என் மலர்
உள்ளூர் செய்திகள்
- முற்றுகையிட்டு இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகராட்சியில் தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் 4 மண்டலங்களிலும் தூய்மை தொழிலாளர்களாக பணி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் 4 மண்டலத்தை சேர்ந்த டிரைவர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் 400-க்கும் மேற்பட்டோர் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை ஒப்பந்த நிறுவனம் வழங்க வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூய்மை பாரத டிரைவர் மற்றும் தூய்மை பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணி டிரைவர்கள், தூய்மை பணியாளர்களை தமிழ்நாடு பணி 1981-ன் படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
தமிழக அரசாணை படி தூய்மை பணியாளர்களுக்கு சம்பள பில்லுடன் நாள் ஒன்றுக்கு 725-ம் ஓட்டுனருக்கு 763-/ம் வழங்க வேண்டும். பி.எப், இ.சி.ஐ. தொழிலாளர்களிடம் பணம் பிடித்தம் செய்வதை முறைப்படுத்த வேண்டும்.
ஊதியம் குறித்த நாளில் ஒவ்வொரு மாதமும் 1-ந் தேதிக்குள் வழங்க வேண்டும், உள்ளிட்ட19 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்,
இது தொடர்பாக அவர்கள் கூறும்போது, `கடந்த மாதம் 26-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்த நிலையில், கோரிக்கைகள் நிறைவேற்றி தரப்படும் என்று உறுதி அளித்துள்ளனர்.
ஆனால் கடந்த 5-ந் தேதி அனைத்து மண்டலத்தில் பணிபுரியும் டிரைவர் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு சம்பளத்தில் 50 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது நிறைய பணியாளர்களுக்கு, குறைவாக சம்பளம் அவர்களது கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த செயலை கண்டித்து கோரிக்கைகள் நிறைவேறும் வரை காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர். திடீரென சாலை மறியலில் ஈடுபட தொடங்கினர். இதனால் தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் தலைமையில் பாதுகாப்பு பணிக்காக 50-க்கும் மேற்ப்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்
தகவல் அறிந்த தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், 5 கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் எனவும், 50 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டதை திரும்ப பணியாளர்களுக்கு வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார். இதனை ஏற்று அவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில், தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாக பிரச்சினை காரணமாக போராட்டம் நடைபெற்றது. பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இ .எஸ்.ஐ. , பி.எப். பிடித்தம் கணக்கு காட்டவில்லை என்றனர். அது வழங்கப்படும்.
பணியில் காயம் ஏற்பட்டால் மருத்துவ சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்ய வழி வகை செய்யப்படும் என்று கூறிய நிலையில் தொழிலாளர்கள் அதனை ஏற்று கலைந்து சென்றனர் என்றார். அப்போது மேயருடன் துறை சார்ந்த அதிகாரிகள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- நோயாளி ஒருவருக்கு சிகிச்சை அளித்து விட்டு டாக்டர் கைகளை சுத்தம் செய்ய சென்றுள்ளார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வள்ளியூர்:
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள சவுந்திரபாண்டியபுரத்தை சேர்ந்தவர் டாக்டர் ஆன்ட்ரோ ரோமியன்தாஸ் (வயது 41). இவர் தெற்குகள்ளிகுளம் பகுதியில் மருத்துவமனை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு மருந்துகள் வாங்கிய வகையில் சில மருந்து நிறுவனங்களுக்கு கொடுப்பதற்காக டாக்டர் ஆன்ட்ரோ தனது அறையில் உள்ள பையில் ரூ.5 லட்சம் வைத்திருந்தார்.
அப்போது நோயாளி ஒருவருக்கு சிகிச்சை அளித்து விட்டு டாக்டர் கைகளை சுத்தம் செய்ய சென்றுள்ளார். இதை பயன்படுத்திக் கொண்ட அந்த நபர் டாக்டரின் அறையில் இருந்த ரூ.5 லட்சத்தை லாவகமாக திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.
