என் மலர்
உள்ளூர் செய்திகள்
- மாநில கல்வித்திட்டத்தில் படித்தவர்களுக்கு தேசிய கல்வித்திட்டத்தில் தேர்வு வைத்தால் எப்படி?
- நீட் தேர்வுக்கு எதிரான தமிழக அரசின் தீர்மானத்தை மனப்பூர்வமாக ஆதரிக்கிறேன்.
சென்னை:
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் விஜய் நீட் தேர்வு குறித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
* நீட் தேர்வு மாநில சுயாட்சிக்கு எதிரானது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
* மாநில கல்வித்திட்டத்தில் படித்தவர்களுக்கு தேசிய கல்வித்திட்டத்தில் தேர்வு வைத்தால் எப்படி?
* நீட் தேர்வுக்கு எதிரான தமிழக அரசின் தீர்மானத்தை மனப்பூர்வமாக ஆதரிக்கிறேன்.
* மாநில மருத்துவ கல்லூரிகளில் நீட் தேர்வு அடிப்படையில் சேர்க்கை கூடாது.
* கல்வியை பொதுப்பட்டியலுக்கு கொண்டு வந்து நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கூறினார்.
விஜய் தனது உரையின்போது மத்திய அரசை திமுக பாணியில் ஒன்றிய அரசு என குறிப்பிட்டு பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
NEET நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்று பேசிய தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது.
- விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
- அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயர வைகை அணை மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக இருந்து வருகிறது. வைகை அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் முதல் போக பாசனத்துக்கும், அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் 2ம் போக பாசனத்துக்கும் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.
இதன் மூலம் 5 மாவட்டங்களில் உள்ள பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். கடந்த 3 ஆண்டுகளாக வைகை அணையில் போதிய நீர் இருந்ததால் ஜூன் 2-ந் தேதியே தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு தொடக்கத்தின் முதலே நீர்வரத்து குறைவாக இருந்ததால் முதல் போக பாசனத்துக்கு தண்ணீர் திறப்பதில் கால தாமதம் ஏற்பட்டது.
இருந்தபோதும் மதுரை, திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 51.71 அடியாக உள்ளது.
அணைக்கு வினாடிக்கு 706 கன அடி நீர் வருகிறது. நீர் இருப்பு 2223 மி.கன அடியாக உள்ளது. இந்நிலையில் வைகை அணையில் இருந்து இரு போக பாசனத்துக்காக பெரியாறு பிரதான கால்வாயின் கீழ் பாசன வசதி பெறும் மதுரை, திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் தண்ணீர் திறக்கப்பட்டது. 45 நாட்களுக்கு 900 கன அடி வீதம் முழுமையாகவும், 75 நாட்களுக்கு முறை வைத்தும் மொத்தம் 120 நாட்களுக்கு 6739 மி.கன அடி தண்ணீர் வைகை அணையில் இருந்து இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது.
