என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தமிழகம் முழுவதும் இந்த பாதிப்புகள் உள்ளன.
- தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்படும் குடிநீரை நன்றாக காய்ச்சி குடிக்க வேண்டும்.
சென்னை:
சென்னையில் தற்போது வாந்தி, பேதியால் மருத்துவ மனைகளில் சேர்ந்து சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையில் பல்வேறு பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலப்பதாலும், குடிநீர் சரியாக சுத்திகரிக்கப்படாமல் வழங்கப்படுவதாலும் வாந்தி, பேதி, காலரா போன்ற பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.
தமிழகம் முழுவதும் இந்த பாதிப்புகள் உள்ளன. இவற்றை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து வருகிற ஆகஸ்டு மாதம் 31-ந்தேதி வரை பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் தற்போது 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு வாந்தி, பேதியை தடுக்கும் வகையில் ஓ.ஆர்.எஸ். கரைசல், ஜிங்க் மாத்திரை ஆகியவை முகாம்களிலும், வீடுவீடாகவும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வாந்தி, பேதி ஏற்படாமல் தங்களை பாதுகாக்க பொதுமக்கள் குடிநீரை நன்றாக கொதிக்க வைத்து குடிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் முதல் அரசு மருத்துவமனைகள் வரை குடிநீரால் ஏற்படும் வாந்தி, பேதி உள்ளிட்ட உடல்நல பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க போதிய அளவில் மருந்துகள் கையிருப்பில் உள்ளன. பொதுமக்கள் வாந்தி, பேதி போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும்.
மேலும் தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்படும் குடிநீரை நன்றாக காய்ச்சி குடிக்க வேண்டும். அவ்வாறு அருந்தினால் குடிநீரால் ஏற்படும் உடல்நல பாதிப்புகளை பெருமளவு குறைக்க முடியும். இதுகுறித்து பொதுமக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஆரம்ப சுகாதார நிலையங்க ளுக்கு அறிவுறு த்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- கடையின் வெளியே வைக்கப்பட்டிருந்த உப்பு மூட்டைகள் எரிந்து சேதமானது.
- சந்தேகத்தின் பேரில் 3 பேரை காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற் கொண்டுள்ளனர்.
தொட்டியம்:
திருச்சி மாவட்டம், தொட்டியம் அடுத்த தோளூர்பட்டியை சேர்ந்தவர் ஞானசேகரன் (வயது 60). இவருக்கு சொந்தமான கடையை தொட்டியம் பாலசமுத்திரத்தை சேர்ந்த முருகானந்தம் என்பவருக்கு மளிகை கடை வைப்பதற்கு வாடகைக்கு விட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் இங்கு வந்தனர். திடீரென்று அவர்கள் முருகானந்தம் நடத்திவரும் மளிகை கடை முன்பாக பெட்ரோல் குண்டினை வீசியதாக கூறப்படுகிறது. இதில் கடையின் வெளியே வைக்கப்பட்டிருந்த உப்பு மூட்டைகள் எரிந்து சேதமானது.
கடையின் சுவரில் சிறு பகுதி பெயர்ந்து விழுந்தது. சத்தம் கேட்டு எழுந்து வந்து பார்த்த ஞானசேகரன் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தா ர். பின்னர் இதுபற்றி உடனடியாக தொட்டியம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
தகவலின் பெயரில் போலீஸ் திருச்சி மாவட்ட ஏ.டி.எஸ்.பி. கோடிலிங்கம், தொட்டியம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கதிரேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். சம்பவ இடத்தை போலீசார் நேரில் பார்வையிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதல் கட்ட விசாரணையில் பெண்ணுடன் பேசுவது தொடர்பாக ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த சம்பவம் நடந்திருப்பதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து சந்தேகத்தின் பேரில் 3 பேரை காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற் கொண்டுள்ளனர்.
- இறால், மீன் இனப்பெருக்கம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு இருப்பதாக மீனவர்கள் கவலை.
- கழிவு நீர் மற்றும் ரசாயனம் கலந்து வருவதால் ஆற்றின் நிறம் மாறுகிறது.
