என் மலர்
உள்ளூர் செய்திகள்
- காரில் பயணித்த மற்ற 3 பேரும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
- போதையில் காரை ஓட்டியதே விபத்துக்கு காரணம் என்ற ரீதியில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ராஜபாளையம்:
தென்காசி மாவட்டம் சிவகிரி இந்திரா தெற்கு தெருவை சேர்ந்தவர் ஜெய் கணேஷ் (வயது 25). இவர் மற்றும் இவரது நண்பர்களான வனராஜ், சுப்புராஜ், மகேஷ் ஆகிய 4 பேரும் சொந்த வேலை காரணமாக சிவகிரியில் இருந்து ராஜபாளையம் வந்திருந்தனர்.
இதையடுத்து மீண்டும் ஊருக்கு புறப்படும் முன்பாக ராஜபாளையத்தில் இருந்து தென்காசி செல்லும் சாலையில் அமைந்துள்ள நட்சத்திர பாரில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். தொடர்ந்து அங்குள்ள ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு சிவகிரிக்கு நள்ளிரவு சுமார் 1 மணிக்கு காரில் புறப்பட்டனர். காரில் பயணித்த 4 பேருமே மதுபோதையில் நிதானமின்றி இருந்துள்ளனர்.
இந்தநிலையில் அவர்களது கார் தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் தேவதானம் ஊருக்குள் சென்றது. வழியெங்கும் சாலையின் இருபுறமும் அலசியவாறு தாறுமாறாகவே கார் சென்றது. இதற்கிடையே சாலையோரம் நிறுத்தப்பட்டிருக்கும் பெரிய கோவில் எனப்படும் பிரசித்தி பெற்ற நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான தேர் மீது மின்னல் வேகத்தில் சென்ற கார் பயங்கரமாக மோதியது.
இதில் காரை ஓட்டிச் சென்ற ஜெய்கணேஷ் காருக்கு உள்ளேயே இடிபாடுகளுக்குள் சிக்கி முகம் சிதைந்து பரிதாபமாக உயரிழந்தார். மேலும் காரில் பயணித்த மற்ற 3 பேரும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். சத்தம் கேட்டு தேவதானம் பகுதியை சேர்ந்தவர்கள் தூக்கத்தில் இருந்து பதறியடித்துக்கொண்டு எழுந்து ஓடி வந்தனர்.
மேலும் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ராஜபாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையில் தீயணைப்பு நிலை வீரர்கள் விரைந்து வந்து தேருக்குள் சிக்கியிருந்த காரை வெளியே எடுத்து காயம் அடைந்தவர்களை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் வனராஜ், மகேஷ் இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து சேத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அளவுக்கு அதிகமான போதையில் காரை ஓட்டியதே விபத்துக்கு காரணம் என்ற ரீதியில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- ஒரு கடையில் கெட்டுப்போன சுமார் 500 கிலோ பலாப்பழம் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
- செயற்கை ரசாயனம் பயன்படுத்தி பழங்களை பழுக்க வைக்கக்கூடாது என்று கடை உரிமையாளர்களை அதிகாரிகள் எச்சரித்தனர்.
கடலூர்:
பண்ருட்டி பகுதியில் கெட்டுப்போன பலாப்பழங்கள் விற்கப்படுவதாக கடலூர் உணவு பாதுகாப்புத்துறைக்கு புகார் வந்தது.
இதையடுத்து பண்ருட்டி நகராட்சி பகுதியில் உள்ள கடலூர் சாலை, கும்பகோணம் சாலை, காந்தி ரோடு, பஸ் நிலையம் ஆகிய இடங்களில் உள்ள பழக்கடைகளில் நேற்று மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் கைலாஷ் குமார் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சுப்பிரமணியன், நல்லதம்பி, சந்திரசேகரன், சுந்தரமூர்த்தி ஆகியோரை கொண்ட குழுவினர் திடீர் ஆய்வு நடத்தினர்.
அப்போது பண்ருட்டி பஸ் நிலையத்தில் உள்ள ஒரு கடையில் கெட்டுப்போன சுமார் 500 கிலோ பலாப்பழம் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் 500 கிலோ பலாப்பழங்களை பறிமுதல் செய்து, பினாயில் ஊற்றி அழித்தனர்.