இந்த தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில் மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்ட கலெக்டர்களான சங்கீதா, ஷஜீவனா, பூங்கொடி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டவுடன் விவசாயிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த தண்ணீர் திறப்பின் மூலம் திண்டுக்கல் மாவட்ம் நிலக்கோட்டை வட்டத்துக்குட்பட்ட 1797 ஏக்கர், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டத்துக்குட்பட்ட 16,452 ஏக்கர் வடக்கு வட்டத்துக்குட்ட 26,792 ஏக்கர் என இரு மாவட்டங்களிலும் உள்ள 45,041 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
திறக்கப்படும் தண்ணீரைக் கொண்டு குறுகிய காலப்பயிர்களை நடவு செய்தும், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் அடையுமாறு விவசாயிகளுக்கு 3 மாவட்ட கலெக்டர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கடந்த ஆண்டு இதே நாளில் வைகை அணையின் நீர்மட்டம் 50.10 அடியாகவும், நீர் இருப்பு 2005 மி.கன அடியாகவும் இருந்தது. மேலும் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் இன்று காலை 123.60 அடியாக உள்ளது. வரத்து 1200 கன அடி. திறப்பு 862 கன அடி. இருப்பு 3341 மி.கன அடி. கடந்த ஆண்டு இதே நாளில் பெரியாறு அணை நீர்மட்டம் 114.85 அடியாக இருந்தது. வரத்து 403 கன அடி. திறப்பு 112 கன அடி. இருப்பு 1702 மி.கன அடியாக இருந்தது. அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
- பல்கலைக்கழக வளாகம் முழுவதும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
- மிரட்டல் விடுத்த வாலிபரை கண்டுபிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை:
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது சற்றுநேரத்தில் வெடிக்கும் என்றும் நேற்று இரவு மர்ம நபர் ஒருவர் இ-மெயில் மூலமாக மிரட்டல் விடுத்திருந்தார்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் கோட்டூர்புரம் போலீசார் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு விரைந்து சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். பல்கலைக்கழக வளாகம் முழுவதும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை அது வெறும் புரளி என்பது தெரிய வந்தது. இந்த வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது தெரியவில்லை. அவரை கண்டு பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மிரட்டல் இ-மெயில் எந்த முகவரியில் இருந்து அனுப்பப்பட்டு உள்ளது? என்பது பற்றிய விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. மிரட்டல் விடுத்த வாலிபரை கண்டுபிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
- பன்முகத்தன்மை என்பது ஒரு பலமே தவிர அதை பலவீனம் என்று சொல்ல முடியாது.
- ஒன்றிய அரசு அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் எய்ம்ஸ், ஜிப்மர், பி.ஜி.ஐ. உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு வேண்டுமென்றால் நீட் தேர்வை நடத்திக் கொள்ளலாம்.
சென்னை:
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தமிழகத்தில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ் 2 மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கி வருகிறார்.
இந்த ஆண்டுக்கான முதல் கட்ட பரிசளிப்பு விழா கடந்த 28-ந்தேதி சென்னையில் நடந்தது. அப்போது 127 தொகுதிகளை சேர்ந்த 800 மாணவ-மாணவிகளுக்கு விஜய் பரிசு வழங்கினார்.
இந்த நிலையில் இன்று 2-ம் கட்ட பரிசளிப்பு விழா திருவான்மியூரில் ராமச்சந்திரா கன்வென்ஷன் திருமண மண்டபத்தில் நடந்தது. இதில் சென்னை, செங்கல்பட்டு, கடலூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, பெரம்பலூர், ராணிப்பேட்டை, புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, காரைக்கால், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், திருவாரூர், திருப்பத்தூர், திருச்சி, வேலூர் மற்றும் விழுப்புரம், ஆகிய 19 மாவட்டங்களில் உள்ள 107 தொகுதிகளை சேர்ந்த 640 மாணவ-மாணவிகளுக்கு விஜய் பரிசுத்தொகை வழங்கினார்.
விழாவில் விஜய் பேசியதாவது:-
வந்திருக்கும் இளம் சாதனையாளர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும், தமிழக வெற்றிக் கழகத்தின் தோழர்களுக்கும், என் நெஞ்சில் குடியிருக்கும் நண்பா, நண்பிகள் உங்கள் அனைவருக்கும் மீண்டும் என்னுடைய பணிவான வணக்கங்கள்.
நான் இன்று பேச வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால் ஒரு முக்கியமான விஷயத்தை பற்றி நான் பேசவில்லை என்றால் அது சரியாக இருக்காது என்று எனக்கு தோன்றியது. அது என்னவாக இருக்கும் என்று நீங்களே யூகித்து இருப்பீர்கள். நீட் தேர்வை பற்றித்தான்.
