என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தஞ்சாவூரில் உள்ள கியாஸ் சிலிண்டர் நிரப்பும் யூனிட்டில் முதலில் பிரச்சனை ஏற்பட்டது.
- திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, கோவை பீளமேடு, தூத்துக்குடி, மதுரை ஆகிய நகரங்களில் லாரிகள் ஸ்டிரைக் தொடங்கியது.
சென்னை:
நாடு முழுவதும் சமையல் கியாஸ் வினியோகத்தில் மத்திய அரசின் ஐ.ஓ.சி. பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. மற்ற 2 நிறுவனங்களை விட ஐ.ஓ.சி. நிறுவனத்திற்கு தான் அதிகளவில் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் கியாஸ் சிலிண்டர்களை ஏற்றிச் செல்லும் லாரி உரிமையாளர்களுக்கும் நிறுவனத்திற்கும் இடையே வாடகை நிர்ணயம் செய்வது தொடர்பாக பிரச்சனை நிகழ்ந்து வந்தது.
லாரிகளில் சமையல் கியாஸ் சிலிண்டர்களை ஏற்றி இறக்கும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் சம்பள உயர்வு கேட்டு லாரி உரிமையாளர்களிடம் வலியுறுத்தினார்கள். இதையடுத்து கியாஸ் லாரி உரிமையாளர்கள் பாரத் பெட்ரோலிய நிறுவனத்திடம் வாடகை, கூலி போன்றவற்றை உயர்த்தி தருமாறு கோரிக்கை வைத்தனர். கடந்த 5 ஆண்டுகளாக லாரிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையை உயர்த்தி தரமால் இழுத்தடித்து வந்ததால் உரிமையாளர்கள் கடந்த 16-ந்தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூரில் உள்ள கியாஸ் சிலிண்டர் நிரப்பும் யூனிட்டில் முதலில் இந்த பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, கோவை பீளமேடு, தூத்துக்குடி, மதுரை ஆகிய நகரங்களில் லாரிகள் ஸ்டிரைக் தொடங்கியது.
இதனால் இந்த 5 இடங்களில் இருந்து பாரத் சமையல் கியாஸ் சிலிண்டர்களை லாரிகள் வினியோகஸ்தர்களுக்கு கொண்டு செல்லவில்லை. தொழிற்சாலையில் சிலிண்டர்கள் தேங்கி கிடக்கிறது.
சொந்தமாக லாரிகள் வைத்துள்ள கியாஸ் ஏஜென்சிகள் மட்டுமே சிலிண்டர்களை தொழிற்சாலையில் இருந்து ஏற்றி்ச் செல்கிறது. பெரும்பாலானவர்கள் ஒப்பந்த லாரிகள் மூலமே சிலிண்டர்களை பெறுவதால் வினியோகஸ்தர்களுக்கு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் பாரத் கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் நிலவி வருகிறது. வேலை நிரந்தரம் முடிவுக்கு வராவிட்டால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் சமையல் கியாஸ் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இது குறித்து தமிழ்நாடு பெட்ரோலியம் கியாஸ் தொழிலாளர்கள் யூனியன் பொதுச்செயலாளர் விஜயன் கூறியதாவது:-
சிலிண்டர்களை கொண்டு செல்லும் லாரிகளுக்கு வாடகை மற்றும் கூலி போன்றவை நிர்ணயித்து பல ஆண்டுகள் ஆகிறது. அதனை உயர்த்தி தர வலியுறுத்தி வேலைநிறுத்தம் நடக்கிறது. பி.பி.சி. நிறுவனம் வாடகையை உயர்த்தி தர மறுக்கிறார்கள். இதனால் ஒவ்வொரு பிளாண்ட்டிலும் 300-க்கும் மேற்பட்ட லாரிகள் சிலிண்டர்களை ஏற்றாமல் நிற்கின்றன.இதன் காரணமாக சமையல் கியாஸ் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பாராளுமன்ற தேர்தல் நாளை முதல் தொடங்கவுள்ள நிலையில், தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
வாக்குப்பதிவு முன்னிட்டு நாளை பொது அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சனி, ஞாயிறு என மொத்தம் மூன்று நாட்கள் விடுமுறை என்பதால், வாக்கு அளிப்பதற்காக சென்னையில் இருந்து மக்கள் சொந்த ஊர்களுக்கு நேற்று முதலே படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர்.
