திருவெண்ணைநல்லூர் அருகே மின்சாரம் தாக்கி 2 சிறுவர்கள் பலி

மின்சாரம் தாக்கி 2 சிறுவர்கள் உயிரிழந்த சம்ப வம் தடுத்தாட்கொண்டூர் கிராமத்தையே சோகத்தில் மூழ்கடித்தது.போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவெண்ணைநல்லூர் அருகே மின்சாரம் தாக்கி 2 சிறுவர்கள் பலி
Published on

திருவெண்ணைநல்லூர்:

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகே தடுத்தாட்கொண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் வினோத். தொழிலாளி. இவருடைய மனைவி விஜயலட்சுமி. இந்த தம்பதியின் மகன் சப்தகிரி (வயது 11). இவன் அதே கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். இதேபோல் வினோத்தின் உறவினரான அதே பகுதியை சேர்ந்த கலியபெருமாள்-சூர்யா தம்பதியின் மகன் லோகேஷ் (8). அதே கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்த நிலையில் லோகேஷ், சப்தகிரி ஆகிய 2 பேரும் பள்ளி விடுமுறை என்பதால் நேற்று மதியம் வீட்டின் அருகில் உள்ள வயல்வெளிக்கு சென்று, அங்கிருந்த பம்பு செட்டில் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது மேலே சென்ற உயரழுத்த மின்கம்பி எதிர்பாராதவிதமாக அறுந்து சப்தகிரி, லோகேஷ் ஆகியோரின் மேல் விழுந்தது. இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இருவரும் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த திருவெண்ணைநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி 2 சிறுவர்கள் உயிரிழந்த சம்ப வம் தடுத்தாட்கொண்டூர் கிராமத்தையே சோகத்தில் மூழ்கடித்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com