என் மலர்
உள்ளூர் செய்திகள்
- விசாரணையில் கடலூர் அடுத்த வெள்ளக்கரை காலனியை சேர்ந்த அன்பழகன், அவரது மனைவி எனபது தெரியவந்தது.
- கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர்:
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்திற்கு கணவன், மனைவி என 2 பேர் வந்தனர். அவர்களிடம் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது இவர்களிடம் மண்ணெண்ணெய் பாட்டில் இருந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து மண்ணெண்ணெய் பாட்டிலை பறிமுதல் செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கடலூர் அடுத்த வெள்ளக்கரை காலனியை சேர்ந்த அன்பழகன், அவரது மனைவி எனபது தெரியவந்தது. இவர் தனது குடும்பத்துடன் அதே பகுதியில் கூரை வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த வீட்டின் அருகில் கழிவுநீர் சூழ்ந்துள்ளதால், அதில் உள்ள விஷ பூச்சிகள் கூரை வீட்டிற்குள் வருகிறது. இதனால் 2 மகள்களும் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.
இங்கு புதிய வீடு கட்ட மானியம் கோரி பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முடிவு செய்ததாக போலீசாரிடம் அன்பழகன் கூறினார்.
இதையடுத்து தங்களின் பிரச்சனைகளுக்கு மனு அளித்துதான் தீர்வு காணவேண்டும். இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட கூடாது என்று எச்சரித்து கலெக்டர் அலுவலகத்திற்குள் அனுப்பி வைத்தனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- பிள்ளைகளுக்கு நிலத்தை பிரித்து கொடுப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தது.
- கணவன்-மனைவிக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் மகராஜகடை பகுதியில் உள்ள பெலவர்த்தியை அடுத்த காட்டூரை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 72), விவசாயி. இவருடைய மனைவி லட்சுமி (63). இவர்களுக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். ராமமூர்த்தி கடந்த சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று மனைவியிடம் பிள்ளைகளுக்கு நிலத்தை பிரித்து கொடுப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது கணவன்-மனைவிக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த, ராமமூர்த்தி அருகில் கிடந்த கட்டையால் மனைவி லட்சுமியை சரமாரியாக தாக்கினார்.
இருப்பினும் ஆத்திரம் அடங்காத அவர், கத்தியால் மனைவியை சரமாரியாக குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த லட்சுமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமி பரிதாபமாக இறந்தார். அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
இந்த சம்பவம் குறித்து மகராஜகடை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராமமூர்த்தியை கைது செய்தனர்.
மகராஜகடை அருகே குடும்ப தகராறில் மூதாட்டியை அவரது கணவரே கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- எங்கு பார்த்தாலும் ரவுடிகளின் ராஜ்ஜியமாக உள்ளது.
- முதலமைச்சர் சிறப்பாக செயல்பட்டிருந்தால் சட்டம் ஒழுங்கு காக்கப்பட்டிருக்கும்.
சேலம்:
சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். காவல் அதிகாரிகளுக்கு சுதந்திரம் இல்லாததால் அவர்களால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை.
* தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவி வருகிறது.
* ஆம்ஸ்ட்ராங் கொலை திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டுள்ளது.
* ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்.
* தமிழ்நாட்டில் கொலைகள் நடக்காத நாளே இல்லை.
* எங்கு பார்த்தாலும் ரவுடிகளின் ராஜ்ஜியமாக உள்ளது.
* காவல் அதிகாரிகளை மாற்றுவதால் சட்டம் ஒழுங்கை காக்க முடியாது.
* ஓபிஎஸ் அதிமுகவில் இல்லை. அவரை பற்றி பேசுவதற்கு ஒன்றுமில்லை.
* முதலமைச்சர் சிறப்பாக செயல்பட்டிருந்தால் சட்டம் ஒழுங்கு காக்கப்பட்டிருக்கும்.
* எந்தெந்த துறைகளில் எவ்வளவு கொள்ளையடிக்கலாம் என்பதே இந்த ஆட்சியின் திட்டம் என்று கூறினார்.
- கடந்த 2021-ம் ஆண்டு எனது கணவர் தமிழரசன் சவுதி அரேபியா நாட்டிற்கு டிரைவர் வேலைக்கு சென்றார்.
- இது குறித்து கேட்டால் யாரும் பதில் கூறவில்லை.
கடலூர்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வெண்ணையூர் பகுதியை சேர்ந்த தமிழரசன் மனைவி ஜோகண்ணால் தேவ கிருபை. தனது 2 மகன்களுடன் கண்ணீர் மல்க கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு நடைபெற்ற மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது;-
கடந்த 2021-ம் ஆண்டு எனது கணவர் தமிழரசன் சவுதி அரேபியா நாட்டிற்கு டிரைவர் வேலைக்கு சென்றார். இவருக்கு கடந்த 2023-ம் ஆண்டு வாகன விபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்த எனது கணவர் தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்ததாக அங்கிருந்து தெரிவித்தனர்.