எண்ணூர்:
எண்ணூரில் கொசஸ்தலை ஆறும், கடலும் கலக்கும் முகத்துவார பகுதியில் ஏராளமான மீன்களும், இறால்களும் அதிக அளவில் கிடைக்கும். இதனை நம்பி 10 மீனவ கிராம மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் எண்ணூர் முகத்துவார பகுதியில் கொசஸ்தலை ஆறு இணையும் பகுதி முழுவதும் மஞ்சள் நிறமாக மாறி உள்ளது. இதனை கண்டு மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தொழிற்சாலைகளில் இருந்து அதிக அளவு வெளியேற்றப்படும் கழிவு நீரால் இந்த மாற்றம் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் இறால், மீன் இனப்பெருக்கம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு இருப்பதாக மீனவர்கள் கவலை அடைந்து உள்ளனர்.
மேலும் இதேபோல் எண்ணூர் முகத்துவார பகுதி அடிக்கடி மஞ்சள் நிறமாக மாறி காட்சி அளிப்பதாக குற்றம் சாட்டினர்.
இது தொடர்பாக மீனவர்கள் கூறியதாவது:-
எண்ணூர் முகத்துவார பகுதி ஆண்டுதோறும் பல நாட்கள் மஞ்சள் நிறமாக மாறி காட்சி அளித்து வருகிறது.
ஆற்றை சுற்றி இருக்கும் தொழிற்சாலையில் இருந்து கழிவு நீர் மற்றும் ரசாயனம் கலந்து வருவதால் ஆற்றின் நிறம் மாறுகிறது. இதனால் ஆற்றில் இருக்கும் மீன்கள் மற்றும் இறால்கள் இனப்பெருக்கத்துக்கு பாதிப்பு ஏற்படும். இதனால் கொசஸ்தலை ஆற்றை நம்பி இருக்கும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.
எனவே எண்ணூர் முகத்துவாரத்தை சுற்றி உள்ள தொழிற்சாலைகளில் இருந்து கழிவுநீர் வெளியேறுகிறதா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் தண்ணீரை ஆய்வு செய்து உரிய நடவடிக்கையை எடுத்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதேபோல் எண்ணூரில் குழாய்கள் மூலம் வினியோகிக்கப்படும் குடிநீர் கடந்த சில மாதங்களாக மஞ்சள் நிறமாக வருவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
- நீட் தேர்வுக்கு எதிராக ஆளும் கட்சி தீவிரமாக இருக்கிறோம்.
- விஜய் கூறி இருப்பது வரவேற்கத்தக்கது.
சென்னை:
நீட் தேர்வுக்கு எதிரான தமிழக அரசின் தீர்மானத்தை விஜய் ஆதரித்து பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. மேலும், அரசியலில் முதன் முதலாக கல்வி விவகாரம் குறித்து விஜய் கருத்து தெரிவித்து இருப்பது பேசு பொருளாகி இருக்கிறது.
இதனிடையே திமுக துணைப்பொதுச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நீட் தேர்வுக்கு எதிராக ஆளும் கட்சி தீவிரமாக இருக்கிறோம்.
நீட் தேர்வு மட்டுமல்லாது கல்வியையும் மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று விஜய் வலியுறுத்தி இருக்கிறாரே என்று கேட்டதற்கு...
வரவேற்கத்தக்கது. கொஞ்ச கொஞ்சமாக he is on the line என்று கூறினார்.
?LIVE : திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர் சந்திப்பு https://t.co/mh8nsj62dV
— Thanthi TV (@ThanthiTV) July 3, 2024
- சிறை தண்டனையால் பாலகிருஷ்ண ரெட்டி பதவியை இழந்தார்.
- பலவீனமான ஆதாரங்களே உள்ளது.
சென்னை:
1998-ம் ஆண்டு ஓசூர் அருகே பாகலூரில் நடைபெற்ற போராட்டத்தில் பஸ்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாக, அ.தி.மு.க. ஆட்சியில் விளையாட்டுத் துறை அமைச்சராக பதவி வகித்த பாலகிருஷ்ணா ரெட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மொத்தம் 108 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், 16 பேரை குற்றவாளிகள் என அறிவித்து சென்னை எம்.பி-எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்தது.