இதற்கிடையே மாலையில் டாக்டர் தனது பையை பரிசோதனை செய்தபோது அதில் வைத்திருந்த பணம் திருட்டு போனதால் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் போலீசில் புகார் செய்தார். அடிப்படையில் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கொண்டு பணம் திருடிய நபர் தேடி வந்தனர். இதில் அவர் கர்நாடக மாநிலம் மாண்டியாவை சேர்ந்த ஜீவன்லால் (வயது 60) என்பதும், இப்பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை வள்ளியூர் போலீசார் கைது செய்தனர்.
- பராமரிப்பு பணிகளை காரணம் காட்டி அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்படுவது வழக்கம்.
- அணு உலையில் வழக்கம்போல் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணுமின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த அணுமின் நிலையத்தில் 2 உலைகளில் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இவற்றின் மூலம் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
தொடர்ந்து அவ்வப்போது பராமரிப்பு பணிகளை காரணம் காட்டி அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்படுவது வழக்கம். அதன்படி 2-வது அணு உலையில் கடந்த மே மாதம் 13-ந்தேதி வருடாந்திர பராமரிப்பு பணிக்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
கடந்த 2 மாதங்களாக நடந்து வந்த பராமரிப்பு பணி முடிந்து இன்று காலை 5.05 மணிக்கு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.
தற்போது 300 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட உள்ளதாகவும், படிப்படியாக இன்று மாலைக்குள் மின் உற்பத்தி ஆயிரம் மெகாவாட்டை எட்டும் எனவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே முதல் அணு உலையில் வழக்கம்போல் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
அணுமின்நிலையத்தில் 3 மற்றும் 4-வது அணு உலைகள் கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தை எட்டிவிட்ட நிலையில், 5 மற்றும் 6-வது அணு உலைகள் கட்டுவதற்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
- ஆண்கள் செய்யக்கூடிய எந்த பணிகளையும் பெண்களும் செய்யலாம் என்றனர்.
- மூதாட்டியின் உடலை மயானத்திற்கு பெண்களே தூக்கி சென்ற சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியது.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மெட்ரோ சிட்டியை சேர்ந்தவர் வக்கீல் கிருஷ்ணகுமார். இவரது பெரியம்மா இந்திராணி (வயது 83). இவர் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது உடலுக்கு திராவிடர் கழகத்தை சேர்ந்த ஏராளமான பெண்கள் அஞ்சலி செலுத்தியதோடு இறுதி சடங்குகளுக்காக மூதாட்டியின் உடலை மின் மயானத்திற்கு எடுத்து செல்வதற்காக தயாராகினர். இதையடுத்து திராவிடர் கழகத்தை சேர்ந்த பெண்கள் ஏராளமானோர் மூதாட்டி உடலை வீட்டிற்கு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் அங்கிருந்து ஆம்புலன்சில் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மின்மயானத்திற்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மின் மயானத்தில் இருந்து மூதாட்டி உடலை ஆம்புலன்ஸ் வாகனத்திலிருந்து எரியூட்டும் மையம் வரை எடுத்துச்சென்று மின் மயானத்தில் உடலை வைத்து எரியூட்டினர். வழக்கமாக மின் மயானத்திற்கு ஆண்கள் மட்டுமே அதிக அளவில் சென்று இறந்தவர்களின் இறுதிச்சடங்கை செய்வார்கள். ஆனால் உயிரிழந்த மூதாட்டி உடலை வீட்டில் இருந்து மின் மயானம் வரை கொண்டு சென்றதுடன், இறுதி சடங்குகள் செய்து, மின்மயானத்தில் எரியூட்டும் வரை காத்திருந்து ஆண்கள் செய்யும் நடைமுறை வழக்கத்தை மாற்றி உள்ளனர்.