அதனை தொடர்ந்து ஓட்டல்களில் நடத்திய ஆய்வில் குளிர்பதன நிலையில் வைக்கப்பட்டிருந்த பரோட்டா 5 கிலோ, சிக்கன் கிரேவி 2 கிலோ, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் 5 கிலோ இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதனையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் கெட்டுப்போன பழங்களை விற்ற 4 கடைகளுக்கும், குளிர்பதன நிலையில் வைத்து உணவு பொருட்களை விற்பனைசெய்த 2 ஓட்டல்களுக்கும் தலா ரூ.2 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதேபோல் மாம்பழ கடைகள் மற்றும் மாம்பழக் குடோன்களில் ஆய்வு செய்ததில், கெட்டுப்போன 25 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. மேலும், செயற்கை ரசாயனம் பயன்படுத்தி பழங்களை பழுக்க வைக்கக்கூடாது என்று கடை உரிமையாளர்களை அதிகாரிகள் எச்சரித்தனர்.
- 30 பேர் சேலம் அரசு ஆஸ்பத்திரி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
- சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
சேலம்:
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த 48 பேர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஏற்கனவே 17 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டனர். இந்த நிலையில் சிகிச்சையில் இருந்த கருணாபுரம் மதன் (46) என்பவர் இன்று அதிகாலை 3.30-மணிக்கு இறந்துவிட்டார்.
இதனால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பலியானவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து தொடர்ந்து 30 பேர் சேலம் அரசு ஆஸ்பத்திரி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்கள் பெயர் விவரம் வருமாறு-
கள்ளக்குறிச்சி கருணாபுரம் சிவா (30), கருமாபுரம் அருண் (38), கிருஷ்ணமூர்த்தி (55), கருணாபுரம் பெரியசாமி (65), கள்ளக்குறிச்சி மாதவசேரி சந்திரசேகரன் (27), கள்ளக்குறிச்சி திருவாங்கூர் கலியன் (64), கள்ளக்குறிச்சி ஏமப்பேர் செல்வராஜ் (37), கள்ளக்குறிச்சி முத்து (55), கருணாபுரம் கணேசன் (59), கருணாபுரம் சுரேஷ் (47 ), கருணாபுரம் சரசு (52), கருணாபுரம் ரவி (44), சங்கராபுரம் மனோஜ்குமார் (21), சங்கராபுரம் நரசிம்மன் (21), சின்னசேலம் கருப்பன் (62), நாகலூர் சண்முகம், கள்ளக்குறிச்சி கோட்டைமேடு ஜான்பாஷா (52), கள்ளக்குறிச்சி அன்பு (50), கோட்டைமேடு பார்த்திபன் (27), கருணாபுரம் பாஸ்கர் (51), கள்ளக்குறிச்சி மணி வண்ணன் (48), கருணாபுரம் விஜயகுமார் (42), ரஞ்சித்குமார் (37 ), மணிவண்ணன், (60), கார்த்திக்கேயன் (36) , விளான்தாங்கல் ரோடு நசீர் (53), முடியலூர் சாமிதுரை, சங்கராபுரம் சாமுண்டி (70), மாரிமுத்து (55) ஆகிய 30 பேர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
- மின்சாரம் தாக்கி 2 சிறுவர்கள் உயிரிழந்த சம்ப வம் தடுத்தாட்கொண்டூர் கிராமத்தையே சோகத்தில் மூழ்கடித்தது.
- போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவெண்ணைநல்லூர்:
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகே தடுத்தாட்கொண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் வினோத். தொழிலாளி. இவருடைய மனைவி விஜயலட்சுமி. இந்த தம்பதியின் மகன் சப்தகிரி (வயது 11). இவன் அதே கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். இதேபோல் வினோத்தின் உறவினரான அதே பகுதியை சேர்ந்த கலியபெருமாள்-சூர்யா தம்பதியின் மகன் லோகேஷ் (8). அதே கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்த நிலையில் லோகேஷ், சப்தகிரி ஆகிய 2 பேரும் பள்ளி விடுமுறை என்பதால் நேற்று மதியம் வீட்டின் அருகில் உள்ள வயல்வெளிக்கு சென்று, அங்கிருந்த பம்பு செட்டில் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது மேலே சென்ற உயரழுத்த மின்கம்பி எதிர்பாராதவிதமாக அறுந்து சப்தகிரி, லோகேஷ் ஆகியோரின் மேல் விழுந்தது. இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இருவரும் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த திருவெண்ணைநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி 2 சிறுவர்கள் உயிரிழந்த சம்ப வம் தடுத்தாட்கொண்டூர் கிராமத்தையே சோகத்தில் மூழ்கடித்தது.