இந்நிலையில், மக்களவை தேர்தலை ஒட்டி போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.
சென்னையில் இருந்து ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர்.
பொது மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக சென்னையில் இருந்து நேற்று 2,899 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.
மேலும், சென்னையிலிருந்து பயணம் செய்ய இதுவரை 46,503 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
- 21 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்த போதிலும் சங்கர் ஜப்பான் குடியுரிமை பெறாமலேயே இருந்து வந்தார்.
- ஒரு ஓட்டு போடுவதற்காக லட்சம் ரூபாய்க்கும் மேற்பட்ட தொகையை செலவு செய்து ஜனநாயக கடமையாற்ற சேலம் வந்துள்ளார்.
சேலம்:
சேலம் கொண்டலாம்பட்டியை சேர்ந்தவர் சங்கர்(வயது 45). டிசைனிங் என்ஜினீயராக பணிபுரியும் இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்காக ஜப்பான் நாட்டுக்கு சென்று உள்ளார். அங்கே தற்போது வரை 21 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்த போதிலும் அவர் ஜப்பான் குடியுரிமை பெறாமலேயே இருந்து வந்தார்.
நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சேலம் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வீரபாண்டி சட்டசபை தொகுதி வாக்காளரான அவர் தனது ஒரு ஓட்டை பதிவு செய்வதற்காக, ஜப்பானில் இருந்து கடந்த 11-ந்தேதி சேலத்திற்கு புறப்பட்டு வந்துள்ளார். இதற்காக அவர் விமானத்தில் வந்தவகையில், ஒரு ஓட்டு போடுவதற்காக லட்சம் ரூபாய்க்கும் மேற்பட்ட தொகையை செலவு செய்து ஜனநாயக கடமையாற்ற சேலம் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து என்ஜினீயர் சங்கர் கூறியதாவது, 'ஜப்பான் நாட்டில் டோக்கியோ நகரில், நகரேயமா என்ற பகுதியில் வசித்து வரும் என்னிடம், நடிகர் விஜய் நடித்த சர்க்கார் திரைப்படத்தை பார்த்து விட்டு கதாநாயகன் ஒரு ஓட்டு போடுவதற்காக இந்தியாவுக்கு வருவது போன்று அந்த பாணியில் தான் இங்கு வருகிறீர்களா? என்று கேட்டதற்கு அந்த படத்தை நான் பார்த்தது இல்லை என்றார். இதற்கு மோடி அரசு தான் காரணம். பிரதமர் மோடியால் ஈர்க்கப்பட்டு வாக்கு அளிக்க வந்தேன். அனைவரும் ஜனநாயக கடமையாற்ற வேண்டும்' என்றார்.
- ராக்கெட்டில் பொருத்தப்பட்டுள்ள செயற்கைகோள்கள் உள்ளிட்ட கருவிகளின் திறனை அதிகரிக்கிறது.
- ராக்கெட் என்ஜின் தொழில்நுட்பத்திற்கு ஒரு திருப்புமுனையாகும்.
சென்னை:
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) கீழ், திருவனந்தபுரத்தில் செயல்படும் விக்ரம் சாராபாய் விண்வெளி மைய (வி.எஸ்.எஸ்.சி.), விஞ்ஞானிகள் ராக்கெட் என்ஜின்களுக்கான இலகுரக கார்பன்- கார்பன் (சி-சி) என்ற அதிநவீன உலோகத்தை கண்டு பிடித்து உள்ளனர். இது கலவைகள் போன்ற மேம்பட்ட பொருட்களைப் பயன்படுத்தி அமைக்கப்பட்டு உள்ளது.
இது குறைந்த எடையை கொண்டதுடன், அதிக வெப்பத்தை தாங்கும் சக்தி படைத்தது. அத்துடன் ராக்கெட்டின் செயல் திறனை மேம்படுத்தும். இதனால் ராக்கெட்டின் எடை குறைவதால் அதிக எடை கொண்ட செயற்கைகோள்கள் மற்றும் கருவிகளை ராக்கெட்டில் பொருத்தி வெற்றிகரமாக விண்ணில் ஏவ முடியும்.