பின்னர் எனது கணவர் இறந்து விட்டதாகவும் தெரிவித்தனர். இந்த நிலையில் எனது கணவரின் உடல் தொடர்பாக இதுநாள் வரை எதும் தெரியவில்லை. இது குறித்து கேட்டால் யாரும் பதில் கூறவில்லை. ஆகையால் இது தொடர்பாக விசாரணை நடத்தி, எனது கணவர் தமிழரசனின் உடலை மீட்டு தரவேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
- நான் முதல்வன் திட்டத்தில் 39,186 இளைஞர்கள் பயனடைந்துள்ளனர்.
- வன்னிய மாணவர்களின் எண்ணிக்கை 74-ஆக ஏறத்தாழ மூன்று மடங்கு உயர்ந்தது.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் "எல்லோருக்கும் எல்லாம்" என்ற தத்துவத்துடன் திராவிட மாடல் ஆட்சியை இந்தியாவிற்கே வழிகாட்டும்வண்ணம் சிறப்பாக நடத்தி வருகிறார்.
எல்லா மாவட்டங்களிலும் அரசின் திட்டங்கள் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் காலை உணவுத் திட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் 63 ஆயிரத்து 168 மாணவர்களும், விக்கிரவாண்டியில் 10,651 மாணவர்களும் சூடான, சுவையான சிற்றுண்டி உட்கொண்டு கல்வியைத் தொடர்கின்றனர்.
நான் முதல்வன் திட்டத்தில் 39,186 இளைஞர்கள் பயனடைந்துள்ளனர்.
1 லட்சத்து 43 ஆயிரத்து 33 முதியோருக்கு மாத ஓய்வூதியம் ரூ.314.67 கோடி, முதல்வரின் முகவரி திட்டத்தில் 1,24,356 மனுக்களுக்குத் தீர்வு , சுயதொழில் தொடங்கிட கடன் ரூ.1,388.67 கோடி, 16ஆயிரத்து 128 மகளிர்க்கு சுயஉதவிக்குழு கடன் ரத்து ரூ.24.43 கோடி, 20 ஆயிரத்து 799 குடும்பங்களுக்கு நகைக் கடன் தள்ளுபடி ரூ.90.13 கோடி , 30ஆயிரத்து 798 பேருக்கு உழவர் பாது காப்புத் திட்ட ஓய்வூதியம் ரூ.67.75 கோடி, 3 ஆயிரத்து 781 ஏழைப் பெண்களுக்கு 14.66 கோடி திருமண நிதியுடன், ரூ.16.52 கோடி மதிப்பில் 30.248 கிலோ தங்க நாணயங்கள், புதுமைப் பெண் திட்டத்தில் 9 ஆயிரத்து 488 மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, 3 லட்சத்து 49 ஆயிரத்து 257 குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000, என வழங்கி மக்களைக் காக்கும் மகத்தான அரசாக திகழ்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள வன்னியர் உட்பட மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பின ருக்கும், சீர்மரபினருக்கும் 1989-ல் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது தி.மு.க. இதனால் 1988-1989-ம் ஆண்டில் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 68 என்பது இந்த இட ஒதுக்கீடு வழங்கப்பட்டபின் 1989-1990-ல் 187 ஆக உயர்ந்தது.
இவர்களில் வன்னிய மாணவர்களின் எண்ணிக்கை 74-ஆக ஏறத்தாழ மூன்று மடங்கு உயர்ந்தது.
இதேபோல், பொறியியல் கல்லூரியில் 1988-1989இல் 354 ஆக இருந்த மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் சேர்க்கை 1989-1990-ல் 685-ஆக உயர்ந்தது. இவர்களில் வன்னிய மாணவர்களின் எண்ணிக்கை 109 என்பது 292 ஆக ஏறத்தாழ 3 மடங்கு உயர்ந்தது.
இட ஒதுக்கீடு கோரி, வன்னியர் சங்கத்தினர் நடத்திய போராட்டத்தில் உயிர்நீத்த 27 பேரின் குடும்பங்களுக்கு 1998-ல் தலா 3 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கியது தி.மு.க. அத்துடன், இந்த 27 சமூக நீதிப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு குடும்ப ஓய்வூதியமாக மாதம் 1500 ரூபாய் அனுமதித்ததும் தி.மு.க.தான்.
அந்தக் குடும்ப ஓய்வூதியத்தை நவம்பர் 2006 முதல் மாதம் 1,500 ரூபாயில் இருந்து 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கியதும் தி.மு.க.தான்.
ராமசாமி படையாச்சியார் திருவுருவச்சிலை 3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்ச் செலவில் சென்னை கிண்டியில் அமைத்து திறந்து வைக்கப்பட்டதும் தி.மு.க. ஆட்சியில் தான்.
காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான 21 சமூகநீதிப் போராளிகளுக்கு ரூ.5 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில், விழுப்புரம் மாவட்டத்தில் மணிமண்டபம் அமைத்திட ஆணையிட்டு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
விழுப்புரம் மாவட்டத்திலும் சிறப்பான பல திட்டங்கள் செயல்படுத்தப்படுவதால், இம்மாவட்டம் முன்னேற்றத் திசையில் நடைபோடுகிறது. விக்கிரவாண்டி சிறப்பான முன்னேற்றம் கண்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 3 பேரும் திருச்சி வழியாக சிலைகளை சென்னைக்கு கொண்டு செல்லும்போது போலிசாரிடம் சிக்கியுள்ளனர்.