- நாளை (திங்கட்கிழமை) மற்றும் 27-ந்தேதி ஆகிய 2 நாட்கள் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது.
- திருச்சி-பாலக்காடு டவுன் ரெயில் (16843) கரூரில் இருந்து பாலக்காடு டவுனுக்கு இயக்கப்படும்.
தஞ்சாவூா்:
தென்னக ரெயில்வே சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கரூர்-திருச்சி ரெயில் வழித்தடத்தில் குளித்தலை மற்றும் பெட்டவாய்த்தலை ரெயில் நிலையங்கள் இடையே பொறியியல் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே, நாளை (திங்கட்கிழமை) மற்றும் 27-ந்தேதி ஆகிய 2 நாட்கள் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது.
அதன்படி, சேலம்-மயிலாடுதுறை விரைவு ரெயில் (வண்டி எண்-16812) கரூர் வரை மட்டும் இயக்கப்படும். கரூரில் இருந்து முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் மயிலாடுதுறைக்கு நாளை (திங்கட்கிழமை) மாலை 4.45 மணிக்கும், 27-ந்தேதி மாலை 4.30 மணிக்கும் புறப்படும்.
இதேபோல், திருச்சி-ஈரோடு முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் (வண்டி எண்-06809) திருச்சியில் இருந்து மாலை 4.10 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக, நாளை (திங்கட்கிழமை) மாலை 5.10 மணிக்கும், 27-ந்தேதி மாலை 4.40 மணிக்கும் புறப்படும். 27-ந்தேதி பாலக்காடு டவுன்-திருச்சி ரெயில் (வண்டி எண்-16844) கரூர் வரை மட்டுமே இயக்கப்படும். திருச்சி-பாலக்காடு டவுன் ரெயில் (16843) கரூரில் இருந்து பாலக்காடு டவுனுக்கு இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தை விட 2½ மடங்கு அதிகமாக டாஸ்மாக் கடைகள் உள்ளன.
- இந்தியாவிற்கே தமிழகம் உதாரணம் என்று கூறிய காலம் போய் இன்று இந்தியாவின் முன் தமிழகம் தலைகுனிந்து நின்று கொண்டிருக்கிறோம்.
கோவை:
கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்திய பா.ஜனதா தொண்டர்கள் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களை பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்காகவும் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தோம். ஆனால் இன்று (நேற்று) மதுரை ஆரம்பித்து, சென்னை, கோவை என அனைத்து பகுதிகளிலும் தொண்டர்கள், தலைவர்கள் ஆர்ப்பாட்டம் செய்வதை தடுத்து, கைது செய்துள்ளனர்.
மக்கள் பிரச்சனைக்காகவும், கள்ளச்சாராய சாவுக்காகவும், தமிழகத்தில் நடைபெறும் தவறுகளை சுட்டிக்காட்டுவதற்காக ஆர்ப்பாட்டம் நடத்த பா.ஜ.க. தலைவர்கள் அந்தந்த மாவட்ட போலீஸ் அதிகாரிகளிடம் முறைப்படி அனுமதி கடிதம் கொடுத்து உள்ளார்கள். கோவையில் எந்த இடம் என்றாலும், எந்த நேரம் என்றாலும் சொல்லுங்க அந்த நேரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம் என்று போலீசாரிடம் தெரிவித்து இருந்தோம்.
ஆனால் கடைசி நேரத்தில் அனுமதி மறுத்து, பெண்கள் உள்பட அனைவரையும் கைது செய்து மண்டபத்தில் வைத்துள்ளனர். தமிழ்நாட்டில் 4,661 நூலகங்களும், 2,127 ஆரம்ப சுகாதார நிலையங்களும் உள்ளன. ஆனால் 5,329 டாஸ்மாக் கடைகள் உள்ளன.
தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தை விட 2½ மடங்கு அதிகமாக டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதன் வெளிப்பாடு தமிழகத்தில் மதுவுக்கு அடிமையாக இருக்க கூடிய ஒரு தலைமுறையை உருவாக்கி இருக்கிறார்கள்.