இவ்வழக்கில், பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை சிறப்பு கோர்ட்டு 2019-ம் ஆண்டு ஜனவரி 7-ம் தேதி தீர்ப்பளித்தது. மூன்றாண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டதால், பாலகிருஷ்ண ரெட்டி பதவியை இழந்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து பாலகிருஷ்ண ரெட்டி உள்பட 16 பேர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்களை ஐகோர்ட்டு நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தார்.
அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஜெயச்சந்திரன், போலீஸ் விசாரணையில் குறைபாடுகள் உள்ளது. உண்மையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பதை அரசுத்தரப்பு கண்டறியவில்லை. பலவீனமான ஆதாரங்களே உள்ளது. அடையாள அணிவகுப்பு நடத்தப்படவில்லை. எனவே, சிறப்பு கோர்ட்டு தீர்ப்பை ரத்து செய்கிறேன் என்று தீர்ப்பளித்தார்.
- உங்களை ஒரு நல்ல மனிதராகவும் நல்ல தலைவராகவும் உணர்கிறேன்
- உங்களை காண முடியவில்லை என்றாலும் உங்கள் அறிவுரைகளை உள்வாங்கி மகிழும் மாணவி நான்.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. நிகழ்ச்சியில் புதுச்சேரியை சேர்ந்த பார்வையற்ற மாணவி சண்முகப்பிரியா பேசியதாவது:-
விஜய் அண்ணா, உங்கள் குரலைக் கேட்க வந்திருக்கிறேன். உங்களை ஒரு நல்ல மனிதராகவும் நல்ல தலைவராகவும் உணர்கிறேன் அண்ணா. இங்கு மதிப்பெண் பெற்று சாதனை படைத்ததை விட எங்களையும் எங்கள் பெற்றோரையும் அழைத்து மகிழ்வித்துள்ளீர்கள்.
தமிழகத்தின் தளபதியே கல்விக்கு கண் கொடுக்கும் நிகழ்கால கர்மவீரரே உங்களை காண முடியவில்லை என்றாலும் உங்கள் அறிவுரைகளை உள்வாங்கி மகிழும் மாணவி நான். உங்கள் பணி மேலும் தொடர என்னுடைய வாழ்த்துகள். இங்கு பேச வாய்ப்பளித்த தளபதி விஜய் அண்ணாவுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாணவி சண்முகப்பிரியா பேசி முடிக்கும் வரை விஜய் அவருக்கு மைக்கை பிடித்தபடி நின்று கொண்டிருந்தார்.
- அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க, மத்திய பா.ஜ.க. அரசின் பரிந்துரையின் அடிப்படையில், தீர்வு காணப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.
- அரசுப் பள்ளி மாணவர்கள் பெருமளவு பயனடைந்துள்ளனர் என்ற உண்மை வெளிப்பட்டு, திமுக உருவாக்கிய போலி பிம்பம் உடைந்துவிடும் என்ற பயமா?
சென்னை:
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நீட் விலக்கு என்று நாடகமாடிய திமுக, ஆட்சிக்கு வந்ததும் அதன் ஒரு பகுதியாக, முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி, ஏகே ராஜன் தலைமையில் ஒரு குழு அமைத்தது. இந்தக் குழு சமர்ப்பித்த அறிக்கையில் உள்ள குளறுபடிகளை தமிழக பா.ஜ.க. பலமுறை சுட்டிக்காட்டியுள்ளது.
நீட் தேர்வு வந்த பிறகு, அரசு மருத்துவக் கல்லூரிகளில், கிராமப்புற, அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க, மத்திய பா.ஜ.க. அரசின் பரிந்துரையின் அடிப்படையில், தீர்வு காணப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.
ஆனால், நீட் தேர்வு வருவதற்கு முன்பு, அரசு மருத்துவக் கல்லூரிகளில், அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை விவரங்களை, பலமுறை வலியுறுத்தியும், திமுக அரசு அமைத்த இந்தக் குழு வழங்க மறுப்பது ஏன்? முழுமையான விவரங்கள் இல்லாத ஒரு அறிக்கையை வைத்து, திமுக தனது நீட் எதிர்ப்பு நாடகத்தைத் தொடர்ந்து கொண்டிருப்பதன் மர்மம் என்ன?