- மீட்கப்பட்ட சிலைகள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தஞ்சை:
திருச்சி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு குழுவினர் கடந்த 6-ந் தேதி தஞ்சாவூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த காரை சோதனை செய்தனர்.
அப்போது அதில் 6 ஐம்பொன் சிலைகள் இருப்பதை கண்டு பிடித்தனர். 6 சிலைகளும் பழங்கால புராதானமிக்க சிலைகள் ஆகும். இதில் திரி புராந்தகர் சிலை 3 அடி உயரம் கொண்டது. வீணா தார தட்சிணாமூர்த்தி சிலை 2.75 அடி உயரம் உடையது. மேலும் 3.25 அடி உயர ரிஷபதேவர், தலா 2.75 அடி உயர 3 அம்மன் சிலைகள் என மொத்தம் 6 சிலைகளை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
காரை ஓட்டி வந்த, சேலம் கொங்கணாபுரம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் கண்ணன் (வயது 42), மயிலாடுதுறை கொற்கை கிராமத்தை சேர்ந்த லட்சுமணன் (64) , ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளீயானது.
லட்சுமணன், 5 ஆண்டுகளுக்கு முன், புதிய வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டியுள்ளார். அப்போது இந்த 6 ஐம்பொன் சிலைகள் கிடைத்துள்ளன. அதனை அரசு அலுவலர்களுக்கு தெரிவிக்காமல் வீட்டில் மறைத்து வைத்திருந்தார்.
மேலும் இதுகுறித்து அவர் தனது நண்பரான ராஜேஷ் கண்ணனிடம் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து ராஜேஷ் கண்ணன், லட்சுமணனின் மருமகனான சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் பகுதியை சேர்ந்த திரு முருகனுடன், லட்சுமணன் வீட்டிற்கு வந்து சிலைகளை பார்த்தனர்.
3 பேரும் இந்த சிலைகளை வெளிநாடுகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்க திட்டமிட்டனர். இதையடுத்து ராஜேஷ் கண்ணனுக்கு சிலைகளை விற்கவும், வெளிநாடுகளுக்கு கடத்தவும் தொடர்பு கிடைத்தது.
அதன்படி, ராஜேஷ் கண்ணனும், திருமுருகனும் கடந்த 5-ந் தேதி நள்ளிரவு அவரது காரில் மயிலாடுதுறை கொருக்கை கிராமத்தில் உள்ள லட்சுமணன் வீட்டிலிருந்து, சிலைகளை எடுத்துக் கொண்டு வந்தனர்.
இந்த வேளையில் இந்த சிலைகள் கிடைத்த விவரமும், சிலைகள் வெளி நாட்டுக்கு கடத்தப்படும் விவரமும் திருச்சி சிலை கடத்தல் தடுப்பு பிரிவினருக்கு ரகசியதகவலாக கிடைத்தது. இதை தொடர்ந்து 3 பேரும் திருச்சி வழியாக சிலைகளை சென்னைக்கு கொண்டு செல்லும்போது போலிசாரிடம் சிக்கியுள்ளனர்.
இதை தொடர்ந்து ராஜேஷ் கண்ணன், திருமுருகன், லட்சுமணன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6 சிலைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
கைதான 3 பேர் கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில், ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மீட்கப்பட்ட சிலைகள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- காவல் துறை சார்ந்த முக்கிய அதிகாரிகளும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
- இன்று மாலை 6 மணியளவில் தலைமை செயலாளர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை:
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு தொடர்பாக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலும் பங்கேற்கிறார்.
மேலும் காவல் துறை சார்ந்த முக்கிய அதிகாரிகளும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
இன்று மாலை 6 மணியளவில் தலைமை செயலாளர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் குறித்து விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ந்தேதி சென்னையில் படுகொலை செய்யப்பட்டார்.
- தமிழ்நாடு காவலர் பயிற்சி அகாடமியின் கூடுதல் டி.ஜி.பி.யாக ராஜீவ் குமார் நியமிக்கப்பட்டு உள்ளார்.
சென்னை:
சென்னை போலீஸ் கமிஷனராக சந்தீப் ராய் ரத்தோர் பதவி வகித்து வந்தார்.
இந்த நிலையில் போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அவர் தமிழ்நாடு காவலர் பயிற்சி அகாடமியின் டி.ஜி.பி.யாக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். தமிழ்நாடு காவலர் பயிற்சி அகாடமியின் கூடுதல் டி.ஜி.பி.யாக ராஜீவ் குமார் நியமிக்கப்பட்டு உள்ளார்.
சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. அருண் சென்னை மாநகர புதிய போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார். சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாக டேவிட்சன் தேவாசிர்வாதம் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசின் உள்துறை முதன்மை செயலாளர் அமுதா பிறப்பித்துள்ளார்.