கள்ளச்சாராயம் குடித்து 55 பேர் இறந்து உள்ளனர். இவர்களில் 53 பேர் பட்டியலின மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள். 15-க்கும் மேற்பட்டவர்கள் கண்பார்வை இழந்து உள்ளனர். இந்தியாவிற்கே தமிழகம் உதாரணம் என்று கூறிய காலம் போய் இன்று இந்தியாவின் முன் தமிழகம் தலைகுனிந்து நின்று கொண்டிருக்கிறோம். தமிழகம் முழுவதும் நாங்கள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம் என்று எழுத்துப்பூர்வமாக கொடுத்த கடிதத்தை நிராகரித்து இருக்கிறார்கள். எங்களது கருத்து சுதந்திரம் பாதிக்கப்பட்டு உள்ளது என்று கவர்னரிடம் தொலைபேசியில் முறையிட்டேன்.
இதைத்தொடர்ந்து திங்கட்கிழமை காலை 11 மணிக்கு பா.ஜ.க. கட்சி குழு கவர்னரை சந்திக்க உள்ளது. இந்த குழு கவர்னரை சந்தித்து கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு, நாங்கள் நேரிடையாக கள்ளக்குறிச்சி சென்று பார்வையிட்டது என அனைத்தையும் கவர்னரிடம் தெரிவிக்க உள்ளோம். இந்த சம்பவத்தில் தி.மு.க.விற்கு உள்ள தொடர்பு குறித்து கவர்னரிடம் அறிக்கையாக சமர்பிக்க உள்ளோம். எங்களது கருத்துரிமையை பறிக்க கூடிய தி.மு.க. அரசு தொடர்ந்து ஆட்சியில் இருக்க வேண்டுமா என்ற கேள்வியை கவர்னர் முன்வைப்போம். இந்த சம்பவத்தில் சி.பி.ஐ. விசாரணையை வலியுறுத்துவோம்..
தி.மு.க.விற்கும், கள்ளச்சாராய கும்பலுக்கும் உள்ள தொடர்பை வெளிகொண்டு வர சி.பி.ஐ. விசாரணை தேவைப்படுகிறது. தமிழகத்திற்கு சி.பி.ஐ. வர வேண்டும் என்றால் மாநில அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்ற நிலை உள்ளது. தமிழகத்தில் வாரந்தோறும் கள்ளச்சாராயம் குறித்த கண்காணிப்பு கூட்டம் நடைபெறும் என்று கடந்த ஆண்டு முதலமைச்சர் அறிவித்து இருந்தார். அதன்படி எத்தனை ஆய்வு கூட்டங்கள் நடைபெற்றது என்பதை அரசு தெளிவுப்படுத்த வேண்டும். வேறு மாநிலங்களில் ஏதாவது ஒரு தவறு நடைபெற்றால் இங்கு உள்ள பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களது கருத்துகளை தெரிவித்து ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்துவார்கள். ஆனால் ஒரு கண்டன குரல் கூட வரவில்லை. கள்ளக்குறிச்சிக்கு இன்னும் ஏன் முதலமைச்சர் செல்லவில்லை.
தேசிய பட்டியலின ஆணையம் தமிழகத்திற்கு உடனடியாக வர வேண்டும் என மத்திய அரசிடம் தெரிவித்து உள்ளோம். ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. கோர்ட்டு அனுமதி பெற்று மீண்டும் தேதி அறிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பலியான விவகாரம் தொடர்பாக நேற்று 3 பேர் மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்தனர்.
- உயிரிழந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வரும் நிலையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56-ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 140 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள்
இந்நிலையில் கள்ளச்சாராயம் குடித்து 56 பேர் பலியான விவகாரம் தொடர்பாக நேற்று 3 பேர் மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்தனர்.
கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 8 பேரில் ராமர், சின்னதுரை, ஜோசப் ராஜா மீது கச்சிராப்பாளையம் காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சாராயத்தில் மெத்தனால் கலந்தவர்கள் என்ற அடிப்படையில் ராமர், சின்னதுரை, ஜோசப் ராஜா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி கள்ள சாராயம் அருந்தி உயிரிழந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வரும் நிலையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கள்ளச்சாராயம் வழக்கில் சென்னையை சேர்ந்த சிவக்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை எம்.ஜி.ஆர் நகரில் பதுங்கி இருந்த சிவகுமாரை இன்று காலை மதுவிலக்கு மற்றும் அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்த சிவகுமாரை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- ஜூலை 8- முதல் 31-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
- மாவட்டம் விட்டு மாவட்டம் என பிரிக்கப்பட்டு நடத்தப்பட இருக்கிறது.