இது குறித்து திராவிடர் கழகத்தை சேர்ந்த பெண்கள் கூறுகையில், ஆண்களுக்கு பெண்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் நாங்கள் இந்த பணியில் ஈடுபட்டோம். ஆண்கள் செய்யக்கூடிய எந்த பணிகளையும் பெண்களும் செய்யலாம் என்றனர். உயிரிழந்த மூதாட்டியின் உடலை மயானத்திற்கு பெண்களே தூக்கி சென்ற சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியது.
- மாறாக, விழுப்புரம் மாவட்டத்திற்கு மிகக்குறைந்த எண்ணிக்கையில் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது.
- மகளிர் உரிமைத் தொகை வழங்குவதில் துரோகம் செய்தவர்களுக்கு பாடம் புகட்ட சரியான தருணம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் தான்.
சென்னை:
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தளத்தில்,
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் நேற்று பரப்புரை மேற்கொண்ட மாநில விளையாட்டு மற்றும் சிறப்புத் திட்டங்கள் அமலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ''கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்படி விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 60 ஆயிரம் பேர் மாதம் ரூ.1000 நிதியுதவி பெற்று வருகின்றனர்" என்று பேசியுள்ளார். தமிழகத்தின் பெரிய மாவட்டங்களில் ஒன்றான விழுப்புரம் மாவட்டத்தில் வெறும் 60 ஆயிரம் பேருக்கு மட்டுமே மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுவது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை செயல்படுத்துவது சிறப்புத் திட்டங்கள் அமலாக்கத்துறை தான். அத்துறையின் அமைச்சராக இருப்பவர் உதயநிதி ஸ்டாலின் தான். அதனால் அவர் சொல்லும் புள்ளிவிவரம் மிகவும் சரியாகத் தான் இருக்க வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தில் மிகக்குறைந்த அளவிலானவர்களுக்கு உரிமைத் தொகையை கொடுத்து விட்டு, அதை சாதனை போன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுவது அதிர்ச்சி அளிக்கிறது.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின்கீழ் மாநிலம் முழுவதும் 1 கோடியே 16 லட்சம் மகளிர் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை பெறுகின்றனர். அதன்படி பார்த்தால் தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் சராசரியாக 3.05 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட வேண்டும். தமிழ்நாட்டின் பெரிய மாவட்டங்களில் விழுப்புரம் மாவட்டமும் ஒன்று. தமிழ்நாட்டில் மிக அதிக எண்ணிக்கையில் ஏழைகள் வாழும் மாவட்டம் இதுதான். அதன்படி பார்த்தால் விழுப்புரம் மாவட்டத்தில் அதிக பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட வேண்டும். ஆனால், சராசரியாக வழங்கப்பட வேண்டிய பயனாளிகளில் ஐந்தில் ஒரு பங்கினருக்கு மட்டும் தான் உரிமைத் தொகை வழங்கப்படுவதாக உதயநிதி ஸ்டாலின் உரையிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது.
விழுப்புரம் மாவட்டம் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பின் தங்கிய மாநிலமாக திகழ்கிறது. இந்த மாவட்டத்தில் தான் மிக மிக பின் தங்கிய வன்னியர்களும், ஒடுக்கப்பட்ட பட்டியலினத்தவரும் அதிக எண்ணிக்கையில் வாழ்கின்றனர். அப்படிப்பட்ட மாவட்டத்திற்கு மிக அதிக எண்ணிக்கையில் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட வேண்டும். மாறாக, விழுப்புரம் மாவட்டத்திற்கு மிகக்குறைந்த எண்ணிக்கையில் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது என்றால், அது விழுப்புரம் மாவட்டத்திற்கும், விழுப்புரம் மாவட்டத்தில் வாழும் மக்களுக்கும் இழைக்கப்படும் துரோகம் தானே, அநீதி தானே? இதற்குக் காரணமானவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டாமா?