அத்துடன், ராக்கெட்டில் பொருத்தப்பட்டுள்ள செயற்கைகோள்கள் உள்ளிட்ட கருவிகளின் திறனை அதிகரிக்கிறது. அதிக வெப்பநிலையிலும் எந்திரங்களை பாதுகாக்கிறது. இவை ராக்கெட் என்ஜின் தொழில்நுட்பத்திற்கு ஒரு திருப்புமுனையாகும்.
இது ராக்கெட் என்ஜின்களின் மதிப்பை மேம்படுத்துவதுடன், உந்துதல் நிலைகளையும் அதிகரிக்கிறது' என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.
- போதமலை தரை மட்டத்திலிருந்து 7 கிலோமீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
- இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து சாலை போக்குவரத்து வசதி இல்லை.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது போதமலை. தரை மட்டத்திலிருந்து 7 கிலோமீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு கீழூர், மேலூர், கெடமலை என மூன்று கிராமங்கள் உள்ளன. இங்கு 1500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து சாலை போக்குவரத்து வசதி இல்லை. கரடு முரடான பாதைகளில் தான் பொதுமக்கள் சென்று வந்தனர். தற்போது ரூ.140 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
ஒவ்வொரு தேர்தலின் போதும் வாக்குப்பதிவு எந்திரங்களை தலைச் சுமையாக தான் கொண்டு செல்வது வழக்கம். தற்போது நாளை நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலுக்காக கீழூரில் ஒரு வாக்குச்சாவடி மையமும், கெடமலையில் ஒரு வாக்குச் சுவடி மையமும் அமைக்கப்பட்டுள்ளது. கீழூர் வாக்குச்சாவடி மையத்தில் 428 ஆண் வாக்காளர்களும் 417 பெண் வாக்காளர்களும் வாக்களிக்க உள்ளனர். அதேபோல் கெடமலையில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் 159 ஆண்களும் 138 பெண்களும் வாக்களிக்க உள்ளனர். நாளை நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டு வாக்குச்சாவடி மையங்களிலும் மொத்தம் 1142 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
இன்று காலை மேற்கண்ட இரண்டு வாக்குச் சாவடி மையங்களுக்கும் வாக்குப்பதிவு எந்திரங்களை ராசிபுரம் தாலுகா அலுவலகத்தில் இருந்து ராசிபுரம் தேர்தல் அதிகாரி முத்துராமலிங்கம், தாசில்தார் சரவணன், தேர்தல் பிரிவு அதிகாரிகள் ஆகியோர் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர்.
கீழூர் வாக்குச்சாவடி மையத்திற்கு இன்று காலை 7.30 மணியளவில் வடுகம் அருகே உள்ள மலை அடிவாரத்தில் இருந்து 3 வாக்குப்பதிவு எந்திரங்கள், விவி பேட் எந்திரம், கண்ட்ரோல் யூனிட் உள்பட 5 எந்திரங்களை மண்டல அலுவலர் விஜயகுமார், உதவி மண்டல அலுவலர் ஜெயக்குமார் வாக்குச்சாவடி மைய அதிகாரி ராஜாமணி உள்பட 4 தேர்தல் அலுவலர்கள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், ஏட்டு ரமேஷ், ஊராட்சி செயலாளர் பரமசிவன் உள்பட 10 பேர் வாக்கு பதிவு எந்திரங்களை நடந்தே தலைச்சுமையாக பொதுமக்கள் உதவியுடன் மலைப்பகுதிக்கு கொண்டு சென்றனர்.
அதேபோல் கெடமலை வாக்குச்சாவடி மையத்திற்கு புதுப்பட்டி மலை அடிவாரத்திலிருந்து 3 வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்பட 5 எந்திரங்களும் நடந்தே கொண்டு செல்லப்பட்டன. மண்டல அலுவலர் பழனிச்சாமி, உதவி மண்டல அலுவலர் சுரேஷ், வாக்குச்சாவடி மைய அதிகாரி பிரபாகரன் மற்றும் போலீசார் உள்பட 10 பேர் சென்றனர்.