நீட் தேர்வுக்கு முன்பாக, எத்தனை அரசுப் பள்ளி மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் கல்வி இடம் பெற்றனர் என்ற உண்மையைக் கூறினால், நீட் தேர்வு வந்த பிறகே, அரசுப் பள்ளி மாணவர்கள் பெருமளவு பயனடைந்துள்ளனர் என்ற உண்மை வெளிப்பட்டு, திமுக உருவாக்கிய போலி பிம்பம் உடைந்துவிடும் என்ற பயமா? என்று கூறியுள்ளார்.
நீட் விலக்கு என்று நாடகமாடிய திமுக, ஆட்சிக்கு வந்ததும் அதன் ஒரு பகுதியாக, முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி, திரு AK ராஜன் அவர்கள் தலைமையில் ஒரு குழு அமைத்தது. இந்தக் குழு சமர்ப்பித்த அறிக்கையில் உள்ள குளறுபடிகளை, @BJP4TamilNadu பலமுறை சுட்டிக்காட்டியுள்ளது.
— K.Annamalai (@annamalai_k) July 3, 2024
நீட் தேர்வு வந்த… pic.twitter.com/JfJXvlxHMM
- வீட்டின் அருகே உள்ள நத்தம் புறம்போக்கு இடத்திற்கு பட்டா கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
- காயம் அடைந்த ராஜ்குமார் நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
நிலக்கோட்டை:
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள பிள்ளையார் நத்தத்தை சேர்ந்தவர் குகன் (வயது 32). இவர் அணைப்பட்டி சாலையில் உள்ள பேரூராட்சி வளாகத்தில் ரப்பர் ஸ்டாம்ப் செய்து தரும் கடை நடத்தி வருகிறார்.
இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிள்ளையார் நத்தம் கிராம நிர்வாக அலுவலராக உள்ள ராஜ்குமார் என்பவரிடம் தனது வீட்டின் அருகே உள்ள நத்தம் புறம்போக்கு இடத்திற்கு பட்டா கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த இடத்திற்கு பட்டா வழங்குவதில் ஆட்சேபனை இருப்பதாக ராஜ்குமார் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த குகன் நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் வைத்து ராஜ்குமாரை கன்னத்தில் அறைந்தார். இதில் காயம் அடைந்த ராஜ்குமார் நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இது குறித்து நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து குகனை கைது செய்தனர். பின்னர் நிலக்கோட்டை கோர்ட்டில் ஆஜர் படுத்தி திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.
- மாநில கல்வித்திட்டத்தில் படித்தவர்களுக்கு தேசிய கல்வித்திட்டத்தில் தேர்வு வைத்தால் எப்படி?
- நீட் தேர்வுக்கு எதிரான தமிழக அரசின் தீர்மானத்தை மனப்பூர்வமாக ஆதரிக்கிறேன்.
சென்னை:
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் விஜய் நீட் தேர்வு குறித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
* நீட் தேர்வு மாநில சுயாட்சிக்கு எதிரானது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
* மாநில கல்வித்திட்டத்தில் படித்தவர்களுக்கு தேசிய கல்வித்திட்டத்தில் தேர்வு வைத்தால் எப்படி?
* நீட் தேர்வுக்கு எதிரான தமிழக அரசின் தீர்மானத்தை மனப்பூர்வமாக ஆதரிக்கிறேன்.
* மாநில மருத்துவ கல்லூரிகளில் நீட் தேர்வு அடிப்படையில் சேர்க்கை கூடாது.
* கல்வியை பொதுப்பட்டியலுக்கு கொண்டு வந்து நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கூறினார்.
விஜய் தனது உரையின்போது மத்திய அரசை திமுக பாணியில் ஒன்றிய அரசு என குறிப்பிட்டு பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
NEET நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்று பேசிய தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது.
- விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
- அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயர வைகை அணை மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக இருந்து வருகிறது. வைகை அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் முதல் போக பாசனத்துக்கும், அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் 2ம் போக பாசனத்துக்கும் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.