நீட் தேர்வால் தமிழ்நாட்டில் இருக்கும் மாணவ-மாணவிகள் குறிப்பாக கிராமப்புறங்களில் இருக்கும் ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின வகுப்பினை சேர்ந்த மாணவ-மாணவிகள் அனைவருமே ரொம்பவும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதுதான் ஒரு சத்தியமான உண்மை.
இந்த நீட் தேர்வை 3 பிரச்சனையாக பார்க்கிறேன். ஒன்று நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானதாக இருக்கிறது. 1975-ம் ஆண்டுக்கு முன்னால் கல்வி மாநில பட்டியலில்தான் இருந்தது. அது எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான்.
அதன் பிறகு தான் அதை ஒன்றிய அரசு பொது பட்டியலில் சேர்த்தது. அதுதான் முதல் பிரச்சனையாக தொடங்கியது.
இரண்டாவது, ஒரே நாடு ஒரே பாடத் திட்டங்கள், ஒரே தேர்வு ஆகியவை அடிப்படையிலேயே கல்வி கற்கும் நோக்கத்துக்கே எதிரான விஷயமாக இருப்பதை நான் பார்க்கிறேன். ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஏற்ற மாதிரி அந்த பாடத் திட்டங்கள் இருக்க வேண்டும்.
மாநில உரிமைகளுக்காக மட்டுமே நான் இதை கேட்கவில்லை. கல்வி முறையில் பல்வேறு கண்ணோட்டங்கள், பல்வேறு பார்வைகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விஷயமாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய பார்வை.
பன்முகத்தன்மை என்பது ஒரு பலமே தவிர அதை பலவீனம் என்று சொல்ல முடியாது. இதில் முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால் மாநில மொழியில் படித்து விட்டு, மாநில அளவில் படித்து விட்டு என்.சி.இ.ஆர்.டி. பாடத் திட்டத்தில் தேர்வு வைத்தால் அது எப்படி சரியாகும். அதுவும் மருத்துவம் படிக்க விரும்பும் கிராமப்புற மாணவ- மாணவிகளை கொஞ்சம் யோசித்து பாருங்கள். இது எவ்வளவு ஒரு கடினமான விஷயம்.
மூன்றாவது, நான் பார்க்கும் ஒரு பிரச்சனை கடந்த மே மாதம் 5-ந்தேதி நீட் தேர்வு நடந்தது. அதில் சில குளறுபடிகள் நடந்ததாக செய்திகளில் பார்த்தோம், படித்தோம். அதன் பிறகு நீட் தேர்வு மீது உள்ள நம்பகத்தன்மை மக்கள் மத்தியில் போய் விட்டது. நாடு முழுக்க நீட் தேர்வே தேவையில்லை என்பதுதான் அந்த செய்திகள் மூலம் நான் புரிந்து கொண்ட விஷயங்கள்.
சரி இதற்கு என்னதான் தீர்வு என்றால் நீட் விலக்குதான் இதற்கு உடனடி தீர்வு. நீட் ரத்து கோரி தமிழக சட்டமன்றம் கொண்டு வந்திருக்கிற தீர்மானத்தை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன். இதற்கு ஒன்றிய அரசு காலதாமதம் செய்யாமல் தமிழ்நாடு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து சீக்கிரமாகவே இதை தீர்க்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
சரி.. இதற்கு நிரந்தர தீர்வுதான் என்ன என்றால் கல்வியை பொது பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும். ஒருவேளை அதில் சிக்கல்கள் இருக்கிறது என்றால் ஒரு இடைக்கால தீர்வாக இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை திருத்தி ஒரு சிறப்பு பொதுப் பட்டியல் என்பதை உருவாக்கி அதில் கல்வி மற்றும் சுகாதாரத்தை சேர்க்க வேண்டும்.
இப்போது இருக்கும் பொதுப் பட்டியலில் என்ன ஒரு பிரச்சனை என்றால் மாநில அரசுகளுக்கு என்ன தான் அதில் அதிகாரம் இருந்தாலும் அது முழுக்க முழுக்க ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. அதனால் மாநில அரசுகளுக்கு முழு சுதந்திரம் தரப்பட வேண்டும் என்பதுதான் என்னுடைய தாழ்மையான ஒரு வேண்டுகோள்.