- மாதம் 3 முறை உண்டியல்கள் திறந்து எண்ணப்படும்.
- உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
மண்ணச்சநல்லூர்:
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் தமிழ்நாட்டில் உள்ள அம்மன் தலங்களில் புகழ் பெற்றதாகும். இந்த கோவிலுக்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலிருந்தும் மற்றும் அயல்நாடுகளில் இருந்தும் வந்து நேர்த்திக் கடனை நிறைவேற்றி காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனர்.
இங்கு மாதம் 3 முறை உண்டியல்கள் திறந்து எண்ணப்படும். இந்த மாதம் 2-வது முறையாக நேற்று சமயபுரம் மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் வி. எஸ்.பி. இளங்கோவன், கோவில் இணை ஆணையர் கல்யாணி, அறங்காவலர்கள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன.
இதில், காணிக்கையாக ரூ.87 லட்சத்து 57 ஆயிரத்து 91-ம், 918 கிராம் தங்கமும், 1 கிலோ 644 கிராம் வெள்ளியும், 103 வெளிநாட்டு பணம் மற்றும் 240 வெளிநாட்டு நாணயங்கள் கிடைத்துள்ளது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
- தீ மளமளவென பரவி சுமார் 2 ஏக்கர் பரப்பளவுக்கு பிடித்து எரிந்தது.
- சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் லேடீஸ் சீட் பகுதியில் தீ ஏற்பட்டதால் உடனடியாக சுற்றுலா பயணிகள் அங்கிருந்து அனுப்பப்பட்டனர்.
ஏற்காடு:
ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் கடந்த 3 மாதங்களாக மழை பொய்த்துபோய் காடு, மலைகள் பசுமை இழந்து வறண்டு காணப்படுகிறது. இதனால் அவ்வப்போது வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன் ஏற்காடு மலை பாதையில் உள்ள வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் போராடி அந்த தீயை அணைத்தனர்.
இந்த நிலையில் ஏற்காடு லேடீஸ் சீட் பகுதியில் உள்ள வனப்பகுதியில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. தீ மளமளவென பரவி சுமார் 2 ஏக்கர் பரப்பளவுக்கு பிடித்து எரிந்தது. சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் லேடீஸ் சீட் பகுதியில் தீ ஏற்பட்டதால் உடனடியாக சுற்றுலா பயணிகள் அங்கிருந்து அனுப்பப்பட்டனர்.
சம்பவ இடத்துக்கு வந்த ஏற்காடு தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைக்க முற்பட்டும் தீ கட்டுக்குள் வரவில்லை. குடியிருப்பு பகுதிக்கு தீ பரவாமல் தடுக்க தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி அணைத்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் புகையும், சாம்பலுமாக காணப்பட்டது.
- விமான நிலையத்திற்கு வந்த பல விமானங்கள் வேறு பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டன.
- விமான நிலையத்திற்கு வந்து சேரும் சாலைகளும் நீரில் மூழ்கி இருந்தன.
ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் நேற்று பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், சாலைகளில் மழைநீர் தேங்கியது. பல இடங்களில் வாகன போக்குவரத்தும் முடங்கியது.
கனமழை மற்றும் வெள்ளம் எதிரொலியாக, விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. துபாயில் சர்வதேச பயணிகள் அதிகம் வரக்கூடிய, உலகில் பரபரப்புடன் இயங்க கூடிய துபாய் சர்வதேச விமான நிலையத்தில் வெள்ளநீர் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து, விமான நிலையத்திற்கு வந்த பல விமானங்கள் வேறு பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டன.
விமான ஓடுபாதையில் வெள்ளம் புகுந்ததில், விமானங்கள் மற்றும் கார்கள், நீரில் பாதியளவு மூழ்கின. விமானங்கள் நிறுத்தும் பகுதியில் வெள்ளநீர் புகுந்தது. விமான நிலையத்திற்கு வந்து சேரும் சாலைகளும் நீரில் மூழ்கி இருந்தன.