மகளிர் உரிமைத் தொகை வழங்குவதில் துரோகம் செய்தவர்களுக்கு பாடம் புகட்ட சரியான தருணம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் தான். இந்தத் தேர்தலில் திமுகவை வீழ்த்த வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் திமுக அரசு அதன் தவறுகளையும், துரோகங்களையும் மக்கள் மன்னிக்கவில்லை என்பதை புரிந்து கொண்டு விழுப்புரம் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலானவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.
- சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கம் 54 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
- தங்கம் விலை கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து 6 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
தங்கம் விலை கடந்த சில வாரமாக ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கம் 54 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் 6 ஆயிரத்து 820 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இந்நிலையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 54 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து 6 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசுகள் அதிகரித்து 99 ரூபாய் 50 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.
- துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
- போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மிச்சிகன்:
அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து உள்ளன. இந்தநிலையில் மிச்சிகனில் டெட்ராய்ட் நகரின் குடியிருப்பு பகுதியில் புகுந்த மர்ம நபர்கள் திடீரென அங்கிருந்த பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினர்.
இந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். 19 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அதற்குள் துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டவர்கள் பற்றிய ஆதாரங்களை சேகரித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- திண்டுக்கல் டிராகன்ஸ் 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.
- சேலம் அணி முதல் வெற்றியை எதிர்நோக்கி இருக்கிறது.
சேலம்:
8-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
இன்று இரவு 7.15 மணிக்கு நடக்கும் 6-வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்-சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
திண்டுக்கல் தனது தொடக்க ஆட்டத்தில் திருச்சியை 16 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அந்த அணி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் அணியில் ஷிவம் சிங், பாபா இந்திரஜித், பூபதிகுமார், விமல்குமார் ஆகிய பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.
பந்து வீச்சில் வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியர், வி.பி.தீரன், விக்னேஷ் ஆகியோர் உள்ளனர்.
சேலம் தனது தொடக்க ஆட்டத்தில் மதுரையிடம் தோற்றது. அந்த அணி முதல் வெற்றியை எதிர்நோக்கி இருக்கிறது. அந்த அணியில் கவின், அபிஷேக், விஷால் வைத்யா, ஹரீஷ்குமார், சன்னி சந்து, பொய்யாமொழி, விவேக் ஆகிய வீரர்கள் உள்ளனர்.
- பல்வேறு நாடுகளுக்கு ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
- கண்டெய்னர் தட்டுப்பாடு காரணமாக கட்டணம் பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
திருப்பூர்:
டாலர் சிட்டியான திருப்பூரில் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் மூலமாக மத்திய-மாநில அரசுகளுக்கு அன்னியசெலவாணி அதிகம் கிடைக்கிறது. வெளிநாடுகளுக்கு சரக்குகளை கப்பல் மூலமாகவே அனுப்பி வைக்கப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக விமானம் மூலம் சரக்கு அனுப்பி வைக்கிறார்கள். குறித்த காலத்தில் ஆர்டர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதே இந்த தொழிலில் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
திருப்பூரில் இருந்து அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், இங்கிலாந்து உள்பட பல்வேறு நாடுகளுக்கு ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தூத்துக்குடி, கொச்சி, சென்னை துறைமுகம் வழியாக இவை கொண்டு செல்லப்படுகிறது.
சீனாவில் உள்ள ஷாங்காய், நிங்போ மற்றும் சிங்கப்பூர் துறைமுகங்களில் அதிக நெருக்கடி காரணமாக இந்தியாவில் இருந்து சரக்குகளை கப்பலில் அனுப்புவதற்கு கூடுதல் தாமதம் ஏற்படுகிறது. பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி சரக்கு ஏற்றி வரும் கப்பல்கள் வந்தால் மட்டுமே ஏற்றுமதிக்கு தொடர்ச்சியாக கண்டெய்னர் கிடைக்கும்.