ஒன்றிய அரசு அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் எய்ம்ஸ், ஜிப்மர், பி.ஜி.ஐ. உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு வேண்டுமென்றால் நீட் தேர்வை நடத்திக் கொள்ளலாம்.
ஆனால் இங்கு பிரச்சனை என்னவென்றால், இது என்னுடைய வேண்டுகோள்தான். இது நடக்குமா? என்று தெரியவில்லை. ஆனால் உடனே நடக்காது என்று எனக்கு தெரியும். அப்படியே நடந்தாலும் நடக்க விட மாட்டார்கள் என்றும் தெரியும்.
எனவே இந்த சந்தர்ப்பத்தில் என்னுடைய வேண்டுகோளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இதுதான் நீட் தேர்வு பற்றி என்னுடைய தனிப்பட்ட கருத்து. மற்றபடி இங்கு வந்திருக்கும் அனைவரும் ஜாலியாக படியுங்கள். மன அழுத்தத்தை எடுத்துக் கொள்ளாதீர்கள். இந்த உலகம் ரொம்ப ரொம்ப பெரியது.
வாய்ப்புகள் அந்த அளவுக்கு கொட்டிக் கிடக்கிறது. ஆனால் ஒன்று இரண்டு வாய்ப்புகள் நழுவி விட்டாலும் வருத்தப்படாதீர்கள். அப்படியென்றால் கடவுள் உங்களுக்கு ஒரு பெரிய வாய்ப்பை தருவதற்காக காத்துக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தம். அது என்ன என்று தேடி கண்டு பிடியுங்கள். நம்பிக்கையுடன் இருங்கள். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம். மீண்டும் சந்திக்கும் வரை நன்றி வணக்கம்.
இவ்வாறு விஜய் பேசினார்.
விஜய்யிடம் பரிசு பெறுவதற்காக பெற்றோருடன் வந்த மாணவ-மாணவிகளை தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் நுழைவு வாயிலில் நின்று வரவேற்று அனைவருக்கும் உணவு பொருட்களை வழங்கினார்.
- CUET, NET உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி தி.மு.க.வினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- ஆர்ப்பார்ட்டத்தில் தி.மு.க.வினர் ஏராளமானார் பங்கேற்றுள்ளனர்.
சென்னை:
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தி.மு.க. மாணவரணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் தொடங்கியுள்ளது. நீட் நுழைவு தேர்வை ரத்து செய்ய வேண்டும். நீட் முறைகேடுகளில் ஈடுபட்டோர் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
மேலும், CUET, NET உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி தி.மு.க.வினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆர்ப்பார்ட்டத்தில் தி.மு.க.வினர் ஏராளமானார் பங்கேற்றுள்ளனர்.
- ஊருக்குள் சுற்றித்திரியும் யானையால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
- விடிய, விடிய கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா சேரம்பாடி அடுத்த கோரஞ்சல் பகுதி உள்ளது. கடந்த சில தினங்களாக இந்த பகுதியில் ஒற்றை காட்டு யானை ஒன்று சுற்றி வருகிறது.
அவ்வப்போது ஊருக்குள் சுற்றித்திரியும் யானையால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். சம்பவத்தன்று மாலை வனத்தை விட்டு வெளியேறிய ஒற்றை யானை கோரஞ்சல் பகுதிக்குள் புகுந்தது.
யானை வந்ததை அறிந்ததும் பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் வன ஊழியர்கள், வன காப்பாளர்கள் என 10-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
அவர்கள் அங்கு முகாமிட்டிருந்த யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது நாய் ஒன்றும் யானையை பார்த்து குரைத்து கொண்டே இருந்தது. பதிலுக்கு யானையும் நாயை நோக்கி துரத்தி வந்தது.