கனமழை எதிரொலியால் சென்னையில் இருந்து துபாய் செல்லக்கூடிய 5 விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன. இதேபோல், மறு மார்க்கத்தில் இருந்து சென்னை வரும் 5 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் பெய்த கனமழையால் இன்று இரண்டாவது நாளாக சென்னையில் இருந்து விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து துபாய் செல்லும் விமானம் ரத்து தொடர்பாக தகவல் தெரிவிக்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.
துபாய் செல்ல வந்த 300க்கும் மேற்பட்ட பயணிகள் விமான நிறுவன கவுன்டரில் வாக்குவாதம் நடைபெற்றது. விமான நிறுவன அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதாக பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
- கடந்த ஒரு மாதமாக நடந்துவந்த அரசியல் கட்சிகளின் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிந்தது.
- அமைதியாக, நேர்மையாக தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் நாளை மறுதினம் தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட உள்ளன.
தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் வரும் 19-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, கடந்த ஒரு மாதமாக தமிழ்நாட்டில் நடைபெற்று வந்த அரசியல் கட்சிகளின் அனல்பறந்த பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.
இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அளித்த பேட்டியில் கூறியதாவது:
இந்த முறை வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். வாக்கு எண்ணும் நாள் வரை ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்துச் செல்லக்கூடாது. வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் உள்ளிட்ட புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அமைதியாக, நேர்மையாக தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
- எங்களுடைய நோக்கம் நீட் தேர்வு மூலமாக தான் ஏழை மாணவர்கள் அரசு மருத்துவக்கல்லூரிக்கு செல்ல வேண்டும்
- நீட் தேர்வை ரத்து செய்து விட்டு தான் நாங்கள் அரசியல் செய்ய வேண்டும் என்றால் அப்படி பட்ட அரசியலே எங்களுக்கு வேண்டாம்
கோவை தொகுதியில் சுல்தான்பேட்டை ஒன்றிய பகுதியில், பாஜக வேட்பாளர் அண்ணாமலை தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
சின்னவதம்பசேரி கிராமத்தில் ஓட்டு சேகரித்த அவரிடம் பெண் ஒருவர் நீட் தேர்வு மூலம் ஏராளமான குழந்தைகள் இறக்கின்றனர். அப்படி இருக்க ஏன் அதனை கட்டாயப்படுத்துகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த அண்ணாமலை, "உயிரே போனாலும் நீட் தேர்வை ரத்து செய்ய மாட்டோம். நீட் ஏழை மக்களுக்கு நல்லது. முதன் முறையாக ஏழை மாணவர்கள் நீட் மூலமாக தான் அரசு மருத்துவமனைக்கு படிக்க செல்கின்றனர். திமுக 1967-ல் ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டில் கொண்டு வந்தது 5 அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் 17 அரசு மருத்துவக்கல்லூரி தான். ஆனால் நாங்கள் 15 அரசு மருத்துவக்கல்லூரி கொண்டு வந்துள்ளோம்.
எங்களுடைய நோக்கம் நீட் தேர்வு மூலமாக தான் ஏழை மாணவர்கள் அரசு மருத்துவக்கல்லூரிக்கு செல்ல வேண்டும். உயிரே போனாலும் நீட் தேர்வை ரத்து செய்ய மாட்டோம். நீட் தேர்வை ரத்து செய்து விட்டு தான் நாங்கள் அரசியல் செய்ய வேண்டும் என்றால் அப்படி பட்ட அரசியலே எங்களுக்கு வேண்டாம்.
கிராமப்புறத்தில் ஒரு ஒரு ஏழை மாணவன் நீட் தேர்வினால் மட்டும் தான் அரசு மருத்துவக்கல்லூரிக்கு படிக்க செல்ல வேண்டும். இல்லையென்றால் ஏழைமாணவர்கள் லட்சக்கணக்கில் பணம் கட்டி தனியார் மருத்துவ கல்லூரிகளில் தான் படிக்க முடியும்.