புதிய போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ள அருண் இதற்கு முன்பு சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாக பணியாற்றி வந்தார். அவர் ஏற்கனவே பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர், கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, டி.ஐ.ஜி, ஐ.ஜி. ஆகிய பொறுப்புகளிலும் பணியாற்றியுள்ளார். தற்போது சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அவர் சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ந்தேதி சென்னையில் படுகொலை செய்யப்பட்டார். அவரது படுகொலைக்கு பல்வேறு கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்ததுடன் சென்னையில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்று கூறினார்கள். உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்றும் விமர்சனம் செய்தனர்.
ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதியும் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்று குற்றம் சாட்டினார். இதில் உண்மை குற்றவாளிகளை கைது செய்வதுடன் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறினார்.
இந்த நிலையில் சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் திடீரென்று பணியிட மாற்றம் செய்யப்பட்டு புதிய போலீஸ் கமிஷனராக அருண் நியமிக்கப்பட்டு உள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளதாக கோட்டை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
- அதிகப்படியான கட்டணம் வசூலிக்கும் ரெயில்தான் வந்தே பாரத்.
- 50 சதவீதத்துக்குமேல் டிக்கெட் பதிவு செய்யப்படாமல் காலியாக பயணிக்கிறது.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவில் அதிகப்படியான கட்டணம் வசூலிக்கும் ரெயில்தான் வந்தே பாரத். ஆனால் அந்த ரெயிலில் பல பகுதிகளில் இயங்கும் 50 சதவீதத்துக்குமேல் டிக்கெட் பதிவு செய்யப்படாமல் காலியாக பயணிக்கிறது. இது போன்ற தேவையில்லாத செலவுகளுக்கு பதிலாக சாதாரண மக்கள் அதிகமாக பயன்படுத்தும் ரெயிலில் அடிப்படை கட்டமைப்புகளை வலிமைப்படுத்தி பயன்படுத்தினால் பயனுள்ளதாக இருக்கும்.
1924-ம் ஆண்டு முதல் இந்திய அரசு பயன்பாட்டில் வைத்திருந்த ரெயில்வே பட்ஜெட் 2016-ம் ஆண்டு மத்திய பா.ஜ.க. அரசு ரத்து செய்து பொதுப் பட்ஜெட் அறிக்கையில் ரெயில்வே துறைக்கான பட்ஜெட்டையும் இணைத்தனர்.
இந்திய ரெயில்வே தனி பட்ஜெட் இருந்திருந்தால் ரெயில்வேக்களில் இருக்கும் பிரச்சனைகள் குறித்து வெளியே தெரிந்திருக்கும். ஆனால் அவையெல்லாம் பா.ஜ.க. அரசால் மூடி மறைத்ததும் இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக ரெயில் விபத்துகள் ஏராளமாக நடைபெறுவதற்கு ஒரு முக்கிய காரணம்.
பா.ஜ.க. அரசு ஏற்கனவே நடைமுறையில் இருந்த ரெயில்வேக்கான தனி பட்ஜெட் முறையை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்.
காலியாக உள்ள இடங்களை உடனடியாக நிரப்பி ரெயில்வேக்களில் தேவையான அடிப்படை வசதிகள் செய்து அதை முறையாக பராமரித்து சாதாரண மக்கள் வசதியாக பயணம் செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- அ.தி.மு.க.வை அழிப்பது என்பது எந்த சக்தியாலும் முடியாது.
- ஓ.பி.எஸ். எப்போதுமே இயக்கத்திற்கு விசுவாசமாக இருந்த வரலாறு கிடையாது.
சென்னை:
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் அக்கட்சியில் இணைய முயற்சித்து வருகிறார். ஆனால் அவரை ஒரு போதும் அ.தி.மு.க.வில் சேர்த்துக் கொள்ளமாட்டோம் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார்.
எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுகளுக்கு ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்து கூறியதாவது-
'துரோகம்', 'பொய்மை', 'செய்நன்றி மறத்தல்', 'வன்முறை' ஆகியவற்றின் மொத்த உருவமாக விளங்கும் எடப்பாடி பழனிசாமி என்னை விசுவாசமற்றவன் என்று பேட்டியளித்திருப்பது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல் உள்ளது.
அ.தி.மு.க.வுக்கும் புரட்சித் தலைவி அம்மாவுக்கும் எந்த அளவிற்கு விசுவாசமாக இருந்தேன் என்பதை அம்மா பல சந்தர்ப்பங்களில் தெரிவித்து இருக்கிறார். என்னுடைய விசுவாசத்திற்கு ஈடாக ராமாயணத்தில் வரும் பரதனை ஒப்பிட்டு பேசிய அம்மாவின் பேச்சினை தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் நன்கு அறிவார்கள்.
என்னுடைய விசுவாசத்தை அம்மா இந்த நாட்டிற்கு பறைசாற்றிய நிலையில், அதைப் பற்றி பேச பழனிசாமிக்கு தகுதி இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முதலமைச்சர் பதவியை கொடுத்தவருக்கு துரோகம், பரிந்துரை செய்தவருக்கு துரோகம், 4 ஆண்டு ஆட்சிக்கு உறுதுணையாக இருந்தவருக்கு துரோகம், அ.தி.மு.க. ஆட்சியை காப்பாற்றிக் கொடுத்த வருக்கு துரோகம், என சுயநலத்திற்காக பல துரோகங்களை செய்து கொண்டு வரும் எடப்பாடி பழனிசாமி என்னுடைய விசுவாசத்தை பற்றிப் பேச அருகதையற்றவர்.