இதன் மூலம் 5 மாவட்டங்களில் உள்ள பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். கடந்த 3 ஆண்டுகளாக வைகை அணையில் போதிய நீர் இருந்ததால் ஜூன் 2-ந் தேதியே தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு தொடக்கத்தின் முதலே நீர்வரத்து குறைவாக இருந்ததால் முதல் போக பாசனத்துக்கு தண்ணீர் திறப்பதில் கால தாமதம் ஏற்பட்டது.
இருந்தபோதும் மதுரை, திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 51.71 அடியாக உள்ளது.
அணைக்கு வினாடிக்கு 706 கன அடி நீர் வருகிறது. நீர் இருப்பு 2223 மி.கன அடியாக உள்ளது. இந்நிலையில் வைகை அணையில் இருந்து இரு போக பாசனத்துக்காக பெரியாறு பிரதான கால்வாயின் கீழ் பாசன வசதி பெறும் மதுரை, திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் தண்ணீர் திறக்கப்பட்டது. 45 நாட்களுக்கு 900 கன அடி வீதம் முழுமையாகவும், 75 நாட்களுக்கு முறை வைத்தும் மொத்தம் 120 நாட்களுக்கு 6739 மி.கன அடி தண்ணீர் வைகை அணையில் இருந்து இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது.
இந்த தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில் மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்ட கலெக்டர்களான சங்கீதா, ஷஜீவனா, பூங்கொடி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டவுடன் விவசாயிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த தண்ணீர் திறப்பின் மூலம் திண்டுக்கல் மாவட்ம் நிலக்கோட்டை வட்டத்துக்குட்பட்ட 1797 ஏக்கர், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டத்துக்குட்பட்ட 16,452 ஏக்கர் வடக்கு வட்டத்துக்குட்ட 26,792 ஏக்கர் என இரு மாவட்டங்களிலும் உள்ள 45,041 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
திறக்கப்படும் தண்ணீரைக் கொண்டு குறுகிய காலப்பயிர்களை நடவு செய்தும், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் அடையுமாறு விவசாயிகளுக்கு 3 மாவட்ட கலெக்டர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கடந்த ஆண்டு இதே நாளில் வைகை அணையின் நீர்மட்டம் 50.10 அடியாகவும், நீர் இருப்பு 2005 மி.கன அடியாகவும் இருந்தது. மேலும் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் இன்று காலை 123.60 அடியாக உள்ளது. வரத்து 1200 கன அடி. திறப்பு 862 கன அடி. இருப்பு 3341 மி.கன அடி. கடந்த ஆண்டு இதே நாளில் பெரியாறு அணை நீர்மட்டம் 114.85 அடியாக இருந்தது. வரத்து 403 கன அடி. திறப்பு 112 கன அடி. இருப்பு 1702 மி.கன அடியாக இருந்தது. அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
- பல்கலைக்கழக வளாகம் முழுவதும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
- மிரட்டல் விடுத்த வாலிபரை கண்டுபிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை:
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது சற்றுநேரத்தில் வெடிக்கும் என்றும் நேற்று இரவு மர்ம நபர் ஒருவர் இ-மெயில் மூலமாக மிரட்டல் விடுத்திருந்தார்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் கோட்டூர்புரம் போலீசார் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு விரைந்து சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். பல்கலைக்கழக வளாகம் முழுவதும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை அது வெறும் புரளி என்பது தெரிய வந்தது. இந்த வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது தெரியவில்லை. அவரை கண்டு பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மிரட்டல் இ-மெயில் எந்த முகவரியில் இருந்து அனுப்பப்பட்டு உள்ளது? என்பது பற்றிய விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. மிரட்டல் விடுத்த வாலிபரை கண்டுபிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
- பன்முகத்தன்மை என்பது ஒரு பலமே தவிர அதை பலவீனம் என்று சொல்ல முடியாது.
- ஒன்றிய அரசு அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் எய்ம்ஸ், ஜிப்மர், பி.ஜி.ஐ. உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு வேண்டுமென்றால் நீட் தேர்வை நடத்திக் கொள்ளலாம்.