நீட் தேர்வினால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளவில்லை. அவர்களை தற்கொலை செய்து கொள்ள தூண்டுகிறார்கள். மாணவர்கள் யாரேனும் தற்கொலை செய்தால் முதல்வர் ஸ்டாலின் மீது வழக்குப் போட்டு உள்ளே தள்ளுங்கள். அதற்கு மேல் எந்த மாணவரும் தற்கொலை செய்து கொள்ள மாட்டார்கள்" என்று அவர் தெரிவித்தார்.
- ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கப்படும் என ஆட்சிக்கு வந்து,
- 10 ஆண்டுகளில் 20 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்தாரா?.
தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் இன்று சென்னை பெசன்ட் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மற்றும் தென்சென்னை வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 22 நாட்களாக தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து மக்களை சந்தித்துள்ளேன். மக்களுடைய முகத்தில் தெரியும் மகிழ்ச்சி மற்றும் எழுச்சியை வைத்து 40-க்கும் 40-ஐ நாம்தான் வெல்லப் போகிறோம் என்பதை சொல்கிறேன். 40-ஐயும் நமது கூட்டணிதான் ஆளப்போகிறது.
தமிழ்நாட்டில் மட்டும் அல்ல. வட மாநிலங்களிலும் இந்தியா கூட்டணிக்கான ஆதரவு அலை வீசிக் கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் பிரதமர் மோடியின் சர்வாதிகர மனப்பான்மை. மாநிலங்களை நசுக்கிற எதேச்சதிகாரம். ஒற்றுமையாக வாழுகின்ற மக்களிடையே பிளவை உருவாக்குகின்றன மதவாத பேச்சு. எதிர்க்கட்சிகளை ஒடுக்க நினைக்கின்ற பாசிச எண்ணம்.
ஹேமந்த் சோரன், அரவிந்த் ஜெக்ரிவாலை சிறையில் அடைத்துள்ளார். தேர்தல் களம் சமமாக இருந்தால் தோல்வி நிச்சயம் என்பதை உணர்ந்து காங்கிரஸ், கம்யூனிஸ்ட் வங்கி கணக்குகளை முடக்கும் தீய செயல்களில் ஈடுபட்டார்.
மக்களை பற்றி சிந்திக்காமல் கார்ப்பரேட்டர்கள் மட்டுமே முன்னேற வேண்டும் என சிந்தித்து திட்டங்களை தீட்டியதில் விலைவாசி உயர்ந்து, அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து நிற்கிறது.
ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கப்படும் என ஆட்சிக்கு வந்து, 10 ஆண்டுகளில் 20 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்தாரா?. இல்லை. கேள்வி கேட்ட இளைஞர்களை பகோடா சுடச் சொன்னவர்தான் மோடி.
தற்போது நடுநிலை வாக்காளர்களும் பாஜக-வின் உண்மையான முகத்தை தெரிந்து கொண்டு வெறுக்க தொடங்கிவிட்டார்கள்.
ஊழல் பத்திரம் மோடியின் க்ளீன் முகத்தை கிழித்து மோடியின் ஊழல் முகத்தை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது. உடனே தனது இமேஜை காப்பாற்றிக் கொள்ள தேர்தல் பத்திரம் வந்த உடன்தான் யார்? யாருக்கு? நிதி அளித்தார்கள் என்பது தெரியவந்தது என வடை சுட ஆரம்பித்தார்.
நாடு எத்தனையோ பிரதமரை பார்த்திருக்கிறது. இதுபோன்று வசூல் வேட்டையில் ஈடுபட்ட பிரதமரை பார்த்தது இல்லை. கொரோனாவில் கூட பிரதமர் கேர் நிதி வசூல் வேட்டை நடத்தினார். ஊழலுக்கு ஒரு யுனிவர்சிட்டி கட்டி அதற்கு ஒருவரை வேந்தராக நியமிக்க வேண்டுமென்றால் அதற்கு பொருத்தமான நபர் மோடியை விட்டால் வேறு யாரும் கிடையாது. ஊழலை சட்டப்பூர்வமாக்கிய சாதனையாளர் மோடிதான்.