அம்மா போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து போட்டியிட்ட போது, அம்மாவுக்கு எதிராக போட்டியிட்ட வேட்பாளருக்கு 'தலைமை தேர்தல் முகவராக' நான் செயல்பட்டேன் என்று எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்து இருக்கிறார்.

இதற்கு நான் ஏற்கனவே மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், 'ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொன்னால் அது உண்மையாகிவிடும்' என்ற வேலையை செய்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. இதனை ஆதாரத்துடன் நிருபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார் என்று நான் ஏற்கெனவே தெரிவித்திருந்தேன். இதுநாள் வரை ஆதாரத்தை வெளியிடாத எடப்பாடி பழனிசாமி, மீண்டும் அதே குற்றச்சாட்டினை என்மீது வைத்திருக்கிறார்.
அடுத்தபடியாக, 2017-ம் ஆண்டு மூன்று சதவிகிதம் ஆதரவு இருந்த எனக்கு 'ஒருங்கிணைப்பாளர்' பதவி தந்ததாகவும், 'துணை முதலமைச்சர்' பதவி தந்ததாகவும் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்து இருக்கிறார். நான் 2017-ம் ஆண்டு 'தர்ம யுத்தம்' நடத்திய காலத்தில் எனக்கு கிட்டத்தட்ட 42 விழுக்காடு மக்கள் ஆதரவு இருந்தது என்பதை பத்திரிகைகள் படம் பிடித்துக் காட்டின. அந்தத் தருணத்தில், நான் எடப்பாடி பழனிசாமியிடம் சென்று எனக்கு 'ஒருங்கிணைப்பாளர் பதவி அளியுங்கள்', 'துணை முதலமைச்சர் பதவி தாருங்கள்' என்று கேட்கவில்லை.
நான், 'தர்ம யுத்தம்' சார்பாக எம்.ஜி.ஆருடைய நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு 16-வது முறையாக மாபெரும் கூட்டத்தினை கோயம்புத்தூரில் கூட்டியபோது, அங்கு திரண்டிருந்த கூட்டத்தைக் கண்டு அதிர்ந்து, அதற்கு மறுநாள், அ.தி.மு.க.வின் மூத்த விசுவாசிகளான எஸ்.பி. வேலுமணியும், பி. தங்கமணியும், சென்னையில் உள்ள என்னுடைய மகள் வீட்டில் என்னைச் சந்தித்து, நாம் ஒன்று சேர்ந்தால்தான் அ.தி.மு.க. வலுப் பெறும்; அப்போதுதான் தேர்தல்களில் வெற்றி பெற முடியும் என்ற கட்சித் தொண்டர்களின் கருத்தினையும், விருப்பத்தினையும் என்னிடம் வெளிப்படுத்தினர். கட்சியின் நலன் கருதி, கழகம் ஒன்றுபட வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களின் கோரிக்கையை நான் ஏற்றுக் கொண்டேன். நான் போய் பழனிசாமியிடம் எந்தப் பதவியையும் கேட்க வில்லை. இனியும் கேட்க மாட்டேன். பழனிசாமிதான் தவழ்ந்து, ஊர்ந்து, காலில் விழுந்து பெற்ற முதலமைச்சர் பதவியை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக தூது விட்டார்.
எடப்பாடி பழனிசாமி பதவி வெறி பிடித்தவர், சுய நலவாதி என்பதை தமிழ் நாட்டு மக்கள் நன்கு அறிவர். தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவையில் தனக்கு பெரும்பான்மை இல்லை என்பதால் எனக்கு தூதுவிட்டார். 2016-ம் ஆண்டு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில் 136 இடங்களில் அ.தி.மு.க. வெற்றி பெற்று, தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. அம்மா தன்னுடைய உடல் நலத்தைக்கூட பொருட்படுத்தாமல், சூறாவளி தேர்தல் பிரசாரம் செய்த தன் காரணமாக மாபெரும் வெற்றி அ.தி.மு.க.விற்கு கிடைத்தது. இந்த வெற்றி ஜெயலலிதாவுக்கு கிடைத்த வெற்றி.

அம்மாவின் மறைவிற்குப் பின், சசிகலா தயவால் முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்ட எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தைக் கொண்டு வந்த போது, அவருக்கு ஆதரவாக 122 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர்.
