் முன்வராததால், பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்து நோ ரோட், நோ வோட் " என்ற வாசகத்துடன் வீடுகள், கடைகள் என பகுதி முழுவதும் நோட்டீஸ் ஒட்டி எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் மன்சூர் அலிகான் இன்று குடியாத்தம் பகுதியில் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்.
    • குடியாத்தத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    வேலூர்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இதையடுத்து தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது. இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் மன்சூர் அலிகான் இன்று குடியாத்தம் பகுதியில் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது மன்சூர் அலிகானுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து குடியாத்தத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    ×