இப்போது ஊழலுக்கு உத்தரவாதம் கொடுக்கிற Made in BJP. வாஷிங் மெஷின் வைத்து ஊழல் கறை படிந்ததை சுத்தப்படித்தியிருக்கிறார்கள். இது தொடர்பாக கேள்விமேல் கேள்வி கேட்கிறார்களே. நடுநிலையாளர்கள் கேள்வி கேட்கிறார்களே என்ற எந்தவிதமான மான உணர்ச்சி இல்லாமல் திரும்ப திரும்ப அதே செயல்களில் பாஜக ஈடுபடுகிறது.
பா.ஜனதா ஒரு மாநிலத்தில் வளர்ச்சி அடைய தேடுவது மத பிரச்சனையைத்தான். அங்கு பிரச்சனை இல்லையென்றால் எப்படி தூண்டலாம் என ரூம் போட்டு யோசிக்கின்ற கலவர கட்சிதான் பாஜக.
பாஜனதா குறித்து பேசினால் நம்மை ஊழல் கட்சி, குடும்ப கட்சி எனக் குறை கூறுகிறார்கள். தேய்ந்து போன டேப் ரெக்கார்டு மாதிரி மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். இதற்கு பதில் அளித்தே சோர்ந்து போனோம்.
நிறையபேர் தனியாக இருந்து இரவு 12 மணிக்குக்கூட பேய் படும் பார்த்து விடுவார்கள். ஆனால் மோடி இரவு டி.வி.யில் பேசப்போகிறார் என்றால், பலரின் நெஞ்சு படபடத்துவிடும். அந்த அளவிற்கு நாட்டு மக்களை மன ரீதியான அளவிற்கு பயத்திற்கு ஆளாக்கியிருப்பவர்தான் பிரதமர் மோடி.
திடீரென ஒருநாள் டி.வி.யில் வந்தார். 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது எனக் கூறினார். எந்தவிதமான திட்டமிடுதல் இல்லாமல் ஒரு திட்டத்தை கொண்டு வந்து, அதன்பின் தினந்தோறும் விதி (Rule) போட்டார். கேட்டால், கருப்பு பணத்தை ஒழிக்கிறேன் என வசனம் பேசினார். மக்களும் அதை நம்பி சொன்னதையெல்லாம் செய்தார்கள்.
கருப்பு பணம் ஒழிந்ததா? 99 சதவீத பணம் திரும்பி வந்ததாக ரிசர்வ் வங்கி சொன்னது. முதலில் ஆதரிவித்தவர்கள் பின்னர் கடுமையாக விமர்சித்தார்கள். அதோடு விடாமல் புதிதாக அறிவித்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது என அறிவித்தார். அந்த பணமும் 97 சதவீதம் திரும்பி வந்துள்ளது. அப்போ கருப்பு பணம் ஒழிப்பு என்ன மோடி மஸ்தான் வித்தை எதற்கு? பண மதிப்பிழப்பு நடவடிக்கைதான் ஏழை மீதான முதல் தாக்குதல்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சனம் செய்தார்.
- சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார்.
- தேர்தல் விதிமீறல் தொடர்பாக ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
சிவகங்கை:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுதினம் நடைபெற உள்ளது. இதையடுத்து, அரசியல் கட்சியினர் இறுதிநேர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிவகங்கை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து அவரது மனைவி ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரம் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
இதற்கிடையே, இன்று மானாமதுரை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இருந்து ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரம் பிரசாரம் செய்யச் சென்றார். அப்போது தேர்தல் அதிகாரிகள் அவரிடம் பிரசாரம் செய்வதற்கான அனுமதிக் கடிதம் குறித்து கேட்டனர். அப்போது ஆட்டோவில் சென்று பிரசாரம் செய்வதற்கான அனுமதி கடிதத்தைக் காட்டினார்.
தேர்தல் அதிகாரிகள் அதனை ஏற்க மறுத்ததால் அவர்களுடன் தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரம் வார்டு வாரியாக சென்று பிரசாரம் மேற்கொண்டார்.
இந்நிலையில், தேர்தல் அதிகாரி செந்தில்வேல் அளித்த புகாரின் அடிப்படையில், தேர்தல் விதிமுறைகளை மீறியதாக ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரம், மாவட்ட காங்கிரஸ் தலைவர் சஞ்சய் காந்தி உள்பட 60 பேர் மீது மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.