இந்த 122 சட்டமன்ற உறுப்பினர்களில், 19 சட்ட மன்ற உறுப்பினர்கள் ஒரு சில மாதங்கள் கழித்து கவர்னரை சந்தித்து, எடப்பாடி பழனிசாமிக்கு கொடுத்த ஆதரவை திரும்பப் பெறுவதாக கடிதம் கொடுத்தனர். இதனால், எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்கும் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 103 ஆக குறைந்தது. இது தவிர, மேலும் சில சட்டமன்ற உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவே செயல்பட்டுக் கொண்டிருந்தனர். இதையும் சேர்த்தால், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவான சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை நூறுக்கும் கீழே சென்று விட்டது. அதே சமயத்தில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 98 ஆக இருந்தது. அதாவது, ஆளும் கட்சியை விட எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அப்போது, பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று கவர்னரிடம் கடிதம் கொடுத்தது தி.மு.க. அந்தச் சமயத்தில் கவர்னர் பெரும் பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டிருந்ததால், எடப்பாடி பழனிசாமியின் முதலமைச்சர் பதவி அன்றைக்கே போயிருக்கும். இந்தச் சிக்கலில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள எனக்கு தூதுவிட்டு கெஞ்சியவர் எடப்பாடி பழனிசாமி.
எனக்கு எடப்பாடி பழனிசாமியுடன் சேர விருப்ப மில்லை என்றாலும், "எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அ.தி.மு.க. மக்களுக்காகவே இயங்கும்" என்று அம்மா சொன்ன அந்த வார்த்தைகளை மனதில் நிலைநிறுத்தி மீண்டும் இணைவதற்கு முடி வெடுத்தேன்.
என்னிடம் தூது வந்தவர்கள் சொன்னது, கட்சிக்கு நானும், ஆட்சிக்கு எடப்பாடி பழனிசாமியும் என்று கூறினார்கள். நானும் ஒத்துக் கொண்டேன். ஆனால், ஒத்துக் கொண்டதற்கு மாறாக, கையெழுத்திடும் அதிகாரம் உடைய இணை ஒருங்கிணைப்பாளர் பதவி தனக்குத் தரப்பட வேண்டும் என்ற நிபந்தனையை விதித்தார். கட்சி நலன் கருதி நான் அதனை ஏற்றுக் கொண்டேன்.
துணை முதலமைச்சர் பதவியை பொறுத்தவரையில், முதலில் நான் வேண்டாம் என்றுதான் சொன்னேன். இருப்பினும், பிரதமர் என்னை டெல்லிக்கு நேரில் அழைத்து வற்புறுத்தியதன் காரணமாக அந்தப் பதவியை ஏற்றுக் கொண்டேன்.
2019-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலின்போது, தேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட ரவீந்திரநாத்தை மட்டும் நான் வெற்றி பெற வைத்தேன் என்றும், அதே பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட கழக வேட்பாளரை வெற்றி பெறச் செய்யவில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்திருக்கிறார். இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. 39 பாராளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டு, தேனி தொகுதியில் மட்டும் ரவீந்திரநாத் வெற்றி பெற்றதை எடப்பாடி பழனிசாமியால் ஜீரணிக்க முடியவில்லை. அதனால்தான் இதுபோன்ற குற்றச்சாட்டினை என்மீது சுமத்தி இருக்கிறார் . இது அரசியல் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு.
ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருக்கிறது என்று நான் சொன்னதற்குக் காரணம் மக்களுக்கு அதில் சந்தேகம் இருந்ததால்தான். மக்களின் கருத்தைத்தான் நான் பிரதிபலித்தேன். அதே போல, நீதியரசர் ஆறு முகசாமி விசாரணை ஆணையம் முன்பு நான் ஆஜராகவில்லை என்று கூறியிருக்கிறார். இது முற்றிலும் தவறு.
2022-ம் ஆண்டு இரு முறை நீதியரசர் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன்பு ஆஜராகி என்னுடைய விளக்கத்தை நான் அளித்தேன். இதுதான் உண்மை நிலை. எனவே, பொத்தாம் பொதுவாக நான் ஆணையம் முன்பு ஆஜராகவில்லை என்று கூறுவது அரசியல் காழ்ப்புணர்ச்சி.
நீதியரசர் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் பற்றி கருத்து தெரிவிக்கும் எடப்பாடி பழனிசாமி, கோடநாடு கொலை-கொள்ளை வழக்கு குறித்து வாய் திறக்க ஏன் மறுக்கிறார்? இந்த வழக்கினை விரைந்து முடிக்க வேண்டும் என என்னுடைய தலைமையில் நான் ஆர்ப்பாட்டம் நடத்தினேன். கொடநாடு கொலை-கொள்ளை வழக்கு குறித்து போராட்டம் நடத்த எடப்பாடி பழனிசாமி ஏன் தயங்குகிறார்?
23-6-2022 அன்று நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக் குழுக் கூட்டத்தில், பொதுக் குழு அல்லாத சமூக விரோதிகளையும், ரவுடிகளையும் உட்கார வைத்து, வரவு-செலவு திட்ட அறிக்கையைகூட என்னால் வாசிக்க முடியாத நிலையை உருவாக்கி, ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் மேடையில் இருந்த என்மீதும், எனக்கு ஆதரவாக இருந்த சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர். வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜே.சி.டி. பிரபாகர் உள்ளிட்ட நிர்வாகிகள் மீதும் தண்ணீர் பாட்டில்களை வீசி கொலைவெறித் தாக்குதல் நடத்த மூல காரணமாக இருந்தவர் எடப்பாடி பழனிசாமி.