சர்வதேச துறைமுகங்களில் நெருக்கடி, செங்கடல் கடல் கொள்ளை, கப்பல் போக்குவரத்தில் மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் சரக்கு கப்பல் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. மேலும் கண்டெய்னர் தட்டுப்பாடு காரணமாக கட்டணம் பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் இருந்து நியூயார்க் செல்லும் கப்பலில் 20 அடி உயர கண்டெய்னர் கட்டணம் கடந்த மே மாதம் ரூ.2 லட்சத்து 73 ஆயிரமாக இருந்தது. அதன்பிறகு ஜூன் மாதம் ரூ.3 லட்சத்து 65 ஆயிரம், ஜூலை மாதம் 1-ந் தேதி ரூ.4 லட்சத்து 62 ஆயிரம் என உயர்ந்து இந்த மாதம் ரூ.5 லட்சத்து 62 ஆயிரமாக அதிகரித்துள்ளது. அதுபோல் 40 அடி உயர ஹைகியூப் கண்டெய்னர் கட்டணம் கடந்த மே மாதம் ரூ.3 லட்சத்து 55 ஆயிரமாக இருந்தது. ஜூன் மாதம் ரூ.4 லட்சத்து 72 ஆயிரமாகவும், ஜூலை மாதம் 1-ந் தேதி ரூ.6 லட்சத்து 14 ஆயிரமாக இருந்தது. இந்த மாதம் ரூ.7 லட்சத்து 30 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
இந்த கட்டண உயர்வால் திருப்பூரில் இருந்து பின்னலாடைகளை அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பி வைப்பதில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். தற்போது திருப்பூரில் ஏற்றுமதி ஆர்டர்கள் அதிகம் உள்ளன. ஆர்டர்களை முடித்து உரிய காலத்துக்குள் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஆனால் கண்டெய்னர் கட்டணம் ஒருபுறம், தாமதம் மறுபுறம் என ஏற்றுமதியாளர்கள் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.
இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் கூறும்போது, சர்வதேச துறைமுகங்களில் ஒரேநாளில் சரக்கை இறக்கி செல்லும் கம்பல்கள், 2 வாரம் வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கையில் கொழும்பு துறைமுகத்துக்கு வாரம் ஒரு முறை வரும் பெரிய சரக்கு கப்பல் இப்போது மாதத்துக்கு 2 முறை மட்டுமே வந்து செல்கிறது.
மும்பை துறைமுகத்தில் சரக்கு முன்பதிவை நிறுத்தி வைத்துள்ளனர். இந்த இக்கட்டான நிலையில் கப்பல் மற்றும் விமான சரக்கு கட்டணம் பலமடங்கு உயர்ந்துள்ளதால் பாதிக்கப்பட்டுள்ளோம் என்றார்.
- கபினி அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 84 அடியாகும்.
- ஒகேனக்கல்லில் நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரம் கன அடியாக நீடிக்கிறது.
மேட்டூர்:
கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் அங்குள்ள கிருஷ்ண ராஜசாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகளின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வருகிறது.
கிருஷ்ணராஜ சாகர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 124.80 அடியாகும். இன்று அணைக்கு வினாடிக்கு 8,425 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் நீர்மட்டம் 102.80 அடி உயர்ந்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 562 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
அதுபோல் கபினி அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 84 அடியாகும். இன்று அணையின் நீர்மட்டம் 81.89 அடியாக உயர்ந்து காணப்பட்டது. அணைக்கு வினாடிக்கு 4,711 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இந்த அணையில் இருந்து விநாடிக்கு 2,292 கன அடி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்த 2 அணைகளில் இருந்தும் 2,859 கன அடி நீர் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.
இன்று காலை நிலவரப்படி கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டு பகுதிக்கு நீர்வரத்து 5 ஆயிரம் கன அடி அதிகரித்துள்ளது. இங்கு நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து ஒகேனக்கல்லில் நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரம் கன அடியாக நீடிக்கிறது. இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. சுற்றுலா பயணிகள் நடைபாதை, மீன் அருங்காட்சியகம், முதலைப் பண்ணை, தொங்குப்பாலம் உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்த்தும், காவிரி ஆறு, மெயின் அருவி, சினிபால்ஸ உள்ளிட்ட இடங்களில் குளித்தும் மகிழ்ந்து வருகின்றனர்.