சென்னை:
ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணை நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, அடுத்த மாதம் (ஜூலை) 8-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம் என கல்வித் துறை அறிவித்திருந்தது. அதன்படி, பள்ளிக்கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கல்வி மேலாண்மை தகவல் முகமை (எமிஸ்) என்ற இணையதளத்தில் கடந்த மாதம் (மே) 13-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை ஆசிரியர்கள் விண்ணப்பித்தனர்.
அந்தவகையில் தொடக்கக் கல்வித் துறை இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதலுக்கு என 35 ஆயிரத்து 667 ஆசிரியர்களும், பள்ளி கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், முதுநிலை ஆசிரியர்கள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதலுக்கு என 46 ஆயிரத்து 810 ஆசிரியர்களும் என மொத்தம் 82 ஆயிரத்து 477 ஆசிரியர்கள் விண்ணப்பப் பதிவு செய்திருந்தனர்.
இவர்களுக்கான கலந்தாய்வு அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில், சில காரணங்களுக்காக அது மாற்றப்பட்டது. அதன்படி, பள்ளிக்கல்வி இயக்ககத்தின் கீழ் வரும் ஆசிரியர்களுக்கான புதிய கலந்தாய்வு அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது.
அதில் பதிவேற்றம் செய்யப்பட்ட அனைத்து வகை ஆசிரியர்களின் மாறுதல் கோரி விண்ணப்பித்த விண்ணப்பங்களின் முன்னுரிமை பட்டியல் அடுத்த மாதம் (ஜூலை) 3-ம் தேதி வெளியாகிறது. அதன்பின் அதில் திருத்தம், முறையீடுகள் மேற்கொள்ள அவகாசம் வழங்கப்பட்டபின், 6-ம் தேதி இறுதி முன்னுரிமை பட்டியல் வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து அடுத்த மாதம் 8-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை பொது மாறுதல் கலந்தாய்வு வருவாய் மாவட்டத்துக்குள், மாவட்டம் விட்டு மாவட்டம் என பிரிக்கப்பட்டு நடத்தப்பட இருக்கிறது.
- அரசியல் கட்சி தலைவர்கள் கள்ளக்குறிச்சியில் குவிந்து பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
- பலர் கவலை கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததில் பலர் உயிரிழந்த சம்பவம் கடந்த மூன்று நாட்களாக தமிழகத்தையே உலுக்கி வருகிறது.
சம்பவம் குறித்து அறிந்த அரசியல் கட்சி தலைவர்கள் கள்ளக்குறிச்சியில் குவிந்து பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56ஆக உயர்ந்துள்ளது.
கள்ள சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வந்த கருணாபுரத்தை சேர்ந்த மதன் (46) என்பவர் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும் பலர் கவலை கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
- 3 விசைப்படகுகளை இலங்கைக கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
- கைதான 18 பேரும் ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர்கள் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மூன்று தினங்களாக கடல் சீற்றம் காரணமாக ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. நேற்று கடற்சீற்றம் சற்றே குறைந்த நிலையில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
இந்நிலையில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக குற்றம்சாட்டி நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 18 பேரை கைது செய்துள்ளனர். இவர்களுடன் 3 விசைப்படகுகளை இலங்கைக கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
கைதான 18 மீனவர்களும் காங்கேயன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் கைதான 18பேரும் ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர்கள் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து மீனவர்கள் கைது செய்யப்படுவதால் இதற்கு மத்திய, மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென ராமேஸ்வரம் மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
- "உண்மையை மூடி மறைத்து இதனை எப்படியாவது மடைமாற்றி திசை திருப்பி விடலாம்" என நினைக்கும் அரசுக்கு சவால் விடுகிறேன்.
- எதிர்க்கட்சியின் ஆக்கப்பூர்வமான கருத்துகளையும் கேட்டு உயிரைக் காக்கின்ற பணிகளில் ஈடுபட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
அதிமுக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருப்பதாவது,
கருணாபுரம் கள்ளச்சாராய மரணச் செய்தியறிந்தவுடனே, கடந்த 20-ம் தேதி காலை கள்ளக்குறிச்சி விரைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து, அவர்களுக்கு அளிக்கப்படக்கூடிய சிகிச்சை முறைகளை கேட்டறிந்தேன்.
34 உயிர்களை இழந்திருந்த அந்த நிமிடம்வரை, "மெத்தனால் விஷ முறிவு மருந்தான உயிர்க் காக்கும் Fomepizole மருத்துவமனையில் இருப்பு இல்லை" என்கிற வேதனையை செய்தியாளர்களிடத்தில் பகிர்ந்திருந்தேன். இதனை, அங்கு பணியில் இருந்த மருத்துவர்களே கவலையுடன் தெரிவித்தனர்.