11-7-2022 அன்று, வானகரத்தில் பொதுக் குழுக் கூட்டம் நடைபெற்றக் கொண்டிருந்த சமயத்தில், மாவட்டக் கழகச் செயலாளர்கள் எட்டு பேரையும், சமூக விரோதிகள் 300 பேரையும் தலைமைக் கழகத்திற்கு அனுப்பி, தலைமைக் கழகத்தின் கதவைப் பூட்டச் சொல்லி, வன்முறையை உருவாக்கியவர் எடப்பாடி பழனிசாமி. தலைமைக் கழகம் அமைந்திருக்கும் தெருவிற்குள் செல்ல முடியாத அளவுக்கு நாங்கள் சென்ற வாகனங்களின்மீது கற்கள் வீசப்பட்டன. நாங்கள் அந்தத் தெருவில் உள்ள இந்தியன் வங்கி அருகில் நின்று கொண்டிருந்த நேரத்தில், காவல் துறையினர் வந்ததன் காரணமாக அங்கு குழுமியிருந்த சமூக விரோதிகள் அங்கிருந்து சென்றதையடுத்து, திறந்திருந்த தலைமைக் கழகத்திற்குள் நாங்கள் சென்றோம். இதுதான் உண்மை நிலை.
'இரட்டைத் தலைமை' இருந்தக் காலகட்டத்தில், 2019-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில், அ.தி.மு.க. 22 இடங்களில் போட்டியிட்டு ஓர் இடத்தில் மட்டும் வெற்றி பெற்றது. அ.தி.மு.க. மட்டும் பெற்ற வாக்கு விகிதம் 19.39 விழுக்காடு. கூட்டணி பெற்ற வாக்கு சதவீதம் 31.05.
'ஒற்றைத் தலைமை' வந்த பிறகு, 2024-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில், அ.தி.மு.க. 34 இடங்களில் போட்டியிட்டு ஓர் இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. 7 தொகுதிகளில் டெபாசிட் பறிபோய் இருக்கிறது.
12 இடங்களில் 3-வது இடத்திற்கும், ஒரு இடத்தில் நான்காவது இடத்திற்கும் சென்றது. விளவங்கோடு சட்டமன்ற இடைத் தேர்தலில் வெறும் 5,267 வாக்குகளை மட்டுமே பெற்றது. 2019-ம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடும்போது, கிட்டத்தட்ட 30 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை அ.தி.மு.க. இழந்துவிட்டது.
'இரட்டை இலை' சின்னம் இல்லாதிருந்தால், நிலைமை மிகவும் மோசமாக இருந்திருக்கும். இதுதான் அ.தி.மு.க.வின் இன்றைய நிலைமை. நான் இந்த அறிக்கையை விரிவாக வெளியிடுவதற்குக் காரணம், நேற்றைய தினம் மதுரை விமான நிலையத்தில் உண்மைக்குப் புறம்பான, முரண்பட்ட கருத்துகளை எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததுதான்.
என்னைப் பொறுத்த வரையில், அ.தி.மு.க. ஒன்று பட வேண்டும், புரட்சித் தலைவியின் ஆட்சியை 2026-ம் ஆண்டு அமைக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம். இந்த விருப்பம் நிறைவேற்றப்பட வேண்டுமென்றால், தலைமை மாற்றப்பட வேண்டும். எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை அழிவுப்பாதைக்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கிறார்.
தொடர் தோல்வியை சந்தித்து வரும் எடப்பாடி பழனிசாமி தலைமையை தொண்டர்கள் நிராகரித்து விட்டார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை. இந்தத் தலைமை தொடர்ந்தால், அ.தி.மு.க. மாபெரும் வீழ்ச்சியைத்தான் சந்திக்கும். பிளவுபட்டு இருக்கின்ற கழகம் இணைந்தால்தான் வலுப்பெறும். இதனை மனதில் வைத்துத்தான் கழகம் இணைய வேண்டு மென்ற கருத்தினை நான் சொல்லி வருகிறேன்.
நான் எந்த நேரத்திலும் என்னை கட்சியில் சேர்க்கு மாறு கோரிக்கை வைக்காத நிலையில், 'என்னை கட்சியில் சேர்த்துக் கொள்ள மாட்டேன்' என்று எடப்பாடி பழனிசாமி கூறுவது கேலிக்கூத்தாக உள்ளது.
என்னைப் பொறுத்த வரையில், எந்தக் காலத்திலும் நான் எடப்பாடி பழனிசாமியிடம் யாசகம் கேட்க மாட்டேன். எனக்கு அதற்கான அவசியமும் இல்லை. கட்சி இணைவதற்கு நான் எந்தத் தியாகத்தையும் செய்யத் தயார். கட்சி இணைய எடப்பாடி பழனிசாமி எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாரா என்பதுதான் என் கேள்வி.
அ.தி.மு.க. பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி நீடிப்பதை தொண்டர்களும், பொது மக்களும் விரும்பவில்லை. இதனை புரிந்து கொண்டு, அவர் பதவியில் இருந்து விலகினால் நன்றாக இருக்கும். தாமாக பதவி விலக எடப்பாடி பழனிசாமி மறுக்கும்பட்சத்தில், தொண்டர்களும், பொதுமக்களும் இணைந்து அதற்கான சூழ்நிலையை உருவாக்குவார்கள்.
