search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    தூத்துக்குடியில் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட தூய்மை பணியாளர்கள்
    X

    தூத்துக்குடியில் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட தூய்மை பணியாளர்கள்

    • முற்றுகையிட்டு இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சியில் தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் 4 மண்டலங்களிலும் தூய்மை தொழிலாளர்களாக பணி செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் 4 மண்டலத்தை சேர்ந்த டிரைவர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் 400-க்கும் மேற்பட்டோர் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை ஒப்பந்த நிறுவனம் வழங்க வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தூய்மை பாரத டிரைவர் மற்றும் தூய்மை பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணி டிரைவர்கள், தூய்மை பணியாளர்களை தமிழ்நாடு பணி 1981-ன் படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

    தமிழக அரசாணை படி தூய்மை பணியாளர்களுக்கு சம்பள பில்லுடன் நாள் ஒன்றுக்கு 725-ம் ஓட்டுனருக்கு 763-/ம் வழங்க வேண்டும். பி.எப், இ.சி.ஐ. தொழிலாளர்களிடம் பணம் பிடித்தம் செய்வதை முறைப்படுத்த வேண்டும்.

    ஊதியம் குறித்த நாளில் ஒவ்வொரு மாதமும் 1-ந் தேதிக்குள் வழங்க வேண்டும், உள்ளிட்ட19 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்,

    இது தொடர்பாக அவர்கள் கூறும்போது, `கடந்த மாதம் 26-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்த நிலையில், கோரிக்கைகள் நிறைவேற்றி தரப்படும் என்று உறுதி அளித்துள்ளனர்.

    ஆனால் கடந்த 5-ந் தேதி அனைத்து மண்டலத்தில் பணிபுரியும் டிரைவர் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு சம்பளத்தில் 50 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது நிறைய பணியாளர்களுக்கு, குறைவாக சம்பளம் அவர்களது கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

    எனவே இந்த செயலை கண்டித்து கோரிக்கைகள் நிறைவேறும் வரை காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர். திடீரென சாலை மறியலில் ஈடுபட தொடங்கினர். இதனால் தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் தலைமையில் பாதுகாப்பு பணிக்காக 50-க்கும் மேற்ப்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்

    தகவல் அறிந்த தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், 5 கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் எனவும், 50 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டதை திரும்ப பணியாளர்களுக்கு வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார். இதனை ஏற்று அவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

    இதுகுறித்து மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில், தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாக பிரச்சினை காரணமாக போராட்டம் நடைபெற்றது. பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இ .எஸ்.ஐ. , பி.எப். பிடித்தம் கணக்கு காட்டவில்லை என்றனர். அது வழங்கப்படும்.

    பணியில் காயம் ஏற்பட்டால் மருத்துவ சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்ய வழி வகை செய்யப்படும் என்று கூறிய நிலையில் தொழிலாளர்கள் அதனை ஏற்று கலைந்து சென்றனர் என்றார். அப்போது மேயருடன் துறை சார்ந்த அதிகாரிகள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×