என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண்டெய்னர் தட்டுப்பாடு"

    • பல்வேறு நாடுகளுக்கு ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
    • கண்டெய்னர் தட்டுப்பாடு காரணமாக கட்டணம் பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    டாலர் சிட்டியான திருப்பூரில் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் மூலமாக மத்திய-மாநில அரசுகளுக்கு அன்னியசெலவாணி அதிகம் கிடைக்கிறது. வெளிநாடுகளுக்கு சரக்குகளை கப்பல் மூலமாகவே அனுப்பி வைக்கப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக விமானம் மூலம் சரக்கு அனுப்பி வைக்கிறார்கள். குறித்த காலத்தில் ஆர்டர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதே இந்த தொழிலில் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

    திருப்பூரில் இருந்து அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், இங்கிலாந்து உள்பட பல்வேறு நாடுகளுக்கு ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தூத்துக்குடி, கொச்சி, சென்னை துறைமுகம் வழியாக இவை கொண்டு செல்லப்படுகிறது.

    சீனாவில் உள்ள ஷாங்காய், நிங்போ மற்றும் சிங்கப்பூர் துறைமுகங்களில் அதிக நெருக்கடி காரணமாக இந்தியாவில் இருந்து சரக்குகளை கப்பலில் அனுப்புவதற்கு கூடுதல் தாமதம் ஏற்படுகிறது. பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி சரக்கு ஏற்றி வரும் கப்பல்கள் வந்தால் மட்டுமே ஏற்றுமதிக்கு தொடர்ச்சியாக கண்டெய்னர் கிடைக்கும்.

    சர்வதேச துறைமுகங்களில் நெருக்கடி, செங்கடல் கடல் கொள்ளை, கப்பல் போக்குவரத்தில் மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் சரக்கு கப்பல் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. மேலும் கண்டெய்னர் தட்டுப்பாடு காரணமாக கட்டணம் பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

    தூத்துக்குடியில் இருந்து நியூயார்க் செல்லும் கப்பலில் 20 அடி உயர கண்டெய்னர் கட்டணம் கடந்த மே மாதம் ரூ.2 லட்சத்து 73 ஆயிரமாக இருந்தது. அதன்பிறகு ஜூன் மாதம் ரூ.3 லட்சத்து 65 ஆயிரம், ஜூலை மாதம் 1-ந் தேதி ரூ.4 லட்சத்து 62 ஆயிரம் என உயர்ந்து இந்த மாதம் ரூ.5 லட்சத்து 62 ஆயிரமாக அதிகரித்துள்ளது. அதுபோல் 40 அடி உயர ஹைகியூப் கண்டெய்னர் கட்டணம் கடந்த மே மாதம் ரூ.3 லட்சத்து 55 ஆயிரமாக இருந்தது. ஜூன் மாதம் ரூ.4 லட்சத்து 72 ஆயிரமாகவும், ஜூலை மாதம் 1-ந் தேதி ரூ.6 லட்சத்து 14 ஆயிரமாக இருந்தது. இந்த மாதம் ரூ.7 லட்சத்து 30 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

    இந்த கட்டண உயர்வால் திருப்பூரில் இருந்து பின்னலாடைகளை அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பி வைப்பதில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். தற்போது திருப்பூரில் ஏற்றுமதி ஆர்டர்கள் அதிகம் உள்ளன. ஆர்டர்களை முடித்து உரிய காலத்துக்குள் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஆனால் கண்டெய்னர் கட்டணம் ஒருபுறம், தாமதம் மறுபுறம் என ஏற்றுமதியாளர்கள் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.

    இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் கூறும்போது, சர்வதேச துறைமுகங்களில் ஒரேநாளில் சரக்கை இறக்கி செல்லும் கம்பல்கள், 2 வாரம் வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கையில் கொழும்பு துறைமுகத்துக்கு வாரம் ஒரு முறை வரும் பெரிய சரக்கு கப்பல் இப்போது மாதத்துக்கு 2 முறை மட்டுமே வந்து செல்கிறது.

    மும்பை துறைமுகத்தில் சரக்கு முன்பதிவை நிறுத்தி வைத்துள்ளனர். இந்த இக்கட்டான நிலையில் கப்பல் மற்றும் விமான சரக்கு கட்டணம் பலமடங்கு உயர்ந்துள்ளதால் பாதிக்கப்பட்டுள்ளோம் என்றார்.

    ×