இந்த தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு அணைக்கு வருகிறது. நேற்று முன்தினம் வினாடிக்கு 1,465 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 2,832 கன அடியாக அதிகரித்தது. இன்று நீர்வரத்து சிறிது குறைந்து 2,149 கன அடி நீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவை விட நீர்வரத்து அதிகமாக உள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மெதுவாக உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 39.76 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று காலை 40.05 அடியாக உயர்ந்தது. இன்று காலை 8 மணி அளவில் நீர்மட்டம் 40.22 அடி உயர்ந்தது. அணையில் 12.20 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
இனிவரும் காலங்களில் நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் மளமளவென அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
- ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் கட்சியில் இணைய முயற்சித்து வருகிறார்.
- அ.தி.மு.க.வை அழிப்பது என்பது எந்த சக்தியாலும் முடியாது.
சென்னை:
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் அக்கட்சியில் இணைய முயற்சித்து வருகிறார். ஆனால் அவரை ஒரு போதும் அ.தி.மு.க.வில் சேர்த்துக் கொள்ள மாட்டோம் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார்.
இந்த நிலையில் சிவகங்கையில் கட்சி நிர்வாகி இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்ற ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறுகையில், "அ.தி.மு.க.வை அழிப்பது என்பது எந்த சக்தியாலும் முடியாது. தற்போது அ.தி.மு.க.வில் ஒரு பிளவு ஏற்பட்டுள்ளது. கூடிய விரைவில் அனைவரும் அ.தி.மு.க.வில் இணைவோம்" என்று கூறினார்.
இதற்கு மதுரை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி விரிவாக பதில் அளித்தார். ஓ.பன்னீர் செல்வம் குறித்து அ.தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன என்பது பற்றி எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
அ.தி.மு.க.வில் சேர்வதற்கு ஓ.பி.எஸ். நினைக்கலாம். ஆனால் எங்கள் தலைமை அதற்கு உடன்படாது. ஏற்கனவே பொதுக்குழு உறுப்பினர்களால் ஏக மனதாக தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டு அதி.மு.க. அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அவர் உள்பட 3 பேர் நீக்கப்பட்டுவிட்டார்கள்.
ஓ.பி.எஸ். எப்போதுமே இயக்கத்திற்கு விசுவாசமாக இருந்த வரலாறு கிடையாது. புரட் சித் தலைவி அம்மா முதன் முறையாக சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் போது போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
அம்மாவை எதிர்த்து திரையுலகத்தை சேர்ந்த வெண்ணிற ஆடை நிர்மலா போட்டியிடுகிறார். அவருக்கு தலைமை ஏஜெண்டாக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். அப்போதே அம்மாவுக்கு அவர் விசுவாசமாக இல்லை. சிலருடைய சிபாரிசால் கட்சிக்குள் நுழைந்தார். மீண்டும் அந்த துரோகத்தை செய்ய ஆரம்பித்து விட்டார். அதற்கு பிறகு அம்மா அவரை முதல்-அமைச்சராக்கி னார்.
அம்மா இறந்த பிறகு உடனடியாக அவர் தர்ம யுத்தத்தை மேற்கொண்டார். மீண்டும் ஒன்றாக இணைய வேண்டும் என்று தலைமை நிர்வாகிகள், மூத்த நிர்வாகிகள் சொன்னார்கள். அதன்படி நாங்கள் ஒன்றாக இணைகின்ற போது பல கோரிக்கைகளை அவர் வைத்தார்.
அதில் ஒன்று அம்மா மரணத்தில் மர்மம் இருக்கிறது என்றார். அதையும் நாங்கள் ஏற்றுக்கொண்டு அதற்கு ஆணையத்தை நியமித்தோம். யாரை சுட்டிக்காட்டி அம்மா மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று சொன்னார் என்பது அனைவருக்கும் தெரியும்.