இவ்வாறு ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
- கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
- பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு மனு கொடுத்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு மனு கொடுத்தனர்.
தாராபுரம் அருகே உள்ள சின்னக்காம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 2 டப்பாக்களில் புதிய வகை ஈக்களை பிடித்துக்கொண்டு மனு கொடுக்க வந்தனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் பொதுமக்கள் அதிகாரிகளிடம் மனுக்கள் கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தாராபுரம் சின்னக்காம்பாளையம் பகுதியில் கோழிப்பண்ணை உள்ளது. இந்த கோழிப்பண்ணையை அகற்றும்படி கடந்த 2 ஆண்டுகளாக போராடி வருகிறோம். தற்போது கோழிப்பண்ணையில் இருந்து புதிய வகை ஈக்கள் உற்பத்தியாகி காற்றின் மூலம் பரவி வருகிறது.

மேலும் அப்பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்து உணவுகளில் விழுவதால் உணவை உண்ண முடியாத நிலை உள்ளது. இரவு நேரங்களில் தூங்கும்போது காதில் ஈக்கள் புகுந்து விடுகிறது. கடிப்பதால் அரிப்பு ஏற்படுகிறது. காய்கள் மற்றும் கீரைகளை சேதம் செய்கிறது.
கால்நடைகள் அதிக அளவில் பாதிக்கப்படுகிறது. குழந்தைகளை வளர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கோழிப்பண்ணையால் துர்நாற்றம் ஏற்படுகிறது. கோழி இறகுகள் காற்றில் அதிகமாக வருகிறது.

சின்னக்காம்பாளையம் ஊர் பொதுமக்கள் சார்பில் அதிகாரிகளிடம் அளிக்கப்படும் மனுக்களை கண்டு கொள்வதில்லை. எனவே இந்த கோழிப்பண்ணையை நிரந்தரமாக மூட உத்தரவு பிறப்பிக்க வேண்டும். ஈக்களை பரவலை கட்டுப்படுத்த வேண்டும் .
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
- சாதாரண மக்களால் வாழ்க்கை நடத்த முடியாத அளவுக்கு உயர்ந்திருக்கும் விலைவாசியை கட்டுப்படுத்தாதது.
- விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்துவது தான் அந்த அதிர்ச்சி வைத்தியம் ஆகும்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அங்கமாக பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடுகிறது. தொகுதி மக்களால் நன்கு அறியப்பட்ட, அவர்களின் சுக, துக்கங்களில் பங்கு கொண்ட சி.அன்புமணி பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
விக்கிரவாண்டி என்பது சமூக நீதிக்காக தியாகம் செய்த மண். அது வாக்குகளை விற்கிற வாண்டி அல்ல என்பதை அத்தொகுதி மக்கள் நிரூபித்திருக்கிறார்கள். இந்தத் தேர்தலில் மக்கள் அளிக்கப்போகும் தீர்ப்பு எத்தகையதாக இருக்கும் என்பதற்கு திமுக அலுவலகங்களில் திருப்பி வீசப்படும் பொருள்கள் தான் சான்று ஆகும்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு ஏன் வாக்களிக்கக்கூடாது என்பதற்கு ஆயிரம் காரணங்களை என்னால் பட்டியலிட முடியும். அவற்றில் சிலவற்றை மட்டும் முன் வைக்க விரும்புகிறேன்.
தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கத் தவறியது. சாதாரண மக்களால் வாழ்க்கை நடத்த முடியாத அளவுக்கு உயர்ந்திருக்கும் விலைவாசியை கட்டுப்படுத்தாதது. நியாய விலைக்கடைகளில் மக்களின் அடிப்படைத் தேவையான துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றைக் கூட கடந்த 3 மாதங்களாக வழங்க முடியாத அவல நிலையை ஏற்படுத்தியது.
தமிழக அரசுக்கு அதிகாரம் இருந்தும் சமூகநீதியை நிலைநாட்ட சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மறுப்பது. தமிழர்களுக்கு மட்டுமே வேலை வழங்குவதற்கான சட்டத்தை கொண்டு வராதது, தமிழ்நாட்டின் வேலைவாய்ப்புகளை வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு தாரை வார்ப்பது, அரசு பள்ளிகளில் ஒன்றரை லட்சம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் வைத்திருப்பது, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த மறுப்பது என்று தி.மு.க. அரசின் வேதனைப் பட்டியல் இன்னும் நீண்டது ஆகும். தி.மு.க.வுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்க வேண்டும். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்துவது தான் அந்த அதிர்ச்சி வைத்தியம் ஆகும்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு கிடைக்கும் தோல்வி தான் அதன் அகங்காரத்தையும், மக்கள் விரோத மனநிலையையும், சமூக அநீதி மனப்பான்மையையும் தகர்க்கும்.
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றி என்பது ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் வெற்றி, ஜனநாயகத்தின் வெற்றி, சமூக நீதியின் வெற்றி.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறி உள்ளார்.