இதையடுத்து வனத்துறையினர் யானையை ஊருக்குள் வரவிடமால் வனத்தை நோக்கி விரட்டினர். அப்போது ஆக்ரோஷமான காட்டு யானை, வன ஊழியர்களை நோக்கி வேகமாக வந்தது.
யானை ஆக்ரோஷத்துடன் வருவதை பார்த்ததும் வன ஊழியர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். ஆனாலும் யானை விடாமல் அவர்களை விரட்டியபடி ஓடி வந்தது.
மற்றவர்கள் வேகமாக ஓடிய நிலையில், ஒரு வன ஊழியரின் அருகில் காட்டு யானை வந்தது. அவர் சுதாரித்து அங்கிருந்து வேகமாக ஓடி பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் அடைந்தார்.
ஆக்ரோஷம் குறைந்ததும் யானை அங்கிருந்து நகர்ந்து சென்று விட்டது. யானை எங்கு சென்றது. எங்கு நிற்கிறது என்பதை வனத்துறையினர் கண்காணித்தனர். தொடர்ந்து இரவு முழுவதும் அந்த பகுதிக்குள் யானை நுழைந்து விடாமல் விடிய, விடிய கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டனர்.
வன ஊழியர்களை ஆக்ரோஷத்துடன் காட்டு யானை துரத்தும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- நீட் தேர்வால் மாணவ -மாணவிகள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதுதான் சத்தியமான உண்மை.
- நீட் விலக்கு தான் இதற்கு ஒரே தீர்வு.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் விஜய் கூறியதாவது:
வந்திருக்கும் இளம் சாதனையாளர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும், தவெக தோழர்களுக்கும், என் நெஞ்சில் குடியிருக்கும் நண்பா... நண்பிகள் உங்கள் அனைவருக்கும் மீண்டும் என் அன்பான பணிவான வணக்கங்கள்.
இன்று முக்கியமான விஷயம் குறித்து பேசப்போகிறேன்.
நீட்...
நீட் தேர்வால் தமிழ்நாட்டில் மாணவ-மாணவிகள், கிராமப்புற ஏழை, எளிய பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின வகுப்பை சேர்ந்த மாணவ -மாணவிகள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதுதான் சத்தியமான உண்மை.
நீட்டை 3 பிரச்சனையாக பார்க்கிறேன்.
1. நீட் மாநில உரிமைகளுக்கு எதிராக உள்ளது.
2. ஒரே நாடு ஒரே பாடத்திட்டம் ஒரே தேர்வு கல்வி கற்கும் நோக்கத்திற்கு எதிராக பார்க்கிறேன்.
3. நீட் தேர்வு முறைகேடால் அதன்மேல் இருந்த நம்பகத்தன்மை போய்விட்டது. நீட் விலக்கு தான் இதற்கு ஒரே தீர்வு.
நீட் விலக்கு கோரி தமிழக அரசு கொண்டுவந்துள்ள தீர்மானத்தை நான் வரவேற்கிறேன்.
இதற்கு நிரந்தர தீர்வாக, அந்த கல்வி பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும். ஒரு வேளை சிக்கல் இருந்தால் இடைக்கால தீர்வாக இந்திய அரசியலமைப்பு திருத்தி, சிறப்பு பொது பட்டியல் உருவாக்கி அதில் கல்வி, சுகாதாரத்தை சேர்க்க வேண்டும் என்று கூறினார்.
- ஆனி திருமஞ்சன தரிசன விழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர்.