ஒருவர் மீது குற்றம் சுமத்தி அதை விசாரித்தே ஆக வேண்டும் என்று நிர்பந்தப்படுத்தினார். அந்த கட்டாயத்தின் பேரில் ஆணையத்தை அமைத்தோம். ஆணையம் அமைக்கப்பட்ட பிறகு அந்த ஆணையம் பல முறை நோட்டீஸ் கொடுத்தும் அவர் ஆஜராகவில்லை.
அதற்கு பிறகு 2019-ல் பாராளுமன்ற தேர்தல் வந்தது. அப்போது தனக்கு முக்கிய பொறுப்பு வேண்டும் என்று கேட்டார். ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு வேண்டும் என்று கேட்டார். அவருக்கு வெறும் 3 சதவீதம் பேர் தான் ஆதரவு இருந்தது.
10 சட்டமன்ற உறுப்பினர்கள் தான் ஆதரவாக இருந்தார்கள். 97 சதவீதம் பேர் எங்கள் பக்கம் இருந்தாலும் கூட எங்களுடைய மூத்த நிர்வாகிகள் கேட்டுக்கொண்டதற்காக ஒருங்கிணைப்பாளர் பதவி கொடுத்தோம். துணை முதல்-அமைச்சர் பதவி கொடுத்தோம். நல்ல இலாகா கொடுத்தோம். அப்போதும் அவருக்கு மன திருப்தியில்லை.
2019 பாராளுமன்ற தேர்லில் அவரது மகனை தேனி தொகுதி வேட்பாளராக அறிவித்தார்கள். அதை மட்டும் தான் அவர் கவனித்தார். இடைத்தேர்தலில் அவர் அக்கறையே செலுத்தவில்லை. அதோடு ஆண்டிப்பட்டி, பெரிய குளம் தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது. பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆண்டிப்பட்டி தொகுதியில் அவரது மகன் அதிக ஓட்டுகள் பெறுகிறார்.
அ.தி.முக. வேட்பாளர் குறைவான ஓட்டுகளை பெறுகிறார். அப்படி என்றால் அவர் இந்த இயக்கத்திற்கு விசுவாசமாக இருக்கிறாரா? ஏன் என்றால் அதில் வெற்றி பெற்று வந்தால் கூட ஆட்சியை காப்பாற்ற முடியும்.
ஆனால் ஆட்சியை பற்றி அவருக்கு கவலையில்லை. எங்களுடைய தலைமையில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்று வருகின்ற போது சில பிரச்சினைகள் வந்தது. வாக்குவாதம் வந்தது.
அனைவரும் ஒருமித்த கருத்தோடு செயல்பட வேண்டும் என்று மூத்த நிர்வாகிகள் அவரை வீடு தேடி சென்று ஒற்றுமையாக இருப்போம் என்று பலமுறை பேச்சுவார்த்தை நடத்தினோம். அவர் ஒத்துக்கொள்ள வில்லை.
அதன் பிறகுதான் அவர் நீதிமன்றம் சென்றார். பின்னர் பொதுக்குழு கூடியது. ஓ.பன்னீர்செல்வம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. பொதுக்குழு கூட்டம் நடந்து கொண்டிருந்த போது ரடிவுகளை அழைத்து சென்று கல்லால் கட்சிக்காரர்களின் கார் களை நொறுக்கி, தலைமை அலுவலகத்திற்குள் புகுந்து கதவை உடைத்து உள்ளே இருந்த பொருட்களை சூறையாடி பொருட்களை திருடி சென்று விட்டார்.
இவரை ஒருங்கிணைப் பாளராக ஆக்கிய கொடு மைக்காக தொண்டர்கள் பல பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்கள். அவரை அடித்து விட்டார்கள் என்று புகார் கொடுத்து பல பேர் 15 நாட்கள் சிறையில் இருந்து ஜாமீனில் வந்தார்கள்.