நான் சுட்டிக்காட்டிய பிறகே நேற்று (21ம் தேதி) அவசர அவசரமாக விஷ முறிவு மருந்தான Fomepizole ஆர்டர் செய்யப்பட்டு,
50-க்கும் மேற்பட்ட உயிர்களை இழந்தபிறகு இன்று (22ம் தேதி) மும்பையில் இருந்து தருவிக்கப்பட்ட Fomepizole மருந்துகள் விழுப்புரம் மற்றும் சேலம் அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டு இருக்கின்றன.
"உண்மையை மூடி மறைத்து இதனை எப்படியாவது மடைமாற்றி திசை திருப்பி விடலாம்" என நினைக்கும் அரசுக்கு சவால் விடுகிறேன்.
ஜூன் 20-ம் தேதி அரசு மருத்துவமனைகளில் எவ்வளவு "Fomepizole" மருந்துகள் கையிருப்பில் இருந்தன என்பதற்கான ஆதாரத்தை வெளியிட தயாரா?
#கருணாபுரம் கள்ளச்சாராய மரணச் செய்தியறிந்தவுடனே, கடந்த 20-ம் தேதி காலை #கள்ளக்குறிச்சி விரைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து, அவர்களுக்கு அளிக்கப்படக்கூடிய சிகிச்சை
— Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@EPSTamilNadu) June 22, 2024
முறைகளை கேட்டறிந்தேன்.
34 உயிர்களை இழந்திருந்த அந்த நிமிடம்வரை, "மெத்தனால் விஷ முறிவு மருந்தான… pic.twitter.com/VuIak4LOBu
ஜூன் 20 உயிர்க் காக்கும் விஷ முறிவு மருந்தான Fomepizole பயன்படுத்தப்பட்டிருந்தால் அதற்கான Patient Case Sheet, Hospital Drug Inventory records மற்றும் TNMSC கையிருப்பு பட்டியலை வெள்ளை அறிக்கையாக வெளியிட தயாரா?
'ஒவ்வொரு நொடியும் ஓர் உயிரைக் காக்க போர்க்கால சிகிச்சை' அளிக்கப்பட வேண்டிய பொன்னான நேரத்தை வீணடித்துவிட்டு, 54 உயிர்களை இழந்த பிறகும்; வீண் விவாதத்தை தொடராமல், எதிர்க்கட்சியின் ஆக்கப்பூர்வமான கருத்துகளையும் கேட்டு உயிரைக் காக்கின்ற பணிகளில் ஈடுபட வேண்டுமென வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.
- அந்த வழிகயாக இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த நீதிமன்ற ஊழியர் வேலாயுதராஜை இரண்டு மாடுகளும் சேர்ந்து முட்டித் தாக்கியுள்ளன.
- நிலை தடுமாறி சாலையின் நடுவே விழுந்த வேலாயுதராஜ் மீது அரசுப் பேருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் ஏறி இறங்கியது.
விலங்குகள் தாக்கி மனிதர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் சமீப காலங்களாக அதிகரித்து வருகின்றன. அதிலும் வளர்ப்பு மிருகங்களாக நாய், மாடு ஆகியவை மனிதர்களை தாக்குல் சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அந்த வகையில் நெல்லையில் நடந்துள்ள சம்பவம் ஒன்றின் வீடியோ வெளியாகி காண்போரை பதற வைக்கும்படி உள்ளது.
தமிழகத்தின் தென் மாவட்டமான நெல்லையில் உள்ள வண்ணனாரப்பேட்டை பகுதியில் உள்ள பிரதான சாலையில் இரு மாடுகள் சண்டையிட்டுக்கொண்டிருந்தன. அப்போது அந்த வழிகயாக இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த நீதிமன்ற ஊழியர் வேலாயுதராஜை இரண்டு மாடுகளும் சேர்ந்து முட்டித் தாக்கியுள்ளன.
இதனால் நிலை தடுமாறி சாலையின் நடுவே விழுந்த வேலாயுதராஜ் மீது அரசுப் பேருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் ஏறி இறங்கியது. இதனால் படுகாயமடைந்த வேலாயுதராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வேலாயுதராஜை மாடு முட்டியதும் அவர் மீது பேருந்து கண நேரத்தில் ஏறி இறங்கியதும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகிருந்த நிலையில் அந்தக்காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.