சிதம்பரம்:
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீ மந்நடராஜ மூர்த்தியின் ஆனி திருமஞ்சன தரிசன உற்சவம் இன்று காலை கொடி யேற்றத்துடன் தொடங்கி யது.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி மாதத்தில் திருமஞ்சனமும், மார்கழி யில் ஆருத்ரா தரிசனமும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான ஆனி திருமஞ்சன தரிசன விழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தி வீற்றுள்ள சித்சபை எதிரே உள்ள கொடிமரத்தில், பஞ்ச மூர்த்திகள் முன்னிலையில், சாமியின் பிரதிநிதியான ஹஸ்தராஜரை முன்னிறுத்தி ஆவாஹணம் செய்து இன்று காலை 7.15 மணிக்கு உற்சவ ஆச்சாரியார் சிவ.கிருஷ்ணசாமி தீட்சிதர் ரிஷபக் கொடியை ஏற்றி வைத்தார். இதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர்.
விழாவை முன்னிட்டு நாளை சந்திர பிறை வாகன வீதி உலா, நாளை மறுதினம் தங்க சூரிய பிறை வாகன வீதிஉலா, 6-ந் தேதி வெள்ளி பூதவாகன வீதி உலா, 7-ந் தேதி வெள்ளி ரிஷப வாகன வீதிஉலா (தெருவடைச்சான்), 8-ந் தேதி வெள்ளி யானை வாகன வீதி உலா, 9-ந் தேதி தங்க கைலாச வாகன வீதி உலா, 10-ந் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதி உலாவும் நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஜூலை 11-ந் தேதி வியாழக்கிழமையன்று நடைபெற உள்ளது. மூலவரே உற்சவராக வீதியுலா வருவதால் இத்தேரோட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக திகழ்கிறது.
இதனைத் தொடர்ந்து 11-ந் தேதி இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறு கிறது.
ஜூலை 12-ந் தேதி வெள்ளிக்கிழமை அதி காலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது.
பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்ச மூர்த்தி வீதி உலா வந்த பின்னர் பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆனி திருமஞ்சன தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடை பெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பொது தீட்சிதர்களின் கமிட்டி செயலாளர் வெங்கடேச தீட்சிதர், துணைச் செயலாளர் சுந்தரதாண்டவ தீட்சிதர் மற்றும் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.
ஆனி திருமஞ்சன விழாவை முன்னிட்டு சிதம்பரம் ஏ.டி.எஸ்.பி. ரகுபதி, நகர இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு தலைமையி லான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- கல்வியை மாநில பட்டியலில் இருந்து மத்திய அரசு, பொது பட்டியலுக்கு எடுத்துச் சென்றது.
- தமிழகத்தில் சாராயத்தின் விலை மட்டும் குறைந்துள்ளது.
விழுப்புரம்:
விக்கிரவாண்டி சட்டமன்றதொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயாவை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கெடார் கிராமத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
கல்வியை மாநில பட்டியலில் இருந்து மத்திய அரசு, பொது பட்டியலுக்கு எடுத்துச் சென்றது. அப்போது கல்வி மாநில உரிமையை பறிகொடுத்தவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்த தி.மு.க.தான். இதை மறந்துவிடுவது மக்களின் இயல்பு. நினைவுப்படுத்திக் கொண்டே இருப்பது போராளிகளின் கடமை. இதைத்தான் நாங்கள் செய்து கொண்டுள்ளோம்.
இன்றைக்கு கல்வியை மாநில பட்டியலில் கொண்டு வருவோம் என தேர்தல் அறிக்கை விடுக்கின்றனர். எடுத்துக்கொண்டு போகும்போது என்ன செய்தீர்கள்? உங்களால் தடுக்க முடியவில்லை. பள்ளிக்கூடங்கள், பலரை உருவாக்கியுள்ளது. ஆனால் நல்ல ஒரு அரசியல்வாதியை உருவாக்க முடியவில்லை.
ஒரு மாநில கட்சி, ஒன்றிய அரசுடன் 18 ஆண்டுகள் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்ற ஒரே கட்சி தி.மு.க.தான். அன்றெல்லாம் இவர்கள் கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வருவதற்காக என்ன போராட்டம் செய்தார்கள்?