ஆக இப்படிப்பட்டவர், சுயநலவாதி. அதற்கு பிறகு வழக்கு போட்டார். இரட்டை இலையை முடக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் கொடுக்கிறார். எந்தவிதத்தில் நியாயம். அப்புறம் நீதிமன்றம், அதற்கு பிறகு தேர்தல் ஆணையம் எங்கள் தரப்பில் தான் நியாபம் இருக்கிறது என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதன்பிறகு பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அப்போதாவது இந்த கட்சிக்கு விசுவாசமாக இருப்பார் என்று பார்த்தால் எங்களுடைய வேட்பாளரை எதிர்த்து இரட்டைஇலையை எதிர்த்து ராமநாதபுரத்தில் நிற்கிறார். இவர் எப்படி கட்சிக்கு விசுவாசமாக இருப்பார்.
கட்சிக்காரர்களை எப்படி அரவணைப்பார். இவர் எப்போதுமே அ.தி.மு.க.வுக்கு விசுவாசமாக இருந்ததே கிடையாது. அவர் சுயநலம் படைத்தவர். அ.தி.மு.கவில் அவர்களை இணைக்கின்ற பேச்சுக்கு ஒரு சதவீதம் கூட இடம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- மாறுதல் நம்மிடமிருந்து தான் வர வேண்டும்.
- நாம் ஒன்றை திரும்ப திரும்ப சொன்னால் அதில் வெற்றி பெறலாம்.
விக்கிரவாண்டி:
விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட பனையபுரத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அக்கட்சியின் வேட்பாளருக்கு வாக்கு சேகரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
உலகத்திற்கு விவசாயத்தை கற்றுக் கொடுத்தவன் தமிழன். எதிர்காலத்தில் தம்பிகள் வரலாற்றுப் பாதையில் பயணிக்க வேண்டும். இன்று சாதி, மதப்பற்று பெருகி விட்டது. எதை மறைக்கப்பட வேண்டுமோ அதை உயர்த்திக் காண்பிக்கிறார்கள். ஏற்றுக்கொள்ள வேண்டியவகைள் மறைக்கப்படுகின்றன.
துணைக்கண்டத்தில் சாதி, மத அரசியல் நடத்தப்பட்டு வருகிறது. தாய் மீதும், தம்பி மீதும் என்னை விட அக்கறை உள்ளவன் யாரும் இல்லை. நான் இறந்தால் கூட என் கடமை இந்த இன மக்களுக்கு நான் எடுத்த பிறவி பயனை செய்து விட்டேன் என பழியில்லாமல் என் உயிர் மூச்சிபோகும்.
மாறுதல் நம்மிடமிருந்து தான் வர வேண்டும். ஒன்றை திரும்பத் திரும்ப சொல்ல வேண்டும். இனிய சொல் இரும்பு கதவை கூட திறக்கும் என்பார்கள். அப்படி நாம் ஒன்றை திரும்ப திரும்ப சொன்னால் அதில் வெற்றி பெறலாம். நீ வெல்லும் வரை பேசு, வென்றுவிட்ட பின் செயலாற்ற வேண்டும். இப்போது உள்ள அரசியல் அரசு மத அரசாக செயல்படுகிறது. மதம் எப்படி அரசாளும்? மனிதம் தான் அரசாள வேண்டும். அரசியல் முழுக்க முழுக்க மக்கள் சேவையாக இருக்க வேண்டும். மானிடத்தில் மதத்தின் வேறாக சாதி உள்ளது. மனிதர்களுக்கு எதிரி சாதி. சாதிகள் குடிகளின் அடையாளம். தமிழ் தான் என் இனத்தின் அடையாளம். இவன் ஜெயிச்சிடுவானோ என்ற பயம் மட்டும் அவர்களிடத்தில் இருக்கிறது. இது ஒன்று போதும் 2026-ல் வெற்றி பெற்றிடுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.