சென்னை:
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தமிழகத்தில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ் 2 மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கி வருகிறார்.
இந்த ஆண்டுக்கான முதல் கட்ட பரிசளிப்பு விழா கடந்த 28-ந்தேதி சென்னையில் நடந்தது. அப்போது 127 தொகுதிகளை சேர்ந்த 800 மாணவ-மாணவிகளுக்கு விஜய் பரிசு வழங்கினார்.
இந்த நிலையில் இன்று 2-ம் கட்ட பரிசளிப்பு விழா திருவான்மியூரில் ராமச்சந்திரா கன்வென்ஷன் திருமண மண்டபத்தில் நடந்தது. இதில் சென்னை, செங்கல்பட்டு, கடலூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, பெரம்பலூர், ராணிப்பேட்டை, புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, காரைக்கால், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், திருவாரூர், திருப்பத்தூர், திருச்சி, வேலூர் மற்றும் விழுப்புரம், ஆகிய 19 மாவட்டங்களில் உள்ள 107 தொகுதிகளை சேர்ந்த 640 மாணவ-மாணவிகளுக்கு விஜய் பரிசுத்தொகை வழங்கினார்.
விழாவில் விஜய் பேசியதாவது:-
வந்திருக்கும் இளம் சாதனையாளர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும், தமிழக வெற்றிக் கழகத்தின் தோழர்களுக்கும், என் நெஞ்சில் குடியிருக்கும் நண்பா, நண்பிகள் உங்கள் அனைவருக்கும் மீண்டும் என்னுடைய பணிவான வணக்கங்கள்.
நான் இன்று பேச வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால் ஒரு முக்கியமான விஷயத்தை பற்றி நான் பேசவில்லை என்றால் அது சரியாக இருக்காது என்று எனக்கு தோன்றியது. அது என்னவாக இருக்கும் என்று நீங்களே யூகித்து இருப்பீர்கள். நீட் தேர்வை பற்றித்தான்.
நீட் தேர்வால் தமிழ்நாட்டில் இருக்கும் மாணவ-மாணவிகள் குறிப்பாக கிராமப்புறங்களில் இருக்கும் ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின வகுப்பினை சேர்ந்த மாணவ-மாணவிகள் அனைவருமே ரொம்பவும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதுதான் ஒரு சத்தியமான உண்மை.
இந்த நீட் தேர்வை 3 பிரச்சனையாக பார்க்கிறேன். ஒன்று நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானதாக இருக்கிறது. 1975-ம் ஆண்டுக்கு முன்னால் கல்வி மாநில பட்டியலில்தான் இருந்தது. அது எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான்.
அதன் பிறகு தான் அதை ஒன்றிய அரசு பொது பட்டியலில் சேர்த்தது. அதுதான் முதல் பிரச்சனையாக தொடங்கியது.
இரண்டாவது, ஒரே நாடு ஒரே பாடத் திட்டங்கள், ஒரே தேர்வு ஆகியவை அடிப்படையிலேயே கல்வி கற்கும் நோக்கத்துக்கே எதிரான விஷயமாக இருப்பதை நான் பார்க்கிறேன். ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஏற்ற மாதிரி அந்த பாடத் திட்டங்கள் இருக்க வேண்டும்.
மாநில உரிமைகளுக்காக மட்டுமே நான் இதை கேட்கவில்லை. கல்வி முறையில் பல்வேறு கண்ணோட்டங்கள், பல்வேறு பார்வைகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விஷயமாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய பார்வை.
பன்முகத்தன்மை என்பது ஒரு பலமே தவிர அதை பலவீனம் என்று சொல்ல முடியாது. இதில் முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால் மாநில மொழியில் படித்து விட்டு, மாநில அளவில் படித்து விட்டு என்.சி.இ.ஆர்.டி. பாடத் திட்டத்தில் தேர்வு வைத்தால் அது எப்படி சரியாகும். அதுவும் மருத்துவம் படிக்க விரும்பும் கிராமப்புற மாணவ- மாணவிகளை கொஞ்சம் யோசித்து பாருங்கள். இது எவ்வளவு ஒரு கடினமான விஷயம்.