தமிழில் வழக்காடு மொழிகள் வேண்டும் என பல போராட்டங்களை தி.மு.க.வினர் நடத்தினார்கள். இவர்கள் நினைத்திருந்தால் எனது தாய்மொழியில் வழக்காடும் மொழி வேண்டும் என கேட்டிருந்தால், அதை பெற்றிருக்கலாம். ஆனால் இவர்கள் அதனை செய்யவில்லை. எந்த இடத்திலுமே இவர்கள் சரியாக நின்றது கிடையாது.
தமிழகத்தில் சாராயத்தின் விலை மட்டும் குறைந்துள்ளது. இளைஞர்களின் கல்வி, வேலை வாய்ப்பை பற்றி சிந்திக்காத அரசு, 45 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனையாகிற மதுவை 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனைசெய்ய என்ன வழி என சிந்தித்து கொண்டுள்ளது. நாடு எதை நோக்கிச்சென்று கொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
- கேப்ஜெமினி, சென்னையில் புதிய கேம்பஸ் அமைக்க உள்ளதாக தகவல்.
- தமிழ்நாடு அரசின் இலக்கிற்குக் கூடுதல் பலம் கிடைத்துள்ளது.
சென்னை:
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை தற்போது பெங்களூருக்கு இணையாக தகவல் தொழில் நுட்பத் துறையில் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. ஸ்டார்ட்அப் முதல் ஐ.டி. சேவைத் துறை வரையில் தொடர்ந்து முதலீடுகளை பெற்று வருகிறது.
இதன் வாயிலாக நாட்டின் மொத்த மென்பொருள் ஏற்றுமதியிலும், மென்பொருள் துறை வேலைவாய்ப்புகளிலும் தமிழ்நாட்டின் பங்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரபலமான ஐ.டி. சேவை மற்றும் கன்சல்டிங் சேவை நிறுவனமான கேப்ஜெமினி, சென்னையில் புதிய கேம்பஸ் அமைக்க உள்ளதாக நேற்று (செவ்வாய்க் கிழமை) அறிவித்துள்ளது.
டெக் நிறுவனங்களின் முதலீடுகள் சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில், கேப் ஜெமினி அடுத்த மூன்று ஆண்டுகளில் ரூ.1000 கோடி முதலீடு செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த முதலீட்டின் வாயிலாக கேம்ஜெமினி சுமார் 6 லட்ச சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட உள்ள இந்த புதிய தகவல் தொழில் நுட்ப வளாகத்தில், 5000 ஊழியர்கள் பணிபுரியும் வகையில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட உள்ளது.
2027-ம் ஆண்டுக்குள் இந்த கேம்பஸ் கட்டி முடிக்கப்படும் என்று கேப்ஜெமினி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், கேம்ஜெமினி தற்போது அறிவிக்கப்பட்ட முதலீட்டில் சுமார் ரூ.3 கோடியை அருகில் உள்ள அரசுப் பள்ளிகளின் வளர்ச்சிக்காக ஒதுக்குவதாகவும் இந்நிறுவனம் உறுதி அளித்துள்ளது. இந்த புதிய , ஐடி வளாகத்தில் நவீன கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் இருக்கும் என்று கேப் ஜெமினி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த கேம்பஸ்-ல் பைனான்சியல் சர்வீசஸ், என்ஜினீயரிங், டிஜிட்டல், கிளவுட், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல்வேறு துறை நிபுணர்கள் பணிபுரிய இது உதவும்.
மேலும், இந்த வளாகத்தில் மேம்படுத்தப்பட்ட என்ஜினீயரிங் லேப்ஸ், வாடிக்கையாளர் சேவை மையங்கள் என தனித்தனி பகுதிகள் இருக்கும் என கேப்ஜெமினி தெரிவித்துள்ளது.