மூன்றாவது, நான் பார்க்கும் ஒரு பிரச்சனை கடந்த மே மாதம் 5-ந்தேதி நீட் தேர்வு நடந்தது. அதில் சில குளறுபடிகள் நடந்ததாக செய்திகளில் பார்த்தோம், படித்தோம். அதன் பிறகு நீட் தேர்வு மீது உள்ள நம்பகத்தன்மை மக்கள் மத்தியில் போய் விட்டது. நாடு முழுக்க நீட் தேர்வே தேவையில்லை என்பதுதான் அந்த செய்திகள் மூலம் நான் புரிந்து கொண்ட விஷயங்கள்.
சரி இதற்கு என்னதான் தீர்வு என்றால் நீட் விலக்குதான் இதற்கு உடனடி தீர்வு. நீட் ரத்து கோரி தமிழக சட்டமன்றம் கொண்டு வந்திருக்கிற தீர்மானத்தை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன். இதற்கு ஒன்றிய அரசு காலதாமதம் செய்யாமல் தமிழ்நாடு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து சீக்கிரமாகவே இதை தீர்க்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
சரி.. இதற்கு நிரந்தர தீர்வுதான் என்ன என்றால் கல்வியை பொது பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும். ஒருவேளை அதில் சிக்கல்கள் இருக்கிறது என்றால் ஒரு இடைக்கால தீர்வாக இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை திருத்தி ஒரு சிறப்பு பொதுப் பட்டியல் என்பதை உருவாக்கி அதில் கல்வி மற்றும் சுகாதாரத்தை சேர்க்க வேண்டும்.
இப்போது இருக்கும் பொதுப் பட்டியலில் என்ன ஒரு பிரச்சனை என்றால் மாநில அரசுகளுக்கு என்ன தான் அதில் அதிகாரம் இருந்தாலும் அது முழுக்க முழுக்க ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. அதனால் மாநில அரசுகளுக்கு முழு சுதந்திரம் தரப்பட வேண்டும் என்பதுதான் என்னுடைய தாழ்மையான ஒரு வேண்டுகோள்.
ஒன்றிய அரசு அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் எய்ம்ஸ், ஜிப்மர், பி.ஜி.ஐ. உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு வேண்டுமென்றால் நீட் தேர்வை நடத்திக் கொள்ளலாம்.
ஆனால் இங்கு பிரச்சனை என்னவென்றால், இது என்னுடைய வேண்டுகோள்தான். இது நடக்குமா? என்று தெரியவில்லை. ஆனால் உடனே நடக்காது என்று எனக்கு தெரியும். அப்படியே நடந்தாலும் நடக்க விட மாட்டார்கள் என்றும் தெரியும்.
எனவே இந்த சந்தர்ப்பத்தில் என்னுடைய வேண்டுகோளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இதுதான் நீட் தேர்வு பற்றி என்னுடைய தனிப்பட்ட கருத்து. மற்றபடி இங்கு வந்திருக்கும் அனைவரும் ஜாலியாக படியுங்கள். மன அழுத்தத்தை எடுத்துக் கொள்ளாதீர்கள். இந்த உலகம் ரொம்ப ரொம்ப பெரியது.
வாய்ப்புகள் அந்த அளவுக்கு கொட்டிக் கிடக்கிறது. ஆனால் ஒன்று இரண்டு வாய்ப்புகள் நழுவி விட்டாலும் வருத்தப்படாதீர்கள். அப்படியென்றால் கடவுள் உங்களுக்கு ஒரு பெரிய வாய்ப்பை தருவதற்காக காத்துக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தம். அது என்ன என்று தேடி கண்டு பிடியுங்கள். நம்பிக்கையுடன் இருங்கள். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம். மீண்டும் சந்திக்கும் வரை நன்றி வணக்கம்.
இவ்வாறு விஜய் பேசினார்.
விஜய்யிடம் பரிசு பெறுவதற்காக பெற்றோருடன் வந்த மாணவ-மாணவிகளை தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் நுழைவு வாயிலில் நின்று வரவேற்று அனைவருக்கும் உணவு பொருட்களை வழங்கினார்.