சென்னையில் மிகப்பெரிய ஐ.டி. கேம்பஸ் என்றால் டி.சி.எஸ். நிறுவனத்தின் சிறுசேரி கேம்பஸ் தான். இதை முறியடிக்கும் வகையில் பல நிறுவனங்கள் தொடர்ந்து முதலீடு செய்து வரும் வேளையில் பிரான்சின் கேப்ஜெமினி நிறுவனம் அடுத்த 3 வருடத்தில் சென்னையில் ரூ. 1000 கோடி முதலீடு செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் இன்னோ வேஷன் மற்றும் நிலையான வளர்ச்சிக்கு நாங்கள் அளிக்கும் முக்கியத்துவத்தை இந்த முதலீடு காட்டுகிறது என்று கேப்ஜெமினி நிறு வனத்தின் ஆசியா பசிபிக் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தின் கார்ப்பரேட் ரியல் எஸ்டேட் சேவைகளின் தலைவர் விஜய் சந்திர மோகன் கூறி உள்ளார்.
கேப்ஜெமினியின் இந்த உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்ப வளாகம், தமிழ்நாட்டில் இருக்கும் திறன்மிக்க டெக் ஊழியர்களை பயன்படுத்திக் கொள்ள ஆர்வம்காட்டு வதை பிரதிபலிக்கிறது, மேலும் 2030-ம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும் தமிழ்நாடு அரசின் இலக்கிற்குக் கூடுதல் பலம் கிடைத்துள்ளது என்று தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார்.
- திருவான்மியூரில் நிகழ்ச்சி நடைபெறும் மண்டபத்திற்கு த.வெ.க. தலைவர் விஜய் அதிகாலையே வருகை தந்துள்ளார்.
- மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரை த.வெ.க. நிர்வாகிகள் பேருந்துகள் மூலம் அழைத்து வந்துள்ளனர்.
தமிழ்நாட்டின் 234 மாவட்டங்களிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளில் அதிக மதிப்பெண்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கல்வி விருது வழங்கும் விழா நடத்தப்படுகிறது. இந்த முறை பல கட்டங்களாக இந்த விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில் கடந்த வாரம் முதற்கட்ட விழா நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து இன்று தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக திருவான்மியூரில் நிகழ்ச்சி நடைபெறும் மண்டபத்திற்கு த.வெ.க. தலைவர் விஜய் அதிகாலையே வருகை தந்துள்ளார்.
இன்று நடைபெறும் விழாவில் 19 மாவட்ட மாணவர்களுக்கு விஜய் விருது வழங்க இருக்கிறார். இன்றைய நிகழ்ச்சியில் 725 மாணவர்கள் உட்பட 3,500 பேர் பங்கேற்பார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரை த.வெ.க. நிர்வாகிகள் பேருந்துகள் மூலம் அழைத்து வந்துள்ளனர்.
இந்நிலையில் மாணவர்களுக்கு கல்வி விருது வழங்க விழா அரங்கிற்கு த.வெ.க. தலைவர் விஜய் வருகை புரிந்தார். ஆளப்போறான் தமிழன் பாடலுடன் விஜய்க்கு விழா அரங்கில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அனைவரும் எழுந்து நின்றனர்.
- வெள்ளி விலையும் சற்று அதிகரித்துள்ளது.
- கிராமுக்கு 50 பைசாக்கள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 96-க்கும் கிலோவுக்கு ரூ.500 உயர்ந்து பார் வெள்ளி ரூ.96,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
தங்கம் விலை மாத தொடக்க நாளான ஜூலை 1-ந்தேதி உயராத நிலையில் அதற்கு அடுத்த நாட்களில் சற்று உயர்ந்து விற்பனையாகிறது. நேற்று சவரனுக்கு ரூ.40 உயர்ந்தது. இன்றும் சவரனுக்கு ரூ.40 உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,560-க்கும் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,695-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் சற்று அதிகரித்துள்ளது. கிராமுக்கு 50 பைசாக்கள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 96-க்கும் கிலோவுக்கு ரூ.500 உயர்ந்து பார் வெள்ளி ரூ.96,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.






